பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

நாவாந்துறைடானியல் அன்ரனி


மதியம் கடந்து விட்டது. அப்படியிருந்தும் வெயில் தணியவில்லை. சவிரிமுத்தர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒன்று வழுக்கை விழுந்த தலையில் இருந்தது. முன்னோக்கிப் பெருத்திருந்த தொந்தி பெருஞ்சுமையாகக் கனக்க மூச்சு இரைக்க இரைக்க பிரதான ஒழுங்கையில் திரும்பினார். எதிரே ஜீப் வண்டியொன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ஜீப்பைக் கண்டதும்

மரநிழலில் ஒதுங்கும் பாவனையில் கானோரத்தில் நின்ற பூவரச மரத்தடியில் நின்று கொண்டார்.

ஜீப் வண்டி அவரைக் கடந்து எதிர்த்திசையை நோக்கி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. கடந்து செல்லும் வேகத்திலும் கூட சவிரிமுத்தர் அவனைப் பார்த்து விட்டார்.

இரு பொலிஸ்காரர்களுக்கிடையில் பெருமாள் இருந்துகொண்டிருந்தான். அவனுடைய பெரிய கண்கள் சவிரிமுத்தரைக் கண்டு கொண்டதும் எதையோ அவசரத்துடன் கேட்க எத்தனிக்கும் வேளையில் வண்டி வெகுதூரம் சென்றுவிட்டது.

அவனுடைய கண்கள். அவை பார்த்த பார்வை. சவிரிமுத்தரின் மனதில் ஏதோ ஒரு உறுத்தல்.உடலில் ஒரு கணசிலிர்ப்பு. இனம்புரியாத இரைச்சல்கள். சோர்வுடன் நடந்தார்.

ஒழுங்கை நிறைய சனங்கள். படலை வாசல்களிலும் வேலிகளுக்கு மேலாலும் இன்னும் பலர். ஜீப் வண்டி சென்ற திசையை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் எதையோ பேசி விமர்சித்துக் கொண்டு அனுதாபப் பட்டுக்கொண்டிருந்தனர். எதையுமே கண்டுகொள்ளாதவராக சவிரிமுத்தர் நடந்து கொண்டே இருந்தார்.

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில் உடம்பு வேர்வையால் நனைந்திருந்தது.

அணிந்திருந்த மேற்சட்டையை களைந்து போட்டுவிட்டு சரு சருவென சடைத்து ரோமங்கள் வளர்ந்திருந்த வெறும் உடம்பை ஆசுவாசத்துடன் அங்கிருந்த ஈசிச்செயரில் சாய்த்துக் கொண்டார்.

கழுத்தில் இரட்டை வடம் சங்கிலி கனத்தது. விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்கள்.கருங்காலித் தடிக்கு ப10ண் போட்டது போல் மினுமினுத்துக் கொண்டிருந்தன.

ஆனாசி… ஆனாசி…. இவன் செல்லையா வந்தவனோ ?

சவிரிமுத்து போட்ட சத்தத்தில் குசினிக்குள் இருந்தவள் வெளியே வந்தாள்.

ஏன் இப்பிடி சத்தம் போடுறீங்க. இப்பதான் அவன் கொண்டுவந்து வச்சிற்றுப் போறான். சாருக்குள்ளதான் இருக்கு…

அதை எடுத்துக் கொண்டு வா….

ஆனாசி விசுக்கென்று சாருக்குள் சென்றாள். வரும்போது அவள் கையில் இருந்த போத்தல்களில் கள் நிரம்பியிருந்தது. சவிரிமுத்தரின் காலடியில் வைத்துவிட்டு இவள் மறுபடியும் குசினிக்குள் போய்விட்டாள்.

சவிரிமுத்தர் கோப்பையில் சிறிது கள்ளை வார்த்து பக்கத்தில் வைத்துவிட்டு புகையிலையைக் கிழித்து சுருட்டத் தொடங்கினார். அவருடைய சிந்தனை எதிலோலயித்திருந்தது.

என்னங்க ஒரு விஷயம் கேள்விப் பட்டாங்களோ. நம்மளோட தொழிலுக்கு நிண்ட பெருமாளையல்லோ பொலிஸ்காரங்கள் பிடித்துக்கொண்டு போறாங்க. குசினிக்குள் இருந்து ஆனாசியின் சத்தம் கேட்டது.

