பரிமளவல்லி (புதிய தொடர்கதை) 1. ‘ரீகல்-சால்வ்’

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

அமர்நாத்


1. ‘ரீகல்-சால்வ்’

சகாதேவனுக்குப் ‘பொன்னியின் செல்வன்’ கதையின் இரண்டாம் பாகத்தின் ஆரம்பம்தான் நினைவுக்கு வந்தது. சுந்தரசோழரைக் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற புலிநகமும், யானைவால் ரோமமும் தேவையென்று மந்திரவாதி ரவிதாசனும், அவனுடைய கூட்டாளி தேவராளனும் கோடிக்கரையிலிருந்து இலங்கைக்கு அவசரமாகப் படகில் செல்வார்கள். இரண்டுநாள் கழித்து சக்கரவர்த்தியின் அதே நோயைக் குணப்படுத்தும் மூலிகைகளைத் தேட இலங்கைக்கு உடனடியாகச் செல்லவேண்டுமென்று வந்தியத்தேவனும் கோடிக்கரைக்கு வருவான். அதைப்போல, 1-ப்ரோமோப்ரோபேன் கலந்த காற்றைச் சுவாசிப்பது உடலுக்குத் தீங்குவிளைவிக்கிறதா இல்லையா என்று கண்டறிய இரண்டு மாதங்களுக்குமுன் ஜேசனும், அவன் மனைவி ஐரீனும் நாஷ்வில்லிலிருந்து வந்தார்கள். இரண்டு நாட்களுக்குமுன் அதே காரணத்தைச் சொல்லிக்கொண்டு அதே ஊரிலிருந்த ஒரு நிறுவனத்திற்காக கில்மர் என்ற இன்னொருவனும் வந்தான்.
ஊர்திகளுக்குத் தேவையான பல பகுதிகளைத் தயாரிக்கும் ஒரு கூட்டுக் கம்பெனியின் கிளைத்தொழிற்சாலையில் சகாதேவன் உதவிமேனேஜர். அவன் மேற்பார்வையில் இருக்கைகள் தயாரிக்கப்பட்டன. ‘ரைடர் சீட்ஸ்’ தொழிற்கூடத்தில் நுரை-ரப்பர் இருக்கைகளுக்குத் தேவையான அளவில் வெட்டப்பட்டது. ஒவ்வொரு துண்டும் பசை தடவப்பட்டு மேற்புறமும், மூன்றுபக்கங்களும் ரெக்சினுடன் ஒட்டித்தைக்கப்பட்டு ஊர்திகளை ஒன்றுசேர்க்கும் தொழிலகத்திற்கு அனுப்பப்பட்டது. பசையைக் கரைக்க கடந்த நான்காண்டுகளாக ‘ரீகல்-சால்வ்’ என்றொரு புதிய கலவை பயன்படுத்தப்படுகிது. அதன் சிறப்புகளை மோனார்க்கோ கெமிகல் கம்பெனியின் பிரிதிநிதி விவரித்தான். விரைவில் உலர்ந்துவிடுவதால் பசை உடனே ஒட்டிக்கொள்ளும். அதேசமயத்தில் ரெக்சின் துணிகளை ஒட்டித்தைக்கும்போது சிறிது நகர்த்த இடம்தரும். செயற்கைப் பசைகளைக் குறைந்த அளவிலேயே கரைக்கும் தன்மைகொண்டது. முன்னால் பயன்படுத்திய கரைப்பான்களைப்போல எரிவதற்கான ஆபத்து இல்லை. சென்னையின் சூட்டிற்கு அது மிகஅவசியம். அவன் பெருமை அடித்துக்கொண்ட ‘ரீகல்-சால்வி’ன் அத்தனை குணங்களையும் சகாதேவன் நடைமுறையிலே கண்டான். அதற்கு இன்னொரு உபயோகமும் இருக்கிறதென்று அவனுடைய உறவினள் சரவணப்ரியா மூன்று மாதங்களுக்குமுன் அனுப்பிய மின்-கடிதத்தின் இணைப்பைப் படித்தபோது அவனுக்குத் தெரியவந்தது.
