நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் வெளியில் உயிர்களின் ஆரம்பம் இருக்குமென்ற ஆராய்ச்சி

This entry is part [part not set] of 31 in the series 20020330_Issue


நேச்சர் அறிவியல் இதழில், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் மேகங்களில் உயிர்களின் அடிப்படை கட்டுமானப் பொருள்கள் முதலில் தோன்றியதாக குறிப்பிடும் ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது.

நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் அதி குளிர் நிலைமைகளை பரிசோதனைச் சாலையில் உருவாக்கிய ஆராய்ச்சியாளர்கள், மிகச்சிறிய பனிக்கட்டி துகள்கள் உருவாவதையும் அது அல்ட்ரா வயலட் கதிர்களினால் தூண்டப்பட்டு உயிர்களுக்குத் தேவையான முக்கியமான வேதிவினைகளை நடத்துவதையும் காண்பித்திருக்கிறார்கள்.

இந்த பரிசோதனைகளில், அணுக்கள் அமினோ அமிலங்களாக கோர்த்தன. இவை புரோட்டான்களின் அடிப்படைப் பொருட்கள். இவைகளே உயிர்கள் மேலே மேலே கட்ட உதவும் அடிப்படைப் பொருள்கள்.

இப்படிப்பட்ட மேகங்களில் தோன்றிய அடிப்படைப் பொருட்கள் நம் சூரிய மண்டலம் உருவானபோது அங்கங்கு சிதறி பூமியிலும் விழுந்து பூமியில் உயிர்கள் தோன்ற காரணமாயிருக்கலாம்.

நம் பூமியில் உயிர்கள் வருவதற்கு வந்த வழி பல மெட்டியோரைட்டுகள் எனப்படும் வான்கற்கள் என்பதற்கு பல தடயங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஆனால், அறிவியலாளர்கள், எப்படி மெட்டியோரைட்களான வான்கற்களில் உயிர்களுக்கான அடிப்படைப் பொருட்கள் வந்தன என்பதை ஆராய விரும்பினார்கள்.

இதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒரு வழியில், தண்ணீர் சேர்ந்த சிக்கலான வேதிவினைகள் நம் சூரியமண்டலம் ஆரம்பிக்கும் போது அதன் கடினமான கற்களில் நடந்திருக்கலாம்.

இப்படிப்பட்ட வேதிவினைகள் பலவிதமான அமினோ அமிலங்களை உருவாக்கின. உதாரணமாக, முர்சிஸான் விண்கல்லில் சுமார் 70 சதவீத அமினோ அமிலங்கள் இருந்தன.

இரண்டு தனித்தனி குழுக்கள், ஒன்று மேக்ஸ் பெர்ன்ஸ்டைன் தலைமை தாங்கிய Seti குழு, இரண்டாவது ப்ரெமன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த யுவே மெர்ஹென்ரிஷ் Uwe Meierhenrich குழு, வேறொரு வழியைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் காற்றற்ற வெளியில் இருக்கும் மிகச்சிறிய பனித்துகள்களின் மீது நடக்கும் வேதிவினைகள் சம்பந்தப்பட்டது இந்த வழி.

இந்த ஆராய்ச்சியாளர்கள், நட்சத்திரங்களுக்கு இடையே இருக்கும் காற்றற்ற வெளியையும் அதில் இருக்கும் சுற்றுச்சூழலையும் பரிசோதனைச்சாலையில் உருவாக்கினார்கள். அல்ட்ரா வயலட் கதிரியக்கமும், -258 டிகிரி தட்பவெப்பமும் (சைபர் டிகிரிக்கு 15 டிகிரி அதிகம்) இந்த பரிசோதனைச்சாலையில் உருவாக்கப்பட்டன.

இந்த சூழ்நிலைகள், அண்ட வெளியில் திரியும் கார்பன் மோனோக்ஸைட், அம்மோனியா போன்ற மூலக்கூறுகளை இணைத்துக்கொண்டு வேதிவினைகளை உருவாக்கின.

இரண்டு குழுக்களுமே, அமினோ அமிலங்கள் உருவாக்கத்தையும், கிளைசின், அலனைன், செரைன், ப்ரோலைன் போன்ற முக்கியமான அமினோ அமிலங்கள் உருவானதையும் குறிப்பிட்டுள்ளன.

இந்த பரிசோதனைகள் ஒரே மாதிரி நிகழ்த்தபடவில்லை. ஒரு குழு தண்ணீர் அதிகமான சூழலை உருவாக்கிக்கொண்டது. மற்றொன்று தண்ணீர் குறைவாக பரிசோதனை நடத்தியது. தண்ணீர் குறைவான பரிசோதனை, அதிகமான அமினோ அமிலங்களை உருவாக்கியது.

இந்த பரிசோதனைகள் போல நடக்கும் பல பரிசோதனைகள், அகிலத்தில் பல வேறுவிதமான சூழ்நிலைகளில் பல சிக்கலான மூலக்கூறுகள் தோன்றுவதன் தடயங்களை உறுதி செய்கின்றன. இது அண்டவெளியெங்கும் உயிர்கள் இருக்கின்றன என்று நினைப்பவர்களின் எண்ணத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றன.

Series Navigation