நானும் வழியில பார்த்துக் கொண்டுதான் வாறன். என்ன நடந்ததாம்…. சவிரிமுத்தர் உணர்ச்சியின்றிப் பேசினார்.

அவன் கள்ளத் தோணியெண்டு யாரோ பொலிசுக்கு பெட்டிசம் போட்டிட்டாங்களாம். அதுதான் அவனை

வந்து இழுத்துக் கொண்டு போறாங்கள். ஏனெண அவன இனிமேல் விடமாட்டாங்களா….

ஆனாசி வெளியே வந்து சவிரிமுத்தருக்குப் பக்கத்தில் நின்று கொண்டாள். சவிரிமுத்தர் மனைவியை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். மெளனமாக கோப்பையிலிருந்த கள்ளை எடுத்து ஒருதடவை உறிஞ்சினார். அந்த மூச்சிலே கோப்பை முழுவதும் காலியாகி விட்டது.

ஆனாசிக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லியும் புருஷன் அக்கறைப் படுத்துவதாக தெரியவில்லை.

ஏனெண உங்களுக்கு பொலிசில இருக்கிற பெரியவங்களத் தெரியுந்தானே. ஓருக்காய்ப் போய் என்னெண்டுதான் பாத்திட்டு வாங்கோவன்….

சவிரிமுத்தர் மறுபடியும் கள்ளை வார்த்து ஒரு முறடை உறிஞ்சி விட்டு கள்ளில் தோய்த்து விட்ட பெரிய மீசையை தடவி விட்டுக் கொண்டார்.

பேச்சி இதுகள் ஒண்டும் உனக்கு விளங்காது. என்னமாதிரித்தான் தெரிஞ்சவங்களெண்டாலும் லேசில இந்தமாதிரி விசயங்களை விடமாட்டாங்கள்.

ஆனாசி அதற்கு மேல் எதுவும் பேசாமல் போய்விட்டாள். சவிரிமுத்தர் சுற்றிவைத்திருந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தார். ஆனாசி கேட்டதற்காக ஏதோ சொல்லி வைத்தார். ஆனால் அவருடைய மனதில் பெருமாளின் விடயம் உறுத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டார்.

சவிரிமுத்தருக்கு நன்றாக நினைவிருந்தது. பத்து வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமையாய் இருக்கவேண்டும்…. தோணிக்காசுக்கு கொழும்புத்துறைக்குப் போவதற்காக யாழ்ப்பாண பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் பெருமாளை சந்தித்தார்.

அவனுக்கு அப்போது பத்து வயதிருக்கும். கறுத்த மேனி. ஊதி மினுமினுப்புடன் இருந்த வயிறு. சிக்குப் பிடிக்காத தலைமயிர். காவி படிந்து முன்னோக்கி மிதந்து கொண்டிருந்த பற்கள். பெரிய கண்கள். பீத்தல் விழுந்த துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு பஸ் கிய10வில் நின்றவர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அவனைக்கண்டதும் சவிரிமுத்துக்கு ஆனாசியின் நினைவு வந்தது. வெகுநாட்களாகவே வீட்டு வேலைக்கு ஒருவர் வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். இவருடைய வலைக்கும் ஆள் பற்றாக்குறையாக இருந்தது.

~தம்பி…. இஞ்சால உன்னத்தான். இஞ்ச வா…. |

பெருமாள் திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் என்ன வென்று விரித்துரைக்க முடியாத பாவம். அவன் சவிரிமுத்தர் அருகே வந்தான்.

~தம்பி உன்ரை பேரென்ன… |

~பெருமாளுங்க… |

~எந்த ஊர் மோன உனக்கு|

~பதுளையிங்க… |

~அப்ப வாச்சுப் போச்சு | என்று

மனதிற்குள் நினைத்தபடி சவிரிமுத்தர் தொடர்ந்தார்.

