திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 51)

This entry is part [part not set] of 37 in the series 20030309_Issue

பாவண்ணன்


மதுரையிலிருந்து பெங்களூருக்கு ரயிலில் வந்துகொண்டிருந்தேன். நான் உட்கார்ந்திருந்த பெட்டியில் என்னைத் தவிர எல்லாரும் மாணவ மாணவிகள். ஏதோ விடுப்பு முடிந்து மீண்டும் கல்லுாரிக்குத் திரும்பிக்கொண்டிருப்பதைப்போலப் பார்வைக்குத் தோன்றியது. வண்டி கிளம்பியதிலிருந்து ஓயாமல் பேசியபடி வந்தார்கள். அது ரயில்பெட்டி என்பதையோ ஏராளமான பயணிகள் தம்முடன் பயணம் செய்கிறார்கள் என்பதையோ அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்ட மாதிரியே தெரியவில்லை. தாம் மட்டுமே அந்த வண்டியில் இருப்பதுபோன்ற பிரமையுடன் பேசுவதும் ஒருவரையொருவர் சீண்டிக்கொள்வதும் கேலிசெய்து கொள்வதும் அடித்துக்கொள்வதுமாக இருந்தார்கள். இரவு பத்துமணிவரை படிக்கலாம் என்று நினைத்திருந்த என் திட்டம் தொடக்கத்திலேயே தோல்வியடைவதைப் புரிந்துகொண்டேன். ஆனாலும் நேருக்குநேர் நிமிர்ந்து அவர்களைக் கவனிக்கவும் கூச்சமாக இருந்தது. ஜன்னல் வழியே வெளியே வானத்தைப் பார்த்தபடி அமர்ந்துகொண்டேன். தடுக்க இயலாதபடி காதில் வந்து விழும் உரையாடல்களை மட்டும் கேட்கத் தொடங்கினேன்.

திரைப்படம், கிரிக்கெட், அழகிப்போட்டி, கல்லுாரி நிர்வாகம், ஆசிரிய ஆசிரியைகளின் நடைஉடைபாவனைகள், புதுசாக வந்திருக்கும் விளம்பரங்கள் மற்றும் விளம்பரப்பொருட்கள் என ஒவ்வொன்றைப் பற்றியும் உற்சாகம் ததும்பப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவரை உரிமையுடன் ஒருமையில் அழைத்துப்பேசிச் சிரித்தார்கள். ஒவ்வொரு மாணவியும் தன் முன்னால் உள்ள மாணவனை மட்டம்தட்டிப் பார்க்கத் தருணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அதே போல ஒவ்வொரு மாணவனும் எதையாவது பேசி மாணவியை மடக்க வாய்ப்புக்குக் காத்திருந்தான். ஆனால் ஒவ்வொருவரும் தம் உள்விழைவு வெளியே புலப்பட்டுவிடாதபடி உற்சாகத்தால் மறைத்துக்கொண்டிருந்தனர்.

பிரித்தறிய முடியாத அந்த ஓயாத பேச்சுச் சத்தத்திடையே குறிப்பிட்ட ஒரு மாணவனும் மாணவியும் பேசிக்கொண்டதை மட்டும் அறிய விரும்பிக் கவனத்தைக் குவித்தேன். தமிழ் முகங்கள்தாம். ஆனாலும் அவர்கள் உரையாடல் ஆங்கிலத்திலேயே இருந்தன. இருவரும் கேலிப் பேச்சுகளைப் பரிமாறிக்கொண்டிருந்தனர். முதலில் அவரவர்கள் ஆடையைப் பற்றிய கேலி. பிறகு தலைமுடி பற்றிய கேலி. அதற்கப்புறம் உரையாடும் பாங்கு பற்றிய கேலி. பிறகு அனிச்சையாக வெளிப்படும் முகக்குறிப்புகள் பற்றிய கேள்வி. மெல்லமெல்ல அவர்கள் கேலி அடுத்தவரின் உடலைப்பற்றியதாக மாறியது. மிகச்சாமர்த்தியமான பேச்சு விளையாட்டு அது. எந்த அளவுக்கு அடுத்தவர்களை அனுமதிப்பதோ அந்த அளவுக்கு அனுமதித்து, எல்லை மீறாமல் ஆடுகிற ஆட்டம். ஒரே ஒரு சதவீதம் மாற்றுக்குறைந்தாலும் தரம் தாழ்ந்துவிடும் வாய்ப்புகளே மிகுதி என்பது இருவருக்குமே புரிந்திருந்தது. ஒரு துப்பறியும் கதையைப் படிப்பதைப்போல அவர்கள் உரையாடல் விறுவிறுப்பாக நிகழ்ந்தபடி இருந்தது.

