திருவல்லிக்கேணியில் திருமங்கையாழ்வார்

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

“என்றென்றும் அன்புடன்” பாலாபிருந்தாரண்ய ஷேத்திரம் என்று போற்றப்படும் பழமை வாய்ந்த, சிறப்பு மிக்க திருவல்லிகேணி பார்த்தசாரதிப் பெருமாளை 10 பாசுரங்களில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, கண்ணன் இங்கு வந்ததாக நம்பிக்கை. உத்சவர் வேங்கடகிருஷ்ணனின் திருமுகத்தில், போரில் அம்பு பாய்ந்ததால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகளைக் காணலாம் !

இப்புண்ணியத் தலத்தில் 5 திவ்யதேசப் பெருமான்கள் எழுந்தருளியிருப்பதாகச் சொல்வது மரபு, அதாவது, தலப்பெருமாள் வேங்கடகிருஷ்ணன் திருப்பதி வேங்கட ரூபமாகவும், தனிச்சன்னதிகள் கொண்ட யோகா நரசிம்மர் அகோபில நரசிம்ம ரூபமாகவும், கோதண்ட ராமர் அயோத்தி ராமரூபமாகவும், கஜேந்திர வரதர் திருக்காஞ்சிப் பெருமாளின் ரூபமாகவும், ரங்கநாதர் ஸ்ரீரங்கத்து ரங்கமன்னாரின் ரூபமாகவும் கருதப்படுகின்றனர் !

திருமங்கையாழ்வார்
மேற்கூறிய ஐவரில், வேங்கடகிருஷ்ணர், ஸ்ரீராமர், நரசிம்மர் மற்றும் கஜேந்திர வரதர் ஆகியோரைப் பற்றிய திருமங்கையின் திவ்யப் பாசுரங்களின் தொகுப்பு கீழே:
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)

நான்கடிகள் கொண்ட பாசுரத்தில் திருமங்கையார் எத்தனை தகவல்கள் தருகிறார், பாருங்கள் !

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் –
வில் விளையாட்டின் போது, தன்னை அழிக்க கம்சன் நடத்திய யாகத்தையும், கம்சனையும், மலையை ஒத்த பலம் வாய்ந்த அவனது மல்யுத்த வீரர்களையும்

வேழமும் பாகனும் வீழ* செற்றவன் தன்னை –
கம்சனினின் அரண்மனையின் வாயிலில், கண்ணனை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் என்ற பெருயானையையும் அதன் பாகனையும் வீழ்த்தி அழித்த கண்ணபிரானும்

புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் –
திரிபுர அசுரர்களை தனது புன்னகையால் வீழ்த்திய சிவபெருமான், ஒரு சமயம், கோபத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதால், (திருமகளை அவ்வோட்டில் பிட்சை அளிக்க வைத்து) சிவன் அடைந்த துயரங்களிலிருந்து விமோசனம் அளித்த (திருக்கரம்பனூர்) உத்தமனும்

வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை –
மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் பக்கம் இருந்து, தன் திருக்கையில் சாட்டை ஏந்தி, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக களத்தில் முன் நின்று, தன் மார்பிலும் முகத்திலும் பகைவரின் அம்புகளை ஏற்று அர்ஜுனனைக் காத்த ஸ்ரீகிருஷ்ணனும்

சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* –
சிற்றன்னை கைகேயி இட்ட கட்டளைக்குப் பணிந்து, ராஜ்ஜியத்தையும், மணிமுடியையும் விருப்பத்துடன் துறந்த ஸ்ரீராமனும் ஆன ஒப்பில்லா எம்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

*********************************
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணியிழையைச் சென்று*
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது* எம்பெருமான் அருள். என்ன*
சந்தமல் குழலாளலக்கண் நூற்றுவர்த்தம்* பெண்டிரும் எய்திநூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*

அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணியிழையைச் சென்று* எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது* –
கண் பார்வையற்ற திருதாஷ்டரனின் மைந்தனும், துரியோதனினின் தம்பியுமான துச்சாதனன், பாஞ்சாலியிடம் சென்று, “உன் கணவரான பாண்டவர் சூதாட்டத்தில் உன்னை பணயம் வைத்துத் தோற்றதால், அடிமையான நீ எங்களுக்கு சேவகம் செய்ய வேண்டும்” என்று கூவியபடி அவளது சேலையைக் களைய முற்பட்டான்.

எம்பெருமான் அருள். என்ன* சந்தமல் குழலாளலக்கண் நூற்றுவர்த்தம்* பெண்டிரும் எய்திநூல் இழப்ப* –
அச்சமயத்தில், பாஞ்சாலி கைகள் இரண்டையும் உயர்த்தி, “கண்ணா ! என்னைக் காத்தருள்வாய்” என்று மனமுருகி வேண்டி ஸ்ரீகிருஷ்ணனிடம், கண்ணீர் மல்க, சரணடைந்தவுடன், அந்த ஆபத்பாந்தவன் தன் திருவருளால், துச்சாதனன் உருவ உருவ அவளது சேலையானது வளரும்படி செய்து, பாஞ்சாலியின் மானத்தைக் காத்தான். மகாபாரதப் போரில் கௌரவர் நூற்றுவரும் அழிந்து, அவரது மனைவியர் விதவைக் கோலம் பூண்டு, அதன் மூலம் பாஞ்சாலியின் சபதம் நிறைவேறுவதற்காக

இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* –
மகாபாரதப் போரில் இந்திரனின் புதல்வனான அர்ஜுனனின் தேரோட்டியாக நின்று, பாண்டவர்களை வெற்றி பெற வைத்து, தர்மத்தை நிலை நாட்டிய ஒப்பில்லா கண்ண பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: பாஞ்சாலி சரணாகதியைப் பற்றிப் பேசும்போது, அவள், “கண்ணா ! சங்கசக்ர கதாபாணே, த்வாரகா நிலைய அச்சுதா, கோவிந்தா, புண்டரீகாக்ஷா, ரக்ஷமாம் சரணாகதம்” என்று அவனை வேண்டிச் சரண் புகுந்தாள் !

