நினைத்தேன்…சொல்கிறேன்…காதலும் கல்யாணமும் பற்றி…

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

PS நரேந்திரன்


அருட்பா, மருட்பா, வஞ்சிப்பா, கலிப்பா

எதுவுமே

எனக்கு வேணாம்ப்பா.

பொறுப்பா, அன்பா

ஒரு

பொண்டாட்டிதான் வேணும்ப்பா.

அவ

கறுப்பா ? சிவப்பா ?

கவலையே இல்லேப்பா.

உடனே

எனக்கொரு

கல்யாணம் பண்ணப்பா.

பத்துப்

பாட்டு

பாடிட்டேன்

பயனில்லை.

எட்டுத் தொகை கேட்டே

இதுவரை

எட்டு வரனை விரட்டிட்டே.

பதினென் கீழ்

கணக்குப் போட்டே

என்னை

பைத்தியமா ஆக்கிட்டே.

சுட்டுப் புடுவேன் உன்னை.

வரும்

சித்திரைக்குள்ளே

சீக்கிரமா ஒரு

பெண்ணைப்

பார்.

— கவிஞர் கல்யாண ‘வீங்கி ‘.

(வெளிநாட்டில் வாழும் தமிழாசிரியர் மகன், தனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கும் நினைவில்லாமல், புத்தகம் அனுப்பியே ‘கழுத்தறுக்கும் ‘ தன் தகப்பனாருக்கு எழுதியது).

*****

வர வர தமிழ்நாட்டு காதல் திருமணங்களின் மேல் எனக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது.

‘இதோடா…வந்துட்டார்டா… ‘ என்போரே, பொறுமை. பொறுமை.

முதலில் என் கருத்தைச் சொல்லி விடுகிறேன். பிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

*****

அப்போது நான் பத்தாவதோ என்னவோ படித்துக் கொண்டிருந்தேன்.

எங்கள் தெருவிலிருந்த, எனக்குத் தெரிந்த பெண்ணொருத்தி, நாலு தெரு தள்ளி இருந்த பையனைக் காதலித்து அவனுடன் ஓடிப் போனாள்.

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை.

ஆனால் எனக்கு ஆச்சரியம் தந்தது என்னவென்றால், இவர்களிருவருக்கும் இடையே இருந்த வேறுபாடு. அவளோ மிகவும் வசதியான வீட்டுப் பெண். பஞ்சணையில் படுத்துறங்கி, பால், பழம் சாப்பிடுபவள். அவனோ, பஞ்சைப் பராரியான ‘ஆங்கிலோ இந்தியன் ‘. இவர்கள் எப்படி ‘கனெக்ட் ‘ ஆனார்கள் என்று எனக்கு ஒரே ஆச்சர்யம். காதலுக்குக் கண்ணில்லை என்பது சரிதான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

ஒரு கிருஷ்ணாங் கொளத்துத் தெருப் பெண்ணை, கொண்டித் தோப்புக்காரன் இப்படி ‘தள்ளிகினு பூட்டானே.. ‘ என்று பயல்களுக்கெல்லாம் ஒரே ஆத்திரம்.

‘அவன வுடக்கூடாது மச்சான் ‘ என்று குதியாய்க் குதித்தார்கள். ‘மாஸ்டர் பிளான் ‘ எல்லாம் போட்டார்கள். அப்புறம் மறந்து போனார்கள்.

இது நடந்து ஒரு நான்கைந்து வருடங்கள் கழித்து, அம்மன் கோவில் தெருவும் வால்டாக்ஸ் ரோடும் சந்திக்கும் இடத்தில், ஒரு இருட்டான மாலை வேளையில் அவளைச் சந்தித்தேன். கையில் ஒரு குழந்தை, கூடவே அவளின் மாமியார்.

சுற்றிலும் இருளாக இருந்ததால், எதையும் என்னால் கணிக்க முடியவில்லை.

