பச்சை விளக்கு

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

பவளமணி பிரகாசம்


குருவி தலையில் பனங்காய் என்பது கவிதாவுக்குத்தான் கச்சிதமாய் பொருந்தும். ஆனாலும் இது ரொம்ப கொடுமை. இருபத்தியிரண்டு வயதில், இன்பமாக சிறகடித்து பறக்க வேண்டிய வயதில், இத்தனை சோகமான சுமைகளை அவள் இளந்தோள்கள் சுமக்க நேர்ந்தது ரொம்பவே கொடுமை.நவநாகரிக யுவதி ஒருத்தி ஆறடிக்கு வளர்ந்திருக்கும் ஆஜானுபாகுவான ஆண்மகனை, அதுவும் வாலிப வயது ஆண்மகனை, கயிறுகளால் கார் காரியரில் கட்டி கூட்டி செல்ல நேர்ந்த அவலத்தை என்னென்பது ? கவிதாவுக்கு கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. கண்களை அகல விரித்து விழிநீர் வழிந்து விடாமல் தடுத்துக் கொண்டிருந்தாள்.

அவசரமாக செல்லும் நேரத்தில் பீக் அவர் நெரிசலில் டிராஃபிக் சிக்னலில் மாட்டிக் கொண்டது ஒரு அவஸ்தை என்றால் நாலாபுறத்திலிருந்தும் ஈட்டி போல் பாய்ந்து வரும் பார்வை கணைகள் அவளை துளைத்தெடுத்தது அதைவிட பெரிய அவஸ்தை. யந்திரத்தனமாக, யாருக்கு எது நேர்ந்தால் நமக்கென்ன என்ற பாவனையில் நகர்ந்து கொண்டிருக்கும் நகர வாழ்க்கையில், மரத்துப் போன உணர்வுகளைக் கூட உசுப்பிவிடும் வண்ணத்திலல்லவாஅவளது சிகப்புக் கார் காட்சியளித்தது.

அவளை மையமாக வைத்து விரிந்த வட்டத்துக்குள் அடங்கிய அத்தனை பேர் – பஸ் டிரைவர்,பயணிகள், ஸ்கூட்டர் தம்பதிகள் – பார்வையிலும் வழிந்த எண்ண ஓட்டங்களை அவளால் துல்லியமாக உணர முடிந்தது. ‘ஐயோ! யார் பெத்த பிள்ளையோ! இப்படி கயத்துல கட்டிப் போட்டிருக்காங்களே! ‘ என்று பச்சாதாபமும், ‘இன்னாடா இது, ஷூட்டிங் போல கீது, தெலுங்கா ? இந்தியா ? ‘என்ற ஆர்வமும், ‘இப்படி ஆம்பளய கட்டி இழுத்துட்டு போறாளே, இவ நல்லா இருப்பாளா ? ‘ என்ற எல்லாம் தெரிந்தவர்களின் பிடி சாபங்களும், ‘பய எக்குதப்பா தப்பு பண்ணி மாட்டிக்கிட்டான் போல, குட்டி பாடம் சொல்லிக் குடுக்கறாப்போல ‘ என்ற ஊகங்களும், ‘இந்தக் கால பொம்பளைங்க எதுக்கும் துணிஞ்சவளுக, ஜாக்கிரதையா இருக்கணும் டோய் ‘ என்ற எச்சரிக்கை உணர்வும், ‘அதெப்படி பட்டப்பகல்ல துணிச்சலா இப்படி ஆளைக் கடத்தறா ? ஊஹூம், மேட்டரு டாப்பா இருக்கு ‘ என்ற அறிவுச் சிதறல்களும், ‘இதுதான் அல்லி ராஜ்ஜியங்கறதோ! ‘ என்ற வியப்பும்கலந்து அங்கே ஒரு நவரச நாடகமே நடக்க நேர்ந்ததை எண்ணி கவிதா நொந்து, நைந்து போனாள். அவள் போட்டிருக்கும் தைரிய கவசத்துள்ளே தூள் துளாக நொறுங்கிக் கொண்டிருந்தாள்.

