நாகர்கோவில்-என்.எஸ்.பி
அரக்கரடக்கல்
புராண மண்டலத்து இடையறா நீரோட்டங்களில் (archetype) ஒன்று அரக்கரடக்கல்.
அரக்கராற்றல் என்பது திசை மாறிய தவங்களின் பிழை ஏறிய வரங்கள். அவ்வரங்களுக்கு அடங்கியே அரக்கரடக்கல் நிகழும். அது தெய்வீக-லீலை.
இராமன் மறைந்து நின்று வாலிவதம் செய்கிறான். எதிர் நின்றோரின் பலத்தில் பாதி தனக்கு வருமாறு வரம் பெற்றவன் வாலி. அவ்வரத்துக்கு சேதமின்றி வாலி வதம் புரிய இராமன் நாடிய உத்தியே மறைந்து நின்று பாணம் எய்தியமை!
இரணியன் பெற்ற சாகாவரத்தில் பல நிபந்தனைகள்! பகலும் இரவும் மரணமில்லை; ஆயுதத்தாலும் அங்கத்தாலும் சாதல் இல்லை; மனிதர்-விலங்கு-தெய்வத்தால் இறப்பு இல்லை. மண்ணிலும் விண்ணிலும் உயிர் போதல் இல்லை. இப்படிப் பல நிபந்தனைகள்! வரம் மதித்து இரணியனை வதம் செய்தல் நரசிம்ம அவதார நுட்பமாகின்றது.
கஜமுகாசுரனுக்கு எந்த ஆயுதத்தாலும் சாவில்லை. எந்த விலங்காலும் மனிதராலும் தெய்வத்தாலும் தீங்கில்லை. எனவே விநாயகப்பெருமானின் கொம்பினை ஒடித்த லீலை அரங்கேறியது.
அரக்கராட்சி என்பது இருளின் ஆக்கிரமிப்பு. தீமையின் பிரயோகம். வரங்கள் பெற்ற அரக்கர் வாழ்வு என்பது மிக வலிமையான சவால். தெய்வீக சக்தி தீமைக்கு முடிவுகட்டும் வினோத விளையாட்டு புராண ருசிகளில் ஒன்று அது தெய்வீக நம்பிக்கையை வலிமைப்படுத்தும்; தெய்வீக மலர்ச்சிக்கு ஆன்மாவை செலுத்தும்.
-விவேகவாணி [ஆகஸ்ட்-2004]
சின்முத்திரை
முத்திரைகள் என்பவை அடையாளக் குறியீடுகள் (symbols) வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. நுட்பமும் ஆழமும் பயனும் கருதிப் பேணப்படுபவை இம்முத்திரைகள். ஆன்மீகத்துறையிலும் இதற்குச் சிறப்பிடம் உண்டு.
அனைத்துக் குறியீடுகளின் சிகர நிலையே சின்முத்திரை.காலமும் இடமும் கடந்த குறியீடு அது. ஒன்று பலவாயிற்று என்பதன் எதிர்வினையாகப் பலவற்றை ஒன்று நோக்கி செலுத்தும் உத்தம ஞானத்தின் அடையாளம் அது. மூலத்தை நோக்கி மீளல் (Returning to the Source) என்பதே அம்முத்திரையின் அர்த்தம்.
ஆன்மிகத்தளத்தில் ஆரம்ப அரிச்சுவடி முதல் அத்துவிதச் சாதனை வரையிலும் இக்குறியீட்டில் குறிக்கப் பெறுகின்றது. பாரதப் பண்பாட்டு மண்டலத்தின் அனைத்துக் கனிகளின் பிழிவாக விளங்கும் முத்திரை இது.
ஓங்கி வளர்ந்த ஆலமரம். அடியில் ஓர் இளையவர். தென்முகமாக அமர்ந்த அவரை சூழ்ந்த சீடர்கள் நால்வர். நால்வரும் முதிர்ந்தவர்கள் – உன்னிப்பான கவனத்துடன். இம்மெளன மண்டலத்தில் மெளனக் குருவின் திருக்கரத்தில் ஞானமுத்திரை!
பெருவிரலும் ஆட்காட்டி விரலும் இணைந்திட, பிற விடல்கள் மூன்றும் நிமிர்ந்துள்ளன. போதனை என்ன ? ஆணவம், கன்மம், மாயை என்னும் அஞ்ஞான விருத்திகளான மும்மலங்களும் தவிர்த்து ஆன்மா பரம்பொருளின் திருவடி வியாபகத்தில் இரண்டறக் கலத்தலே போதனை. பெருவிரல் பரம்பொருள். ஆட்காட்டி விரல் ஆன்மா. ஏனைய மூவிரல்கள் மும்மலம். மும்மலம் விடுத்து ஆன்மா பரம்பொருள் அடைதல் முத்திரைப் பொருள்.
ஆலமரமும் அடியமர்ந்த பரமகுருவும், அணுக்கச் சீடர்களும் அவர் கை முத்திரையும் – அனைத்துமே அடையாளக் குறியீடுகள். அனைத்தும் கடந்த மோனவெளிக்கு ஒரு வாசல் இச்சின்முத்திரை. தெய்வீகம் நோக்கிய மானுடப்பரிமாணத்தின் உன்னத நிலை இச்சின்முத்திரை.
