து ணை – 6

This entry is part [part not set] of 46 in the series 20050311_Issue

ம.ந. ராமசாமி


—-

சில நாட்கள் என்னுடன் கதா காலட்சேபத்துக்கு வருவான். சில நாட்கள் நேராகச் சென்று விடுவான். நான் ஒவ்வொருநாள் போகாமல் இருக்கவும் நேர்ந்கிறது உண்டு.

மறுநாள் சந்திக்கும்போது ‘சார், நீங்க இல்லாமல் கதை கேட்கவே பிடிக்கல்லே, ‘ என்று சொல்லி இருக்கிறான்…

‘ஏம்ப்பா அவர் சொல்ற அதே கதைய நான் வேற மாதிரி கிளைக்கதையாச் சொல்றேனா ? ‘ என்று சிரித்தேன்.

எனக்கும் அவனுக்கும் ஒருவகையான நட்பு ஏற்பட்டு விட்டது. ஏன் -ஒருவகையான நட்பு, என்று சொல்கிறேன் என்றால், வயசு வித்தியாசம் காரணம்.

நல்ல நட்புக்கு இணையான-வயசு மிக அவசியம் என்பது என் எண்ணம்… எந்த விஷயம் குறித்தும் மனந் திறந்து சகஜமாய்ப் பேசிக்கொள்ளலாம். வயசு வித்தியாசம் இருந்தால் அப்படிப் பேசிக்கொள்ள முடியாது.

நீடாமங்கலம் அழகாகத்தான் கதை சொல்கிறார். பகவத் நாமாவைச் சொன்னால் பலன் உண்டு, என்றார். அது வெகுவாக உண்மை – அவரைப் பொறுத்த மட்டில்!

ராமகிருஷ்ணனுடன் பழகியதில் அவனைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது.

இரண்டுங் கெட்டான் பேர்வழி. முட்டாள் என்று சொல்ல முடியாது. கெட்டிக்காரனும் இல்லை. யதார்த்தவாதி.

அதே சமயம் காரியவாதியும் கூட. தன் அறிவின்மையைப் பட்டவர்த்தமாகத் தெளிவுபடுத்தி விட்டு நிற்பான். இவனுக்குத் தெரியாது என்று நினைத்தால், அதுகுறித்து பளிச்சென்று பதில்சொல்லி என்னைத் திகைக்கவும் வைத்திருக்கிறான்.

— படிக்க விருப்பம் இல்லை. வாசிப்பு ருசி கிடையாது. படித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் இல்லை. அதே சமயம் தெரிந்து கொண்டவற்றை மறக்காமல் இருந்தான். ‘அன்னிக்கு அப்பிடிச் சொன்னீங்களே, இன்னிக்கு மாத்திச் சொல்றேளே ? ‘ என்று டக்கென்று மடக்குகிறான்.

‘ராமகிருஷ்ணன், கல்லுாரில என்ன பாடம் எடுத்துப் படிச்சாய் ? ‘

‘கணக்கு சார்! ‘

‘கணக்குல ஆர்வம் உண்டா ? ‘

‘உண்டு சார்! ஃபைனல் பரீட்சைல நான் நுாறு மார்க்! ‘

‘அப்பிடியா ? ஆச்சரியமா இருக்கே. ‘

‘இதுல ஆச்சரியம் என்ன சார் இருக்கு ? நீங்க எந்த எண்சொன்னாலும் அதுக்கு க்யூப்ரூட் சொல்வேன்… ‘

‘ஆகா ‘

‘ஆமா சார்! ‘ அவன் முகத்தில் உற்சாகம்.

அவனை நோக்கினேன். ஒருவிதத்தில் இவன் மேதை என்று தெரிகிறது.