~அப்பா…. அம்மா…. இல்லையோ ? |

~அப்பா…. செத்துப் போட்டாரு. அம்மா தங்கச்சி தோட்டத்திலே வேலை செங்சிக்கிட்டு இருக்கிறாங்க.. |

~ஏன் உனக்குத் தோட்டத்திலே வேலை செய்யப் பிடிக்கேல்லையா ? |

~என்னோட வீட்டுக்கு வாறியா… ? உனக்கு சாப்பாடு தந்து உன்ர வீட்டுக்கும் காசு அனுப்பிறன் |

– தயக்கம்.

~ம்… சொல்லன் |

சரியிங்க…. |

அவன் சம்மதித்து விட்டான்.

பெருமாள் வீட்டுக்கு வந்த போது சம்மாட்டி சவிரிமுத்து சாதாரண சவிரிமுத்துவாகத்தான் இருந்தார். பெருமாள் வீட்டில் எடுபிடி வேலைகளைக் கவனித்ததுடன் வலையில் பிடித்து விற்றதுபோக ஐஸ் போட்டு வைத்தல் போன்ற வேலைகளையும் கூட இருந்து செய்வான்.

அந்தத் தெருப்பிள்ளைகள் எல்லாரும் அவனுக்குச் சினேகிதர். அவனுடைய வயதுக்கு மூத்த அனுபவ அறிவும், அதனால் அவன் பேசும் பெரிய விசயங்களையும் ஆச்சரியத்துடன் கேட்பார்கள், கூட விளையாடும் சிறுவர்கள். எப்போதாவது அவர்களுக்குள் சண்டை மூழும். அவனைப் பார்த்து ~கள்ளத்தோணி| என்று பட்டம் சொல்லுவார்கள். ஆனால் அவன் அந்த வார்த்தையின் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாதவன் போல உண்மையில் அவனுக்குப் புரியாமல் கூட இருக்கலாம்.- பேசாமல் இருப்பான். ஆனால் ~கரிக்கோச்சி| என்று மட்டும் அவனை யாரும் பேசி விட்டால் போதும் கோபம் தலைக்கேற, மூர்க்கத்துடன் – சொன்னவனை வளைத்துப் பிடித்து முதுகில் ஒரு அறை கொடுக்காமல் அடங்கமாட்டான். பற்களை ~நறநற| வெனக் கடித்துக் கொண்டு பெரிய விழிகளைப் பயங்கரமாக உருட்டுவான். வாயில் வந்த து}சண வார்த்தைகளை எல்லாம் கொட்டிக்கொள்வான். சிலவேளைகளில் துண்டு பீடிகளைப் பொறுக்கி வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று குடிப்பதைச் சவிரிமுத்தர் கண்டிருந்தாலும் எதுவும் சொல்லுவதில்லை. ஏதாவது ஏசினால் ஓடிப் போய்விடுவான் என்றபயம். அவருக்கு அவனது சுறுசுறுப்பும் பிடித்திருந்தது.

சிலநாட்களில் பெருமாள் சவிரிமுத்துவுடன் கடலுக்குப் போகத் தொடங்கி விட்டான். தோணியில் பெருமாள் கால் வைத்தவேளை ~விடுவலையில்| கயல் மீன்அள்ளிச் சொரிந்தது. சில வருடங்களிலேயே சவிரிமுத்து பல லட்சம் பெறுமதியான தோணிகளுக்கும், நைலோன் வலைகளுக்கும் அதிபதியாகி ஊரில் பெரிய சம்மாட்டி ஆகிவிட்டார்.

மலைப்பாறையில் பிறந்து கடல் உவரில் ஊறிய பெருமாளின் உடல் உருண்டு திரண்டு தசைக்கோளங்கள் புடைத்து நிற்கும் பருவத்தை எட்டிவிட்டான் பெருமாள் அவன் உழைத்த பத்து வருடங்களிலும் வயிறு நிறையச் சாப்பாடு. ஒரு நாளைக்கு இரண்டு கட்டு பீடி, ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா பார்க்கக் காசு … இவைதான் அவன் உழைப்புக்குக் கிடைத்தவை.

