‘நற்செய்தி பரப்பும் ‘ கருவியாக இனவாதம்

This entry is part [part not set] of 31 in the series 20020825_Issue

அரவிந்தன் நீலகண்டன்


‘தெற்காசிய கலாச்சார வரலாற்றின் மீது தொடர்ந்து திணிக்கப்பட்டு வரும் எளிமையான பதினெட்டாம் நூற்றாண்டு வரலாற்றியல் கருத்துக்களை மிக வன்மையாக மறுதலிக்கிறோம். இன்றும் நிலவி வரும் இத்தகைய விளக்கங்கள் ஐரோப்பிய இனமுதன்மை, காலனியாதிக்கம், இனவாதம் மற்றும் செமிடிக் வெறுப்பு போன்ற அம்சங்களால் குறுகிய தன்மை பெற்று விளங்குகின்றன. தெற்காசிய பண்பாட்டு வரலாறு குறித்து வெளிவந்துள்ள அகழ்வாராய்வுத் தகவல்களை புறக்கணித்து பாரபட்சமாக பழைய ஊகங்களையேப் பற்றித் திரியும் போக்கு வரும் நூற்றாண்டிலாவது மாற வேண்டும் ‘ 1 -ஜேம்ஸ் ஷாஃபர்

மனித வரலாற்றில் ஆதாரமற்ற ஊகங்களின் அடிப்படையில் எழுந்த பல கோட்பாடுகள் மனித அறிதலின் பெரும் பயணத்தில் மறுதலிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆரிய இனவாதக் கோட்பாடு போல மிகத் தெளிவாக மிக முழுமையாக உடைத்தெறியப் பட்ட கோட்பாடுகள் மிகச்சிலவே. எனினும் ஜேம்ஸ் ஷாஃபர் குறிப்பிடுவது போல மிகச் சிலக் கோட்பாடுகளே இவ்வாறு மறுதலிக்கப் பட்ட பின்பும், தன் ஆதாரமற்ற தன்மை வெளியானபின்பும், வெகு ஜன கல்வியிலும், சில அறிஞர்கள் மத்தியிலும், ஊடகங்களிலும் உயிர் வாழ்ந்துள்ளன. ‘ஆரிய இன ‘ வாதம் அடிப்படையற்ற ஒரு உருவாக்கம். இன்று அது ஒரு நிரூப்பிக்கப்பட வேண்டிய நிர்பந்தம் ஏதுமற்று உண்மையென ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு பொய்.

இவ்வாறு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள பொய்களிலும் கூட, ஆரிய இனவாதம் போன்று மனித குலத்திற்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய ‘ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பொய்கள் ‘ ஏதுமில்லை. பலகோடி இந்தியர்களின் அடிமை நிலையினை நியாயப்படுத்திய இக்கொள்கையின் மரபுப் பிறழ்ச்சி ஹிட்லரின் ‘இறுதித் தீர்வு ‘களில் ஐரோப்பாவையும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. இலங்கையில் இன்றும் மனித இரத்தம் சிந்தக் காரணமாயுள்ளது. ஆரிய இன ஆராய்ச்சியில் தொடங்கிய இத்தகைய மேற்கத்திய இனவாத ஆராய்ச்சிகளின் விளைவுகள் ஆப்பிரிக்காவில் இன்றும் இனப்படுகொலைகளை நடத்தி தம் இரத்தப் பசியை தீர்த்து வருகின்றன. இத்தகைய இன ஆராய்ச்சிகள் வெறும் அறிவு தாகம் தீர மேற்கத்திய காலனிய அறிஞர்களால் நடத்தப்பட்டவை அல்ல. ‘நற்செய்தியை உலகமெங்கும் பரப்ப ‘ கிளம்பிய மிஷனரி ஆய்வாளர்களின் மூளைகளில்தான் மனிதர்களைப் பிரிக்கும் இந்த இனக் கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. பிரிட்டிஷ் கல்விமுறை மூலம் பலகோடி இந்திய குழந்தைகளின் மனங்களில் விதைக்கப்பட்ட இக்கோட்பாடு, இந்தியர்களிடையே பொறாமை, நம்பிக்கையின்மை மற்றும் வெறுப்பினை பரப்பும் கருவியாகச் செயல்பட்டது. ‘வெள்ளைத் தோல் ‘ ஆரிய நாடோடிகள் கருப்பின பழங்குடியினரை வெற்றிக் கொண்டதே பாரதத்தின் தொல் பழம் வரலாறு என விளக்கும் இந்த கோட்பாடு அன்றைய ஆளும் வர்க்கத்தினரின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு மிகச் சிறப்பாகத் துணை போனதென்றால், இன்று வத்திக்கான் முதல் பாப்டிஸ்ட்கள் ஈறாக பல மிஷினரிகள் வனவாசிகள், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோரிடையே ‘ஆத்மாக்களின் அறுவடை ‘யை நடத்த இக்கோட்பாடு மிக நன்றாகவே உதவி புரிகிறது. அன்றைய காலனியாக்க வாதிகளுக்கு ‘பிரித்தாள ‘ப் பயன்பட்ட ஆரிய இனவாதம் இன்றைய ஆன்மிக காலனியாதிக்க வாதிகளுக்கு ‘பிரித்து மெதம்மாற்ற ‘ பயன்படுகிறது.