சாதாரண குசல விசாரிப்புகளூக்குப் பின், வேறு விஷயம் எதுவும் கேட்கும் முன்னரே, ‘கமான். இட்ஸ் கெட்டிங் லேட் ‘ என்று அவளின் ‘சட்டைக்காரி ‘ மாமியார் அவளை ‘பத்தி ‘க் கொண்டு போய் விட்டாள்.

மீண்டும் சந்திக்க சந்தர்ப்பம் கிட்டவில்லை.

நன்றாகத்தான் இருப்பாள் என்று நினக்கிறேன். இருக்க வேண்டும்.

இது ஒருவகைக் காதல்.

********

என்னை மலைக்க வைத்த இன்னொரு காதல் கதை, நான் வைஷ்ணவாவில் படித்துக் கொண்டிருந்த போது நடந்தது.

இது கொஞ்சம் ‘விவகாரமான ‘ காதல் கதை (பிடிக்காதவர்கள் கண்ணை மூடிக் கொண்டு படிக்கவும்).

எங்கள் நண்பர்களில் ஒருவன், ஒரு பெண்ணைக் காதலித்தான். இது ஒரு பெரிய விஷயமா ?

இல்லைதான். ஆனால், அவன் யாரைக் காதலித்தான் என்பதில்தான் ‘விஷமமே ‘ அடங்கி இருக்கிறது.

யாரைத் தெரியுமா ?

தனக்கு ‘தங்கை ‘ முறை கொண்ட, சொந்த ‘சித்தி ‘யின் மகளை! (தமிழ்நாட்டுக் கலாச்சாரம் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது பாருங்கள்).

ஆரம்பத்தில் எங்களுக்கெல்லாம் அதிர்ச்சியாய் இருந்தாலும், இரண்டு பேரின் தீவிரத்தைப் பார்த்து ‘ஒழிஞ்சு போ ‘ என்று விட்டு விட்டோம். அந்த அளவுக்கு ‘ஈருடல் ஓருயிராய் ‘ இருந்தார்கள். மகாபலிபுரம் எல்லாம் போய் வந்து விட்டார்கள். (எதற்கு மகாபலிபுரம் போவார்கள் என்று விளக்கம் வேண்டுவோர், பேரறிஞர் செ.ப.முன்சாமியை அணுகவும்).

திடாரென்று, இரண்டு பேரும் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாய் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள். இப்படிச் செய்யாதே, முறையில்லை என்று எவ்வளவு சொல்லியும் புண்ணியமில்லை. எதாகிலும் சட்ட ரீதியான சிக்கல் இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக, பிராட்வே பக்கமிருந்த ஒரு லாயர் ஆபிசிற்கு எங்களையும் அழைத்துப் போனான்.

‘சட்ட ரீதியான சிக்கல் எதுவுமில்லை. ஆனால் உங்கள் இரண்டு பேருக்கும் பிறக்கும் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பிரச்சனைகள் வரலாம். மேலும் அவர்கள் உங்களிருவரையும் என்ன முறை வைத்துக் கூப்பிடுவார்கள் ? ‘ – லாயர்.

‘அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை ? ‘ என்று முகத்திலடித்தாற் போலச் சொல்லி கல்யாணத்திற்கும் நாள் குறித்து விட்டான். வட பழனியில் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொள்வதாக ஏற்பாடு.

இது நடந்து கொஞ்ச நாளில் சென்னையை விட்டுப் போய்விட்டேன். அதற்கப்புறம் ஊர் ஊராக, நாடு நாடாக சுற்றிக் கொண்டிருப்பதால், இந்த விவகாரம் எனக்கே ‘சஸ்பென்சாக ‘ இருக்கிறது.

அடுத்த முறை இந்தியா போகும்போது விசாரிக்க வேண்டும் என்று குறித்து வைத்திருக்கிறேன்.

இது எதுவகைக் காதல் ?

