தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் ேர்தலாயிருந்தால் என்ன?) BJP (பா.ஜ.க) வாக்குறிதிகள்

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

ஈஷா ஷக்தி



:

1. நாங்கள் ஒருவேளை ஆட்சி அமைத்தால் எங்களைத் தேர்வே செய்யாத மானிலங்களுக்கும் எங்களது வாக்குறுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

ரேஷன்:
– அரிசி, கோதுமை போலவே இலவச கம்ப்யூட்டர்கள், மடிக் கணனிகள் ரேஷன் மூலமாக ஒவ்வொரு குடிமகனிற்கும் வழங்கப்படும். இலவச கம்ப்யூட்டர்களை அரசாங்க ரேஷன் அங்காடி அல்லாது வெளியில் விற்பதும், வாங்குவதும் தடுக்கப்படும்.

இராமர் கோயில்கள்:
– அயோத்தியில் மட்டுமன்றி நாட்டில் பல இராமர் கோயில்கள் கட்டப்படும்.
– அனுமார் இராமனைப் பார்த்து ’கண்டேன் சீதையை’ என்று சொல்லிய இடம் தான் கச்சத் தீவு. கண்டேன் சீதை தீவு என்பதுதான் பின்னாளில் கச்சத் தீவு ஆனது. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கச்சத் தீவில் இராமர் பாதத்திற்கு தென்னக இராமர் கோவில் கட்டப்படும்.
– அருணாசலப் பிரதேசத்தில் சீன எல்லையில் இராமருக்கு ஒரு கோயிலைக் கட்டுவதன் மூலம் அந்த மானிலம் எந்தக் காலத்திலும் இந்தியாவைச் சேர்ந்தது என சீனாவிற்கு உணர்த்துவோம். இது எல்லைப் பிரச்சினையை மிகவும் எளிதாகத் தீர்த்துவிடும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

சேது சமுத்திரத் திட்டம்:
– கண்ணுக்குத் தெரியாமல் இராமர் பாலம் இருந்தாலும் அதைத் தொடாமல், தோண்டாமல் புது வழியில் சேது சமுத்திரத் திட்டத்தை செய்து முடிப்போம். இராமர் பாலத்தின் ஆரம்பம் அல்லது முடிவின் எல்லைப் பகுதியில், அதாவது இந்திய நிலப்பகுதியில் தோண்டி கடலை உள் கொண்டு வருவோம். அதை வரும் 3000 வது ஆண்டிற்குள் கட்டி முடித்து அவசியம் கப்பல் விடுவோம்.!

பப்ளிக் ரிலேஷன்ஸ்:
– இந்தியா செய்யும் அணுச் சோதனைகளையோ மற்றைய தனிச் சோதனைகளையோ, வெற்றிகளைப் பற்றியோ கேனாத்தனமாகவோ, முட்டாள்தனமாகவோ அறிவிப்புக்கள் செய்ய மாட்டோம். இல்லையென்றால் அமெரிக்கா போன்ற நாடுகள் நமக்குத் தடை விதிக்கும் அபாயம் உள்ளது என்ற அனுபவங்களை இப்போது நாங்கள் பெற்றிருக்கிறோம்.

புதிய அணு ஒப்பந்தம்:
– அமெரிக்காவுடனான அணுச் சோதனை ஒப்பந்தத்தை ரத்து செய்து, அமெரிக்க உறவுகளைப் புதுப்பிக்க மீண்டும் அதே ஒப்பந்தத்தை நாங்கள் எங்கள் அரசால் ஒப்பந்தமிடுவோம். மேற்படி ஒப்பந்தத்தை நாங்களே ஏற்படுத்தினோம் என வரலாறு கூற வேண்டுமென்பதற்காகவே.

மொழிப் பிரச்சினை:
– நாட்டில் வேலை வாய்ப்பைப் பெருக்க, ஒவ்வொரு இந்தியனிற்கும் அவர் விரும்பும் வரைக்கும் அவரது தாய் மொழிக்கும், இந்திக்கும் இலவச மொழி பெயர்ப்பாளரை அரசு நியமிக்கும். அதே மொழிபெயர்பாளரை வெளி நாட்டினருடன் பேசும் போது ஆங்கிலத்திற்கும் பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால் நாட்டின் மொழிப் பிரச்சினையும், வேலை வாய்ப்புப் பிரச்சினையும் வெகுவாகக் குறையும். மேலும் உதாரணத்திற்கு ஒரு தமிழர் எங்கு வேண்டுமானாலும் தமிழிலேயே பேசலாம், அதைப் போலவே வாஜ்பாயி தன் வாழ்நாள் முழுமைக்கும் எங்கும் இந்தியிலேயே உரையாற்றலாம்.

இலங்கைப் பிரச்சினை:
– எங்களது ஆட்சி அமைந்து 60 நாட்களுக்குள் இலங்கையை இந்தியாவின் ஒரு மானிலமாக, பகுதியாக இணைக்க இலங்கைக்கு வாய்ப்பளிப்போம். போரற்ற முறையிலேயே, வெறும் பேச்சினாலேயே இது மேற்கொள்ளப்பட்டு மற்றைய உலக நாடுகளுக்கு உதாரணமாகவும் இது அமைய பாடுபடுவோம். முக்கியமாக இதைப் போன்ற ஒரு பேக்கேஜ் பாகிஸ்தானுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அகண்ட பாரதத்தை நிர்மாணிப்போம்.

காஷ்மீர் பிரச்சினை:
– பாகிஸ்தான் இணைப்பு, அகண்ட பாரத திட்டத்தில் இருப்பதால் காஷ்மீர் பிரச்சினை தானாகவே தீர்ந்துவிடும். பின்னர் அங்கே அமெரிக்காவிலுள்ளது போல் சினிமா மாவட்டம்/மானிலம் அமைக்கப்படும். அதற்கு ’காஷ்வுட்’ எனப் பெயரிடப்படும்.

மதமாற்றக் கொலைகள்:
– பாதிரியார்கள், மிஷனரீஸ் மற்றும் இந்து மதமல்லாத மற்றைய மதத்தினரின் பிரச்சார போதகர்கள், தலைவர்கள் அல்லது மக்கள் இந்துக்களால் கொல்லப்பட்டால் அவற்றைக் கையாளுவதற்கெனத் தனி நீதி மன்றங்கள் ஒவ்வொரு மானிலத்தின் தலை நகரிலும் உருவாக்கப்படும். இத்தகையப் பிரச்சினைக்கெனத் தனிப் போலீஸ் படையும் அமைக்கப்படும்.

பொருளாதாரம்:
– சென்ற அரசின் கொள்கைகளால் தான் உலகப் பொருளாதாரம் நிலையற்று இருந்தது என்பதை உலகம் முழுவதும் அறிந்திருக்கிறது. நாங்கள் தன்னிச்சையாய் முடிவெடுக்கவும் மேலும் பலமான பிரதமரையும் கொண்டிருப்போம். எனவே தேவைப் பட்டால் அத்வானி உலகமெலாம் ரதத்தை ஓட்டியே இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவார். மேலும் உலகப் பொருளாதாரம் பற்றி பல்கலைக் கழகங்களுக்குப் பாடமும் எடுப்பார். அவருக்கு உதவியாக நல்ல திட்டங்கள் வைத்திருக்கும் நபர்களுக்கு அரசில் பங்கு கொடுத்து அதன் மூலமும் பொருளாதாரத்தை வளர்ப்போம். உதாரணத்திற்கு பொருளாதார மாமேதை விஜய்காந்திடம் வழி இருக்கிறது என்று அவர் சொல்லுவதால், அவரை தனிப்பட்ட முறையில் அட்வைசராக ஏற்றுக் கொள்வோம். தேவைப்பட்டால் அவருக்கு ராஜ்ஜிய சபை உறுப்பினர் பதவி வழங்கப்படும்.

– பலமான பிரதமராக அத்வானி இருப்பார் என்பதால், ஸ்விஸ் பேங்கில் இருக்கும் இந்தியக் கறுப்புப் பணத்தை நேரடியாகச் சென்று அவரே அள்ளி வருவார். இத்தகைய செயல்பாட்டிற்கு ஸ்விஸ் நாட்டு பேங்குகள் அவசியம் உடன்படுவார்கள் என நம்புகின்றோம்; அவர்கள் ஒருவேளை உடன்படாவிடில் ஸ்விஸ் நாட்டுடன் போர் பிரகடனப் படுத்தி, போரிட்டு நமது நாட்டின் கறுப்புப் பணத்தைப் பெற்றே தீருவோம்.