இம்மாதிரி இனம் பற்றிய போலி ஆராய்ச்சிகளின் வேர்களை அறிய சில நூற்றாண்டுகளாவது நாம் பின் செல்ல வேண்டும். பொது வருடம் (CE) 1312 இல் வியென்னாவின் இயுக்மெனிக்கல் கவுன்சில், ‘புனித திருச்சபைக்கு அவிசுவாசிகளின் மொழிகளில் திறமை பெற்ற பல கத்தோலிக்கர்கள் அவசியம். பரிசுத்த நற்செய்தியை அவிசுவாசிகளிடம் கொண்டு செல்ல அவர்கள் தேவைப்படுவார்கள் ‘ என அறிவித்தது. ‘அவிசுவாசி ‘களின் மொழியை கற்பதோடு இந்த மதமாற்ற வியூகம் முடிவு பெறவில்லை. மாறாக, மொழியியல் ஆராய்ச்சிகளும் இம்மதமாற்ற வியூகத்தின் ஒரு பகுதியாகவே மேற்கொள்ளப்பட்டன. எனவே காலனியாதிக்கத்தை இந்தியாவில் வேரூன்ற வைக்கும் திருப்பணியில் பங்கேற்க பல்கலைக்கழகங்கள் அழைக்கப்பட்ட போது அவற்றின் ‘அறிஞர் பெருமக்கள் ‘ தீவிர கிறிஸ்தவ அறிஞர்களாகவே இருந்தனர். இவர்களைப் பொருத்தவரையில் இந்தியாவில் கல்விப் பணியின் முக்கிய அவசியம் உண்மையினை அறிதல் என்பதனை விட கிறிஸ்தவத்தைப் பரப்புதல்தான்.

எனவே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் மற்றும் கிழக்கத்திய கலாச்சாரம் குறித்து ஆராய கர்னல் போடன் ஒரு கணிசமான தொகையினை(அந்த காலத்தில் 1832 (CE) 25,000 பவுண்டுகள்) தன் உயிலில் அளித்திருந்தார். இதன் நோக்கம் குறித்து அவர் தெளிவாகவே கூறினார், ‘நாம் இந்திய மக்களை கிறிஸ்தவர்களாக மாற்றவே இத்தொகை அளிக்கப்பட்டிருக்கிறது. ‘ பின்னாளில் ஆரிய இனவாதக் கோட்பாட்டின் மிக முக்கிய பரப்பு மையமாக போடனின் இந்த சமஸ்கிருத ஆய்வுத்துறையே விளங்கியது. ஆக்ஸ்போர்டின் ஒரு முக்கிய சமஸ்கிருத பேராசிரியரான மாக்ஸ்முல்லர்தான் ஆரிய இனவாதத்தைப் பரப்பியவர்களுள் முதன்மையானவர். இந்த சமஸ்கிருத பேராசிரியர் தன் பல வருட கடின உழைப்பின் மூலம் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். தன் வாழ்வின் மிகப்பெரிய இச்சாதனைக் குறித்து அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார், ‘ எனது இம் மொழிபெயர்ப்பு இந்தியாவின் விதியையும் பலகோடி இந்திய ஆத்மாக்களின் வளர்ச்சியையும், பெருமளவுக்கு நிர்ணயிக்கப் போகின்றது. வேதங்களே இம்மக்களின் சமயத்தின் வேர். அவ்வேர் எத்தகையது என்பதனைக் காட்டுவதன் மூலம் அதிலிருந்து மூவாயிரம் வருடங்கள் வெளிவந்திருக்கும் அனைத்தையும் வேரறுக்க முடியும் என நிச்சயமாக நம்புகிறேன். ‘ 2

