நிஜமற்ற நிழல்

This entry is part [part not set] of 31 in the series 20030525_Issue

ஜெயந்தி சங்கர்


ஒவ்வொரு மனிதனுக்கும், தன் முதல்களில் தான் எத்தனை மோகம்! முதல் பள்ளி, முதல் பேனா என்று தொடங்கி, முதல் காதல் , முதல் இரவு என்று முதல் அனுபவங்களில் திளைக்க மனிதமனம் அடையும் நாட்டம் தான் எத்தனை விந்தையானது! அதைவிட, அந்த முதல்களைத் தன் நினைவுப் பொக்கிஷங்களாக ஆக்கிக் கொள்ளத் துடிக்கும் அவனது துடிப்பு மேலும் அல்லவோ ஆச்சரியத்தைத் தருகிறது. இதில் குமணன் மட்டும் விதி விலக்கா என்ன ?!

அன்று குமணனுக்கு ஒரே குதூகலம். பள்ளியில் இருக்கும் ஆயிரத்துக்கும் மேலான மாணவர்களில், அவனை மட்டும் பள்ளி முதல்வர் அழைத்துப் பேசி, நாளிதழ் பேட்டி ஒன்றிற்காகத் தேர்வு செய்துள்ளார் என்றால் ஏன் பெருமையாயிருக்காது ?! போட்டிகள் பலவற்றில் கலந்து பரிசு பெற்றுள்ளான். அப்போதெல்லாம் போட்டி பற்றியும் பரிசுகள் பற்றியும் விவரங்களுடன் சில சமயங்களில் குமணனது புகைப்படமும் வந்ததுண்டு. ஆனால், நாளிதழுக்குப் பேட்டி என்று எடுப்பது இதுவே முதல் முறை. சுபாவமாகவே, பள்ளிப் பொது நிகழ்ச்சிகளென்றால், நிகழ்ச்சியில் மட்டும் அல்லாது, ஏற்பாடுகளிலும் தன் சொந்த வேலைகளையும் மறந்து, போட்டது போட்டபடி போட்டு விட்டுச் சென்று விடுவது குமணனின் கூடப் பிறந்த குணம்.அவனின் எறும்பொத்த சுறுசுறுப்பும் ஆர்வமும் எல்லோரையும் நிச்சயம் கவரவே செய்யும்; முதல்வரும் கவனிக்கத் தவறவில்லை.

பள்ளி இடை வேளையும் வந்தது. பள்ளி வளாகமே மாணவர்களின் ஆரவாரமான கூச்சலால் நிறைந்திருந்தது.யாரிடமாவது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் ஆவலில், அவன் மனம் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்க, தன் ஆப்த நண்பன் வளவனைத் தேடியன அவன் கண்கள். அம்மாவுக்குத் தெரிவிக்கலாம் தான். அதற்கு, மாலை வரை காத்திருக்க வேண்டுமே. அலுவலகத்துக்குத் தொலைபேசியில் அழைப்பதை அவர் என்றும் அவசரமிருந்தால் தவிர, விரும்பமாட்டார். அதை குமணனும் அறிவான். வேலை முடிந்த பின் களைப்புடன் அம்மாவும், எந்த மன நிலையில் இருப்பார்களோ. அப்பாவும் ஊரில் இல்லை. வளவனைக் கண்டதுமே, குமணனின் முகம் தாயைக் கண்ட சேயைப் போல் மலர்ந்தது. அவன் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி !அவன் முகம் அதைக் கண்ணாடியாய் பிரதிபலிக்கிறது.

‘டேய் வளவா,என்ன நடந்தது தெரியுமாடா ?, சொன்னா, நீ நம்ப மாட்ட. தலைமை ஆசிரியர் என்னை கூப்புட்டு என்ன சொன்னாரு தெரியுமா ? ‘

‘ ம்,..ம் , சரி.சரி..அதான் எப்பவும் கூப்புடுவாரேடா. நீயும், பாட்டு டான்ஸ்னு பயிற்சிக்குக் கிளம்பிடுவ. இப்ப டான்ஸா, கிட்டாரா, இல்ல பாட்டா ? இந்த வருஷம் நமக்கு ‘ஓ லெவல் ‘ .ம்….அதாவது அய்யாவுக்கு ஞாபகம் இருக்கா ?.. ‘

‘ஐயோ வளவா, நீயும் அம்மாவ மாதிரி லெக்சர் அடிக்க ஆரம்பிக்காதயேன். இது அதில்ல, வேறடா. நாளைக்கி ஐலண்ட் நாளிதழ்லேர்ந்து நம்ம ஸ்கூலுக்கு வராங்க. சில பேரைப் பேட்டி எடுக்கப் போறாங்களாம். மாணவர்கள்ள நான் நல்லா பேசுவேன்னு தலைமையாசிரியர் என்னைத் தேர்ந்தெடுத்திருக்கறதால, என்னைய முக்கியமா பேட்டி எடுக்கப் போறாங்களாம். ‘

‘ ஐலண்ட் நியூஸ் பேப்பரா ? அது ஆங்கில நாளிதழாச்சே. சரியான மச்சம்டா ஒனக்கு. ஆமா உன் போட்டோல்லாம் வருமா ? . . . . ம்.ம் அது சரி. . .எதைப் பத்திடா கேக்கப் போறாங்களாம் ? ‘

‘டேய், டேய், வரிசையா கேள்வியா அடுக்காதடா. புகைப் படமெல்லாம் வருமான்னு, எனக்கே தெரியாது. ஆனா இது தெரியும். நம்ம ஸ்கூல்ல, ஓய்வு பெற்ற காவலதிகாரி திரு. வோங் டிஸிப்ளின் மாஸ்டரா வந்திருக்காரு இல்ல, அதைப் பத்தி தான் கேட்கப் போறாங்க. ‘

‘இதுல என்னடா இருக்கு கேட்க ? ‘, தீவிரமாக முகத்தை வைத்துக்கொண்டு வளவன் தன் சந்தேகத்தைக் கேட்க,

‘அது வந்துடா, நம்ப மாணவர்களிடைல சண்டை ,சச்சரவு அப்பிடினு இல்லாம, முன்ன இருந்தத விட, இப்ப பள்ளியில ஒழுக்கம் அதிகரிச்சிருக்கா, இந்த முறையால உள்ள நன்மை, தீமைகள் அப்பிடியிப்பிடியின்னு ஏதோ கேப்பாங்க போல. இவ்வளவு தான், பள்ளி முதல்வர் எங்கிட்ட சொன்னாருப்பா. வேற ஏதும் கேப்பாங்களான்னு , இனிமே நாளைக்கி தான் தெரியும். ‘

‘குமணா, இதையெல்லாம் குறைச்சுக்கோடா. கடைசி நிமிஷத்துல படிச்சும் நீ நல்லா செய்வேன்னு எனக்குத் தெரியும். ஆனா, நேரத்தையெல்லாம் இப்பிடியே போக்கினா, உனக்குத் தானே பின்னாடி கஷ்டம். ‘

