ப. சோழ நாடனின் ‘வீணை அதன் பேர் தனம் ‘ : ஒரு பார்வை

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

நா. திருப்பதி சாமி


இன்றைய காலக் கட்டத்தை விடவும் முன் நாட்களில் மக்களுக்கு நெருக்கமாக இசை இருந்திருக்கிறது. தங்களது இசையை தங்களது கற்பனையிலேயே மக்கள் உருவாக்கிக் கொண்டனர்; அல்லது தாம் சார்ந்த சூழலில் உருவான இசையையே சுவனித்தனர்.

இப்போது தேர்வு செய்வது மட்டுமே மக்கள் கையிலிருக்கும் ஒரே வாய்ப்பு. திரைப் பாடல்கள் மட்டுமே இசை என்ற போக்கு இன்றைய நிலை! ஆல்பங்கள் இப்போது கிளம்பி இருக்கும் இன்னொரு வகைத் திணிப்பு!

யாழ் இசை பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களிலே பல இடங்களில் கிடைக்கின்றன. பாணர், விறலி போன்ற இசை வாணர்கள் யாழ் இசைத்து செல்வந்தர்களிடம் இருந்து பொருள் பெற்றனர். இப் பாணர்கள் வட நாடு சென்று சிறப்புப் பெற்றிருந்தனர் என்பதை இந்நூல் குறிப்பிடுகிறது.

யாழின் பல் வகைப் பரிணாமங்களை—-அதன் வடிவ மாற்றங்களை—-இலக்கிய ஆதாரங்கள் மூலமாகவும் பல் வேறு நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பங்களின் புகைப் படங்கள் மூலமாகவும் நிறுவுகிறார் நூலாசிரியர், ப.சோழ நாடன்!

யாழின் குறைகளைக் களைந்து களைந்து நாம் பெற்று இருக்கின்ற வளர்ச்சியின் வடிவமே இன்றைய வீணை என்னும் வடிவம்; நேரடியாக சரஸ்வதி தெய்வத்தால் உருவாக்கப் பட வில்லை என்பதை கல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ள சரஸ்வதி சிலை மூலம் இவர் தெரியப் படுத்துகிறார்.

‘யாழ் ‘ என்று ஒரு தனி நூலையே இவர் செய்திருக்கலாம் என்கிற அளவுக்கு சுவையான ஆதாரங்களை இவர் தந்திருக்கிறார்.

வீணை வித்தகர்கள் தமிழகத்தில் நிறைய பேர் இருந்து மறைந்தாலும், தனம்மாவுக்கு மட்டும் என்ன தனிப் பெருமை என்பதை நிறுவவும் ஏராளமான நுட்ப விவரங்களை இவர் தருகிறார்.

பொது வாழ்வில் பெண்கள் பங்கு கொள்ளச் சாத்தியமே இல்லாத ஒரு காலக் கட்டத்தில் தோன்றி, பல இசை வித்தகர்களும் மனம் நிறைந்து பாராட்டும் அளவுக்குச் சிறப்படைந்திருக்கிறார் தனம்மாள்!

ஆணாதிக்கத் தொல்லைகள், கச்சேரியின் இறுதியில் பாட வைப்பது, போன்ற தொல்லைகளைத் தன் இசைத் திறமையால் இவர் வென்றிருக்கிறார்.

படிப்பதற்கு நாவல் போலவும் வரலாற்று நூலுக்குரிய நம்பகத் தன்மையும் கொண்டிருக்கிறது இந்நூல்!

ராகத்தை வெகு நேரம் ஆலாபனை செய்யக் கூடாது; இன்ன ராகம் என்று மயக்கமில்லாமல் தெளிவாகத் தெரியும் படி வாசிக்க வேண்டும்; என்னும் தனம்மாளின் கருத்து இன்றைய கலப்பிசைக் காலக் கட்டத்தில் வியப்பை ஏற்படுத்தும்

சீன மொழியில் பாடிக் கூட தனம்மாவால் கேட்பவர் மனத்தில் ஊடுருவ முடியும் என்று இவரைப் பற்றி ரசிகமணி டி.கே.சி. குறிப்பிடுகிறார்.

தமிழகத்தின் பெரும் இசை ஞானிகளும் இசை ரசிக விமர்சகர்களும் தனம்மாளின் இசையைப் புகழ்ந்திருக்கிறார்கள்.

இசை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, வரலாற்று உணர்வுள்ளவர்களுக்கும் இந்நூல் மிகுந்த சுவையுடையது.

1-11-2004

nthiruppathisamy@yahoo.com.

Series Navigation

நா. திருப்பதி சாமி

நா. திருப்பதி சாமி