தேவை ஒரு சுத்தமான பாத்ரூம்

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

இளமுருகு


சமீபத்தில் என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வழக்கம் போல, தமிழ்நாட்டைப் பற்றி விலாவாரியாக அருமை பெருமைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஏற்கெனவே தமிழ்நாட்டுக்குச் சென்றுவந்த அமெரிக்கர். நான் பேசிகொண்டிருப்பது எனக்கே அலுத்துப் போய், ‘தமிழ்நாட்டில் உனக்குப் பிடிக்காது என்ன என்று சொல் ‘ என்றேன். அதற்கு அவர், ‘ஒரு பொதுஜனத்துக்கு ஒரு அவசரத்துக்கு ஒரு சுத்தமான பாத்ரூம் கிடைக்காது ‘ என்றார்.

எனக்கு அது ஒரு முக்கியமான விஷயமாக இல்லை. நான் தமிழ்நாட்டிலேயே ஊறி வளர்ந்த பொதுஜனத்தில் ஒன்று நான். மரமறைவில் போவதும், அசிங்கமான இடங்களில் அவசரம் கழிப்பதும் எனக்குப் பழக்கப்பட்டுப் போய்விட்ட ஒன்று. அப்படியே மிகவும் அசிங்கமாக இருந்தாலும், அது ஒரு ஐந்து நிமிட அசிங்கமாக மட்டும் என் மனத்தில் இருக்கும்படிக்கு பழக்கப்பட்ட பிரகிருதி. அடுத்த பிரச்னை, அடுத்த விஷயம், அடுத்த பேச்சு என்று வந்ததும் உடனே மறந்துவிடும் எனக்கு. சொல்லப்போனால், பெரும்பாலான தமிழ்மக்களுக்கும் அதுதான் பழக்கமான ஒன்று என்றே கருதுகிறேன்.

அமெரிக்காவிலிருந்து தமிழ்நாட்டுக்கு விடுமுறைக்கு வந்த என் நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போதுதான் அவர்கள் கேரளா டூர் முடித்து வீட்டுக்கு வந்திருந்தார்கள். என் நண்பரின் மனைவிக்கு பெங்களூரில் ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பிட்டே வயிற்று வைரஸ் வந்து கேரளா டூர் முழுக்க பாத்ரூமிலேயே கழிக்க வேண்டிய நிர்பந்தமாகிவிட்டது. தமிழ்நாட்டைவிட கேரளா பரவாயில்லை என்றுதான் நான் இந்த விஷயத்தில் நினைத்திருந்தேன். என் நண்பரின் மனைவி சொன்னது அந்த எண்ணத்தையும் தவிடு பொடியாக்கி விட்டது.

ஒரு மனிதனுக்கு மிகவும் அடிப்படையான விஷயமில்லையா இது ? ஒரு பெண்ணுக்கு அடிப்படையான தேவை இல்லையா இது ? இது ஒரு மாபெரும் பேசக்கூடாத பிரச்னையா ? ஏன் இது பற்றி யாருமே பேச மாட்டேன் என்கிறார்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை. ஒருவன் ஒரு சுத்தமான பாத்ரூமை எதிர்பார்க்கக்கூடாதா ?

ஒரு பழங்காலத்தில் வெளியே பிரயாணம் செய்யும் மக்களே குறைவு. பிறகுதான் பஸ்ஸ்டாண்ட் வந்தது. பஸ் ஸ்டாண்டைச் சுற்றி ஆக்கிரமித்து உணவு விடுதிகள் தோன்றின. உணவு விடுதிகளில் உணவோ, காப்பியோ அருந்துபவர்களுக்கு ஒரு சுத்தமான பாத்ரூமை தரவேண்டும் என்று சட்டமியற்றி அதனை நடைமுறைப்படுத்துவது அத்தனை கஷ்டமா ? சொல்லப்போனால், சென்னையிலேயே எனக்குத் தெரிந்து சுத்தமான பாத்ரூம் இருந்தது சரவணபவனில்தான். (அதன் வெற்றிக்கு ஒரு வேளை அதுதான் காரணமோ என்னவோ)

நம் ஊரில் சட்டங்கள் இருப்பது மீறப்படுவதற்கே என்பதன் உண்மையை இதில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். எங்காவது இருக்கும்தான் சட்டம். யாருக்குத் தெரியும். ஒவ்வொரு உணவுவிடுதியிலும், இந்த உணவு விடுதியில் இருக்கும் வசதிகள் இன்ன இன்ன, இதில் எது குறைந்தாலும் இந்த முகவரிக்கு ஒரு கடிதம் எழுதுங்கள் என்று பொதுமக்கள் பார்வையில் ஒரு அறிக்கைப்பலகை வைத்தால் என்ன குறைந்தா போய்விடுவார்கள் ? சுத்தமாக பாத்ரூம் இல்லாத ஒரு உணவு விடுதியில் சுத்தமாக உணவு இருக்கும் என்று எப்படி ஒருவன் நம்ப முடியும் ? அந்த சுத்தமற்ற பாத்ரூமைத்தானே அந்த உணவு விடுதியில் பணிபுரியும் சமையல்காரர்களும் பயன்படுத்துவார்கள் ?

