நினைவுகளின் தடத்தில் – (37)

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

வெங்கட் சாமிநாதன்


பாட்டியை ரயிலேற்றி விட்டேன் தான். அது எனக்குத் தெரியும். ஆனால் ‘இதோ விடிஞ்சுடும்’ என்று ரெண்டு மணிக்கோ மூணு மணிக்கோ எழுப்பிவிட்டு பாட்டியையும் என்னோடு அனுப்பி வைத்தது அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்படி ஒண்ணும் விடியற நேரம் இல்லை என்று தெரிந்ததும் ரொம்பவும் கவலைப்பட்டிருப்பார்கள். சௌக்கியமா வழியில் பயப்படாமல் கும்பகோணம் நேரத்திற்குப் போய்ச்சேர்ந்தோமா, பாட்டி ரயில் ஏறினாளா என்பது எப்படி அவர்களுக்குத் தெரியவரும்? நான் இனி வெள்ளிக்கிழமை சாயந்திரம் தான் ஊருக்கு வருவேன். அதுவரைக்கும், என்ன நடந்தது என்று எப்படித் தெரிந்து கொள்வது? எவ்வளவு கவலைப் பட்டார்களோ தெரியாது. நான் வாரக் கடைசியில் ஊருக்குப் போனபோது என்னை யாரும் ஏதும் கேட்கவில்லை. எங்கிருந்தும் செய்தி ஏதும் வராதபோது, எல்லாம் நல்லபடியாகத் தான் நடந்திருக்கும் என்று நினைத்து மனம் சமாதானம் அடைந்திருப்பார்கள். பின்னர் கவலையும் மறக்கப்பட்டிருக்கும்.

இந்த மாதிரி அனுபவம், ஆனால் யாரையும் கவலைப் படுத்தாத அனுபவம் நிகழ்ந்தது, மறுபடியும் பாட்டி சம்பந்தப் பட்டது தான். இன்னொன்றும் உண்டு. பாட்டியைத் தேடி அடுத்தடுத்து ஒவ்வொரு கிராமமாக அலைந்தது. எதற்காக என்னை அனுப்பினார்கள், என்ன சொல்லி அனுப்பினார்கள் என்பதெல்லாம் இப்போது மறந்து விட்டது. பாட்டிக்கு உறவினர்கள் கும்பகோணத்திலிருந்து உமையாள்புரம் வரையில், உள்ள ஒவ்வொரு ஊரிலும் இருந்தார்கள். எல்லாம் அடுத்தடுத்து இரண்டு அல்லது மூன்று மைல் தொலைவில் இருந்தன அந்த ஊர்கள் எல்லாம். காலையில் உடையாளூரிலிருந்து கிளம்பினேன். இன்னொரு வழியாக, எல்லாம் வயல்கள் ஊடே வரப்பு வழியாகத் தான், பட்டீஸ்வரம் வழியாகப் போனால் நான்கு மைல் தான் இருக்கும். சுமாமி மலை போய்ச் சேர்ந்து விடலாம். கும்பகோணம் போய் அங்கிருந்தும் போகலாம். அப்படி போனால் ஏழரை அல்லது எட்டு மைல் தூரம் நடக்க வேண்டிவந்துவிடும். சுவாமி மலை தாத்தா உயிருடன் இருந்த வரை பாட்டி இருந்த ஊர். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முந்திய கதை அது. அங்கிருந்து தான் மாமா கும்பகோணம் காலேஜுக்குப் படிக்கப் போய் வந்தார். அதிக தூரம் இல்லை அதிகம் மூன்று மைல் தூரம் தான். நல்ல வண்டிப் பாதை அந்த நாட்களில் இருந்தது. ஆனால் நான் போன போது அங்கு பாட்டிக்கு யார் எந்த உறவினர் இருந்தார்கள் என்பது இப்போது ஞாபகமில்லை. என் அத்தை ஒருத்தி, ஜெயம் அத்தைக்கு மூத்தவள், சுவாமி மலையில் சன்னதித் தெருவில் இருந்தாள். பாட்டி அங்கு போக மாட்டாள். ஆனால் அத்தையிடம் கேட்டால், பாட்டி போயிருக்கக் கூடும் உறவுக்காரர் வீட்டின் அடையாளம் சொல்வாள். அத்தை வீட்டுக்குப் போனேன். “என்னடா, ரொம்ப அபூர்வமா இருக்கே. என்ன விஷயம்? என்று அத்தை ஆச்சரியத்துடன் விசாரித்தாள். அது ஆச்சரியமோ கிண்டலோ, கோபமோ, எதுவாக இருந்தாலும் அது நியாயமானது தான். என்னுடைய நினைவில் அந்த அத்தையின் வீட்டுக்கு இரண்டே இரண்டு தடவை தான் போயிருக்கிறேன். போய் அங்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்ததில்லை. “நிலக்கோட்டையிலேர்ந்து பாட்டி இங்கே வந்திருக்காளான்னு பாக்க வந்தேன்.” என்று பதில் சொன்னேன். “இங்கே என்னத்துக்குடா ஒன் நிலக்கோட்டைப் பாட்டி வரா. இரு. போய் பாத்துட்டு வரச் சொல்றேன்.” என்று சொல்லி தன் பெண்ணை அனுப்பினாள். அவள் கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்தாள். “அங்கே வரலயாம். இங்கே வந்தா உமையாள் புரத்துக்குத் தான் போவாள். அங்கே இருப்பாள்” ன்னு சொல்லச் சொன்னா” என்று செய்தியைச் சொன்னாள். ” சரி அத்தே, நான் உமையாள் புரம் போய் பாக்கறேன்.” என்று சொல்லிக் கிளம்பினேன். “ஏண்டா உடனே கிளம்பிட்டே?” என்று அத்தை கேட்டாலும், இருக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.

