தி.மு.க அரசின் தவறுகளில் மற்றொன்று!

This entry is part [part not set] of 32 in the series 20070607_Issue

நாக.இளங்கோவன்


இடஒதுக்கீடு என்பது அறிஞர்கள், சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளுக்குட்பட்டு, வடநாட்டில் முளைத்து தமிழகத்தைக் காவு கொண்ட வைதீக இந்துமதத்தின் வருண வேறுபாட்டுக் குமுகக் கொள்கையினாலும், வடநாட்டில் பரவியிருந்த கிழாரியம் தமிழகத்திலும் பரவி செய்த கொடுமைகளாலும் ஏற்பட்ட கல்வி, அக, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளுக்குச் சமன் கொடுக்க வந்த ஒரு திட்டம்.

இந்தத் திட்டமும் ஒரு கால வரையறையை ஏற்படுத்தித்தான் செயல்
படுத்தப் பட்டது. இந்தக் கால வரையறை எதிர்பார்த்த பலன் குமுகத்திற்கு கிடைத்திருக்கிறது என்ற மன நிறைவு ஏற்படும் வரை தொடர்வதிலும், அது தொடர்வதற்கு இடர்கள் ஏற்படுமானால் அதை மறுத்துப் போரிடுவதிலும் நமக்கு எந்த கருத்து வேறுபாடும் குமுக அக்கறையில் இருக்க முடியாது.

அதேபோல, மனிதரே மனிதனை விலங்குகளிலும் கீழாய் நடத்தி, ஆணவத்தாலும் திமிராலும் உரிமை, தன்மானம் என்பதனை உடலிலும் அகத்திலும் மனிதனிடம் இருந்து பறித்துக் கொடுமை புரிந்த அயல் மதமான வைதீக இந்து மதத்தை விட்டே மாற்று மதங்களுக்கு ஓடச் செய்து, ஏனைய அயல்நாட்டு மதங்களை ஓங்கி வளர உற்ற துணையாக இருப்பதுவும் இருந்ததுவும் வைதீக இந்து மதம்தான். விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டுச் சிந்திப்பவர்க்கு இறுதியில் கிடைக்கும்விடை (bottom line)
இதுவாகத்தான் இருக்க முடியும்.

பொருளியல், கல்வி நிலைகளில் இடஒதுக்கீடு என்பதனைச்சமன் தரும் கொள்கையாக ஏற்றுக் கொண்டவர்கள் பல பேர்.

அதேபோல, இந்து மதத்தை விட்டே போவதுதான் சரியானசமனைத் தரும் என்ற கொள்கையில் மதம் மாறினவர்களும்பல பேர்.

இந்த இரண்டு சமன்பாட்டு முயல்வுகளுமே ஒரு தனி மனிதன்என்ற பார்வையில் தனிமனிதனுக்குப் பயனையே தந்திருக்கின்றன என்பது அங்கை நெல்லி.

ஒரு மனிதனின் உரிமையும், அவன் தன்மானமும் மிதமிஞ்சி
தாக்குறும்போது அதன் விளைவுகள் இப்படித்தான் போகும்என்பதனை சார்புள்ளம் இல்லாமல் பார்ப்பவர்களுக்குத் தெளிவாகப் புரியும்.

அண்மையில் மும்பாயில் அம்பேத்கர் விழா ஒன்றில் ஒரு இலக்கம் மக்கள் இந்து மதத்தில் இருந்து விலகி புத்த மதத்தில் சேர்ந்திருக்கின்றனர் என்ற செய்தியே இன்னும் இந்தியாவில் மனிதனை மனிதனாக நினைக்கும்எண்ணம் வளரவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு மட்டுமல்ல, இந்து மதத்தினர் இன்னும் திருந்தவில்லை என்ற செய்தியையும் எடுத்துச் சொல்கிறது.

ஒரு இலக்கம் பேர் ஒரே கணத்தில் தங்கள் அகத்தினைமாற்றிக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் அத்தனைபேரும் காசுக்காக மதம் மாறிவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி விடமுடியுமா?