இந்திய கலாச்சாரத்தை அறிவதல்ல முல்லரின் நோக்கம் மாறாக அதனை ‘வேரறுப்பதே ‘. பொதுவாகவே ஐரோப்பிய அறிஞர்களின் குறிப்பாக கிறிஸ்தவ மிஷினரி அறிஞர்களின் நோக்கங்களுக்கான சிறந்த எடுத்துக்காட்டே மாக்ஸ்முல்லர். 1851ெஇல் மாக்ஸ் முல்லர் எழுதிய ஆங்கிலக் கட்டுரையில்தான் முதன்முதலாக ‘ஆரிய ‘ எனும் வார்த்தை இனவாதத் தன்மையுடன் பயன்படுத்தப்பட்டது. மாக்ஸ் முல்லரின் சிறந்த நண்பரும் அவருடன் பணி புரிந்த இந்தியவியலாளருமான பவுல் இவ்வார்த்தையினை இனவாதப் பொருள்பட பிரான்சில் பிரபலப்படுத்தினார். விரைவிலேயே பல கிறிஸ்தவ ஈடுபாடுடைய அறிஞர்கள் ஆரிய இனவாதத்தால் ஈர்க்கப்பட்டனர். 1859 இல் சுவிஸ் மொழியியலாளரான அடால்ஃப் பிக்டெட் ஆரிய இனவாதம் குறித்து பின்வருமாறு எழுதினார், ‘ இறையருளால் உலகம் முழுவதும் ஆள வாக்களிக்கப்பட்டதோர் இனம் உநூடன்றால் அது ஆரிய இனம் தான். கிறிஸ்துவின் மதம் உலகிற்கொரு ஒளியாக வந்தது. கிரேக்க மேதமை அதனை சுவீகரித்துக்கொண்டது;ரோம சாம்ராஜ்யாதிகாரம் அதனைப் பரவச் செய்தது;ஜெர்மானிய வலிமை அதற்கு புத்துயிர் அளித்தது. மனித குலம் முழுமைக்குமான இறைவனின் திட்டத்தில் முக்கிய கருவி ஐரோப்பிய ஆரியர்களே. ‘3

பிரான்சின் சமய வரலாற்றாசிரியரான எர்னெஸ்ட் ரெனன் 1861 இல் பின்வருமாறு குறிப்பிட்டார், ‘..செமிட்டிக் இனத்தவர் (யூதர்கள் -அ.நீ) செய்ய வேண்டியதைச் செய்யும் திறன் அற்றவர்கள்;நாம் ஜெர்மானியகளாகவும் கெல்ட் இனத்தவர்களாகவுமே இருப்போம். நம் நித்திய நற்செய்தியான கிறிஸ்துவத்தை ஏந்தியிருப்போம்….யூதர்கள் வீழ்ந்த பிறகு ஆரியர்களான நாமே மனித இனத்தை நடத்திச் செல்ல மீதியிருப்போம். ‘4 ஆராய்ச்சியின் பேரில் இனவாத அர்த்தம் கொடுக்கப்பட்ட ஒரு சொல் ஒரு சில வருடங்களில் உலகத்தின் மீது ஐரோப்பிய இன, கலாச்சார, சமய மேன்மையினை நிறுவுதலை நியாயப்படுத்தும் ஒரு சொல்லாகிவிட்டது.