சுவாமி மலையிலிருந்து உமையாள் புரம் கிட்டத் தட்ட ஐந்து மைல் தூரம் இருக்கும். நல்ல ரோடு. இரண்டு புறமும் மரங்கள், நெல் வயல்கள். ஜனங்கள் நடமாட்டம் இருந்து கொண்டிருக்கும். சிரமமாக இராது. மனதுக்கு சந்தோஷமாகவே இருக்கும். வெயில் நேரம் தான் என்றாலும், மரங்கள் அடர்ந்த அந்த ரோடில் வெயில் அவ்வளவாகத் தெரியாது. உமையாள் புரம் போய்ச் சேர்ந்த போது மணி 11 1 இருக்கலாம். அங்கு இருந்தது பாட்டியின் ஒன்று விட்ட சகோதரி ஒருத்தி, அவளும் விதவை தான், பாட்டிக்கு மூத்தவள். அவளுடைய ஒரு மகன், மூத்தவர், நாராயணஸ்வாமி என்று பெயர் (ஆனால் ‘அப்பு’ என்று சொல்லித் தான் கூப்பிடுவார்கள்) ஜெம்ஷெட்பூரில் இருந்தார். இன்னொரு மகன் இளையவர், அப்போது அதே சுவாமி மலை ரோடில் அடுத்து இருந்த பாபுராஜபுரத்தில் கணக்குப் பிள்ளையாக இருந்தார். பாட்டி எப்போது நிலக்கோட்டையை விட்டு தஞ்சை பக்கம் வந்தாலும் இந்த பெரிய பாட்டியைப் பார்க்காமல் இருக்க மாட்டாள். பாட்டிக்கு இருந்த ஒரே அன்னியோன்னிய உறவு அந்த ஒண்ணுவிட்ட அக்கா (பெரிய பாட்டி) தான். அவளுடைய பிள்ளைகள் தான். நிலக் கோட்டையில் மாமாவோடு பேச்சு எழுந்தால் இந்த உறவுகளைப் பற்றித் தான் பெரும்பாலும் பேச்சு வரும். நான் போனபோது அந்தப் பாட்டி வீட்டில் இல்லை. யார் வீட்டுக்கோ எதற்கோ போயிருந்தாள். வீட்டில் இருந்தது வெங்கடராமன் என்பவர். அவரும் மாமாவுக்கு ஏதோ ஒன்று விட்ட உறவு. என்ன என்பது எனக்கு சரியாக இப்போது நினைவில் இல்லை. அவர் அம்பாசமுத்திரத்தில் ஒரு மில்லில், ஏ. எ•ப். அண்ட் ஹார்வி மில் என்று நினைக்கிறேன், ஏதோ வேலையில் இருந்தார். பாட்டியும் மாமாவும் பழைய ஊர்க் கதைகள் பேசும் போது இவர் பெயரும் அடிபடும். ஆனால் அதில் ஏதோ ஒரு கசப்பின் தொனி இருக்கும். அவர் தான் எனக்கு பாட்டி பற்றி விவரம் சொன்னார். ” இங்கே இப்போ இல்லியேப்பா. நேத்திக்கே இருட்டறதுக்கு முன்னாலே போகணும்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டா. கும்மோணம் போணும்னு தான் சொல்லிட்டு கிளம்பினா. ஆனா பாபுராஜ புரத்திலயே இறங்கிண்டு, வண்டிக்காரனைத் திருப்பி அனுப்பிச்சுட்டா. நீ பாபுராஜபுரம் குழந்தையாத்திலே போய்ப் பார், அங்கே தான் இருப்பா” என்று சொன்னார். குழந்தை என்று அவர் சொன்னது, பாபுராஜபுரத்தில் கணக்குப் பிள்ளையாக இருக்கும் இளையவரை. ரொம்ப தமாஷான மனிதர். சிரிக்கச் சிரிக்கப் பேசுவார். நாங்கள் எல்லாம் அவரைக் “குழந்தை மாமா” என்று தான் கூப்பிடுவோம்.