– தங்க லிங்கம் வரவழைக்கும் சத்ய சாயி பாபா போன்றவர்களை அரசு முழு நேரமும் தங்க லிங்கங்கள் உற்பத்தி செய்து நாட்டை வளப்படுத்த வேண்டிக் கொள்ளும். இதன் மூலம் பொருளாதார மேம்பாட்டையும், நாட்டின் உற்பத்தித் திறனும் கூடும் என நம்புகின்றோம்.

வேலை வாய்ப்பு:
– ராமர் கோயில்கள் கட்டும் பணி
– வேற்று வழிப் பாதையில் அமைக்கும் சேது சமுத்திரத் திட்டப் பணி
– பொருளாதார மேம்பாட்டு சிந்தனைக் குழு
– ஏதானும் மசூதிகளை இடிக்கும் பணி
– ரதமிழுக்கும் தொண்டர் பணி
என்பவற்றின் மூலம் நாட்டில் வேலை வாய்ப்பைப் பெருக்குவோம்.

நதி நீர் பங்கீடு:
– அனைத்து மானிலங்களிலும் பிஜேபி அரசுகள் அமையாத வரையில், நதி நீர் பங்கீடுபற்றிப் பேசமாட்டோம். எல்லா மானிலங்களிலும் நாங்களே ஆட்சி செய்தால், மத்தியில் சொல்வதை மானிலங்கள் கேட்க வேண்டுமென்ற சட்டத்தின் மூலம் மிக எளிதாகத் தீர்த்து வைப்போம். அப்போது அதை நடைமுறைப் படுத்துவதும் சுலபம்.

– மாற்றுத் தீர்வாக நதிகளைத் தேசிய மயமாக்கி, நதிகளின் ஒவ்வொரு முகத் துவாரங்களிலும் அரசாணையை விளம்பரப் பலகை மூலம் இது எங்களது ஆட்சியில் செய்யப்பட்ட நதிகள் தேசிய மயமாக்கல் திட்டமெனத் தெரிவிப்போம். அதில் பிரதமர் படம் இருக்காத வண்ணம் பார்த்துக் கொள்வோம்.

– சென்ற காலங்களில் காவிரிப் பிரச்சினையில் நடு நிலையோடு சுப்ரீம் கோர்ட்டின் தீர்வைத்தான் கடைப் பிடிக்க விரும்பினோம். ஆனால் மழைக் காலங்களில் அதிக வெள்ளமாகவும், கோடைக் காலங்களில் நீரே இல்லாமல் வற்றி விடுவதுமாக உள்ளதால் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பதில் பிரச்சினை உள்ளது என்பதை அறிகிறோம். எனவே மழையைச் சீர் படுத்த ஒரு ஆராய்ச்சிக் கழகம் உண்டாக்குவோம்.

விளம்பரமற்ற பயண வழிப் பாதைகள்:
– ரோடுகள் அகலப் படுத்தப்பட்டாலோ அல்லது புதிதாக இரயில் தண்டவாளங்கள் போடப்பட்டால் கண்டிப்பாக ஒவ்வொரு கிலோ மீட்டர் இடைவெளிக்கும் பிரதமர் அத்வானியின் திட்டம் என மருந்துக்கும் போர்டு வைக்க மாட்டோம். வேலை வாய்ப்பைப் பெருக்கச் செய்த எங்களது முன்னர் திட்டம் சுய விளம்பரமாகக் கருதப்பட்டது வருத்தத்திற்குரியது. மக்களின் வரிப்பணத்தில் அவ்வாறு சுயவிளம்பரப் பலகைகளை வைப்பதும், எடுப்பதும் சரியல்ல என்பதை இப்போது உணர்ந்திருக்கிறோம்.
– திருப்பதி மலைப் பாதை தங்கத்தால் அமைக்கப்படும். அதன் திட்டத் தலைவராக சிரஞ்சீவியை பொறுப்பேற்கச் செய்வோம்.

பொதுச் சட்டம்:
– நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை உண்டாக்குவோம். ஒருவருக்கு ஒரு மனைவி மட்டுமே. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் உள்ளவர்களுக்கு அரசியலிலும் சரி, அரசு வேலைகளிலும் சரி வாய்ப்புக்கள் பறிக்கப்பட்டும். அவர்களுக்கு பாஸ்போர்ட்டும் வழங்கப் படமாட்டாது. இதே சட்டம் பெண்களுக்கும் பொருந்தும் அதாவது ஒரு பெண்ணிற்கு ஒரு கணவர் மட்டுமே.
– நாட்டில் விவாகரத்துக்கள் அதிகமாக இருப்பதால், திருமணமானவர்கள் கண்டிப்பாக குறைந்தது ஐந்தாண்டுக்காலம் ஒன்றாக வாழ வேண்டுமெனச் சட்டம் இயற்றப்படும்.
– விவாகரத்துக்களை மேலும் குறைக்க, ஒரு ஆணோ, பெண்ணோ ஒரு முறைக்கு மேல் விவாகரத்து பெற முடியாது எனவும் சட்டம் இயற்றப்படும்.
– காதலர் தினம், புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் போன்ற மேற்கத்தியக் கலாச்சாரங்கள் நிறுத்தப்படும்.
– சட்டங்களை எளிமையாகவும், உடனடியாகவும் அமல் படுத்த முகம்மதிய (மிடில் ஈஸ்ட்) சட்டங்கள் புகுத்தப்படும். அதாவது திருடினால் கை வெட்டுதல், குடித்து விட்டு கார் ஓட்டினால் தலையை வெட்டுதல் போன்ற கண்டிப்பு மிக்க சட்டங்களை இயற்றுவோம்.
– இவற்றின் மூலம் பாரதத்தின் பழைய சிவில் சட்டங்களுக்கு புத்துயிர் கொடுப்போம். (மனு தர்மம்?). பார்பனர் பெண்ணைச் சூத்திரன் கூடினால் அவன் மல துவாரத்தில் காய்ச்சிய கம்பியைச் செருகுதல்; பார்ப்பனன் சூத்திரப் பெண்ணைக் கூடினால், சூத்திரப் பெண்ணிற்கு செம்புத் தண்ணீரைத் தெளித்துத் தீட்டுக்களித்தல் போன்ற உன்னத மனு தர்மச் சட்டங்களை, நமது கலாச்சாரம் மேலும் சீரழியாமல் காப்பதற்காக அமல் படுத்துவோம்.

பசு வதை:
– பசு மற்றும் பன்றி வதைத் தடுப்புச் சட்டம் இயற்றப்படும். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட குற்றவாளிகள் தலை துண்டிக்கப்படுவர்.

இட ஒதுக்கீடு:
– மைனாரிட்டிகளாகிப் போன உயர் சாதியினருக்கு அவர்களின் மக்கள் சதவீதத்திற்கேற்ப இட ஒதுக்கீடு கொடுக்கப்படும்.
– பெண்களுக்கு அனைத்திலும் 33 சதவீதம் வழங்க வேண்டுமென்பதில் பிஜேபி மிக உறுதியாக உள்ளோம், சாப்பாடாகட்டும், சம்பளமாகட்டும், வேலை வாய்ப்பாகட்டும், ரேஷனாகட்டும், சொத்தாகட்டும், சீட்டாகட்டும் கண்டிப்பாக 33 சதவீதம் கொடுப்போம்.

உதவிக் கரம்:
– அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கும் பாக்கிஸ்தான் தலிபான் தலைவன் பைதுல்லா மெக்சூத்தை அடிக்க அமெரிக்காவிற்கு பாஜக எப்போதும் உதவிக் கரம் நீட்டும். தேவைப்பட்டால் இந்திய உளவுத்துறை அமெரிக்க உளவுத்துறையுடன் ஒன்றிச் செயல்படும். ஆப்கான் போரில் இந்தியாவில் பெட்ரோல் நிரப்பிக்கொள்ள அமெரிக்க விமானங்களுக்குத் தயாராக இருந்தோம் என்பதையும் அதை அவர்களுக்குத் தெரியப்படுத்தியும் அவர்கள்தான் இங்கு வரவில்லை என்பதையும் நம்மைக் கண்டு கொள்ளவில்லை என்பதையும் நினைவு கூற விரும்புகின்றோம்.

