தாகூரின் கீதங்கள் – 60 எனக்கவனைத் தெரியும் !

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இடிமுகில் கனைத்துக் கொண்டு
எதிர்நோக்கிப் போகுது !
பேய்மழை கொட்டுது !
நம்பிக்கை இழந்து நான்
ஏகாந்தமாய் அமர்ந்துளேன்
நதிக்கரையில் !
இறுதியில் சேமித்த
என் வயல்நிலத்தின்
அறுவடைக் குவியல்கள் அங்கே !
கொந்தளிக்கும் நதி
இருகரை நிரம்பி ஓடுது !
அறுவடை செய்யும் போதே
நெருங்கிடும்
பருவ மழைக் காலம் !

நஞ்சை வயல் நிலத்தின்
துண்டுப் பகுதியில்
நான் நிற்கிறேன் தனியாக !
அதைச் சுற்றி வாய்க்கால்களில்
நீர் வெள்ளம்
நெளிந்து விளையாடுது !
எதிர்த்துள்ள அக்கரையில்
மரத்தின் நிழல்கள் கறுத்த
மை போல் தெரியுது !
பட்டப் பகலிலே
பட்டிக் கிராமத்தில்
முகில் மூடிப் படர்ந்துள்ளது !
அமர்ந்துளேன் நான் தனித்து
ஆற்றங் கரையில்
எனது சின்னஞ் சிறிய
நெல் வயலுக் கருகில் !
பாட்டு ஒன்றைப் பாடிக் கொண்டு
அக்கரை யிலிருந்து
படகில் வருவது
யாரங்கே ?
எனக்கவனைத் தெரியும்.

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 15, 2008)]

Series Navigation