திசைகளும் பயணங்களும் (இந்தப் புத்தகத்தைப் படித்து வீட்டார்களா ?-2 – ‘என்னைக் கேட்டால் ‘ -என்.எஸ்.ஜகந்நாதன்)

0 minutes, 4 seconds Read
This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

பாவண்ணன்


( என்னைக் கேட்டால்.. என்.எஸ்.ஜகந்நாதன், கலைஞன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை-17. விால3ரு.120)

நாடறிந்த பத்திரிகையாளரான என்.எஸ்.ஜகந்நாதன் கடந்த அரை நுாற்றாண்டுக் காலமாக அரசியல் சூழல் பற்றியும் சமுகம் பற்றியும் தன் பார்வைகளையும் கருத்துகளையும் ஆங்கிலப் பத்திரிகைகளில் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டு வருபவர். பத்திரிகை தொடர்பான பணி என்பதாலேயே இந்தியா முழுவதும் சுற்றியவர். விரிவான உலக அனுபவமும் இலக்கிய வாசிப்பு அனுபவமும் மிக்கவர். வங்க மொழி அறிந்தவர். வங்கத்திலிருந்து ‘விடியுமா ? ‘ என்றொரு நாவலையும் மகாஸ்வேதா தேவியின் சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்திருப்பவர். தில்லியிலிருந்து கணையாழி இதழ் தொடங்கப்பட்ட போது, அதன் ஆசிரியர் குழுவிலிருந்தவர்களின் நட்புரிமையுடன் கூடிய வேண்டுகோளுக்கிணங்கி ‘என்னைக் கேட்டால் ‘ என்கிற தலைப்பில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவென்று தன் மனத்தில் உதிக்கும் எண்ணங்களை எழுதத் தொடங்கி இன்று வரைக்கும் அப்பகுதியைத் தொடர்ந்து எழுதி வருபவர். கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதப்பட்டு வரும் இக்கட்டுரைகளிலிருந்து 49 கட்டுரைகளை அவராகவே தேர்ந்தெடுத்துக் கொடுக்க, இந்த நுால் தொகுக்கப்பட்டிருக்கிறது. (முன்னுரையிலும் அட்டைப் பின்குறிப்பிலும் இந்த எண்ணிக்கை 70 என்று குறிப்பிடப்பட்டுள்ளது)

இலக்கிய நண்பர்கள், இலக்கியப் படைப்புகள், பயணம், அரசியல், சமுகம், அறிவியல் எனப் பல துறை சார்ந்து இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டுரையும் அளவில் சிறியதாக இருந்தாலும், தகவல்கள் நிரம்பியனவாகவும் தடையின்றிக் கருத்துகளை முன்வைப்பவையாகவும் உள்ளன.