கிளைகளால் தாங்கக் கூடிய கனமுள்ள கனிகளைத்தான் கடவுள் படைக்கிறார் என்று அவள் எப்போதோ படித்தது ஞாபகத்துக்கு வந்தது. இத்தனை சோதனைகளையும் தாங்கிக் கொள்ளும் வலிமை அவளிடம் இருப்பதைத்தான் நடப்பவையெல்லாம் உணார்த்துகிறதோ ? இப்படியெல்லாம் நடக்குமென்று அவள் கனவில் கூட நினைத்ததில்லை.

சலசலத்து ஓடும் சிற்றோடை போல எவ்வளவு தெளிவாய், சலங்கையின் சுநாதம் போல எவ்வளவு சுகமாய் இருந்தது அவர்கள் குடும்ப வாழ்க்கை! அன்பும், பண்பும் நிறைந்த அம்மா, அறிவும், திறனும் நிறைந்த அப்பா, ஆஸ்திக்கொன்றும், ஆசைக்கொன்றுமாக மகன் குமார்,மகள் கவிதா என அழகிய சித்திரம் போன்றது அவள் குடும்பம். பழமையை போற்றி, புதுமையை வரவேற்று ஒரு முன் மாதிரி குடும்பமாய் மிளிர்ந்தார்கள். பாரதியாரின் பரம ரசிகர்களாய் திகழ்ந்தார்கள்.

குமார் மிகச் சிறப்பாக படித்து தேறினான். கை நிறைய சம்பளத்தோடு வேலையும் உடனே கிடைத்தது. அடுத்து அவன் திருமணந்தான் அனைவரும் ஆவலாய் எதிபார்த்த விஷயமாய் இருந்தது. ‘உனக்கு என்ன மாதிரியான பெண் பிடிக்கும்னு சொல்லேண்டா ‘ என்று ஒரு நாள் சாப்பாடு பரிமாறிக் கொண்டே அம்மா கேட்டதும், ‘உங்கள மாதிரி நல்லா சமைக்க தெரிஞ்சிருக்க வேண்டியது ரொம்ப முக்கியம்மா, குறிப்பா ருசியா சாம்பார் வைக்கத் தெரிஞ்சிருக்கணும் ‘ என்று சொல்லிக் கொண்டே இன்னொரு கரண்டி சாம்பாரை ஊற்றிக் கொண்டான். அப்பா சிரித்துக் கொண்டே ‘ இளவயது சமையற்காரி தேவைன்னு பேப்பர்ல வேணா ஒரு விளம்பரம் போட்டுருவோமா ? ‘ என்று கேட்டார். கவிதாவோ ‘என் ஃபிரண்ட்ஸ் யாரையாவது எனக்கு அண்ணியாக்கிடலாமா, அண்ணா ? ‘ என்றாள். ‘ஐயய்யோ! வேண்டாம்மா தாயே! அத்தனையும் வானரக் கூட்டம்! அதுக்கு நான் ஆஞ்சநேயர் மாதிரி பிரம்மச்சாரியாவே இருந்துருவேன் ‘ என்று கூறி விட்டு கை கழுவ எழுந்து விட்டான்.

தெரிந்தவர்கள் எல்லோரிடமும் பொருத்தமான பெண்ணுக்கு சொல்லி வைத்தார்கள். பத்திரிக்கையில் வரும் திருமண விளம்பரங்கள், கல்யாண தரகர்கள் சொன்ன வரன்கள் அனைத்தையும் கவனமாய் பரிசீலித்தார்கள். தீர அலசி, ஆராய்ந்து கடைசியில் சித்ராவை தகுதிகள் நிறைந்த மருமகளாய் தேர்வு செய்தனர். சிறப்பாக நிச்சயதார்த்தம் நடத்தி, நான்கு மாதம் தள்ளி கல்யாண தேதி குறிக்கப் பட்டது.

