நடவு நாள்…

This entry is part [part not set] of 41 in the series 20040909_Issue

பட்டுக்கோட்டை தமிழ்மதி


நடவு வயலில் நாற்று.

பறித்துமுடிந்த நாற்றை
பிரித்து நடும் விரல்கள்….

மண்ணை உழுதுமிதித்த ஏர்க்காலோடு
இறுதியாய் பெண்களின் கைகள்….

பயிரை
உயிருள்ள சிலையாய் பிடித்துவைக்க…
உள்ளன்பில் சீராட்டி தலாட்ட….
துளிர்தலை நீட்டும்.

நாற்றுக்குழந்தை
பாய்ந்த நீர் தொட்டில் துணியிலிருந்து
பாசமுகம் காட்டும்.

நடவில்
நடும் பெண்களுக்கு நான்
நாற்றள்ளிப் போடுகிறேன்.

சேற்றில் நிற்கும் என்னைச் சுற்றி
நங்கை ஒருத்தியின் விரல்கள் பரபரக்க….
நடு என்று நானும் நிற்கிறேன்.

அப்போது
சிரிக்க சிரிக்க எல்லோரும்.
அந்த
சிரிப்பின்சேதி தெரியவில்லை எனக்கு.

அவள்
கேட்பதை கொடுக்க வேண்டுமாம்.
அவள் கேட்கவுமில்லை
நான் கொடுக்கவுமில்லை.

நடவுகாலத்தில் அது
நாற்றாங்காலின் கடைசி நடவு.

அந்த
நாற்றங்காலாய் ஊரிருக்க
ஊரின் சேறுஎன் வேரிருக்க
வேறுமண் நானிப்போது.

நாற்றின் ஞபகங்களோடு
ஒரு நாள் நான்
ஊருக்கு போவேன்தான்.

நடு நடு என நிற்கும்
நாற்றின்முடியொன்று
வரப்பைத் தாண்டி
வயல்போகும் பாதை வந்து
தானும் பெண்ணென்று
தலை நிமிர்ந்து பார்க்கும்.

நடவு நடும் ஒருத்தியின்
கழுத்து கருமணியோடு
கண்சிமிட்டிக் கொள்ளும்.

வயல் பெண்கள் குலவையிட
வருவோர் போவோர் காதில் விழ
அந்த
நாற்றுப் பெண்ணுக்கு காசுகொடுத்து
நகரவேண்டியிருக்கும்.

நான்
ஊருக்கு போகவேண்டும்.

நடவுப் பாடல் கேட்க
ஊருக்கு அப்போது
நதிகள் இணையவந்திருக்க வேண்டும்.

—-
பட்டுக்கோட்டை தமிழ்மதி
tamilmathi@tamilmathi.com

Series Navigation

author

பட்டுக்கோட்டை தமிழ்மதி

பட்டுக்கோட்டை தமிழ்மதி

Similar Posts