நாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் ?

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அண்மையில் ‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ‘ பத்திரிகையில் நாஸாவின் செயற்கை கோள் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்களில் இலங்கைக்கும் பாரதத்திற்கும் இடையில் ஒரு ‘பாலம் ‘ இருப்பதை கண்டு பிடித்துள்ளதாகவும் அது 1,750,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்றும் இது இராமாயணத்தின் திரேதா யுக காலத்துடன் ஒத்து போவதாகவும் கூறியது. பொதுவாக இவ்வாறு நம் நம்பிக்கைகளுக்கு வலுவூட்டும் அறிவியல் ‘கண்டுபிடிப்புகள் ‘ உடனடியாக காட்டுத்தீ போல பரவி விடுகின்றன. இன்று இத்தகைய காட்டூத்தீ பரவலுக்கு மூல காரணமாகவும் பரவும் ஊடகமாகவும் இணையம் இருந்து வருகிறது.

‘தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸின் ‘ செய்தி எங்கிருந்து பெறப்பட்டதென்பதை மிக சரியாக கூறமுடியாவிட்டாலும் நுறெ¢றுக்கு தொண்ணுெறு சதவிகிதம் இணையத்திலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதே தன்மையுள்ள ஒரு செய்தி விவாதத்திற்காக http://www.indolink.com/Religion/r091702ெ130924.php என்னும் இந்திய தர்மங்களுக்கான இணைய தள விவாத களத்தில் கிடைக்கிறது. இச்செய்தியின் தன்மை பெரும்பாலும் அறைகுறையாக இந்திய கலாச்சார அறிவு கொண்ட ஏதோ மேற்கத்திய மூளையின் விளைவே என எண்ண வைக்கிறது.உதாரணமாக, ‘இப்பாலத்தின் வளைவும் காலமும் இது மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்பதை காட்டுகிறது ‘ என்கிறது இச்செய்தி. எப்போதிலிருந்து ஒரு புகைப்படத் தோற்றத்திலிருந்து ஒரு நிலத்தின் மேல் பகுதியின் காலத்தை நிர்ணயம் செய்யும் தொழில் நுட்பத்தை நாசா உருவாக்கியது ? பின்னர் ‘பாலத்தின் ‘ காலத்தை 1.750,000 ஆண்டுகள் எனக் கூறும் இச்செய்தி, இக்காலம் குறித்த ‘தகவல் ‘ இந்த இடத்தில் நிலவி வரும் ‘மர்மமான புராணக் கதையான இராமாயணம் ‘ ( ‘mysterious legend ‘) நிகழ்ந்த காலகட்டமான திரேதாயுக காலத்திற்கு ஒத்திருப்பதாக கூறுகிறது. என்றிலிருந்து இராமாயணம் ‘மர்மமான புராணக் கதை ‘யாயிற்று ? தெளிவாகவே இது ஒரு எரிக் வான் டானிக்கன் தனமான நிலை பிறழ்ந்த மேற்கத்திய மூளையில் உதித்த மோசடி வேலை.

நாசா புகைப்படத் தொகுப்பு அட்டவணையை http://images.jsc.nasa.gov/iams/photos/2002/10/earth/STS006/lowres/ என்னும் இணைய முகவரியில் காணலாம். ஆடம்ஸ் பிரிட்ஜ் என காலனியாளர்களாலும், ‘இராமனின் பாலம் ‘ என நம் நாட்டவராலும் கூறப்படும் பவள படிம தீவுக் கூட்டங்களின் அழகிய புகைப்படங்கள் இங்கு உள்ளன. திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல ‘ஸ்ரீ ராமர் பாத ‘ சிறு கோவில்களை காணலாம். இவை எல்லாமே எவ்வளவு அழகாக ஒரு காவியம் நம் தேசத்தின் மக்களின் உணர்வுகளோடும் நம் தேச மண்ணிலும் இரண்டற கலந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. ஆனால் நாசா புகைப்படத்தை ‘1,750,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கான ஆதாரமாக காணுவது ‘ அப்புகைப்படத்தின் அழகையும் இராம காதை நம்முள் இரண்டற கலந்தியங்கும் தளத்தையும் கொச்சைபடுத்துவதாகும்.