இந்தக்கால வழக்கப்படி குமாரும், சித்ராவும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர். இருவருக்கும் ஏதோ பூர்வ ஜன்ம தொடர்பு போல ரொம்ப பொருந்திப் போனது. இரும்பும், காந்தமும் போல இணைந்து கிடந்தனர். இருவர் மனமும் ஒத்துப் போனதை பார்த்த பெற்றோர்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். சினிமாவுக்கு, பீச்சுக்கு, கடைகண்ணிக்கு, தீம் பார்க்கிற்கு என எல்லா இடங்களுக்கும்குடும்பமாய் சேர்ந்து சென்று வந்தனர். தாலி கட்டும் முன்னரே மருமகளாய் சுவாதீனமாய் சித்ரா தன் வருங்கால மாமியார் வீட்டில் வளைய வந்தாள். மொட்டைமாடியில் எல்லோருமாய் கூடியிருந்தபோது ‘காற்று வெளியிடை கண்ணம்மா ‘என்று குமார் மெய்யுருகிப் பாடியதை கேட்டு குடும்பமே ரசித்து புளங்காகிதமடைந்தது.

ஒரு நாள் அவர்கள் எல்லோருமாய் வெளியே கிளம்பிக்கொண்டிருந்தபோது, தோட்டத்தில் நின்று கொண்டிருந்த சித்ரா, ‘கவிதா, உன் டிரஸ்ஸுக்கு இந்த ரோஸ் ரொம்ப மேட்சாயிருக்கும் ‘ என்று சொல்லிக் கொண்டே மஞ்சள் ரோஜா செடியின் கிளையை எட்டி வளைத்தவள் ‘ஆ! உஸ்! ‘ என்று துடித்து கிளையை விட்டு விட்டு விரலை வாயில் வைத்து சப்பினாள். குமார் பதறிப் போய் அவள் விரலைப் பிடித்து சிகப்புப் புள்ளியாய் ரத்தம் கசிந்ததைக் கண்டு கன் கலங்கி விட்டான். அதற்குள் அம்மா டெட்டாலும், பாண்ட் எயிடுமாய் விரைந்து வந்தாள். சித்ராவின் விரலுக்கு எல்லோருமாய் சிச்சுருஷை பண்ணிவிட்டு திரும்பிப் பார்த்தால் வேர்த்துப் போன முகத்துடன் விரலை மடித்து கைக்குள் வைத்துக் கொண்டு ஓரமாய் உட்கார்ந்திருந்தான் குமார். ரோஜா முள்ளில் வலிய விரலை குத்தி சித்ராவின் வலியை உணர்ந்து கொண்டிருந்தான் அந்த பித்துக்குளி காதலன். அவனைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று யாருக்கும் தெரியவில்லை.

இன்னொரு நாள் சாயங்காலம் சித்ரா வீட்டிற்கு கல்யாண இன்விடேஷன் மாடல்களுடன் சென்றவன் திரும்பியதும் நேராக அடுப்படிக்கு சென்றான். திரும்பி வந்த போது இடது மணிக்கட்டுக்கருகில் தீக்குச்சியால் சுட்ட காயத்தைக் கண்டு அனைவரும் பதறி விட்டனர். ‘ஏண்டா இப்படி செய்தாய் ? ‘ என்றாள் அம்மா காயத்திற்கு மருந்து தடவிக் கொண்டே. ‘சித்ராவுக்கு இன்று சமைக்கும் போது கையில் சுட்டு விட்டதம்மா ‘ என்றான். அப்பாவுக்கு பொசுக்கென்று கோபம் வந்து விட்டது. ‘ஏண்டா கிறுக்குப் பயலே, நாளைக்கு உன் பிள்ளையைப் பெற அவளுக்கு இடுப்பு வலிக்கும் போது என்னடா செய்யப் போறே ? ‘ என்று கேட்டார். ‘அப்பா, அநாவசியமா எதையாவது பேசி என்னை மாத்த நினைக்காதீங்க. திருதிராஷ்டிரருக்கு கண் தெரியலைன்னு காந்தாரி கண்ணை கட்டிக்கிடலையா ? சித்ராவோட வலியை நானும் அனுபவிச்சாத்தான் எனக்கு ஆறுதலாயிருக்கு ‘ என்று கோபமாக சொல்லிவிட்டு மாடிக்கு சென்று விட்டான். அப்பா, அம்மா, கவிதா மூவரும் குமாரின் கண்மூடித்தனமான அன்பைக் கண்டு வாயடைத்து நின்றனர்.

