நான்காவது கொலை !!! ( அத்யாயம் நான்கு)

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

ஜெயமோகன்


அத்யாயம் நான்கு

வசந்த் நம்பூதிரி ஜோக்கை சொல்லிக் கொண்டே வந்தான் ‘ காளிதாஸன் கவிதையிலே ஊறப்போட்டு தோச்சு எடுத்த நம்பூதிரி பாஸ். திருவனந்தபுரம் ஊட்டுபுரையிலே ஒரு நாயர் பொண்ணை பாத்து அப்பிடியே சுஸ்தாயி சம்மந்தம் பண்ணிகிட்டார். சம்பந்தம்னா என்னன்னு எங்கல்சை மேற்கோள்காட்டி அப்புறமா சொல்றேன். பொண்ணு அப்பிடியே ரம்பை ஊர்வசி திலோத்தமை முப்பது முப்பது பர்செண்ட் கலந்து செஞ்சது . மிச்சம் பத்து பர்சண்ட் லோகல் . அதான் பாஸ் பெஸ்ட் ஃபார்முலா ‘

அவர்கள் படியேற முற்பட்டபோதுதான் அவர்களைதேடி ஒருவர் வந்து லெளஞ்சில் காத்திருக்கும் தகவல் கிடைத்தது . வசந்த் , ‘ ஃபஸ்ட் நைட் முடிஞ்சதும் விடிகாலைல நம்பூதிரி ஒரு ரோஜாப்பூவை எடுத்து தேவதை முகத்திலே ரொமாண்டிக்கா தட்டி எழுப்பி , பிரியே சந்தன கந்தத்தில் மந்த மாருதன் மயங்கும் இந்த மோகன வேளையின் லாகிரியிலே உனக்கு என்ன தோணுதுன்னு கேட்டார் .அந்தம்மா எனக்கு ரெண்டுக்கு வருதுன்னாங்க . யார் பாஸ் இந்தாள் , மடத்துலே சப்பரம் தூக்கிறவன் மாதிரி இருக்கார் ? ‘

முன் குடுமியும் உடம்பெல்லாம் நாமமுமாக இருந்த அந்த மனிதர் ஆசியளித்து ‘ இதுலே யாரு கணேசன் ? ‘ என்றார்.

‘நான் தான் .நீங்க ? ‘ என்றான் கணேஷ் .

‘நான் சைவாள் கூட பேசறதில்லை. நீங்க ஒத்திக்குங்கோ . வசந்தன் யாரு ? ‘

‘நாந்தான் . காந்தளூர் வசந்தகுமாரன்கதைலதான் அப்படி பெயர். நீங்க அந்த நூற்றாண்டோ ? ‘

‘ பரவாயில்லை , நீங்க பகவான் நாமம் . நீங்கதான் சைவ நாமி ,குறுக்கே பேசாதீங்கோ .நான் ஒரு முக்கியமான கேஸ் விஷயமா உங்களை சந்திக்கணும்னு ட்ரிப்ளிகேன்லேருந்து வரேன் ‘

‘ என்ன கேஸ் ? நாங்க வடகலை தென்கலை கேஸ்லாம் எடுக்கிறதில்லை. ‘

‘இது கலை இல்லீங்க , கொலை ‘

‘ கொலையா ? ‘ வசந்த் குழம்பிப் போய் விட்டான் ‘ அதுக்கு ஏன் எங்க கிட்டே வரீங்க ?போலீஸ்லே சொன்னீங்களா ? ‘ பிறகு சந்தேகம் வந்து, ‘ ஒருவேளை இனிமேத்தான் கொலையே பண்ண போறீங்களா ? ‘

‘கொலை நடந்து ஆயிரம் வருஷம் ஆச்சு . இன்னும் கொன்னது யார்னு கண்டுபிடிக்கலை .பாத்திருப்பீங்களே இண்டெர் நெட்டுலேகூட இதைத்தான் சுடச்சுடப் பேசிக்கறா . எங்கபாத்தாலும் ஒரே பரபரப்பா இருக்கு ‘ ‘

‘செத்துப்போனது யார் ? ‘ ‘ என்றான் வசந்த்.