அனைத்து ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்களும் மாக்ஸ்முல்லரின் இந்த இனவாத விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. 1861 இல் ‘மொழிகளின் அறிவியல் ‘ என தான் கொடுத்த மூன்று நாட்கள் சொற்பொழிவுகளில் வேதங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டி தன் இனவாத விளக்கத்தை மாக்ஸ் முல்லர் நியாயப்படுத்தினார். அமெரிக்க வரலாற்றறிஞரான லுயெிஸ் பி சிண்டர் மாக்ஸ் முல்லரின் இந்நிலைபாடு குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறார், ‘மாக்ஸ் முல்லர் மீண்டும் மீண்டும் , இந்தோெஐரோப்பிய மற்றும் இந்தோெஜெர்மானிய போன்ற பதங்கள் ‘ஆரிய ‘ எனும் பதமாக மாற்றப்பட வேண்டும் என வாதாடினார். ஏனெனில் இந்தியாவில் வாழ்ந்த சமஸ்கிருதம் பேசிய இனத்தவர் தங்களை ‘ஆரியர் ‘ எனக் குறிப்பிட்டனர் என்பதால். இப்பழம் ஆரிய மொழி ஒரு பழம் ஆரிய இனம் இருந்திருக்க வேண்டும் என்பதனை க ‘ட்டுவதாகவும், அந்த இனமே ஜெர்மானிய, கெல்ட், ரோமானிய, கிரேக்க, ஸ்லாவிய, பெர்சிய, ஹிந்து இனங்களின் பொது மூதாதைய இனம் என்பது அவரது வாதம். ‘5 சிண்டர் மாக்ஸ்முல்லரின் இம்முயற்சி குறித்து, ‘ஆரிய மொழியினை ஆரிய இனத்துடன் இணைக்க முயலுவது முட்டாள்தனமான முயற்சி ‘ என கருத்து தெரிவிக்கிறார்.5 மாக்ஸ்முல்லரது காலத்திலேயே ஜெக்கோபி, ஹிலெபிராந்த், விண்டர்னிட்ஸ் போன்றவர்கள் ஆரிய இன வாதக் கோட்பாட்டினை எதிர்த்துள்ளனர். எனினும் இக்கோட்பாடு எங்ஙனம் இந்தியாவில் வேரூன்றியது ?

இக்கோட்பாட்டினை பரப்புவதில் மிஷினரிகளின் பங்கு அபாரமானது. முன்னணி மிஷினரி இந்தியவியலாளரான ஹண்டர், இந்தியவியல் ஆராய்ச்சிகள் ‘ கிறிஸ்தவப் பற்று எனும் புனித ஜுவாலையால் சூடேற்றப்படுவதாக ‘க் கூறினார்.6. இத்தகைய ‘கிறிஸ்தவ புனித ஜுவாலையால் சூடேற்றப்பட்ட ‘ ஆராய்ச்சியின் விளைவின் எடுத்துக்காட்டாக மாக்ஸ் முல்லர் வேதங்களின் காலத்தை விவிலிய சிருஷ்டிக் கால அளவின் அடிப்படையில் ெ உலக சிருஷ்டி 4004(BCE) அக்டோபர் நிர்ணயித்ததன் மூலம் அறியலாம்.7 இவ்வாறு கிறிஸ்தவப் பற்று எனும் புனித ஜுவாலைக்கும் ஐரோப்பிய இனவாதத்திற்குமான திருமணத்தில் எழுந்த ஆராய்ச்சி வினோதங்கள் விரைவில் ஐரோப்பாவில் சாவு முகாம்களையும், உலகப்போரையும் உருவாக்கின. இத்தகைய இந்தியவியல் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட பம்பாயின் ஆசியக் கழகத்தின் தலைவராக 1836ெமுதல் 1846 வரை விளங்கியவர் பிராட்டஸ்டண்ட் திருச்சபையைச் சார்ந்த மிஷினரி ஜான் வில்சன். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரியர்ெஆரியரல்லாதோர் எனும் பகுப்பின் படி அமைவது மதமாற்றத்திற்கு சிறந்த இலக்கான மக்கள் கூட்டங்களை தேர்ந்தெடுத்து பணியாற்ற உதவும் என்பது இவர் நம்பிக்கை. 1856 இல் அவர் ஆற்றிய உரையில் பிரிட்டிஷ் அரசு உண்மையில் ஆரியர்கள் என்ற முறையில் மீண்டும் தங்கள் இந்திய ஆரிய சகோதரர்களுடன் இணைந்ததுதான் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என காலனியாதிக்கத்தை நியாயப்படுத்தினார். (மெக்காலேயிஸ்ட் இந்தியர்களும் இதற்கு ஒத்தூதினர். உதாரணமாக, கேஷப் சந்திர சென். இது குறித்து ‘பில்ட் டவுண் மேற்கோள் ‘ என தனிக் கட்டுரை எழுதப்படுகிறது.) மேலும் வில்சன் இந்த பிரிந்தவர் இணைந்தது ‘உலகின் மிக தாராள கொடையாளியான பிரிட்டிஷ் அரசுடன் இந்தியாவை இணைத்துள்ளதாகவும் ‘ குறிப்பிட்டார்8.