குறித்த நன்னாளில் குமாரின் விவாகம் விமரிசையாய் நடந்தேறியது. வீட்டுக்கு விளக்கேற்ற மருமகள் வந்த சந்தோஷத்தைக் கொண்டாடிய பெற்றோர்கள் இருவரும் நெடுநாளாய் திட்டமிட்டபடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வர கிளம்பினர். குமாரும், சித்ராவும் ஒருவர் மேல் ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அன்பை பொழிந்தனர். மனமொத்த அந்த இளஞ்ஜோடியின் சந்தோஷத்தைக் காண கவிதாவுக்கும் குதூகலமாய் இருந்தது. அண்ணனின் பராமரிப்பில், அண்ணியின் அரவணைப்பில் சுகமாக உணர்ந்தாள். ஒவ்வொரு நாளும் தேன் துளியாய் இனித்தது.

ஒரு நாள் அருகிலுள்ள மார்க்கெட்டிற்கு காலாற நடந்து வர மூவருமாய் கிளம்பினார்கள். சந்தடி அதிகமில்லாத அந்த சாலையில் கண்மண் தெரியாமல் அதிவேகமாய் விரைந்து வந்த ஆட்டோ ஒன்று அவர்கள் நிதானிக்கும் முன்னே பின்புறமிருந்து அவர்களை இடித்துத் தள்ளி விட்டு தறி கெட்டு ஓடியது. ஓரத்தில் இருந்த சித்ரா சாலையின் மறுபுறத்திற்கு தூக்கியெறியப்பட்டாள். அவளை ஒட்டி நடந்த குமார் குப்புற விழுந்து உருண்டான். கவிதா ஓரமாய் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நின்றாள். அடுத்து நடந்தது எதுவுமே அவள் நினைவில் பதியவில்லை. எங்கிருந்தோ வந்து கூடி விட்ட கூட்டத்திலிருந்தவர்களில் நல்லிதயம் கொண்டவர்கள் அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தலையில் பலத்த காயமடைந்த சித்ரா இன்டென்சிவ் கேரிலும், அதிர்ச்சியாலும், சிராய்ப்புகளாலும் பாதிக்கப்பட்ட குமார் ஸ்பெஷல் வார்டிலும் வைத்து கவனிக்கப் பட்டனர்.

குமாரின் நிலை இரு தினங்களில் சீரான போதிலும் அதிர்ச்சியின் விளிம்பிலேயே இருந்தான். சித்ராவுக்குத்தான் தலையில் அடி ப்ட்டதில் நினைவு தப்பி விட்டது. இரண்டு நாள் தீவிர சிகிச்சைக்குப் பின் மூளையில் பெரிய அளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. கடந்த கால ஞாபகமே இல்லை. புத்தி சுவாதீனமற்றும் போயிற்று. பகுத்தறிந்து கட்டளையை வழங்கும் நரம்பு செல்கள் செயலிழந்து போயிருந்தன. கை கால்களை வெறியோடு முறுக்கிக் கொண்டு, வன்முறையில் இறங்கும் பைத்தியம் போல நடந்து கொள்ளத் துவங்கினாள். காட்டு மிருகம் போல சுற்றியிருப்போரை விரோதமாக பார்த்தாள். கலங்கிய அவள் சித்தத்திற்கு சிறந்த நிபுணர் குழு ஒன்று வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்தது. அமைதிப்படுத்தும் மருந்தினை ஊசி மூலம் செலுத்தி அவளை கட்டிலோடு பிணைத்து கட்டியிருந்தனர்.

குமார் சித்ராவை இந்த நிலையில் பார்ப்பதை கவிதா முடிந்த வரை தள்ளிப் போட்டாள். ஒரு கட்டத்திற்குப் பிறகு அது முடியாமல் போகவே அவனை சித்ராவைப் பார்க்க அனுமதித்தனர். அவளை பார்த்த உடனே ‘சித்ராஆஆஆ…… ‘என்ற ஒரு பயங்கரமான அலறலோடு மூர்ச்சையாகிவிட்டான். டாக்டர்கள் அவனுக்கு தூக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி அவனை வீட்டிற்கு கூட்டிச் செல்லுமாறு கவிதாவிடம் கூறினர்.