அந்தப் பெண் சுதந்தரமாக உடல்பற்றிய கேலியைக் கூர்மையாக்கிக் கொண்டே சென்ற தருணத்தில் அந்த இளைஞன் தொடர்ந்து செல்ல முடியாமல் நிலைகுலைவதைக் கவனித்தேன். பின்வாங்குவது புலப்பட்டுவிடாதபடி மெல்ல மெல்ல அவன் தயங்கித் திசைதிரும்பினான். சிறிது நேரத்தில் அவனுக்கு அழகான ஒரு வாய்ப்பு கிடைத்தது. இளைஞன் அப்பிடியை விடாமல் கெட்டியாகப் பற்றியபடி மேலும்மேலும் கேலிப்பேச்சுகளைச் சிந்தியபடி முன்னேறத் தொடங்கினான். அந்தத் தாக்குதலை அப்பெண் மிக லாவகமாக எதிர்கொண்டாள்.

வெற்றிக்கனியை நழுவவிட்ட இளைஞன் மீண்டும் வேறொரு ஆட்டத்தைத் தொடரத் தொடங்கினான். விடுகதைக்கு விடைகோரும் விளையாட்டு. தமிழ் விடுகதைகள் எல்லாம் ஆங்கில உடை அணிந்துகொண்டன. மாற்றி மாற்றிச் சொல்லப்பட்ட விடுகதைகள் அலுத்த போது சின்னச்சின்னப் பிரச்சனையுடன் கூடிய கதை முன்வைக்கப்பட்டு விடுவிக்கும்படி கோரப்பட்டது. இளைஞன்தான் தொடங்கினான்.

‘ஒரு திருடன், ஒரு கொலைகாரன், ஒரு இளம்பெண் மூன்று பேர் ஆற்றங்கரையில் நிற்கின்றனர். வாய்ப்பு கிடைத்தால் ஒருவரையொருவர் கொல்லத் தயாரான மனநிலையில் இருக்கிறார்கள். ஓடக்காரன் இளைஞன். ஓடத்தில் ஒரே சமயத்தில் இரண்டு பயணியர் மட்டுமே பயணம் செய்யலாம். யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாதபடி மூவரும் எப்படி ஆற்றைக் கடந்திருப்பார்கள் ? ‘

இளைஞனுடைய கேள்வி அந்த மாணவியை வாயடைக்க வைத்தது. பழைய ஆடு, புலி, புல்லுக்கட்டு, ஓடக்காரன் கதை ஆங்கிலத்துக்குப் போகும் விதம் ஆச்சரியமாக இருந்தது. ஒரு சில நிமிடங்கள் எதைஎதையோ பேசுகிற மாதிரி போக்குக்காட்டிய பெண் எதிர்பாராத விதமாக சரியான விடையைச் சொல்லி அவனைப் பேச்சற்றவளாக்கினாள். பிறகு தன்னுடைய பங்குக்கு வேறொரு புதிரைப் போட்டு விடுவிக்கச் சொன்னாள். முதல் வாய்ப்பில் தடுமாறினாலும் மறுவாய்ப்பில் சரியாகச்சொன்னான் இளைஞன்.