‘ஆதித்த கரிகாலன்… ‘

‘ஆதித்த… அப்ப நீங்க ? ‘ ‘

‘அடியேனை ஆழ்வார்க்கடியான் என்பார்கள் …..இப்போ அஞ்சாவது மறுபிரசுரம் . நாட்டுடைமை ஆக்கிட்டதினாலே எங்கவேணுமானாலும் போன்னுட்டாங்க ‘

‘ ‘ இதெல்லாம் இப்ப அமெரிக்கால சாஃப்ட் வேர் பையன்க தான் ஆர்வமா கவனிச்சுக்கிறாங்க சார் .நீங்க எதுக்கும் அந்தபக்கமா முயற்சி செஞ்சு பாக்கலாம். அங்கெல்லாம் இப்ப உங்களைமாதிரி ஆளுங்களுக்கு தமிழ்ச்செம்மல் கூட குடுக்கிறாங்க . வெண்பா எழுதுவீங்களா ? ‘ ‘

வீரவைஷ்ணவர் சட்டை செய்யாமல் ‘ கொன்னது யார்னு டி. கெ.ஸிக்கு தெரியும்னு ஒரு ஆதாரம் இருக்கு. , அவர் நைண்டான் ஃபிஃப்டாஸ்லே கல்கிக்கு எழுதின கடிதத்துலே கொன்னுட்டாங்க போங்கன்னு எழுதியிருக்கார் . நீங்க அந்த ரூட்லெ வந்தா நன்னாருக்கும் ‘

‘உங்க பாஷை இப்ப வேற மாதிரி இருக்கே ? ‘

‘நல்ல கதை . ட் ரிப்ளிகேன்லே அப்டிப் பேச முடியுமா ? கந்தலாயிடாது ? சிரமப்பட்டு இங்க்ளீஷெல்லாம் கலந்து சமாளிக்கிறேன். எப்பவாவது டி .கெ .எஸ் கலைவாணன் இந்தமாதிரி யாரையாச்சும் பாத்தா அப்படி பேசறது ‘

‘பார்த்தசாரதி கோயில் பக்கமா உங்க வீடு ? ‘ ‘ என்றான் கணேஷ்.

‘ஆமா , எப்டி கண்டுபிடிச்சேள் ? ‘

‘ அங்க வரத வெங்கட் ராமன்னு ஒருத்தர் இருப்பார் . உங்க கேஸை அவர்கிட்டே குடுக்கலாம். இதெல்லாம் ஆடிட்டர் பாக்கவேண்டிய கேஸுங்க ‘

‘அப்டாங்களா ? ‘ என்றார் அவர் , மந்தமாக .

‘ அவரு ஒருமாதிரி இந்தக்கால பெரிய திருவெழுத்துங்க , பழைய ஸ்டாக் பிரச்சினையெல்லாம் அவரு பாத்தா கரெக்டா கண்டுபிடிச்சுடுவார் . இப்ப நாங்க சரித்திரப்பக்கமா போறது இல்லை , ஒருதடவை அந்தபக்கமா போனோம் . கவுந்துட்டோம் .. ‘

‘அப்ப கேஸ் ? ‘

‘அதெல்லாம் நாங்க பாக்க முடியதுங்க. நீங்க கெளம்புங்க… ‘

‘இப்பகூட பரத் சுசீலான்னு ரெண்டு பேரை பாத்தேன் .அவா கொஞ்சி குலாவிக்கிறது பாக்க கண்ராவியா இருக்கு . அப்படித்தான் அவா துப்பறிவாளாம் யேன்னடாதி கிரகச்சாரம்னு கேட்டா அப்டி கொஞ்சினா சகிக்கமுடியாம கடேசி பாராவிலே உண்மைய வில்லனே வந்து கக்கிடுவாங்கன்னு ரொம்ப தன்மையா சொன்னா ‘

‘ஆமா நீங்க அவங்க கிட்டயே போறது நல்லாயிருக்கும் . ‘

‘ இந்திரா பார்த்தசாரதி ஏதாச்சும் துப்பறியும் கதை எழுதியிருக்காரோ ? நம்மாளுன்னு பாத்தேன் ‘

‘அவரு எழுதினா ஆதித்த கரிகாலனை சைக்கோ அனலிஸிஸ் பண்ணிடுவாருங்க . … ‘

‘ அடப்பாவி! அது என்னது ? ‘ என்றார் வீரவைஷ்ணவர் பீதியுடன்.