‘ ஆமாண்டா,.. நிச்சயமா,…. இது தான் கடைசின்னு நெனச்சுக்கயேன். படிக்க நிறைய இருக்குன்னு, எனக்கே ரொம்ப பயமாத் தாண்டா இருக்கு. டேய் வளவா, நாளைக்கி பாடத்தையெல்லாம் எனக்கு நோட்ஸ் எடுத்துக் கொடுடா, ப்ளீஸ். ‘

‘அதுக்கென்னடா கவலப்படாத, நா எப்பயும் போல எடுத்து வைக்கிறேன். ஆனா, இனிமே இதெல்லாம், அதிகம் வேணாம்…. அவ்வளவு தான் நான் சொல்லுவேன். எனக்கு சீக்கிரம் வீட்டுக்குப் போகணும், நா வரேன்டா ‘, பள்ளி மணியடித்து விடவே வகுப்பை நோக்கி விருட்டென நடையைக் கட்டுகிறான் வளவன்.

‘ரொம்ப தேங்க்ஸ்டா வளவா ‘, உரக்கக் கத்திய குமணனுக்கு, தலையைத் திருப்பி கையசைத்து விடை கொடுக்கிறான், வளவன்.

* * * * * * * *

தொடக்கப் பள்ளி முடித்து உயர்நிலைப் பள்ளிக்கு போகும் கூட வளவன் போகும் பள்ளிக்கே போய் விட எண்ணிய குமணனுக்கு மனம் போல் கிடைத்தும் விட்டது.அவன் எடுத்த மதிப்பெண்களுக்கு, இன்னும் நல்ல பள்ளியில், வெகு எளிதில் இடம் கிடைத்திருக்கும். அவன் அப்பள்ளிகளைத் தேர்ந்து எடுக்கவே இல்லையே. வளவன் தேர்ந்தெடுத்த பள்ளிகளைப் போலவே, தானும் தேர்ந்தெடுத்தான். வளவனின் துணையில்லாமல் அவனால் பள்ளி வாழ்க்கையை நினைத்தும் பார்க்க முடிந்ததில்லை. பாலர் பள்ளி முதலே இருவரிடையே அப்படியொரு நட்பு. பசை போட்டு ஒட்டிய நட்பென்று பலர் கேலி கூடச் செய்வதுண்டு.

இத்தனைக்கும், உருவத்திலும் குணத்திலும் இருவரும் இருதுருவங்கள் தான். கருப்பான, ஆனால் களையான முகமும் , ஒல்லியான, நெட்டையான உருவமும் கொண்டவன் குமணன். முகத்தின் துருதுருப்பை உதறவே முடியாமல் பரபரவென்று தவிக்கும் குமணனின் முகம் எல்லோரது பார்வையையும் அவன் பக்கம் திருப்ப வைக்கும். படிப்பிலும் அவன் படுசுட்டி.

சுண்டினால் ரத்தம் தெரிக்கும் என்பார்களே, அந்த நிறத்துடன், பருமனாய் இருப்பதால், குட்டையாய்க் காட்டும் உருவமும், பதறாமல் சிதறாமல் நிதானமாய் எதையும் செய்யும் அமைதியும் வளவனின் குணங்கள்.கஷ்டப்பட்டுப் படித்து தேறுவதற்குள் தவித்துவிடுவான் ,பாவம். அவர்கள் நட்பு மட்டும் ஆழமாய் வலுப்பெற்ற வண்ணம் இருந்தது.

வளவன் மட்டும் இல்லையென்றால், தன் நிலை என்ன என்று நினைக்கும் போதே குமணனுக்கு, மனம் நெகிழ்ந்து விடுகிறது. எல்லாத் தருணங்களிலும் வளவன் குமணனுக்கு உடுக்கை இழந்தவன் கை போலவே உதவுவான். நண்பனின் நினைவுகள் எல்லாம், தன்னைக் கடந்து செல்லும் மாணவியின் கையில் இருந்த அன்றைய ஐலண்ட் பேப்பரில் கண்களைப் பதிக்க நேரும் வரைதான்.

உருவம் வளர்ந்திருந்த போதிலும் மனதளவில்லை அவன் இன்னும் பாலகன் தான் என்பதை இப்படித் தான் குமணன் அடிக்கடி நிரூபிப்பான். உடனே, மனம் மறு நாளைக்கு ஆயத்தமாவதில் லயிக்கிறது. குமணனுக்கு நாட்டம் இல்லாத விஷயம் உலகில் இருக்கவே முடியாது என்று உறுதியாகக் கூறிவிடலாம். எதானாலும் தயார் நிலை தான். மறு நாளைக்கு என்ன கேட்பார்கள், எப்படி பதில் தருவது,…..அடுக்கடுக்காய் சிந்தனைகள்! கட்டுக் கடங்காத அசுரவேகத்தில் அவனது சிந்தனையின் ஓட்டம்!

வீட்டை அடைந்து, சாப்பிட்டும் விட்டான். மனம் மட்டும் தன் கதியில் ஓடியது. என்ன சாப்பிட்டான் என்று குமணனைக் கேட்டால், நிச்சயம் பதில் சொல்லத் திணறுவான். நான் சாப்பிட்டு விட்டேனா என்று கேட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அந்த அளவு, அவன் மனம் அடுத்த நாள் அவனுக்கு ஏற்படப் போகும் புத்தம் புதிய அனுபவத்திலேயே மூழ்கியிருந்தது.

மனக்குதிரைக்கு கடிவாளமிட ஆனானப்பட்ட பெரியவர்களே தவிக்கும் போது, பதினாறு வயது முடியாத குமணன் எம்மாத்திரம் ?! வீட்டுப் பாடத்திலும் மனம் ஓடவில்லை. செய்து கொண்டே, இருக்கையிலிருந்த படியே உறங்கியதை அவன் உணர்த்த போது, அம்மா வீட்டுக் கதவைத் திறக்கும் ஓசை கேட்கிறது.

* * * *

அம்மா, அம்மா,.. நாளைக்கி ஸ்கூல்ல ஐலண்ட் நியூஸ் பேப்பர்லருந்து வராங்க. முக்கியமா என்னை பேட்டி எடுக்கப் போறாங்கம்மா. ‘

‘என்ன விஷயமா ? ‘ கேள்வியின் சுருக்கம் மற்றும் முகத்தின் வாட்டம் எல்லாம் அம்மாவின் களைப்பைக் கூறினாலும், மகன் கூறிய தகவல் அவற்றைச் சற்று மறைக்கவே செய்கிறது. ‘அம்மா உங்களுக்கு காப்பி போடட்டா ? ‘ வழக்கமான கேள்வியையே பதிலாய்த் தொடுக்கிறான் குமணன்.