மெதுமெதுவாக ஆட்டம் உச்சத்தை நோக்கிச் சென்றது. பிறகு அந்த உச்சிப்புள்ளியை நெருங்கும் முன்னரேயே உச்சியை அடைந்த சந்தோஷத்தை இருபாலருமே எய்திவிட்டனர். பிறகு தொடரவும் மனமின்றி அப்புள்ளியிலிருந்து இறங்கவும் மனமின்றி அப்புள்ளியிலேயே லயித்திருந்தார்கள்.

ஆனந்த போதையில் லயித்திருந்த இளைஞன் சட்டென தன்னுடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து ‘இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டால் நீ எதைக் கேட்டாலும் தருவேன் ‘ என்று தானாக முன்வந்தான்.

‘எதைக்கேட்டாலும் தருவியா ? ‘ என்று உறுதிகேட்டாள் அப்பெண்.

‘நிச்சயமாகத் தருவேன் ‘ என்றான் அவன். பிறகு ‘சொல்ல முடியவில்லை என்றால் என்ன செய்வது ? ‘ என்று பதிலுக்குக் கேட்டான். உடனே சற்றும் தயங்காமல் அவள் ‘நீ எது கேட்டாலும் நானும் தருவேன் ‘ என்று பதில்கொடுத்தாள் அவள். சட்டென கூடியிருந்தவர்கள் அனைவருடைய கவனமும் அவர்கள் இருவரின் மீது பதியத்தொடங்கின.

இளைஞன் சொன்னான். ‘ஷெர்லாக்ஸ் ஹோம்ஸ் சொர்க்கத்துக்குப் போனாரு. அவர் மிகப்பெரிய துப்பறியும் மேதை என்றறிந்ததும் அங்கிருந்தவர்கள் அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்கள். ஆண்களும் பெண்களுமாக நிறைந்திருக்கிற சொர்க்கத்து மாந்தர்களில் கும்பலோடு கும்பலாக இருக்கிற ஆதாமையும் ஏவாளையும் கண்டறிய முடியுமா என்று கேட்டார்கள். அது சுலபமான காரியம் என்று சொன்னதோடு மட்டுமன்றி கண்டுபிடிக்கவும் செய்தார், எப்படி கண்டுபிடித்திருப்பார் சொல் ? ‘

அப்பெண் உண்மையிலேயே தடுமாறினாள். உடனே அந்த இளைஞன் அப்பந்தயத்தை பெட்டிக்குள் இருந்த எல்லாருக்குமானதாக மாற்றிவிட்டான். உற்சாகத்தின் போதை அவன் கண்களில் அப்பட்டமாகத் தெரிந்தது. அது மட்டுமல்ல, வெற்றிபெறப் போகும் உறுதியும் ஒரு போதையாக அவன் கண்களில் தெரிந்தது. நிமிடங்கள் உருண்டபின்னரும் யாராலும் விடை சொல்ல முடியவில்லை. எல்லாருமே அவனைப் பார்த்து ‘நீயே சொல் ‘ என்று கேட்டுக்கொண்டனர். ஆனந்தத் துள்ளலுடன் பதில்சொல்லத் தொடங்கியவன் தன்னை மீறிய அவசரத்தில் தவறான வார்த்தையைப் பயன்படுத்தி எல்லாரையும் முகம் சுளிக்கவைத்துவிட்டான். ஆங்கிலம் அத்தருணத்தில் அவனைக் காலைவாரிவிட்டது. அவன் சொல்லவந்த பதில் ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்தவர்களுக்குத் தொப்புள் இருக்கும், தாய் மூலம் பிறக்காத ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தொப்புள் இருக்க வாய்ப்பில்லை என்பதை அடிப்படையாக வைத்து ஹோம்ஸ் கண்டறிந்திருப்பார் என்பதாகும். ஆனால் தொப்புளைக் குறிக்கும் ‘நேவல் ‘ என்கிற சொல்லுக்குப் பதிலாக முலைக்காம்பைக் குறிக்கும் ‘நிப்பிள் ‘ என்கிற சொல்லை அவன் வாய் உச்சரித்துவிட்டது. ஒரே கணம். எல்லா மாணவமாணவிகளும் திகைத்து அவனைப் பார்த்துவிட்டு சட்டென அமைதியாகப் பின்வாங்கினார்கள். மணிக்கணக்கில் அவனுடன் பேச்சுவிளையாட்டில் ஈடுபட்டிருந்த பெண் அடிபட்டவளைப்போல சுருங்கி விலகிவிட்டாள். அந்தப் பயணம் முழுக்க அவனால் அவர்களுடன் மறுபடியும் ஒண்ட முடியவில்லை. ஒரே ஒரு சின்னப்பிழை அவனைக் குற்றவாளியாக்கிவிட்டது.