அன்புள்ள சகாதேவன்:
இங்கே சாமியும் நானும் நலம். சூரன் மேற்பட்டப்படிப்பை மேற்கொள்ள பெர்க்கிலி சென்றிருக்கிறான். உங்கள் மிகஅழகான மனைவி வினதாவும், அதிபுத்திசாலியான பெண் மானசாவும் நலமென நினைக்கிறேன். உங்கள் சர்க்கரை, இரத்த அழுத்தம், இடுப்பின் சுற்றளவு எல்லாம் கட்டுக்குள் இருக்கப் பிரார்த்திக்கிறேன். நீங்கள் ஊகிப்பது முற்றிலும் சரி, நான் இவ்வளவுதூரம் சொல்வதற்குக் காரணம், உங்களால் எனக்கொரு காரியம் ஆகவேண்டும். நீங்கள் பணியாற்றும் தொழிற்சாலையில் ‘ரீகல்-சால்வ்’ கலவை பயன்படுத்தப்படுவதாக அறிகிறேன். 1-ப்ரோமோப்ரோபேன் என்கிற கரைபொருள் அதில் முக்கால்பங்கு. அதன் ஆவியை அதிக அளவில் சுவாசிப்பது உடல்நலத்தைப் பாதிக்கலாம் என்று எங்களுக்கொரு சந்தேகம். அதை சோதித்தறியும் ஆராய்ச்சியின் ஆரம்பகட்டத்தில், அந்த குறிப்பிட்ட இரசாயனப்பொருளை எலிகள் சுவாசிக்கும் காற்றில் கலந்து, அதனால் அவற்றுக்கு ஏற்பட்ட விளைவுகளைக் கவனித்தபோது எங்கள் சந்தேகம் சரி என நம்பிக்கைதரும் முடிவுகள் கிடைத்திருக்கின்றன. ஆராய்ச்சியைத் தொடர யூ.எஸ் அரசாங்கத்தின் மானியத்திற்கு விண்ணப்பிக்கப் போகிறோம். விண்ணப்பத்தின் பக்கபலமாக இன்னும்சில முன்னோடியான சோதனைகள் செய்ய விருப்பம். 1-ப்ரோமோப்ரோபேன் சேர்ந்த கலவையைப் பயன்படுத்தும் ‘ரைடர் சீட்ஸ்’ பணியாட்கள் அதை சுவாசிக்க நேரிடலாம். அவர்களின் இரத்தமும் (அதிகமில்லை, ஒருசில மிலி போதும்), சிறுநீரும் (அதற்கு ஆட்சேபம் இருக்கமுடியாது!) எங்கள் ஆராய்ச்சிக்கு உதவும். வேன்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் என்னுடன் ஆய்வுநடத்தும் இருவர் அங்கே ஒருவாரம்தங்கி அவற்றைச் சேகரிக்க முடியுமா? அப்படிச் செய்யும்போது உங்கள் தொழிற்சாலையில் உண்டாகும் இடையூறுகளுக்கான செலவை ஏற்றுக்கொள்வோம். உங்கள் நல்லபதிலுக்குக் காத்திருக்கும்…
சரவணப்ரியா.
சாரா.நாதன்@வான்டர்பில்ட்.ஈடியு

கடிதத்தைப்படித்த சகாதேவன் நான்காண்டுகளை மனதில் ஓடவிட்டான். இருக்கைகளின் தயாரிப்பில் ‘ரீகல்-சால்வ்’ பயன்படுத்திய அந்தக்கால அளவில் ராஜாமணி மட்டும் தலைவலியென்று வாரத்தில் பாதிநாள் வீட்டிற்குச் செல்வது வழக்கம். தாமோதரனுக்கு எப்போதாவது கைகால் விரல்களில் அரிப்பு. மற்றபடி யாரும் அவதிப்பட்டதில்லை.
சுகாதார அதிகாரிகள்கூட தொழிற்சாலையை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு வெளியேறிடுவார்கள். அப்படியிருக்க சரவணப்ரியாவின் கோரிக்கையை மேனேஜர் கஜமுகன் எப்படி எடுத்துக்கொள்வார் என்று சகாதேவனுக்குத் தெரியாது. இருவருக்கும் இடையில் பரஸ்பர மதிப்பும், சுமுகமான உறவும் இருந்தாலும் சகாதேவன் ஓரெல்லைக்குமேல் தாண்டியதில்லை. அதனால் தானே செய்தியைச் சொல்லாமல், கடிதத்தை அச்சடித்து அவருடைய தனியறைக்கு எடுத்துச்சென்று கொடுத்தான்.
கடிதத்தை படித்துமுடித்ததும் கஜமுகன் அவனிடம் அதைத் திருப்பித்தரவில்லை. “அழகா தமிழ்லே எழுதியிருக்காங்களே” என்று பாராட்டினார். “அவங்க வர்றதனாலே உங்களுக்குக் கஷ்டம் ஒண்ணுமில்லையே?”