‘உன்னால் எப்பிடி அப்பிடிச் சட்னு விடை சொல்ல முடிகிறது. ‘

‘எனக்கே எப்டினு தெரியாது சார்! விடை மட்டும் மனசுல பளிச்னு நிக்கும். ‘

‘ரைட்! அப்ப… ஒரு தேதி சொன்னா, அன்னிக்கு என்ன கிழமைன்னு சொல்லுவியா. ‘

‘தெரியாது சார்! ‘

‘இப்பிடி ஒரு திறமை இருக்கிறவாளுக்கு, தேதி சொன்னா கிழமை சொல்ற சாமர்த்தியமும் இருக்கும்… ‘

‘நான் வளர்த்துக்கல சார் ‘

இவனை கவனித்து இவனுடைய மேதாவிலாசத்தைத் தெரிந்துகொண்டு, இவனுடைய அறிவை மேலும் ஊக்குவிக்க எவரும் முன் வரவில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

சோதனைகள் செய்தேன். கால்குலேட்டரை வைத்துக் கொண்டு ஒரே எண்ணை மூன்று தரம் பெருக்கி, கன எண்ணைச் சொன்னேன். டக் கென்று கன மூலத்தைச் சொல்லி விட்டான்!

உண்மையில் இந்த ஒரு விஷயத்தில் என்னைவிட அறிவில் பெரியவன். என்னுள் தலைவணங்கினேன்.

—-

‘ராமகிருஷ்ணன், மகாத்மா காந்தி தெரியுமா. ‘

‘கேள்விப் பட்டிருக்கேன் சார்! ‘

‘பார்த்தது இல்லையா. ‘

‘இல்லை சார்! ‘

‘ஏன் ? ‘

‘ஏன்னா நான் பிறக்கிறதுக்கு முன்னாலயே அவர் செத்துப் போயிட்டார் சார்! ‘

‘கரெக்ட்! அவர் இந்த நாட்டுக்கு என்ன நன்மை செய்தார் தெரியுமா ? ‘

‘சுதந்திரம் வாங்கித் தந்தார் ‘

‘அப்பறம் ? ‘

‘இந்த நாட்டின் பிரதம மந்திரியா இருந்தாரா சார்! ‘

‘இல்லே. ‘

‘ஜனாதிபதியா இருந்தாரா ? ‘

‘இல்ல இல்ல. ‘

‘பின்னே என்னவாகத் தான் இருந்தார் சார்! சில வீடுகளில் அவர் படம் இருக்கே. ‘

‘இப்பவுமா ? ‘

‘ஆமா சார்! ‘

‘அட அது வேற தாத்தாவா இருக்கும்! ‘

‘இல்ல சார்! பாடப் புஸ்தகத்ல இருந்த படமேதான்! ‘

‘பழைய வீடா இருக்கும்! ‘

‘எதனால் மகாத்மா காந்தியைக் கேட்டேள் ? அவரும் உங்களைப்போல நாஸ்திகரா! ‘

‘ஐயையோ! அவர் பரம ஆஸ்திகர்!… அவரிடம் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. உண்மையிலேயே தலைவர் என்ற பதவிக்குத் தகுதி உள்ளவர்.

அவரைப்போல மகான் இந்த தேசத்துல பிறந்ததுக்கு நாம எல்லாரும் கொடுத்து வைத்திருக்கிறோம்… ‘

‘நீங்களும் அதிர்ஷ்டத்தை நம்பறேளா! ‘ என்று மடக்கினான் ராமகிருஷ்ணன். ‘அது எப்பிடி சார், நாஸ்திகரான நீங்க ஆஸ்திகரான மகாத்மா காந்தியைப் புகழ்ந்து சொல்றீங்க ? ‘

‘அது அப்பிடித்தான். நான் வறட்டு நாஸ்திகன் இல்ல. ஆஸ்திகர்களைப் புரிந்துகொள்கிறேன்… நீ ஆஸ்திகன். உங்கூடப் பழகறேனா இல்லியா ? ‘

‘உங்ககூட நான் பழகறேனே! ‘

‘சரி ‘ என ஒத்துக் கொண்டேன். ‘அது உன்னோட பெருந்தன்மையைக் காட்டுது. சாதாரணமா ஆஸ்திகர்கள் எல்லாம் என் பேச்சைக் கேட்டு வெறுத்து ஒதுக்குவாங்க. என் குடும்பத்லயே, நிறையப் பேர் எனக்கு மதிப்பு கொடுக்க மாட்டாங்க. ‘

