எஸ் ஷங்கரநாராயணன்
உள்நாக்கை யாரோ பிடித்து உள்ளிழுத்தாற்போல விக்கித்துப் போனார் ராஜகோபால். ‘ஆஸ்பத்திரிலயா ? ‘ என்றார் கலவரத்துடன். ‘அவ வீட்டுக்காரருக்கு இரத்த அழுத்தம் அதிகமாயி சேர்த்துருக்கா போல… கூட இருக்கறதாச் சொன்னா… பயந்துக்காதேடா ‘ என்று தோளைத் தொட்டார் சேஷாத்ரி.
‘அவ ஃப்ளாஸ்கோட மாடியேர்றா. நான் கீழ இறங்கறேன். ‘
ம், என்று தலையாட்டினார். சற்று வெட்கமாய்த்தான் இருக்கிறது… பிடிபட்டாற் போன்ற, மாட்டிக் கொண்டாற் போன்ற கூச்ச உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. ‘வயசானா அதெல்லாம் வந்திருதே… ரயில் வரும் முதல் மணி… ரெண்டாவது மணின்றாப் போல… ‘ என்று அவருக்கும் தனக்குமாகப் போலப் பேசிக் கொண்டார்.
‘ரயிலா ஆம்புலன்ஸா ? ‘ என்று சிரித்தார் சேஷாத்ரி.
‘திரும்ப பயமுறுத்தறே! ‘
‘சரி- ஒரு ஜோக்…. ரெண்டுபேர் பேசிக்கறாங்க – ‘ஏன் அந்த வீட்டு வாசல்ல ஆம்புலன்ஸ் நிக்குது ? ‘ – ‘அந்த வீட்டு ஆளுக்கு ஐம்-புலன்சும் அடங்கிட்டதாம்! ‘
தாள மாட்டாமல் குலுங்கிச் சிரித்தபடியே ‘வா சாப்பிடப் போகலாம்… ‘ என எழுந்து கொண்டார் ராஜகோபால்.
இத்தனை நாள் கழித்து சேஷாத்ரி வந்திருக்கிறார். திருச்சி பெல்லில் உத்தியோகம். டென்டர் அது இதுவென்று ரயிலிலும், அவசரமென்றால் பஸ்சிலும், யோகமிருந்து விமானத்திலும் வருவார். நேரில் வருவார்… வரமாட்டார், என்பதல்ல பிரச்னை. ஆனால் தவறாமல் தொலைபேசியில் குரலைப் பதிவு செய்து விடுகிறார். அருமையான நல்லகுணாம்சம் அது – எனக்கில்லையே என்று வருத்தப் பாட்டார் ராஜகோபால். சென்னை மாநகரம் அன்றி திருச்சிபோலும் சிறு நகரம் என்றால் எனக்குள்ளும் இன்னும் அந்த நல்லம்சங்கள் மிச்சம் இருந்திருக்கும் ஒருவேளை.
திருச்சியில் இறங்கினால் கூட – ஒரு சுத்தில் எட்டிப் பிடிக்கலாம் ஃபோனில். அவனே என்னைத் தேடி வந்து விடுவான். காரில் தானே முன்னெடுத்து தன்வீட்டுக்கு அழைத்துப்போய் அமக்களம் பண்ணி விடுவான்.
அட இப்போது… இங்கேயே மேஜையில் வெளியூர்த் தொடர்பு வசதியுடன் தொலைபேசி. பேசினால் யார் கேட்கப் போகிறார்கள். மனம் அன்றாடப் பரபரப்புகளிலேயே தத்தளித்து நண்பர்களைப் புறந்தள்ளி விடுகிறது.