பட்டங்கள் / பதவிகள்:
– சோ ராமசாமிக்கு அடுத்த ஜனாதிபதி பதவி.
– ஜனாதிபதி மாற்றத்திற்குப் பிறகு வாஜ்பாயிக்கு பாரத் ரத்னா கண்டிப்பாக வழங்குவோம்.
– நரேந்திர மோடி பெயரை நோபல் பரிசுக்கு பரிந்துரைப்போம். அவர் விருப்பப்பட்டால் அவரை அமெரிக்காவுக்கு இந்தியத் தூதுவராக நியமிப்போம்.
– எங்கள் அணிக்கு சுப்பிரமணிய சுவாமி வருவாரேயானால் அவருக்கு துணைப் பிரதமர் பதவியை வழங்குவோம்.
– காஞ்சி ஸ்வாமிகளை நிரபராதியெனத் தீர்ப்பு செய்து, அவரை ராமர் கோயில்கள் கட்டும் பணியின் தலைவராக ஆக்குவோம்.

வீரர் விடுதலை:
– வருண் காந்திக்கு உடனடியாக விடுதலை வாங்கித் தருவோம்.

2. நாங்கள் ஒருவேளை பிற அணியோடு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு ஏற்பட்டால்:

– ஆண்டில் 6 மாதம் அத்வானியும், அடுத்த 6 மாதம் பங்கு அணிக்கும் ஆட்சி வாய்ப்பு
– பங்கு அணியே முதலில் ஆட்சியைத் துவங்கவும் அனுமதிப்போம்.
– பின்னர் பங்கு அணி ஆட்சியைத் தர மறுக்கிறது என நாடகம் ஆடுவோம். பங்கு அணியில் ஒரு சாராரை பிஜேபிக்கு மாற்றுவோம்.
– பங்கு அணி காங்கிரசிடம் பணம் பெற்றுக் கொண்டு எங்களுக்கு வழி தர மறுக்கிறது என்று பிரச்சாரம் செய்வோம்.
– பங்கு அணியின் ஆட்சியைக் கலைக்கச் சொல்லி ஜனாதிபதிக்கு மனு கொடுப்போம்.
– பங்கு அணியினர் மேல் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர வற்புறுத்துவோம்.
– நம்பிக்கை இல்லாத் தீர்மானத்திற்குப் பிறகு, எந்தக் கட்சியும் மெஜாரிடி காட்ட முடியாமல் ஆட்சியைக் கலைக்கச் சொல்லி ஜனாதிபதிக்கு வற்புறுத்துவோம்.
– ஜனாதிபதி ஆட்சியைக் கலைத்து விரைவில் தேர்தல் கொண்டு வர போரட்டங்கள் நடத்துவோம்.
– கவலையே வேண்டாம் மக்களே, புதிய தேர்தலா, இதே வாக்குறிதிகளை மறுபடியும் படித்துக் கொள்ளுங்கள்.

3. நாங்கள் ஒருவேளை ஆட்சி அமைக்காவிட்டால் எங்களது வாக்குறுதிகள் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

– நாட்டில் நடக்கும் அனைத்து கொலை, கொள்ளைக்கும் ஆட்சி அமைக்கும் கட்சியையே குற்றம் சாட்டுவோம்.
– பிஜேபி ஆட்சி செய்யும் மானிலங்களே உலகில் முன்னேறிக் கொண்டிருக்கும் மானிலங்களென பறை அறிவிப்போம்.
– பிஜேபி ஆட்சி செய்யும் மானிலங்களுக்கு மாற்றாந்தாய் அன்பே மத்தியில் காட்டப்படுகிறது என்பதை விளக்குவோம்.
– உலகப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும், இந்தியப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் காரணம் மத்திய அரசே என்பதை மக்களுக்குப் புரிய வைப்போம்.
– மாதத்தில் இரண்டு முறை தொடர் குண்டுகள் வெடித்தாலும், தீவிர வாதிகள் பொது மக்களையோ, கிரிக்கட் வீரர்களையோ, போலீசார் பயிற்சிப் பள்ளியைத் தாகினாலும் தனியார் கம்பெனியின் கிரிக்கெட்டை குஜராத்தில் நடத்தக் கோருவோம். இந்த இரும்புக் கோட்டையில் எறும்பும் புக முடியாது.
– சேது சமுத்திரத் திட்டத்தை அமல் படுத்த விடமாட்டோம்.
– இலங்கைப் பிரச்சினைக்கு மத்திய அரசே காரணம் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என புரிய வைப்போம்.
– சுவிஸ்ஸிலிருக்கும் பணமெல்லாம் ஆட்சியாளர்களுக்கு உரியது என்பாதலேயே காங்கிரஸ் கட்சி அதைப் பெற முயலவில்லை என ஜல்லி அடிப்போம்.
– முஸ்லீம் நகர்களிலெல்லாம் வன்முறை அதிகமுள்ளது என கும்மி அடிப்போம்.
– போபர்ஸ் ஊழல் என்ன ஆயிற்று என்று அவ்வப்போது கேட்டு வைப்போம்.
– அடிக்கடி ரத யாத்திரை மேற் கொள்ளுவோம்.
– எப்படியும் ராமர் கோயிலைக் கட்டியே தீருவோம்.

முக்கிய குறிப்பு:
– நரேந்திர மோடி விருப்பப்பட்டால் குஜராத்தில் அமெரிக்க சம்பந்தங்கள் அனைத்தையும் முறித்துக் கொள்ளலாம். அவர் அமெரிக்காவுக்கு எதிரான நிலையை எடுக்க அனைத்து உரிமைகளும் உண்டு. அதற்கு பிஜேபி துணையாக இருக்கும். இந்தியாவின் மிகப் பெரிய வியாபாரப் பங்குதாரர் அமெரிக்க எனும் நிலையை நரேந்திர மோடி மாற்றிக் காட்டுவார். மேலும் எந்த வித அமெரிக்க உதவியும், வியாபாரமும் இன்றி தனது மானிலத்தை, அவர் ஆட்சியில் இருக்க அப்போதும் தொடர்ந்து குஜராத் மக்களால் அனுமதிக்கப்பட்டால், முன்னேற்றிக் காட்டுவார்.

– வாஜ்பாயி ஆட்சியில் நடந்த பார்லிமெண்ட் தாக்குதலுக்கு கண்டிப்பாக பதிலடி கொடுக்க மீண்டும் குழு அமைத்து எங்களது ஆட்சிக் காலத்திற்குள் என்ன செய்யலாமென ஒரு முடிவை நிச்சயமாக எடுத்து விடுவோம்.


eashashakthi@hotmail.com

Series Navigation

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

This entry is part [part not set] of 28 in the series 20090409_Issue

ஈஷா ஷக்தி


அ.இ.அ.தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி:

ஒகேனக்கல்:
– உடனடியாக ஒகேனக்கல் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஒகேனக்கல் குடி தண்ணீர் மதுரைக்கும் விரிவுபடுத்தப்படும்.

காஞ்சிப் பிரச்சினை:
– சங்கர ராமன் கொலையில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து, அவர் எந்தச் சமயத்தைச் சார்ந்தவராக இருப்பினும், தண்டனை பெற்றுத் தந்து, நிச்சயம் வழக்கை ஒரு முடிவுக்குக் கொண்டு வருவோம்.

பலியில் மாற்றம்:
– ஆடு, மாடு பலி கொடுப்பதை மட்டுமல்ல உண்மையான புலியைப் பலி கொடுப்பதையும் ஆதரிப்போம். மாற்றங்களை எப்போதும் வரவேற்போம்.

பிரதம வேட்பாளர்:
– சுப்பிரமணிய சாமியை பிரதமர் வேட்பாளராக அ.தி.மு.க. முன்னிறுத்தும். ஆல்டெர்னேடிவ் வேட்பாளராக ஜெயலலிதா பெயரையும் கொடுப்போம்.

உலகப் பொருளாதாரம்:
– உலக பொருளாதார மந்தத்தைப் போக்க உட்வாட்டர் கிரேப்வாட்டரை அனைத்து நாட்டுக் குடிதண்ணீரிலும் கலந்து கொடுக்கப்படும்.

