நல்ல புத்தகங்களை தேடுவது

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

அ.முத்துலிங்கம்


தரமான புத்தகத்தை வாசிக்காத மனிதர், எழுத்தறிவில்லாதவரிலும் பார்க்க ஒரு விதத்திலும் உயர்ந்தவர் அல்ல என்கிறார் மார்க் ட்வெய்ன் என்ற அறிஞர். நல்ல புத்தகங்களை தேடுவது அவ்வளவு கடினமான விடயம். ஒரு தரமான புத்தகத்தை எப்படி கண்டுபிடிப்பது ? இதுதான் வாசகர்களுக்கு ஏற்படும் தீராத பிரச்சினை. ஒருவர் ஆரம்பத்தில் எப்படிப்பட்ட புத்தகத்தையும் படிக்கலாம். ஆனால் போகப்போக அவர் தன் தரத்தை மேம்படுத்திக்கொண்டே போகவேண்டும். பத்தாயிரம் புத்தகங்களைப் படித்த ஒருவரிலும் பார்க்க பத்து புத்தகங்களைப் படித்தவர் உயர்வானவராக இருக்கலாம்.

ஐம்பது வருடங்களாக வாசித்து வரும் என்னுடைய அக்கா 16 ரமணி சந்திரன் நாவல்களை சேகரித்து வைத்திருக்கிறார். இன்னும் சேர்ப்பார். சிறு வயதில் ஊர் ஊராகப் போய் அக்காவுக்கு நாவல் இரவல் கேட்பதும், பத்திரிகைகள் கடன் வாங்குவதுமாக என் வாழ்க்கை ஆரம்பித்தது. அன்று தொடங்கி இன்றுவரை எத்தனை ஆயிரம் நாவல்களை என்னுடைய அக்கா வாசித்து தள்ளியிருப்பார்.ஆனால் அவருடைய வாசிப்பின் சிகரம் இன்றைக்கும் ரமணி சந்திரன்தான்.

இதிலே எனக்கு ஒரு படிப்பினை இருந்தது. நாவல்கள் படிப்பதில் எண்ணிக்கை பிரதானமல்ல; தரம்தான் முக்கியம். சிலர் எவ்வளவுதான் படித்தாலும் தங்கள் தரத்தை உயர்த்த முயற்சிப்பதில்லை.இன்னும் சிலரோ நாலு புத்தகங்களைப் படித்துவிட்டு அதற்கு அடுத்தபடி இலக்கியத்துக்கு

நகர்ந்துவிடுவார்கள்.

இன்னும் ஓர் இருபது வருடங்கள் தொடர்ந்து எழுதினால் ரமணி சந்திரனுக்கு நாலாவது இடத்தை நான் பிடித்துவிடலாம் என்று என் அக்கா நம்புகிறார். இன்னும் இருபது வருடத்தில் அக்காவின் நிலமை

எப்படி இருக்கும் ? அவருடைய நாவல் சேகரிப்பு 36 ஆக உயர்ந்திருக்கும்.

சமீபத்தில் பி. அனந்தகிருஷ்ணன் எழுதிய ‘புலி நகக்கொன்றை ‘ நாவலைப் படித்தபோது இந்த எண்ணங்கள் எனக்கு ஏற்பட்டன. இதை எழுதிய ஆசிரியர் இந்திய மத்திய அரசு அதிகாரியாக டில்லியில் வேலைபார்க்கிறார். அவர் முதலில் ஆங்கிலத்தில் The Tigerclaw Tree என்ற

பெயரில் இதை எழுதி 1998 ல் பென்குயின் வெளியீடாக கொண்டுவந்துள்ளார். பிறகு அதே நாவலை மொழிபெயர்க்காமல் தமிழிலே திரும்பவும் எழுதினார். தமிழிலே முதலில் எழுதாதற்கு என்ன காரணம் என்று கேட்டால் ‘பயம் ‘ என்று சொல்லியிருக்கிறார். இவ்வளவு அழகான தமிழ் நடையை வைத்துக்கொண்டு பயந்தால் மற்றவர்கள் கதி என்ன ஆவது என்று நான் நினைத்தேன்.