வீட்டிற்கு வந்த கவிதா இருதலைக் கொள்ளி எறும்பாய் தவித்தாள். பெற்றோர்கள் ஊரில் இல்லாத சமயத்தில் அண்ணனையும், அண்ணியையும் தனியாளாய்கவனிக்க நேர்ந்ததில் திணறினாள். ஆஸ்பத்திரியில் சுயபிரஞ்கையற்று கிடக்கும் சித்ராவை டாக்டர்களும், நர்ஸ்களும் பார்த்துக் கொள்வார்கள், குமாருக்குத்தான் தன் முழு கவனிப்பும், பரிவும் தேவை என உணர்ந்தாள். உறங்கி எழுந்த குமார் உடனே சித்ராவைப் பார்க்க வேண்டுமென்றான். தேம்பித் தேம்பி அழுபவனை சிறு குழந்தையைப் போல் கவிதா சமாதானம் செய்து சாப்பிட வைத்தாள். பின்னர் டாக்டர் யோசனைப் படி அவனுக்கு தெரியாமல் பாலில் தூக்க மாத்திரையைக் கலக்கிக் கொடுத்து தூங்க வைத்தாள்.

மறுநாள் சோர்வுடன் எழுந்தவன் மிகுந்த அமைதியாய் காணப்பட்டான். படுக்கையை விட்டு எழுந்து காலைக்கடன்களை முடித்து, நீட்டாக டிரஸ் செய்து கொண்டு சாப்பாட்டு மேஜையில் வந்து அமர்ந்து கவிதாவின் கண்களை நேருக்கு நேர் பார்த்து, ‘கவிதா, நீதான் எனக்கு உதவணும். என் சித்ரா கயிறால கட்டிக் கிடக்கும் போது நான் இப்படி இருக்கிறது எனக்கு ரொம்ப வேதனையாயிருக்கு. நானும் அவ பக்கத்திலேயே இருக்கணும், அவள மாதிரியே கட்டோட. ப்ளீஸ், என்னப் புரிஞ்சுக்கோ. என் ஆத்மார்த்த அன்பாலயும், பிரார்த்தனையாலயும் அவளை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்னு நான் உறுதியா நம்பறேன். ஒரு நிமிஷங்கூட தாமதிக்காம என்னை அவகிட்ட கூட்டிட்டுப் போ. என்னை கார் காரியர்ல வச்சி கட்டிரு. இது ஒரு வேண்டுதல். என் வேண்டுகோள். நீ மாட்டேன்னா நான் சாகறதைத் தவிரவேற வழியே இல்ல, ‘என்று உருக்கமாய் கூறினான். சுத்தமாக ஷேவ் பண்ணிய முகத்தில் மின்னிய அவன் கண்களில் ஒரு அமானுஷ்ய தீவிரம் தெரிந்தது. அவன் பேசியதை கேட்ட கவிதாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவன் மனநிலையில் அவன் சொல்கிறபடியே நடந்து கொள்வதுதான் விவேகம் என்று தோன்றியது. ஆனால் அவனுடைய விபரீத கோரிக்கையை எண்ணி நடுங்கினாள். ‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பதில்லையே, உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதினுமச்சமென்பதில்லையே ‘ என்று கணீரென்ற குரலில் பாடும் அப்பாவின் குரலை மானசீகமாய் கேட்டாள் கவிதா.

குமார் சொல்கிறபடி அவனுடைய ஆத்மார்த்த காதலும், உருகுதலும், விரதமும் சித்ராவை குணப்படுத்திவிடும் என்றே அவளும் உண்மையாக நம்பினாள். சவால்களை துணிச்சலுடன் எதிர்நோக்கி சமாளித்துக் கொண்டிருப்பவளுக்கு பச்சை சிக்னல் விழாமலா போய் விடும் ?

pavalamani_pragasam@yahoo.com

Series Navigation