தாத்தா
Published October 10, 2003 • By
நம்பி
நம்பி.

லாந்தர் வெளிச்சத்தில்
‘உம் ‘ கொட்டி கதை கேட்டு
பெரிய தொந்தியில்
தூங்கிப்போன ராத்திரிகளில்….
மொறமொறப்பான கைபிடித்து
வயல்வெளியில் சுற்றிவந்து
களத்து மேட்டில்
விளையாடிய நாட்களில்……
வற்றல்குழம்பில் பசுநெய்விட்டு
பக்கத்தில் உட்கார்ந்து
சினச்சின்னதாய் சாப்பிட்ட
மத்தியான வேளைகளில்……
நாகலிங்க பூப்பறித்து
எல்லாசாமிக்கும் வைத்துவிட்டு
தூண்டிக்க்காரன் வந்தவுடன்
கண்மூடி இறுக்கமாய்
கட்டிக்கொண்ட நாட்களில்…….
உள்முற்றத்தில் பனங்காயை
ஒவ்வொன்றாய்ச் சீவி
சுளையெடுத்து சாப்பிட்ட
வெயில் நேரங்களில்……
இன்னமும் நெகிழ்ந்து
குழந்தையாகிறேன்
எப்பொழுதாவது……
— நம்பி.
nambi_ca@yahoo.com