துரதிஷ்ட வசமாக இச் ‘செய்தி ‘யை இந்திய ஊடகங்கள் கேள்வியேதுமின்றி ஏற்றதும் மற்றும் சில மின் அஞ்சல் விவாத மற்றும் உரையாடல் குழுக்களில் இராமயணமே நாசாவால் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது போன்ற கருத்துகள் பரவியதும் நாம் எந்த அளவு தாழ்வு மனப்பான்மையில் மூழ்கியிருக்கிறோம் என்பதனை காட்டுகிறது. இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகளின் வரலாற்றடிப்படை குறித்து பொதுவாக உண்மையாகவே இருக்க முடியும் என்பதே பல வரலாற்றறிஞர்களின் முடிவு. வேத காலத்திற்கு சற்று பின்னே இராமயணம் இயற்றப் பட்டிருக்க வேண்டும். வேத தொகுப்பிற்கு சற்று (சில நூற்றாண்டுகள்) பின்னாக இராமகாதை இயற்றலுக்கு சற்று முன்னதாக இராம காதையின் உள்ளார்ந்த நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டும்.

மாக்ஸ் முல்லர் தன் ஆராய்ச்சி மூலம் முன்வைக்கும் வேத காலம் அவர் ‘இந்தியர்களின் தோற்றம் குறித்த நம்பத்தகுந்த வரலாற்று ஆதாரங்களை அளித்த ‘தாக கூறிய அபே துபாஸின் இந்தியாவின் தொல் குடியேற்ற நம்பிக்கையின் அடிப்படையிலான கால ஓட்ட அளவுகோல்:

இன்றைய ஆரிய படை யெடுப்பு/இடப்பெயர்வு கோட்பாடுகளின் கால ஓட்ட அளவுகோல் (பொதுவாக அகழ்வாராய்ச்சியாளர்களால் மறுக்கப்பட்டுவிட்ட ஆனால் மொழியியலாளர்களால் (பப்போலா,மகாதேவன்,விட்ஸல்) முன்வைக்கப்படுகிற கால ஓட்ட அளவுகோல்.

பல அகழ்வாராய்வு அடிப்படையிலும் (பி.பி.லால், எஸ்.ஆர்.ராவ்,பிஷ்ட்,ஜிம் ஷாஃப்பர் ஆகியோரால்)மற்றும் வேதங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரத இலக்கியங்களில் கூறப்படும் வானவியல் தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும் (சித்தார்த், ஜெக்கோபி ஆகியோரால்) முன்வைக்கப்படுகிற கால ஓட்ட அளவுகோல்.

கி.மு. 4004 (அக்டோபர் 23)

மனித தோற்றம்

கி.மு. 4000

குதிரைகள் மத்திய ஆசியாவில் அடக்கி பயன்படுத்தப் படுகின்றன

கி.மு 4500: 4000

வேத தொகுப்பு

கி.மு. 2400:2300

நோவா சந்தித்த பெரு ஊழி வெள்ளம் மற்றும் மத்திய ஆசியாவில் ஊழியில் பிழைத்த மனித இனம்

கி.மு. 3000: 2000

குதிரை மற்றும் இரதங்களுடன் ஆரிய படை யெடுப்பு/இடப் பெயர்வு

கி.மு.3700 :3600

இராமாயண நிகழ்வுகள்

கி.மு. 2000 :1500

நோவாவின் ஒரு சந்ததியினர் இந்தியாவில் குடியேற்றம்

கி.மு. 1500:1000

வேதங்கள் இயற்றப்பட்டு தொகுக்கப்படுகின்றன

கி.மு.3500 :3000

மகாபாரத காலம், துவாரகையின் எழுச்சியும் வீழ்ச்சியும்

கி.மு. 1500 :1000

வேதங்கள் இயற்றப்பட்டு தொகுக்கப்படுகின்றன

கி.மு. 800 : 300

இராம காதை – ஆரிய படையெடுப்பு தெற்கில் பரவியதன் மிகைப்படுத்தப் பட்ட காவியம் (தப்பார்)