அவர்கள் அத்தனை பேருமே அறிவற்றவர்கள் என்றுசொல்லி விடமுடியுமா?

ஆனால், இந்து மதத்தின் காவலாளிகள் இந்த இரண்டைமட்டுமே பல்வேறு வசனங்களில் இழைத்து வாய்ப்பந்தல் போட்டு வருகிறார்கள்.

இது ஒருபுறமிருக்க, இந்தக் குமுக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்த ஒரு மனிதன் ஒன்று இந்து மதத்திற்குள்ளேயே இருந்து கொண்டு அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டுச் சலுகைகளைப் பெற்றுத் தான் இழந்தவைகளை மீண்டும்பெற்றுக் கொள்கிறான்.

வேறொரு மனிதன் இந்த மதத்தையே விட்டொழித்து மற்ற நெறிகளைச் சார்ந்து தனது மான மரியாதைகளை மீட்டெடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறான்.

பல்வேறு சமயச் சார்பற்ற சிந்தனையாளர்களும், குமுக அக்கறையாளர்களும் இந்த இரண்டினையுமே மிக யதார்த்தமாகவே ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.
அண்மையில் அ.தி.மு.க அரசு மத மாற்றச் சட்டம்கொண்டு வந்தபோது அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தச் சிந்தனைத் தளம் அதனை எதிர்த்தது.

தற்போதைய தி.மு.க அரசு, இட ஒதுக்கீட்டுக் கொள்கையினை எல்லா மதங்களுக்கும் எடுத்துச் செல்கிற சட்டத்தைக் கொண்டுவர இருக்கிறது.

இந்தச் செயல் இடஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.
அதோடு, ஏனைய மதங்களிலும் வருண வேறுபாடுகள் உண்டென்ற சூழலை ஏற்படுத்துகிறது.

சாதிச் சமனுக்காக வந்த இடஒதுக்கீடு மதத்திற்கு என்று ஆய், வருங்காலங்களில் இந்து, புத்தம், இசுலாம், கிறித்துவம், சமணம், சீக்கியம் என்று தெருத்தெருவாக பாத்தி கட்டிஅடித்துக் கொண்டு எல்லோரும் சாவதற்கு வழி வகுக்கும்.

சாதிச் சமனுக்காக வந்த இடஒதுக்கீடே இன்னும் சரியாகப் போய்ச் சேரவேண்டியவர்களைப் போய்ச் சேராமல் இருக்கும் இந்த நிலையில் கூட, “இடஒதுக்கீட்டுக்குள் இருக்கும் சாதிகள் அடித்துக் கொண்டதில்லை.”

ஆனால், மதவாரியாக இது நிகழுமானால், மத எண்ணிக்கைப்போர் வந்து, பின்னர் குமுகத்தை மேலும் கூறு போட்டு விடும் என்பது உறுதி.

ஒரு மதத்திற்குள் இருக்கும் சாதிகள் அல்லது பிரிவுகள் அடித்துக் கொள்வதற்கும் மதம் என்ற நிலையில் அடித்துக்கொள்வதற்கும் உள்ள வேறுபாடுகளை நாம் நிறைய பார்த்துள்ளோம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எந்த மதமானாலும் தமிழர் என்றஅடிப்படையில் தாய் பிள்ளையாகப் பழகும் பண்பு மிகவும்அதிகம். இந்த மண்ணின் மாண்பும் தொன்மமும் அது.

தமிழர் எனும்போது மதம் என்ற பார்வையில் பார்க்காத இந்தத் தமிழ்க் குமுகத்தை மத வாரியான இட ஒதுக்கீடு என்ற “பொருளியல் வாய்ப்பு” கெடுத்து நாசப்படுத்தப் போகிறது.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பண்போடு இருந்தசங்க காலமாகினும் சரி, எல்லா மதங்களையும் ஒப்புறவோடுபோற்றியது மட்டுமல்லாமல், அம்மதங்களுக்கு நிவந்தங்களும் கொடுத்த பிற்காலச் சோழர் காலமாகினும் சரி, பல்வேறு சூழல்களைப் பார்த்து விட்ட நலமும், அவலமும் கலந்தே இருக்கும் தற்போதைய காலமாகினும் சரி, மதம் என்பது “பெரும்பாலும்” (சில முன் பின் விதயங்கள் இருந்திருக்கலாம்) மிகப் பண்பாகவே பழக்கப்பட்டும் பார்க்கப் பட்டும் வந்திருக்கின்றது தமிழ் மண்ணில்.

