திருமாவளவனின் அறைகூவலும், ‘ஜாதி இந்துக்களின் ‘ சப்பைக்கட்டுகளும்

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

மு. சுந்தரமூர்த்தி


திரு. திருமாவளவன் அவர்களே! ‘இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் ‘ என்ற உங்கள் அறைகூவலுக்கு ‘இந்து ‘ என்னும் அடையாளத்தை இன்னும் விட்டுவிடாத என்னிடம் பதில் ஏதும் இல்லை. உங்கள் மக்களுக்கு ஏற்பட்ட அவமானங்களையோ, அட்டூழியங்களையோ நானோ, என் குடும்பத்தினரோ சந்தித்ததில்லை. எங்கள் பிறப்பு அளித்த ‘ஜாதி இந்து ‘ என்ற வெதுவெதுப்பு எங்களுக்கு சுகமாகவே இருந்திருக்கிறது. ஆனால் உங்கள் உரையில் விவரித்திருக்கும் நிகழ்ச்சிகளைப் போன்ற செய்திகளை அறியும்போது ‘இந்து என்பதில் பெருமைப்படுவது ‘ எப்படித் தான் என்று புரியவில்லை. உங்கள் அறச்சீற்றத்தை ‘இந்துக்களின் மீது உமிழும் வெறுப்பு ‘ என்றழைக்கும் தைரியமும் எனக்கு வரவில்லை. ஏனென்றால் உங்களுக்கெதிராக கொடுமை புரிபவர்களின் தைரியத்திற்கு அடிப்படை அவர்கள் அறிவின்மை அல்ல. ‘ஜாதி இந்து ‘ என்கிற அவர்கள் பிறப்பு தரும் ஆணவம் என்பதை மட்டும் தெளிவாகவே உணர்ந்திருக்கிறேன். அதனால் தீண்டாமையை எதிர்த்து நீங்கள் ஆவேசக் குரல் கொடுக்கும்போது சப்பைக்கட்டுகள் கட்ட என்னால் இயலவில்லை.

தலித் மக்களின் ஒட்டுமொத்த விடுதலைக்காகவோ அல்லது அவர்களுக்கு எதிரான மேல்ஜாதியினரின் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்தவோ ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்காத இந்தியர்கள்/தமிழர்கள்/இந்துக்கள்/பல்வேறு ஜாதியினர்/நானாவிதக் கட்சியினர் என்று பலவித அடையாளங்களுக்குள் அடைப்பட்டு நிற்கும் பல்லாயிரக் கணக்கானவர்கள் உண்டு. அத்தகையவர்களில் ஒருவனான எனக்கு உங்களுக்கு அறிவுரைக் கூறவோ, உங்கள் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி கேட்கவோ எந்தவித அருகதையும் இருப்பதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில் சில தலித் நண்பர்களுக்கு ஏதேனும் சில உதவிகள் செய்திருக்கலாம் அல்லது நானே நேரடியாக தலித் மக்களுக்கு எதிராக அட்டூழியம் எதுவும் செய்யாதிருக்கலாம். இது ஒன்றே எனக்கு எந்தவிதச் சிறப்புத் தகுதியையும் அளித்துவிட முடியாது. ஏனென்றால், இதைப்போன்று ஏராளமானோர் தனிப்பட்ட முறையில், அங்கங்கே வெவ்வேறு அளவில் ஏதாவது செய்திருப்பர். ஆனால் அவற்றால் இன்னும் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லை என்பது தான் நடைமுறை.

