நாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி


முன்னுரை

இரங்கற்பா பாடப்படும்பொழுதெல்லாம் உயிர்த்தெழுவது நாவலுக்கு வழக்கமாகிவிட்டது. உலக அளவில் இல்லை யென்றாலும்கூட, இந்திய அளவில் நாவலுக்கு ஏறுமுகம்தான். இன்று இந்திய – ஆங்கில நாவலின் காலம் என்றுகூடச் சொல்லலாம். நாளும் நாவல்கள் வெளிவந்தவண்ணமாய் உள்ளன. மதிப்புரைகளுக்கும் பரிசுகளுக்கும் குறைவில்லை. இந்திய நாவல் என்ற கருத்தாக்கம், இந்தியக் கதைசொல் மரபுக்கும் மேலைக் கதைசொல் மரபுக்குமான ஒப்புமை, நவீனக் கதையாடல் என்பன பற்றிய சீரிய விவாதங்களும் மிகுந்துள்ளன. இந்தியாவின் தொடக்க கால நாவல்கள் பற்றிய அக்கறையும் மிகுந்துள்ளது. இந்திய நாவல் மரபைப் பற்றிய முக்கியமான கருதுகோள்களைப் பண்பாட்டுப் பொருண்மை வாத நோக்கிலிருந்து முன்வைத்த பேராசிரியர் மீனாட்சி முக்கர்ஜி, சாகித்திய அக்காதெமியின் ஆதரவில் ஒழுங்கு செய்த ‘தொடக்க கால இந்திய நாவல்கள்’ கருத்தரங்கின் கட்டுரைகள் அண்மையில் நூல் வடிவம் பெற்றுள்ளன. இதனை எழுதுகின்ற வேளையில், இதே பொருள் பற்றி ஒரு நூலை அசோகமித்திரன் அண்மையில் வெளியிட்டுள்ளதாக அறிகிறேன்.

சிறுகதைக்கு மிக மூத்தது நாவல். காலனியச் சூழலில் இந்நவீன இலக்கிய வடிவங்களை இறக்குமதி செய்த தமிழ்ச் சமூகத்திலும், சிறுகதைக்கு இரண்டு தலைமுறைக்கு முன்பே னும் நாவல் வந்துவிட்டது. ஆனால், நாவலைவிடச் சிறுகதை யில்தான் தமிழின் சாதனை அதிகம் என்று தேர்ந்த திறனாய் வாளர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், சிறுகதையைவிட நாவலைப் பற்றியே ஒப்பீட்டளவில் அதிக ஆய்வுகள் தமிழில் வெளிவந்துள்ளன.

கி. வா. ஷகந்நாதனின் தமிழ் நாவல் தோற்றமும் வளர்ச்சி யும் ஒரு முதல் முயற்சி. ஏராளமான தகவல்களோடு எழுதப் பட்ட சிட்டி – சிவபாதசுந்தரத்தின் தமிழ் நாவல்: நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும் இன்றளவும் மிகுந்த கவனத்திற்குரியது. இன்று கிடைப்பதற்கரியதான பல நாவல்கள் பற்றிய செய்திகள் அதில் உண்டு. ஆனால், பகுப்பாய்வு என்று பார்க்கும்பொழுது க. கைலாசபதியின் தமிழ் நாவல் இலக்கியம் முன்னிற்கின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சியோடு உருப்பெறும் தனிமனித வாதத்தின் பின்புலத்தில் தமிழ் நாவலைக் கைலாசபதி பார்க் கிறார். லூகாச், ரால்ஃப் பாக்ஸ், ஆர்னால்டு கெட்டில், அயன் வாட் ஆகிய மார்க்சிய விமரிசகர்களின் ஆய்வு முறைகளையும் முடிவுகளையும் கருத்தில் கொண்டு, ஒரு தெளிவான வாதக் கட்டுக்கோப்புக்குள், அவருக்கே உரியதொரு சரளமான நடையில் கைலாசபதி எழுதுகிறார். அவர் நூலில், தமிழ் நாவ லின் தோற்றம் பற்றிய முற்பகுதி வலுவானது. கைலாசபதியின் நூலைப் பற்றி வெங்கட் சாமிநாதனின் நிதானமில்லாத விமரிசனத்திற்கு எம். ஏ. நுஃமான் எழுதிய மறுப்புரை, கைலாசபதி முன்வைக்கும் வாதத்தின் பலம், பலவீனம் இரண்டையுமே சீராக மதிப்பிடுகின்றது எனலாம்.