‘நானும் கொஞ்ச கொஞ்சமா உங்களை மாதிரி மாறிண்டு வரேன் சார்! ‘

‘எப்டி ? ‘

‘நெத்தியைப் பாருங்க. ‘

பார்த்தேன். பாழாகக் கிடந்தது. ‘நெத்தில விபூதி பூசாததினாலே நாஸ்திகன் ஆயிட்டதாச் சொல்ல முடியாது. அது ஒரு மனப் பக்குவம். ‘

‘கோவிலுக்கும் போறது இல்லை சார்! போய் இத்தனைநாள் சுத்தி வந்து என்னத்தைக் கண்டேன். ‘

‘அப்டியா ? கடவுளை நம்பறதை விட்டுட்டியா ? ‘ – எனக்கு ஒரு பரம சீடன் கிடைத்ததில் மகிழ்ச்சி.

‘இன்னும் இல்லை சார். நம்மை மீறிய ஒரு சக்தி இருக்கறாதான் நினைக்கத் தோணுது. மற்றபடி கோவில் விக்கிரகம் பூஜை இதுல எல்லாம் நம்பிக்கை போயிடுத்து. ‘

‘ஜாக்கிரதை ராமகிருஷ்ணன். அப்டி எல்லாம் சட்னு மனசை மாத்திக்கக் கூடாது… ‘

‘மெதுவாத்தான் மாத்திக்கறேன் சார். ‘

ராமகிருஷ்ணன் சென்றான்.

சண்பகம் உள்ளிருந்து வந்தாள். ‘ஏன் இப்டி அந்தப் பிள்ளையாண்டனைப் பைத்தியமா அடிக்கறேள் ? ‘ என்று சற்று கோபத்துடன் கேட்டாள்.

‘இல்ல சண்பகம். ராமகிருஷ்ணன் கெட்டிக்காரன். சில விஷயங்கள்லே போதாது. எந்தெந்த விஷயத்ல போதாது. எதுல சாமர்த்தியம் இருக்குன்னு பார்க்கறேன். கணக்குல கெட்டிக்காரன். வரலாறு அறிவியல் பத்தாது. குறைந்த பட்சம் மகாத்மா காந்தியின் பெயரையும் சுதந்திரத்துக்காக அவர் போராடியதையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு இருக்கறான்… ‘

‘அவனும் சாமி இல்லே, பூதம் இல்லேன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டான் போலருக்கே ? ‘

‘ஆமா. அப்டி ஒரேடியா மாறிடலே. மாறிக் கொண்டிருக்கிறான். கூடிய சீக்கிரம் என்னை /குருவே!/ன்னு கூப்ட்டாலும் ஆச்சரியப் படறதுக்கில்லே! ‘

—-

‘சார் பில்லி சூன்யம், இதைப் பத்தி என்ன சொல்றீங்க ? ‘ என்று ஒரு சமயம் ராமகிருஷ்ணன் என்னைக் கேட்டான்.

‘பில்லினா என்ன ? ‘

‘தெரியாது சார் ‘

‘சூன்யம்னா என்ன ? ‘

‘தெரியாது. ஆனால் சைபருக்கு சூன்யம்னு சொல்லுவாங்க. ‘

‘பில்லி சூன்யம் பத்தி உனக்கு என்ன தெரியும் ? ‘

‘எனக்கு என்ன தெரியும்னு கேட்டாங்கன்னா… நான் புரிஞ்சுண்டதைச் சொல்றேன்.