தமிழ்நாட்டிலே வசித்த தென்கலை ஐயங்கார் குடும்பம் ஒன்றின் வாழ்க்கையை சொல்வதுதான் நாவல். அவர்கள் குடும்பத்தை நாலு தலைமுறையாக ஒரு சாபம், மரணத்துக்கு மேல் மரணமாக துரத்துகிறது. பொன்னா பாட்டி படுத்த படுக்கையில் இருந்து தன் நினைவுகளை சுழல விடுகிறாள். அந்த நினைவுகள் கொள்ளுப் பேரன்களான நம்பி, கண்ணன் இவர்களை தொட்டு திரும்புகின்றன. அதேவேளை அவளுடைய இளமைக்கால ஞாபகங்களும் அவளை அசைக்கின்றன. ஒரு பெரிய நதி கரைகளையும், மலைகளையும், மரங்களையும் தொட்டுக்கொண்டு ஓடுவதுபோல இந்த நாவல் அரசியல், சமூக மாற்றங்கள், சினிமா, ஆன்மீகம் என்று எல்லாவற்றையும் தொட்டுக்கொண்டு நகர்கிறது.

ஒரு நூறு வருட வரலாற்றை, நாலு தலை முறைக் கதையை 300 பக்கங்களில் சுவாரஸ்யம் குறையாமல் சொல்வது பிரயத்தனமானது. தொடக்கத்திலிருந்து முடிவு வரை உண்மையின் நாதம் ஒலிப்பது இந்த நாவலின் சிறப்பு. பொன்னா, ஆண்டாள், நம்பி, கண்ணன் போன்ற பாத்திரங்களின் வார்ப்பில் பிரத்தியேகமான அழுத்தம் இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் இது இரண்டு கொள்ளுப்பேரன்களின் கதை; நம்பி அசைக்கமுடியாத ஒரு கொள்கையில் வைத்த நம்பிக்கையில் உயிரை விடுகிறான்; கண்ணனோ நிரந்திரமான கொள்கைப்பிடிப்பு ஏதும் இல்லாமல், முடிவுகளை தள்ளிப் போடுபவனாக வாழ்க்கையை தயக்கத்துடன் எதிர்கொள்கிறான். இலக்கியத் தேர்ச்சியுடனும், கலை நயம் குறையாமலும் கூறப்பட்ட நாவல் என்று இதைச் சொல்லலாம்.

இமயமலைத் தொடர்போல நாவல் பல சிகரங்களைத் தொட்டுச் செல்கிறது. விஷக்கடி வைத்தியனுக்கும் ஆண்டாளுக்குமான அந்த முடிவுபெறாத இரவு, திடாரென்று பாதை மாறுகிறது. ‘கரிய மயிர் அடர்ந்த மார்பில் இரண்டு பேருக்கு தாராளமாக இடம் இருந்திருக்கும். ‘ பொன்னாவும் ஓர் இளம் விதவைதான். ‘அம்மா, உங்கிட்ட இருக்குது புருசன் போனதோடு போகாது ‘ அப்படி பொன்னாவைப் பார்த்து மருத்துவச்சி சொல்கிறாள். வைத்தியனுடைய தோற்றம் பொன்னாவையும் நிலைகுலைய

வைத்துவிட்டது.

ஆண்டாள் கூனிக்குறுகி நிற்பாள் என்று எதிர்பார்த்தால் வேறு என்னவோ நடக்கிறது. தருணம் கொடுத்த துணிவில் ஆண்டாள் கூறுகிறாள். ‘ஆமாம், நானேதான் கூப்டேன். அப்படிப் பாக்காதே. ஒண்ணும் நடக்கல. நீதான் மோப்பம் பிடிச்சுண்டு வந்துட்டயே. ‘ ஒரு விதவை தாயிடம் விதவை மகள் பேசும் வார்த்தைகள். சவுக்கு சுருண்டு சுளீர் என்று உறைக்கிறது.

இன்னொன்று நரசிம்மன் தூக்குப்போட்டு சாகும் இடம். அவன் சாவுக்கு காரணமாக இருந்த மலம் அள்ளுபவள் ஊர்வலத்தின் பின்னால் ஒப்பாரி வைத்துக்கொண்டு சுடுகாடு வரை போகிறாள். அவன் செய்தது குற்றம்; ஆனால் பெற்ற தண்டனை மிக அதிகம். அது அவளை சுட்டு சுடுகாடுவரை இழுக்கிறது.