அன்பையும் உறவையும் எதிர்பார்க்கிற அளவு, வாங்கி நெகிழும் அளவுக்கு… வழங்கி, வெளிப்படுத்தும் செயலுாக்கம் இல்லை. சிறு தயக்கம்… முன்கால் எடுத்து வைக்கக் கூச்சம். அட, சோம்பேறித்தனம் எதுவோ ஒன்று தடையாகவே இருக்கிறதே…
பிருந்தாவைப் பற்றிய சேதி கேட்ட கணம், உடனே சேஷாத்ரியைப் பார்க்கவரச் சொல்லி உரிமைகொண்டாடி விட்டது மனது!… புன்னகை செய்துகொண்டார். மறக்காமல் மதுரையில் அவள் தொலைபேசி எண் வாங்கி வைத்துக் கொள்ள உள்மனம் திரும்பத் திரும்ப அலைமோதுகிறது. அட சுயநலப் பிசாசே…
ஹோட்டலில் குளிர்சாதன அறையில்… மணிபார்த்தபடியே, ஆனால் உற்சாகமான பேச்சுடன் சேஷாத்ரி சாப்பிடுகிறார்.
சேஷாத்ரியிடம் ஒரு விசேஷம். உலகம் சார்ந்த அவரது பார்வை கூர்மையானது. மதிப்பீடுகளின் வேக வீச்சுடன் சற்று சோகம் உள்ளடக்கி, அதையே அமெரிக்கையான நகைச்சுவை போல் பேசுவார்.
‘நம்ம தமிழய்யா இளங்கோவை ஒருநாள் பார்த்தேன் ராஜகோபால். அவர் கடைசிப் பையன் சரியான வேலை கிடைக்காமல் தத்தளிக்கிறாப்ல இருக்கு…. மனனப் பாடம் சரியா ஒப்பிக்கலைன்னா தலைல குட்டச் சொல்லுவார்லியா ? உனக்கு ஞாபகம் இருக்கா ? மலையாளத்துல ஒரு பழமொழி சொல்வாங்களே – செத்தது நீயா உன் தம்பியான்னு கேட்டானாம். ரெண்டுபேரும் ஒரேமாதிரி இருக்கறதுனால… அதும் மாதிரி. இவர் பேர் இளங்கோ. ஆனா சேரன் செங்குட்டுவன்னு நாம கிண்டல் பண்ணுவமே… ‘ என்று சிரிக்கிறார்.
‘ம் ‘ என்று தலையாட்டினார் ராஜகோபால். சாப்பிடுகிற வேகத்தில் வார்த்தைகளை வீசுகிறார். அது அந்த வேலையின் தன்மை. போயி டென்டரைப் பேசி வாங்குகிற சாமர்த்திய சமத்காரமான பேச்சு தன்னியல்பாய் ஊறியிருக்கிறது அவரிடம்…
‘பையனுக்கு எதாவது வேலை கேட்டார். சரியாப் படிக்கலை போலுக்கு… ஏன் சார் எங்களை நாலுகுட்டு குட்டினா, அவனை ரெண்டாவது குட்டியிருக்கலாமேன்னேன். சட்னு கண் கலங்கிட்டாரு. அடடா நீ இன்னும் குட்டைத்தான் ஞாபகம் வெச்சிருக்கியா ?…ன்னாரு. இல்லைய்யா இல்லை. மனனப் பாடம் இன்னும் ஞாபகம் இருக்குன்னேன்… ‘
‘அவராலதானடா உனக்குக் கவிதை எழுதற ஆர்வமே வந்தது… ‘
‘மொட்டைக் கவிதையோட சரி. அதை வளத்துக்கவேயில்லை ‘
மனம் எப்படியோ இழப்புகளையே அளைந்து அளைந்து வளைய வருகிறது. ஏமாற்றங்களே கூடத்தங்கி விடுகின்றன. சுவையான காபிதான். அடிநாக்கில் தங்குவது கசப்புதானே ?
‘குண்டடிச்சிட்டாளா ? ‘ என்றார் ரசத்தை ஊற்றிக் கொண்டபடியே.
‘யாரு ?… டேய், பிருந்தாவா ? ‘ என்று கண்ணடித்தார் சேஷாத்ரி. ‘என்னைப் பார்த்ததுமே… அடையாளந் தெரிஞ்சதுமே உன்னைத்தான் விசாரிச்சா. அவரைப் பார்த்து ரொம்பநாளாச்சி. என் வீட்டு ஃபோன்நம்பர் தரேன். பேசச் சொல்லுங்களேன்னா… ‘ இடதுகையால் பேன்ட்பாக்கெட்டில் இருந்து பர்சை எடுக்க சிரமப் பட்டார் சேஷாத்ரி. ‘அட சாப்பிடுறா… அப்பறமா வாங்கிக்கறேன்… ‘
‘இல்ல இருக்கட்டும். நீ சாப்பாட்டையும் கவனிக்க மாட்டேங்கறே. என் பேச்சும் உனக்கு சுவாரஸ்யப் படல்ல… ‘ என்று சேஷாத்ரி சிரித்தார்.