இதே போல இன்னும் குழுரீதியாகவும் சில மத நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள், தொண்டு நிறுவனங்கள் இவையெல்லாம் கூட உதவிகள் செய்திருக்கக்கூடும். ஆனால் இவற்றாலும் உங்கள் மக்களின் முழு விடுதலையும் நிகழவில்லை என்பதும், அவர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு முடிவும் ஏற்படவில்லை என்பதும் அப்பட்டமான உண்மைகள். இந்த சூழ்நிலையில் தொடர்ந்து நிகழும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக போராடுவதைக் குறைகூறி, இன்னும் கூட ஜாதி இந்துக்களின் சலுகைகளுக்காக கையேந்தவும், அவர்களின் தயவுக்காகக் காத்திருக்கவும் சொல்வது நயவஞ்சகம். உங்கள் மக்களைத் திரட்டி ஓர் அரசியல் சக்தியாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் உங்களைப் போன்றவர்களை ஜாதி வெறியர்களாகவும், வன்முறையாளர்களாகவும் கொச்சைப்படுத்துவதும், உங்கள் அரசியல் நோக்கங்களை மட்டுப்படுத்தி, ஆதிக்க சாதிகளின் அரசியல் அமைப்புகளுக்கு வால் பிடிக்க வேண்டும் என ஆலோசனைகள் சொல்வதும் கூட ஜாதிய ஆணவத்தின் வெளிப்பாடுதான். உண்மையிலேயே உங்கள் விடுதலை மீது அக்கறையிருந்தால் உங்களுக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருக்க மாட்டோம். ஏனென்றால் இங்கு திருந்த வேண்டியது நாங்கள். திருத்தப்பட வேண்டியவர்கள் மேல்ஜாதியினர் என்று சொல்லிக்கொள்பவர்கள். கண்டிக்கப்பட வேண்டியவர்கள் கொடுமைப்படுத்துபவர்கள். கொடுமைக்குள்ளாகுபவர்கள் அல்லர். அதைச் செய்ய திராணி இல்லாத காரணத்தால்தான் எங்களில் சிலர் உங்களுக்கு உபதேசம் செய்துக் கொண்டிருக்கிறோம்.

என்னைப் போன்றவர்களுக்கு, உங்களுக்கு அறிவுரை கூறவோ, உங்கள் செயல்பாடுகளை விமர்சிக்கவோ எப்போது அருகதை வரும் என்றால், என்னால் மட்டுமல்ல, என் குடும்பத்தாரால், என் அண்டை அயலார்களால், நான் பிறந்த ஜாதியாரால், மதத்தினரால், நாட்டவரால் உங்கள் பிறப்பு இழிவாக கருதப்படாமல், உங்கள் உணர்வுகள் மதிக்கப்பட்டு, உங்கள் கலாச்சாரம் சமமாக மதிக்கப்பட்டு, கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்றவற்றில் உங்களுக்கு உரிய பங்கை நீங்கள் பெறும் சூழ்நிலை வரும்போது தான். அதற்குமுன் அதோ பார் பாரதியார் பூணூல் போட்டார், இதோ பார் எங்கள் சங்கம் தலித்துகளுக்கு என்னென்ன செய்கிறது என்று பட்டியல் போடுவது இரண்டு காரணங்களுக்காக: (1) உங்கள் வாயை அடைத்து, உங்கள் எழுச்சியை தடுத்து உங்களை பழைய நிலையிலேயே வைத்திருப்பது; (2). எங்கள் குற்றவுணர்வுகளை மறைத்துக் கொள்வது. பாரதி செய்தது அவர் காலத்தில் பெரும் புரட்சிகரமான செயல்தான். அவருடைய பெயரைச் சொல்லி புளகாங்கிதம் அடையும் எத்தனை பேர் அவருடைய செயலின் குறிப்புணர்ந்து, எத்தனை தலித்துகளுக்கு பூணூல் போட்டு தமக்கு இணையானவர்களாக மாற்றியிருக்கிறார்கள் ? அல்லது எத்தனை பேர் தம் பூணூல்களை கழற்றிப்போட்டு கீழிறங்கி வந்திருக்கிறார்கள் ? அப்படி ஏதும் நடக்காததால் தான் இன்னும் கூட பாரதியாரை மட்டுமே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கும் கட்டாயம் நீடிக்கிறது.

உங்கள் இயக்கத்திற்கு ‘சிறுத்தைகள் ‘ என்று வைத்துள்ள குறியீட்டுப் பெயர்கூட சிலருக்கு முகச்சுளிப்பை உண்டாக்குவதாகத் தெரிகிறது. ‘சிறுத்தை ஒன்று காட்டிலிருக்கும் இல்லை கூண்டிலிருக்கும் ‘. உண்மை. நீங்களும் இப்படித்தான் இருக்கவேண்டுமென பலர் விரும்புவார்கள். எனக்கு இந்த பெயரைப் பார்த்து பதற்றப்பட ஏதுமில்லை. ஏனென்றால் மனிதர்களை விட விலங்குகளின் மீது எனக்கு மரியாதையும், நம்பிக்கையும் அதிகம். பொதுவாக எந்த விலங்கினமும் தன் இனத்தையே கொல்வதோ, துன்புறுத்துவதோ கிடையாது. பிற இனத்தைக் கொல்வதற்கோ, தாக்குவதற்கோ கூட பசி, தற்காப்பு என்ற இயற்கையான இருத்தலியல் காரணங்கள் இருக்கும். உங்களுக்கு முன்னோடியாக இருந்த அமெரிக்க ‘கருப்புச் சிறுத்தைக் கட்சி ‘யின் பெயர் கூட முதலில் ‘கருப்புச் சிறுத்தைத் தற்காப்புக் கட்சி ‘ (Black Panther Party for Self Defence) என்று தான் இருந்தது. உங்கள் இயக்கமும் ஒரு தற்காப்பு/தன்மான அரசியல் இயக்கமாகவே மதிக்கப்பட வேண்டும் என்பதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