காலனியாதிக்கத்தை நியாயப்படுதியதுடன், இந்தியர்களுக்கு தங்கள் பாரம்பரியம் குறித்து எவ்வித பெருமையும் ஏற்படாதவாறும் இந்த இனவாதக் கோட்பாட்டின் கற்பித்தல் பார்த்துக்கொண்டது. கிழக்கத்தியவியல் அறிஞர்களின் சர்வ தேச மாநாட்டில் பேசிய மாக்ஸ்முல்லர் இது குறித்து தெளிவாகவே கூறினார், ‘ இனி அவர்கள் தங்கள் பழம் புலவர்கள் குறித்து உயர்வான புகழ்ச்சி கொள்ள மாட்டார்கள், மாறாக (தங்கள் பழம் பாரம்பரியம் குறித்து) கவனமான ஆராய்ச்சியில் எழும் இரசனையே கொள்வார்கள் ‘9 அதாவது தங்கள் மூதாதையர்கள் குறித்து இந்தியர்கள் கொள்ளும் பெருமிதத்தின் அளவுகோல்கள் மாக்ஸ்முல்லர் மற்றும் இதர கிறிஸ்தவ மிஷினரி ஆராய்ச்சியாளர்களாலேயே நிர்ணயிக்கப்படும். இந்த காலனியாதிக்க கலாச்சார மறுகல்வியினை பரப்ப, அக்கால பிரிட்டிஷ் கல்வி முறையைக்காட்டிலும் மேன்மையானதாக இருந்த இந்திய பாரம்பரிய கல்வி அமைப்புக்கள் அழிக்கப்பட்டு வெற்றிடம் உருவாக்கப் பட்டது. பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரான கெயிர் ஹார்டி பிரிட்டிஷ் ஆவணங்களை ஆதாரமாகக்

கொண்டு அளித்த புள்ளிவிவரங்கள்படி வங்காளத்தில் மட்டுமே அனைத்து ஜாதியினரும் பயிலும் பள்ளிக்கூடங்களின் தொகை 80,000. அதாவது 400 வங்காளிகளுக்கு ஒரு கல்விச் சாலை. லதூலள தன் ‘பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு ‘ எனும் நூலில், கூறுகிறார், ‘ ஒவ்வொரு ஹிந்து கிராமத்திலும் அனைத்துக் குழந்தைகளும் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாகவும் அடிப்படைக் கணிதத்தில் தேர்ச்சி உடையவர்களாகவும் இருந்தனர். நம் அதிகாரம் பரவி வேரூன்றி விட்ட இடங்களில் இந்தக் கிராம கல்வி சாலைகள் அழிக்கப்பட்டு விட்டன. ‘ காலனியாதிக்க பிரிட்டிஷ் சாம்ராஜ்யவாதிகளால் பாரம்பரிய கல்விமுறை அழிக்கப்பட்ட பின் அவ்வெற்றிடங்களில் நுழைந்தன கிறிஸ்தவ மிஷினரிகளின் கல்விச்சாலைகள். இந்திய மொழி வழக்கில் உயர் இலக்கியத்திற்கோ அறிவியலுக்கோ சிறிதும் இடமில்லை என தன் புகழ் வாய்ந்த ‘மினிட்ஸ் ‘ களில் குறிப்பிட்ட மெக்காலே பிரிட்டிஷ் கல்வி முறையினை இந்தியாவில் புகுத்த வழி வகுத்தார். இச்செயலின் குறிக்கோளில் மிகுதியான அளவுக்கு சமய நோக்கம் கலந்திருந்தது. இதனை மெக்காலே தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டார், ‘ நம் கல்வித்திட்டங்கள் முழுமையான முறையில் அமுல் செய்யப்பட்டால் இன்னமும் முப்பது வருடங்களில் வங்காளத்தில் படிப்பறிவு பெற்ற எவருமே விக்கிரக ஆராதனையாளர்களாக இருக்க மாட்டார்கள் என்பது என் திடமான நம்பிக்கை. ‘