வெறும் காகிதம். அதில்… அவளது கையெழுத்தில் ஒரு தொலைபேசி எண். என்றாலும் என்ன ? அதை எத்தனை பரவசத்துடன் வாங்கிக் கொண்டார் ராஜகோபால். பிருந்தாவையே நேரில் பார்க்கிறாப் போல… ஆ, இது காதலன்றி வேறென்ன ?
‘இனியாவது நார்மலாப் பேசுவியாடா ? ‘ என்கிறார் சேஷாத்ரி.
‘நோ காரென்ட்டி… ‘
சிரிக்கிறார்கள்.
—-
மனசெனும் உறங்காக்கடல். பிருந்தா பற்றி மேலும் ஒரு கேள்விகூட அவனிடம் கேட்கக் கூடாது என்றிருந்தது. அதென்ன சங்கிலி மீறித் தாவும் நாயாய்த் தவ்வுகிறது மனம். அதிகாலை உலாவல் என்று நாயுடன் சிலபேர் வருவார்கள். அவர்களை உருட்டி நடுரோட்டில் வீழ்த்தாத குறையாய் அல்சேஷன்கள் இழுத்துச் செல்லும். ஆறறிவு மனிதன் இப்படி நாயடிமையாய், நாய் எனும் போலிஸ்முன் குற்றவாளி போல தரதரவென இழுத்துப் போவதை கேவலமாக உணர்வதில்லையா இவர்கள் என்றிருக்கும். அதைப்போலாகி விட்டது நிலை.
அவளோடு இப்போது பேசுதல் சரியா ?… என ஓர் உள்க்குரல் கிளம்பியது. மொட்டைமாடியில் உலவிக் கொண்டிருந்தார். அலுவலக வேலைக்கும் அலுப்புக்கும் நடுவே அல்லாடி வீடுவந்தவுடன், சாப்பிட – அக்கடான்னு படுக்க என இயங்கும் மனம். இவளும் குழந்தைகளும் தொலைக்காட்சி பார்ப்பார்கள். எந்தச் சேனல் பார்ப்பது என அவர்களுக்குள் சிறு யுத்தம் கேட்கும். அவர் துாங்க ஆரம்பித்து விடுவார்…
இவன் என் தொலைபேசி எண்ணைத் தந்திருக்கலாம்… என்று சேஷாத்ரி பற்றி நினைத்துக் கொள்கையிலேயே சிரிப்பு வந்து விட்டது. அடேய், விட்டால் அவளையே துாக்கிப் பாக்கெட்டில் போட்டுக்கிட்டு வந்திருக்கலாம் என்பாய் போலிருக்கே!
‘இன்னும் துாங்கலியா நீங்க ? ‘ என மாடியேறி வந்தாள் ஈஸ்வரி. மேலே ஏறிவரவே மூச்சு வாங்கி மூட்டுகளை தாஜா செய்து உள்ளங்கையால் பற்றியபடி மேலே வந்தாள்.
‘துாக்கம் வரல்ல… ‘
‘ஏன் ? ‘ என்று கிட்ட வந்தவள். அவர் கன்னத்தைப் பிடித்துத் திருப்பி ‘ஏம்மா ? ‘ என்றாள். ‘எனி ப்ராப்ளம்… ‘
‘அடடா அதெல்லாம் ஒண்ணில்ல… ஸ்கூல் ஞாபகங்கள்… சேஷாத்ரியில்ல ? ட்ரிச்சி பெல் ?… வந்திருந்தான்… ‘
‘பிருந்தாவைப் பத்திப் பேசினீங்களாக்கும் ‘ என்று அசிரத்தையாய்க் கொட்டாவி விட்டாள் ஈஸ்வரி. துாக்கிவாரிப் போட்டது. எத்தனை சுலபமாய் என்னை எடைபோட்டு விட்டாள், என பிரமித்தார். அப்படியே அவளை வாரியணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டார். ‘மதுரைல இருக்கா. ஃபோன் நம்பர் தந்தான். ‘
‘அப்ப இன்னிக்குத் துாங்கப் போறதில்லை. நான் போய்ப் படுக்கறேன் ‘ என்றாள்.