பேராசிரியருக்காக கண்ணன் கலெக்டரிடம் பேசி தோற்கும் இடம். குற்றம் சாதாரணம், ஈவ்டாசிங்கில்கூட அடங்காது. அது பொலீஸ் அக்கிரமமாக மாறி, சாதிக் கலவரம் என்ற தோற்றத்தை உண்டுபண்ணுகிறது. அத்துடன் நிற்கவில்லை. மாணவர் ஆசிரியர் போராட்டக் குழு மாவட்ட ஆட்சியாளரைப் பார்த்து பேசிய பிறகு முற்றிலும் புதிய வடிவம் எடுக்கிறது. அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை. தனி மனித தண்டனை. தற்கு வசதியாக பலியாகிறான் கண்ணன். இத்தனையும் அற்புதமான படங்களாக சித்தரிக்கப்பட்டு மனதிலே இடம் பிடித்துவிடுகின்றது.

கண்ணனும் தாசியும் கழிக்கும் இரவு. இது மகோன்னதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ‘இருங்க. இடுப்புக்கு அண்டக் கொடுக்கணும்ல. ‘ ரவிக்கையால் மூடிய லெனின் இரண்டு பாகங்கள் இடுப்புக்கு கீழே உதவிக்கு வருகின்றன. வெள்ளை கலையுடுத்திய சரஸ்வதி தேவிக்கு ஸ்தோத்திரம் நடக்கிறது. அவள் லெனினையும், கண்ணனையும் காப்பாற்றிவிடுகிறாள்.

இறுதியில் நம்பியின் முடிவு. வசைகளிலே எத்தனை வகையுண்டோ அத்தனையும் இலக்கியத்தன்மையோடு வெளிவருகின்றன. அரச பயங்கரவாதத்தை தமிழில் முதலில் சொன்ன காவியம் சிலப்பதிகாரம் என்றால் இந்த நாவல் அதையே மிகையில்லாமல், சிறப்பாக கூர்மையாகச் சொல்கிறது. இங்கேயும் முறையான விசாரணை இல்லாமல் ஒருவன் அரச பயங்கரவாதத்தின் உச்சத்தில் அநியாயமாகக் கொல்லப்படுகிறான்.

‘நம்பி ஐந்து நாட்கள் பிணவறைத் தரையில் அமைதியாக அழுகினான். அவனது காயங்களும் அழுகி அடையாளம் தெரியாமல் கரைந்தன. அவனுடைய உடல் பனை ஓலையில் தாறுமாறாகக் கட்டப்பட்டு குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. புகையிலைக் கருப்பட்டிச் சிப்பம். அதே வண்ணம். அதே ஒழுகல். நாற்றம்தான் வேறுமாதிரி…….ஒரு சுள்ளி படர்ந்த திருவனந்தபுரச் சுடுகாட்டில் அவன் புகைந்துபோனான். ‘ இந்த வார்த்தைகள் வெகு காலமாக வாசகர்களின் மனதில் புகைந்து கொண்டிருக்கும்.

அரசியல், சமூக மாற்றங்கள், சினிமா, ஆன்மீகம் எல்லாம் அளவோடு பின்னிப் பிணைந்து வருகின்றன. காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், பெரியார் சித்தாந்தங்களும், காந்திஜி, ராஜாஜி, திலகர், வ.வெ.சு ஐயர் நடவடிக்கைகளும், ஆஷ் கொலை வழக்கும் இன்னும் உலக சம்பவங்கள்கூட நாவலில் சரியான இடங்களில் தலை காட்டினாலும் எந்த சமயத்திலும் அவை அதன் ஓட்டத்தை இழுத்து நிறுத்தவில்லை.

The Statesman இந்த நாவல் One Hundred Years of Solitude கதையை நினைவூட்டியதாக குறிப்பிட்டிருந்தது. எனக்கும் அவ்விதமே அடிக்கடி தோன்றியது. நாலு தலைமுறை வந்தது ஒரு காரணம். மற்றது ஒவ்வொரு சாவும் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. ராமனுடைய மரணம். ஆண்டாளுடைய சிறுவன்/கணவன் மரணம். லட்சுமியின் மரணம். நரசிம்மனுடைய சாவு. இறுதியில் நம்பி கொல்லப்படும் கொடூரம். இவை எல்லாமே சீக்கிரம் மனதை விட்டு அகலாது.