‘சின்னவயசிலே சாப்பிட்ட புளியோதரைதான் எல்லாத்துக்கும் காரணம்னு சொல்றது .நீங்க கெளம்புங்க… ‘

அவர் ‘உங்காளு நம்மாளா இருந்துண்டு இப்டி சைவநாமம் வச்சிருக்க வேணாம் ..அப்பநான் வரேன் பெருமாளே.. ‘ என்று மஞ்சள்பை சகிதம் கிளம்பிபோனார்.

‘பாஸ் விட்டா உங்களுக்கே நாமத்தை போட்டுட்டு போயிடுவார் போல இருக்கு ‘

‘வாடா , இப்பவே இந்தக் கதையிலே அடுத்த அத்தியாயத்திலே என்னான்னு தெரியாம மாட்டிக்கிட்டு முழிக்கிறோம் .சத்திரம் மாதிரி இருக்கு யார்யாரோ வந்துட்டு போறாங்க .அதெப்டாடா மத்த தொடர்கதை ஆசாமிகள்லாம் இதுக்குள்ள நுழையறாங்க ? ‘

அவர்கள் தங்கள் அறைக்குள் நுழைந்து உடை மாற்றிக் கொண்டிருந்தபோது திறந்த கதவு வழியாக சரேலென பாய்ந்து வந்த குறுவாள் ஒன்று சோபா மீது தைத்துநின்று ஆடியது ‘பாஸ் என்னாது சாண்டில்யன் எஃபக்டா இருக்கு ? ‘ ‘ என்று வசந்த் இரும்பு சலாகை உரசும் குரலில் கேட்டான் .

கணேஷ் அந்த குறுவாளை எடுத்து அதன் இலச்சினையை பார்த்தபோது எதற்கும் கலங்காத அவன் மனமே அத்தியாயத்தின் இறுதிவரிக்குரிய பயங்கரமான கலக்கத்தை அடைந்தது.

****

வேற்கடலைப் பொட்டலக் காகிதத்தை சாம்பு மணலில் வீசிவிட்டு கடலலைகளை பார்த்து ‘பாக்கிறதுக்கு யாருமேயில்லை. இருந்தாலும் அதுபாட்டுக்கு அடிச்சுக்கிட்டுதான் இருக்கு ‘ என்று வேதாந்தமாக சிந்தித்து கொண்டிருந்தபோது அப்பகுதியை குறுக்காக கடந்துபோன தாடைக் கீழ் சதை தொளதொளத்த வெள்ளைக்கார வயோதிகர் அந்தக் காகிதத்தை ஆங்கிலத்தில் குழறியபடி எடுத்து அருகேயுள்ள குப்பைகூடையில்போடக் கண்ட சாம்பு ‘ரொம்ப ஒசத்தி ஓட்டல் போலிருக்கு . குப்பை பொறுக்கிறதுக்குகூட வெள்ளைக்காரனை வச்சிருக்கா . ‘ என்று வியந்தபடி எழுந்து மேற்கொண்டு பொறுக்கவேண்டிய குப்பைகளை அவருக்கு சுட்டிக்காட்ட துரையால் காளைச்சாபுணம் என அழைக்கப்படலானார் .

அப்போது மணலில் பூட்சுகள் புதைய பாய்ந்து வந்த கோபாலன் சாம்புவை ஆரத்தழுவி தூக்கி தட்டாமாலை சுற்றி ‘சாம்புசார் , மேதை சார் நீங்க . எப்டித்தான் உங்கமூளை வேலை செய்றதோ!கண்டுபிடிச்சுடேன்சார் முக்கியமான க்ளூ கிடைச்சுடுத்து ‘ என்றார்

‘ ‘குப்பைகூடைல போட்டுடுங்கோ, துரைக்கு கோபம் வந்துடப்போறது ‘ ‘என்றார் சாம்பு

கோபாலன் போதுமான அளவு திகைத்தபிறகு ‘தலைகாணிக்கும் சாம்பாருக்கும் என்ன சம்பந்தம்னு கேட்டேன். நீங்க சொன்னது எனக்கு அப்ப புரியலை. எதுக்கும் இருக்கட்டும்னு சாம்பார் பண்ர எடத்துக்கு ஒருநடை போய் பாத்தேன் .சாம்புசார் கேரளத்து சாம்பாரிலே அவியல் மாதிரி எல்லா காய்கறியையும் போட்டுடறாங்க .கருணைக்கிழங்கை சாம்பாரிலே போடற கோராமைய இன்னிக்குத்தான் சார் பாத்தேன். என்ன சொல்லிட்டிருந்தேன் , ஆமா சாம்பார்.அங்க பாத்தா ஓரமா லாண்டிரிக்குவியல் .அதிலே ஒரு தலைகாணி உறை . அதிலே பாத்தா சாம்பார் கறை. ‘