‘உன்னையும் துாங்க விடப் போறதில்லை… ‘ என்கிறார் வேகமாய். ‘ ஐ நீட் யூ ஈஸ்வரி…. ‘
ஈஸ்வரி சிரித்தாள். ‘பசங்க இன்னும் துாங்கல ‘
—-
அந்த வயசில் சட்டுச் சட்டென்று உணர்வுகள் நிறம் மாறுகின்றன. எதோ ஒரு வேகத்தில் கவிதை எனக் கிறுக்கியதும் அதை பிருந்தாவிடம் நீட்டியதும், அவள் திகைத்துப் போனாள். அழுகை வந்தது.
சிகெரெட் உறையில் – ஸ்டாசூடரி வார்னிங் – புகை பிடிப்பது கேடானது… என்பது போல, நாட்டில் காதல்கடிதத்திலும் அச்சிடச் சொல்லும் சமூகம் இது. ஆத்திரம் சாத்திரம் பார்க்கவில்லை.
‘என்ன இது ? ‘
‘லெட்டர்… ‘
‘போஸ்ட் பண்ணணுமா ? ‘
அவன் அவளைப் பார்த்தான். ‘லெட்டர் உனக்குதான் பிருந்தா… ‘
‘எனக்கா ? ‘
‘ம். கவிதை எழுதுன்னியே… எழுதிட்டேன்டி. உன்னைப் பத்தி… ‘
‘அடேய், அத்தனை வாலா உனக்கு… ‘ என்று எதிர்பாராமல் கொந்தளித்து அழுகையும் கோபமுமாய் ஓடி நேரே தலைமையாசிரியர் அறைக்குள் புயலாய் நுழைந்து மூச்சுவாங்க நின்றாள் பிருந்தா.
தலைமையாசிரியர் – பிருந்தாவின் அப்பா – இவன் அப்பா – என்று விஷயம் அலையலையாய்ப் பெருகுகிறது. அடுத்தநாள் பள்ளிக் கழிவறைச் சுவரில் அவனையும் பிருந்தாவையும் பத்திய கெட்ட வசனம். சட்டென்று ஒண்ணுமில்லாத விஷயம் உயிர் பெற்றது. வைக்கோல் படப்பில் தீ, என்கிறாப் போல.
அப்பா அவனை அதுவரை பெல்ட்டால் அடித்ததேயில்லை! அடித்து விட்டு அவர் அழுதார். திகைப்பான நாட்கள். சேஷாத்ரி மாத்திரம் கூட இருந்தான். நண்பர்கள் விலகிப் போனார்கள். உலகமே அவனிடமிருந்து கத்தரித்துக் கொண்டாற் போல…. ஒரு கிரகண இருள். அக்கா பார்த்தாளே ஒரு பார்வை. தம்பியாடா நீ ?
பைத்தியம் பிடித்தாற் போலக் கழிந்த நாட்கள்.
தமிழ் விடைத்தாள் தரும்போது இளங்கோ சாரின் கிண்டல்.
முதலில் சேஷாத்ரி கடிதம் தந்ததும், பிறகு இவன் நேரில் தந்ததுமாக… பிருந்தா கொதிப்பேறிப் போயிருந்தாள் போல. சட்டென்று விஷயத்தைப் பெரிதாக்கி விட்டாள்
பிருந்தா வசிக்கும் அதே தெருதான் அவனும் இருந்த தெரு. தாண்டிப் போகையில் ஏனோ தலையைக் குனிந்து கொண்டான். எதிர்பாராமல் ஒருநாள் நேரில் வந்தவள், துணிச்சலாய் ‘சாரி ‘ என்றாள்.
‘போடி ‘ என்றான் ஆத்திரமாய்.