மந்திரம் போட்டு… தேங்காய்- பழம்- வெற்றிலை- பாக்கு- மஞ்சள்- குங்குமம்- கற்பூரம்- அப்புறம்… எந்த ஆள்மேல அந்த பில்லி சூன்யம் ஏவி விடப்படறதோ அவரோட காலடி மண் இதையெல்லாம் ஒரு மண் தட்டுல கொண்டு வந்து, அந்த ஆள் வீட்டு முன்னால சுத்திக் காட்டிட்டு, ஒரு பொது இடத்துல, கோவில் வாசல்ல ராத்திரியோட ராத்திரியா கொண்டு வச்சுட்டுப் போயிருவாங்க.

கட்டுப் பட்டிருக்கும் குட்டிச் சாத்தான் கட்டுகளை அறுத்துக் கொண்டு போய் யாரோட காலடி மண் எடுத்ததோ அந்த ஆளைத் தேடி அலைஞ்சு பிடிச்சிண்டு அவருக்குத் தொந்தரவு கொடுக்கும். கொலை பண்ணும்… ‘

‘அப்டியா. ‘

‘அவங்க ரத்த ரத்தமா வாந்தி எடுத்துச் சாவாங்க. அவங்க கழுத்தை நெறிஞ்சிக் கொலை பண்ணும்… ‘

‘நீ நம்பறியா ? ‘

‘முன்ன நம்பிண்டிருந்தேன்… ‘

‘இப்ப ? ‘ என்று அவனைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

ராமகிருஷ்ணன் வெட்கப்பட்டான். ‘இப்ப உங்ககூட பழகினாவிட்டு, நம்பறதா கூடாதான்னு சந்தேகம்லாம் வருது! ‘

‘சரி, ரெண்டாம் உலகப்போர் பத்தி கேள்விப்பட்டிருக்கியா. ‘

‘தெரியும் சார்! ‘

‘யார் யாருக்கு இடையே நடந்தது. ‘

‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சார். ‘

‘போச்சுடா! அறியாமைக்கும் ஒரு வரையறை உண்டு ராமகிருஷ்ணன். நீ தாண்டிப் போயிட்டே. ‘

‘சொல்லுங்க சார், தெரிஞ்சுக்கறேன் ‘ – பரிதாபமாகச் சொன்னான்.

‘ரெண்டாம் உலகப் போர் முக்கியமா இங்கிலாந்துக்கும் ஜெர்மெனிக்கும் இடையே நடந்தது.

அப்புறம் சோவியத் யூனியனுக்கும் ஜெர்மெனிக்கும் இடையே நடந்தது. மற்ற நாடுகளும் இருபக்கமும் கலந்து கொண்டு, அதை உலகப் போராக மாற்றின.

அது இப்ப அவசியம் இல்லை. நான் இப்ப சொல்ல வர்றது என்னன்னா, அவ்வளவு பெரிய போரை உங்க பில்லி சூன்யத்தினாலே தடுத்து நிறுத்தி யிருக்கலாம்! ‘

‘சொல்லுங்க சார் ‘

‘ஹிட்லர் யார் தெரியுமா ? ‘

‘தெரியாது சார் ‘

‘கேள்விப்பட்டது கூட இல்லியா ? ‘

‘கேள்விப் பட்டிருக்கிறேன். மறந்துட்டது ‘

‘ஜெர்மன் ஜெனரல் ஹிட்லர். ஜெர்மன் நாட்டின் அதிபதி. அவன்தான் ரெண்டாம் உலகப் போரை ஆரம்பிச்சவன்.

உங்க பில்லி சூன்யத்ல சொல்லியபடி அவனுடைய காலடியில் இருந்து ஒருபிடி மண் எடுத்துக் கொண்டு வந்து, நம்ப பில்லி சூன்யக்காரன் கிட்ட கொடுத்திருந்தால், அவன் குட்டிச் சாத்தானை அனுப்பி ஹிட்லரை ஒரு நொடில கொலை செய்திருக்கலாம் இல்லியா ? ஹிட்லர் ரத்த ரத்தமாக் கக்கிச் செத்திருப்பான்.