பின் என்ன? நடந்தேன் பாபுராஜபுரத்திற்கு. அது ஒன்றும் அதிக தூரம் இல்லை. உமையாள்புரம், பாபுராஜபுரம் எல்லாம் ஒன்றும் பெரிய ஊர்கள் இல்லை. ஒன்றிரண்டு தெருக்களே உள்ள ஊர்கள் அவை. உடையாளூர் போல பிரதான சாலையிலிருந்து உள்ளே வெகு தூரம் நடக்கவேண்டிய அவசியமும் இல்லை. ஊர்களை ஒட்டியே சாலையும். குழந்தை மாமா வீட்டுக்குப் போனேன். மாமி தான் இருந்தாள். மாமா ஏதோ வேலையாக வெளியூர் போயிருக்கிறாராம். பாட்டியைத் தேடி வந்தேன் என்றேன். உமையாள்புரம் போயிருந்தேன். இங்கே வந்திருப்பதாகச் சொன்னார்கள் என்றேன். “ஆமாண்டா பாட்டி நேத்திக்கு வந்தா. ஆனா இன்னிக்குக் காலம்பற காப்பி சாப்பிட்டுட்டு “நான் போறேன். ‘உங்க ரண்டு பேரையும் பாக்கத்தான் வந்தேன் பாத்தாச்சு, கிளம்பறேன்னு’ கும்மோணம் புறப்பட்டுப் போயிட்டாளே. ராத்திரி ரொம்ப நாழி பேசிண்டிருந்தா. காலம்பற தான் மாமா வண்டிக்குச் சொல்லி கும்மோணத்திலே கொண்டு விடச் சொல்லி அனுப்பினா.” என்றாள். எனக்கு ரொம்பவும் ஏமாற்றமா இருந்தது. ரொம்பவும் களைப்பாவும் இருந்தது முகத்தில் தெரிந்தது போலிருக்கு. “உள்ளே வாடா, இந்த வெயில்லே நீ எப்போ கும்மோணம் போறது? எல்லா மெதுவாப் போயிக்கலாம். ஏதாவது சாப்டயா இல்லையா? எப்போ கிளம்பினே. இந்த மாதிரி வெயில்லே அலைஞ்சா உடம்பு என்னத்துக்குடா ஆகும்… என்று சரமாரியா கேள்வி கேட்பதும், நான் பதில் சொல்வதற்கு முன்னால் நான் சொன்னதா தானே யூகித்துக்கொண்டு, தானே அதுக்கு பதிலா இன்னொரு கேள்வி கேட்பதுமா…..” உள்ளே போனேன். “போய் கால அலம்பிண்டு வா. ஒரே புழுதியா இருக்கு. வா வந்து ஊஞ்சல்லே உக்காந்துக்கோ..” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போனாள். எனக்கு அந்த உபசாரமெல்லாம் வேண்டித்தான் இருந்தது. நான் விடிகாலையில் ஊரிலிருந்து புறப்பட்டு ஊர் ஊராக அலைந்த கதை எல்லாம் சொன்னேன். மாமிக்குச் சிரிப்பாவும் இருந்தது. வேதனையாகவும் இருந்தது. ” அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம். என்ன சாப்டறே சொல்லு. சாப்டுட்டு கொஞ்ச நாழி படுத்துக்கோ. அப்பறம் சாயந்திரமா கும்மோணம் போய்க்கலாம்” என்று சொல்லி உள்ளே போனாள். “மோர் சாதமா சாப்டறேன். அது போறும் மாமி, வேறே ஒண்ணும் வேணும்போலே இருக்கலே” என்றேன். உடனே இலை போட்டாள். சாப்பிட்டேன். சாப்பிட்டுவிட்டு திண்ணையில் போய் படுத்துக் கொண்டேன். களைப்பாத் தான் இருந்தது. வெளியில் நல்ல வெயில். மாமி வந்தாள். “ஏதாவது புஸ்தகம் இருந்த கொடுங்களேன்,” என்று கேட்டேன். “புஸ்தகமா? தெரியலையேப்பா, சரி ஏதாவது இருக்கா பாக்கறேன்.” என்று சொல்லி விட்டு உள்ளே போனவள் கொஞ்ச நாழிக்கப்புறம் ஒரு புத்தகத்தைக் கொண்டு வந்து தந்தாள். “இதாம்பா இருக்கு. வேறே ஒண்ணும் இல்லே,” என்றாள். அதைப் பிரித்தால், அது மாமாவுக்கு ரெவென்யூ டிபார்ட்மெண்டிலே கொடுத்த நில வரி சம்பந்தமான ஏதோ ஒன்று. மாமி என் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள். நான் எதுவும் சொன்னால் ஏமாற்றமாக இருக்கும். “சரி மாமி, படிச்சிண்டே தூக்கம் வந்தா ஒரு தூக்கம் போடறேன். வெயில் தாழ கிளம்பிப் போறேன்” என்று சொன்னேன். மாமி உள்ளே போனாள். நான் புத்தகத்தை தலைக்குப் பக்கத்தில் வைத்துவிட்டு தெருவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நல்ல வெயில் காய்ந்து கொண்டிருந்தது. தெருவில் நடமாட்டம் இல்லை.

