தொடரும் கவிதைக் கணம்

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

லதா ராமகிருஷ்ணன்


(மே 29 அன்று சென்னையில் நடைபெற்ற கவிதைக்கணம் ஆண்டு விழாக் கூட்டம் பற்றி சில பகிர்வுகள்)

இத்தனை வருஷங்களில் எனக்கு கிடைக்கும் முதல் விருது, பாராட்டு இது தான். இது கூட எனக்கு ஆச்சர்யம். இதுவே கடைசி விருதாகவும் அமையக் கூடும் என்று நினைப்பது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை. எனக்கு தகுதி நிறைய இருப்பதாகவும், அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நான் ஆதங்கப்படுவதாகவும் தயவு செய்து நினைக்காதீர்கள். இன்று எனக்கு எந்த ஆதங்கமும் இல்லை. சொந்த வாழ்க்கையில் எனக்கு நேர்ந்தவைகளுக்காக வருந்தியிருக்கிறேன். எழுத்து வாழ்க்கையில் எனக்கு நேராதவைகளுக்காக நான் கவலைப்படவேயில்லை.

என் ஆசை என்று எதுவும் இல்லை என்றாலும் என் கவிதைகளின் ஆசையை மதிக்கிறேன். அவை ஆழ்ந்த வாசிப்புக்கு ஆசைப்படுகிறன. வெற்றிடத்திலும், மெளனத்திலும் அவை இயங்கும் இயக்கம் கவனிக்கப்பட வேண்டும் என ஆசைப்படுகின்றன. ஒன்று சொல்லாதிருக்கிற, ஒன்றும் இல்லாதிருக்கிற அவற்றின் எளிமை உணரப்பட வேண்டும் என ஆசைப்படுகின்றன.

சமீபத்தில் நடந்தேறிய (மே 29 அன்று) கவிதைக்கணம் ஆண்டு விழாக் கூட்டத்தில் `கவிதை கணம்` விருது பெற்ற மூவரில் -கலாப்ரியா, ஆர்.ராஜகோபாலன், அபி – உடல்நிலை காரணமாக நேரில் வர இயலாத கவிஞர் அபி-யின் ஏற்புரையில் இடம் பெற்றிருந்த சில விதிகளே மேலே தரப்பட்டிருக்கின்றன.

வெறும் நினைவுக்கேடயம் மட்டுமே என்றாலும் சக கவிஞர்கள் மத்தியில் அதைப் பெற்றுக் கொள்ளும் சந்தோஷத்திற்காக கவிஞர் கலாப்ரியா தென்காசியிலிருந்து கிளம்பி வந்திருந்தார். `அபி`யின் மொத்தக் கவிதைகளும் கலைஞன் பதிப்பகத்தால் ஒரு முழுத் தொகுதியாக வெளியாகியுள்ளன. அவற்றைப் படிக்கும்போதே அந்தக் கவிஞனின் வீச்சையும், ஆளுமையையும் உள்வாங்கிக் கொள்ள முடியும். கவிஞர் கலாப்ரியாவின் கவிதைகளும், அவற்றின் பரிசோதனை முயற்சிகளும் பரவலாக அறியப் பெற்றவை. ஆர்.ராஜகோபாலன் `ழ` சிறுபத்திரிகையின் இயக்கத்தில் கணிசமான பங்களிப்பு செய்தவர். அவருடைய கவிதைகள் `அன்பெனும் விதை` என்ற தொகுப்பாக வெளியாகியுள்ளன. குழந்தைகளுக்கான பாடல்கள், கவிதைகளும் எழுதியிருக்கிறார். மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டவர். பல சிறு பத்திரிகைகளில் அவருடைய படைப்புகளும், மொழியாக்கங்களும் இடம் பெற்றுள்ளன. அவரும் காலை முதலே `கவிதைக் கணம்` ஆண்டுவிழாக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

காலை அமர்வாக படைப்பிலக்கியம், குறிப்பாக கவிதைகளின் மொழி பெயர்ப்பு குறித்து ஃப்ராஞ்சு மொழியிலிருந்து நேரடியாக தமிழில் பெயர்ப்பவரும், செவாலியே விருது பெற்றவருமான மொழிப்பெயர்ப்பாளர் வெ. ஸ்ரீராம் (இவர் கடந்த ஆண்டும் கவிதைக் கணம் துவக்க நாள் இலக்கிய நிகழ்வுகளில் முக்கிய பங்களிப்பு செய்தவர்) மற்றும் மணிலாவில் ஆசிய மேம்பாட்டு வங்கி மேலாளராகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவரும், எழுத்தாளர் ஜெயகாந்தனின் நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவருமான டாக்டர் கே.எஸ்.சுப்ரமணயமும் (இவர் தற்சமயம் தன் ரசனைக்கேற்ற தமிழ்க்கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருகிறார் என்பதும், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் `கவிதைக் கணம்` ஆண்டு விழாக் கூட்டம் சிறப்பாக நடைபெற பேருதவி செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது) தங்கள் மொழிப் பெயர்ப்பு அனுபவங்களையும், மொழி பெயர்ப்பில் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாகப் பேசினர்.