-விவேகவாணி [ஜூன்-2004]
மரங்கள்
மானுடத்தை வளம்படுத்திய மங்கலங்களில் மரங்களின் இடம் மிகப்பெரியது. ஆன்மிகத்திலும் அவை ஆற்றிய பங்கின் நிறமாலை அழகியது தியானிக்கத் தக்கது.
ஆன்மீகம் பேணும் சத்சங்கங்களில் மரங்களின் உயரம் பெரிது; படர்வு பெரிது; நிழல் பெரிது; பங்கு பெரிது.
கல்லால விருட்சத்தின் நிழலில் தட்சிணாமூர்த்தியின் மெளன உபதேசம்! சின்முத்திரை ஆன்மீக உலகின் அருஞ்சிகரம்! சநகாதி முனிவர் பெற்ற பெரும் புண்ணியம்! அரங்கேறிய நிழல் கல்லால நீழல்!
சித்தார்த்தர் புத்தராகப் பொலிந்த இடம் கயாவின் அரசமரம்! போதிமரம் ! அன்னையின் மடியைப் போல அந்த தவசீலருக்கு நிழல் தந்து அரவணைத்த இறவாமரம்!
பாண்டிய மன்னனுக்குக் குதிரை வாங்கச் சென்ற திருவாதவூரர் அறனுரைத்த அண்ணலுக்கு ஆட்பட்டு மாணிக்கவாசகராய் ஆன்மஞானம் பெற்ற இடம் திருப்பெருந்துறை: மரம் குருந்த மரம்.
நாடுபுகழும் ஒளவைக்கு ஞானம் உணர்த்த வந்த வேலன் ‘சுட்ட பழம் ‘ உதிர்த்த மரம் நாவல் மரம்!
செத்ததற்குள்ளே சீவன் பிறந்ததால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் என்னும் மதுரகவி ஆழ்வார் வினாவிற்கு அதுவரை ஊமைக்குழந்தை என இருந்த நம்மாழ்வார் வாய்திறந்து அத்தைத் தின்று அங்கே கிடக்கும் எனப் பதில் அளித்து அதிசயம் நிகழ்த்திய மரம் ஆழ்வார் திருநகரிப் புளியமரம்!
பிள்ளையார் அமர அரசமரம். மாரி அம்மைக்கோ வேப்ப மரம்.காளிங்கன் தலைமீது சாடிட உதவிய மரம், உரலால் பிளந்து சாபம் தீர்த்துத் தேவராக்கிய மரம், கோபியர் ஆடையைக் கவர்ந்தேற நின்றமரம் எனக் கண்ணனுக்கோ பல மரங்கள்!
பரமஹம்சர் கதையில் ஓர் கற்பக மரம். விவேகானந்தர் தம்முடன் விளையாடிய சிறுவருக்கு மூடநம்பிக்கைகளை ஒழிக்க ஒரு மரம். ஞான சம்பந்தர் திருவருள் ஆற்றலை உணர்த்த ஆண்பெண்ணாக்கிய மரம் ; கூர்வேல் பிளவில் சேவலும் மயிலுமாக ஒரு மரம்; வள்ளியோடி விளையாட ஒரு மரம் எனப் பல மரங்கள்.
இருபறவை ஒருபறவையாய் மாறும் காட்சி தந்த எழில் மரமும், தலைகீழ்ப் பிம்பத்தில் நிழல்காட்டி நிஜமுணர்த்தும் நிழல் மரமும் உபநிடதம் வழங்கும் ஒளி ஞான மரங்கள்.
மன-சாட்சியுடன் பார்த்தால் மர-மாட்சி புரியும்! ஓர் விதையில் பெருங்காடே உறைந்து தவம் புரியும் ஆன்மிக வினோதம் உணர்த்துவதும் மரம்தானே! பிரபஞ்சக் காட்டுக்கும் பிரம்மம் எனும் வித்துக்கும் நடுநிற்கும் வாழ்க்கைக் குறியீடுதான் மரம்!
-விவேகவாணி [நவம்பர்-2004]
[இவை விவேகானந்த கேந்திரத்தின் மாத இதழான ‘விவேகவாணி ‘ யில் கடைசிப்பக்கக் கட்டுரைகளாக வெளிவந்துக்கொண்டிருப்பவை. என்.எஸ்.பி தெ.தி.இந்துக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி துறைத்தலைவராக ஓய்வுபெற்றவர்.]
nagerkovil_nsp@yahoo.com
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2
- நிலாக்கீற்று -3
- ‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்
- ‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து
- தவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்
- அகமும் புறமும் (In and Out)
- வாஷிங் மெஷினும், மனுஷனும்!!
- விளக்கு பரிசு பெற்ற கவிஞர் ஞானக்கூத்தனுக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
- தவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து
- கடிதம்
- உயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்
- ‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி
- பனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு
- அப்பாவி ஆடுகள்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மஹான்
- கன்னிமணியோசை
- பயம்
- எல்லாம் ஒலி மயம்
- ராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு!
- ‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1
- ஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்
- ரிஷபன் கவிதைகள்
- பெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்
- கீதாஞ்சலி (55)
- நிவாரணம் வந்தது மனிதம் போனது!
- உன்னதம் இலக்கிய இதழ்.