தமிழ் நாவல் பற்றிய முக்கியமான அவதானிப்புகளைக் க.நா.சு. செய்திருக்கிறார். இலக்கிய அனுபவம், தரம் என்பதே அவருக்கு முக்கியமாக இருந்திருக்கின்றன. அங்குமிங்குமாக அவர் எழுதிய கட்டுரைகளைத் தவிர, முதல் ஐந்து தமிழ் நாவல்கள், நாவல் கலை ஆகிய நூல்களும் வெளிவந்திருக் கின்றன. இத்துறையில் ஆழமான படிப்புள்ளவர் என்பது முதற்பார்வையிலேயே தெரிந்தாலும், அவருடைய அவதா னிப்புகள் தொடக்க நிலை வாசகரையே இலக்காகக் கொண் டுள்ளன. மேலும், க.நா.சு. எந்தவொரு கருதுகோளையும் முன்வைக்கவில்லை.

ஒரு படைப்பாளியின் வாழ்க்கை தரிசனத்தின் வெளிப் பாடாக நாவலைப் பார்க்கிறார் ஷெயமோகன். இதன் அடிப் படையில் ஒரு பருந்துப் பார்வையாகத் தமிழ் நாவல்களை அவர் மதிப்பிட்டிருக்கிறார்.

தமிழ் இலக்கிய உலகத்தில் உருவம், உள்ளடக்கம் என்ற இருமை பற்றியதாக விவாதங்கள் அமைந்திருந்ததையும் மறந்துவிடுவதற்கில்லை. பின்நவீனத்துவத் திருப்பத்திற்குப் பிறகு, கதையாடல் முறை பற்றி கவனம் திரும்பியிருக்கிறது. கதையாடல் பற்றிய தன்னுணர்வு மிகுந்த பிரதிகள் பற்றிய அக்கறை எழுந்துள்ளது; யதார்த்தவாத நாவலின் மரணமும் பறைசாற்றப்பட்டுள்ளது.

தமிழ் நாவல் பற்றிய பார்வைகளின் முக்கியப் போக்குகள் இவையென்று சொல்லலாம். தொடக்க கால நாவல்கள் பற்றிய விவாதத்தைச் சற்றேனும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சமூகப் பண்பாட்டிலும் உள்ள அசைவியக்கங் களுக்கு ஏற்ப, அதற்குள் தொழிற்படும் கலை வடிவங்களுக்குத் தனித்த வரலாறு இருக்கும் என்ற துணிபு இந்நூலில் தொக்கி நிற்கிறது. அவ்வாறே நாவல் தமிழ்ச் சமூகத்தில் நிலைபேற டைந்ததை விரிவான தகவல்களின் அடிப்படையில் நிறுவ முயன்றுள்ளேன்.

