நீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

கோ. ஜோதி


திருவள்ளூவர் மாவட்டத்தில் திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் பிரதான சாலையில் திருவள்ளூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் வெள்ளியூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் மக்கள் தொகை 4379 ஆகும். இந்த ஜனத்தொகையில் ஐம்பது சதவீதத்திற்குமேல் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் பெரும்பாலோர் விவசாய கூலி வேலை செய்பவர்கள். கடந்த 4 வருடங்களாக இக்கிராமத்தின் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து போய் விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாமல் போய் பல்வேறு துன்பங்களுக்கும் உள்ளாயினர். இதனால் விவசாய கூலிகளுக்கும் வேலை இல்லாத நிலை உருவாயிற்று.

இதற்கான பின்னணி என்ன ? 1944 ஆம் வருடம் பூண்டி நீர்த்தேக்கம் கட்டப்பட்டது. 1960ல் செங்குன்றம் ஏரி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரியாக மாற்றப்பட்டது. வளர்ந்து வரும் சென்னை நகரின் குடிநீர் தேவை அதிகரித்ததால் திருவள்ளூர் பகுதியில் குடிநீர் தேவைகளுக்காக 1969ல் 58 கிணறுகள் சென்னை குடிநீர் வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டது. இதில் 11 கிணறுகள் வெள்ளியூர் கிராமத்தில் இருந்தன. இக்கிணறுகளில் இருந்து தினந்தோறும் அதிக நீர் உறிஞ்சப்பட்டதால் இக்கிணறுகள் 2000வது ஆண்டில் முற்றிலும் வற்றிப்போனது. பிறகு குடிநீர் வடிகால் வாரியம் விஷ்ணுவாக்கம், கீலானுர், மேலானுர், காரணை, சிறுவானுர் கண்டிகை, புல்லரம்பாக்கம் மற்றும் வெள்ளியூர் போன்ற கிராமங்களில் உள்ள விவசாயிகளின் கிணறுகளில் இருந்து தண்ணீரை வாங்கத் துவங்கியது.

2001ம் ஆண்டு வெள்ளியூர் கிராமத்தில் நான்கு நீர்த்தேக்க தொட்டிகள் கட்டப்பட்டது. மேலே குறிப்பிட்டுள்ள கிராமங்களின் கிணறுகளில் இருந்து எடுக்கப்படும் நீர் குழாய் வழியாக இந்த நீர்த்தேக்க தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு சென்னைக்கு அனுப்பப்பட்டது. இதற்காக விவசாயிகளிடமிருந்து 75 ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தினந்தோறும் 40 மில்லியன் லிட்டர் தினந்தோறும் எடுக்கப்படுகிறது. இந்த 75 ஆழ்குழாய் கிணறுகளில் தற்போது 55 ஆழ்குழாய் கிணறுகளில் மட்டுமே நீர் எடுக்கப்படுகிறது. இது தவிர இக்கிராமத்தில் திருவள்ளூர் நகருக்கு குடிநீர் விநியோகம் அளிக்கப்படுகிறது. இந்த காரணங்களால் இக்கிராமத்தின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இக்கிராமத்தில் ஒவ்வொரு பருவத்திலும் 2 ஆயிரம் ஏக்கர் சாகுபடி பரப்பாக இருந்தது.

இது 2001ல் 1300 ஏக்கராகவும் 2002ல் 750 ஏக்கராகவும் 2004ல் 200 ஏக்கராகவும் குறைந்தது. இதனால் விவசாயிகள் தங்கள் நிலங்களை சாகுபடி செய்ய இயலாமல் போனது. விவாசயத்தை சார்ந்த கூலி வேலை வாய்ப்புகளும் இல்லாமல் போனது. வேறு வேலைவாய்ப்பு இன்றி வாடிய மக்கள் ஆறுகளிலிருந்து மணல் அள்ளுதல் போன்ற வேலைகளில் ஈடுபட துவங்கினர். விவசாயிகளுக்கும் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டது. 1955ல் திருவள்ளூர் நகரில் கிராமப்புற பெண்கள் விடுதலைக்கான கல்வி மையம் என்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் இப்பகுதியில் 25 கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டது.

இக்கிராமங்களில் சென்னை குடிநீர் வாரியம் தொடர்ந்து தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட வேண்டும் இல்லையெனில் எதிர்காலத்தில் இக்கிராமங்களில் பெரும் பொருளாதார சீரழிவை எதிர்க்கொள்ள நேரிடும். (இந்து நாளிதழ் ஏப்ரல் 26-1995 பக்கம் 6) இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ளாத அரசும், சென்னை குடிநீர் வாரியமும் தொடர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சி கொண்டே இருக்கிறது. 2000 ஆண்டில் தினமும் விவசாயத்திற்காக 10 மணிநேரம் மின் விநியோகம் செய்யப்பட்டது. சென்னை குடிநீர் வாரியம் இக்கிராமத்தில் இருந்து நீரை பெறுவதற்காக இக்கிராம விவாசயிகளிடம் ஒப்பந்தம் செய்து கொண்ட பிறகு ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தொடர்ந்து நீர் எடுப்பதற்காக 24 மணி நேரமும் மின் விநியோகம் கொடுக்கப்பட்டது. இக்கிராமத்தில் நிலத்தடி நீரை பெறுவதற்காக சென்னை குடிநீர் வாரியத்திற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கு மட்டுமே.

