தாமதமான காரணம்

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

சிவஸ்ரீ


எப்போதும்
உண்மை சொல்ல முடிவதில்லை…

நேரமாகிப் போனதன்
நேரான காரணத்தை.

சீக்கிரம் செல்ல வேண்டிய
சிக்கல் சந்தர்ப்பங்களில் தான்…

சீப்பு தொலைந்து போகும்
சோப்பு தீர்ந்திருக்கும்
சிக்னல் சிவப்படிக்கும்
செருப்பறுந்து கடுப்படிக்கும்

தடதடக்க வீடு பூட்டித்
தாவியோடும் வேளை
தொலைபேசி அலறும் உள்ளே
திரும்பத் திறந்தால்
திடுமென நிற்கும்

இரவு விடுப்பெடுத்த தூக்கம்
அதிகாலை அலாரம் நிறுத்தி
ஓவர்டைம் பார்க்கும்.

அடுத்த முறையாவது
ஐந்து நிமிடம் முந்திவர
உறுதியெடுக்கும் மனம்
ஒவ்வொரு முறையும்…
பேருந்தைத் துரத்தி விட்டு
மூச்சுவாங்கி நிற்கும் போது.

வெளியுலகு மறந்து
குளியுலகில் நனைந்திருந்ததை

நினவுலகு நீங்கி
கனவுலகில் கவியெழுதியதை

கையில் கட்டும் வரை
கடிகாரம் பார்க்காததை என

காரணமே இல்லாமல்
நேரமாகிப் போனதற்குக்
காரணம் என்ன சொல்ல ?

-சிவஸ்ரீ (sreeeiii@poetic.com)

Series Navigation