“இல்லைங்க. ஆனா, வேலையாளுங்க கிட்ட எதாவது தப்பு கண்டுபிடிச்சா…”
“முதல்லே நம்மகிட்ட ரிசல்ட்டைக் காட்டிட்டுத்தான் வெளிடணும்னு சொல்லிடலாம். எதாவது சரியில்லைன்னா அவங்க கிட்டயே என்ன செய்யறதுன்னு கேக்கலாம்.”
“அப்ப…”
“நானே அவங்களுக்கு பதில் போட்டுடறேன். கீழே அட்ரஸ் இருக்குதில்லே” என்று முடிவாகச் சொன்னதில் சகாதேவனுக்கு மகிழ்ச்சி.
சரவணப்ரியாவுக்கு பதில் வந்தது. தொழிற்சாலையில் சேகரிக்கும் விவரங்களின் அடிப்படையில் எழுதப்படும் கட்டுரையில் கஜமுகனின் பெயர் இடம்பெற வேண்டும், அவர் அதைப் படித்தபிறகே பிரசுரிக்கவேண்டும் என்று இரண்டு நிபந்தனைகள். அவற்றை ஒப்புக்கொள்வதா என்று முதலில் அவளுக்குத் தயக்கம். கஜமுகனுக்கு விஞ்ஞான ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றில் தன்பெயர் வரவேண்டுமென்ற ஆசை இருக்கும்போல. அவருடைய பின்னணியை வலைத்தளத்தில் தேடியெடுத்தாள். அவர் இல்லினாய் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் உயர்பட்டம் பெற்றபோது அதில் ஆராய்ச்சியும் செய்திருந்தார். அவர் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டவர் என சகாதேவன் தெரிவித்திருந்தான். கட்டுரையைப் படித்து அதன் கருத்துக்களை ஆக்கபூர்வமாக விவாதிக்கும் பட்சத்தில், அதன் ஆசிரியர்களில் ஒருவராக அவரைச் சேர்ப்பது விஞ்ஞான நெறிகளுக்கு புறம்பானதல்ல. சரவணப்ரியா நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாள்.

ஜேசனும், ஐரீனும் சென்னைக்கு வந்த மறுநாள் ஒருஞாயிறு. சகாதேவன் தன்வீட்டிற்கு அவர்களைச் சாப்பிட அழைத்தான். விமானநிலையத்திற்கு அருகில் தங்கியிருந்த விடுதியிலிருந்து வந்தார்கள். ஞாபகமாக காலணிகளை வீட்டுவாசலில் கழற்றினார்கள். அறிமுகத்திற்குப் பிறகு இருவரும் முன்பே பழகியதுபோல் சரளமாகப் பேசத்தொடங்கி விட்டார்கள்.
வினதாவின் வயிற்றைப் பார்த்து ஐரீன் புன்னகை பூத்தாள். அவளிடம் வரும்வழியில் வாங்கிய பத்துமுழம் மல்லிகைப்பூவைத் தந்து, “சாரா, பூங்கொத்துக்கு பதிலாக தொடுத்த பூச்சரம் வாங்கப் போ, என்றாள். சாரா என்றுதான் அவள் எங்களுக்குப் பழக்கம். நீங்கள் அவளை எப்படி அழைப்பீர்கள் என்று தெரியாது.”
“சாமும் சாராவும் சென்னையில் காரோட்டமாட்டோமென்று சொல்வதன் காரணம் இன்றுதான் புரிந்தது” என்றான் ஜேசன். “எங்களை எல்லா இடங்களுக்கும் அழைத்துச்செல்ல ஒரு டிரைவர் இருப்பதால் பிழைத்தோம்.”
பெரிய அறையின் சோஃபாக்களில் அமர்ந்தார்கள். ஆர்வத்துடனும் வெட்கத்துடனும் விருந்தினர்களைப் பார்த்து ஓரத்தில் நின்றிருந்த ஒன்பதுவயதுப் பெண்ணை ஐரீன் அருகில் அழைத்தாள். மானசாவின் நீண்ட பின்னல் அவளுக்குப் பிடித்திருந்தது. அதைத் தொட்டுப்பார்த்தாள். மானசாவுக்கும் ஐரீனின் தந்தத்தின் நிறத்தில் நெளிநெளியாகப் பரந்து முன்புறம் தொங்கிய கூந்தல் அதிசயமாக இருந்தது. கையிலெடுத்துப் பார்த்தாள்.