க.நா.சு.வைப் பற்றிய கட்டுரை தொகுப்பின் முதலாவதாக உள்ளது. ஐந்தே பக்கங்கள் மட்டுமுள்ள இக்கட்டுரையில் க.நா.சு.வின் நேர்மையைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் உள்ள குறிப்பு மிக முக்கியமானதாகத் தோன்றுகிறது. சிறந்த சிறுகதையாசிரியர்கள், நாவல்கள் என்று தொடர்ந்து பட்டியலிட்டவர் க.நா.சு. என்னும் விஷயம் பலரும் அறிந்ததே. தன் ரசனையை வெளிப்படுத்தும் வகையில் உலக அளவில் முக்கியமான பல நாவல்களைப் பற்றிய குறிப்புகளையும் எழுதிச் சூழலுக்கு வலிவூட்டியவர். ஆதர்ச எல்லைக்கும் தமிழின் எல்லைக்கும் இடையே உள்ள பள்ளத்தின் அளவை எப்போதும் சுட்டிக் காட்டியபடி இருந்தவர். இதனாலேயே அவர் பலருடைய எரிச்சலுக்கும் ஆளானவர். எரிச்சலின் தீக்கங்கு தன்னைச் சுட்ட போதும் தன் குணத்தையோ மனத்தையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து தன் மனஅளவுகோல்களையும் வாசிப்பையும் மட்டுமே நம்பி எழுதி வந்தவர். அந்த எரிச்சலால் உருவான களங்கத்தைப் போக்கும் வகையிலும் அவர் உள்ளத்தில் ஓங்கியிருந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் புரிந்து கொள்ளும் வகையிலும் கேம்பிரிட்ஜ் பேராசிரியரான எஃப்.ஆர்.லீவிஸ் என்பவரைப் பற்றிய ஒரு குறிப்பை இந்த நுாலில் என்.எஸ்.ஜெ. தருகிறார். இருபதாம் நுாற்றாண்டின் விமர்சனத் துறையில் தனியிடம் பெற்ற எஃப்.ஆர்.லீவிஸ் ஆங்கில இலக்கியப் பாரம்பரியத்தைத் துல்லியமாக எடை போட்டு முடிவுகளை முன்வைத்தவர். லீவிஸ் அவர்களுக்கும் இந்தப் பட்டியல் போடும் பழக்கம் இருந்தது. அவருடைய சிறப்பான ஆங்கில நாவலாசரியர்கள் பட்டியலில் நால்வர் மட்டுமே தொடர்ந்து இடம் பெற்று வந்தனர். க.நா.சுவின் பட்டியலிலும் தொடர்ந்து ஒருசிலரே இடம்பெற்று வந்தார்கள். விருப்பு வெறுப்பே இதன் காரணம் எனத் தவறாக எடைபோடுவதற்கான வாய்ப்பே நமது சூழலில் அதிகமாக இருந்தது. ஆனால், இலக்கியம் என்பதை வெறும் பொழுது போக்கும் சாதனமாக மாறி விடக் கூடாது என்பதிலும் மனித வாழ்வைப் புரிந்து கொள்வதற்கும் அடிப்படை ரகசியங்களை நோக்கி மனத்தால் நகர்வதற்கும் உரிய கலையாக மட்டுமே இலக்கியம் இருக்க வேண்டும் என்பதிலும் உள்ள உறுதியான கண்டிப்பும் நம்பிக்கையுமே இதற்கான காரணங்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் வகையில் ஜகந்நாதனின் கட்டுரை நுட்பமாக அமைந்துள்ளது.

பிற மொழிச் சூழலில் புழங்கக் கூடிய ஒவ்வொரு நெஞ்சிலும் எழக் கூடிய கேள்வியே ‘ஏன் தமிழ், வார, மாதப் பத்திரிகைகள் இந்த முக்கியக் கடமைகளைச் செய்வதில்லை ? ‘ என்கிற கட்டுரையில் என்.எஸ்.ஜெ.யின் ஆதங்கமாக வெளிப்பட்டிருக்கிறது. கடந்த கால் நுாற்றாண்டுக் காலமாக இந்த ஆதங்கத்தை ஒவ்வொரு படைப்பாளியும் விமர்சகரும் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். படைப்பை வெளியிடுவது என்கிற வகையில் சுபமங்களா, புதிய பார்வை, இந்தியா டுடே ஆகியவை சிறப்பாக வெளிவந்த ஏழெட்டாண்டுகள் இந்த ஆதங்கத்தைத் தீர்த்து வந்தாலும் இந்த மூன்று இதழ்களின் இயக்கமும் முடங்கிப் போன பிறகு, அந்த ஆதங்கம் தொடரவே செய்கிறது. படைப்புக்கே வழியில்லை என்னும் போது, படைப்பிலக்கியம் பற்றிய விவாதங்களுக்கு வழியே இல்லை. அதன் காரணம்தான் புரியாத புதிராக இருக்கிறது. எடுத்துக்காட்டாக, ‘ஜெயலலிதாவின் ஆட்சியில் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் ? ‘ என்றொரு கேள்வி மக்களைப் பார்த்து ஒரு பத்திரிகையால் முன்வைக்கப்படுகிறது. வெளிவரும் பதில்கள் வழியாக ஒரு கருத்து திரட்டி எடுக்கவும் படுகிறது. இதே போல திரைப்படம் சார்ந்தும் சில கேள்விகள் பொதுவாக முன்வைக்கப்பட்டுப் பதில்கள் பெறப்படுகின்றன. இதில் தவறில்லை. பொதுமக்களின் கருத்தைத் திரட்டி அறிய உதவும் வழி இதுதான். ஆனால், இந்த வழி, இலக்கியம் சார்ந்து தமிழ்ச்சூழலில் ஏன் பயன்படுத்தப் படுவதில்லை என்பதுதான் முக்கியமான கேள்வி. அமைப்பியல் சார்ந்தும் பின்நவீனத்துவம் சார்ந்தும் மலையாளப் பத்திரிகைகளில் நடந்த வாத விவாதங்களின் பிரதிகளை நண்பர் ஒருவரின் வீட்டில் பார்த்தேன். வங்க மொழியிலும் இத்தகு விவாதங்கள் வெளிவந்தன என்று வங்க எழுத்தாள நண்பர்கள் சொன்னதையும் கேட்டிருக்கிறேன். தமிழில் மட்டும் ஏன் இந்த அம்சம் நடக்கவில்லை ? மற்ற அம்சங்கள் போலவே, பத்திரிகையின் பேசுபொருளாக இலக்கியம் ஏன் மாற்றமடையவில்லை ? 1970 ஆம் ஆண்டில் வெளிப்பட்டிருக்கும் என்.எஸ்.ஜெ.யின் ஆதங்கத்தின் அளவு இம்மியும் குறையாமல் 32 ஆண்டுகளுக்குப் பிறகும் அப்படியே இருப்பது எவ்வளவு சோகமான விஷயம்.