‘நீ காப்பி குடிப்பீன்னா, எனக்கும் சேர்த்துப் போடு குமணா. ‘ காப்பி கலந்த வண்ணம், அம்மாவின் கேள்விக்கான விடையைப் பெருமிதத்துடன் விவரிக்கிறான்.

கேட்கக் கேட்க அம்மாவின் மகிழ்ச்சி அப்பட்டமாய் முகத்தில் தெரிந்தது. தன் மகிழ்ச்சியை விட, குமணனின் மகிழ்ச்சியே, அம்மாவுக்கு ஆனந்தத்தைக் கொடுக்கிறது.

‘மறக்காம பேப்பர் வாங்கிடு குமணா. அப்பா ஊருலேயிருந்து வந்ததும் பார்ப்பாங்கல்ல. எனக்கு கோர்ஸ்க்கு அனுப்பறாங்க நாளைக்கி. சீட்டுல இருக்க மாட்டேன் ‘, காப்பியைக் குடித்த வண்ணம் அம்மா கூறுவதை குமணன் தலையை ஆட்டியபடியே கேட்கிறான்.

ஒரே பிள்ளையாய் வளர்ந்த போதிலும், குமணனுக்கு தன்னிச்சையாக, பிறர் உதவியில்லாமல் தன் வேலைகளைச் செய்யும் பயிற்சி இருந்தது. அம்மா தன் வேலைக்குக் கொடுத்த முக்கியத்துவம் ஒரு காரணம். அதன் பொருட்டு அவனை வளர்த்த விதமும் காரணமாய் இருந்தது.

குமணன் சாளரத்தின் வழியே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.காலையிலிருந்து அடித்த வெயிலுக்கு ஈடு செய்ய வானமே பொத்துக் கொண்டதைப்போல மழை சிங்கை நகரைச் சொட்டச் சொட்ட நனைத்தபடி பெய்தது. வீதிகளை இயற்கையன்னை துப்புரவாய்க் கழுவி விட்டிருந்தாள். மழையை ரசிக்கும் ஆவலையும் மீறி வீட்டுப்பாடங்களை முடிக்க வேண்டிய கட்டாயம் அவனை அழுத்தியது. வழக்கமாய் அம்மாவிடம் அடிக்கும் அரட்டையை அடித்துவிட்டு, தன் அறையில் தஞ்சம் அடைகிறான் குமணன், வீட்டுப் பாடங்களை முடித்துவிட.

* * * *

* * * *

மறுநாள், தூக்கக் கலக்கத்துடனே தான் குமணன் எழுந்தான். கனவுகள் அவனை ஓய்வு எடுக்க விடவில்லை. உடலில் இருந்த களைப்புத் துளியும் போகாத நிலையில், பள்ளிக்குச் சென்றும் விடுகிறான்.

வகுப்பில் கணக்குப் பாடம் நடக்கும் போது தான், யாரோ வந்து வகுப்பில் தன் பெயர் கூறி அழைத்தார்கள். உடனே, குமணனின் மனதில் அதுவரை உறங்கிக் கொண்டிருந்த பட்டாம்பூச்சிகள் கூட்டமாகப் பறக்கத் தொடங்கின. இனம் புரியாத பரவசம், வயதிற்கே உரிய ஆர்வம் கலந்த கூச்சம். அதுவரை இல்லாத கூச்சம் உள்ளூர அவனுக்குச் சிரிப்பைத் தருகிறது. யோசித்த வண்ணம், பள்ளியின் முகப்பு நோக்கி நடந்தவனின் கண்களில் பள்ளி முதல்வர், வேறு சில ஆசிரியர்கள், திரு வோங் மற்றும் இரண்டு மூன்று புதியவர்கள் தென் பட்டனர். தன்னைக் காட்டி தலைமை ஆசிரியர் ஒருவரிடம் ஏதோ கூறுவது தெரிந்தது. உடனே, அந்தச் சீன ஆடவர்களில் ஒருவர் தன்னை நோக்கி இருகரம் குவித்து, ‘வணக்கம் ‘ என்று கூறியபடி நடந்து வர குமணனுக்கு, சற்று வியப்பு கலந்த மகிழ்ச்சி! பதிலுக்குப் பணிவுடன் சற்று குனிந்த நிலையில் அவனும் கரம் குவித்து வணங்கினான். அவர் தான் ஐலண்ட் நாளிதழின் நிருபர் என்று குமணனுக்குப் பிறகு தான் தெரிய வந்தது. அவருடைய பண்பு அவனைக் கவருகிறது. நிருபர்களுக்கே உதாரணமாய் அவர் இருப்பதாய் குமணனுக்குத் தோன்றியது. தமிழர்கள் கூட அரிதாகக் கடைபிடிக்கும் அழகான பழக்கத்தை ஒரு சீனர் செய்தது பெரும் உவகையைத் தந்தது. இத்தகையோரிடமிருந்தாவது நம் சமூகத்தினர் கற்றுக் கொள்ள வேண்டும்….. சாதாரண பள்ளி மாணவனான தன்னை அவர்கள் மதிக்கும் விதம் கண்டு குமணனின் மனம் பூரித்தது!

அருகில் போய், அறிமுகங்கள் ஆனதும் பேட்டியும் எடுக்கப் பட்டது. மற்ற

மாணவர் சிலரையும் பேட்டி எடுத்தனர். சள சள என்ற பேச்சுச் சத்தங்களுடன், மாணவர் கூட்டம் கலைந்தது. மழை சதி செய்யாததால் பள்ளிப் பூங்காவில் பேட்டி இனிது முடிந்தது. எல்லோர் பேச்சிலும் முகத்திலும் திருப்தி. இனி, அடுத்த வாரம் திங்கள் வரை காத்திருந்து பேப்பர் வாங்குவது தான் அங்கு பேச்சாய் இருந்தது.

மாலையில் அம்மாவிடமும் பேட்டியைப் பற்றியும் மேலும் சீனரான நிருபர் கரம் குவித்து ‘வணக்கம்’ சொன்னது பற்றியும் வெகுவாகவே பிரஸ்தாபித்தான் குமணன். அவரவர் பண்பாட்டைப் பின்பற்றுவதே அரிதான போது மற்ற இனத்தின் கலாச்சாரத்தினை அறிந்து செயல் படுத்துவது பாராட்டத் தக்கதே என்றே அம்மாவும் ஒப்புக் கொண்டார். இன்னும் சொல்லப்போனால் மற்ற இனத்தவரின் பண்பாட்டை அறிந்து நடக்கும் போது அது குறிப்பிட்டுப் பேசக்கூடிய செய்தியாகவே ஆகிறது.

