நிர்மூலமாக்கிய ஹரிக்கேனால் நியூ ஆர்லியன்ஸ் நகர மாந்தர் வெளியேற்றம் [2] (Mass Exodus in New Orleans City After Hurricane Katrina

This entry is part [part not set] of 22 in the series 20051014_Issue

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


எத்தனை கோடி இன்னல்

வைத்தாய் எங்கள் இறைவா ?

நித்தமும் பூமியின் கோரப் பற்களில்

எத்தனை பேர் மடிந்தார் இறைவா ?

யுத்தமும் கொல்லும் உலகில் உனது

கத்தியை முறித்துநீ எப்போது

புத்தரைப் போன்று காத்திடும்

உத்திகள் செய்வாய் மனிதா ?

‘நியூ ஆர்லின்ஸ் நகரம் மக்கள் வாழத் தகுதியற்று, அரை மில்லியன் பேர் வெளியேறக் கட்டளை யிடப்பட்டு 50,000-100,000 நபர்கள் பிடிவாதமாய் நீர் மூழ்கிய இல்லங்களில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். ‘

நகராட்சி அதிபர்: ரே நாகின் [New Orlean ‘s Mayor, Ray Nagin]

‘கேட்ரினா ஹரிக்கேன் நினைக்க முடியாத ஓர் பயங்கரச் சூறாவளி! அது விளைவித்த சேதமும், பாதகமும் ஒரு தேசச் சீர்கேட்டு நிகழ்ச்சி! மேலும் அது தேச அவமான இகழச்சி என்றும் கருதப் படுகிறது! அதே சமயத்தில் புறக்கணிக்கப் பட்டு மனிதரிடம் ஒளிந்திருக்கும் வெறுப்பு உணர்வுகளை, காட்டுமிராண்டித்தனமான ஏற்றத் தாழ்வுகளைக் கேட்ரினா வெளியே கொண்டு வந்தது! அமெரிக்காவில் நிறவெறி இப்போதும் எவ்விதம் தலைதூக்கி உள்ளது என்பதை அது காட்டியது. அதிர்ச்சி தரும் அந்த கோர நிகழ்ச்சிகள் உளவு செய்யப்பட்டுத் தவிர்க்கப்பட்டு நமது சமூகம் சீராக்கப்பட வாய்ப்புள்ளது! ‘

ஜெ. டிம்மன்ஸ் ராபர்ட் [J. Timmons Robert, Director of Environmental Science/Studies]

‘ஹரிக்கேன் கேட்ரினா நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் புறங்களில் பேரளவு சூழ்நிலைச் சீர்கேட்டை விளைவிக்கப் போகிறது. நகர்ப் பாதுகாப்புக் கரைமதில் ஏற்பாடுகளைத் [City Levee System] தகர்த்துக் கொண்டு நீர் வெள்ளம் கடல் கீழ்மட்டப் பகுதிகளை நிரப்பி, தெருக்களில் நீர்க்குளங்களை உண்டாக்கிக் குப்பை, நரகல் கழிவுகளுடன் சேர்ந்து, அபாய இரசாயனத் திரவங்களுடன் கலந்து மக்கள் தப்பி வெளியேற முடியாதபடி அடைத்து விடலாம். ‘

இவார் வான் ஹீர்டென் [Ivor Van Heerden, Marine Scientist, Louisiana State University]

‘கடந்த 22 ஆண்டுகளாக 200 உலக நாடுகளில் 4040 பேராபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாதவது ஓராண்டில் இரண்டு பெரு விபத்துகளை ஒரு நாடு எதிர்பார்க்கலாம். ‘

ஜெ. டிம்மன்ஸ் ராபர்ட் [2003 W&M International Report (2003)]

உலகில் எங்கெங்கு வாழ்ந்தாலும் இன்னலாடா!