வருவாய் மேம்பாடு:
– வருமானமே இல்லாத அதிமுக உறுப்பினர் யாரும் இல்லை எனும் வண்ணம் அனைவருக்கும் வருவாய் கிட்ட வழிமுறை செய்யப்படும். ஒருவர் முதல் ஆண்டிலிருந்து தனது ஆயுள் காலம் வரையில் அதிமுகவில் எவ்விதம் முன்னேற முடியுமென்பதற்கு ரோட் மேப் செய்யப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

தே.தி.மு.க வாக்குறிதிகள்:

விஜய்காந்த் முன்னுரை:
தி.மு.கவும், அதிமுகவும் இதுவரையில் மாற்றி மாற்றி உங்களைக் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இந்த முறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள்.

முதலில் என்னை ஏழைகளின் ரஜினிகாந்த், டூப்ளிகேட் ரஜினிகாந்த் என்றார்கள். எனக்கு நானோ மக்கள் ”கலைஞர்”எனப் பெயர் வைத்துக் கொண்டேன் . ஆனால் பின்னர் எனது மன்றத்தினர் யாருக்கும் கேட்காமள் எனக்கு மட்டும் கேட்கும்படி என்னை கறுப்பு எம்.ஜி.ஆர் என்றார்கள்.

இறந்து போன எம்.ஜி.ஆருக்கு அல்வா கொடுக்களாமா என்று என்னைக் கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன். உயிரோடு இருக்கும் கருணாநிதிக்குத்தான் முதலிள் தங்கப் பேனாவெள்ளாம் கொடுத்து அல்வாக் கொடுத்தேன். ஏனோ அவர் என்னைக் கண்டுகொள்ளவில்லை.

எனவேதான் என்ன செய்யளாம் என்று யோசித்தபோது, ஆபத்பாந்தவனாக எங்களூர் சுப்பிரமணியசாமிதான் இறந்தவருக்கு அல்வா கொடுக்கும் வளியை யுத்தியை எனக்குக் காட்டினார். அவர் யார் இறந்தாளும், அவருக்கே தெரியாத பள உண்மைகளைச் சொல்லி உளகத்திற்கே அல்வாவும் உதாரணமும் காட்டியிருக்கிறார். அவர் இந்திரா, எம்.ஜி.ஆர், ராஜீவ் காந்தியைப் பற்றிச் சொன்னதெள்ளாம் உங்களுக்கு நினைவுக்கு வரலாம். எனவேதான் அவரைப் பின்பற்றி எம்.ஜி.ஆருக்குக் கனவிலேயே நான் ரசிகன் என்றெள்ளாம் சொள்ளவேண்டியது ஆயிற்று.

தமிளர்களே ஒன்று மட்டும் சொள்ள ஆசைப் படுகிறேன். நான் எவருக்கும் கொடி தூக்கியவன் கிடையாது. எள்ளாரையும் எனக்குத் தூக்க வைப்பதுதான் எனது நோக்கம். இன்று உங்களுக்கு எம்.ஜி.ஆரின் மீது சத்தியம் செய்து சொள்கிறேன் – வருங்காளத்தில் எம்.ஜி.ஆரைத்தான் சிவப்பு விஜய்காந்த் என்று நீங்கள் சொள்ளும்படி செய்வேன்.

தேவைப்பட்டிருந்தால் கோடிகளை வாங்கிக் கொண்டு எப்போதோ உங்களுக்கெல்லாம் டாடா காட்டிவிட்டுப் போயிருப்பேன். ஆனால் சில கோடிகளுக்காகவா நான் அப்படிச் செய்வேன்.? என் மனைவி நான் கொடுத்த அயன் பாக்ஸ் ஸ்கீமிற்கே சென்னையில் பாதி எங்களுக்குத்தான் சொந்தமாகி இருக்க வேண்டுமென்று சொன்னார். எனவே அப்படியெல்லாம் அவசரப்பட்டு அரை குறைக் காரியம் செய்ய மாட்டோம். எனவே உங்களுக்குக் காரியம் செய்யவே கடன் வாங்கியாவது கட்சி வளர்ப்போம், கஞ்சி குடித்தாவது உங்களுக்குத் தொண்டு செய்வோம்.

திமுக, அதிமுக, பாமக யாராவது உங்களுக்குக் காரியம் செய்யக் கவலைப் பட்டிருக்கிறார்களா? குறைந்த பட்சம் சிந்தித்து ஒரு ஸ்டேட்மெண்டாவது விட்டிருக்கிறார்களா? உங்கள் வீடு தேடி வந்து காரியம் செய்யவே நான் இருக்கிறேன். கட்சியில் என்னை மீறி எவனும் உங்களை நெருங்கினால் தொளைத்து விடுவேன்.

இளங்கைப் பிரச்சினையில் நான் மவுனமாக இருக்கிறேன் என்கிறார்கள். நான் என்ன போராளியா துப்பாக்கி எடுத்து அரசியலில் போரிட? டூப்ளிகேட் இல்லாமல் சண்டை போட முடியுமா? தொழில் நசிந்து விடும். பிரச்சினையெல்லாம் பேசியேதான் தீரவேண்டும்!!!! வேறு வழியில்லை.

வித்தியாசமான அணுகுமுறையில் நான் எப்படி அரசியல் செய்கிறேன் என்பதை இண்டர்வெள்ளுக்கு மன்னிக்கவும் தேர்தளுக்கு அப்புறம் பாருங்கள். உங்களுக்கும் (எங்களுக்கும்) எல்லாருக்கும் நல்வளி பிறக்க, எங்களைத் தேர்ந்தெடுக்க எப்படியாவது ஒரு முறை வாய்புத் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இதோ எங்களது வாக்குறுதிகல்:

– வீடு தேடி வரும் ரேஷனோடு பால், பேப்பர் அனைத்தையும் நாங்களே உங்களுக்கு வீடு தேடி தருவோம்.

– குழந்தைகளைப் பெறுவதோடு கவளையை விடுங்கள். பள்ளி அட்மிஷனிளிருந்து காளேஜ் அட்மிஷன் வரை வீடு தேடி வரும்.

– கண்டிப்பாக அனைவருக்கும் இளவச இஸ்திரிப் பெட்டி, தையல் இயந்திரம் மற்றும் தண்ணீர் குடம்.

– பள்ளி மாணவர்களுக்கும்/இளைஞர்களுக்கும் பம்பரம் விடப் பயிற்சி, முக்கியமாக தொப்புளில்

– தமிள் வளர்க்க ஒரு தனித் தொலைக் காட்ச்சி (பிரேம்லதா TV?)

– பாகிஸ்தானோடு ஒப்பந்தம் போட்டு ராகெட் விடுவோம். தமிள் திரைப் படங்களை பாகிஸ்தானில் அதிகம் காட்டச் சொல்லி வற்புறுத்துவோம். யாருமே செய்யத் துணியாததை செய்றதுதான் நம்ம ஸ்டையில்.

பாகிஸ்தான் அணிக்கு பாம்ப் வைக்கிற வெளிநாட்டு சதித் திட்டத்தை இந்தியாவிளிருந்து அதுவும் தமிளகத்திலிருந்து போற ஹீரோ எப்படி முறியடிக்கிறார்ங்கிற கதையை அரசாங்கச் செளவிலே தமிளிலே பாகிஸ்தான் மண்ணுக்கே போய் முதள் முறையா படப் பிடிப்பு நடத்தி வருவோம்.

– எம்.பி.ஏ படிச்சுட்டு மாணவர்கள் வெளி நாட்டுக்குப் போறதுக்கு பதிளா, வெளிநாட்டிலே எம்.பி.ஏ படிச்ச மாணவர்களுக்கும் இந்தியாவிள வேளை தருவோம்.

– எங்கள் ஆட்சிக் காலம் முழுமைக்கும் இளங்கைப் பிரச்சினையை பேசியே தீர்ப்போம்.

– கள்ளெடுக்க அனுமதிப்போம். அதைப் பாக்கெட் மூளம் பார்களில் விற்க வசதி செய்து தரப்படும். முந்திரி, ஊறுகாய் போன்றவை அதிரடியாக விளை குறைக்கப்பட்டு ஒவ்வொரு ஏழைக்கும் சென்றடைய வளி வகுப்போம்.

– சினிமாத் துறைக்கு டைடெல் பார்க் போளவே ஒவ்வொரு மானிலத்தின் தலை நகரங்களிலும், மற்றும் பெரிய நகரங்களிலும் சினிமா பார்க்குகள் துவங்கப்படும். அவற்றில் ஸ்டுடியோக்களும், திரை சம்பந்தப்பட்ட அனைத்து அளுவளகங்களும் இருக்கும். ஒவ்வொரு பார்கிலும் குறைந்தது 6 தியேட்டர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுவோம்.