2000ல் போடப்பட்ட ஒப்பந்தம் 2001ல் முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு வருடமும் இந்த ஒப்பந்தம் தொடர்ந்தது. 2001லிருந்து 2003 வரை பெரும்பாலான விவசாய கிணறுகள் முற்றிலும் வற்றிப் போனது. விவசாயிகளும் கிராம மக்களும் இந்நிலையைப் பற்றி கலை கொண்டனர். நித்தடி நீரை விற்று வந்த விவசாயிகள் மட்டும் பெரும் லாபத்தை ஈட்டி வந்தனர். இவர்களில் சிலர் ஆளும் கட்சி சார்பான விவசாயிகள். கிராம விவசாயிகளும், பொது மக்களும் சென்னை குடிநீர் வாரியத்திற்கு இக்கிராமத்திலிருந்து தண்ணீர் எடுப்பதை நிறுத்துமாறு பலமுறை கேட்டு கொண்டனர். தமிழக அரசிடமும் இதை வலியுறுத்தியது. கிராம பஞ்சாயத்து ஒன்று கூடி சென்னை குடிநீர் வாரியம் தண்ணீர் எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆகஸ்ட் 15ம் தேதி 2004ல் சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. உடனே சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் வருவாய் அதிகாரிகள் விரைந்து வந்து மக்களை அமைதிபடுத்த முயன்றனர். இதில் வருவாய் அதிகாரிகள் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தண்ணீர் விற்கும் விவசாயிகள், மகளிர் சுயஉதவி குழுவினர், விவசாயிகள், விவசாய கூலிகள் அனைவரும் இடம்பெற்றனர்.

இக்குழு கூட்டத்தின் முடிவில் செப்டம்பர் 14ம் தேதி 2004 இக்கிராமத்தில் தண்ணீர் எடுப்பதை சென்னை குடிநீர் வாரியம் நிறுத்திவிடும் என்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் சென்னை குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள் சிலர் இந்த ஒப்புதலை ஏற்க மறுத்தனர். செப்டம்பர் 2004 16ம் தேதியும் தண்ணீர் எடுப்பது நிறுத்தப்படாததால் பொதுமக்கள் ஒன்றுகூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களில் சிலர் நிலத்தடிநீர் வரும் குழாய்களை சேதப்படுத்தினர். அங்கு வந்த வருவாய்த் துறை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆகியோர் தண்ணீர் எடுப்பதை நிறுத்துவதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இக்கிராமத்தை சேர்ந்த 47 விவசாயிகள் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக கைது செய்யப்பட்டனர். மேலும் 50 விவசாயிகள் கைது செய்ய முடிவு எடுத்து இருக்கிறது காவல்துறை.

* இக்கிராமத்தை போன்றே சென்னை நகரை சுற்றிலும் பல பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் சென்னை குடிநீர் வாரியமும், தனியாரும் நிலத்தடி நீரை எடுத்து விநியோகம் செய்து வருகின்றன. தமிழக அரசு பிறப்பித்த நிலத்தடி நீர் ஒழுங்கு படுத்தும் சட்டப்படி சென்னை சுற்றியுள்ள 228 கிராமங்களில் நிலத்தடி நீரை வெளியே எடுத்துச் செல்லக் கூடாது என்ற ஆணை உள்ளது. இந்த ஆணை பெயரளவிற்கே உள்ளது. ஆணை பிறப்பித்த அரசே ஆணையை மீறுகிறது, இது வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது.

* தங்கள் கிராமத்தில் இயற்கை வளங்களை பாதுகாக்க பொதுமக்கள் எடுக்கும் நடவடிக்கைகளை அரசும், காவல் துறையும் தனது கொடுங்கரங்களை கொண்டு அடக்குகிறது.

* விவசாய வளர்ச்சியைப் பற்றி பெருமை பேசிக்கொள்ளும் மத்திய, மாநில அரசுகள் அதிலும் தற்போதைய மாநில அரசு கிராமப்புற விவசாயத்தை குழி தோண்டி புதைத்து விவசாய மக்களை பஞ்சை பராரிகள் ஆக்கி வருகிறது.

* சென்னை நகர குடிநீர் தேவைக்காக ஏராளமான திட்டங்கள் தீட்டப்பட்டும் அவைகள் பல்வேறு காரணங்களால் (ஊழல், திறமையற்ற அரசும், அதிகாரிகளும் மற்றும் அரசியல் மாச்சரியங்கள் போன்ற) தோல்வி யடைந்து விட்டன. விரைவில் சென்னை நகரின் குடிநீர்ப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வை (கிராமப்புற மக்களையும், விவசாயிகளையும் பாதிக்காத வகையில்) அரசும், நிர்வாகமும் ஏற்படுத்த முடியாமல் போனால், சென்னை நகரம் மட்டுமல்ல, சென்னை நகரைச் சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களும், பெரும் அழிவைச் சந்திக்க நேரிடும். இதைத்தான் “வெள்ளியூர்” நமக்குக் காட்டுகிறது.

—-

jothi_mids@yahoo.co.uk

Series Navigation