உலகில் எந்த நாடு வாழத் தகுதி உடையது, எந்த இடம் பாதுகாப்பானது, எந்த மனித இனம் நாகரீக நடமாடி வருகிறது என்பதை நிர்ணயம் செய்வது மிகக் கடினமானது! கடற்கரைப் பிரதேசங்கள் கண்ணுக்கு அழகானவை! ஆனால் சுனாமியும், சூறாவளியும் எப்போது உன்னைத் தாக்கி விழுங்கிவிடும் என்று அஞ்சி உறங்காமல் நீ விழித்திருக்க வேண்டும். 2004 ஆம் ஆண்டு டிசம்பரில் தென் கிழக்காசியக் கடற்கரைகளில் சுனாமிப் பேரலைகள் அடித்து அரை மில்லியன் மக்களைக் கொன்று விட்டது! மலைப் பகுதிகள் மனத்தைக் கவர்ந்து ஈர்ப்பவை! ஆனால் மலைச் சரிவுகளில் பெருமழை வெள்ளத்தால், நிலச்சரிவுகள் நேர்ந்து வீடுகள் மூழ்கி மனிதரும் புதைபடுவர். இந்த வாரம் அடித்த சூறாவளியில் மத்திய அமெரிக்காவில் உள்ள கெளதமாலாவில் பெருமழை பெய்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுச் சுமார் 1000 மக்கள் புதைபட்டுக் கண்மூடியதுடன், 125,000 இல்லங்களும் மண்மூடிப் போயின! அல்லது பூகம்ப அதிர்வுகள் ஆட்டி வீடுகள் அனைத்தும் தீப்பெட்டி போல் நொறுங்கி முறிந்து, ஆயிரக்கணக்கில் மனிதர் உயிரோடு புதைபடுகின்றனர். சென்ற வாரத்தில் இமாலய அடிவாரத்தில் 7.6 ரிக்டர் அளவில் பூகம்பம் உண்டாகி, பாகிஸ்தானிலும், காஷ்மீர் பகுதிகளிலும் 35,000 பேர் மாண்டனர் என்று அறியப் படுகிறது. நதித் தீரங்கள் காணக் குளிர்ச்சியாக உள்ளன. ஆனால் பருவக் கால மழை பெய்து, ஆற்று வெள்ளமும், மழை வெள்ளமும் நகரையும், ஊர்களையும் மூழ்க்கி மக்கள் மடிகின்றார். அல்லது இல்லங்கள் வாழத் தகுதியற்று மாந்தர் வெளியேறி அனாதைகளாய் தெருக்களில் நடமாடுகிறார்.

எதிர்பாராத இந்த கோர விளைவுகள் ஆயிரக் கணக்கான மக்களை மாய்ப்பதோடு, உயிர் பிழைத்த பல்லாயிரம் மக்களைக் கடத்திச் சென்று, தங்குமிடம், உண்ண உணவு, அருந்த நீர், உடுத்த உடை, உறங்க படுக்கை, போர்வை போன்ற வாழ்க்கைத் தேவைகளைக் குறுகிய காலத்திற்கோ அல்லது நீடிய காலத்திற்கோ அளித்திட வேண்டி யுள்ளது. அதற்கு அரசாங்கமும், மானிடச் சேவைக் குழுவினரும், மக்களும் இணைந்து பணியாற்ற வேண்டி யிருக்கிறது. பெருங்கொண்ட அபாயத் தேவை நிதியும், அன்னிய நாடுகளின் கொடை நிதியும், மருத்துவர், எஞ்சினியர், தீயணைப்பு நிபுணர், இராணுவப் படைகள், வாகனங்கள், ஹெலிக்காப்டர்கள் போன்றவை உடனே தேவைப்படுகின்றன. ஏறக்குறைய உலகின் எல்லா நாடுகளிலும் ஏதாவது அபாயப் பேர்விபத்துகள் நேர்ந்து, அன்னிய அபாயப் பாதுகாப்பு அணிகளின் தேவை இருந்து கொண்டே வருகிறது. இக்கட்டுரை சென்ற ஆகஸ்டு 29 இல் [2005] அமெரிக்காவின் தென்புற மெக்ஸிகன் வளைகுடாக் கடலில் அடித்த ஹரிக்கேன் கேட்ரினால், நியூ ஆர்லியன்ஸ் நகரிலும், அண்டையில் உள்ள மற்ற மாநிலங்களிலும் 14,000 ( ?) பேருக்கும் மேலாக மாண்டதையும், அரை மில்லியன் மாந்தர் தமது இல்லங்களை இழந்ததையும், பல்லாயிரம் பேர் நகரை விட்டு வெளியேறியதையும் கூறுகிறது. உயிர் பிழைத்த 30,000 பேரைத் தங்க வைத்து, போதிய வசதிகள் அளிக்க அமெரிக்க அரசாங்கமும், மாநில அரசுகளும் பேரின்னல்களில் எப்படித் தவித்தன என்று கூறுகிறது.