மாடியில் அவன் படிப்பதற்காகப் போனான். அவள் ஏற்கனவே உலாத்தியபடி தன்வீட்டு மாடியில் வாசித்துக் கொண்டிருந்தாள். அவனையே பார்த்தாள் அவள். அவளுக்கு அழுகை வந்தது.
அவன் படபடப்புடன் கீழே இறங்கி வந்து விட்டான்.
வகுப்பில் பாடம் நடத்துகையில் தற்செயலாகத் திரும்பினான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். தாள முடியாத அவமானம் அவனைப் பிடுங்கித் தின்றது. எழுந்து வந்து அவளை அறைய ஆவேசம் வந்தது. ஜிவுஜிவுத்த அவன் ரெளத்திரம் பார்க்க அவள் கண் கலங்கியது.
– பெண்ணா நீ பிசாசு… என மனசில் வன்மம் வந்தது அவனுக்கு. பெண்களே மோசம் என்று ரொம்பத் தெரிந்தவன் போல ஒரு அலட்டல்.
தானறியாமல் மொட்டைமாடியில் இங்குமங்குமாக நடை இப்போது வேகப்பட்டிருந்தது. நிழல்களுக்கு இவ்வளவு உக்கிரமா ?…
மன வடுக்கள் அல்லவா அவை ?
‘என்னது ? ‘
‘லெட்டர் ‘
‘போஸ்ட் பண்ணணுமா ? ‘ என்றான் ராஜகோபால்.
‘அது உனக்குதாண்டா ‘ என்கிறாள் பிருந்தா.
‘இப்பவே இதை எடுத்துண்டு ஹெட்மாஸ்டர்ட்டப் போறேன்… ‘
‘போ ‘ என்றாள். ‘சந்தோஷம் ‘ என்றாள்.
அவன் அவளையே பார்த்தான்.
‘நேராப் போயித் திரும்பினா ரெண்டாவது ரூம்… ‘ என்றாள்.
‘என்னது ? ‘
‘ஹெட்மாஸ்டர் ரூம்… ‘
அவன் அவளையே மெளனமாய்ப் பார்க்கிறான்.
‘பொம்பளைங்க கெட்டவங்க… ‘ என்றான்.
‘நான் நல்லவள் ‘
‘நீ பொம்பளை இல்லியா ? ‘
‘போதும்… எனக்குத் தாங்க முடியல. மூச்சு முட்டறதுடா ‘ என்று சின்ன நெஞ்சைப் பிடித்துக் கொள்கிறாள்.
‘சாரி ‘ என்கிறாள்.
அப்போது ஒரு அரசியல்வாதியின் வாசகம் ரொம்பப் பிரபலம். அதையே சொன்னான் ராஜகோபால் அலங்காரமாய் –
‘ஐம் நாட் எ லாரி டு கேரி யுவர் சாரி… ‘ சொல்லிவிட்டு அந்தக் காகிதத்தைச் சுருட்டி அவள் முகத்தில் எறிந்தான்.
‘என்னடா ? ‘
‘இதையும் நீயே எடுத்திட்டுப் போயி ஹெட்மாஸ்டர் கிட்ட குடு… ‘
‘அவருக்குக் கல்யாணம் ஆயிடுத்தே… ‘ என்றாள் சிரிக்காமல். அவன் சட்டென்று சிரித்து விடுவான் என எதிர்பார்த்தாள். ‘ஐயோ என்னை விட்டுறேன்… ‘ என்று குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தான் அவன். பதறிப் போனாள். ‘என்னடா… ‘ என்று அவன் தோளை அவள் தொட்டகணம் துள்ளினான்.
‘போடி… ‘ என்றான். ‘போயிரு ‘ என்றான். ‘ஐ ஹேட் யூ ‘ என்றான் ஆங்கில எழுச்சியுடன்.
திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே போனாள்.
மறுநாள் பள்ளிக்கூடக் கழிவறையில் ஸ்பெஷல் புல்லட்டின்- பிருந்தா, ராஜகோபால் ஜல்சா!
சட்டென்று நடை நின்றது. ராஜகோபால் அழ ஆரம்பித்தார். இன்றைய இரவு துாங்க முடியுமா தெரியவில்லை.
இப்போது பிருந்தாவின்முறை. அறைவாங்கியவள் அவள். அடித்தது அவள் தந்தை.