********

இப்போது ‘மேட்டருக்கு ‘ வருவோம்.

ஆரம்பத்தில் காதல் ஒரு ‘சுகமான கனவு ‘ மாதிரி இருக்கும். அந்த கனவில் வரும் எல்லாமே அழகாக, ஆனந்தமாக இருக்கும்.

காதலிக்கும் ஆண், பெண் இருபாலரின் குறைகள் மறக்கப்படும். அல்லது மறைக்கப்படும். எதிர்காலம் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல், எல்லாம் ஒரே இன்ப மயம்தான்.

சரி. காதல் வெற்றி பெற்று விட்டது. பெற்றோர்களை சரிக்கட்டி எப்படியோ திருமணமும் நடந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்.

அதற்குப் பிறகுதான் ‘கெட்ட கனவு ‘ ஆரம்பிக்கும்.

‘சாப்ட்வேர் இஞ்சினியர்னு சொன்னீங்க. வெளிநாடு போகப் போறேன்னு சொன்னீங்க…நானும் உண்மைன்னு நம்பினேன். இப்படி வேல, வெட்டி இல்லாம வீட்ல உட்காந்திருக்கீங்களே… ‘

‘ஏண்டா தம்பி…ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணிருக்கே…அதுவும் பத்து பைசா வரதட்சிணை இல்லாம…நான் சொன்ன பொண்ண கட்டியிருந்தா, இருபத்தஞ்சு பவுன் நகையும், ஐம்பதினாயிரம் ரொக்கமும் கெடச்சிருக்குமே…இப்பிடி தலயில மண்ண அள்ளி போட்டுக்கிட்டியே… ‘

‘இன்ப மயம் ‘ மாறி ‘துன்ப மயம் ‘ துவங்கும்.

எல்லாக் காதல் திருமணங்களும் இப்படியே இருக்கும் என்று நான் சொல்ல வரவில்லை. கண்டிப்பாக வெற்றிக் காதல் மணங்களும் இருக்கும். அவர்கள் பல்லாண்டு வாழ்க.

பொதுவாக தமிழ்நாட்டுக் காதலில், காதலைவிட காமமே அதிகம் என்பது என் கருத்து.

சினிமா பார்த்து, சீக்கிரமே காதல் செய்ய, ஒரு பெருங்கூட்டமே பேயாய் அலைந்து கொண்டிருக்கிறது.

இந்த மாதிரி காதலில் ஈடுபடுபவர்கள் அதிகமாக பள்ளி, கல்லூரி மாணவர்களே. பெரும்பாலான தமிழ்நாட்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வயதிற்கேற்ற ‘மன முதிர்ச்சி ‘ (mental maturity) குறைந்தவர்கள் என்பது வெளிப்படை. சினிமாவும், தொலைக்காட்சியும் இன்ன பிற கெட்ட சமாச்சாரங்களும் அவர்களை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே சிந்திக்க வைக்கின்றன. பொது அறிவோ, உலகப் பார்வையோ அவர்களுக்கு மிகவும் குறைவு.

காதல் திருமணங்கள் சாதியை ஒழிக்கும் என்பது எந்த அளவுக்குச் சரி என்று தெரியவில்லை. தமிழ்நாடென்ன, இந்தியா முழுவதும் கண்ணுக்குத் தெரியாத, அறுக்கவே முடியாத சாதிவலை மிகவும் இறுக்கமாகப் பின்னப் பட்டிருக்கிறது. இப்போதைய வெற்றிக் காதல் திருமணங்களும், தங்கள் குழந்தைகள் காலத்தில் சாதி, மத ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ளக் கூடிய சாத்தியக்கூறுகள் மிக அதிகம்.

