நூல் அறிமுகம் சைவ சித்தாந்த சாத்திரங்கள் முனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் உரை.

This entry is part [part not set] of 25 in the series 20091204_Issue

முனைவர் மு. பழனியப்பன்


தமிழர்களின் தத்துவக் கொடைகளுள் குறிக்கத்தக்கது சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகும். பதினான்கு சாத்திரங்கள் என்ற நிலையில் பதினான்கு நூல்களை உள்ளடக்கியதாக இத்தொகுப்பு விளங்குகின்றது.இப்பதினான்கு நூல்களிலும் இறைவனின் தன்மைகள், ஆன்மாவின் நிலைகள், இறைவனை ஆன்மா அடைய முடியாததற்கான தடைகள் முதலியன பற்றிய செய்திகள் எடுத்துக் காட்டப் பெறுகின்றன.

மெய்கண்டார் எழுதிய சிவஞான போதம் என்பது சைவ தத்துவங்களில் தலைமேல் வைத்துப் போற்றக் கூடிய அடிப்படை நூல் ஆகும். இது தவிர திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், சிவஞான சித்தியார், இருபா இருபஃது, உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், வினாவெண்பா, போற்றிப்பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சு விடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் போன்ற நூல்கள் இத்தொகுப்பில் அடங்குகின்றன.

தத்துவச் செய்திகள் மிகுந்து காணப்படும் இத்தொகுப்பிற்கு அனைவரும் புரிந்துக் கொள்ளத் தக்கநிலையில் தற்போது எளிய உரைநூல் ஒன்று வந்துள்ளது. முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் இந்நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஒரே தொகுப்பாக வந்துள்ள இந்நூல் ஏறக்குறைய ஆயிரத்து இருநூறு பக்கங்களாக விரிந்துள்ளது. கெட்டி அட்டையுடன் நல்ல தாளில் சென்னை உமா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். நூலின் விலை ருபாய் ஐநூறு.

இத்தொகுப்பினுள் ஒவ்வொரு நூலைப்பற்றிய அறிமுகம், ஆசிரியர் அறிமுகம் நூலின் பாடல்கள், அதற்கான பொருள், அப்பாடலின் கடினமான சொற்களுக்குப் பொருள் என்பன அடங்கியுள்ளன. குறிப்பாக பாடல்கள் ஒருவகையான எழுத்துருவிலும், அதற்கான எளிய உரை தடித்த எழுத்துருவிலும், சொற்பொருள் விளக்கம் ஒரு வடிவத்திலும் நூல் முழுவதும் இடம் பெறச் செய்யப் பெற்றுள்ளது. இது படிப்பவர்க்கு மிக்க துணை செய்கிறது.

இந்நூலில் மிக ரசமான பகுதி என்றால் ஒவ்வொரு நூலைப் பற்றிய அறிமுகமும், அந்நூலாசிரியர் பற்றிய செய்தியுமே ஆகும். எடுத்துக்காட்டிற்குப் பின்வரும் பகுதியைச் சுட்டலாம்.

`இவர் ( கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார்) ஒரு நாள் கூத்தப் பெருமானுக்கு வழிபாடு முடித்துத் தம் வீட்டிற்கு வழக்கமாக தனக்கு அமைந்த விருதுகளோடு சிவகைமேல் சென்றார். அவ்வாறு செல்லும்பொழுது வீதியில் ஒரு திண்ணையில் வீற்றிருந்த மறைஞான சம்பந்தர் உமாபதியார் செல்லும் காட்சியைக் கண்டார். கண்டவுடன்
” பட்ட கட்டையில் பகற்குருடு ஏகுதல் பாரீர்” என்றார். அச்சொற்களைக் கேட்ட உமாபதி சிவம் சிவகையில் இருந்து இறங்கி மறைஞான சம்பந்தர் திருவடிகளைத் தொழுதார். மறைஞானசம்பந்தர் சொன்ன தொடருக்குப் பொருள் கேட்டுடத் தெளிந்து அவர்க்கு மாணவர் ஆனார். பட்ட கட்டை என்பது சிவிகையைக் குறிக்க விருது ஆகிய விளக்கைப் பகல் நேரத்திலும் கொண்டு சென்றதால் அதனைப் பகற்குருடு என்பது குறிக்க அமைந்த ஞானாசிரியன் திருவாக்கு உமாபதி சிவத்திற்கு ஞானத்தைத் தந்தது. ” (ப. 791)

இதுபோன்ற பல சுவையான செய்திகள் இதனுள் உள்ளன. உமாபதி சிவம் என்பவர் இப்பதினான்கில் செம்பாதிக்குமேல் எழுதியவர் ஆவார். இவர் ஞானம் பெற்ற வரலாற்றை மேற்பகுதி சுட்டுகிறது.

இந்நூலுள் செய்யுள்களுக்கான உரையினைச் சொல்லும்போதும் எளிமை நடை பின்பற்றப் பெற்றுள்ளமை போற்றத்தக்கது. அதற்கு ஒரு காட்டு பின்வருமாறு.

பல்ஆருயிர் உணரும் பான்மை எனமேலொருவன்
இல்லாதான் எங்கள் இறை

என்பது திருவருட்பயன் பகுதியில் வரும் ஒரு குறட்செய்யுள் ஆகும். இதற்குப் பின்வரும் நிலையில் எளிய நடையில் உரை அமைகின்றது.

`அளவில்லாதவனாய் எங்கும் நிறைந்திருக்கும் ஆன்மாக்கள் அறிவிக்க அறியும் தன்மைபோல தனக்கு மேலாய் நின்று உணர்த்துகின்ற ஒருவரை இல்லாதவன் எங்கள் இறை ”

இவ்வாறு ஒவ்வொரு தத்துவப் பாடலிற்கும் எளிமையோடு உரை தந்துள்ள இந்நூல் தமிழர்தம் நூலகத்துள்ளும், அகத்துள்ளும் இருக்க வேண்டிய நன்னூல்.

சைவ சித்தாந்த சாத்திரங்கள், முனைவர் பழ. முத்தப்பன் ( உரை ஆசிரியர்) உமாபதிப்பகம், 18/171 பவளக்காரத் தெரு, மண்ணடி, சென்னை1 விலை ருபாய் 500

— muppalam2006@gmail.com

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்