திங்களும், வழக்கம் போல் ஞாயிரைப் பின்தொடர்ந்து வரவே செய்தது. ஆனால், கூடவே குமணனுக்குப் பேரதிச்சியும் கொண்டல்லவோ வந்தது. அந்தத் திங்களை அவன் பெரிதும் ஆவலுடன் எதிர் பார்த்தான். ஆனால், வந்த பின்போ, அது வராமலேயே இருந்திருக்காதா என்று பின்னர் அவன் வாழ் நாளில் வருந்தாத நாளே கிடையாது. எத்தனை ஆவலுடன், திங்கள் பேப்பரை காலையிலேயே வாங்கிக் கொண்டு பள்ளிக்கு ஓடினான்! வளவன் தன் பங்கிற்கு ஒரு பேப்பர், வாகான இடம் தேடி அமர்ந்து, இருவரும் நாளிதழைப் பிரித்துப் பார்த்தபோது ஜீரணிக்கவே முடியாத அந்த புகைப்படம்!

நிரம்பக் காற்றடைத்த பலூனை ஊசி கொண்டு குத்தியது போல குமணின் மனம் சுருங்கி விட்டது.

இடதுபுறம் திரு. வோங்க்! வலது புறம் குமணன்! பார்ப்பவர் மனதை ஈர்க்கப் பளிச்சென்று வண்ணப்படம்!

‘ நான் நினைத்தால் உன்னைக் கைது செய்ய முடியும் தெரியுமா ‘, திரு வோங் கூறுவது போல் ஆங்கிலத்தில், குமணன் கரம் கூப்பிக் கெஞ்சுவது போல், ‘தயவு செய்து விட்டு விடுங்கள் ‘என்ற ஆங்கில வார்த்தைகள்! குமணனின் புத்திச் சாதுர்யம் படத்தையும் எழுதப் பட்ட பகுதியையும் பறபறவென்று ஆராய்கிறது.

ஹூஹூம் ……………..ஒரு இடத்தில் கூட ‘நாடக வடிவம் ‘என்று குறிப்பிடவில்லை. உற்று உற்று நோக்கிக் கண்கள் வலித்தது. அவனைக் கேள்வி கேட்டதோ அவனுடைய பதிலோ, அதன் சாரமோ கூட இல்லை. ஒவ்வொரு வரியையும் ஆராய்ந்து பார்த்ததில் பொதுப் படையாகவே செய்தியைக் கொடுத்திருப்பதாய் குமணன் எண்ணினான்.

‘குமணா, இதென்னடா, இப்பிடிப் போட்டிருக்காங்க. உங்கிட்ட ‘எனாக்டட் ‘ (enacted) னு சொல்லி எடுத்தாங்களா ? ‘ வளவனின் முகம் வருத்ததையும் கவலையையும் மட்டுமே பிரதிபலிக்கிறது.

‘இல்லையேடா, புகைப்படம் எடுத்ததே எனக்குத் தெரியாதே. எடுக்கப் போரதாக் கூட என் கிட்டச் சொல்லலடா. இதை நான் கொஞ்சமும் எதிர் பார்க்கலையேடா ‘,கூறி முடிப்பதற்குள், குமணனுக்கு அழுகையே வந்து கண்கள் இரண்டும் குளமாய் நிறைந்து விட்டது. பல மாணவர்களின் பார்வைகள் குமணனை உறுத்துவது போல் உணர்கிறான்.

உலக் கிண்ணப்போட்டியில் அர்ஜண்டினா முதல் சுற்றிலேயே தோற்றுச் சோர்ந்தது போல ஆனது குமணின் கதை. குமணன் பள்ளியில் ஒரு உதாரண மாணவன் இல்லை. என்றாலும், நிச்சயம் ஒரு சிறு தவறும் செய்யக் கூடியவன் இல்லை. போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றிகள் பல கண்டிருக்கும் அவனுக்குப் பெருத்த அவமானமும் வருத்தமும் அல்லவோ வந்தடைந்தது ! யோசித்துப் பார்த்ததில், தான் பதிலுக்கு வணங்கும் போது புகைப்படக்காரர் எடுத்திருக்கிறார் என்று தீர்மானிக்கிறான். அப்படியிருக்கும் பட்ஷத்தில், இருவரும் முன்பே பேசியல்லவோ வைத்திருக்க கூடும். ஒரு வார்த்தை தன்னிடம் கூறவும் இல்லை. ‘நாடக வடிவம்’ என்றும் நாளிதழில் குறிப்பிடவும் இல்லை.

அவர்களுக்குத் தேவையானது ஒரு புகைப்படம், அதற்குத் தான் ஒரு பலி ஆடு. ………நினைக்க நினைக்க குமணனின் மனம் ஆறவேயில்லை. ஏமாற்றப்பட்டிருக்கிறான், அதுவும் திட்டமிட்டு, ஏமாற்றப் பட்டு பலி ஆடாய் ஆக்கப் பட்டுருக்கிறான்.

‘ குமணா, இப்ப என்ன செய்யலாம், இது தலைமை ஆசிரியருக்குத் தெரியுமாடா ? யாரோட சூழ்ச்சியா இருக்கும்னே தெரியலையேடா,.. டேய் டேய்…..அழறயா ? கலங்காதடா, ஏதோ தப்பு நடந்திருக்கு, எல்லாமே சரியாயிடும்னு தோணுது. தைரியமா இருடா. வகுப்புக்கு போலாமாடா, நேரமாச்சு. ‘ தேற்ற முயல்கிறான் வளவன்.

‘நீ வகுப்புக்குப் போடா. நான் கொஞ்சம் நேரம் பொறுத்து வரேன். ‘

‘உன்னைய எப்பிடிடா தனியா விட்டுட்டு போவேன் ? பரவாயில்ல, நானும் இருக்கேன். போயி தலைமை ஆசிரியரையாவது பார்க்கலாமாடா. ஏதாவது சொல்லுவாரு இல்ல,.ம்………..இப்படியே உட்கார்ந்திருந்தா, எதுவுமே நடக்காது. ‘

தூரத்தில் குமணனின் அம்மா வருவதைப் பார்த்த வளவனுக்கு பெரு நிம்மதி! ‘டேய் குமணா, உங்க அம்மா வராங்கடா. அங்க பாரு, அவங்களும் பேப்பரப் பார்த்துட்டு தான் வராங்கன்னு நினைக்கிறேன். ‘ வேகு வேகு என்று நடந்த படபடப்பும், செய்தி தந்த படபடப்பும் ஒரு சேர, வார்த்தைகளும் படபடப்பாகவே கொட்டுகிறது.

‘குமணா, இது என்னடா இப்படிப் போட்டிருக்காங்க ? உனக்கு இந்த மாதிரி போடப் போரதா சொன்னாங்களா ? எவ்வளவு ஆசையா, எம் ஆர் டா ல பேப்பரப் பிரிச்சுப் படிக்கலாம்னு வாங்கினேன் தெரியுமா ? தெறந்து பார்த்துட்டு, ஆடிப்போயி, அப்பிடியே இறங்கி ஓடி ஓடி வரேன். ‘

‘ எனக்கே, என்ன நடக்குதுனு தெரியலம்மா. இப்ப தான் பாத்துட்டு வளவனோட பேசிட்டிருந்தேன். ‘ தாயின் முகத்தைக் கண்டதும், குமணனுக்கு அடங்கியிருந்த கண்ணீர் அணை திறந்த வெள்ளமாய், சூழலையும் மறந்து கொட கொட என்று கொட்டி விடுகிறது.