மெக்காலேயின் ‘திடமான நம்பிக்கைகள் ‘ இன்று பொய்ப்பிக்கப்பட்டு விட்டன. ஆனால் பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவெங்கும் மெக்காலேமெிஷினரி கூட்டணியில் உருவான கல்விச்சாலைகள் மூலம் பல கோடி குழந்தைகளுக்கு ஆரிய இனக் கோட்பாடு கற்றுக் கொடுக்கப் பட்டது. இவ்வாறாக தலைமுறைகளாக இந்தியக் குழந்தைகளுக்கு தங்கள் வரலாற்றை, தங்கள் சமூக உறவுகளை இன ரீதியில் காண, விளக்க, அறிந்து கொள்ள ஒரு கோட்பாடு கொடுக்கப் பட்டது. ஆரியெஆரியரற்ற இனக்கூட்டங்களை அடையாளம் காணவும், இந்தியாவில் என்றென்றும் வடக்குெதெற்கு பிரிவினை ஏற்படுத்தி அதனை இன ரீதியில் அணுகவும் கற்றுக் கொடுக்கக் கூடிய ஒரு கல்வி முறை இந்தியாவில் இவ்வாறுதான் வேரூன்றியது. வெறுப்பின் விதைகள் இளம் மனங்களில் விதைக்கபட்டாயிற்று.

தென்னகத்தில் ஆங்கிலிக்க திருச்சபையைச் சார்ந்த ஆயர் இரா.கால்தூவல் தென்னிந்திய மக்கள் ஆரியரல்லாத திராவிடர் எனும் ஒரு தனி இனத்தைச் சார்ந்தவர்கள் எனும் பிரச்சாரத்தை தன் ஆய்வு மூலம் துவக்கினார். ஆரியர்களிலிருந்து இனத்தால் மாறுபட்ட, பண்பாட்டால் உயர்ந்ததொர் தனி இனத்தைச் சார்ந்தவர்கள் தாங்கள் எனும் பிரச்சாரம் தென்னகத்தில் நன்றாகவே எடுபட்டது. விரைவில் இந்த தனிமைப்படுத்தல் அரசியல் இயக்கமாகவும் வெளிப்பட்டது. இந்திய தேசிய விடுதலை இயக்கத்திற்கு எதிரானதோர் கருவியாக இந்த ‘திராவிட ‘ அரசியல் ‘விழிப்புணர்வு ‘ பிரிட்டிஷ் அரசால் நன்றாகவே பயன்படுத்தப் பட்டது.

பாரத விடுதலைக்குப் பின்னும் இந்தியாவில் பிரிவினை வாதப் போக்கினை தூண்டும் விதத்தில் கிருஸ்தவ திருச்சபைகள் ஆரிய-திராவிட இனவாதத்தைப் பயன்படுத்தின. 1950களின் இறுதியிலும், 1960களிலும் கிருஸ்தவ ஆயர்கள் வெளிப்படையாகவே ‘திராவிட இயக்கம் இந்து மதத்தை அழிக்க கிருஸ்தவ சர்ச்சால் வைக்கப்பட்டுள்ள ‘டைம்பாம் ‘ ‘ என பேசினர். எனினும் இன்று தமிழ் நாட்டில் ஒரு வலிமையான பிரிவினைவாத இயக்கத்தை உருவாக்குவதில் மிஷினரிகள் தோல்வியே அடைந்துள்ளனர் என்ற போதிலும் நாகலாந்து, மிசோரம், திரிபுரா ஆகிய இடங்களில் மிஸோ,ரியாங், ஜமாத்தியா, வங்காளிகள் என பல சமூகங்களிடையே மோதல்களுக்கு இனரீதியிலான பூச்சு கொடுப்பதில் மிஷினரிகள் ஆற்றியுள்ள பங்கு அபாரமானது.