இதுக்கெல்லாம் ரொம்ப ஆள் வேணுங்கிறதில்லை. ராணுவ ரகசியத் துறை செய்து முடிச்சுடும். ஒரு மாபெரும் போர் தடுக்கப் பட்டிருக்கும். ஏன் செய்யல்லே ? ‘

‘செய்ய முடிஞ்சிருக்காது சார்! ‘

‘ஏன். ‘

‘ஹிட்லர் எப்பவும் ஷு போட்டுண்டு இருந்திருப்பான். அவன் காலடி மண் கிடைச்சிருக்காது! ‘

‘போச்சுடா! ‘

‘என்ன சார். ‘

‘ராமகிருஷ்ணன், பில்லி சூன்யம் என்பதெல்லாம் ஏமாற்று வித்தை. பிழைக்கறதுக்காக சில பேர் செய்யிற பித்தலாட்டம். அதையெல்லாம் நம்பக் கூடாது. ‘

‘சரி சார். ‘

‘பிழைப்பு- வாழ்க்கை- ரெண்டு சொல்லுக்கும் அர்த்தம் தெரியுமா ? ‘

‘சொல்லுங்க சார். கேட்டுக்கறேன். ‘

‘பிழை செய்து வாழ்வது பிழைப்பு. எப்படியும் வாழலாம். எப்படி வாழ்ந்தால் என்ன என்று வாழ்வது பிழைப்பு.

திருடி வாழ்வது- பொய்சொல்லி வாழ்வது- ஏமாற்றி வாழ்வது- விபசாரம் பண்ணி வாழ்வது- பெண்களை அண்டி வாழ்வது… கறுப்புப் பணம் பண்ணி வாழ்வது- லஞ்சம் பெற்று வாழ்வது… எல்லாமே பிழைப்பது ஆகும்.

ஒழுங்கா சம்பாதிச்சி, யாரையும் ஏமாற்றாமல், திருடாமல், லஞ்சம் வாங்காமல், கூடியவரை பொய்யைத் தவிர்த்து வாழ்வதுதான் வாழ்க்கை. ‘

‘அப்பிடியா சார் ‘ என்று குரலை இறக்கிக் கொண்டான். எச்சில் முழுங்கினாப் போலிருந்தது.

‘ஏன் சந்தேகமா ? ‘

‘சந்தேகம்னில்லை. லஞ்சம்… வாங்கத்தானே கூடாது… ‘

‘ஆமா. கூடாது. ‘

‘கேட்டு வாங்கக் கூடாது… அப்டித்தானே சார் ? ‘

‘கேட்டும் வாங்கக் கூடாது. கேட்காமலும் வாங்கக் கூடாது. ‘

‘கொடுத்தா வேணாம்னு சொல்லிறணுமா சார்! ‘

‘நல்ல கேள்வி. அப்டியொரு பாயின்ட் இருக்கு!

லஞ்சம் என்கிறது இந்நாளிலே நிறைய இடங்கள்ல மாமுலா, பழக்கமா, அன்றாட நடவடிக்கைகள்ல ஒண்ணா, நித்தியவிதியா அமைஞ்சு போச்சு.

ராமகிருஷ்ணன், லஞ்சம் ஒருத்தர் கொடுத்து, நீ மட்டும் வாங்காமல் போனியானா, உன்னோட வேலை செய்யிறவங்க, லஞ்சம் வாங்கறவங்க, உன்னையே ஒதுக்கி வைப்பாங்க. உன்கூட பழக மாட்டாங்க.

எங்கே, சமயத்ல நீ காட்டிக் கொடுத்துருவியோன்னு உன்கிட்ட பயப்படுவாங்க… ‘

அவன் என்னையே பார்த்தான்-

‘மேல் அதிகாரியும் பயப்படுவார். ஃபீமேல் அதிகாரியும் டிட்டோ. அதனாலே உன்னை வேற இடத்துக்கு மாற்ற ஏற்பாடு பண்ணுவார். எங்க மாத்தினாலும் நீ வீட்டுக்கு நடந்தே வந்திருவே, அது வேற விஷயம்…

முடிஞ்சா உன்னை வேலையை விட்டு எடுக்கவும் அவங்க முற்படுவாங்க! லஞ்சம் வாங்கறவங்க எல்லாரும் கோஷ்டியா சேர்ந்துக்குவாங்க.