“மானசா! எந்த வகுப்பில் படிக்கிறாய்?”
“நான்காவது.”
“உனக்கு எந்தப்பாடம் பிடிக்கும்?”
“கணக்கு.”
“ஏன்?”
“எதையும் மனப்பாடம் செய்ய வேண்டாம். பதில் சரியா தப்பா என்று உடனே தெரிந்துவிடும்!”
“உன் ‘வொர்க்-புக்’கைக் காட்டுகிறாயா?”
அறையின் ஒருபக்கத்தில் இரண்டு கதவுகள். ஒன்றில் நுழைந்து மானசா நோட்டுப்புத்தகத்தை எடுத்துவந்து கொடுத்தாள். ஐரீன் பக்கம்பக்கமாக அதைப் பிரித்துப்பார்த்தாள்.
ஒரேசீராக வழிமுறைகளோடு தீர்வுசெய்யப்பட்ட கணக்குகள் அவளை மயக்கின. “நான்காவதுக்கு இவ்வளவு கடினமான கணக்குகளா? கையெழுத்து என்ன அழகு! என்ன நேர்த்தி!”
“அவளை ரொம்பப் புகழவேண்டாம்! வகுப்பில் எட்டாவது ராங்க்கிலிருந்து அவளை மேலே உயர்த்த முயற்சிக்கிறேன், முடியவில்லை” என்றாள் வினதா.
“எங்கள் பையன் ஆன்ட்ருவுக்கு பதினோரு வயது. இந்தமாதிரி ஒருகணக்கு அவனைப் போடவைப்பதற்குள் அவன் ஒருபல்லைப் பிடுங்கி எடுத்துவிடலாம். வரும் கோடையில் உங்களிடம் ஒருவாரம் அவனை அனுப்பிவைக்கிறேன். உங்கள் பெண்ணைப் பார்த்தாவது அவனுக்குக் கணக்கில் ஆர்வம் வருகிறதா பார்க்கலாம்.”
“தாராளமாக அனுப்புங்கள்!”
“சாப்பிடலாமா?”
அனைவரும் எழுந்து சமையலறையைப்பார்த்த மேஜையருகில் வந்தார்கள். அதன்மேல் பாத்திரங்கள், எவர்சில்வர் தட்டுகள். பாத்திரங்களின் மூடிகளை வினதா ஒவ்வொன்றாகத் திறந்தாள்.
“நீ சொல்லாதே, வினடா! நானே ஊகிக்கிறேன். சாராவின் பழக்கத்தில் உங்கள் சமையல் எனக்கு அத்துப்படி. இது ரசம். இது கறி, அதிலிருக்கும் காய்தான் எதுவென்று தெரியவில்லை. பீன்ஸ் மாதிரி இருக்கிறது, ஆனால் பீன்ஸ் இல்லை.”
“கொத்தவரங்காய்.”
“பலநிறக்காய்கள் கலந்த கூட்டு. சப்பாத்தி சாராவும் சாமியும் செய்வதைவிடத் தடியாக இருக்கிறது.”
“உள்ளே உருளைக்கிழங்கு திணிக்கப்பட்டிருக்கிறது.”
ஜேசனும் ஐரீனும் ஒருபக்கத்திலும், மற்றவர்கள் எதிரிலும் அமர…
“உங்களுக்கு சிறப்பாக எதுவும் செய்ய வேண்டாமென்று சாரா சொன்னாள்.”
“இது விருந்து இல்லையா?”
முதலில் ஆளுக்கொரு ஆலுபரோட்டா. அதைத் தின்னும்போது, வெகுநேரம் யோசித்துவைத்ததுபோல், “ஐரீன்! ப்ரோமோப்ரோபேன் உடலில் என்ன விளைவுகளை உண்டாக்குமென்று எப்படி கணிப்பீர்கள்?” என்று வினதா கேட்டாள்.
“இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் கணக்கைப்போல் உண்டு, இல்லை என்று உடனே பதில்சொல்ல முடியாது. இவ்வளவுபேர் தினம் இத்தனை சிகரெட் புகைத்தால், அவர்களில் இத்தனைபேருக்கு புற்றுநோய்வர இவ்வளவு சாத்தியக்கூறுகள் என்பது பலவருட ஆராய்ச்சியின் பலனாக ஒப்புக்கொள்ளப்பட்ட கோட்பாடு. ஆனால் சிகாரை ஊதிய சர்ச்சில் வெகுநாள் வாழவில்லையா, எனக்குத் தெரிந்து சிகரெட்டையே தொடாத ஒருவனுக்கு நுரையீரல் புற்றுநோய் வந்திருக்கிறதே என்று குட்டையைக் குழப்புவர்களும் இருக்கிறார்கள்” என்று ஆரம்பித்தாள் ஐரீன். பரோட்டாவுக்குப் பிறகு கத்திரிக்காய் சாதம். “முதலில் எட்டு எலிகளை இரண்டு தொகுதிகiளாகப் பிரித்துக்கொண்டோம். ஒருபிரிவிற்கு மட்டும் இரண்டு வாரங்களுக்கு ப்ரோமோப்ரோபேன் கொடுத்தோம். இரண்டு பிரிவுகளையும் ஒப்பிட்டபோது வேறுபாடுகள் தெரியவந்தன. அதுதான் ஆராய்ச்சியின் முதல்படி.”
“மனிதர்களென்று வரும்போது…”
“ஆராய்ச்சிக்காக வளர்க்கப்படும் எலிகள் அச்சில் வார்த்ததுபோல் ஒரேமாதிரியானவை. அதனால், இரண்டு பிரிவுகளையும் ஒப்பிடுவதில் தவறில்லை. ஆனால், மனிதர்களை ஒப்பிடும்போது இரண்டு தொகுதிகளிலும் இருப்பவர்கள் வயது, சமூக அந்தஸ்து, வளர்ந்த சூழ்நிலை ஆகியவற்றில் ஒரேமட்டத்தில் இருப்பது நல்லது. கிராமத்தில் வாழும் ஒருவனையும் நகரத்தில் வசிக்கும் ஒருவனையும் ஒப்பிடுவது சரியில்லை. எங்கள் ஆராய்ச்சிக்கு, ப்ரோமோப்ரோபேன் பயன்படுத்தும் ரைடர் சீட்ஸின் தொழிலாளர்களையும், அதற்கு அருகில் இருக்கும் கால்சென்டரில் வேலைசெய்யும் பதினைந்து பேர்களையும் ஒப்பிடப்போகிறோம். அவர்கள் இந்த இரசாயனப்பொருளை முகரவில்லை என்று எதிர்பார்க்கலாம். அவர்களை ‘கன்ட்ரோல் க்ரூப்’ என்று அழைப்போம்…”
“வினதா கணக்கில் பி.எச்டி.” என்றான் சகாதேவன் பெருமையாக. “குழந்தை பிறந்தபிறகு அவளுக்கு கம்ப்யூட்டரில் வீட்டிலிருந்தே வேலைசெய்ய ஆசை. அதனால்தான் இவ்வளவு கேள்விகள் கேட்கிறாள்.”
“ஐரீனுக்கு எதையும் விஸ்தாரமாகத்தான் சொல்லத் தெரியும்” என்று ஜேசனும் தன்மனைவிக்கு வக்காலத்து வாங்கினான்.
“எந்தவிதத்தில் ஒப்பிடுவீர்கள்?”
“ஒரு இரசாயனப்பொருள் உடலை பாதிக்கும்போது இரத்தத்திலும், சிறுநீரிலும் சிற்சில மாறுதல்களை ஏற்படுத்தலாம். அவற்றை அளப்பது சாராவுக்குத்தான் தெரியும். நாங்கள் உடல்நிலையை சோதிப்போம்.”
“உங்கள் ஆராய்ச்சிக்கு அவருடைய இரத்தத்தையும் எடுப்பீர்களா?”
“நிச்சயமாக. அவர் அலுவலகம் தனியாக இருப்பதால், ப்ரோமோப்ரோபேன் அதிகம் சுவாசிக்காத அவருடைய இரத்தம் எங்களுக்கு பெரிய உதவியாக இருக்கும்.”
“குட் லக்!”
“ஏன்?”
“அவர் இரத்தத்தைப் பார்த்தால் மயக்கம் போட்டுவிடுவார்.”
விடைபெற்றபோது ஐரீன் மானசாவிடம் கைக்கு அடக்கமான லெனோவோ ஐடியா-பாட் ஒன்றைப் பரிசாகக் கொடுத்தாள்.

