நண்டு

This entry is part 43 of 38 in the series 20100523_Issue

கமலாதேவி அரவிந்தன்.சிங்கப்பூர்


முத்தையாவுக்கு உடம்பு சுட்டது. ஆனால் காய்ச்சல் கொஞ்சம் கூட இல்லை. மனைவி சகுந்தலா பசார் சாமான் வாங்கவும், பலசரக்கு வாங்கவும்,
போன கையோடு,அப்படியே கொஞ்சம் அவள் பருத்த உடம்புக்கு பொருத்தமான நைட்டி கிடைத்தால்,அப்படியே அதையும் சைஸ் பார்த்து வாங்கவும்,
என பல காரியங்களுக்காக , ,தேக்காவுக்குப் போயிருந்தாள்.
மகனும் மருமகளும் வந்து’மனைவியை அழைத்துக்கொண்டு போகும்போது, வழக்கம்போலவே,அவர்கள் வீட்டு பணிப்பெண்ணை, இங்கு விட்டுவிட்டுப் போவார்கள்.,
அவர்கள் வருவதற்குள் வீடு கூட்டி, துடைத்து,சன்னல் கம்பிகளை எல்லாம் சுத்தப்படுத்திவிட்டு,துணிகளுக்கும் இஸ்திரி போட்டு முடிப்பதற்குள்,
எப்படியும் அவர்கள் வந்து விடுவார்கள். அப்படியே தாமதமானாலும் கவலையில்லை. முத்தையாவுக்கு இரவுச்சாப்பாட்டை தயாரித்துக் கொடுத்துவிடுவாள்
பணிப்பெண். இந்த அட்டவணையிலும் புதுமை ஒன்றும் இல்லை.ஆனால் பணிப்பெண்ணில்தான் புதுமை.
ஆமாம்,
இதற்கு முன்பிருந்த பிலிப்பினோ, இந்தோனீசிய, பணிப்பெண்கள் போலல்லாமல்,இந்த முறை முத்துலட்சுமி வேலைக்கு வந்திருந்தாள்.
குழந்தைகளுக்கு தமிழ்ச் சாப்பாடு பழக்கணும்,தமிழ் பேசக் கற்றுக் கொடுக்கணும், இப்படி சில காரண காரியங்கள், திடீரென்று மருமகளுக்கு, ஞானோதயமாய்
உதிக்க, தஞ்சாவூர் பக்கத்தில், அத்திப்பட்டி கிராமத்திலிருந்த முத்து லட்சுமி கொடுத்து வைத்தாள்.
முத்துலெட்சுமி வேலைக்குச் சேர்ந்த புதிதில்,புடவையில் பார்த்ததாகத்தான் ஞாபகம்.இப்பொழுது அப்படியல்ல.டீ ஷர்ட்டும்,ஸ்லேக்குமாய்,
ரொம்பத்தான் நாகரீகமாகிப்போனாள். முத்தையாவின் மனைவிக்கு அவ்வப்போது வாய்க்கு ருசியாய்,புளிச்சக்கீரை கடைசல்,முத்தையாவின் கால்வலிக்கு
வல்லாரைக்கீரை கொதிக்கவைத்து, லேசாய் தேன் கலந்து சுடச்சுட கஷாயம், , குழந்தைகளுக்கு சளி, இருமல், என்றால் ,கற்பூரவல்லி இலையை
மாவில் முக்கி அச்சு அசலாய் பஜ்ஜி, என விதம்விதமாய், சமையல் நிபுணியாய் சமைத்துப்போட்டதில் எல்லோருக்குமே முத்துலெட்சுமியை
பிடித்துத்தான் போச்சு.
ஊரிலிருந்து கஷ்டம் என்று லெட்டர் வந்தால் போதும்.அவரவர் பங்குக்கு ஆறுதலும்,முடிந்தால் சம்பளப்பணத்தை முன்கூட்டியேகொடுத்து,
ஊருக்கு அனுப்பிவைக்க உதவுவதுமாய் ஏதோ, முத்துலெட்சுமியின் வாழ்க்கைச் சக்கரம், சிங்கப்பூரில் சாதகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால் முத்தையாவுக்குள்தான் ஏதோ ரசவாதம் அவரை தடம் புரட்டிப் போட்டுக்கொண்டிருந்தது.