– மிளிட்டரி மற்றும் போளீஸ் துறைக்கு கறுப்புக் கண்ணாடி கட்டாயமாக்கப்பட்டு அரசால் இளவசமாக வளங்கப்படும்.

– வக்கீள் போளீஸ் பிரச்சினைள பாதிக்கப்பட்டவுங்களுக்காக எங்கள் கட்சி சார்புள ஒரு படம் எடுத்து இளவசமாக கொடுப்போம். அந்தப்படம் அஞ்சு கோடி பட்ஜெட்டாணாளும் அம்பது கோடி பட்ஜெட்டாணாளும் சரி எங்கள் கட்சி இளவசமா எடுத்துக் கொடுக்கும்.

– வேட்டி துவைக்கவும், சேலை துவைக்கவும் கட்சி நடத்துகிறவர்களுக்கெல்லாம் இளவச சோப் கொடுப்போம்.

– மன்சூர் அலிகானுக்கு ராஜ்ஜிய சபை உறுப்பினர் பதவி.

– பிரேமலதாவை பிரதமர் வேட்பாளராக அறிவிப்போம். தமிளக முதல்வர் பதவி எனக்குப் போதும்.

– பள்ளிப் பிள்ளைகளும், காலேஜ் பசங்களும் சரியாப் படிக்காததுக்குக் காரணத்தை யாராவது சொன்னாங்களா? ஆசிரியர்களுக்கு சரியான சம்பளங் கொடுகிறாங்களா? ஆசிரியர்கள் சரியாப் படிச்சிறுக்காங்களான்னு யாரவது சொன்னாங்களா ? சந்திரனுக்கு ராக்கெட் அனுப்புண இந்தியா, செவ்வாய் கிரகத்துக்கு ஏன் அணுப்பளண்ணு தெரியுமா? ஒகேனக்கல்லு குடிநீர் திட்டம் என்ன ஆச்சுண்ணு கர்நாடகக் காரனும் கேட்கள, தமிழ் நாட்டுக் காரனும் கேட்கள. ஆனாள் நாங்களும் இதுவரைக்கும் கேட்கள. ஆனா காரணம் என்னன்னு உங்கள்ள யாருக்காவது தெரியுமா? இதுக்கெள்ளாம் தீர்வு எங்களுக்கிட்டே இறுக்கு. ஆனாள் நாங்க சொன்னா மற்ற கட்சிக்காரங்கள்ளாம் தெரிஞ்சுகிட்டு எங்களுக்குப் போட்டியா ஏதோ அவங்களே சொல்ற மாதிரி சொள்ளிருவாங்க. அதனாளே எங்களைத் தேர்தெடுங்க, இதுமாதிரி எள்ளாப் பிரச்சினைக்கும் தீர்வுகளை அள்ளி அள்ளித் தருவோம். நன்றி.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

பாமக வாக்குறிதிகள்:

– அன்புமணிக்கு எந்த அரசாங்கமாக இருந்தாலும் மத்திய மருத்துவ மந்திரி பதவி. நாங்கள் சொல்லும் திட்டங்களை நடைமுறைப் படுத்தும், அல்லது வழிவகுக்கும் பிரதமமந்திரி மற்றும் அவரது கட்ச்சியையே ஆதரிப்போம் அல்லது அந்த அணிக்கு பாமக தாவும்.

– வன்னியருக்குத் தனி மானிலம் அமைக்கப் போராடுவோம். இதை 2034 க்குள் அமைப்போம். அவ்வமயம் வன்னியர் அல்லாதவர் வேறு மானிலத்திற்கு நாடு அதாவது மானிலம் கடத்தப்படுவர்.

– வன்னியர் பல்கலைக் கழகம் அமைக்கவும், வன்னியர் ரீஜினல் இஞ்சினீயரிக் காலேஸ் மற்றும், வன்னியர் மேனேஜ்மெண்ட் கல்லூரிகள் அமைக்கவும் மத்திய அரசையும், மானில அரசையும் வற்புறுத்துவோம். இதற்கு ஒவ்வாத கட்சிகளிடமிருந்து பாமக கட்சி அணியை மாற்றி அமைக்கும்.

– காடுவெட்டி குருவை பிரதம வேட்பாளராக பிரகடனப் படுத்தி அவரைப் பிரதமர் பதவிக்கு முன்னிலைப் படுத்துவோம். மருத்துவர் ஐயாவிற்கு பதவி ஆசையே கிடையாது. அன்பு மணிக்குக் கூட மக்கள் மிகவும் விரும்பிக் கேட்டதாலும், இல்லையென்றால் உண்ணாவிரதமிருப்போம் என்று போராட்ட குணத்தோடு அனைத்துப் பிரிவினரும் வேண்டிக் கொண்டதால் மட்டுமே பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தமது மருத்துவ மந்திரி பதவி மட்டுமல்லாது பிரதமரையும், மற்ற மந்திரிகளையும் அவரவர் தம் கடமையைச் செய்ய மிகவும் வலியுறுத்துயுள்ளார் என்பதை அமெரிக்காவும், பிரிட்டனும் கொடுத்துள்ள பரிசுகளைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். எனவேதன் அன்பு மணி ஆயுள் காலத்திற்கும் பதவியில் இருக்க வேண்டுமென பாமக விரும்புகிறது.

– தமிழகத்தின் அரசுவைக் கட்டுப்படுத்தும் கட்சியாக பாமக எப்போதும் செயல்படும்.

– நாட்டில் பனைமரங்கள், தென்னை மரங்கள் கள் எடுப்பதற்காகப் பயன் படுத்தப்பட்டால் அவற்றை முழுவதுமாக வெட்டி எறிய பாமக தயங்காது.

– நாட்டிலுள்ள சாராயக் கடைகள், பார்கள், பான்பீடாக் கடைகள், சிகரெட் பீடி விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூட ஆவன செய்யப்படும்.

– பொது இடங்களில் சிகரெட், பீடி பிடிப்பவர்களாகட்டும், தனியாக வீட்டில் பிடிப்பவர்களாகட்டும் அரசால் பிடிக்கப்பட்டால் சிங்கப்பூர், துபாயில்குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவது போல் முதற் குற்றத்திற்கு 1 சாட்டை அடியும் பிற்பாடு ஒவ்வொரு முறை தவறுக்கும் சாட்டை அடிகள் கூட்டப்பட்டு அதிகபட்சமாக 5 அடிவரை அனுமதிக்கப்பட்டு பிற்பாடு தலை துண்டிக்கப்படுவர்.

– புகையிலை, பீடி, காஞ்சா உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தப்படும். உலக நாடுகளில் முதன் முறையாக புகை வளமற்ற நாடாக இந்தியாவை உருவாக்குவோம்.

– சாராயம், சுருட்டு படைக்கப்படும் கடவுள் வழிபாடு பாமக வினரால் நாடு முழுவதும் அகற்றப்படும்.

– நல் வழிகளை வலியுறுத்தாத திரைப் படங்களைத் திரையிட அனுமதிக்க மாட்டோம். இது ஃபாரின் படத்திற்கும் பொருந்தும்.

– காவிரிப் பிரச்சினை, ஒகேனக்கல் பிரச்சினையெல்லாம் பிரச்சினையே அல்ல. இவை பெரிது படுத்தப் பட்டுக் காட்டப் பட்டிருக்கின்றன. இவற்றைக் களைய மாபெரும் தமிழர் பேரணியை அமைத்து அவர்களை ஒகேனக் கல்லிலும், காவிரி எல்லைப் பகுதியிலும் நிறுத்துவோம். அவர்களுக்கு அரசாங்கம் மூலமாக குடங்கள் வழங்கப்பட்டு மனிதச் சங்கிலித் தொடராக தண்ணீரை தமிழகத்திற்குக் கொண்டு வருவோம். இதனால் மக்களும் உடல் ஆரோக்கியத்துடன் திகழ்வர். வேலை இல்லாத் திண்டாட்டமும் பெருமளவில் தீர்க்கப்படும்.