ஐம் சாரி…. சாரி… என்கிறார் ராஜகோபால் வாய்விட்டு. இங்கே இப்போது இத்தனை வருடம் கழித்து அந்த அறைகள்… அவள் வாங்கிய அந்த அறைகள் வலித்தன.
மனசில் சேஷாத்ரியின் குரல்- உன் பிருந்தாவைப் பார்த்தேண்டா… உன்னை ஸ்கூல்ல மாட்டிவிட்டதை நினைச்சி வருத்தப் பட்டா…
ஹா… இளமையின் அசட்டு வீம்புகளில் எத்தனை இழந்திருக்கிறேன். உன்னையே இழந்திருக்கிறேனே பிருந்தா.
ஒரு விலுக்- ரெட்டைச்சடையைப் பின் தள்ளி பிருந்தா பேசுகிறாள் மனசில்.
‘நான் கெட்டவள்… ‘
‘இல்லை ‘ என்று இப்போது தலையாட்டி மறுக்கிறார். பிறகு சிரிக்கிறார். ‘நாம ரெண்டு பேருமே கெட்டவர்கள்… ‘
‘உனைப் பார்க்கணும் பிருந்தா… ‘
‘நானும்… ‘
ஒருவிநாடி நிற்கிறார். எதற்கோ மேலே பார்க்கிறார்.. யானையின் அடிவயிறைப் பார்க்கிறாப் போல இருந்தது. இருளாய்க் கிடந்தது வானம்.
‘ஸாரி ‘ என்றான் ராஜகோபால் அவளை வழிமறித்து.
‘இது ஹாஃப்சாரி ‘ என்றாள் பிருந்தா.
சிரித்தான். அவளும் சிரித்தாள். பிறகு கேட்டாள். ‘ஜல்சான்னா என்னடா ? ‘
‘தெரில ‘ என்றான். கொஞ்சம் யோசித்து ‘எனக்குத் தெரியாது. நான் நல்லவன் ‘ என்றான்.
‘எங்கப்பாவும் உங்கப்பாவும் கெட்டவங்க ‘ என்றாள்.
‘ஏ அப்பா… ‘ என்றான். ரெண்டு கையும் விரித்து ‘உலகமே கெட்டது ‘ என்றான்.
(தொடரும்)
****
sankarfam@vsnl.net
- அரசூர் வம்சம் – அத்தியாயம் எட்டு
- ஒற்றைச் சிறகு
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட அறிவுகள்….! (Twenty Years after the Three Mile Island Nuclear
- அறிவியல் மேதைகள் பெஞ்சமின் ஃபிராங்க்ளின் (Benjamin Franklin)
- சத்துள்ள பச்சடி (ராய்த்தா)
- கசப்பும் இனிப்பும் (நா.பார்த்தசாரதியின் ‘வேப்பம்பழம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 63)
- சிறுகதை – அதன் அகமும் புறமும்
- வனத்தில் ஒரு வேனில் நாள் – இலக்கிய நிகழ்வு
- இந்தி சினிமாவின் பத்துவிதிகள்
- எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் நினைவாக…
- மனம்
- மனுஷ்ய புத்திரன் கவிதைகள் நான்கு
- ஓ கடிகாரம்!
- இலக்கணக்குழப்பம்
- வளர்ந்தேன்
- இருக்குமிடத்தை விட்டு…
- கணினித் தத்துவம்
- ‘காலையும் மாலையும் ‘
- சித்திரமே என்னை சிதைக்காதே
- தாழ் திறவாய், எம்பாவாய்!
- பறவைப்பாதம் 3
- குதிரை
- நயாகரா + குற்றாலம் = வேண்டாத கனவு
- 50 ரூபாய்க்கு சாமி
- வாரபலன் – 3 பழைய பத்திரிக்கை வாசிப்பு
- கைலாஷ்- மானசரோவர் யாத்திரை – சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை.
- புன்னகை
- கடிதங்கள்
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5
- தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்
- என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்
- ஒருசொல் உயிரில்….
- சொறிதல்…
- ஞாபகம்
- வினையில்லா வீணை
- ஆண்களைக் காணவில்லை
- நான்