மறுநாள் காலை பெங்களூர் சேர்ந்தபிறகும் அப்பெட்டியில் உற்சாகம் கைகூடவில்லை. எல்லாரும் அவனை அனாதையாக்கிவிட்டுச் செல்வதில் குறியாக இருந்தனர். எனக்குப் பாவமாக இருந்தது. அவனுடன் ஆறுதலாகப் பேசினால் நல்லது என்று தோன்றியது. என் பையிலிருந்த என் முகவரி அட்டையையே அவனிடம் நீட்டிச் செல்லும் வழி கேட்டேன். என் உரையாடல் அவனுக்குக் கவனத்தைத் திருப்பும் வழியாகப்பட்டிருக்கக் கூடும். தானும் அப்பக்கமே செல்வதால் இருவரும் சேர்ந்தே செல்லலாம் என்று என்னுடன் வரத்தொடங்கினான். ஸ்டேஷனலிருந்து வெளியேறி நடந்த வழியில் ஒரு காப்பிக்கடையில் இருவரும் காப்பி அருந்தினோம். பேருந்து நிலையம் வந்து பேருந்தைப் பிடித்து இடம்பார்த்து உட்கார்ந்தோம். இளைஞன் சகஜ நிலைக்குத் திரும்பத்தொடங்கினான். மெல்ல நேரம் பார்த்து இரவில் அவன் ஏன் அப்படி உளறினான் என்று கேட்டேன். உண்மையிலேயே அக்கணத்தில் தொப்புளுக்கு ஆங்கிலப்பதம் ஞாபகத்துக்கு வரவில்லை என்றும் தவறுதலாக மனத்தில் எட்டிப்பார்த்த வார்த்தையையே தொப்புளுக்குரியதாக எண்ணிச்சொல்லிவிட்டதாக வருத்தத்துடன் சொன்னான். இறுதியில் ‘தொப்புளுக்கு ஆங்கிலத்தில் என்ன சொல்வது ‘ என்று கேட்டான். நான் சொன்னேன். இளைஞன் சோகத்துடன் சிரித்துக்கொண்டான்.

ஆணும் பெண்ணும் விளையாடுகிற சொல்விளையாட்டு கம்பிவிளையாட்டு போன்றது. கரணம் தப்பினால் மரணத்தைப்போல சற்றே பிசகினாலும் ஆபாசமாகிவிடக்கூடிய ஆபத்துடையது. ரயில் சந்திப்பில் பழக்கமான இளைஞனுடைய சோகக்கதை நினைவுக்கு வரும்போதெல்லாம் மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ சிறுகதையும் தவறாமல் நினைவுக்கு வந்துவிடும்.