வெறும் காப்பிக்கு மட்டுமா ஒருவர் உணவு விடுதிக்குப் போகிறார். உட்கார நாற்காலி. சுத்தமான மேஜை. சுத்தமான காப்பி, காற்றோட்டமான சுத்தமான இடம் எல்லாவற்றுக்கும் சேர்த்துத்தானே அந்த காப்பிக்குப் பணம் கொடுக்கிறோம். இத்தோடு, ஒரு சுத்தமான பாத்ரூமையும் சேர்க்கக்கூடாதா ?

தமிழ்நாட்டில் இருக்கும் உணவுவிடுதிகள் எல்லாமும் அரசாங்க அனுமதியுடன், அவர்கள் மேற்பார்வையில், அவர்கள் சுத்தம் என்று பரிசோதித்துத்தான் நடக்கின்றன. ஹெல்த் இன்ஸ்பெக்டர் என்ற ஒருவர் வந்து கையெழுத்துப்போடவில்லை என்றால், உணவுவிடுதி மூடத்தான் வேண்டும். இவர்கள் பாத்ரூமையும் சற்றுப் பார்க்கக்கூடாதா ?

ஏதோ ஒரு ஹெல்த் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கிக்கொண்டு அந்த பாத்ரூமைப் பார்க்காமல் சென்றுவிட்டார் என்று சொல்வதற்கு எந்த ஒரு இடமும் இல்லை. அப்படியென்றால் தமிழ்நாடு முழுக்க எல்லா உணவுவிடுதிகளிலும் பாத்ரூம் அசிங்கமாக நாறுமா ? முதலில் பாத்ரூமே உங்கள் கண்ணுக்குத் தெரியாது. அவசரமாக ஒரு உணவுவிடுதிக்குள் வருகிறவர் கல்லாப்பெட்டியில் இருப்பவரிடமே கேட்கவேண்டும். ‘ஐயா உங்கள் கடையில் பாத்ரூம் எங்கே இருக்கிறது ‘ என்று. அவர் முகத்தை கடுப்பாக வைத்துக்கொண்டு, சர்வரை பார்த்து அங்கே போ என்று நம்மிடம் காட்டுவார். சர்வரிடமும் சென்று இதே கேள்வியைக் கேட்கவேண்டும். அவர் கரப்பான் பூச்சிகளும், கழுவாத அசிங்கங்களும் நிறைந்த ஒரு கழிப்பறையைக் காட்டுவார். மூக்கைப் பிடித்துக்கொண்டு, அல்லது கண்ணை மூடிக்கொண்டு அவசரத்தை போக்க வேண்டும். இது ஒரு பெரும் கொடுமை.

ஏதேனும் நள்ளிரவில் உணவுவிடுதிகளும் இல்லாத ஒரு நிலையில் மாட்டிக்கொண்டோமோ தொலைந்தது. பேருந்து நிலையத்துக்குள் தனியார் மயம் செய்யப்பட்ட கழிப்பறைகளோ இன்னும் மோசம். ரூபாய் பணம் வாங்குவதோடு சரி, சுத்தம் செய்வது கிடையவே கிடையாது.

இது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு இன்றியமையாத தேவை என்பது பலருக்குத் தெரியவில்லை என்பதுதான் ஆச்சரியம். எல்லோரும் பயணம் முடித்ததும் மறந்துவிடுகிறார்கள். வீட்டுக்கு வந்ததும், அப்பாடா ஒரு கெட்ட கனவு முடிந்தது என்பதுபோல சந்தோஷமாக பாத்ரூமுக்கு ஓடுவதுதான் எத்துணை வழக்கமாக நடக்கிறது. வெளியில் இப்படித்தான் இருக்கும் என்று பழக்கப்பட்டுப் போய்விட்டோம். அது ஒரு பிரச்னை, அது பற்றிப் பேசவேண்டும் என்பது கூட நம்மில் பலருக்குத் தோன்றுவதில்லை. பெரும் அரசியல்வாதிகளுக்கும், பெரும் பணக்காரர்களுக்கும் இந்தப் பிரச்னை இல்லை போலும். அதனால்தான் இந்தப் பிரச்னையை அவர்களும் கண்டுகொள்ளமாட்டேன் என்கிறார்கள்.

