பதிவிரதம்

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

-மோனிகா


நறுமுகைப் பொய்கையும் நாற்புரமுயர்ந்த மலைகளும்
முப்பத்து முன்னூறு தேவரும் முகிற் படுகையும்
இப்பிறவியும் இன்னும் பலபிறவி கொண்டு செல்லும் நாழிகையும்
தாண்டற்ப் பாடின்றி தாமெடுத்த அடி நோகாமல்
இட்ட அடி இங்கே இப்புவியதனில் இயல்வதாய்
ஏழிசை ராவணன் மீட்டிய வீணையின் நாதன்,
இரண்டிற்க்குப் பிறகு இன்னுமோர் கண் கொண்டான்
எம்பெருமான் ஈசனும்,
காரிருள் விலகக் காக்கும் கடவுளாய்
தீர்த்தமாடி ஆழ்வார்கள் திருவுளம் பூந்தத் திருமாலும்,
பிறப்பளித்து புவியை
மானுடக் கடலாக்கி மனங்குளிரும் பிரம்மனும்
மானுடம் தரித்து மரவுரி எய்து
மண்ணோரை மாட்சிமை கொண்ட முனிகளாய்,
நீரணிந்து, நீள் முடிக் கொண்டையிட்டு,
நாவிலுஞ் செவியிலும் நல்லதே தரித்து
நின்றனர் அங்கு
அதிதியராய்
அனுசுயை முன்றிலில்.

நகரத்தின் கோடியில் நால்வரோடய்வராய்
நமனும் வாழாக் குடியாய்
எண்ணக்குறையாத வண்ணத்தமக்கையருடன்
அரச மரம் சுற்ற ஆண்மகனாய்
பெற்றோர் புகழப்பிறந்தான் பரஞ்சோதி.
சடுகிடு விளையாடச்
சாக்கடையடுத்த திண்ணை தவிர்த்து
ஒரு போக்கிடமில்லை.
பெருங்காயம் மணக்கும் ஊருகாய்ச் சோறும்
பழயதே பாயசமாய்
இச் சிறு காயத்தை வளர்த்தெடுத்தான் மெத்தனமாய்.
ஆடை கிழிந்த அழகுத் தேவதையராய்
ஆங்காங்கே தமக்கையரை காணுகையில்
கனவில் மட்டுமே கைதொட்ட மங்கையரை
நனைவில் கைவிட்டான்
கலியாணம் எக் கணக்கு.

கணவனார் கானகம் சென்றார்
பூப்பரிக்க.
முனிவனாம் மானுடன்.
தவத்தில் தருவிப்போம்
தேவரையென தாழம்பூ, முல்லை,
தங்கரளி, சம்பங்கியென
அழகுப்பூக்கள் அறுபதும்
கொய்துவரல் வேண்டி கடந்தனன் குடிலை.
குடிற் பூவாம் குல மங்கை
கண்ணுற்றாள் வாயிலில்.

பாழ் உலகில் வாழ் மனிடரில்லை இவர்.
பரதேசியுமில்லை.
பாவை தெளிவுற்றாள்.
நாதன் இல்லா நாளில்
ஏனிந்த நமச்சிவாய நாராயணப் பிரும்மம்
என ஐயுற்றாள்.
அழைத்து வணங்கினாள்.
அமரச் செய்து
வேண்டுவது யாதென வினவினாள்.

எண்ணுவதெல்லாம் ஏலாமற்போக
இடுக்கனிற் தமக்கையர்,
இல்லாத அமைதியென
திண்ணிய கருமம் யாவும் தீர்த்து
த்ிரளான வாலிபனாய்
பண்ணுவதறியாமற் தவித்தான் பரஞ்சோதி.
மணப்பேய் விரட்ட மாய்ந்தழித்தது மாலைப்பொழுது.
இரவின் கருமையை உண்டுப் பருத்து
உஷ்ணமாய் கொதித்தது உடம்பு.
வெள்ளித்திரையும் சின்னத்திரையும் விரகம் வேய்ந்தன.
பள்ளிமுதற் தொடங்கி
பற்றவில்லை பெண்ணுடலை.

இனியும் எண்ணுவதில்லையென
அவள் வீட்டுத் திண்ணையில் நின்றான்.
பருவத்தே பயிரறுக்க
பச்சிளம் குழந்தையை தொட்டிலிட்டு
தூரத்தே ஒரு கட்டிலுமிட்டிருந்தாள் அவள்.
சொந்தப் பசிமறந்து
வந்தவர்ப் பசியாற்ற
வழி நோக்கி விழி வைத்தாள்.
வேண்டுமெனக் கேட்டான்.
வறுமை விரல் நீட்ட வாரியணைத்தாள்.
அணைக்கையில் தெரிந்தது அவனும் பிள்ளையென.
அரும் பிணி விரட்டி ஆண்மை உரைத்தாள்.
விரும்பியவை தர வீடுபேறு அரும்பும்
என ஆன்மா தரிக்கக் கூறினாள்.
அன்னமிட்டாள்.
அற்பப் பணம் பெற்று அனுப்பியும் வைத்தாள்.

இன்முகமே இரவா வரமாய்ப் பெற்ற அனுசுயை
இரந்து கேட்போர்
சொல்லை இசையாய்க் கேட்டாள்.
அனுசுயை அச்சமுற்றாள்.
கடவுளாகிலும் காமம் ஒன்றெனக்
கண்ணீரார்ப் பகர்ந்தாள்.
இடுக்கண் களைவதும் இன்னுயிர் ஏற்றலும்
ஈசன் செயலே என மனதினுள் உறைப்பினும்
உடுப்புத் தரிக்காப் பிறந்த மேனியாய்
உணவிடச் சொன்னவர்
உமையவள் தலைவன் உட்பட மூவர்.
பத்து விரலும் பற்றி எரிந்தது.
உடுப்புக் களைகையில் குழந்தை அழுதது.
உணர்வுற்றாள்.
உள்ளம் முற்றிலுஞ் சபித்தாள்.
திருமாலும் அவன் மைத்துனனும்
வெறும் காயத்தை உயிர் பொருளாக்கி
உலகத்தைக் கலகத்திற்கிடமக்கிய
தொப்பிளிற் பிறந்தோனும்
உருமாறிப் போயினர்.
சேயாய் மாறி சிறு மனச்சிந்தையிழந்தனர்.
தாயாய் மாறினள் ரிஷி பத்தினி.
வாயாரப் பாடி வயிராரப் புகட்டினள் அமுது.

செவிக்கினியதோ சிந்தைக்கினியதோ
காலம் பயின்ற நீதிக்கினியதோ
நட்புப் பகர்ந்து நரகம் அழித்தவள்
தாயென்ன தாரமென்ன ?
தரம் உண்டோ அன்பிற்கு .. …. .. ?!
முணுமுணுத்தான் பரஞ்சோதி.
முனிவனாகிப் போனான்.

—-

Series Navigation