இதற்கும் அதிகமான, தமிழ்நாட்டிற்கே பிரத்தியோகமான ‘ஊரார் வாய் ‘ அவர்களை சும்மா விட்டு வைக்கப் போவதில்லை. அவர்கள் எங்குபோய் ஒளிந்தாலும், ‘ஸ்கட் மிஸ்சைல் ‘ மாதிரி விரட்டிக் கொண்டு வந்து தாக்கும் வலிமை, தமிழர்களின் தனிச் சிறப்பான ‘நாக்கிற்கு ‘ உண்டு. இந்த காரணத்தினால்தான், பெரும்பாலான பெற்றோர்கள் காதல் திருமணத்தை அங்கீகரிப்பதில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும்.

பெற்றோர்களால் செய்து வைக்கப்படுகின்ற திருமணங்களில் பிரச்சினைகளே இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அதில் இருக்கும் பாதுகாப்பு வளையம், நிச்சயமாக காதல் திருமணங்களுக்கு இல்லை. காதல் திருமணம் செய்தவர்களிடையே பிரச்சினைகள் தோன்றினால், அதைத் தீர்த்து வைக்கும் எண்ணமுடையோர் மிகக்குறைவு ( ‘என் பேச்சக் கேட்காம கல்யாணம் பண்ணிகிட்ட இல்ல. இப்போ அவஸ்தைப் படு ‘). காதலிக்கும் காலத்தில் உதவிய நண்பர்களும், பிரச்சினை என்றால் காணாமல் போய்விடுவார்கள்.

இது சரியா, அது சரியா என்று பட்டி மன்றம் நடத்துவதல்ல என் நோக்கம். தெரிந்தவரை என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே. எழுத ஆரம்பித்த பின் தான் இது ‘எம்மாம் ‘ பெரிய சப்ஜக்ட் என்று புரிந்தது. முடிந்த வரை சுருக்கி இருக்கிறேன். என் பார்வை தவறாகக் கூட இருக்கலாம். சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்வேன்.

காதல் திருமணங்களினால் சாதிக் கொடுமை, வரதட்சிணைக் கொடுமைகள் ஒழியும் சாத்தியம் இருப்பது ஒருபுறம் இருக்கட்டும்..

அதை விடக் கொடுமையான, சொந்தங்களுக்கு உள்ளேயே பெண்ணெடுக்கும் ‘சுழற்சிமுறை ‘த் திருமணங்கள் ஒழியும். அக்காள் மகள், மாமன் மகள் போன்ற நெருங்கிய சொந்தங்களில் கல்யாணம் செய்து கொள்வதால், பிறக்கும் குழந்தைகள் அங்கஹீனர்களாகவோ, மனநிலை பாதிக்கப்பட்டோ, உடல் வளர்ச்சி குறைவாகவோ பிறக்கிறார்கள். மருத்துவ புள்ளி விவரங்கள் காட்டும் உண்மை இது. தமிழ்நாட்டு கிராமப்புறங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் இந்தப் பழக்கம் அதிகமாகவே நடக்கிறது. படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடில்லாமல். சமுதாயச் சிந்தனை மாறினால்தான் இது சரியாகும் என்று தோன்றுகிறது.

******

இதையெல்லாம் சொல்வதால், நான் என்னவோ காதல் திருமணங்களுக்கு எதிரானவன் என்று நினைக்க வேண்டாம்.

திட்டமிட்ட, எதிர்காலச் சிந்தனையுள்ள, கையில் காசுள்ள, மெச்சூர்டான காதல் திருமணங்களுக்கு நான் எப்போதும் ஆதரவாளனே. ஆனால், பெரும்பாலான தமிழ்நாட்டுக் காதல் திருமணங்கள் அந்த வகையானவை இல்லை என்பது என் கருத்து.

இருப்பினும், ‘காம ‘லிக்கும் வயதில் கண்டிப்பாக ‘காம ‘லியுங்கள். அனுபவங்கள்தானே வாழ்க்கை ?.

அப்படியே, மறக்காமல் ‘காண்டமும் ‘ யூஸ் பண்ணுங்கள்.

***

psnarendran@hotmail.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்