உங்கள் இயக்கத்தின் பெயரை விமர்சிப்பவர்கள், உங்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பவர்கள், ‘சிவசேனை ‘ என்ற பெயரைப் பற்றியோ, ஆர்.எஸ்.எஸ். சேவகர்களின் ‘உடற்பயிற்சி ‘ பற்றியோ, வி.ஹெச்.பி. தன் தொண்டர்களுக்கு திரிசூலம் வினியோகிப்பதைப் பற்றியோ, பஜ்ரங்க தளத் தொண்டர்கள் ஆயுதப் பயிற்சிப் பெறுவதைப் பற்றியோ என்ன நினைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. இவர்கள் நிகழ்த்தும் கோரத் தாண்டவங்களை குறித்து என்ன சொல்வார்கள் என்றும் தெரியவில்லை. இவர்கள் எல்லாம் ‘இந்துமதக் காவலர்கள் ‘ என்ற பெயரில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் முதலில் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும். இவர்களோடு சேர்ந்து உங்கள் மக்களும் வன்முறையில் இறங்கினால் உங்களை விமர்சிப்பவர்கள் மகிழ்ச்சியடையக்கூடும். உங்கள் மக்களை அவர்களின் காலாட்படையாக சேர்த்துக்கொள்ள ஆர்வத்தோடு இருப்பார்கள். ஆனால் உங்கள் உரிமைகளுக்காக நீங்களே ஒரு அமைப்பாக உருவெடுத்துப் போராடுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.

உங்களுக்கு அறிவுரை கூறுபவர்கள் எழுப்பும் கேள்விகள் தனிப்பட்ட நண்பர்களோடான உரையாடல்களிலும், பொதுத்தளங்களிலும் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன. அவற்றில் சில:

1. இந்து மதத்தில் மட்டும் தான் பிரிவுகள் இருக்கின்றனவா ? பிற மதங்களிலும் பிரிவுகள் உண்டு. மதம் மாறிய பின்னரும் சிலர் ஜாதி அடையாளங்களை விட்டுவிடுவதில்லை.

இதில் பாதி உண்மையாக இருக்கலாம். பிற மதங்களில் உள்ள பிரிவுகள் அனேகமாக, அவர்களுடைய மொழி, நிற, இன, தொல்குடி வேறுபாடுகளின் காரணமாக எழுந்தவை. இந்த வேறுபாடுகள் இம்மக்கள் அந்த மதங்களை தழுவு முன்னரேயே வரித்துக் கொண்டவை. அந்த வேறுபாடுகளுக்கு மத அங்கீகாரம் கிடையாது. ஒரே மொழி, நிற, இனக் குழுவினருக்குள் இருக்கும் மதம் சார்ந்த பிரிவுகளுக்குள் தத்துவார்த்த, சடங்காசார வேறுபாடுகள் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். இரு பிரிவினர் சண்டை போட்டுக் கொள்ளும்போது கூட சம அளவில் (ஆள்பலத்தில் அல்ல, மனதளவில்) நின்றே சண்டைப் போட்டுக் கொள்கின்றனர். அல்லது ஒரு பிரிவினர் தங்களை மேலானவர்கள் என்று கருதிக்கொண்டாலும், இன்னொரு பிரிவினர் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கும்போதே இத்தகைய சண்டைகளும் நிகழ்கின்றன. இந்து மதத்தில் த ‘ன் ஜாதி வேறுபாடுகளுக்கு மதரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டு, பல நூற்றாண்டுகளாக இந்த வேறுபாடுகள் கடைப்பிடிக்கப்பட்டும் வருகின்றன. இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்கு மாறியவர்களுக்கு மட்டும் தான் ஜாதி அடையாளங்களை எளிதில் மறக்க முடிவதில்லை. பிற மதத்தினருக்கு இந்த பிரச்சினைகள் இருக்க வாய்ப்பில்லை.