அடுத்த நான்குநாட்களில் வேலைக்குக் குந்தகமில்லாமல் ஜேசனும், ஐரீனும் தொழிற்சாலையில் இயங்கியதைப் பார்த்த கஜமுகன் நேரம் கிடைத்தபோது அவர்களுடன் பேச்சுக்கொடுத்தார்.
“ஐரீன்! நான் இல்லினாயில் இருந்தபோது மிஷிகன் (பல்கலைக்கழகம்) எங்களைக் கால்பந்தாட்டத்தில் தோற்கடிக்கும். இப்போது எப்படி?”
“மிஷிகனுக்குக் கஷ்ட காலம். இந்த ஆண்டு நான்கு தோல்விகள். ஒரு சின்ன காலேஜிடம் தோற்றுவிட்டார்கள். இல்லினாயிடம் பரம உதை” என்றாள் ஐரீன் சோக முகத்தோடு.
ஆனால் கஜமுகனுக்கு மகிழ்ச்சி. “வெரிகுட்!”
இருக்கைகள் தயாரிப்பில் நேரடியாக ஈடுபட்ட பத்தொன்பதுபேரையும், ஸ்டோர் ரூமில் வேலைசெய்த நான்குபேரையும் ஜேசன் தனித்தனியே சந்தித்தான். பதினைந்து நிமிடங்களில் அவர்களின் உடல்நிலையை ஆராய்ந்தான். அப்படிச் செய்யும்போது பேச்சுவாக்கில் பல கேள்விகள் கேட்டான். அவற்றைக் குறித்துக்கொண்ட பிறகே அடுத்த ஆளுக்கான நேர்காணல்.
அலுவலகத்தில் வேலைசெய்த ஐந்து பெண்களை ஐரீன் தனியே பேட்டி கண்டாள். கையில் சகாதேவன் தந்த பெயர்ப்பட்டியலைப் படித்து ஐரீன், “ஊஷா! உன் பெயரை உச்சரிப்பது சுலபம்” என்றாள். மெத்தைவைத்த நாற்காலியில் உட்கார்ந்திருந்த முப்பதுவயதிற்கு மேற்பட்ட பெண்ணுக்கு அறையில் நுழைந்தபோதிருந்த தயக்கம் ஐரீனின் இனியமுகத்தைப் பார்த்ததும் நீங்கிவிட்டது. “டாக்டர்! டிசம்பர் வெயிலுக்கே உங்கமுகம் தக்காளிப்பழம்போல் இப்படிச் செவந்துட்டதே” என்றாள் அக்கறையாக.
“நான் பிறந்தது, வளர்ந்தது, மருத்துவம் படித்தது எல்லாம் குளிரான மிஷிகனில். என் வெள்ளைத்தோலுக்கு சூரியனைத் தடுக்கும் சக்தி சிறிதுமில்லை” என்று ஐரீன் காகிதம்போல் வெளுத்த தன் கைகளை நீட்டிக்காட்டினாள். “உன்னுடைய தோலின் கறுப்புத் துணுக்குகளை நான் கொஞ்சம் கடன்வாங்கிக் கொண்டால் நன்றாக இருக்கும்.”
“கொஞ்சமென்ன, நிறையவே எடுத்துக்கோங்க! கடனைத் திருப்பித்தரக்கூட வாண்டாம்” என்று உஷா சிரித்தாள்.
“ஊஷா! உனக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் என்று தெரிகிறது. கடைசிக் குழந்தைக்கு எத்தனை வயது?”
“நான்கு.”
“நீ வேலைக்கு வரும்போது அவர்களை யார் பார்த்துக்கொள்கிறார்கள்?”
“எதிரிலேயே என் அம்மா வீடு.”
உஷாவின் இதயத்துடிப்பைக் கேட்டாள் ஐரீன். “இங்கே வேலைசெய்த மூன்றாண்டுகளில் பீரியட்ஸ் தள்ளிப் போயிருக்கிறதா?”
“இல்ல, டாக்டர்!” என்றாள் வெட்கத்துடன்.
“கவலைப்படாதே! இதற்குமேல் அந்தரங்கமாக நான் எதுவும் கேட்பதாக இல்லை.”
ஐரீன் உஷாவின் வலதுகையில் ஒரு ஸ்டாப்-வாட்ச்சைத் தந்து அதை எப்படி இயக்குவதெனக் காட்டினாள்.
“இந்த சோதனை குழந்தைகள் விளையாட்டைப்போல் வேடிக்கையாக இருக்கும்.” என்று சொல்லியபடி அவள் கண்களை ஒரு கறுப்புத்துணியால் மறைத்துக் கட்டினாள்.