இக்கதையில் தியாகு என்னும் வாலிபன் இடம்பெறுகிறான். அவன் மனைவி சரோஜாவும் உண்டு. தியாகு சொல்விளையாட்டில் வல்லவன். அடுக்கடுக்காக வீசுகிற சொற்கள் மூலம் எதிராளியின் மனக்கோட்டைச் சுவர்களைத் தகர்த்து உள்நுழைய முடியும் என்று கணக்குப்போடுபவன். பல்கலைக்கழகத் தேர்வுக்காக வெளியூரிலிருந்து வந்து வீட்டில் தங்கியிருக்கும் ராஜி என்னும் பதினேழு வயதுப் பெண்ணைப்பற்றிய சிந்தனைகளுடன் தொடங்குகிறது கதை. ராஜிக்குத் தன்பால் ஒருவித ஈர்ப்பு உண்டு என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கிறான் தியாகு. அதை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொள்வது எப்படி என்று சிந்தனையில் மூழ்குகிறான். மனக்கோட்டைக்குள் சதாகாலமும் பறந்தபடி இருக்கும் ஆசை என்னும் பறவையைக் கைப்பற்றும் வேகம் மெல்லமெல்லக் கூடிக்கொண்டே போகிறது. கோட்டைக்கதவுகளைத் திறக்கும் வழியறியாமல் தவிக்கிறான். அவள் படிப்புக்குப் பாதகமின்றிச் செய்யவேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வுடனும் மனைவியின் பார்வையில் படாதபடி செய்துமுடிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடனும் காத்திருக்கிறான். அவனைப்பொறுத்த வரையில் அவளுடைய மனக்கோட்டைக் கதவுகளைத் தகர்ப்பது மிகப்பெரிய சோதனை அல்லது சவாலாகும்.

அடுத்த தேர்வுக்கு இரண்டு நாட்கள் இடைவெளி இருக்கிற சூழலில் நிதானத்துடன் வெளிவிறாந்தையில் உட்கார்ந்து கடலை கொறிக்கிறாள் ராஜி. சமையலறையில் காப்பி தயாரிக்கிறாள் சரோஜா. அத்தருணத்தைத் தன் சோதனைக்கு உகந்த நேரமாகக் கருதும் தியாகு தன் முதல் தாக்குதலைத் தொடங்குகிறான். தன்வசம் இருக்கும் கடலையை அவள்மீது எறிகிறான். அவள் முகம் சுளித்தாலும் அவளிடமிருந்து வெளிப்பட்ட கடைக்கண் பார்வையையும் சிரிப்பையும் கவனிக்கிறான் தியாகு. அவற்றைத் தனக்குக் கிடைத்த ஒளிச்சமிக்ஞைகளாக ஏற்றுக்கொள்கிறான். மறுபடியும் கடலையை அவள் மீது எறிகிறான். ராஜியிடமிருந்து மறுபடியும் செல்லமான கோபம் வெளிப்படுகிறது. வெட்கத்துக்கும் சிரிப்புக்கும் கூடக் குறைவில்லை. உடனே தொடர்ந்து தாக்கத் தயாராகிவிடுகிறான் தியாகு. எறிந்த கடலை அப்படியே ஒட்டிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறான். அவளும் விளையாட்டாக எங்கே என்று வினவுகிறாள். அவன் மேலும் முன்னேறி ‘நானே எடுத்துக்காட்டினால் என்ன தருவீர்கள் ? ‘ என்று கேட்கிறாள். அவளும் சற்றே முன்னேறி வந்து ‘முதலில் காட்டுங்க பார்ப்போம் ‘ என்று அப்பாவித்தனமாகச் சொல்கிறாள். சட்டென அவனுக்குள் தைரியம் கரைந்துவிடுகிறது. பின்வாங்கத் தொடங்கிவிடுகிறான். ‘எடுத்துவிடுவேன், ஆனால் தோற்றுப்போய் நீங்கள் யாரிடமாவது சொல்லிவிடுவீர்கள் ‘ என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறான். அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் மேலும்மேலும் அவள் ஊக்க்முட்டியும் அவனுக்குத் துணிச்சல் பிறக்கவில்லை. ஊரைவிட்டுக் கிளம்புவதற்குள் எடுத்துக்காட்டிவிடுவதாகச் சொல்லிவிட்டு ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறான்.