இது நமக்குப் புரியவில்லை என்றாலும், வெளிநாட்டினர் இது பற்றிப் பேசாமலில்லை. ஸைன்ஃபீல்ட் நகைச்சுவை தொடர் வெகுகாலம் அமெரிக்க தொலைக்காட்சியில் வந்துகொண்டிருந்தது. அதில் ஒரே ஒரு நாள் ஒரு நண்பரின் திருமணம் சம்பந்தமாக இந்த ஸைன்பீல்டின் நண்பர்கள் இந்தியாவுக்குச் செல்வது போல வந்தது. அதில் ஜார்ஜிடம் சில இந்திய நண்பர்கள் சொன்னதற்கிணங்க பிரயாணம் முழுவதும் பாத்ரூம் போகாமல் கட்டுப்படுத்திக்கொண்டே (அதுவும் முழ நீள பூட்ஸ் போட்டுக்கொண்டு) வருவார்.

இந்தியர்களுக்குச் சொல்லியும் தெரியவில்லை என்றால் என்ன ஒரு மடத்தனம்!

***

இன்னொரு விஷயம். இந்த அசிங்கங்களை உணவுவிடுதியில் மட்டுமல்லாமல், தெருவெங்கும் பார்க்கும்படி இருக்கும் தமிழ்நாட்டுச் சூழல். சாலையோரங்களிலும், ரயில் பாதைகளிலும், இன்னும் சந்துகள் தெருவோரங்கள் எல்லாவிடத்திலும் நடக்கும் பொதுக்கழிவு. இது சுத்தமில்லை, சுகாதாரமில்லை என்று ஆயிரம் பேசினாலும், அவசரம் வரும்போது வேறுவழியின்றி ஒதுங்குவதால் வரும் பக்க விளைவு.

தமிழ்நாட்டு நகரங்களில் காலைக்கடன் கழிப்பது ரயிலோரம் என்பதைப் பற்றி ஆயிரம் நகைச்சுவைத் துணுக்குகள் வந்தாலும், அதனை சரி செய்யும் எந்த நோக்கமும் இன்றி, அழிவை தலையில் விதியென போட்டுக்கொண்ட சமுதாயம் போல உருண்டு செல்கிறது தமிழ்ச் சமூகம்.

நகரங்களில் இருக்கும் நடைபாதைவாசிகளின் உரிமை பேச ஆயிரம் மக்களுண்டு. அந்த பொது இடங்களை உபயோகிக்க வரி கொடுத்துவிட்டு, அவை அசிங்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கும் பொதுமக்களைப் பற்றி பேசுவார் இல்லை. சென்னை நடைபாதையெங்கும் ஆக்கிரமிப்பும் அசிங்கமும். இது தொத்து வியாதிபோல, திருச்சி, கோவை மதுரை நகர்களுக்கும் பரவி வருகிறது. குப்பங்கள் குப்பைகளாக ஆகிவருகின்றன. கோபுரங்களாக ஆகவில்லை. குடிசை மாற்று வாரியம் கட்டிய கோபுரங்கள் குப்பைகளை விட அதிகமான குப்பைத்தொட்டிகளாக இருக்கின்றன. (பலர் அதில் வாடகை கொடுப்பவர்கள். சொந்தக்காரர்கள் பலர் குடிசைகளிலேயே இருக்கிறார்கள்) நடைபாதைவாசிகளுக்கு பொதுச்சொத்தை அழிக்க அப்படிப்பட்ட உரிமைகள் கொடுக்கப்படவில்லை என்று சொல்ல யாரும் இல்லை.

தெருவெங்கும் நரகலாக இருப்பதற்கு யார் பொறுப்பு ? மக்களா, மக்களுக்கு சரியான ஏற்பாட்டைச் செய்துதராத அரசாங்கமா ?

என்னிடம் கேட்டால், 90 சதவீதம் மக்களையும், 10 சதவீதம் அரசாங்கத்தையும் குற்றம் சொல்வேன். இதில் பெரும் பொறுப்பு சாதாரண மக்களைத்தான் சாரும். இவர்கள்தான், தெருவெங்கும் நரகலை பரப்பிக்கொண்டு செல்பவர்கள். பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டு வெற்றிலைச்சாற்றை துப்பும் மக்கள் நிறைந்த நாட்டில், தெருவில் நரகல் போடக்கூடாது என்ற எண்ணம் வருமா என்ன ?