மெக்ஸிகோ வளைகுடாப் பகுதி மாநிலங்களைத் தாக்கும் சூறாவளிகள்

சென்ற நூற்றாண்டில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு 1965 செப்டம்பரில் தீவிரம்: 3-4 [Category: 3-4] கொண்ட ஹரிக்கேன் பெட்ஸி [Hurricane Betsy] கடைசியாக அடித்த சூறாவளிப் பேய்மழையில் நியூ ஆர்லியன்ஸ் நகரம் அதிர்ஷ்ட வசமாகப் பெருஞ் சேதத்திலிருந்து தப்பியது. ஆனால் பாதுகாப்பு மதில் தடுப்புகளிலும், சில உள்ளக நகராட்சிப் பகுதிகளிலும் [St. Charles, St. Bernard, Plaquemines Parishes] நீர் மட்டம் 23 அடி வரை உயர்ந்து விட்டது. மிகக் கடுமையான தீவிரம்: (4-5) கொண்டு நியூ ஆர்லியன்ஸ் நகரை மோதப் போகும் ஹரிக்கேன் கேட்ரினாவைப் பாதுகாப்பு மதில்கள் தாங்கிக் கொள்ள மாட்டா வென்று கேட்ரினா தாக்குவதற்கு முன்பே பல நிபுணர்கள் மீண்டும், மீண்டும் தமது எச்சரிக்கையை வெளிட்டனர். மதில்கள் சில மண் மேட்டாலும், சில இரும்புத் தட்டுகளாலும், சில காங்கிரீட் சுவர்களாலும் கட்டப் பட்டவை. ஆனால் அவை யாவும் தீவிரம்: 3 தாக்குதலுக்கே கட்டப் பட்டதால், கேட்ரினாவின் வேங்கை அடியைத் தடுத்துக் கொள்ள ஆற்றல் இல்லாதவை என்று முன்னெச்சரிக்கை செய்தது மெய்யாகவே இம்முறை நிகழ்ந்து விட்டது! புகழ் பெற்ற நியூ ஆர்லியன்ஸ் நகரைக் கடல் வெள்ளமும், புயலும் அடித்துக் கடல் நீரால் மூழ்க்கிப் பேரளவு நாசத்தை விளைவித்து விட்டது!

கோர அபாயத்தைப் பலர் எதிர்க்கவில்லை!