நாலு மணி வாக்கில் கும்பகோணம் புறப்பட்டிருக்க வேண்டும். டபீர் நடுத்தெருவில் ஒரு வீடு எனக்குத் தெரியும்.. அங்கு தான் பாட்டி போயிருப்பாள். அவர்கள் யார், என்ன உறவு என்பது எனக்குத் தெரியாது. அங்கு ஒரு முறை நான் போயிருக்கிறேன். அந்த வீட்டில் பாட்டியைப் பார்க்கப் போன நினைவு எனக்கு இருக்கிறது. ஆனால் பாபுராஜ புரத்திலிருந்து கிளம்பி என்ன செய்தேன் என்பது நினைவுக்கு வர மறுக்கிறது. ஆனால் என் நினைவில் பதிவாகியிருப்பது, நான் அந்த டபீர் தெரு வீட்டிற்குச் சென்று பார்த்தது ஒரு காலை நேரம். பாட்டி ரயில்வே ஸ்டேஷனுக்குப் போக ஒரு மாட்டு வண்டி பிடித்து வரச் சொன்னாள். நான் மாட்டு வண்டிக்காக அலைந்தேன். ஏன் அலைந்தேன் என்பது தெரியவில்லை. ஏனெனில் வழியில் ஒரு இடத்தில் நின்றுகொண்டிருந்த வண்டியைப் பார்த்துதும் கேட்டேன். “ஸ்டேஷனுக்குப் போகணும் டபீர் தெருவிலேயிருந்து. வரியா” என்று. “டபீர் தெருக் கோடிலேயே வண்டி நிக்குமே, அங்கியே பிடிச்சிருக்கலாக்காமே. இவ்வளவு தூரம் என்னத்துக்கு வந்தே? என்று அவன் சிரித்துக் கொண்டே கேட்டான். “அங்கே வண்டி இல்லாமத்தான் தேடி வந்தேன்” என்று சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கிறது. ஆனால் அது காலை வேளை. பாபுராஜ புரத்திலிருந்து நான் கிளம்பியது சாயந்திரம் நாலு மணிக்கு.