‘அழாத குமணா,ம்……..எல்லாரும் பாக்கறாங்க பாரு. வா, நாம… மொதல்ல பள்ளி முதல்வரைப் போயிப் பார்ப்போம். கண்ணைத் தொடச்சிக்கோ. அம்மா தான் வந்துட்டேனே. ஏதோ தப்பு நடந்திருக்கு. என்னன்னு தான் விசாரிப்போமே ‘, மகனின் தோளைத் தட்டி, ஆறுதல் கூறி, கையைப் பிடித்துக் கொண்டு, தலைமை ஆசிரியர் அறையை நோக்கி அம்மா நடக்க , வளவன் சிநேகமாய் தன் நண்பனின் கை அழுத்திவிட்டு லேசாய்ச் சிரித்துத் தலையை ஆட்டிவிட்டுத் தன் வகுப்பை நோக்கி ஓடுகிறான். குமணனின் மனம் போல வானமும் சோவென்று அழுதது.

* * * *

குமணனுக்காகவே காத்திருந்தது போல, தயக்கமோ, நேரமின்மையின் சாயலோ இல்லாமல் உடனே பேச ஆரம்பித்துவிடுகிறார், தலைமை ஆசிரியர். மன்னிப்புத் தொனியில், அவர் தனக்கே தெரியாது என்றும், ஏற்கனவே காலையில் நாளிதழைப் பார்த்ததுமே, இதழ் ஆசிரியரைத் தொடர்பு கொண்டு விட்டார் என்றும் அடுக்குகிறார். அம்மாவின் முகத்தைப் பார்த்துப் பேசக்கூட கூசியது போல் தெரிந்தது. திரு வோங் அவர்களும், சிறிது நேரத்தில் வந்து விட, அவருடன் மாண்டரின் மொழியில், வருத்ததுடன் ஏதோ கூறினார். ஐலண்ட் பேப்பரின் ஆசிரியரின் வருகைக்குக் காத்திருந்தனர் அனைவரும்.

‘மிஸஸ்.பாண்டியன், நீங்க மட்டும் கொஞ்சம் பொறுமையா இருக்கணும். உங்களுக்குப் புரியும்னு நினைக்கிறேன். கோபம், ஆத்திரம் எல்லாம் ஒரு வித பயனையும் தராது. இதையெல்லாம் நாங்களே துளியும் எதிர் பார்க்காததால, நாங்களும் அதிர்ச்சியில தான் இருக்கோம். உங்கள் நிலை எங்களுக்குப் புரியுது. பாதிக்கப்பட்டது, ஒங்க மகன். இருந்தாலும், பொறுமையா இருக்கணும். பேச வேண்டியதை, நிதானமா நீங்க பேசலாம் ‘, முதல்வர் அம்மாவைத் தயார் படுத்தத் தன்னாலானதைச் செய்கிறார். அவர் முகத்தில் ஈயாடவில்லை.

நாளிதழ் ஆசிரியர், ‘இது போல் எத்தனை பார்த்திருக்கிறேன் ‘ என்ற அலட்சியத்தனத்துடன் துளியும் படபடப்பின்றி படு இயல்பாய் அறையினுள் நுழைந்து தன் சட்டையில் இருந்த மழை நீரை தன் இடக்கையால் உதறிக் கொண்டே வலது கையிலிருந்த குடையை மேசையில் வைத்து விட்டு, ‘ ஸ், அப்பா என்ன மழை பெய்யுது. அடிச்சா ஒரே வெயில், இல்லேன்னா இப்பிடி ஒரே மழை, சே சே,.. ‘, என்று அலுத்துக் கொண்டார்.

எல்லோரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு தலமையாசிரியரிடம், ஆங்கிலத்தில், ‘முதலில் உதவியாசிரியரைத் தான் அனுப்புவதாய் இருந்தேன். நீங்கள் சொன்னீர்களேனு தான், நானே என் வேலையை எல்லாம் அப்படியே போட்டுட்டு ஓடி வறேன். சிற்பியை அம்மி செதுக்கக் கூப்பிட்டது போல ஆச்சு ‘, என்று பள்ளி முதல்வரைப் பார்த்துக் கூறி விட்டு, அமர்கிறார்.

நாளிதழைப் பார்த்ததும், அப்போது தான் பிரித்துப் படிப்பது போல் பாவனை செய்து, அவர் பார்த்து அங்கீரிக்காமல் பத்திரிக்கையில் வந்து விட்டது போல், ‘அடடா, இது அந்த புதிதாய் வேலைக்குச் சேர்ந்த பையனோட கவனக் குறைவு. இருக்கட்டும் , இருக்கட்டும் அவனுக்கு இன்னியோட வேலை போச்சு. இந்தக் காலத்துப் பசங்க வேலை கத்துக்கவே ஆசைப்படறதில்ல தெரியுமா. இப்படியெல்லாம் வேலை செஞ்சா எப்படி வைத்துக் கொள்வதாம் ? ‘,என்று தன் பக்கமாகவே பிரச்சனையைத் திசை திருப்ப முயற்சித்துத் தோற்கிறார்.அம்மா இடைமறித்துப் பேசியதை, அவர் எதிர் பார்க்காதது முகத்தில் தெரியவே செய்கிறது.

‘அதெல்லாம் சரி, ஒரு வார்த்தை,….ஒரே ஒரு வார்த்தை நாடக வடிவம்னு

நீங்க போட வேண்டாமா ? அதுவும் கூட, எங்க கிட்ட கேட்டு, அனுமதி வாங்கித் தானே போட முடியும் ? எதுவுமே இல்லாம, எப்பிடி நீங்க செய்யலாம் ? இது ஒண்ணுமே கேக்காம வேணும்னே செஞ்சா மாதிரி தானே இருக்கு. இல்லன்னு மட்டும் மறுக்காதீங்க. பத்திரிக்கை விற்பனையை உயர்த்தணும்னா சூடா செய்தி வெளியிடுவது என்பதெல்லாம் எங்கேயும் நடக்கறது தான். உண்மைச் செய்தியையே பேரு, ஊரு, படம் இதையெல்லாம் போடாம தான் நாசூக்கா எழுதுவாங்க. ஆனா இங்க ஒண்ணுமே நடக்காம,…. உங்களுக்கு செய்தி போட ஒரு புகைப்படம் வேணும்னா, என்ன வேணா செய்வீங்களா ? இது என்ன ஒரு கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்! ……..பத்திரிக்கைத் தர்மம் பத்திரிக்கைத் தர்மம்னு ஒண்ணு இருக்கறதா கேள்வி. ஆனா, உங்களுக்கு அப்பிடி எல்லாம் ஒண்ணும் இல்லையோ ? இங்க பள்ளிக்கூடத்துல, அதுவும் நம்ம சிங்கப்பூரிலா இது மாதிரி ? ‘, அடக்க முடியாமல் கேட்டு விடுகிறார். கோபத்தை அடக்கியும், அறையின் குளிரையும் மீறி முகத்தில் அம்மாவுக்குப் பூத்திருந்த வியர்வை அவருடைய கோபத்தின் உக்கிரகத்தை குமணனுக்கு உணர்த்தியது. அம்மா இத்தனை கோபப் பட்டு அவன் அறிந்ததே இல்லை.