2. தாழ்த்தப்பட்டவர்களிலும் பல உட்பிரிவுகள் உண்டு. அவர்களுக்குள்ளும் உயர்வு, தாழ்வுகள் உண்டு. நீங்களே இன்னொரு பிரிவினரை மோசமாக நடத்தும்போது, எங்களை குறைகூற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

இதிலும் பாதி உண்மை உண்டு. இந்த உண்மையை சுட்டிக் காட்டுவதின் பின்னணியும், தம் குற்றத்தை நியாயப்படுத்தும், குற்றவுணர்வை மறைத்துக்கொள்ளும் முயற்சி தானன்றி, அடிமட்டப் பிரிவினரின் மீதுள்ள கரிசனத்தினால் அல்ல. இந்து மதத்தில் உள்ள ஜாதிப் பிரிவுகள் முடிவுகளற்ற வட்டச் சங்கிலியாக பிணைக்கப்பட்டதல்ல. அப்படியிருந்தால் எது உயர்ந்தது, எது தாழ்ந்தது என்கிற கேள்வி இருக்காது. ஒரு பிரிவினர், இன்னொரு பிரிவினரை அமுக்கும்போது, அதை தனக்கு அடுத்துள்ள பிரிவினரின் மீது செலுத்திவிட்டு தன் வலியை குறைத்துக் கொள்ளலாம். தொட்ர்ந்து அந்த வலி ஆரம்பித்த இடத்திற்கே வந்து சேரும்.

ஆனால் படிமுறை ஜாதியமைப்பாக இறுகியுள்ள இந்து சமூகத்தில், ஒரு ஜாதியினர், சில ஜாதியினருக்கு கீழாக தங்களை ஏற்றுக் கொள்ளவும், இன்னும் சில ஜாதியினரை தங்களைவிடக் கீழானவர்களாகக் கருதவும் நம் அனைவரையும் பல தலைமுறைகளாக பக்குவப்படுத்தியிருக்கிறது. இந்த மனப்பக்குவம் எத்தகைய அடக்கு முறைகளுக்கு வழிகோலியுள்ளது என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. என் தோள் மீதேறி நிற்பவனின் சுமை என்னை மட்டும் அழுத்தவில்லை. என் மூலமாக நான் ஏறி நின்றுள்ளவனின் தோளையும் சேர்த்து அழுத்துகிறது. நான் மட்டும்தான் என் கீழுள்ளவனை அழுத்துகிறேன் என்று சொல்லி, என் தோளின் மேல் நிற்பவன் தப்பித்துக் கொள்ள முயல்வது கடைந்தெடுத்த அய்யோக்கியத்தனம். உண்மையிலேயே கீழுள்ளவனின் வலி குறைய வேண்டுமென்ற அக்கறையிருந்தால் மேலுள்ளவன் முதலில் கீழே இறங்கிவிட்டு, அப்புறம் என்னையும் இறங்கச் செ ‘ல்லவேண்டும்.

3. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மேல் அக்கறையுள்ளவர்கள் என்றிருந்தால் பல நூற்றாண்டுகள் அவர்கள் இந்தியாவை ஆண்டபோது ஏன் தாழ்த்தப்பட்டவர்களை உயர்த்தவில்லை ?

இந்த கேள்வியை முதலில் ஜாதி இந்துக்கள் தங்களையே கேட்டுக்கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களும், வெள்ளையர்களும் வருவதற்கு முன்னும், போனதிற்கு பின்னும் ஜாதி இந்துக்களிடம் தான் ஆட்சியதிகாரம் இருந்தது, இருக்கிறது. இந்துமத மன்னர்கள் ஆண்டபோது என்ன வாழ்ந்தது ? ஜாதிகளை உருவாக்கியவர்கள், உறுதிப்படுத்தியவர்கள் யார் ? இப்போதும் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது ? இதைப்பற்றி இன்னும் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பதிலிருந்தே தெரியவில்லையா இந்து மன்னர்களும், சுதந்திர இந்தியாவும் தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்காக எவ்வளவு செய்திருக்கிறார்கள் என்பதை ?

4. தாழ்த்தப்பட்டவரை அற நிலையத்துறை அமைச்சராக நியமித்து, சாதனை செய்தவர் திரு. காமராஜர் என்ற இந்து தான். இந்துமதக் கோட்பாடுகளில் நம்பிக்கையில்லாதவர்கள் ஆட்சியில் தாழ்த்தப்பட்டவருக்கு இந்த அதிகாரம் தரப்பட்டதா ?