ஊரோட ஒத்து வாழ்றது நல்லது… அதுனால நான் என்ன சொல்றேன்… வர்ற பணத்தை நீ தேமேன வாங்கிப் போட்டுக்கலாம்.

என்ன, அதை நல்ல காரியத்துக்குப் பயன்படுத்தணும். தர்மம் பண்ணலாம். அநாதை ஆசிரமத்துக்குக் கொடுக்கலாம்… ‘

‘மன சமாதானத்துக்காகச் சொல்றேளா தெரியல்ல ‘ என்றான். பிறகு ‘நானா யாரண்டையும் கேக்கிறது இல்ல சார்! ‘ என்றான்.

—-

ஒருநாள் காலையில் அவசரமாக ராமகிருஷ்ணன் வந்தான்.

‘சார், நான் இன்னிக்குப் பெண் பார்க்கப் போறேன். நீங்களும் என்கூட வரணும் ‘ என்றான்.

‘வரேனே. ‘

‘மாமியையும் அழைச்சிண்டு வரணும்… ‘

‘அதுக்கு நீ மாமியைக் கேள் ‘ என்றேன்.

சண்பகம் சம்மதித்தாள்.

சென்றோம். ராமகிருஷ்ணனின் பெற்றோரையும் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. பெண்ணைப் பார்த்தோம்.

அழகாக இருந்தாள். சூட்டிகையாகத் தெரிந்தாள்… குறை தெரியவில்லை- பழகினால்தான் தெரியும்!… நிறை தெரிந்தது.

‘என்ன படித்திருக்கிறாய் ? ‘ என்று கேட்டேன்.

‘பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் ‘ என்று சொன்னாள். பெர்னாட்ஷாவின் நாடகங்களை ஆசிரியர் நன்றாகச் சொல்லித் தந்ததாக ரசனையுடன் விவரித்தாள். தமிழ்ப் பத்திரிகைகள் படிப்பதாகவும் சொன்னாள்.

ராமகிருஷ்ணன் இவளுக்குப் பொருத்தம்தானா, என்கிற ஐயம் என்னுள் எழுந்தது.

தனிமையில் அவளை அழைத்தேன். ‘ராமகிருஷ்ணன் ரொம்ப நல்ல பிள்ளையம்மா. அவனை எனக்கு நன்னாத் தெரியும். பொது அறிவு போதாது. இலக்கியம் என்றால் விளக்கெண்ணெய். மத்தபடி குடும்பத்தை ஒழுங்கா வெச்சுக் காப்பாத்துவான்… ‘ என்றேன்.

‘சரி மாமா ‘

‘நீ கெட்டிக்காரியாட்டமாத் தெரியறது. உன் கெட்டிக்காரத்தனத்துக்கு அவன் ஈடு கொடுப்பானான்னு எனக்கு சந்தேகம்… ‘

‘மாமா, யாராவது /ஒருத்தர்/ கெட்டிக்காராளா இருக்கறதுதானே நல்லது…

ரெண்டு பேரும் முட்டாளா இருந்தாலும் கஷ்டம். ரெண்டு பேரும் புத்திசாலியா இருந்தாலும் மோதிக்கொள்ள வேண்டி வரும்…

யாராவது ஒருத்தர் தன் பலவீனத்தைத் தெரிஞ்சி பணிந்து போனால்தான் குடும்பம் சோபிக்கும்னு எனக்குப் படறது! ‘

‘தாயே, நீ தீர்க்க சுமங்கலியா இருக்கணும்! ‘ கை கூப்பினேன்.

—-

தொ ட ர் கி ற து …

ma na ramasamy 31 sri chakra nagar chellamnagar ext kumbakonam 612001

india cell 0091 094431 16324 – 0091 0 94432 9003

Series Navigation

ம. ந. ராமசாமி

ம. ந. ராமசாமி