கொஞ்ச நாட்களாகவே அவருக்குள் இனம் புரியாத தவிப்பு. மனைவி சகுந்தலா அம்மா வழக்கம் போல் கிட்டே வந்து படுத்தால் ,
ஏனோ கட்டிக் கொள்ளத் தோன்றவேயில்லை. சகுந்தலா அம்மா பேசவந்தாலே எரிச்சல் எரிச்சலாக வந்தது.
சிங்கப்பூரில் ஒவ்வொரு பொம்பளையும், எப்படியெல்லாம் உடம்பை ஸ்டைலா ஒடுக்கி வச்சுக்கிட்டு திரியுதுங்க.,
இவ என்னடான்னா தலை முடியைக்கூட கறுப்பாக்கிக்கத் தெரியாம,பொதபொதன்னு சதை போட்டுக்கிட்டு, பிடிப்பிடியாய் நகையையும்
மாட்டிக்கிட்டு, பார்க்கவே சகிக்கலை. இதிலே வேற மனுஷனை கொஞ்சநேரமாச்சும் நிம்மதியா இருக்க விடறதுண்டா?
என்னங்க, என்னங்கன்னு , சதா தொணதொணப்பு வேறு!
முத்தையாவுக்கு ஏனோ சகுந்தலா அம்மாவைப் பார்க்கவே பொடு பொடுவென்று வந்தது.
ஒருமுறை அப்படித்தான்,மகனும் மருமகளும் வெளியூரூக்குப் போயிருந்தவேளையில்,,முத்துலெட்சுமி இவர்களோடு தங்கியிருக்க வந்தாள்.
அப்பொழுது, திடீரென்று ஒருநாள் இவருக்கு முதுகு சுளுக்கிக் கொண்டது.இப்படி அப்படி திரும்ப முடியவில்லை. உயிர்போகும் வலியில் இவர் தவிக்க,
பச்சை நரம்பை தேடிப்பிடித்து, சூடு எண்ணையை பதனமாய், தேய்த்துவிட்டு, சகுந்தலா அம்மாவை சுடுநீரை பேசினில் பிடித்துக்கொள்ளச் சொல்லி,
முத்துலெட்சுமி ஒத்தடம் கொடுத்து, உருவி, உருவி, நீவிவிட்ட சுகத்தில், அப்பொழுதே சுளுக்கு மாயமாய் மறைந்துவிட்டது.
முத்துலெட்சுமியின் கை சுகத்தில் முத்தையா அப்படியே கரைந்து நீராகிப்போனார்.முத்துலெட்சுமி உருவிய உருவலை மறக்க முடியவில்லை.
அதிலிருந்து மீண்டும் ஏதாவது உடம்புக்கு வராதா என்று கூட மனசார ஏங்கத் தொடங்கினார். அன்றிலிருந்து தொடங்கியதுதான் ரோகம்.
கிண்ணம் போன்ற மார்பகமும் செதுக்கிச் செதுக்கி வார்த்துவிட்டாற் போன்ற உடம்புமாய்,35 வயசுக்கு முத்துலெட்சுமி கிண்ணென்றிருந்தாள்.
குனிந்து நிமிர்ந்து அவள் வேலை செய்யும்போது, இவருக்குள்ளிருந்து அத்தனை தேள்களும் படை படையாய் வெளியே வந்தது.
உடம்பெல்லாம் ஊர்ந்து ஊர்ந்து , அவரை உன்மத்தனாக்கியபோது,
ஆகி முதிர்ந்த திமிரோடு, அப்படியே அவளை மார்போடு சேர்த்து இறுகத் தழுவணும்போல், மீண்டும் உடம்பெல்லாம் பரபரத்தது.
காத்திருந்தாற்போல் அரிய சந்தர்ப்பம் ,லட்டுபோல் இன்றுதான் லபித்திருக்கிறது. அட, !
இப்பொழுதுதானா தொலைபேசி அலற வேண்டும்?
குசினியில் வேலை செய்த கையோடு, தொலைபேசியை எடுக்க குடுகுடுவென்று ஒரு புள்ளிமானாய் ஓடிவந்த
முத்துலெட்சுமியின் , நனைந்த டீ ஷர்ட்டில் தெரிந்த,முன்னெழிலை கண்கொட்டாமல் பார்த்தார்.
எப்படா! தான் படுத்திருக்கும் அறைக்குள் வருவாள், என்று தருணம் பார்த்துக் காத்திருந்தார்.
