தாயே வணங்குகிறோம்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

மூலம்: வந்தே மாதரம், பங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் மொழியாக்கம்: ஜடாயு


தாயே வணங்குகிறோம்

இனிய நீர்
இன்சுவைக்கனிகள்
தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை
மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்
இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்
எழில்மிகு புன்ைகை
இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்
எங்கள் தாய்
சுகமளிப்பவளே
வரமருள்பவளே
தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்
உன் திருப்பெயர் முழங்கவும்
கோடிக் கோடிக் கரங்கள்
உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்
அம்மா ! ‘அபலா ‘#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ?
பேராற்றல் பெற்றவள்
பேறு தருபவள்
பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்
எங்கள் தாய்
தாயே வணங்குகிறோம்

அறிவு நீ
அறம் நீ
இதயம் நீ
உணர்வும் நீ
எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ
எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ
எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்
தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ
தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்
அன்னை துர்க்கை நீயே
செங்கமல மலர் இதழ்களில் உறையும்
செல்வத் திருமகள் நீயே
கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே
தாயே வணங்குகிறோம்

திருமகளே
மாசற்ற பண்புகளின் மனையகமே
ஒப்புயர்வற்ற எம் தாயகமே
இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே
கருமை அழகியே
எளிமை இலங்கும் ஏந்திழையே
புன்முறுவல் பூத்தவளே
பொன் அணிகள் பூண்டவளே
பெற்று வளர்த்தவளே
பெருமைகள் அனைத்தும் அளித்தவளே
தாயே வணங்குகிறோம்

#1 மூலக் கவிதை – http://sank.tripod.com/india.html
#2 வங்காளி மொழியில் ‘அபலா ‘ என்ற சொல் ‘பெண் ‘, ‘வலிமையற்றவள் ‘ என்று இரு பொருள் படும்

jataayu_b@yahoo.com

Series Navigation