‘இப்ப என்ன ஆச்சினு இவ்வளவு கோபப்படறீங்க ? ‘ , ஒன்றுமே நடக்காதது போல் பேப்பர் எடிட்டர் கேட்கவே, அவருடைய அலட்சியமும் பொருப்பில்லாத பேச்சும், அம்மாவின் அடக்கி வைத்திருந்த கோபத்தை எல்லாம் எரிமலைக் குழம்பாக, வெளிக் கொண்டு வருகிறது. அம்மாவின் நிதானம் மெள்ள மெள்ள நழுவுவதை குமணனே உணர்கிறான். இடையிடையே, அம்மா தன் முகத்தைத் துடைப்பதும், பேசுவதுமாய்,…..

‘ஹ்ம்,.. என்ன……. ஆச்சா ? என் மகனோட பேரு கெட்டா, உங்களுக்கு ஒண்ணுமே இல்ல தான். அவன் ஏதோ பெரிய தப்பு செஞ்சா மாதிரியும், திரு வோங்க் கிட்ட கெஞ்சர மாதிரியும் போட்டுட்டு, ஒண்ணுமே நடக்காதது மாதிரி பேசரீங்களே. புரிஞ்சு பேசரீங்களா, இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா ? ஏன்னா, தூங்கறவங்களத் தான் எழுப்ப முடியும், தூங்கறா மாதிரி பாசாங்கு செய்யறவங்கள எப்படி எழுப்ப முடியும் ? ‘, படபடவென்று, கொளுத்திப் போட்ட பட்டாசாய், அம்மா ஆங்கிலத்தில், சரமாரியாக வெடிக்கிறார்.

குமணனுக்கு அம்மாவின் கோபமும், கோபத்தில் ஆங்கில வார்த்தைகளின்

சிதறலும் புதிதாய் இருக்கவே, வாய் மூடவும் மறந்து வியக்கிறான். அம்மாவின் கோபம், எடிட்டரின் தொனியில் மாற்றத்தை மாயமாய்க் கொண்டு வர, குமணனுக்கு புதிய அனுபவமாய் இருந்தது. தான் எதிர் பார்த்தது தான் என்றாலும் , இவ்வளவு அனுபவங்களைத் தரும் என்று எதிர் பார்க்காததால், ஒரே நாளில் உலகம் தலை கீழாய் ஆனது போல் மனதில் ஒரே குழப்பம்!

* * * *

‘ஏதோ தப்பு நடந்து போச்சு, சாரி லா மிஸஸ் பாண்டியன். உங்களுக்கு இப்ப என்ன செய்யணும் ? ‘

‘எவ்வளவு பொருப்பில்லாத அலட்சியமான பேச்சு ?! ஏதோ தப்புனு சொன்னா, முடிஞ்சுடுச்சா ? குமணனோட எதிர் காலம் இதால பாதிக்கப்படாதுன்னு என்ன நிச்சயம் ? ‘ சொற்போர் தொடர தலைமை ஆசிரியரும் டிசிப்ளின் மாஸ்டரும் பேசி ஓயக் காத்திருக்கிறார்கள்.

‘சின்ன விஷயம்மா, இதப் போயி பெரிசா எடுத்துக்கறீங்களே ? ‘

‘எது சின்ன விஷயம் ? இல்ல,… எது சின்ன விஷயம்னு கேக்கறேன். உங்களுக்கு இது போல ஒரு மகன் இருந்து, அவனுக்கு நடந்திருந்தாத் தான், உங்களுக்கு இது புரியும். உங்களுக்கு ஒரு கலர் போட்டோ வேணும், அதுக்கு என் மகன் தான் மாட்டினானா ? எங்க கெட்ட நேரம், ஒங்களுக்கு என்ன வந்திச்சி ? ‘

‘நான் மனமார மன்னிப்புக்கேட்டுக்கறேன். தம்பி, நீயும் மன்னிச்சுடுப்பா. ‘——-

எடிட்டர் பணிவை வரவழைத்துக் கொள்ள முயற்சி எடுக்க,

‘அது எப்படி முடியும். இது எவ்வளவு பெரிய விஷயம்னு எனக்குத் தெரியும். இது மானப் பிரச்சனை.மான நஷ்ட வழக்கே போட முடியும் தெரியுமா ? தெரிஞ்சவங்க தெரியாதவங்கன்னு ஊரே பாக்கறா மாதிரி கலரா படத்தையும் போட்டுட்டு ஒண்ணுமே நடக்காத மாதிரிப் பேசறீங்களே. நெருப்பில்லாம புகையுமா, நெருப்பில்லாம புகையுமான்னு கேட்டே பையனோட எதிர் காலத்தைக் கெடுத்துடுமே, இந்தச் சமூகம். இந்தப் புகை நெருப்பேயில்லாம வந்ததுனு சமூகத்துக்குத் தெரியுமா ? நாம சமூகத்துக்காகவே வாழ முடியாதுன்னாலும், ஓரளவு அதைச் சார்ந்து தானே வாழவேண்டியிருக்கு ‘, அம்மா விடாமல் வெடிக்க,

‘இருங்கம்மா.ஏதோ, உங்களுக்கு தான் தெரியும்னு பேசாதீங்க. நாளைக்கி பேப்பரிலேயே ‘மன்னிப்பு ‘ எழுதிடறோம். போதுமா ? இதுக்கு ஒத்துக்கிட்டா, சாயங்காலம் போன்ல சொல்லுங்க. எனக்கு நிறைய வேலை இருக்கு. பேசிக் கிட்டே போறீங்க.. .. .. கமான் லா, லீவ் இட் லா, டேக் இட் ஈஸி , ஓகே ? எனக்கு நேரமாவுதில்ல. தயவு செய்து எல்லாருமே தவறுக்கு மன்னிக்கணும், வரேன் ‘, எழுந்து, கிடுகிடுவென்று ஓட்டமும் நடையுமாக வெளியேற, எல்லோரும் பின் தொடர்ந்து பள்ளி முகப்புக்கு வருகின்றனர். பல சந்தர்ப்பங்களைப் பார்த்துப் பக்குவப்பட்டிருப்பார் போலும். சமாளிப்பதில் சூரனாய் இருந்தார். துளியும் அசரவில்லை

முகங்களில் கவலையின் ரேகைகள். தலைமை ஆசிரியருக்குத் தன் பள்ளியின் பெயர் கெட்டுவிடுமோ என்றும் நாளிதழ் ஆசிரியருக்குத் தன் பத்திரிக்கையின் பெயர் பழுதாகுமே என்றும் கவலைகள்! அவரவர்க்கு அவரவர் கவலைகள்!