மெக்ஸிகோ வளைகுடாப் பகுதியில் ஹரிக்கேன் தாக்கிய போது பலர் எதிர்பார்த்த அபாயத்துக்கு அமெரிக்க அரசாங்கமோ, மாநில அரசாங்கமோ அல்லது அபாயப் பாதுகாப்பு நிறுவனங்களோ எவையும் கையாளத் தயாராக இல்லை! அசுரப் பேராபத்து நிகழ்ந்து மாந்தருக்குக் கைகொடுத்து உதவ வந்த போது, உலகிலே மிக்க செல்வம் கொழித்த பேராற்றல் படைத்த அமெரிக்காவும் தன் குடிமக்களுக்கு ஆதரவும், அடைக்கலமும் அளித்துப் பணி செய்ய முடியாமல் தவித்தது! டெக்ஸஸ் நாளிதழ் ஒன்று 2001 இல் ஹரிக்கேனால் 250,000 பேர் பாதகம் அடைவார் என்று அறிவித்தது! நியூ ஆர்லியன்ஸ் நகர்ப் பகுதி பெரு வெள்ளத்தில் மூழ்கி 6000 இல்லங்களில் நீரோடி, 160,000 பேர் பாதகம் அடைவார் என்று இராணுவ எஞ்சினியர்கள் அனுமானம் செய்தனர். நகர்ப் பாதுகாப்பு இடைவேளை ஆணையாளர் பெர்னி பையர் [Bernie Beier] தனது அனுமானப்படி 9000 இல்லங்கள் நீர் வெள்ளத்தில் மூழ்கி 10,000 பேர் கடப்புக்குத் தயாராக ஏற்பாடுகள் செய்திருந்தார். ஆனால் மெய்யாகப் பிரச்சனைகள் முன்று அல்லது நான்கு மடங்குகள் அதிகரித்தன! லூஸியானா மாநிலத்தில் சுமார் 1.4 மில்லியன் பேர்களுக்கு மின்சாரம் அற்றுப் போனது. நியூ ஆர்லியன்ஸ் சூபர்டோமில் [Superdome] தங்கிய 25,000 பேர்கள் பிறகு 350 தூரத்தில் உள்ள டெக்ஸஸ் ஆஸ்டிரோடோம் [Astrodome] விளையாட்டு மாளிகைக்குப் பஸ்களில் கொண்டு செல்லப்பட்டனர்! இன்றைய தேதி வரையில் சுமார் 300,000 பேர்கள் டெக்ஸஸ், ஆர்கன்ஸாஸ், லூஸியானா, மிஸ்ஸிஸிப்பி, டென்னஸி மாநிலங்களில் தங்கிக் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது.

பேரளவு மக்கள் நகர்ச்சியில் ஏற்பட்ட பெருந் தொல்லைகள்

கேட்ரினா எச்சரிக்கைகள் அறிவித்தவுடன், வாகனங்கள் உள்ளவர் வரிசையாகப் வீதியில் நகர்ந்தனர். மாநிலவீதி 10, பெருவீதி 90 இரண்டிலும் ஆயிரக் கணக்கான கார்கள் எறும்புகள் ஊர்ந்து சென்றன! வாகனங்கள் இல்லாத பல்லாயிரக் கணக்கான மாந்தர்கள் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். சுமார் 25,000 பேருக்கு நியூ ஆர்லியன்ஸ் ‘சூபர்டோம் ‘ [Superdome] விளையாட்டுக் கோபுர மாளிகை தற்காலிய இடவசதி அளித்தது! நியூ ஆர்லியன்ஸ் நகரின் தரைப் பகுதிகளில் 80% பரப்பளவு உச்ச உயரம் 20 அடி நீரில் மூழ்கியது. இல்லங்களை விட்டு வெளியேற முடியாதர் சிலர் வீட்டு நீரிலே மூழ்கி மடிந்தனர். சிலர் மாடியிலும், கூரையிலும், கூரைக் கீழறைகளிலும் [Roof Attics] ஏறித் தம்மைப் பாதுகாத்துக் கொண்டனர். பாமரர் பலர் இல்லங்களில் சிக்கிக் கொண்டு வெளியேற்ற வாகனங்களை அண்ட முடியாது போயிற்று. வெளியே போவோர் காலியாகக் கிடக்கும் வீடுகளில் பலவற்றைக் களவாடிப் போனார். பல பெரிய கடைகளைப் போக்கிரிகள், பொதுநபர்கள் களவு செய்து கொள்ளை அடித்தார். தங்க இடவசதி அளித்த சில இடங்களில் பெண்டிர் பலர் ஆண் போக்கிரிகளால் பலாக்காரம் செய்யப் பட்டனர்!