– பாமக மிகவும் கட்டுப்பாடான ஒரு ஜனனாயகக் கட்சி, ஜனனாயகத்தில் முழுவதும் நம்பிக்கை வைத்துள்ளோம். எனவே ராமதாஸின் எண்ணங்களே சட்டமாக்கப்படும். மற்றைய எண்ணங்கள் நேரத்தை வீணடித்துவிடும், தேசியப் பொருளாதாரத்தை வீழ்த்திவிடும் என்பதாலேயே மருத்துவர் ஐயா இந்த முடிவை மேற் கொண்டுள்ளார்.

– பாமக எப்போதும் பிற கட்சிகளைச் சார்ந்திருப்பதால், தேர்தலில் எந்த அணியுடன் சார்ந்திருக்கிறோமோ அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளை நாங்கள் வழி மொழிவோம். இதனால் வாக்காளர்களுக்குக் குழப்பம் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.

– வாக்காளர்களுக்கு ஒரு வேண்டுகோள். வாக்குச் சாவடிக்குப் போகும் முன்னர் பாமக எந்த அணியில் உள்ளோம் என்பதைத் தெளிவாய் தெரிந்து கொண்டு செல்லவும். இது கடைசி நேர அணி மாற்றம் எதையும் மருத்துவர் ஐயா அவர்கள் செயல் படுத்தி இருந்தால் அதை மறக்காமல் அறிந்து கொள்ளவே.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

(தொடரும்)

– ஈஷா ஷக்தி

Series Navigation

தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

This entry is part [part not set] of 34 in the series 20090326_Issue

ஈஷா சக்தி




தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் தொடர்ச்சி:

அட்டவணை # 2 :

சேது சமுத்திர திட்டம்:
– அடுத்த பத்தாண்டிற்குள் சேது சமுத்திரத்திற்குள் உடைந்து விழுந்த இயந்திர பாகத்தை மீட்போம். அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தில் இதற்குக் கூடுதல் தொகை கோரப்படும்.
– அடுத்த தேர்தலுக்கு முன்னர் உல்லாச படகையாவது சேதுவில் கண்டிப்பாக ஓட்டிக் காட்டுவோம்.

இலவச வாகனம், பெட்ரோல் திருத்தம்:
– Engineers and Doctors இவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொண்டு உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் போன்றவற்றைச் செய்ய முயன்றால், அவர்களுக்கும் இலவச வாகனம் மற்றும் இலவச பெட்ரோல் திட்டம் விரிவு செய்யப்படும்.

இலவச ரெஃப்ரிஜரேடர்:
– இலவச டி.வி. யின் தொடராகக் குளிர் பதனப் பெட்டி (ரெஃப்ரிஜரேடர்) ஒவ்வொரு குடும்பத்திற்கும்.

தென்மாவட்ட தொலைக்காட்சி:
– அடுத்த ஐந்தாண்டில் அழகிரி டி வி. இதை உருவாக்க ஸ்டாலின் டி.வி. யில் பிரச்சினை ஏற்படுத்தப்பட்டு, அழகிரி டி.வி. உருவாகி நிலையான பிறகு, முக்கியமாக அடுத்த தேர்தலுக்கு முன்னர் இரு குழுவினருக்கும் சமரசம் ஏற்படுத்தப்படும்.

கூவ மேம்பாடு:
– கடல் தண்ணீரைக் கொண்டு கூவத்தைக் கழுவ முயற்சி எடுக்கப்படும். கூவ நதி ஓரங்கள் அனைத்தும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் பூங்காக்களாக மாற்றப்படும். கூவ நதியை மீட்டெடுக்கும் பணியின் மூலம் வேலை வாய்ப்பைப் பெருக்குவோம்.

பிச்சைக்காரர் மேம்பாடு:
– தமிழகத்தில் தமிழிலே பிச்சை எடுத்தால் மட்டுமே பிச்சையெடுக்க அனுமதி மற்றும் வரிவிலக்கு.

போலீஸ் மேம்பாடு:
– உயர் அதிகாரிகளுக்கு கார் கதவு திறக்க, எடுபிடி வேலை செய்ய குறைந்த சம்பளத்தில் தனிப் போலீஸ்காரர்கள் நியமிக்கப் படுவர்.
– கோர்ட்டு வளாகங்களில் வக்கீலுக்குப் படித்த போலீசார் மட்டுமே நியமனம்.

வக்கீல்களுக்குச் சட்டம்:
– சொந்தப் பயன்பாட்டிற்கு மற்றும் சமையலுக்கு என்று டிக்லரேசன் ஃபார்ம் கொடுத்தால் மட்டுமே முட்டை.
– வன்முறையில் ஈடுபடும் வக்கீல்களுக்கு நீதிபதியாகத் தடை.

பாத காணிக்கை:
– செருப்பாண்ட நாடு என்றும் பின்னர் செருப்பாய் உழைப்பேன் என்றதையும் உடன் பிறப்புக்கள் மறந்திருக்க மாட்டீர்கள். எனவே ஒவ்வொரு குடிமகனும் சிறப்புற இலவச செருப்புக்கள் வழங்கப்படும். இதை காலுக்கு மட்டுமே அணிய வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

– மனிதர்கள் செருப்புத் திருட்டிலிருந்து விடுபடவேண்டும். மனிதக் கேவலத்தில் ஒன்றான இன்னொருவரின் செருப்பைத் திருடும் அவலம் நாட்டில் ஒழிய வேண்டும். அத்துடன் காலணிப் பாதுகாப்பு எனும் தொடர் கேவலமும் நாட்டில் ஒழிக்கப் பட வேண்டும். எனவே கட்டணக் காலணிப் பாதுகாப்பு மையங்கள் அனைத்தும் இலவசமாக்கப்படும். அத்துடன் அனைத்து வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றிற்கு இலவச காலணி வளாகங்கள் ஏற்படுத்தப்படும்.

போக்குவரத்துக் கழகங்கள்:
– சென்னை மற்றும் பெரிய நகரங்களில் நடத்தும் பிரமாண்ட விழாக்களில் பயன் படுத்த நடப்பில் உள்ள போக்குவரத்து பஸ்களை இனிப் பயன் படுத்த மாட்டோம். வழக்கமான பயணியர் அல்லலுக்கு உள்ளாவதாக அன்பர்கள் முறையிடுவதால் விழாக்களுப் பயன்படுத்த என்றே சிறப்புப் பஸ்கள் வாங்கப்படும்.

கலாச்சாரச் சட்டம்:
– ஆட்சியிலுள்ள முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர் மருத்துவமனையில் இருக்கும்வரையில் அவரை மானில அவையின் எதிர்கட்சித் தலைவர் கண்டிப்பாக நேரடியாகச் சென்று நலம் விசாரிக்க வேண்டும். அவர் குணம் அடையும் வரையில் மற்றைய கட்சிகளும், உறுப்பினர்களும் புண்படுத்தும் வகையில் பேசக் கூடாது என்பன போன்றவற்றை நாட்டின் கலாச்சார நலன் கருதி சட்டமாக்கப்படும்.



தேர்தல் வாக்குறுதிகளுக்காக உதவுவோம். (எந்தத் தேர்தலாயிருந்தால் என்ன?)

அ.இ.அ.தி.மு.க. வாக்குறுதிகள்:

ஜெயலலிதா முன்னுரை:
தேர்தல் வாக்குறுதிகள் என்றால் என்னவென்றே தெரிந்திராத கருணாநிதி, நான் சென்ற முறை நமது தேர்தல் வாக்குறுதிகள் என்று சொன்னதன் பிற்பாடே அவசரம் அவசரமாக வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார் என்பதை நினைவு படுத்துகிறேன்.
இது எதற்காக என்றால் தானாகவே ஒரு வாக்குறுதியைச் சொல்லக் கூடக் கருணாநிதிக்குத் தெரியாது என்பதுதான்.

இம்முறை நமது தேர்தல் வாக்குறுதிகள் குருவாயூரப்பன் பாதத்தில் வைத்து சிறப்புப் பூஜை செய்த பிறகு வெளியிடப்படும். இவ்வமயம் குருவாயூரப்பனிற்கு யானை வழங்கப்படமாட்டாது.

அட்டவணை # 1 :

வேலை வாய்ப்புத் திட்டம்:
– நாட்டின் வேலை வாய்ப்பைப் பெருக்க ஒவ்வொரு மாநகரங்களிலும் ஜெ.ஜெ. உல்லாச ஓய்வு இல்லங்கள் (மாளிகைகள்) கட்டப்படும்.