ஈ.எம்.ஃபார்ஸ்டர், ருஷ்டி, தஸ்லிமா நஸ்ரின் ஏ.கே.ராமானுஜன், கிருஷ்ண சைதன்யா ஆகியோரைப் பற்றிய என்.எஸ்.ஜெ.யின் குறிப்புகள் கறாராகவும் நுட்பமாகவும் உள்ளன. தாம் படிக்க நேர்ந்த பல புத்தகங்களைப் பற்றி அவர் சொல்லியிருக்கும் விதத்தில் அவர் நுால்களை எவ்விதம் அணுகுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த நுாலாக இருந்தாலும் அவர் அதில் ஓர் ஆழத்தை எதிர்பார்க்கிறார். அந்த ஆழத்தின் வழியாக மனித மனத்தின் அந்தரங்கத்தையும் அதன் வழியாக மனித குல அந்தரங்கத்தையும் தொட்டுவிட முடியுமா என்று எதிர்பார்க்கிறார். அந்த அடர்ந்த இருட்டுப் பிரதேசத்தில் ஒரே ஒரு கணமாவது வெளிச்சத்தைப் பாய்ச்சக் கூடிய படைப்பை சட்டென்ற உள்வாங்கிக் கொள்கிறார். இதுவே அவர் வாசிப்பு முறையாக இருக்கிறது. தம் பயிற்சியின் வழியாகவே இந்த வாசிப்பு முறையை வந்தடைந்திருக்கிறார் என்.எஸ்.ஜெ. ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்புகள், சம்ஸ்காரா, தி ஆப்ஸென்ட் டிராவலர், விடியுமா, பால்கன் கோஸ்ட்ஸ், எனச் சில நுால்களைப் பற்றி அவர் எழுதியுள்ள குறிப்புகள் இதற்குச் சான்றாக உள்ளன.

‘என்னை உருவாக்கிய ஆசான் ‘ என்ற தலைப்பில் தன் ஆங்கிலப் பேராசியரான சுவாமிநாதன் என்பவரைப் பற்றி என்.எஸ்.ஜெ. எழுதியுள்ள குறிப்புகள் மிக அருமையானவை. இத்தொகுப்பின் மிகச் சிறந்த கட்டுரைகளில் இதுவும் ஒன்றாகும். அரசுக் கல்லுாரியான மாநிலக் கல்லுாரியில் ஆங்கிலப் பேராசிரியராக வேலை பார்த்தவர் சுவாமிநாதன். காந்தியத்தில் ஈடுபாடுள்ளவர். ஆங்கில இலக்கியத்தைப் போதிக்கும் போது இலக்கிய ரசனையை வளர்க்கும் சமயத்திலேயே, தேசிய ஆவேசத்தையும் உருவாக்கிக் கொண்டிருந்தார். மில், மார்லி,ப்ரைட்,சிட்னிவெப், பீட்டரிஸ் வெப் போன்றவர்களின் புரட்சிக் கருத்துகளைச் சமகால இந்திய நிலைக்கு இணைத்து, எதிரியுடைய இலக்கியத்தின் மூலமாகவே அவர்களை எதிர்த்துப் போராடும் வேட்கையை உருவாக்கியவர் அவர். பிற்காலத்தில் காந்தியின் எழுத்துகளை ஏறத்தாழ 100 பகுதிகளாகக் கொண்டு வந்தார்.

