This entry is in the series 20020428_Issue

எஸ். வைதேஹி.


ஜன்னல் கண்ணாடிகளின்
வெளியே உதிர்ந்து விழும் மழை

சுவற்றின் பக்கங்களில்
உறைந்து அமிழ்ந்து
நிறம் மாற்றம் கொள்ளும்
நீர்

கொட்டும் மழை சாலையில்
நெளியும் சாரை போல
தவளையுடன் மிதக்கும் நீர்

என நீரைப் பற்றி என் நினைவுகள் நிறையவே
யிருந்தாலும்
மறக்கவே முடியாதது என
அண்ணனை சுழல் ஆற்று நீர்
அடித்து சென்றதும்,
கொதிக்கும் நீரை அம்மா
காலில் கொட்டிக் கொண்டதும்,
தாத்தா யிறந்த போது
எதிர் குளத்து நீரில்
முங்கி எழச் சொன்ன போது
மூச்சு முட்டியதும்,
அம்மாவுக்கு பிடித்த
செண்பக மரத்தடியில்
மரம் உதிர்த்த மழையில்
ஒற்றை பூவாய் நான் நின்றதும்தான்
நீரைப் பற்றி
எனக்கு பிடித்தமான நினைவுகள்.

***

Series Navigation