‘ஆமாமா ‘ என்றார் சாம்பு ‘யாருமே பாக்காட்டி கூட அதுபாட்டுக்கு இருந்துண்டு இருக்கு ‘

‘கரெக்டா சொன்னீங்க.யாருமே கவனிக்கலை .சாம்பார் கறை எப்டி வந்துச்சின்னு யோசிக்கிறச்சே நீங்க சொன்ன்னது ஞாபகம் வந்துடுத்து . வண்டால வச்சு தள்ளிண்டு போனான்னீங்களே. அதேதான் நடந்திருக்கு. இங்க ரூம் சப்ளை பண்ற வண்டி இருக்கே அது கொலைநடந்த அன்னிக்கு அந்த ரூமுக்கு போயிருக்கு. தலைகாணிய அதுல தூக்கிபோட்டு யாருக்கும் தெரியாம எடுத்துண்டு வந்திருக்கான்.அப்ப அதிலே சிந்தியிருந்த சாம்பார் பட்டுடுத்து .சாம்பு சார் எப்டித்தான் இதை ஊகிச்சீங்களோ ‘

‘தரையிலே போடப்பிடாதுங்கிறான் ‘ என்றார் சாம்பு

‘ இனிமே கண்டுபிடிக்கவேண்டியது அந்தபட்லர் யாரு , அவன் எப்பஎதுக்கு ரூமுக்கு போனான் அவனுக்கு பின்னாலே யாரு இருக்கா இதெல்லாம்தான். ‘

‘மானேஜருன்னா ஏற்பாடு பண்ணனும் ? நாமளே பொறுக்க முடியுமா ? ‘

கோபாலன் மோவாயை தடவியபடி, ‘ மேனேஜர் ? ‘ ‘ என்றார்.

‘வேர்கடலை வாங்கணும் . தீந்துபோச்சு , கடல் வேற வேஸ்டா ஓடிண்டு இருக்கு ‘ என்றார் சாம்பு.

****

‘ வெல் ! வெல்! வெல்! ‘ என்றார் ஹோம்ஸ் உருப்பெருக்கியால் தரையைக் கூர்ந்துபார்த்தபடி . ‘டியர் மிஸ்டர்வாட்சன் இந்த எறும்புகளின் வரிசை என்னை வியப்பிலாழ்த்துகிறது ‘

வாட்சன் குனிந்துபார்த்து ‘ பெரும் வியப்புதான் ஹோம்ஸ் .பிரிட்டிஷ் எறும்புகளின் ஒழுங்கு எப்படியோ இங்கு வரை பரவியிருக்கிறது .இவையும் வரிசையாகவே நகர்கின்றன ‘

‘அவை போகும் திசையை கவனித்தீர்களா ? ‘

வாட்சன் குனிந்து ,கூர்ந்து , ஆழ்ந்து அவதானித்துவிட்டு ‘முன்னோக்கி! ‘ என்றார் எக்களிப்புடன் .

‘சரியாகச் சொன்னீர்கள் . நாம் இவற்றை பின்தொடர்வோம் .வாட்சன் என்ன செய்கிறீர்கள் ? ‘

‘பின்தொடர்வோம் என்றீர்கள்.. ‘

‘அதற்காக முழந்தாளிட்டு நகரவேண்டியதில்லை .நாம் இருகால்களாலேயே நடக்கலாம்.என்ன இருந்தாலும் நாம் ஆங்கிலேயர் … ‘

‘ஆம் ஹோம்ஸ் மறந்து போய்விட்டது ‘

எறும்புவரிசை பழைய கட்டிடத்தின் பின்புறமுள்ள இடுக்கில் புகுந்து ஒரு மூட்டைக்குள்நுழைந்தது . ‘அது அந்த கிழவனின் மூட்டை ஹோம்ஸ் அதை நாம் பரிசோதனை செய்யவேண்டுமல்லவா ? ‘

‘ அது சாத்தியமென்றால் தேவையாகுமென எண்ணுகிறேன் . ‘ ஹோம்ஸ் சொன்னார். ‘ மொழிபெயர்ப்பு நடையிலே பேசிப் பேசி மண்ணாப்போனேன் ‘ என்று நினைத்தபடி ‘தங்கள் திறமை இதில் தன் வெளிப்பாடை கண்டடைவது உசிதம் என சொல்லத் துணிவேன் ‘