உண்மை. இந்த ஐம்பதுக்கும் மேலான ஆண்டுகளில் இந்த ஒரு உதாரணத்தைத் தவிர வேறு ஏதும் கூற வாய்ப்பில்லை. காங்கிரஸ் ஆட்சி காமராஜருக்கு முன்னும் இருந்தது. பின்னும் இருந்தது. பின் தி.மு.க. ஆட்சியும் வந்தது. இப்போது உயர்ஜாதி சங்கரமடத்தின் பூரண ஆசியோடு, இந்துத்துவ சக்திகளின் பாராட்டுக்கள் பெற்று அமோகமாக இந்து ஆட்சியும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏன் இன்னொரு உதாரணம் கிடைக்கவில்லை ? திரு. கக்கன் அவர்களுக்கு உரிய மரியாதை அளித்தது காமராஜர் என்னும் தனிப்பட்ட தலைவரின் சாதனை. அது விதிவிலக்கு. நிரந்தர மாற்றம் அல்ல. இன்றைய தலித் இயக்கங்களின் நோக்கம் சம உரிமைகளுக்கான நிரந்தர மாற்றம் என்பதை புரிந்துகொள்ள சற்று முயற்சிக்க வேண்டும்.

5. தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளின் ஆதார காரணம் இந்து மதம் இல்லை. இந்துமதம் இல்லாத அமெரிக்கா, ஆப்ரிக்கா கண்டங்களில் கருப்பர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். அவர்கள் ஏன் இஸ்லாமியராகவோ, பெளத்தர்களாகவோ மாறவில்லை ?

‘தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைகளின் ஆதார காரணம் இந்து மதம் இல்லை ‘ என்று கூறுபவர்கள் ஒன்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையைக் கற்றவர்களாக இருக்க வேண்டும். அல்லது வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களாக இருக்கவேண்டும். அடுத்ததாக அமெரிக்காவிலும், ஆப்ரிக்காவிலும் வெள்ளையர்கள் வேற்று இனத்தவர்களான கருப்பர்களை கொடுமைப்படுத்தினார்கள். இந்தியாவில், இந்துக்களே ‘இந்துக்களை ‘ கொடுமைப்படுத்தினார்கள். இன்னமும் படுத்துகிறார்கள். ஆகவே இந்த ஒப்புமை சரியானதல்ல. கருப்பர்கள் இஸ்லாமியர்களாகவோ, பெளத்தர்களாகவோ மாறாமல் இருந்ததற்கு அவை பற்றிய போதிய அறிமுகம் இல்லாதிருந்தது கூட காரணமாக இருந்திருக்கலாம். இந்து மதத் தலைவரான காந்தியின் அகிம்சை வழியை மெச்சிய டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் கூடத்தான் தம் மக்களை இந்துக்களாக மாறச் சொல்லவில்லை. கிறிஸ்தவப் பாதிரியாரகவே இருந்து தான் போராடினார். தென்னாப்ரிக்க மக்களின் விடுதலைக்காக மாமனிதர் நெல்சன் மாண்டெலாவுடன் தோளோடு தோள் நின்று போராடிய அருட்திரு. டெஸ்மாண்ட் டூடு கூட கிறிஸ்தவராக இருந்து தான் போராடினார். ஏனென்றால் அவர்கள் மீதான அடக்குமுறைக்கு மதம் அடிப்படைக் காரணம் அல்ல, நிறம். அப்படியும், அமெரிக்காவில் மால்கம் X போன்ற கருப்பினத் தலைவர்கள் இஸ்லாம் மதமாற்றத்துக்கு தம் மக்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் கருப்பர்கள் சிவில் உரிமைப் போராட்ட இயக்கங்களிலிருந்தும், தென்னாப்ரிக்காவின் இன ஒதுக்கலுக்கு எதிரான போராட்டத்திலிருந்தும் நீங்கள் தேர்ந்துக் கொள்ள ஏராளமான அணுகு முறைகள் உள்ளன. நீங்கள் ஆதர்ஷப் புருஷர்களாக ஏற்றுக்கொண்டுள்ள அம்பேத்கர், ஈ.வெ.ரா., நெல்சன் மாண்டெலா போன்றோர் தாம் உங்களுக்கு சரியான வழிகாட்டிகள். ‘இந்து மதக் காவலர்கள் ‘ என்று சொல்லித் திரியும் ஜாதி வெறியர்கள் அல்ல.

———————————————————-

munirathinam_ayyasamy@yahoo.com

Series Navigation