‘விஞ்ஞான விளம்புகள் ‘ என்னும் பகுதியில் உரையாடல் முறையில் அமைந்துள்ள கட்டுரை முக்கியமான ஒன்றாகும். இருபதாம் நுாற்றாண்டின் தொடக்கத்தில் புரட்சிகரமான முறையில் அறிமுகமான விஞ்ஞானத் தத்துவத்துக்கு இணையாக நுாற்றாண்டின் இறுதியில் வேறு எந்தத் தத்துவமாவது அரும்பியிருக்கிறதா என்னும் அடிப்படைக் கேள்வியை ஒட்டி இந்த உரையாடல் பகுதி அமைந்துள்ளது. என்.எஸ்.ஜெ.யின் ஆழ்ந்த வாசிப்புக்கும் சிந்தனை வளத்துக்கும் எடுத்துக்காட்டாக இப்பகுதி உள்ளது.

நுாலின் இறுதிப் பகுதியாக உள்ள ‘கைதியின் தர்ம சங்கடம் ‘ என்னும் கட்டுரை மிகச் சுவாரஸியமானதாகும். மேற்கில் மிகப் பிரபலமாகப் பேசப்படும் கேம்ஸ் தியரியைப் பற்றிய சிறிய அறிமுகம் இக்கட்டுரை. கைதிகளின் தர்மசங்கடத்தை உதாரணமாகக் கொண்டு பொருளியிலும் கணக்கியலும் கலந்த கலவையான சிக்கலான ஒரு கோட்பாட்டை ஒரு விடுகதைக்கு இணையாகப் புரிய வைக்க என்.எஸ்.ஜெ. எடுத்துக் கொண்டுள்ள முயற்சி முக்கியமானதாகப் படுகிறது.

கேம்ஸ் தியரி கட்டுரையைப் படித்து முடித்த பிறகு க.நா.சு. பற்றிய முதல் கட்டுரையை நினைத்துக் கொள்கிறேன். க.நா.சு தொடர்ந்து முன்வைத்தபடியே இருந்த பட்டியலை ஒரு விளையாட்டைப் போல எடுத்துக் கொள்ளலாம். ஒரு பட்டியலுடன் அவர் ஆட்டத்தைத் தொடங்கி வைக்கிறார். இப்போது மற்றவர்கள் ஆட வேண்டும். அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள். க.நா.சு.வின் பட்டியலுக்குப் பின்னணியில் செயல்படக் கூடிய மதிப்பீடுகளை உட்கிரகித்து அவற்றை வெல்லக்கூடிய அல்லது அவற்றுக்கு வலுவேற்றக்கூடிய படைப்புகளை உருவாக்கி பட்டியலில் தவிர்க்கப்பட முடியாத இடத்தைத் தக்கவைத்துக் கொள்வது என்பது ஒரு வாய்ப்பு. பட்டியலின் அடிப்படையை மறுத்து புதிய அடிப்படையை உருவாக்கிப் புதிய பட்டியலை உருவாக்குவது என்பது மற்றொரு வாய்ப்பு. இந்த விளையாட்டு இன்றளவும் எப்படி ஆடப்பட்டு வருகிறது என்பதைச் சூழலை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

சங்க காலக் கவிதைகளின் மீதுள்ள ரசனையை வெளிப்படுத்துவதில் தொடங்கி மேற்கில் பிரபலமான கேம்ஸ் தியரி வரைக்கும் பல துறைகள் சார்ந்து ஈர்ப்பான நடையில் என்.எஸ்.ஜெ. எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பு இது. ஆழந்த சிந்தனையும் ஈடுபாடும் கொண்டுள்ள மனத்தால் எத்தனை திசைகளில் பயணப்பட முடியும் என்பதற்கு இந்த நுால் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

***

Series Navigation

author

பாவண்ணன்

பாவண்ணன்

Similar Posts