இலங்கையில் நடைபெறும் தலைமுறைகளாக குடும்பங்களை சிதறடித்து வரும் வன்முறை நிகழ்வுகளின் வேர்களில் மிஷினரிகளால் பரப்பப் பட்ட இனக்கோட்பாடுகள் இருப்பதை நாம் காணலாம். தமிழ் சங்கங்களின் ஆஸ்திரேலாசிய ஒருங்கிணைப்புக் குழுவின் செயலரான அன.பரராஜ சிங்கம் கூறுகிறார், ‘ புராண கதைகளிலிருந்து சிங்கள தேசியவாதம் தன் மூலத்தை பெற்றிருந்தாலும், இன்றைய சிங்கள இனவாதத்தில் ஐரோப்பிய பங்கு மிகவும் உண்டு. சிங்களர்கள் (தமிழர்களிலிருந்து இனரீதியில் வேறுபட்டதோர்) ஆரிய இனத்தவர் என்பது மஹாவம்சம் மூலம் உருவான தேசியவாதமல்ல. மாறாக இதன் வேரினை சிங்களர்களையும் தமிழர்களையும் இரு வேறு மொழிக் குடும்பங்களைச் சார்ந்த மொழிகளை பேசும் வேற்றினத்தவர்கள் எனப் பகுத்த ஐரோப்பிய மொழியியலாளர்களிடம் காணலாம். ’10 இனரீதியில் இலங்கை மக்கலை பிரிக்கும் முயற்சி 1856ெஇல் தொடங்கியது எனலாம். இராபர்ட் கால்தூவல் தன் புகழ்பெற்ற ஒப்பிலக்கண ஆய்வின் மூலம் ‘சிங்களர்கள் பேசும் மொழிக்கும் தமிழர்களின் மொழிக்கும் எவ்வித நேரடித்

தொடர்பும் கிடையாது ‘ என அறிவித்தார். 1861 -இல் தன் ‘மொழிகளின் அறிவியல் ‘ சொற்பொழிவில் ‘சிங்கள மொழி ஆரிய குடும்பத்தைச் சார்ந்ததாக ‘ அறிவித்தார். சிங்கள இனவாத தேசியத்தின் உதயத்தில் சர்ச்கொலனிய அரசு எனும் கூட்டணி ஆற்றிய செவலித்தாய் பங்கு குறித்து சிங்கள அறிஞரான கமலிகா பியரிஸ் கூறுகிறார், ‘ ‘ஆரிய ‘ மொழி பேசும் அனைவரும் ஆரிய இனத்தவர்களாக்கப் பட்டனர். அதனைப் போலவே திராவிட இனமும் அடையாளம் காணப்பட்டது. இதில் முக்கிய பங்கு ஆற்றியவர்கள் மாக்ஸ் முல்லரும், இராபர்ட் கால்தூவல்லும். போர்சுகீசியரும், டச்சுக்களும் அவர்கள் அவர்கள் நாட்டில் நிலவிய மத வெறுப்புக்களை இலங்கையில் இறக்குமதி செய்தனர். இன ரீதியிலான பிளவினை வேரூன்றச் செய்தவர்கள் பிரிட்டிஷ் காரர்கள்தான். 1833 அல்லது 1871 இல் இன ரீதியில் மக்களை அடையாளப்படுத்துவது முழுமையடைந்தது. 1833-இல் சட்ட சபைக்கு இனரீதியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1871-இல் பிரிட்டிஷாரால் முதல் மக்கட் தொகை கணக்கெடுப்பு நடத்தப் பட்டது. இக்கணக்கெடுப்பில் தமிழர்களும் சிங்களர்களும் முதன்முதலாக தனித்தனி இனங்களாக பிரிக்கப் பட்டனர். ‘ 11 இன்றைக்கும் மேற்கின் ஆயுத வியாபாரிகளுக்கு கொழுத்த சந்தையாகவும் சிதறியடிக்கப்பட்ட குடும்பங்களை ஆசிய ஆத்மாக்களின் அறுவடையாளர்களுக்கு எளிதாக அறுவடையாகக் கூடிய வயல்களாகவும் மாற்றியிருக்க கூடியவை இந்த இன வெறுப்பை தம்மில் உள்ளடக்கிய இனக்கோட்பாடுகள்தாம்.