*******************************
பரதனும் தம்பி சத்ருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன்பகலும் துதிசெய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர்ப்பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்றால*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.

தம்பிமார்களான பரதனும், சத்ருகனனும், இலக்குவனும், துணைவியான சீதாபிராட்டியும் சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி துதி செய்ய வேண்டி, அவர்கள் உடன் நின்ற ஸ்ரீராமனை, வலிமை வாய்ந்த இராவணனை வதம் செய்த ஒப்பில்லா எம்பெருமானை,

மணம் கமழும் மலர்கள் பூத்துக் குலுங்கும் குளிர்ச் சோலைகள் நிறைந்த, குயில்கள் பாட மயில்கள் தோகை விரித்தாடுகின்ற, சூரியனின் கதிர்கள் நுழைய வழியில்லாத வகையில் மரங்கள் அடர்ந்த, அழகிய திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !
குறிப்பு: நாம் காணும் அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைந்த திருவல்லிக்கேணி ஆழ்வார் காலத்தில் சூரியக்கதிர்கள் புக வழியில்லா, அடர்ந்த மரங்கள் கொண்ட காடு போல இருந்திருக்கிறது ! ஆழ்வார் கொடுத்து வைத்தவர் :)))

***************************
பள்ளியிலோதி வந்ததன் சிறுவன்* வாயில் ஓராயிர நாமம்*
ஒள்ளியவாகிப் போதஆங்கு அதனுக்கு* ஒன்றுமோர் பொறுப்பிலனாகி*
பிள்ளையைச்சீறி வெகுண்டு தூண்புடைப்பப்* பிறையெயிற்றனல் விழி பேழ்வாய்*
தெள்ளிய சிங்கமாகிய தேவைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2) 2.3.8

பள்ளியில் தான் கற்ற நாராயணனின் ஓராயிரம் நாமங்களை, தன் மழலை வாயால் பிரகலாதன் ஓதிய சமயத்தில், அவனது தந்தையான ஹிரண்யன் பொறுமை இழந்தவனாக, என்ன செய்வதென்று புரியாத கடும் சீற்றத்தில் தனது மகனை கடிந்து, “எங்கிருக்கிறான் உன் நாராயணன் ? இந்தத் தூணிலா ?” என்று கேட்டபடி, அருகில் இருந்த தூணை தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான் !

அடித்த மாத்திரத்தில், பிறை வடிவான கூரிய பற்களும், தீப்பொறி ஒத்த சிவந்த கண்களும், அகண்ட வாயும் கொண்ட சிங்கத் திருமுகத்தோடு அத்தூணிலிருந்து வெளிப்பட்டு, அவ்வரக்கனை தன் கூரிய நகங்களால் கிழித்து மாய்த்த, அழகிய சிங்கப்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: நரசிங்க வடிவம் பார்க்க பயங்கரமாக இருப்பினும், சிங்கப்பெருமாள் அடியார்க்கு இனியவன், பேரருளாளன், அதனாலேயே ஆழ்வார் “தெள்ளிய” சிங்கமாகிய தேவன் என்கிறார் !

***************************
மீனமர் பொய்கைநாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்றிழிந்த*
கானமர் வேழம் கையெடுத்தலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து* சென்று நின்று ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.9

பெருமாளின் மலர்ச்சேவைக்கு வேண்டி, மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாக சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் முதலையொன்று கவ்வ, கஜேந்திரன் தன் தும்பிக்கையை உயர்த்தி, “ஆதிமூலமே” என்று பெருங்குரலெடுத்து அலற, விரைந்தோடி வந்த எம்பெருமான், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, யானையை துயரிலிருந்துக் காத்தான்.

அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதப்பெருமானை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: ‘ஆழி தொட்டானை’ என்பதற்கு ‘யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்’ என்று பொருள் கொள்க !!!

பாசுரச் சிறப்பு: முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்க பெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபடக் கூறுவார் ! ‘ஆதிமூலமே’ என்ற அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) பிராட்டியின் கையில் சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாக பறந்து வந்து (பெருமாள் கருடன் மேல் ஏறி பயணம் மேற்கொள்ள வேண்டி) அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறி பயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலது திருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக, முக்கூரார் அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !

தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம் அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவான் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு தந்தை அவசரமாக ஓடி வருவானோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பான்.

‘கஜம்’ என்பது யானையைக் குறிக்கும். கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், பெருமாள் விரைந்து வந்ததை, ” ‘க’ என்றவுடன், ‘ஜம்’ என்று வந்து நிற்பான் எம்பெருமான் ” என்று நகைச்சுவையாகக் கூறிக் கேட்டதுண்டு 🙂

என்றென்றும் அன்புடன்
பாலா


balaji_ammu@yahoo.com

Series Navigation

பாலா

பாலா