நாஞ்சில் நாடன் கவிதைகள்

This entry is part [part not set] of 23 in the series 20020505_Issue

(தேர்வு ஜெயமோகன்)


1 இந்தியரும் எம்மக்களும்

உச்சரிக்கவியலாத ஊர்திகள்
இராத்தங்க இருபதினாயிரம் வாடகை
வான்வழிப்பயணம்
கைக்கடிகாரம் காற்சட்டை மேற்சட்டை
காலணிகள் கண்ணாடி எண்பதினாயிரம்
அக்குள் நாற்றம் மறைக்க ‘தெளிப்பான் ‘
கணிப்பொறி முன்வலை கம்பியில்லாபேசி
பிறந்தநாள் மணநாள் காதலர் தினம்
புத்தாண்டு ஆயிரத்தாண்டு விழக்கள்
காதல்காட்சிக்கும்கனவுக்காட்சிக்கும்
மூன்றேகால் கோடி
கிரிக்கெட் போரில் கார்கில் போட்டியில்
தேசப்பற்று அவிழ்த்துப்போட்டு ஆடும்
இந்தியர்
கட்டைவண்டியிலும் கால்நடையாகவும்
வரப்போ தலைக்காணி வாய்க்காலே பஞ்சுமெத்தை
குடிநீர் சுமந்து குடிசைசேர சூரியன் சாட்சி
எட்டு ரூபய் செருப்பை தைத்து தைத்து
திருப்பியும் தைப்பர்
பல்லுக்கு பொடிமணல் மேலுக்கு வைக்கோல்
கொரகொரக்கு ம்வானொலிக்கும் தட்டழிவு
தகரக்கொட்டகை மணல் விரிப்பு
எட்டணாசீட்டு
பிறந்தது தெரியும் இறக்கபொவதும் தெரியும்
தேசம் என்று ஒன்று
உள்ளதென்றும் தெரிவர்
எம்மக்கள்

2 நடுகற்களும் நடைகற்களும்

கொம்பன் பன்றி விரை வறித்த கடா
கொண்டை சிலிர்த்த சேவல்
சுட்ட அயிலை கருவாடு
எள்ளுப் பிண்ணாக்கு கருப்பட்டி
போதைக்கு வாற்றுச்சாராயம்
புகைக்க சுருட்டு
நடுகற்களுக்கு

கிருத்தைகை அமாவாசி பெளர்ணமி
ஆடிவெள்ளி ஆவணி ஞாயிறு
புரட்டாசி சனி
வரி வைத்து நோன்புகள்

முடுக்கில் பாரி
மூலையில் பிள்ளையார்
தெருவுக்கு இரண்டாய் தென்படும்

வெளுக்கும் முன் தொடங்கி
சாமம் வரைக்கும்
அரக்கக் கருவிகள் பெருக்கும் ஓசை
புலன்கள் பொசுங்க
நடக்கும் கற்கள்

3 மொழி

மாற்றுத்தெரு இல்லை
அந்தத்தெருவழிதான்
எப்படியும் போதல் வெண்டும்
முனை திரும்புகையில்
பீது பூத்த முகம் பொருத்தி வளர்ந்தது
எங்கிருந்து வெளிப்பட்டு எதைக்கவ்வும்
ஆடுசதையை அடித்தொடையை
ஓரம் பார்த்து ஒதுங்கிப்போகும் நான்
அதற்கு உணவல்ல
காதலில்போட்டியுமல்ல
வீரத்தில் சவாலுமல்ல
எனினும் எரிச்சலூட்டும் ஏதோ ஒன்று
அல்லது அதற்கு பிடிக்காத வேறெதையோ
நினைவூட்டும் ஒன்று
என்னிடம்.
எங்கு முறையிட ?
சென்று பேசிப்பார்க்கலாம்
நேருக்கு நேராய்
வேறு வட்டார வழக்கில்

4 மானுடக்கனவு

குறுக்கும் நெடுக்குமாய் கோடுகள்
கிழிபட
நானோர்
விருந்திருக்க உண்ணாத
வேளாளன்
பாரம்பரியச் சுமையுள்ள இந்து
கல்லுக்கும் மூத்தகுடி
இடர்வரும் வேளையில் இந்தியன்
தகப்பன்
அலுவலகச் சகபாடி
அழித்தழித்து எழுதும் படைப்பாளி
ஒன்றுக்கொன்று உடன்படும் வேளையில்
பல்லும் நகமுமாய் முரண்படும்
ஒன்றாய் இருக்கையில் இன்னொன்று
ஒன்று பிறிதின் எல்லையை நெருக்கும்
சற்றே விரிக்கும்
இடையில் தவிக்கும் மானுடக்கனவு

4 புத்தாண்டு

முடித்தலை நெரிய
தமிழ் சுமந்து
திரும்பும்
மூத்த குடியின்
பொங்கும் விந்து
வண்ணச் சுவரொட்டொயில் வடியும்

எச்சில் வழங்கி
புண்ணியம் பெருக்கும்
திசைகாவல் தெய்வம்
தூரதர்ஷனில் முகம் தேடும்

பொங்கலுக்கு வெளியாகும்
முப்பத்தெட்டு காவியங்கள்
பிரம்மாண்ட குசுப்போல

பனிபோல கொலையுதிரும்
மறுபடியும் தேர்தல்வரும்
ஊழல்போய் ஊழல்வரும்

சபரிமலை அக்னிகுண்டம்
தன்னையே உண்டு
எரியும் ஓங்கி

***

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்