தெற்காசியாவில் மாத்திரமல்ல, உலகமெங்கிலும் இந்த செயல்பாதூடாழுங்கினை நாம் காலனியமெிஷினரி கூட்டு ஆராய்ச்சிகளில் காணலாம். உதாரணமாக அண்மையில் நடைபெற்ற ருவண்டாவில் நடைபெற்ற ஹுதூடட்சி இன மோதல்கள் ஏற்படுத்திய இனப்படுகொலை அவலங்களை அனைவரும் அறிவோம். இந்த இனமோதலின் தொடக்க வேர்கள் குறித்து பிரான்சின் மானுடவியலாளரான ஜீன்பெ¢யாரி லாங்லியர் கூறுகிறார், ‘முதன்முதலாக ஹுதூடட்சிக்கள் வெவ்வேறு இனத்தை சார்ந்தவர்கள் எனும் தவறான கருத்தாக்கம் ஜான் ஸ்பீக் எனும் பிரிட்டிஷ் பயணியால் கூறப்பட்டது. மிஷினரிகள்,ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காலனிய அதிகாரிகள் ஆகியோரால் (மற்ற ஆப்பிரிக்க வரலாற்றைப் போன்றே) ருவாண்டாவின் வரலாறும் திரிக்கப்பட்டது. படையெடுத்து வந்த டட்சி இனத்தவரால் ஹுதுக்கள் அடிமையாக்கப்பட்டதாக மிஷினரிகளால் கற்பிக்கப் பட்ட வரலாற்றின் அடிப்படையிலேயே வெறுப்பு வளர்க்கப்பட்டது. ‘ 12

இவ்வாறாகத்தான் உலகமெங்கும் முக்கியமாக ஆசிய-ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக இனவாதத்தினை ‘நற்செய்தியை பரப்பும் ‘ கருவியாக மிஷினரிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தலைமுறைகளாக இந்த தேசங்களில் ஏற்பட்டிருக்கும் மனித இழப்புகள் கணக்கிலடங்காதவை. இன்றைக்கும் தாய்க்கும் மகளுக்கும், தந்தைக்கும் மகனுக்கும் பிரிவினையை ஏற்படுத்த வந்த நற்செய்தியின் ‘சமாதானத்தையல்ல, பட்டயத்தையே ‘ கொண்டு வரும் தன்மை அன்பின் கடவுளின் பெயரை பூவுலகில் மகிமைபடுத்திக் கொண்டுதான் உள்ளது.

குறிப்புக்கள்

1. ஜேம்ஸ் ஷாஃபர் (கேஸ் வெஸ்டர்ன் பல்கலை கழகம்) ‘Migration, Philology and South Asian Archaeology, ‘ Aryan and NonெAryan in South Asia: Evidence, Interpretation and History, edited by J. Bronkhorst and M. Deshpande (University of Michigan Press, 1998).

2. The Life and Letters of the Rt. Hon. Fredrich Max Muller, vol I, edited by his wife (London: Longmans, 1902), 328.

3. Adolphe Pictet in Essai de paleontologie linguistique (1859), மேற்கோள் காட்டப்பட்ட நூல் மைக்கேல் டானினோவின் The Invasion That Never Was (1996).

4. Ernest Renan, L ‘Avenir religieux des societes modernes (1860), டானினோவின் மேற்கூறிய நூலில் மேற்கோள் காட்டப்பட்டது.

5. Louis B. Synder, The Idea of Nationalism: Its Meaning and History (New York: Von Nostrand, 1962)

6. ‘Genesis of the Aryan race Theory and its Application to Indian History ‘ by Devendranath Swarup, வெளியான பத்திரிகை விவரம்: Manthan – Journal of Deendayal Research Institute (New Delhi, AprilெSeptember 1994).

7. N. S. Rajaram, Aryan Invasion of India, The Myth and the Truth (Voice of India, 1993).

8. Sri Aurobindo, ‘The Origins of Aryan Speech, ‘ The Secret of the Veda, p. 554.

9. மேற்கோள் காட்டப்பட்ட நூல்: Arun Shourie ‘s Missionaries in India – Continuities, Changes, Dilemmas (New Delhi: ASA, 1994), 149.

10. Ana Pararasasingam, ‘Peace with Justice. ‘ Paper presented at proceedings of the International Conference on the Conflict in Sri Lanka, Canberra, Australia, 1996.

11. காண்க : http://www.lacnet.org/srilanka/politics/devolution/item1342.html.

12. மேற்கோள் காட்டப்பட்ட நூல் N. S. இராஜாராமின், The Politics of History (New Delhi: Voice of India, 1995).

hindoo_humanist@sify.com

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்