தேர்வுகள் எல்லாம் முடிந்துபோக ஓய்வாக அறையிலிருந்த தியாகுவிடம் புத்தகம் வாங்க வருகிறாள் ராஜி. ‘புத்தகம் கொடுத்தால் என்ன தருவாய் ? ‘ என்று கேட்டு மீண்டும் ஒரு தாக்குதலைத் தொடங்குகிறான் தியாகு. ‘முதலில் கொடுங்கள், பிறகு பார்க்கலாம் ‘ என்று ராஜியும் தயாராகிறாள். சற்றே அவசரப்பட்ட தியாகு இருக்கையை விட்டெழுந்து ராஜியின் இடையைத் தொட்டுத் தன்பக்கம் இழுக்கிறான். ‘ஐயோ, சும்மா இருங்கப்பா ‘ என்று செல்லமாகச் சிணுங்குகிறாள் அவள். அது வெறுமனே மேலுக்குக் காட்டப்பட்ட பாசாங்கு என்பதை அவனுக்கு நன்றாகப் புரிகிறது. அதே சமயம் தொடர்ந்து அந்த ஆட்டத்தை ஆட இயலாதபடி ஏதோ காலடியோசை கேட்கிறது. அவசரமாகக் கையை விடுவிக்கிறான். அவள் புத்தகத்துடன் வெளியேறிவிடுகிறாள். உண்மையில் யாரும் வரவில்லை. மனத்தில் கேட்ட ஓசை வெறும் பிரமையாக இருக்கக் கூடும் என்று நினைத்துக்கொள்கிறான்.

மீண்டும் ஒரு வாய்ப்புக்காக காத்திருந்து சலித்த தியாகு எழுந்து குசினிப்பக்கம் சென்று பார்க்கிறான். ராஜி அங்கே லயிப்புடன் புத்தகவாசிப்பில் ஈடுபட்டிருக்கிறாள். பழக்கதோஷத்தில் அவன் வாயிலிருந்து சரோஜாவின் பெயரே வெளிப்படுகிறது.

மறுவாய்ப்பு ஒன்று தானாக அமையும் என்று எதிர்பார்த்தபடி அறைக்குள் காத்திருக்கிறான் தியாகு. வெகுநேரத்துக்குப் பிறகும் சந்தடியின்றிப் போகவே தானாகவே குசினிப்பக்கம் சென்று பார்க்கிறான். ராஜி அழுவது தெரிகிறது. சரோஜா அவன்மீது சீற்றமுறுகிறாள். பேசாமல் வெளியே வந்துவிடுகிறான் தியாகு. அவனுக்குத் தன் செயல்முறைகளிலிருந்த பிழைகள் புரிகின்றன. ராஜிமீது அவன் கோபிக்க விரும்பவில்லை. அங்கே கதவடைபட்ட கோட்டைக்குள் அவனுக்காகச் சிம்மாசனம் சதா விரிந்திருக்கத்தான் செய்யும் என்று தோன்றுகிறது. தொடர்ந்து அடுத்தவர் கோட்டையை நெருங்கும் முன்னர் தம்மைச் சுற்றியுள்ள கோட்டையை முதலலே¢ தகர்க்கவேண்டும் என்று உறுதிகொள்கிறான்.

*

இலங்கை எழுத்தாளர்களில் முக்கியமான திருப்புமுனையாக விளங்கியவர் மு.தளையசிங்கம். ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி-அவசரக்குறிப்புகள் என்ற கட்டுரைத்தொடர் மூலம் தன்னுடைய தனித்துவம் மிகுந்த தன் இலக்கியப்பார்வையை நிலைநாட்டியவர். புதுயுகம் பிறக்கிறது, போர்ப்பறை, ஒரு தனிவீடு ஆகியவை இவருடைய முக்கியமான படைப்புகள். ‘கோட்டை ‘ என்னும் சிறுகதை கொழும்பில் இருந்து அரசு வெளியீடாக 1965 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘புதுயுகம் பிறக்கிறது ‘ என்னும் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்