“ஒரு ட்யுனிங் Nஃபார்க்கை அதிரச்செய்து உன் இடதுகட்டைவிரலின் உள்புறத்தைத் தொடுவேன். உடனே நீ ஸ்டாப்-வாட்ச்சைத் துவக்க வேண்டும். அதன் அதிர்வு நிற்கும்போது ஸ்டாப்-வாட்ச்சை நிறுத்திவிடு! சரியா?”
உஷா புரிந்ததெனத் தலையசைத்தாள். முதல்முறை வாட்ச் 18.8 வினாடி காட்டியது. திருப்பிச் செய்தபோது 19.1. ஐரீன் அந்த எண்களை கட்டம்போட்ட பக்கங்கள் கொண்ட ஒருநோட்டில் எழுதினாள்.
“க்ரேட்! ஸ்டாப்-வாட்ச்சை இடதுகைக்கு மாற்றிக்கொள்! இப்போது, வலது கட்டைவிரலை பரிட்சிக்கப் போகிறோம்.”
அதுமுடிந்ததும் இரண்டு கால் கட்டைவிரல்களுக்கும் சோதனை செய்யப்பட்டது.
“உன் திரையை எடுத்துவிடலாம்.”
“நான் சரியா செய்தேனா?”
“பர்nஃபக்ட்.”
உஷா நாற்காலியிலிருந்து எழுந்தபோது ஐரீன், “உன் குழந்தைகளுக்கு” என்று ஒருபெரிய ஹெர்ஷி சாக்லேட் கட்டியை அவளிடம் தந்தாள். “இந்த எம்பி-3 ப்ளேயர் உனக்கு.”
“தாங்க்ஸ், டாக்டர்!”
“உன் ஒத்துழைப்பிற்கு நான்தான் அதைச் சொல்லவேண்டும்.”
தொழிற்சாலையின் வௌ;வேறு இடங்களில் சிறிய ஒலிபெருக்கி போன்ற பெட்டிகள் ஒவ்வொரு நாளும் எட்டுமணிநேரம் வைக்கப்பட்டன. வேலைநேரம் முடிந்ததும் ஒவ்வொன்றும் ஒரு ப்ளாஸ்டிக் பையில் பத்திரப்படுத்தப்பட்டது.
வெள்ளிமதியம் கால்சென்டர் பணியாளர்களிடமிருந்தும், மாலையில் வேலை முடிந்ததும் ‘ரைடர் சீட்ஸ்’ தொழிலாளர்களிடமிருந்தும் ஐரீன் ஒருகுழாயில் மூன்று மிலி இரத்தம் எடுத்து அதை உடனே உறையவைத்தாள். சிறுநீர் சிறு பிளாஸ்டிக் குப்பிகளில் சேகரிக்கப்பட்டது. சகாதேவனின் இரத்தத்தை எடுத்தபோது அவன் மயக்கம் அடையவில்லை. “சகா! உங்கள் மனைவியிடம் நீங்கள் தைரியமாக இருந்ததைப் பெருமை அடித்துக்கொள்ளலாம்” என்றாள் ஐரீன்.
அவர்களின் ஒத்துழைப்பிற்காக அனைவரையும் குடும்பத்துடன் ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு ஜேசனும், ஐரீனும் அழைத்துச்சென்றார்கள். அன்றிரவே சென்னை வந்ததன் நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் ஊருக்குத் திரும்பிச் சென்றார்கள்.
ஒருவாரத்திற்குள் தொழிலாளர்களின் உடல்நிலை பற்றிய கணிப்பை ஜேசன் கஜமுகனுக்கு அனுப்பினான். பிரசுரத்திற்கேற்ற ஒருஆராய்ச்சிக் கட்டுரை தயாரானதும் அவர் கவனத்திற்கு அது அனுப்பப்படுமென்று தெரிவித்தான். அந்த முன்-அறிக்கையைப் பிறகு படிக்கலாம் என்று அலமாரியின் மேல்தட்டில் வைத்தார். அதேசமயத்தில், சகாதேவனுக்கு ஐரீனிடமிருந்து அவன் உதவியதற்கு நன்றிசொல்லி, வினதாவின் நலம்கேட்டு, மானசாவின் புத்திகூர்மையை வியந்து ஒருகடிதம் வந்தது. பிறகு வேலையின் நெருக்கிலும், மனைவியின் பிரசவத்திலும் அவர்களை அவன் மறந்தேபோனான்.