கி.மு. 800 : 300

இராம காதை – ஆரிய படையெடுப்பு தெற்கில் பரவியதன் மிகைப்படுத்தப் பட்ட காவியம்

தெளிவாகவே இன்றைய ஆரிய படையெடுப்பு/இடப் பெயர்வு கோட்பாட்டின் வேர்களை நாம் விவிலிய கால ஓட்ட அள்வுகோலில் காணலாம். இக்கால ஓட்ட அளவு கோல்தான் இன்றும் நாம் வரலாற்று நூல்களின் மூலம் நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஒரு முழு தலைமுறையையும் இவ்வரலாற்றின் அடிப்படையிலெயே வளர்த்தாயிற்று. தன் பண்பாட்டு உண்மைக்கும் தன் வகுப்பறை ‘உண்மைக்குமான ‘ பிளவின் விளைவாக எந்த மடத்தனத்தையும் பற்ற இந்திய மனம் தயாராகிவிட்டது.

மற்றும் அறிவியல் துறைகளின் இணைந்தியங்கும் தன்மையற்ற தன்மையும் ஒரு காரணம். வரலாற்று துறையினருக்கு பரிணாம அறிவியலின் சிறு துளி அறிவும் தேவைப்படாது. பரிணாம அறிவியலோ விலங்கியல் மற்றும் உயிரியலின் அடிப்படையாக அல்லாமல் தேர்வின் முன் கடைசி நேர மாரடிக்கும் கூத்து.எனவே விவிலிய சட்டகத்திற்குட்பட்ட ஒரு மொழியியல் கொள்கையின் அடிப்படையில் அகழ்வாராய்வின் முடிவுகளை புறக்கணித்து ஒரு போலி அறிவியல் இனவாத கோட்பாடு ஏற்கப்பட்ட அறிவியல் உண்மையாக இங்கு கோலோச்ச முடிகிறது. இக்கோட்பாட்டின் அரசியல் லாபகர கணக்குகளும் இதன் கேள்வியற்ற ஏற்புக்கு மற்றொரு காரணம். இந்த சீரழிந்த தன்மையின் கவலைப்படத்தக்க எதிர் விளைவே எரிக் வான் டானிக்கன் தனமான மோசடி வேலைக்கு கிடைக்கும் அமோக வரவேற்பு.

இயற்கை உருவாக்கமான பாலத்தன்மை கொண்ட பவளத்தீவுதொடர்களை ‘பாலமா ‘க்கி நாஸா மூலம் இராமாயணத்திற்கு அறிவியல் சான்றிதழ் வாங்க முற்படுவது மிகத் தவறானது. இத்தகைய தன்மைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். தொடக்க காலம் முதலே புராணங்களை நேரடி உண்மையென நம்பும் போக்கை நம் ஆன்மீக அருளாளர்கள் கண்டித்து வந்துள்ளனர். இராம காதை இதிகாசமெனினும் அதன் புராண ,கவித்துவ மற்றும் அகவய கூறுகளை வரலாற்று உண்மைகளிலிருந்து பிரித்தறிவது அவசியம். இம்முறையில் ‘சீதாயாம் சரிதம் மகத் ‘ என வால்மீகி மகரிஷியால் அழைக்கப்பட்ட காவியமான இராமாயாணம் நம் ஆன்மீக மற்றும் சமுதாய உயர்வுக்கான பொக்கிஷமாகக்கூடும். மாறாக 1,750,000 வருடங்களுக்கு முன் வெறும் கற்கால கருவிகளை பயன்படுத்திய நம் குரங்குமொனுடவின தொல் மூதாதைகளை இராமராக மாற்றும் வக்கிரம் தேவையற்றது. ‘முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள் ‘

Series Navigation