பத்து வருடங்களாக தாய் சகோதரியை காணாமல் மறந்திருந்த பெருமாளுக்கு சில நாட்களுக்கு முன் திடாரென ஏனோ ஊருக்கு போக வேண்டுமென்று மனம் பேதலித்தது. வேட்கை கொண்ட மனதின் விருப்பத்தை சம்மாட்டியாரிடம் வெளியிட்டு, ஐநு}று ரூபா காசு கேட்டான். சுரண்டிப் பிழைத்து சொகுசு அனுபவித்துப் பழக்கப்பட்டுவிட்ட சவிரிமுத்துவுக்கு இது பேரிடியாகிவிட்டது. பெருமாள் செய்யும் வேலையின் பழு, அவனை இழந்தால்… அவன் திரும்பிவராவிட்டாலும்… ? அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இதனால் பல நாட்களாக கடத்தி வந்தார்.ஓவ்வொரு நாளும் பெருமாளின் ஊமை முணுமுணுப்பு இரைச்சலாகி வெடித்தது. ஒருநாள் ஊதியம் எதுவுமின்றியே வெளியேறிவிட்டான்.

அடுத்த நாள் சவரிமுத்துவின் பரம விரோதி பேதுருவின் நைலோன் வலையில் சேர்ந்து விட்டான் என்ற செய்தியை சவிரிமுத்து அறிந்தபோது அதிர்ந்தே போய் விட்டார்.

– அந்தப் பெருமாள் இப்பொழுது பொலிசில்.

~என்ன சம்மாட்டியார் கனக்க யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க|.

அப்பொழுதுதான் வாசல் படியைத் தாண்டி வந்து கொண்டிருந்த குத்தகைக்காரன் யோணின் இன்னொரு கோப்பைக்குள் ஊற்றி அதைக் குத்தகைக்காரனிடம் நீட்டினார். … ….

~என்ன வி~யம் குத்தகை… இந்த மத்தியான நேரத்தில| சவிரிமுத்து வினவினார்.

~ஒண்ணுமில்லை சம்மாட்டியார்… | நேற்று சுவாமியார் கூப்பிட்டு இந்த முறை பெருநாள் நல்ல முறையில கொண்டாட வேணும் எண்டு சொன்னார்.

~ஓ… அதுக்கென்ன… சிறப்பாகச் செய்வம்…. |

சொல்லிக் கொண்டே சவிரிமுத்து கோப்பை முழுவதையும் காலி செய்துவிட்டு, மறுபடியும் கோப்பையை நிரப்பினார்.

குத்தகைக்காரர் மீண்டும் தொடர்ந்தார்.

~இந்த முறை வழமைபோல் கோயில் சோடினைகள், வெடி, மத்தாப்பு எல்லாம் உங்க பொறுப்பு…. | குத்தகைக்காரர் இப்போது தானே போத்தலை எடுத்து நிரப்பிக்கொண்டார்.

~அதுக்கென்ன இந்தமுறை வாற ஒரு கிழமை உழைப்பை அப்படியே ஒதுக்கிவிடுறன். |

கோப்பையை நிரப்புவதும் வெறுமையாக்குவதுமாய் சில நிமிடங்கள். சவிரிமுத்துவுக்கு சற்று ஏறிவிட்டது. குத்தகைக்காரர் நிதானத்துடன் பேசினார்.

~ஒரு விஷயம் கேள்விப்பட்டியளோ… உங்களை விட்டுப்போட்டு பேதுருவட வலைக்குப்போன அவன் தான்… பெருமாள், அவனைக் கள்ளத்தோணியெண்டு பெட்டிசம் போட்டு பொலிசட்டைப் பிடிச்சுக் கொடுத்துப் போட்டாங்களாம் ஆரோ… |~ஓம் ஓம்… நானும் வழியில பாத்தன். பாவம் பெருமாள். நல்ல பெடியன்.| சவிரிமுத்து அரைமயக்கத்துடன் அனுதாப வார்த்தைகளைக் கொட்டினார்.

~அப்ப நான் வரப்போறன் சம்மாட்டி| என்று கூறிக்கொண்டே குத்தகைக்காரர் எழுந்து மெதுவாக நடந்தார்.

சவிரிமுத்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அண்ணாந்து பார்த்தார். பருந்துகள் எதையோ தேடிப்பறந்து கொண்டிருந்தன.

முற்றும்.

daniel.jeeva@rogers.com(வழியாக)

Series Navigation