குளிர் / கோடைக் கால அரசவை:
– தமிழக சட்டசபையின் குளிர்காலத் தொடரை சென்னையிலும், கோடைகாலத் தொடரை ஊட்டியிலும் கூட்ட வசதி செய்யப்படும். இதற்காகவே ஊட்டியில் உல்லாச மாளிகை என்று சொல்லப்பட்ட கட்டிடம் தமிழக அரசுக்கு வாடகைக்கு விடப்படும். இப்போதாவது தமிழர்களுக்கு எனது புண்ணிய நோக்கம் புரிந்திருக்கும் என்பதைக் கருணாநிதி அறிந்து கொள்ளட்டும்.

காவிரிப் பிரச்சினை:
– காவிரிப் பிரச்சினை தீராத வரையில், வெள்ளத்தால் ஏற்படும் அதிக நீரைக் கர்நாடகாவே நிறுத்திக் கொள்ளவேண்டும். அல்லது வெள்ள நீரைக் கர்நாடகாவிற்குத் திருப்பி அனுப்ப வசதி செய்து தரவேண்டுமென மத்திய அரசை வற்புறுத்துவோம்.
– காவிரி ஆற்றில் பட்டா போட்டால் விவசாயிகளுக்கே முன்னுரிமைதர அ.தி.மு.க. அரசு வலியுறுத்தும்.

சென்னைத் தண்ணீர்:
– சென்னைக்கு செயற்கை மழை. வருடத்திற்கு மும்முறை பெய்யும்படி செய்யப்படும். நீர்த் தேக்கங்கள் அவ்வமயம் நிறையும்படி செய்து சென்னைக்குத் தொடர்ச்சியாகக் குடிதண்ணீர் கிட்டும்படி செய்வோம்.

மின்சாரப் பிரச்சினை:
– இடைநிலை அமைப்பாக குஜராத் கிரிட்டிலிருந்து தமிழகத்திற்கு அதிக மின்சாரம் வாங்குவோம்.
– அத்துடன் தமிழக அணு மின் உற்பத்திக்கு சீனாவுடன் ஒப்பந்தம் செய்து, அதிக மின் உற்பத்தியைப் பெருக்கி இதர நாடுகளுக்கு விற்கும் நிலைக்குக் கொண்டு வருவோம்.

பெண்கள் முன்னேற்றம்:
– ஒவ்வொரு கோவிலின் தீர்த்தங்களிலும் பெண்கள் துறைக்கு மறைவு பாத்ரூம், கழிப்பறை மற்றும் அலங்கார அறை வசதி.
– கணவனை ஒதுக்கி தந்தையுடன் அல்லது தோழியிடன் வாழும் பெண்களுக்கு பணியில் முன்னுரிமை மற்றும் முழு வருமான வரி விலக்கு.
– வார்ட் ரோப், ஷூ ஸ்டாண்ட் போன்ற முக்கிய உபகரணங்கள் பெண் வயதுக்கு வந்தவுடன் அரசால் வழங்கப்படும்.

இலவச தாலி/மோதிரம்:
– ஜாதி, சமய வேறுபாடின்றி ஒவ்வொரு திருமணத்திற்கும் அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கத் தாலி/மோதிரம் வழங்கப்படும். காதல் மற்றும் கலப்புத் திருமணம் செய்பவர்களுக்கு ஒரு குடும்பம் துவங்கத் தேவையன மற்றைய உபகரணங்களும் இலவசமாக வழங்கப்படும்.

தோழி டி.வி.
– நாட்டு மக்கள் மகிழ்வடைய 24 மணி நேர ஒளிபரப்பில் தோழி எஸ்.கலா டி.வி.
– மேலும் ஜெவின் பாடல்களை மட்டுமே ஒளிபரப்ப எஸ்.கலா. மியூசிக் சானல்.

அ.தி.மு.க.வின் புதிய வரித் திட்டம்:
– அ.தி.மு.க. வினர் சம்பாதிப்பதோடு வரியும் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த, ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகியும் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பங்கை அ.தி.மு,க. காரியாலயத்திலுள்ள வருமான வரி உண்டியலில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வார இறுதியிலும் உண்டியல் திறக்கப்பட்டு வருமான வரித் துறைக்கு டி.டி. யாக வழங்கப்படும்.

சுப்பிரமணிய சுவாமி தீர்வாயம்:
– நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சுப்பிரமணிய சுவாமியின் மீது முட்டை எறிந்த வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டிப்பு வழங்கப்படும்.
– சுப்பிரமணிய சுவாமி அடையாளம் காட்டும் வக்கீல்கள் மீது அரசாங்கச் செலவில் சுப்பிரமணிய சுவாமியே முட்டை எறிய ஆவன செய்யப்படும். மேலும் அவர் கோர்ட்டிற்கு வந்து போகும் செலவுகளையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.

வக்கீல்கள் / போலீஸ் மோதல் விவகாரம்:
– மோதலில் ஈடுபட்ட வக்கீல்கள் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இருவருக்கும் துறை மாற்றம் செய்து தண்டிக்கப்படுவர், அதாவது சம்பந்தப்பட்ட வக்கீல்கள் போலீஸ்காரர்களாகவும், போலீஸ்காரர்கள் வக்கீல்களாகவும் மாற்றப்படுவர்.
– இம்மாதிரிப் பிரச்சினைகள் வருங்காலத்தில் தோன்றாதிருக்க வக்கீல்களுக்குப் போலீஸ் பயிற்சியும், போலீசுகளுக்கு வக்கீல் பயற்சியும் அளிக்கப்படும்.

திரைத் துறை மேம்பாடு:
– வீடியோ பார்லர்கள் அரசால் அமைக்கப்பட்டு நடத்தப்படும். இதனால் திருட்டு வி.சி.டி/டி.வி.டிக்கள் முற்றிலும் ஒழிக்கப்படும்.
– நலிந்த திரையுலகினருக்கு வருடத்திற்கு ஐந்து படங்கள் அரசு செலவால் தயாரிக்கப்படும். இப்படங்களின் மூலம் கிட்டும் வருமானம் முழுதும் வரி நீக்கம் செய்யப்பட்டு நலிவடைந்த பிரிவினருக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
– ”அன்னை ஜெயலலிதா பரிசு” உயரிய திரைத்துறைக் கலைஞருக்கு(!) வழங்கப்படும்.
– ஆஸ்காரைப் போலவே, இந்தியாவின் ’ஜே’ஸ்கார் அவார்டுகள் நிர்மாணிக்கப்பட்டு அனைத்து மொழிப்படங்களுக்கும் சென்னையில் பரிசு வழங்கப்படும்.

அரசுப் பணியாளர் முன்னேற்றம்:
– ஒவ்வொரு அரசுப் பணியாளருக்கும் குடும்பத்துடன் வருட விடுமுறையில் வெளிநாடு சென்று வர இலவச டிக்கெட் வழங்கப்படும்.
– அரசுக்கு நன்கொடை வழங்க விரும்பும் ஒவ்வொரு அரசுப் பணியாளரும், ஏதாவது வெளிநாட்டில் டாலரில் எடுத்த செக்கையே அனுப்பி வைக்க வேண்டும்.
– அரசுப் பணியாளர் ஒவ்வொருவருக்கும் ஒரு நானோ கார்.

இலங்கை:
– இலங்கைத் தமிழருக்கு சமமான உரிமை கோரி, இலங்கைத் தேர்வில் அ.தி.மு.க. பங்கெடுத்துப் போராடும்.
– இலங்கைத் தமிழர்களுக்கு சமமான உரிமையை இலங்கை அரசு வழங்காத பட்சத்தில் தமிழர் பகுதியை ஈழத் தமிழ் மாநிலமாக இந்தியாவுடன் இணைக்க, மத்திய அரசை வலியுறுத்துவோம்.
– இலங்கைத் தமிழர் பகுதியிலும், கச்சத் தீவிலும் உல்லாச ஓய்வு இல்லம் கட்டப்பட்டு வேலை வாய்ப்பை இலங்கைத் தமிழருக்கு விரிவு படுத்துவோம்.
– கதிர்காமக் கோவிலுக்கு யானைகள் பரிசாக வழங்கப்படும்.