அம்மாவுக்கு குமணனின் எதிர் காலக் கவலை மட்டுமே!

‘மிஸஸ். பாண்டியன், நான் மனப்பூர்வமா உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன். இதுனால, ஒரு மாற்றமும் வராதுனு எனக்குத் தெரியும். பாதிக்கப் பட்டது ஒங்க மகன். ஆனா, பள்ளியைப் பொறுத்த மட்டும், மாணவர்கள் கிட்ட, நானே அஸெம்பிளி அப்ப சொல்லிடுவேன். பிரச்சனையே இல்லை. இதுல, சீர் செய்ய, நான் என்னால முடிஞ்சதை செய்ய ரெடி. ஆனா, நீங்க பத்திரிக்கையோட சட்ட ரீதியா மோதரதுல, பிரயோசனம் இல்லைன்னு படுது. ஒண்ணு, இழுத்து கிட்டே போகவும் வாய்ப்பிருக்கு, தவிர நீங்க நினைக்கற மாதிரி சுலபமில்லை. குமணனுக்கு நேரம் தான் போகும். இந்த வருடம் முக்கியமான வருடம். இப்பவே படிச்சா தான், ரெண்டு மாசத்துல தேர்வுல நல்லாச் செய்யலாம். பத்திரிக்கையில ‘மன்னிப்பு ‘ கொடுக்க ஒத்துக்கறது தான், விவேகம்னு எனக்குப் படுது. ஆனா, நீங்க வேற முடிவெடுத்தலும், எங்க முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு நிச்சயம் உண்டு .கவலைப்படாதீங்க. யோசியுங்க. வேணும்னா, இன்னிக்கி உங்களோட பேசி முடிவெடுக்க, குமணனையும் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க. இதுல முக்கியமா, குமணனோட கருத்து முக்கியம் ‘, பள்ளி முதல்வர் பொறுமையாக அம்மாவிடம் எடுத்துரைக்கிறார். தலையை ஆட்டி, சம்பிரதாயமாக நன்றி தெரிவிப்பதைத் தவிர, அம்மாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

* * * *

* * * *

அப்பா வெளியூரிலிருந்து வர இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என்பதும் , எடுக்கும் முடிவின் முழுப்பொறுப்பும் தன் கையில் என்பதும் சேர்ந்து மனதில் கடுமையான உளைச்சல். நடந்ததை என்ன செய்தாலும், நடக்காதாய் மாற்ற முடியாதே, தேர்வில் தேரா விட்டாலும் கூட மறுபடியும் எழுதித் தேரவாவது முடியும், இது நடத்தைப் பிரச்சனை. அறியாமல் தவறியிருந்தாலும் பரவாயில்லை, இங்கு அதுவும் இல்லை. ஒன்றுமே நடக்காத போது ஏன் இப்படியெல்லாம் என்று யோசிக்க யோசிக்க குமணனுக்குத் தலை வலி தான் வந்தது. அம்மாவின் மனம் படும் பாட்டை அவரது முகம் சொல்லிற்று. ஒரு புகைப்படம் வேண்டும் என்பதற்காக ஒரு அப்பாவிப் பிள்ளையின் நடத்தையுடன் விளையாடி உள்ளனரே.

வீட்டை நோக்கி தன்னிச்சையாக கால்கள் நடந்தாலும், அம்மாவின் மனம் மட்டும் பல விதமாய்ப் புலம்புகிறது. உடன் நடந்த குமணனுக்கு, தன்னால் அம்மாவுக்கு, அதுவும் அப்பா ஊரில் இல்லாத சமயத்தில் மனவருத்தமும் மன உளைச்சலும் வந்ததே என்று மனம் குமுறுகிறது. மறுபடியும் மழை பெய்து விடுவேன் வானம் மப்பும் மந்தாரமாய் பயமுறுத்திய படியிருந்தது.

‘ அம்மா, இன்னிக்கி ஒரு நாள் லீவு போச்சாம்மா. ரொம்ப சாரிம்மா ‘, வீட்டிற்குள் நுழைந்தவுடன் குமணன் அம்மாவிடம், பரிவுடன் சொல்கிறான்.

‘லீவா இப்ப பிரச்சனை ? அதைப் பத்திக் கவலைப்படாத குமணா. இப்போ நம்ப பிரச்சனையை முழுசா ஆராயணும் முடிவெடுக்கணும். நான் அப்பாவுக்கு ஒரு போன், மாமாவுக்கு ஒரு போன் போட்டு, என்னோட ரூம்ல பேசறேன். அதுக்குள்ள நீயும் யோசி. அதான் முக்கியம். இதெல்லாம் உனக்கும் ஒரு பாடம், தெரியுதா ? அளவுக்கதிகமா ஆர்வத்தையும், ஆசையையும் நீ காட்டப் போக, உன் பேரைத் தெரிஞ்சோ தெரியாமலோ பள்ளி முதல்வர் சொல்லிட்டாரு. இனிமே, இந்த வருஷ ‘ஓ லெவல் ‘ மட்டும் தான் உன் ஞாபகத்துல இருக்கணும். இது உனக்கே தெரியணும். நீ ஒண்ணும் சின்னப்பிள்ளை இல்லையே. ‘

சரிசரி என்று தலையை ஒரு குற்ற உணர்வுடன் ஆட்டிய படி கண்களில் தளும்பிய கண்ணீரை மறைத்த வண்ணம், தன் அறையில் படுக்கையில் மல்லாக்கப் படுக்கிறான். குமணன் அவ்வாறு செய்தால் தீவிர யோசனையில் ஆழ்ந்து இருக்கிறான் என்று அவனை நன்கு அறிந்தோருக்குத் தெரியும். புத்தருக்கு போதிமரம் ,குமணனுக்கோ படுக்கை, அவருக்குப் பத்மாசனம் , இவனுக்கு மல்லாந்து விட்டத்தை வெறித்துப் பார்த்தபடி படுத்தல். உலக அளவில் நடைபெரும் ‘நேட்டொ ‘ க்கூட்டணியின் தீர்மானம் போல, தீவிரமாய் பிரச்சனையின் பலா பலன்களை ஆராய்கிறான்.