லேசாகக் கண்ணை மூடினாற்போல் படுத்துக் கொண்டிருந்தாலும்,முத்துலெட்சுமியின் நடமாட்டத்திலேயே கண்கள் நிலை குத்தியிருந்தது.
இன்றும் முத்தையாவுக்கு வீர்யம்தான். சகுந்தலா அம்மா தான் , என்னமோ அம்பது வயசிலேயே கிழவியாகிவிட்டாற்போல்,
ஏனோ தானோ என்றிருக்கிறாள்.சில சமயங்களில் இவருக்கே சே என்றாகிவிடும். போயும் போயும் இந்த பொம்பள கிட்டே என்னத்தைக்கண்டு
அன்று கட்டிக்கிடோம்.!என்று சலிப்பு கூட வரும்.ஆனால் முத்தையா சகுந்தலாவைக் கை பிடிக்கும்போது,கொடிபோல் இடையும், பிடிக்குள்
அடங்கும் மெல்லிசு பெண்ணாகவே அன்று சகுந்தலா அம்மா இருந்தார் என்பதை மட்டும் நினைக்ககூட, அவருக்குப் பிடிக்காது.
அம்பதுவயசிலேயே பெண்கள் கிழடு தட்டிப்போவர்கள் என்பதை அவரால் நம்பவும் முடியவில்லை.
பேசாமல் நணபர்கள் செய்வதுபோல் எங்காவதுபோய் காரியத்தை முடித்துவிட்டு வரலாம் என்றால்,அதற்குத் துணிச்சலும் இல்லை.
காலம் போன காலத்தில்,ஏதாவது வியாதியில் இழுத்து விட்டுக்கொண்டால், பின் ஊர் சிரிச்சுப் போயிடாது?
இத்தனைக்கும் மொட்டைத்தலையும்,பருத்த தொந்தியும் , மார்பெல்லாம் கரடிபோல் கண்றாவிமுடியுமாய், பாவாடைராயன்போல்
தோற்றமளிக்கும் தன்னைப்பற்றி, அவர் ஒரு நாளும் கவலைப்பட்டதேயில்லை.
முத்தையா ஒருக்களித்துப் படுத்துக் கொண்டார்.. இப்பொழுது வாளியைத் தூக்கிக்கொண்டு,இவரது அறைக்குள் முத்துலெட்சுமி
நுழைவதைக்கண்டதும், சட்டென்று கண்களை மூடிக்கொண்டார்.நாற்காலியில் ஏறி நின்று கொண்டு ,உடம்பை வளைத்து,வளைத்து
இப்படியுமாய், அப்படியுமாய்,ஜன்னல் கம்பிகளையும், கண்ணாடி ஜன்னல்களையும் முத்து லெட்சிமி தேயோ தேய் என்று தேய்க்கத் தேய்க்க,
இவரது மனசும் கூடவே தேய்ந்தது. ஒரு கட்டத்தில் உடம்பெல்லாம் முறுக்கேறி, , இவருக்கே தாங்கமாட்டாமல்,தனை மறந்து
முத்துலெட்சுமி, என்று அழைத்து விட்டார்.
சட்டென்று அவள் திரும்பிப்பார்த்து ஓடி அவர் அருகில் வருவாள் என்று எதிர்பார்த்தால்,, சே, அவள் திரும்பியும் பார்க்கவில்லை.
மீண்டும் தாபத்தோடு, முத்து என்றழைக்க,அப்பொழுதுதான் அவர் குரல் அவருக்கே கேட்கவில்லை, என்பதே அவருக்கேப் புரிந்தது.
அதற்குள் முத்துலெட்சுமி இரவு சமையலப் பார்க்க அடுக்களைக்குப்போய் விட்டாள்.
என்ன வந்தாலும் சரி. இன்று ஒரு கை பார்க்காமல் விடுவதில்லை, என்ற வேகத்தோடு , கட்டிலிலிருந்து எழவும்,
அய்யோ!, என்று திடீரென்ற ஓலம், தூக்கிவாரிப்போட ,முத்தையா திடுக்கிட்டுப்போய் , எழுந்து ஓடினார்.
