நன்றி, மலர் மன்னன்

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

வெங்கட் சாமிநாதன்/


நண்பர் மலர் மன்னன் அவர்கள் என் எழுத்தில் காணாத விவரம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. எதுவாக இருந்தாலும், கடந்த கால விவரங்கள் இன்று அதனால் என்ன பயன், யார் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்றெல்லாம் கவலைப் படாமல் பதிவு செய்யப் படவேண்டும் என்று நான் நம்புகிறேன். நான் தூர தில்லியில் இருந்து கொண்டு என்னையும் உடன் சேர்த்துக்கொண்டு தொடங்கப் பட்ட ஒரு புது முயற்சி பல திசைகளில், தளங்களில் விகசிக்கவேண்டும், புதிய ஆளுமைகள், பார்வைகள் அதில் சங்கமிக்க வேண்டும் என்று நான் நினைக்க, “இவன் யாரு?” என்ற ego பலரை வதைத்தது. ஆனால், இதில் எல்லாம் சம்பந்தப்படாத, இந்த சச்சரவுகளைப் பற்றியெல்லாம் தெரிந்திராத, மலர் மன்னனின் ரசனை ஒன்றே அம்பையின் கதையைத் தேர்ந்தெடுத்தது நல்ல விளைவுகளைத் தந்தது. வெற்றியில் பங்கு கொள்ள நிறையப் பேர் இருப்பார்களே. பின் அவர்களுக்கு அம்பை என்ற பெயரே மயக்கம் தரத் தொடங்கிவிட்டது. அம்பையின் கதை இலக்கிய சிந்தனைப் பரிசு பெற்றது எனக்கு தில்லியில் பின்னர் வெகு பிந்திதான் தெரிய வந்ததே தவிர, அந்தத் தேர்வு மலர்மன்னது என்பது இப்போது மலர் மன்னனின் கடிதத்திலிருந்து தான் எனக்குத் தெரிவந்துள்ளது. மலர் மன்னன் இந்த விவரத்தைத் தந்தது எனக்கு மகிழ்ச்சிதான்

முப்பது வருஷங்களுக்கு முன் எனக்கு ஒரு பெரியவர் கடிதங்கள் எழுதினார். அதில் அவர் சொன்ன விவரங்களை தாம் இதற்கு முன் சொன்னதில்லை என்றும் வெளியிடாத காரணம் தான் வகித்த பொறுப்பு என்றும் அவர் எழுதியிருந்தார். அதை வெளியிடுவதா, வெளியிடுவது சரியாகுமா என்று நான் முடிவு செய்ய முடியாது இருந்த போது, ஒரு சரித்திரப் பேராசிரியர் சொன்னார்: கடிதம் எழுதியவர் தான் பதவி வகித்த காலத்தில் அப்பதவியின் பொறுப்பு காரணமாக வெளியிடாது இருந்தது அவருக்கும் அவர் பதவிக்கும் ஆன நியாயம். ஆனால் இன்று அவர் இறந்து பத்து வருடங்களுக்கு மேல் ஆனபிறகு, அவர் கடித விஷயங்கள் சில வெளிஉலகத்திற்கு தெரிய வேண்டியவை. அந்த விவரங்களை வெளியிடுவது சரித்திரத்திற்கு நம்மைப் பொறுப்பாக்கிக்கொள்ளும் காரியம் என்றார்.

மலர் மன்னனுக்கு என் நன்றி.

வெங்கட் சாமிநாதன்/29.7.09

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்