மின்சாரப் பரிமாற்றம் அறுந்து போனது. தொலைபேசி சாதனங்கள் ஊமையாகி விட்டன. சூபர்டோம் மாளிகையில் மட்டும் 15,000-25,000 பேர் தங்கப் புகுந்தனர். ஆனால் அங்கே உண்ண உணவில்லை! அருந்த நீரில்லை! காயம் பட்டோருக்கும், நோயாளிகளுக்கும் மருந்தில்லை! வற்றிப் போன சுகாதார வசதிகள், கழிப்பறைகள் நிரம்பி, வழிந்து நாற்ற மடைந்தன. பிறகு புதிதாக வருவோருக்கு இடவசதி இல்லாததால், பிற மாநிலங்களை அணுக வேண்டியதாயிற்று. மத்தியக் கூட்டுறவு அரசாங்கம் தாமதமாக உதவ வந்ததால், மக்களுக்கு உதவி செய்யப் பணியாளர்கள் இல்லாமல் பரிதவிப்பு. காயம் பட்டோருக்கும், வயோதிகருக்கும் முதல் உதவி புரிவோர், மருத்துவர் போன்றவர் உதவிகள் செய்ய வசதிகள் இல்லாமல் வேதனைகள். நியூ ஆர்லியன்ஸில் இருந்த நோயாளிகளை முன்னதாக மருத்துவ மனைகளிலிருந்து கடத்தி வரும்போது இடவசதி, நர்ஸ்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், கருவிகள், சாதனக்கள் இல்லாமல் அவர்கள் பட்ட இன்னல்கள். 4200 தேசீயப் பாதுகாப்புப் படையினர் உதவிக்கு வந்தனர்! இராணுவப் படையாளிகள் தாமதமாகவே வரவழைக்கப் பட்டனர். பிறகு ஹெலிகாப்டர்களும், உதவிப் படகுகளும் இல்லங்கள் பலரைக் கட்டாயப் படுத்திக் கடத்திக் கொண்டுவர இராணுப் படையினர் உடன் வந்தனர்.

2000 ஆம் ஆண்டு நியூ ஆர்லியன்ஸ் மக்கள் தொகை எடுப்பில் [Census] மொத்த நபர் எண்ணிக்கை: 484,000. அவர்களில் 136,000 பேர் வெள்ளையர், 326,000 கருப்பர். வெள்ளையர் எண்ணிக்கையில் 7000 ஸ்பானியரும் அடக்கம். நகராட்சி அதிபர் கூற்றுப்படி 80% மாந்தர் முன்னதாகவே வெளியேறி விட்டனர் என்றால், மீதம் 97,000 பேர்கள் தங்கிக் கொண்டனர் என்று எடுத்துக் கொள்ளலாம். தங்கியோர் அனைவரும் கருப்பர் என்று அனுமானித்தால், 136,000 வெள்ளையரும், 229,000 கருப்பரும் ஏற்கனவே வெளியேறித் தப்பிக் கொண்டனர் என்று கூறலாம். ஆதலால் மாநில அரசு செய்த முன் எச்சரிக்கையை நம்பி 80% மாந்தர் வெளியேறிப் பிழைத்துக் கொண்டதை, நகராட்சியின் வெற்றியாகக் கருதலாம்! 35% கருப்பரிடமும், 15% வெள்ளையரிடமும் வாகன வசதிகள் இல்லை! வெளியேறிச் செல்லாத கருப்பர்களே அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டுத் தாமத உதவிகள் பெற்றுச் சிரமம் அடைந்ததாகத் தெரிகிறது!