தமிழ் நடை தெளிந்த நீரோடைபோல சுகமாக இருக்கிறது. இது ஆசிரியருடைய முதல் எழுத்து என்பதை நம்பவே முடியவில்லை. இப்படி அழகான நடை சாதாரணமாக எல்லோருக்கும்கிட்டுவதில்லை. சில உதாரணங்களைப் பாருங்கள்.

‘இவளுக்குள் நேரம் ஏற ஏற ஆசை அதிர்ந்து தளும்பும். வழியாமல் பார்த்துக்கொள்வதுபெரும்பாடு. ‘

‘எரியும் நிலக்கரிபோல் கண்கள் ‘

‘எளுபதைத் தாண்டி ஐஞ்சு வருஷம் ஆயிட்டு. பாம்பு நெளியற சத்தம் கூட இன்னிக்குவரைக்கும் கேக்குது எனக்கு. ‘

‘முந்தையப் படங்களில் கரகரத்த தொண்டையில் பேசும் வில்லன்களுடன் கத்திச்சண்டைபோட்டு பிதுங்கிச் சதை வழிந்து வெளித்தள்ளிய இடுப்புகளைக் கொண்ட, காப்பாற்றப்படக்கூடாத கதாநாயகிகளைக், காப்பாற்றினார். ‘

‘எல்லாரும் திருடனுங்க. மேகவெட்டைச் சாமானுங்க. இரண்டணா தேவிடியாகூட பக்கத்தில்வர யோசிப்பா. ‘

‘அழுகின்ற குழந்தை ஒன்றை அதனுடைய தாய் வாயில் அடித்தே அடக்கிக் கொண்டிருந்தாள். ‘

‘ஆனால் ஜன்னல் கொழுத்த குறைவாயுள் கொண்ட மழை முத்துக்களைச் சேர்க்கத் தொடங்கியதில் மரங்கள் சீக்கிரம் மறைந்து போயின. ‘

இப்படிப் பல அற்புதமான வசனங்கள். இவற்றை எழுதிய ஆசிரியர் தனக்கு தமிழில் எழுதப் பயம் என்று கூறியிருந்தது என் ஆச்சரியத்தை கூட்டியது.

இந்த நாவலின் தலைப்பு பிரமாதம். இப்படியான ஒரு நாவலுக்கு தலைப்பு வைப்பது சிரமமானது. ஆனால் இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. ஐங்குறுநூறு 142 ஆவது பாடலில் இருந்து தனக்கு இந்த நாவலுக்கான தலைப்பு கிடைத்ததாக

ஆசிரியர் சொல்கிறார்.

எக்கர் ஞாழல் இறங்கிணர்ப் படுசினைப்

புள்ளிறை கூருந் துறைவனை

உள்ளேன் தோழி படா இயரென் கண்ணே.

‘தோழி கேள். நான் அவனைப்பற்றி நினைக்கமாட்டேன். யாரை ? எவன் நாட்டின் மணலடர்ந்த கரையில் இருக்கும் புலி நகக் கொன்றை மரத்தின் தாழ்ந்த, பூத்திருக்கும் கிளைகளில் பறவைகள் ஆக்கிரமித்துக் கூச்சல் இட்டு அழிவு செய்துகொண்டிருக்கின்றனவோ அவனை. என் கண்களுக்கு சிறிது தூக்கம் கிடைக்கட்டும். ‘ ( ஞாழல் – புலிநகக்கொன்றை )

உண்மையில் இது காதலை சொல்லும் பாடலல்ல; குடும்பத்தைப் பற்றியது. எவ்வளவுதான் துன்பம் வந்தாலும் அவற்றை தாங்கிக்கொண்டு மரம் நிற்கிறது. பட்சிகள் அதன் கிளைகளையும், பூக்களையும் கொத்தி அழிவு செய்தபடியே இருக்கின்றன. ஆனால் மரம் ஒன்றுமே செய்வதில்லை, எதிர்பார்ப்பதும் இல்லை. உயிர் கொடுத்தபடியே இருக்கிறது. புலி நகக்கொன்றை. இதைவிட பொருத்தமான தலைப்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.