அய்யோ, அய்யோ, அப்பா! அப்பா! என்ற கதறலோடு, கையில் ரத்தம் சொட்டச்சொட்ட, முத்துலெட்சுமியைப் பார்த்ததும் சகலமும்
பதறியது முத்தையாவுக்கு.நின்று நிதானிக்கக் கூட நேரமில்லை.பாய்ந்து சென்று. முத்துலெட்சுமியின் விரல்களைக்
கிழித்துக்கொண்டிருந்த அந்தக் காண்டா நண்டை,கத்தரிக்கோலால் வெட்டித் தூக்கி,சிங்கில் போட்டார்.
ரத்தமாய் கொட்டிக் கொண்டிருந்த முத்துலெட்சுமியின் விரல்களை, உடனே பைப்பில் பீறிட்ட தண்னீருக்குக்கீழே காட்டி, சுத்தமாக அலசினார்.
முதலுதவிப்பெட்டியை எடுத்து காயத்துக்கு மருந்து போடும்போது, சுரீலென்ற வலியில் வீறிடாத குறையாய் முத்துலெட்சுமி அழுதாள்.
“அப்பா ! அப்பா! ரொம்ப எரியுதுப்பா! ரொம்ப வலிக்குதுப்பா ! ! என்று முத்துலெட்சுமி துடித்தழுதது ,பாவமாக இருந்தது.
நண்டின் விஷக்கொடுக்குகள் ஆபத்தாயிற்றே, என்று சட்டென்று தோன்ற, உடனே புளோக்கின் கீழே உள்ள, 24 மணிநேர மருந்தகத்துக்கு,
அழைத்துப்போனார்.
எதிர்பார்த்தாற்போலவே, மருத்துவர் ஊசி போட்டு,குடிக்க மருந்தும் கொடுத்து,நன்றாக ஓய்வெடுக்கும்படி கூறினார்.
“ அப்பா! அப்பா! என்று ஒயாமல் அழுதாள் முத்துலெட்சுமி. முத்துலெட்சுமியை உட்காரச்சொல்லிவிட்டு,முத்தையா அடுக்களைக்குள் போனார்.
சில நிமிஷங்களில் சூடான மைலோ கலக்கிக்கொண்டு வந்து, குடிக்கச்சொன்ன நிமிஷத்தில் , பதறிப்போய்விட்டது முத்துவுக்கு..
” வேண்டாம்பா! நீங்க போய் எனக்கு செய்யணுமாப்பா!அப்பா! வேண்டாம்பா! எனக்கு ஒண்ணுமே வேண்டாம்பா!”என்று மீண்டும் அழ,
“பேசாம குடிம்மா! ரொம்ப ரத்தம் வெளியாயிருக்கே! என்று முத்தையா ஒரு அதட்டல் போட, தயங்கி தயங்கித் தான் குடித்தாள் .
முத்து லெட்சுமி வியர்த்திருந்தாள். களைத்திருந்தாள்.மைலோவை ஊதி ஊதி குடித்தபோது, முகம் கூட வியர்த்துப் போனது.
ஆனால் முத்தையாவுக்கு மனதில் எந்த விகல்பமுமே தோன்றவில்லை.முத்து முத்தாக வியர்வை அரும்பிய முகமும், அசங்கிய கூந்தலும்,
கலங்கிய கண்களுமாய்,முத்துலெட்சுமி ஏறிட்டு நோக்கியபோது, பரிவோடு ”பேசாம குடி தாயி! என்பதற்குமேல் அவரால் பேசவே முடியவில்லை,.
தான் பெற்ற மகளே எதிரே அமர்ந்திருப்பதுபோல் தான் பட்டது அவருக்கு. மனசை என்னவோ செய்தது.
சற்று நேரத்துக்கு முன்பு வரை, இந்தக் குழந்தையையா,அப்படியெல்லாம் அசிங்கமாய்—! சே! ஞான் எல்லாம் ஒரு மனுஷனாட்டம்!
சட்டென்று வெளியேறி, சகுந்தலா அம்மாவுக்கு சேதிசொல்ல, தொலைபேசியை நோக்கி நடந்தபோது ,அவருக்கும் கண்கள் கலங்கித்தான் போயிருந்தது.
முத்துலெட்சுமியின் கையைப் பதம் பார்த்த நண்டு , எப்போதோ உயிரை விட்ட கோலத்தில்,சிங்,–கில் மல்லாந்து கிடந்தது.

Series Navigation<< அம்மாவின் கடிதம்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்

கமலாதேவி அரவிந்தன், சிங்கப்பூர்