பல சமயங்களில் தொடக்க கால நாவல்கள் பற்றிய ஆய்வு, எது முதல் நாவல் என்பது பற்றிய மயிர்பிளக்கும் வாதமாக அமைந்துவிடுகின்றது. நாவல் என்ற கலைவடிவத்தைச் சமூக அசைவியக்கத்தின் சூழலில் வைத்தே புரிந்துகொள்ள முடியும். இதுவா, அதுவா, எது முதல் தமிழ் நாவல் என்ற வாதம் வரையறுத்த பயனே உடையது. ஆதியூர் அவதானி சரிதம் (1875) என்ற செய்யுளில் எழுதப்பட்ட படைப்பே முதல் தமிழ் நாவல் என்று சிட்டி – சிவபாதசுந்தரம் வாதிட்டுள்ளனர். கவிதை யில் நாவல் அமையவே முடியாது என்பதன்று நம் வாதம். (விக்ரம் சேத் எழுதிய ‘கோல்டன் கேட்’ என்ற கவிதை நாவலை முதல் உதாரணமாகச் சிட்டி – சிவபாதசுந்தரம் கூறு வதும் சரியில்லை. அதற்கு ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பே ருஷ்யப் பெருங்கவிஞர் அலெக்சாந்தர் பூஷ்கின் ‘யூஜினி ஒனிஜின்’ என்ற நாவலைப் பன்னான்கடி சானட்டுகளில் எழுதி விட்டார்.) பொதுநிலையிலிருந்தே சிறப்பு நிலைக்குச் செல்ல முடியும். ‘மரபுக்குள் புரட்சி’ (revolt within convention) என்ற அடிப்படையில் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். செய்யுளில் கவிதை எழுதப்பட்டு, அது பெரு வழக்கமான பிறகுதானே வசனத்தில் கவிதை தோன்ற முடியும்; தோன்றியது. (வெஜிட பிள் பிரியாணி, தக்காளி ஆம்லெட் என்பது போல ஒரு புது வழக்காறே செய்யுளில் நாவல் என்பதும்.) அதைப் போலவே உரைநடையில் நாவல் எழுதப்பெற்று பரவலாக வழங்கிய பின்பே செய்யுளில் நாவல் எழ முடியும். முதல் நாவலே அவ் வாறானதாக இருக்க இயலாது. மேலும், சிட்டி – சிவபாதசுந் தரத்தின் தர்க்கப்படி பார்த்தால், நம் நாட்டார் கதைப் பாடல் களையும், அம்மானைகளையும் நாவல்களாகவே கருத வேண்டியிருக்கும்.

எனவே, எது முதல் நாவல் என்பது போன்ற விவாதங்களி லிருந்து விலகி, விரிந்த சூழலில் வைத்தே நாவலின் தோற்றத் தையும், நிலைபேற்றையும் அணுக வேண்டும் என்ற முறையில் இச்சிறு நூல் அமைந்துள்ளது.

தமிழ் நாவலின் நிலைபேற்றை அறிய, தொடக்க கால நாவல்கள் எழுதப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற் பகுதியில் தொடங்காமல், நாவல் என்ற வடிவம் பற்றிய கடுமை யான விவாதங்கள் வெளிப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே இந்நூலின் கவனம் குவிமையம் கொண் டுள்ளது. 1920களிலும் ’30களிலும் நாவல்களின் பெருக்கத் தோடு நடுத்தர வர்க்க அறிவாளர்களிடையே கடுமையான விவாதங்கள் எழுந்தன. இவ்விவாதங்களில் நாவலை முகாந்திர மாகக் கொண்டு, காலனியச் சூழலில் நவீனமாகிவந்த தமிழ்ச் சமூகம் பற்றிய முக்கியமான பிரச்சனைகள் விவாதிக்கப் பட்டன. இந்த விவாதங்களின் ஊடேதான் நாவல் காலூன்றி யது என்று இந்நூல் துணிகின்றது. பத்தொன்பதாம் நூற்றாண் டின் கடைப்பகுதியில் எழுதப்பட்ட நாவல்கள் தொடக்க கால நாவல்கள் என்றும், அவையே நாவலுக்குச் சிறந்த உதாரணங் கள் என்றும், சொல்லப்போனால் புதிய/நவீன இலக்கியக் கருவூலம் (literary canon) என்றும் வரையறுக்கப் பட்டதும் இவ்விவாதங்களின் வழியேதான்.

நாவலைப் பற்றிப் பேசும்போது வாசிப்பைப் பற்றிப் பேசாமல் இருக்க இயலாது. ஆனால், வியப்புக்குரிய வகை யில், வாசிப்பு, வாசகர்கள் பற்றிய இடைப்பிறவரலான குறிப்பு கள் தவிர, தமிழ் நாவல் பற்றிய ஆய்வுகளும் விமரிசனங் களும், அவர்களைப் பற்றிக் காத்திரமாக ஒன்றும் சொல்ல வில்லை. அவ்வகையில் இந்நூல் முக்கியமான சில முதல் தப்படிகளை எடுத்து வைக்கின்றது என்று சொல்லலாம்.

மெளன வாசிப்பு என்ற புதியதொரு, நவீன வாசிப்பு முறை யும் (mode of reading) அதனையொட்டிய வாசிப்புப் பழக்கங் களும் (reading practices) நாவலின் நிலைபேற்றோடுதான் தமிழ்ச் சமூகத்தில் உருப்பெற்றது என்று இந்நூல் நிறுவ முயல்கிறது. இதற்காக, தமிழ்ச் சமூகத்தில் அதற்கு முன்பு வரை கோலோச்சிய வாசிப்பு முறைகளையும் பழக்கங்களை யும் பல தகவல்களைக் கொண்டு இந்நோக்கிலிருந்து ஆராய்ந் துள்ளேன். இது வாசகர்களுக்குப் புதிதாக இருப்பதோடு, படிக்கவும் சுவையாக இருக்கும் என நம்புகிறேன்.

புள்ளிவிவரங்கள் நம் நாட்டில் அருமை என்பது தெரிந்ததே. ஒரு புதிய நிகழ்வுப்போக்கின் வளர்ச்சி என்று சொல்லும்போது எண்ணிக்கை/அளவு என்பது பற்றிக் கருதாமல் இருக்க இய லாது. இருப்பினும், கிடைக்கக்கூடிய குறைபாடுடைய தகவல் களிலிருந்து நாவல்களின் எண்ணிக்கை, வாசகர்களின் அளவு, சமூகப் பின்புலம் ஆகியன பற்றி ஊகிக்க முயன்றுள்ளேன்.

உள்ளதும் போச்சுதடா என்றவாறு இருக்கின்ற குறைவான சான்று மூலங்களும் அருகிவருகின்றன. இங்கே ஒரு அனுப வத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். மன்னார்குடியிலுள்ள கோட்டூர் அரங்கசாமி முதலியார் நூல்நிலையத்தைப் பழந் தமிழ் நாவல்களின் களஞ்சியம் என்று சொல்வார்கள். இரண் டாண்டுகளின் முன்னர் (ஜூன் 2000) ஆயுவுத் தோழர்கள் இரு வரோடு (பழ. அதியமான், பா. மதிவாணன்) அந்நூலகம் சென் றிருந்தேன். நீதிமன்ற வழக்கிலே அல்லாடிக்கொண்டிருந்த அந்நூலகத்திற்குள் பெருமுயற்சியின் பிறகே நுழைய இயன் றது. பூட்டிய கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும், ஓயாத தோர் ஊங்காரம் காதைக் குடைந்தது. என்னவென்று பார்த் தோம். புற்றீசல். தம் நுண்பற்களைக் கொண்டு அவை நாவல் களை மிக விரைவாக வாசித்துக்கொண்டிருந்தன. ஒன்றும் செய்ய முடியாமல், கையைப் பிசையும் கையாலாகாத நிலை. தேடிச் சென்றவற்றைப் பார்க்க முடியாமல் திரும்பினோம்.

அறிவையும் ஆவணங்களையும் ஷனநாயகப்படுத்துவதே அவற்றைப் பாதுகாக்கச் சிறந்த வழி. அதற்கொப்ப, நாவல்கள் பற்றிய விவாதக் கட்டுரைகளைப் பிற்சேர்க்கையாக வழங்கி யுள்ளேன். இது தொடர்பாக மேலும் ஆழமாகச் சிந்திக்க நினைப்போர்க்கு மட்டுமல்லாமல், அக்கால மணத்தை நுகர விரும்பும் வாசகருக்கும் இவை பயன்படும் என நம்புகிறேன்.

தமிழ்ப் பதிப்புலக வரலாறு தொடர்பான என் ஆய்வின் ஒரு பகுதி, நாவலின் மூலமாகத் தமிழ்ப் பதிப்புலகம் புரவலரிட மிருந்து விலகிச் சந்தையை நோக்கித் திரும்பியதைப் பற்றியது. புது தில்லி ஷவாகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வரலாற்று ஆய்வு மையத்தில் கையளிக்கப்பட்ட அந்த முனைவர் பட்ட ஆய்வேட்டில் தமிழகத்தில் வாசிப்பு முறைகளும், வாசிப்புப் பழக்கங்களும் பற்றியும் வரலாற்றுப் போக்கில் நோக்கியிருந் தேன். தமிழ்ப் பதிப்புலகத்தின் போக்கைப் பற்றிய பிறிதொரு கருதுகோளை முன்னெடுப்பதற்காக எழுதப்பட்ட இவ்விரண்டு இயல்களையும், தமிழில் நாவலின் நிலைபேறு என்ற நோக்கில் பெருமளவுக்கு விரிவாக்கி இந்நூலை எழுதியுள்ளேன்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்த ஆய்வின் பகுதிகள் Studies in History (1994), The Indian Economic and Social History Review (1997) ஆகிய ஆய்விதழ்களிலும், மீனாட்சி முக்கர்ஜி தொகுத்த Early Novels in India (2002) என்ற நூலிலும் இடம் பெற்று, ஆய்வு வட்டத்திற்குள் பரவலான கவனம் பெற்றன. இக்கட்டுரைகளின் வெவ்வேறு வடிவங்கள் திருநெல்வேலி, சென்னை, திருவனந்தபுரம், மைசூர், புது தில்லி, கேம்பிரிட்ஜ், பாரீஸ் ஆகிய இடங்களில் படிக்கப்பட்டன. ஆங்கிலத்தில் முன் வைக்கப்பட்ட கட்டுரைகளைக் கேட்டும் படித்தும் கருத்துரைத் தவர்கள் பலர். என் கருதுகோள்களை ஏற்றுக்கொள்ளாவிட்டா லும், ஆர்வத்தோடு அவற்றை எதிர்கொண்டு, எதிர் வினை யாற்றியவர்களுக்கு என் முதல் நன்றி.

முதல் இயலின் தமிழ் வடிவம் தமிழ் இனி 2000 மாநாட் டில் வாசிக்கப்பட்டது.

தமிழ் வடிவத்தைப் படித்துக் கருத்துரைத்தவர்கள் ஆ. சிவசுப்பிரமணியன், பா. மதிவாணன்.

இந்நூலை அச்சேற்றுவதில் வழக்கம் போலவே துணை நின்ற திரு. எம். சிவசுப்ரமணியன் (எம். எஸ்.), இந்நூல் தம் இளமைக் கால வாசிப்பு அனுபவங்களை நினைவுகூர வைத்த தெனச் சொல்லியது மனநிறைவளித்தது.

இந்நூலை எழுதுவதற்குப் பயன்பட்ட நூல்களையும் ஆவணங்களையும் பார்வையிட அனுமதி வழங்கியவர்கள்: சென்னை மறைமலையடிகள் நூல்நிலையமும் அதன் செய லாளர் திரு. இரா. முத்துக்குமாரசாமி அவர்களும்; சென்னை உ. வே. சாமிநாதையர் நூல்நிலையமும் அதன் பாதுகாவலரும்; தமிழ்நாடு ஆவணக்காப்பகமும் அதன் சிறப்பு ஆணையாள ரும்; சென்னை ரோஷா முத்தையா ஆராய்ச்சி நூலகமும் அதன் இயக்குநரும்.

பொறுப்புணர்வுடன் நூலை ஒளியச்சுக்கோத்தவர்கள் திருமதி சு. நாகம்மாள், செல்வி செ. கனிதா தேவி.

இவர்கள் அனைவர்க்கும் என் நன்றியைச் செலுத்துகிறேன்.

தமிழின் நீண்ட புலமை மரபின் ஒரு கண்ணியான திரு. சி. சு. மணி அவர்கள் தமிழும் தத்துவமும் துறைபோகக் கற்றவர். திருநெல்வேலியில் ஆசிரியராகப் பணியாற்றிய பொழுது, என் அறிவுத் தேட்டத்திற்கு வற்றாத சுனையாக விளங்கியவர். அந்நன்றியின் அடையாளமாக இந்நூல் அவருக்குக் கையுறை.

நாவலும் வாசிப்பும் – நூலின் முன்னுரை

ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி

பக்கம் : 136. விலை ரூ.60

வெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்

669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001

இந்தியா

தொலைபேசி : 91-4652-222525

தொலைநகல் : 91-4652-223159

மின்னஞ்சல் : kalachuvadu@sancharnet.in

Series Navigation

1 Comment

Comments are closed