பெருநகரைப் பெருநரக மாக்கிய ஹரிக்கேன் கேட்ரினா

நியூ ஆர்லியன்ஸ் நகரம் சுமார் 480,000 பேர் வாழ்வதற்குரிய இல்லங்களைக் கொண்டது. ஆனால் அதன் வாணிபத் தொழில் துறைகளுக்கு வந்து போகும் மக்கள் தொகையையும் சேர்த்தால் 1.3 மில்லியனுக்கு மேற்பட்டது என்று யூகிக்கப் படுகிறது. இப்போது ( செப் 7, 2005) அடித்த கேட்ரினாவில் 14,000 பேருக்கு மேலாக இறந்திருக்கலாம் என்று அறியப் படுகிறது. ஆரம்பத்தில் 80% பரப்பாக இருந்து ஒரு வாரம் கழித்து நீர் மட்டம் குறைந்து தற்போது நகரின் 60% பரப்பில் மாசுகள் படிந்த வெள்ளம் சூழ்ந்து, விஷப் பண்டங்கள் கலந்து, பாக்டாரியா பெருகிப் பாதுகாப்புக்குப் மேல் 45,000 மடங்கு கூடி விட்டது என்று அறிவிக்கப் படுகிறது. நீர் வெளியேற்றிப் பம்புகள் நகரின் அசுத்த வெள்ளத்தை நீக்க இன்னும் பல வாரங்கள் ஆகலாம் என்று எஞ்சினியர்கள் கூறுகிறார்கள்.

நியூ ஆர்லியன்ஸ் நகர் முழுவதும் நாசமாகிப் பெரும்பான்மையான நகர மக்கள் வெளியேறி விட்டதால், 400,000 பேர்கள் உழைப்பும், ஊதியமும் இழந்து, மாநில அரசாங்கத்தின் வருமானம் பெருத்த அளவில் சிறுத்து விட்டது. நீர்த் தேக்கங்களை வெளியேற்றி, கழிவு நீர் ஏற்பாடுகளைச் சீராக்கி, நகரத்தைச் சுத்தீகரித்துப் புத்துயிர் உண்டாக்கவும் குடிநீர், மின்சாரம், எரிவாயு, போக்குவரத்து, தகவல், வசதிகளைச் செப்பனிடவும் நிதித்தொகை (50-60) பில்லியன் டாலர் ஆகலாம் என்று தற்போது எதிர்பார்க்கப் படுகிறது. இனிவரும் அடுத்த 10 ஆண்டுகளில் எஞ்சினியர்கள் [Army Corps of Engineers] ஸேலா நீர் தேக்கக் கட்டுப்பாடுத் [Southeast Louisiana Urban Flood Control Unit (SELA)] திட்டத்தில் 430 மில்லியன் டாலர் செலவு செய்து, கரைமதில்களின் உயரம், ஆற்றலை அதிகரிக்கவும், புது பம்பு நிலையங்கள் கட்டவும் நகராட்சியில் வழிகள் வகுக்கப் பட்டுள்ளன. ஆயினும் உயிரில்லாத நியூ ஆர்லியன்ஸ் நகரம், நகர் நடப்பு உள்ளமைப்புகளை [Infrastructure] மீண்டும் உருவாக்கி ஓரளவு இயங்க மூன்று அல்லது ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்.

எதிர்கால ஹரிகேன்களுக்கு எப்போது திட்டம் வகுப்பது ?

கடற்கரைப் பகுதிகளைத் தாக்கும் ஹரிக்கேன்கள், பூமியின் உட்கனல் வெடிப்பில் பூகம்பம், சுனாமிப் பேரலைகள், எரிமலை, மழைநீர் வெள்ளம், மலைச் சரிவுகள் ஆகிய பேராபத்துகளில் ஒன்று, உலகில் எங்காவது நேர்ந்து அடிக்கடி மக்கள் இன்னல்களில் துன்புற்று வருவது அனுதினக் காட்சியாக இருக்கிறது. நியூ ஆர்லியன்ஸ் நகரை முடமாக்கி நரகமாக்க ஹரிக்கேன் கேட்ரினா காத்துக் கொண்டிருந்தது! அவ்விதம் பேராபத்துகள் நிகழ்ந்து கோர விளைவுகள் ஏற்பட வேறு அமேரிக்க நகரங்களும் அந்த வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன! நோவா ஆணையகத்தின் [National Oceanic & Admospheric Administration (NOAA)] காலநிலை நிபுணர் ஜோஸஃப் கோல்டன் அமெரிக்காவின் பிளாரிடாவில் மயாமி, டாம்ப பே, அலபாமாவில் மொபைல், டெக்ஸஸில் ஹூஸ்டன், நியூ யார்க் மாநிலத்தில் நியூ யார்க் நகரம், லாங் ஐலண்டு ஆகிய ஐம்பெரும் தளங்களை ஹரிக்கேன் பேராபத்துத் தளங்களாகக் குறிப்பிடுகின்றார்!