கண்ணன் அழகான பாத்திரம். நாவலிலேயே சொல்லியிருப்பதுபோல ஒரு குழப்பமே உருவான ஹாம்லெட்தான். சினிமா, திமுக, கம்யூனிஸ்ட் கட்சி, கடைசியில் ஆன்மீகம் என்று அவன் பயணம் தொடர்ந்தாலும் இறுதியில் அவனிடம் சிறிது இரக்கம் ஏற்படுகிறது. நிபந்தனைகளோடு வந்த உமாவின் காதலில் அவனுக்கு நிறைவு கிடைக்கவில்லை. தாசியிடம் போகிறான். ரோசாவை மணமுடிக்க கேட்கிறான். மறுபடியும் உமாவிடம்போகும் ஆசை துளிர்க்கிறது. இப்படி கதை போகிறது.

குறையென்று ஏதாவது கூறவேண்டும் என்று பிடிவாதமாகப் பார்த்தால் ஒன்று, நாவலின் தொடக்கத்தைச் சொல்லலாம். இதை கொஞ்சம் சுவாரஸ்யமாக அமைத்திருக்கலாம். இந்த தொடக்கம் பல வாசகர்களை விரட்டிவிடும். இரண்டு, கண்ணன் திடாரென்று ரோசாவை மணக்கும்படி கேட்கிறான். இதற்கான காரணம் வலுவாகக் காட்டப்படவில்லை, அவன் குழப்பமான மனிதனாக இருந்தாலும்கூட. மூன்றாவது கண்ணன், உமா, ராதா பாத்திரங்களை இன்னும் கொஞ்சம் ஓட விட்டிருக்கலாம். அவர்கள்

வரும்போதெல்லாம் புதுக் காற்று அடித்தது.

முடிவை நெருங்கும்போது பதினெட்டாம் நாள் போரில் வீமனுடைய மனம் அடைந்த குழப்பத்துடன் என் மனம் கண்ணனை ஒப்பிட்டது. கண்ணனுக்கு வெற்றியா, தோல்வியா ? பெரிய எதிர்பார்ப்புகள் கொண்ட மனிதனல்ல அவன். உமாவுக்காக ஐ.ஏ.எஸ் பரீட்சை எழுதுகிறான், அவளுக்காக தன் வாழ்க்கை முறையையே மாற்ற சம்மதிக்கிறான். எந்த அதிகாரம் மிகவும் கொடூரமான முறையில் அவனுடைய வேலையை தற்காலிகமாக பறித்து அவமானம் செய்ததோ அதே அதிகாரப் படையில் சேர்வதற்கு டெல்லி போகிறான். மிகப்பெரிய முரண். பதினெட்டு அத்தியாயங்கள், மிகவும் பொருத்தமானதே. பகவத்கீதைகூட 18 அத்தியாயங்கள்தான். இதை யோசித்தே ஆசிரியர் அதிகாரங்களை அமைத்திருப்பார் என்று எனக்கு படுகிறது.

கடந்துபோன ஆண்டுகளில் நான் வாசித்த நாவல்களில் ( ஆங்கிலம் உள்பட) மனதுக்குப் பிடித்த சிறந்த பத்து நாவல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். தேடுபவனிடம் தரமான இலக்கியங்கள் சிக்கும். அபூர்வமான சிற்பக் கலை நிபுணர் ஒருத்தர் பார்த்து, பார்த்து செதுக்கியதுபோல இந்த நாவல் மிகவும் நுட்பமானதாக அமைந்திருக்கிறது. அல்லது யாளியின் வாயில் காலம் காலமாக உருண்டு தேய்ந்து வழுவழுப்பான, உருட்ட முடிந்த ஆனால் எடுக்க முடியாத, கல் உருண்டைபோல என்றும்

சொல்லலாம். அல்லது தேர்ந்த கலைஞன் இரவும், பகலும் கவனம் குறைவுபடாமல் இழைத்த 120 கண் பத்தமடைப் பாய் போல என்றும் சொல்லலாம்.

புத்தகத்தை கீழே வைத்துவிட்டேன். புள்ளினங்கள் இன்னும் மரத்தைச் சுற்றிப் பறந்து கொண்டிருக்கின்றன. அவற்றின் சத்தம் அடங்காது. அவை சொல்லும் சங்கதிகளுக்கும் ஓய்வில்லை.

—————————————

amuttu@rogers.com

Series Navigation

அ.முத்துலிங்கம்

அ.முத்துலிங்கம்