ஆக என்ன நடந்தது என்பது சரிவர நினைவில் இல்லை. ஆனால் அன்று பாட்டியைத் தேடிக்கொண்டு ஒரு ஊர் விட்டு இன்னொரு ஊர் என்று நடந்து அலைந்தது நினைவில் இருக்கிறது. அது எப்போதாவது நினைவுக்கு வரும். கிட்டத்தட்ட ’22 – 24 மைல் அன்று நடந்தோமே!’ என்று அது போன்ற நீண்ட தூர நடை நேரும்போதெல்லாம் மனதில் எண்ணங்கள் ஓடும். 1950-களில் ஹிராகுட்டில் இருந்த போது, சம்பல்பூருக்கு சினிமா பார்க்க நண்பர்களும் சைக்கிளும் ஜமா சேராது போய், தனியாக போக நேர்ந்தால், இரண்டாவது ஆட்டத்திற்குப் பிறகு பஸ் கிடைக்காது. 9 மைல் தூரம் நடந்தே வருவேன். ஹிராகுட் திரும்பும் போது இரவு மணி இரண்டாகியிருக்கும். சில சம்யங்களில் சம்பல்பூரிலேயே ராத்திரி எங்காவது தூங்கிவிட்டு விடிந்ததும் காலையில் எழுந்து ஹிராகுட்டிற்கோ புர்லாவுக்கோ நடப்பேன். காலையில் அலுவலகத்திற்குப் போக வேண்டுமே. தில்லியில் இரண்டு வருஷத்துக்கு ஒரு முறை வரும் உலகத் திரைப்பட விழாவின் போதெல்லாம், அலுவலகத்திற்கு போகமாட்டேன். தினம் நாலு படம் பார்த்தே ஆகவேண்டும். பழைய தில்லி எல்லையில் இருக்கும் டிலைட் சினிமாவில் கடைசி 10 மணி இரவுக் காட்சி படம் பார்த்துவிட்டு அங்கிருந்து கரோல் பாகில் நான் தங்கியிருந்த அறைக்கு நடந்துதான் திரும்ப வேண்டியிருக்கும். ஐந்து அல்லது ஆறு மைல் தூரம். பதினாலு நாட்களும் இந்த மாதிரியான அசுர நடைப் பயணம் நிகழும். இதற்கான பயிற்சியைத் தான் பாட்டி எனக்கு அந்நாட்களில் கொடுத்தாளோ என்னவோ. அது என்னவாக இருந்தாலும், அந்த நினைவுகள் எழும்போதெல்லாம் அந்த நினைவுகளோடு பாட்டியும் வருவாள். அது சுகமாக இருக்கும். அந்த நடைகள் மாத்திரமல்ல, நடையோடு வரும் அந்த நினைவுகளும் சுகமாகத்தான் இருக்கின்றன.

வெங்கட் சாமிநாதன்/25.1.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்