கில்மர் என்ற ஒருவனை கஜமுகன் அறிமுகம் செய்துவைத்து அவன் வருகையின் காரணத்தைச் சொன்னபோதுதான் சகாதேவனுக்கு ஜேசன், ஐரீன் இருவரின் நினைவு வந்தது. ஆனால், அவர்களைப்பற்றி வாயைத் திறக்கவில்லை.
“தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை கில்மர் கேட்கும்போது தரவேண்டும்” என்று மேனேஜர் கட்டளையிட்டார். சகாதேவன் தலையசைத்தான்.
“ராஜாமணியும், தாமோதரனும் நாளை வேலைக்கு வரமாட்டாங்க” என்று சேர்த்துக்கொண்டார்.
“வேற யாரையாவது வைச்சு சமாளிச்சிக்கலாம்.”
மறுநாள் மற்ற தொழிலாளிகளுடனும், ஐந்து பெண்களுடனும் கில்மர் அதிகம் பேசவில்லை. உயரமான வண்டி ஒன்றைத் தள்ளிவந்தான். அதன் இரண்டு அடுக்குகளில் கம்ப்யூட்டர் பெட்டி போன்ற இயந்திரங்கள். மேல்தட்டில் ஒரு மானிடர். எல்லாவற்றையும் இணைக்கும் தட்டையான ஒயர்கள். வண்டியின் ஒருபக்கத்தில் வேண்டியமட்டிலும் நீட்டி மடக்கக்கூடிய இயந்திரக்கை. அதன் நுனியிலிருந்து வெளிப்பட்ட இரண்டு மிகமெல்லிய ஊசிகளை சோதனைக்கு வந்த ஆளின் கணுக்காலிலும், பாதத்தின் கட்டைவிரலுக்கு அருகிலும் பதித்தான். பிறகு பதினைந்து நிமிடங்கள் பீங் பீங் என்று சத்தம். மானீடரில் கோடுகள் ஊர்ந்தன. அச்சடித்த குறுகலான காகிதம் கீழ்த் தட்டிலிருந்து தரையில் விழுந்தது. சோதனை முடிந்தபோது அதற்குப் பரிசாக பத்துகேள்விகள் அச்சடித்த காகிதம். சரி என்கிற பதிலைமட்டும் எதிர்ப்பார்த்து சாமர்த்தியமாக அமைக்கப்பட்ட கேள்விகள்.
1. ‘ரீகல்-சால்வை’ எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்களா?
2. தினம் வேலைக்கு இருசக்கர வண்டியில் அல்லது பஸ்ஸில் வருகிறாயா?
3. நான்கு கிலோமீட்டருக்கும் அதிகமாகப் பிரயாணம் செய்கிறாயா?
4. மதியம் கேன்டினில் சாப்பிடுகிறாயா?
5. உணவு பிடித்திருக்கிறதல்லவா?
6. மீதம் வைக்காமல் சாப்பிடுகிறாயா?
7. எதிரில் அரசாங்க பேருந்துப்பணிமனை கடந்த நான்காண்டுகளாக இயங்குகிறதா?
8. அதிலிருந்து புகை எப்போதும் வருமல்லவா?
9. அந்தப்புகை உனக்குப் பிடிக்காது, அப்படிதானே?
10. உடல்நிலையில் கடந்த நான்காண்டுகளில் பெரிய மாறுதல் இல்லை, சரிதானே?
கில்மர் சகாதேவனைத் தன்னுடைய கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. வந்த சுருக்கில் திரும்பிச்சென்றான்.

ப்ரோமோப்ரோபேன் தொழிலாளர்களுக்கு விளைவிக்கும் பாதிப்புகளை அறிதல் என்கிற ஒரே குறிக்கோள் சொல்லப்பட்டாலும், இரண்டு வருகைகளுக்கும் இடையே வெளிப்படையாகத் தெரிந்த பல வேறுபாடுகள் சகாதேவனின் கண்ணில் பட்டன. விஞ்ஞான ஆராய்ச்சியில் அதிகம் பரிச்சயம் இல்லாவிட்டாலும், ஜேசன்-ஐரீன் குழுவுக்கும், கில்மருக்கும் பிரச்சினையை அணுகுமுறைகளில் இருந்த வித்தியாசங்களை அவன் கவனிக்கத் தவறவில்லை.

(தொடரும்)

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்