ஏற்கனவே, படிக்க நிறைய பாடமும், நேரம் குறைவாகவும் இருக்கிறது. நினைத்துப் பார்த்தால், சட்ட ரீதியாக அணுக வேண்டாம் என்று அவனது சிற்றறிவு முடிவெடுக்கிறது. அம்மாவும், மாமா மற்றும் அப்பாவுடன் பேசிய பின், அதே முடிவைச் சொல்லிவிட, இருவரது முடிவும் ஒத்திருக்க, மேலும் பேசிக் குழம்ப வேண்டியிருக்கவில்லை. அம்மாவுக்கு மட்டும் பத்திரிக்கையை இலேசாக விட்டு விட்டதில் பெரிய வருத்தம். ஆனால், குமணனுக்கு எந்த விதத்திலும் சாதகம் இருப்பத்தாய் தெரியாததால் மேற்கொண்டு பேசாமல் இருந்து விட்டார். குமணனின் அக்கறையே முக்கியமாயிருந்ததால், நல்ல படியாகத் தேர்வுக்குப் படிக்கட்டும் என்று பிரச்சனைக்கு ஒரு முற்றுப் புள்ளியை வைக்கிறார்.

மாலையில் ஐலண்ட் பேப்பரின் ஆசிரியர் அழைக்க ‘மன்னிப்பு ‘ என்று பிரசுரிக்க ஒத்துக் கொண்டு விட்டார் அம்மா. அடுத்த தினம் சிறியதாக ‘மன்னிப்பு ‘ வரவே செய்தது. முன் தினத்தின் வண்ணப்படத்திற்கு இருந்த, கவனம் மன்னிப்பில் இல்லை. வண்ணம் இல்லை. வெகு சிறியதாய் கண்ணுக்குப் புலப் படாதவாறு மூலையில் இருந்தது. முன் தினம் படத்தைப் பார்த்தவர்களில் பத்தில் ஒருவர் கூட, மன்னிப்பைப் படித்திருப்பார்களா சந்தேகமே. என்ன இருந்தாலும் வாசகனுக்கு வண்ணப் படம் கொடுக்கும் பாதிப்பே தனியல்லவா!

அம்மாவுக்குப் பயங்கரக் கடுப்பு. இருந்தும் செய்யக் கூடியது ஒன்றும் இல்லயே புலம்புவதைத் தவிர. ‘மன்னிப்பு ‘ என்ற பதத்தைக் கண்டு பிடித்தவனுக்கு, இரண்டு நாட்கள் விடாமல் தொடர்ந்து அம்மா வீட்டில் மண்டகப்படி நடத்தினார். நாளடைவில் அம்மா, அப்பா இருவருமே தாங்களும் மறந்து குமணனுக்கும் மறக்க உதவினர். வெகு நாட்களுக்கு, குமணனுக்கு பள்ளியில் எல்லோரும் தன்னை உற்று நோக்குவது போலத் தோன்றும் போதெல்லாம், வளவன் தான் தேறுதல் வார்த்தைகள் கூறி, குமணனை சிறிது சிறிதாக மறக்கச் செய்தான். கற்பனையும் பிரமையுமே குமணனை ஆரம்பத்தில் வாட்டியது எனலாம். அதிலிருந்து மெள்ள மெள்ள மீளவே செய்தான். தேர்வுகள் நினைவுகளை முற்றிலும் மறக்கச் செய்து விட்டிருந்தது. * * * *

* * * *

வழக்கம் போல் வளவன் தொழில் நுட்பக்கல்லூரிக்கு சென்ற காரணத்தால் தானும் புகு முக வகுப்பில் சேராமல் தொழில் நுட்பக் கல்லூரியிலேயே சேர்ந்தான் குமணன். புதுச்சுழல் புதுப்பாடங்கள் புதுத் தோழர்கள் என்று ஓரிரு நாட்கள் ஓடின.பாடங்கள் மிகவும் சுவாரஸ்யமாய் அமைந்திருப்பதாய் நண்பர்கள் இருவருமே மகிழ்ந்தனர். பாட சம்பந்தமாய் கலந்துரையாடும் போது, பெண்கள் கூட்டம் ஒன்று வளவன் தனித்து இருக்கும் போது மட்டும் பாடங்களைப் பற்றிப் பேசியது. அவனுடன் குமணன் இருந்தால் விலகியது. முதலில் இதைக் கவனித்த குமணன், வழக்கம் போல் வளவனிடம் கூறினான். வளவனோ நம்ப மறுத்தான். தொடர்ந்து சில நாட்கள் குமணன் சுட்டிக் காட்டியதும், நம்பாமலும் இருக்க முடியவில்லை.

‘இதோ பாருடா, அவங்க தற்செயலா ஒதுங்கிப் போறத நீ பெருசு பண்ணாத. முடிஞ்சு போனதை ஏண்டா மறுபடியும் நினைவு படுத்திக்கறே ? ரொம்ப கற்பனை பண்ணிக்காதடா. தப்பு செஞ்சவங்களே திருந்தி வாழ முடியுது. நீ என்னடா செஞ்சிட்ட ? மறந்துடுடா. கமான்டா குமணா, டோண்ட் இமேஜின் திங்க்ஸ் லா. முக்கியமா, இதப்போயி…சாயந்தரம் உங்கம்மா கிட்ட சொல்லாத, தனக்கு எதிர்காலத்துல மருமகளே கிடைக்க மாட்டாளோன்னு ஒரேயடியா பயப் பட ஆரம்பிச்சுடப் போறாங்க. ‘ உலக மகா நகைச்சுவையைக் கூறிவிட்டது போல், நண்பர்கள் இருவரும் உரக்கச் சிரித்து மகிழ்கின்றனர்.

சிரித்துக்கொண்டே குமணனுக்கு தைரியம் கூறினாலும் வளவனின் மனம் உறுத்தவே செய்கிறது.

இரண்டாம் நாள், நாளிதழைப் படிக்காதோராய் அவர்கள் இருக்கலாம். படம் பார்த்து, தலைப்புச் செய்திகளில் மட்டும் கண்களை மேய விடும் பலரில், இவர்கள் அடங்கலாம். தற்செயலாய் நடப்பதற்கும் நிறைய சாத்தியங்கள் உள்ளன . இது எதுவுமே இல்லாமல் குமணனின் கற்பனையாக மட்டுமே கூட இருக்கலாம்.

நிழல் நிஜமாவது சாத்தியமில்லை!. ஆனால் , இது நிஜமேயில்லாமல் உருவான நிழல்! குமணனை விடாமல் தொடர்கிறதோ ?!

அப்படியேயிருந்தாலும், ‘காலம் ‘ நிச்சயம் தன் நண்பன் குமணனுக்குச் சாதகமான பதிலைச் சொல்லும் என்ற நம்பிக்கை மட்டும் வளவனுக்குச் சிறிதும் குறையவில்லை. நண்பனின் நலனில் அவன் கொண்ட அக்கறை, அவனைச் சிந்திக்க வைக்கிறது.

( முற்றும்)

ஜெயந்தி சங்கர்

sankari01sg@yahoo.com

Series Navigation