மதிய அமர்வுகளில் ஒன்றான கவிதை வாசிப்பு நிகழ்வுக்கு கவிஞர் இளம்பிறை தலைமை தாங்கினார். தமிழின் குறிப்பிடத்தகுந்த கவிஞரான அவர் தனது கவிதைகளை வாசிக்க அவரைத் தொடர்ந்து கவிஞர்கள் பூமா ஈஸ்வரமூர்த்தி, சிபிச் செல்வன், தமிழ் மணவாளன், சொர்ணபாரதி, அய்யப்ப மாதவன், சங்கரராம சுப்பிரமணியன், கடற்கரை, அழகிய சிங்கர், எஸ்.குரு, ரவி சுப்ரமணியன், பால் நிலவன் என பல கவிஞர்கள் தங்கள் கவிதைகளை வாசித்தனர். நேரில் வர இயலாத கவிஞர்கள் சதாரா மாலதி நா.விசுவநாதன் ஆகியோர் கவிதைகளை அனுப்பியிருந்தனர். இரண்டாம் அமர்வான சிறுபத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெயர்பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (`அட்சரம்` சிற்றிதழ்) கல்வெட்டி பேசுகிறது ஆசிரியர் `முனியாண்டி` (சொர்ணபாரதி என்ற பெயரில் கவிதை எழுதி வருபவர்) அழகிய சிங்கர் (நவீன விருட்சம் இதழின் ஆசிரியர்) தோழர், மணோன்மணி (`புது எழுத்து` பத்திரிகையின் ஆசிரியர். மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணணனுக்கென்று சிறப்பிதழ் வெளியிட்டவர். தற்சமயம் இவர் கொண்டு வந்துள்ள மார்க்வெஸ் சிறப்பிதழ் மிகவும் பேசப்படுகிறது. `வியன்புலம்` என்ற சிற்றிதழின் ஆசிரியர் துரை ஜெயப்ரகாஷ் முதலியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். தமிழின் முன்னோடி சிற்றிதழான `ழ` பத்திரிகையில் முக்கியப் பங்களிப்பு செய்திருக்கும் ஆர். ராஷகோபாலின் இந்த அமர்வுக்கு தலைமை தாங்கினர்.

`கவிதைக் கணம்` அமைப்பாளர்களில் ஒருவரான கவிஞர் பூமா ஈஸ்வர மூர்த்தி விழா சிறப்புற நடந்தேற அயராது பாடுபட்டதோடு அவருடைய மகன்கள் இருவரையும் (இரட்டையர்கள்) விழா நிகழ்வுகளில் உதவிபுரிய கூட்டி வந்திருந்தார். மற்றொரு அமைப்பாளரான கவிஞர் ரவி சுப்ரமணியம் ஓவியர் சீனிவாசிடம் `கவிதைக் கணம்` விருதுகளை அற்புதமாகச் செய்யச் சொல்லி அவற்றை வாங்கி வந்ததோடு கவிஞர் அபியிடமிருந்து வாங்கி வந்திருந்த `கவிதை புரிதல்` என்ற விரிவான கட்டுரையையும், அவரது ஏற்புரையையும் தனது ஆழங்கூடிய குரலில் தெளிவாக வாசித்துக் காட்டினார். அமைப்புக் குழுவைச் சேர்ந்த கவிஞர் சிபிச் செல்வன் பல நாட்களாக கவிதை எழுத நேரவில்லையே என்ற வருத்தம் நீங்கும் விதமாய் தான் எழுதிக் கொண்டு வந்திருந்த `ஒரு குவளை நீர் வேண்டும்` என்ற ரீதியிலான கவிதையைப் படித்த போது அரங்கில் முழு அமைதி நிலவியது. அப்பொழுது தான் மகளின் திருமணத்தை நடத்தி முடித்திருந்த அயர்வையும் மீறி அழகிய சிங்கர் தான் மாற்றலாகிச் சென்றிருக்கும் ஊர் பற்றிய கவிதையை வாசித்துக் காண்பித்தார்.

கவிஞர் கலாப்ரியா தனது ஏற்புரையில் தன் சகோதரன் `விஸ்வதாசன்` (கவிஞர் கல்யான்ஜி) நன்றியோடு நினைவு கூர்ந்தார். மனமிருந்தால் யாரும் கவிஞனாக முடியும் என்றார் அவர். கவிஞர் அபியின் கேடயத்தை கவிஞர். லாவண்யா (இயற்பெயர் சத்யநாதன்) பெற்றுக் கொண்டார். வந்திருந்த தலைகளை என்றும் போதெல்லாம் இரண்டு பேரை கூடுதலாகவே சேர்த்துக் கொள்வது தவிர்க்க இயலாமல் போனது. ஒன்று அரங்க மேடையில், நடப்பவற்றை கம்பீரமாக புகைப்படத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த பாரதியார். இன்னொருவர் அத்தனை மனம் விட்டு, தன்னம்பிக்கையோடு சங்கர ராம சுப்ரமணியனின் சட்டையில் முகம் மலரச் சிரித்துக் கொண்டிருந்த மனிதன்.

-லதா ராமகிருஷ்ணன்

ramakrishnanlatha@yahoo.com

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்