வாட்சன் ஆவலாக மூட்டையை பிரித்து உள்ளிருந்த அலுமினிய பாத்திரங்களையும் டப்பாக்களையும் திறந்து ஒரு கரிய கட்டியை எடுத்து, ‘ எறும்புகள் இதை இலக்காக்குகின்றன என்பது அவை இதை மொய்ப்பதிலிருந்து தெளிவாகிறது ஹோம்ஸ் . ஆகவே எறும்புகளுக்கு இது பிடித்திருக்கிறது என நாம் ஊகிக்கலாம் . அதாவது தங்களுக்கு பிடித்தமான இடத்துக்கு எறும்புகள் வரிசையாக போகின்றன… ‘ என்றார்

‘உண்மைதான் வாட்சன் .நாம் அந்த சடலத்தின் அருகேகூட இம்மாதிரி எறும்புவரிசைகளைபார்த்தோம் என்பதை நினைவுகூர்கிறேன். ‘

‘இதை சற்று நக்கி பார்ப்பது இதன் ருசியைத் தெளிவுபடுத்துமென எண்ணுகிறேன்… ‘

‘ வெள்ளைக்காரர்களின் பிரச்சினை என்னவெனில் நாம் கருப்பர்கள் மத்தியில் சிரமப்பட்டாவது ஜெண்டில்மேனாக இருந்தாக வேண்டியுள்ளது . இதையே ருட்யார்ட் கிப்ளிங் ‘வைட் மேன்ஸ் பர்டன் ‘ என்று சொன்னார் . சரி கிளம்பி விடுவோம் , கிழவர் வந்து விட போகிறார் ‘

இருவரும் திரும்பும்போது ஹோம்ஸ் பிரிட்டிஷ் மரபுப்படி ‘ அருமையான மாலைநேரம் என்று சொல்ல சில காரணங்கள் இருக்கின்றன என நினைக்கிறேன் ‘ என்றார்

‘ அது சிறப்பான எண்ணம் என்று கருத வாய்ப்புகள் உள்ளன ‘ என்று வாட்சனும் மரபுப்படி பதில் சொன்னார்.

‘ ‘ வாட்சன் நமக்கு எதிரேவரும் பெண்ணை கவனித்தீர்களா ? ‘

‘மிகவும் ‘

‘என்னகருதுகிறீர்கள் ? ‘

‘ நாட்டுக்கட்டை என்று சொல்ல பிரிட்டிஷ் மரபு அனுமதித்தால் சொல்லி மகிழலாம் ‘ ‘

‘அதுவல்ல .அவள் தன் நெற்றியில் வைத்துள்ள அடையாளத்தை கவனித்தீர்களா ? ‘

‘ ஆம் ,ஒரு சிறு சிவப்பு வட்டம் .மேலே மஞ்சள் நிற தீற்றல்… ‘

‘அந்த தீற்றலை இன்று காலை நாம் பார்த்தோமே ‘

‘அடக்கடவுளே , உண்மை ‘

‘ஆக ஒரு சதிவலையின் நடுவே நாம் வாழ்கிறோம் வாட்சன். காதுகளுக்கு சிக்காத ஒரு குறியீட்டு மொழி நம்மை சுற்றி செயல்படுகிறது . இதை அறிய நாம் உள்ளே புகுவதே ஒரேவழி ‘

‘அந்த பெண் அதற்கு சம்மதிப்பாள் என நான் எண்ணவில்லை ஹோம்ஸ் ‘

‘ இல்லையில்லை. நாமும் இதேபோல அடையாளங்களை அணிந்துகொண்டு நடமாடுவோம். அப்போது சிலர் நம்முடன் உரையாட முயலக்கூடும். காகிதத் துளைக் கருவி உதிர்க்கும் காகிதவட்டங்களே போதும் ‘

‘தேவைதானா ஹோம்ஸ் ? ‘

‘துப்பறியும் நிபுணர்கள் எப்போதுமே வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்டுக்கொள்ள வேண்டும் வாட்சன் ,இது இரண்டாவது பொன் விதி ‘ ஹோம்ஸ் மர்மமானபுன்னகையுடன் பைப்பை உறிஞ்சினார்.

[தொடரும் ]

Series Navigation