காசு என்ற இடஒதுக்கீடு வாய்ப்பு மதவாரியாகக் கட்சி கட்ட வைக்கப் போகிறது.

மாண்புகளும் பண்புகளும் தோற்கப் போகின்றன.

போகாத ஊருக்கு வழி காட்டுகிறார் கலைஞர்!

அது மட்டுமல்ல, சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களே இதனைப் பெரிதும் விரும்பாத நிலையில் இவர் என்னவோ காற்றிலே கத்தியைச் சுழலவிடுகிறார்.

முற்பட்ட என்று சொல்லக் கூடிய எந்தச் சாதியிலும் நான்பிறக்கவில்லை. அதே சமயம் இடஒதுக்கீட்டினால் எனக்கோஎனது குடிவழிக்கோ மயிர் அளவு கூட, (மன்னிக்க வேண்டும்) மீண்டும் சொல்கிறேன் – “மயிருக்குக் கூட பயன் இல்லை”. ஆனால், அதனால் பயன் அடைந்தவர்களை எனது கிராமங்களிலும் ஊர்களிலும் பல ஆண்டுகளாகப் பார்த்து மிகப் பெருமையடைகிறேன்.
இடஒதுக்கீட்டின் பயனால் மாறியிருக்கும் மக்களை எல்லாம் நினைத்து
நான் வியந்து போயிருக்கிறேன் எனது ஊர்களில்.

தற்போது அந்த நல்ல திட்டம், அரசுகளும் சிந்தனையாளர்களும், ஏன் கலைஞரும் போராடிக் கொண்டு வந்த முன்னேற்றங்களை பாழாக்கப் போகிறார் கலைஞர் என்று உறுதியாகச் சொல்லமுடிகிறது.

ஏனெனில் இந்த முயற்சியின் “அடிப்படையில் தெளிவில்லை”.

அடிப்படையில்லாத கலைஞரின் இந்த முயற்சி வாக்குகளை ஒரு
தேர்தலுக்கு மட்டுமே பெற்றுத் தரும்.

கலைஞரைத் தவிர தமிழகத்தில் இருக்கும் ஏனைய பெரிய கட்சிகளின் தலைமைகளுக்கும் சிந்தனைவற்றி விட்டது போலும். அவர்களும் வாக்குகளுக்குப் பயந்து வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள்.

அல்லது நமக்கென்ன நம்ம தோட்டம் நல்லா இருந்தா போதும்என்று நினைக்கிறார்கள். தொலை நோக்குப் பார்வையில்லாத “தன்னல வல்லடிக்காரர்கள்” என்றே தமிழக அரசியல் வாதிகளைச் சொல்லவேண்டி உள்ளது.

இதிலேயே ஒன்று புரிந்து கொள்ள வேண்டும்!

சாதி வாக்கு வங்கிக்கே தொடை நடுங்கும் இந்த அரசியல் வாதிகளா நாளை மதவாரியான பெரும் சரவல்களைத் தீர்த்து விடுவார்கள்?

இவர்களை நம்பி எல்லா மதங்களும் ஏமாறப் போகின்றன
அல்லது எல்லாம் அடித்துக் கொண்டு சாகப் போகின்றன.

எது எப்படியோ, கலைஞர் ஒரு “வரலாற்றுப் பிழையை செய்துகொண்டிருக்கிறார்” என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

பிழை நடக்கவேண்டுமானால் அது நடந்தே தீரும் போல!

அன்புடன்
நாக.இளங்கோவன்
31/மே/2007
http://nayanam.blogspot.com

Series Navigation