மாணவக் கண்மணிகளுக்கு:
– ஐந்தாம் வகுப்புத் தேறிய மாணவர்களுக்கு இலவச மடிக் கணனி.
– ஏழைக் கல்லூரி மாணவர்களுக்குப் படிப்புக் காலம் பாதியாகக் குறைக்கப்படும்.

இலவசங்கள்:
– நலிந்த வயோதிகர்களுக்கு
இலவச படுக்கை மற்றும் போர்வை.

– அனைத்து குடிமக்களுக்கும் ஆடைகள் இலவசம். இதனால் தொழில் துறை முடங்காது பாதுகாக்கப்படும்.
– ரேஷன் சிஸ்டம் நீக்கப்பட்டு அதிக அளவில் உணவுக் கூடங்கள் திறக்கப்படும். மதிய உணவுத் திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்டு இலவச உணவுத் திட்டத்தில் இணைக்கப்படும். பாரதியின் ‘தனியொரு மனிதனுக்கு உணவிலையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’ என்பதற்கிணங்க ஒவ்வொரு குடிமகனின் உணவும் அரசால் உறுதி செய்யப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் அவரது எடை, உயரம் போன்றவற்றின் அடிப்படையில் டயட்டீசியனால் கணக்கிடப்பட்ட பகல், மதியம் மற்றும் இரவு உணவு இலவசமாக வழங்கப்படும். உணவுகளோடு இலவச நல்ல குடிநீரும் அவர்கள் விரும்பும் தேனீர், காப்பி அல்லது பால் வழங்கப்படும். முக்கிய பண்டிகைக் காலங்களில் கூடுதலாக இனிப்பு மற்றும் சிறப்பு உணவு வகையும் வழங்கப்படும். நடைமுறைப் படுத்த எடுக்கும் இடைக்காலத்தில் எந்த ரெஸ்டாரண்டிலும் ஒப்புக் கொள்ளும்படியான உணவுகளுக்கான கூப்பன்கள் வழங்கப்படும்.

இதனால் நாட்டில் குடிமக்கள் அனைவருக்கும் கேஸ், கேஸ் அடுப்பு போன்றவையின் தேவை அகற்றப்படும். இருப்பினும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தேவையானால் வைத்துக் கொள்ளலாம்.

போக்குவரத்து மேம்பாடு:
– உள்நாட்டு மற்றும் வெளி நாட்டுப் பயணியரை முன்னிட்டு
ஜெ.ஜெ. ஏர்வேஸ் துவங்கப்படும். முக்கியமாக இலண்டனிற்கு தினசரி சேவை. டெல்லி-சென்னை நாளுக்கு மூன்று முறை.
– உள்நாட்டுத் தேவைக்காக தோழி ஹெலிகாப்டர்ஸ் அனைத்து அரசியல் பிரமுகர்களும் வாடகைக்குப் பயன் படுத்தும் வகையில் இது ஏற்படுத்தப் படும். இவற்றைப் பிற மானில அரசியல் வாதிகளும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
– ஜேஜே கப்பல் கார்பரேஷன் நிறுவப்பட்டு ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் கார்கோவிற்குப் பயன் படுத்தப் படும்.
– கருணாநிதியின் வாசகங்கள் என்று தமிழகப் போக்குவரத்தில் எழுதப்பட்ட பேத்தல்களை கறுப்புப் பெயிண்டால் அழித்துக் கழுவிவிட்டு அதற்கு மாற்றாக மகாகவி பாரதியின் பொன் மொழிகள் எழுதப்படும்.

பட்டங்கள் திட்டம்:
– புலமைப்பித்தனுக்கு கவிமாபேரரசு.
– பன்னீர் செல்வத்திற்கு பரதன் பரிசு.
– மனோரமாவிற்கு முதல் ”அன்னை ஜெயலலிதா பரிசு” மற்றும் பத்மபூஷண்
– செந்திலிற்கு பத்மஸ்ரீ
– ஜெயலலிதாவிற்கு பாரதரத்னா
– சிம்ரனிற்கு சிறந்த நடிகை மற்றும் நைட்டிங் கேர்ல் அவார்ட். மேலும் அவர் விரும்பினால் ராஜ்ஜிய சபா உறுப்பினர் பதவி.

எதிர்காலத் திட்டம்:
– ஜெ நடித்த படங்கள் யாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்டு அனைவரும் இலவசமாகப் பார்க்கும்படி குறுந்தகடுகள் செய்யப்பட்டு,
இலவச DVD Player களுடன் ரூபாய் 30 உடன் அனைவருக்கும் வழங்கப்படும். (ரூபாய் 30க்கு பாப்கார்ன் கிட்டாத பட்சத்தில் இதை அதிகரிக்கக் கோருவோம்).
– தமிழகம் முதல் மாநிலமாகத் திகழப் பாடுபடுவோம். குறைந்த பட்சமாக குஜராத் மாநிலமாவது திகழ உதவுவோம்.
– தமிழகத்திற்கு வெளியில் பெருமைப் படுத்தப்படும் தமிழர்கள் தமிழகத்திலும் உண்மையிலேயே பெருமைப் படுத்தப்பட அவசியம் பாடுபடுவோம்.
– ஜெயின் காலம் பொற்காலம், ஒளிமயமான காலம், கருணாநிதியின் காலம் இருண்ட காலம், கற்காலம், மருண்ட காலம் எனும்படி தமிழகம் முன்னேறியதைப் பறைசாற்றும்படி எழுதும் அல்லது புலப்படுத்தும் கலைஞர்களுக்கு கலைமாமணிப் பட்டம் வழங்கப்படும்.
– கருப்புத்தான் எனக்குப் பிடிச்ச கலரு பாடல் தடை செய்யப்படும்.
– என்னுயிர் தோழிப் பாடலை அ.தி.மு.க.வின் கொள்கைப் பாடலாக அறிவிக்கப்படும்.

கலாச்சாரச் சட்டம்:
– தமிழகத்தில் மேலும் தமிழர்களில் ஜெவைத் தவிர எந்தக் கட்சியினரும், முக்கியமாக ஹார்வர்ட் பல்கலையில் படித்தவர்கள் உட்பட யாரும் ஆங்கிலத்தில் பேசவோ, பேட்டி அளிக்கவோ கூடாது.
– எம்.ஜி.ஆரின் பெயரை தேர்தலுக்குப் பின்னர் அடுத்த தேர்தல் அறிவிப்பு வரும் வரையில் யாரும் முக்கியமாக அ.தி.மு.க.வினர் பயன்படுத்தக் கூடாது. அவர் பெயரை தேர்தலுக்கு மாத்திரமே பயன்படுத்துவதை அனைத்துப் பிரிவினரும் பின்பற்றவேண்டும்.
– ஆட்சியில் ஒரே கட்சியைச் சார்ந்த தந்தையும், மகனும், மகளும் அல்லது சகோதரர்கள் அல்லது கணவன் மனைவி இருப்பின் ஒருவருக்கே பதவி. மற்றவர் பதவி பறிக்கப்படும். மற்றவர் தேர்தலும் செல்லாது. இருப்பினும் வெவ்வேறு கட்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் ஒரே சமயத்தில் ஆட்சியில் பங்கு பெறலாம். இது அரசியலில் வாரிசுகளை உயிரோடு இருக்கும்போதே உருவாக்குவதைத் தடுக்கும் சட்டம்.
– வெளி நாட்டவருக்குப் இந்தியாவில் பிறந்த இந்தியரோ, இந்தியாவில் பிறந்த வெளிநாட்டவரோ, இந்தியரை மணம் புரிந்த வெளிநாட்டவரோ இந்தியாவின் பிரதமாராக முடியாது எனும் புதிய சட்டம்.

சிறப்புப் பொறுப்பு:
– சுப்பிரமணிய சாமிக்கும், சோ இராமசாமிக்கும் சிறப்புப் பொறுப்புக்கள் வழங்கப்படும்.
– தோழி டி.வி.யின் நிர்வாக இயக்குனராக விசுவிற்கு பொறுப்பு வழங்கப்படும்.
– சோவிற்கு மாக்சேசே அவார்ட் வழங்க அரசு பரிந்துரை செய்யும்.

முக்கிய அறிவிப்பு:
– ஆடலரசரின் ஆட்களோ, கருணாநிதியின் ஆட்களோ அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்படுத்தினால் அவர்களைப் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவர். அத்தோடு அ.தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை விமரிசிப்போருக்கும் இது பொருந்தும்.

(தொடரும்)

Series Navigation