ஆனாலும் இதில் சாதாரண பொது மக்களுக்கு சரியான சுகாதாரமான முறையில் இலவசமாக கழிப்பு செய்ய இடம் இல்லாதது முக்கியமான காரணம் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

இன்று நகரங்களுக்கு மேலும் மேலும் மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். நகரங்களின் சுற்றுப்புர கிராமங்களில் வசிப்பவர்கள் நகரத்துக்கு வேலை தேடி வருகிறார்கள். கிராமத்தில் வசித்தாலும் நகரத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் நிறைய. இவர்களது நலனைக் கருத்தில் கொள்ளும் அதே வேளையில், நகர சுத்தத்தையும் சுகாதாரத்தையும் கருத்தில் கொண்டு, எல்லோருக்குமான நலவாழ்வுக்குத் திட்டம் தீட்ட வேண்டியது அரசின் கடமை.

முதலாவது, எல்லா உணவுவிடுதிகளும், பெட்ரோல் வங்கிகளும் குறைந்த பட்சம் அந்த உணவுவிடுதிகளில் சாப்பிடுபவர்களுக்காகவாவது இலவசமாக சுத்தமான கழிப்பறைகளை தரவேண்டும் என்றும், அந்த கழிப்பறைகள் இருக்கும் இடம் தெளிவாகத் தெரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்றும் சட்டமியற்றி அதனை எல்லா உணவுவிடுதிகளுக்கும் கட்டாயம் நடைமுறையில் கடைபிடிக்குமாறு செய்யவேண்டும். ஹெல்த் இன்ஸ்பெக்டர்கள் வாங்கும் லஞ்சங்கள் ஒழிக்கப்படவேண்டும். இது ஒரு தடாலடி நடவடிக்கை மூலமே செய்யப்பட முடியும்.

இரண்டாவது, தெருவோர நடைபாதைவாசிகள் அவ்வாறு நடைபாதைகளை அரசியல்வாதிகள் துணையோடு ஆக்கிரமித்து, அசிங்கம் செய்யாமலிருக்க வகை செய்யவேண்டும். நடைபாதைவாசிகளும், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்களும் நீக்கப்படவேண்டும். இவர்கள் என்ன சொன்னாலும், அவை எல்லோருக்குமான பொதுச்சொத்து. அவற்றை ஏழைகளோ பணக்காரர்களோ ஆக்கிரமிக்க அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது.

குப்பங்களில் இருக்கும் வீடுகளில் கழிப்பறைகள் கிடையாது. அதன் விளைவு, தெரு கழிப்பறையாகிவிடுகிறது. அந்த குப்பங்களில் கட்டப்படும் இலவச கழிப்பறைகளும் சுத்தமானவை அல்ல. அவைகளை சுத்தமாக வைத்திருப்பதற்கு அரசாங்கத்தால் முடியாது. அங்கு தனியார் குத்தகைக்கு எடுக்கும் கழிப்பறைகளும் அசிங்கமாகவே இருப்பதாலும், அவைகளுக்கு பணம் கொடுத்துச் செல்லவேண்டி இருப்பதாலும் மீண்டும் தெருவுக்கே வந்துவிடுகிறார்கள்.

ஆகவே, குப்பங்களில் கூட்டுறவு கழிப்பறைகள் ஏற்படுத்தப்படவேண்டும். அதாவது ஒரு குறிப்பிட்ட 5 வீடுகளுக்கு 7 ஆம் இலக்கமிட்ட கழிப்பறை என்பது போல ஏற்படுத்தப்பட்டு, அந்த கழிப்பறையை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டியது அந்த 5 வீடுகளின் பொறுப்பு என்பதுபோலவும், அந்த கழிப்பறையின் சாவி இவர்களிடம் கொடுக்கப்பட்டு பிரத்யேகமான கழிப்பறையாக மாற்றப்படவேண்டும். அப்போது இவை சுத்தமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. அல்லது குப்பங்கள் இடிக்கப்பட்டு அவைகள் கழிப்பறை உள்ள வீடுகளாக மாற்றிக் கட்டப்படவேண்டும். அதற்கு அரசாங்கம் குடிசை மாற்று வாரியம் மூலம் அந்த இடங்களில் மாடி வீடுகள் கட்டி, அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு ஒரு வீடும், மற்ற வீடுகளை பொதுச் சந்தையில் விற்றும், செலவை ஈடு கட்டலாம்.

இவை தொடர்ந்து செய்யப்பட்டு வந்தால், தமிழ்நாடு உண்மையிலேயே சுத்தமான இடமாக ஆகிவிடும். அப்படி சுத்தமான இடமாக ஆவது, பொது மக்களின் சுகாதாரமான வாழ்வுக்கும், ஆரோக்கியமான மனநிலைக்கும் ஏதுவாகும்.

கூடவே, மற்ற மாநிலங்களிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் தைரியமாக வரக்கூடிய உல்லாசப் பயணிகளால் கிடைக்கும் அதிக வருமானம் கொசுறு.

***

ilamurugu1964@yahoo.com

Series Navigation

இளமுருகு

இளமுருகு