அந்த அபாயப் பகுதிகளில் மட்டும் மக்கள் தொகை 23 மில்லியனுக்கும் மேலாக உள்ளது! அவர்களில் ஐந்தில் ஒரு பாக மாந்தர் [4.5 மில்லியன்] வாழ்வதற்குச் சுகாதார வீடோ, சொந்த வீடோ பிறகு போக்குவரத்துக்குக் காரோ, வேறு வாகனமோ இல்லாத ஏழைகள்! அந்த ஐந்து தளங்கில் ஹரிக்கேன் அடித்தால் என்னவாகும் என்பதை விட, எப்போது தாக்கி நியூ ஆர்லியன்ஸ் போல் இன்னல் நேரும் என்பதை ஆழ்ந்து கருதித் தயாராக இருப்பது அரச வர்க்கத்தினரின் கடமை! பேராபத்து விளைந்தால் பேரளவு மக்கள் கடப்புக்குக் கேட்ரீனா போதித்த பாடங்கள் இனிவரும் பிரச்சனைகளுக்கு அபாய நிதி ஒதுக்கவும், உதவிப் படைகள் அமைக்கவும், இடவசதிகள், நீர் உணவு வகைகள் ஏற்படுத்தவும், போக்குவரத்து வாகனங்கள் தயார் செய்யவும் பயன்படும் என்று அழுத்தமாகச் சொல்லலாம்.

தகவல்:

1. New Orleans Levees No Match for Katrina By: David Crary [AP National Writer (Aug 31, 2005)]

2. Why the Levee Broke By: Will Bunch, Attytood [www.alternet.org/story/24871/] (Sep 1, 2005)

3. New Orleans Levees Patched, Army Starts Pumping Water, [Update: 2 & 6] (Sep 6, 2005)

4. Law Enforcement May Forcibly Remove New Orleans Residents By: Scott Gold & Lianne Hart [www.Newsday.com] [Times Staff Reporters (September 7, 2005)]

5. When the Levee Breaks By: Bill Diskoch, CTV.ca News Writer (Sep 5, 2005)

6. Mayor of New Orleans Orders Forced Evacuations By: CTV.ca News Staff (Sep 7, 2005)

7. Time Magazine Special Report An American Tragedy, (Sep 2, 2005) Picture Courtesy: Time.

8. Considering the Lessons of Hurricane Katrina, An Interview with Timmons Robert By/: Suzanne Seuratten [Oct 10, 2005]

9. Katrina National Geographic, Special Edition [Oct-Dec 2005]

10 News Week Poverty, Race & Katrina Lessons of A National Shame By: Jonathan Alter [Sep 19, 2005]

11 Maclean ‘s The Drowning of New Orleans [Sep 12, 2005]

12 Time Magazine: Sytem Failure [Sep 19, 2005], Hurrycane Katrina, Following the Money [Sep 26, 2005] Are We Making Hurricanes Worsre ? [Oct 3, 2005]

13 The American Thinker, New Orleans Myths: The Numbers Tell A Different Story [Sep 6, 2005]

14 How Would Our City Evaquate ? By: Bernie Beier [www.FortWayne.com (Oct 9, 2005)]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (October 13, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா