நாளைய உலா

This entry is part [part not set] of 37 in the series 20080925_Issue

பட்டுகோட்டை தமிழ்மதி


மஞ்சவயல் திருவிழாவிற்கு
மாட்டுவண்டியில் புறப்பட

மாட்டுக்கால்களின்
முன்பின் இயக்கம்
வண்டிச்சக்கர்ங்களின்
சுழலியக்கம்.

அன்றைக்கு அது
ஆற்றல்மாறா கோட்பாட்டின்
ஆசைப்பயணம்.

வயலில் ஏர்க்காலை நகர்த்த
உழவுமாடுகளோடு
பத்துக்கால் பயணம்.

கிணற்றடி நீரள்ள
இரண்டு மாடுகளோடு
ஏற்றம் ஓட்டிய
இனியப் பயணம்.

இப்போதெல்லாம்
உழ
ஊருக்குப் போக
நீரிறைக்க என
நிலமெல்லாம் எந்திரங்கள்.

அன்றைக்கு
சொன்னதைக் கேட்கும் சோடிமாடுகள்
கைகளில்.

இன்றைக்கு
ஒன்றை பிரிந்த ஒற்றை மாடாய்
அடுத்தவன் கைகளில்.

இப்படி ஆதாயம் தேடி
ஆயிரமாயிரம் மையில் பயணம்.
பள்ளமேடு தெரியாமல்
பறக்கிற பயணம்.

கரைசேர
கையில் உயிரைப்பிடித்துகொண்டு
கடலில்
அலைத்துரும்பென
அகதிகளின் பயணம்.

அக்கரையில் கைத்தட்டினால்
இக்கரையில்
இரண்டுமுறை கேட்கும்தான்.

சிலநேரம் இப்படி
ஒளிந்துதான் போகிறது
ஒலியின் பயணம்.

சொந்தமன்ண்ணில் இழந்தவைகளை
வந்தமண்ணில் பெற
வந்தாரை வாழ்வைக்கும் மண்
இதுதான் என
எண்ணுகிறது இதயம்.

எங்கோ நின்றாலும்
இருந்த மண் காண
போகிறது பயணம்.

அங்கே
இன்றும் போரென
நிற்கிறது இதயம்.

ஒருவர் கை ஒருவர் பிடித்து
உறவுகளை காண
ஊருக்கு போகும் நேற்றின் பயணம்
அந்த மண்ணில்
இன்று
காலடிகளில் கண்ணிவெடிகளாய்
சிதறிக் கிடக்கிறது.

ஆகவே அந்த மண்ணில்
இன்றில்லாத
நேற்றின் பயணம்
நாளை தொடரட்டும்.

வரும்
தலைமுறைகளின் பயணம்
தலைநிமிர்ந்து நடக்கட்டும்.

நலமாய் நடக்கட்டும்
அவர்களின்
நாளைய உலா.
/ சிங்கப்பூர் வானொலி ஒலி 96.8 –ன் கவிதை நேரத்துக்கான இவ்வார தலைப்பு நாளைய உலா, 20-09-08 /

பட்டுகோட்டை தமிழ்மதி
thamiizhmathi@gmail.com

Series Navigation

பட்டுகோட்டை தமிழ்மதி

பட்டுகோட்டை தமிழ்மதி