“மும்பை மண்ணே வணக்கம்!”‍‍‍….

This entry is part [part not set] of 28 in the series 20081218_Issue

ருத்ரா


அந்த கொடூர நாள்!
மறக்கமுடியுமா அதை?
தாஜ் ஒட்ட‌ல் தீக்குளித்த‌து ஏன்?

கொலைப்ப‌சி எடுத்த‌ கும்பல்
ப‌சியாற
“தாஜ் ஓட்ட‌லுக்கு” வ‌ந்த‌தால் தான்.
சிக்கன் வறுத்த கரும்புகையா அது?
அந்த‌ ஓட்ட‌லில்
மானுட‌த்தையே வ‌றுத்துத்தின்ன‌ வ‌ந்த‌
வ‌க்கிர‌ம்பிடித்த‌வ‌ர்க‌ளின்
பகைப்புகை அது.

அந்த‌ வெறி பிடித்த‌ துப்பாக்கிக‌ள்
தின்று விட்டு வீசிய
மாமிச எச்சில் இலைகளாய்
மும்பையின் நுழைமுகத்தில்..
பிணங்கள்.பிணங்கள். பிணங்கள்.
ஐயகோ!
அடக்கிக்கொள்ள முடியாத சோகம் அது.

தியாகச்சுடர்களே!
உங்கள் உயிர்களுக்கு
எங்கள் எல்லா உயிர்களையும்
“துலாபாரமாக” வைத்தாலும் கூட‌
தாழ்ந்த உங்கள் தட்டுக்கு கீழே தான்
இந்த தேசத்து இமயங்கள்.
தட்டு உயர்ந்தும்
நாங்கள் கிடப்பதோ
அதல பாதாளங்கள்.

மும்பைமண்ணே!..
உன் இந்திய புத்திரர்கள்
அங்கே வீறு கொண்டு எழுந்தார்கள்.
ஆப்ரேஷன் டோர்னெடோவில்”
அலை விரித்தார்கள்!
அரபிக்கடல் அக்கினிக்கடல் ஆகியது.


தங்கள் நாட்டில்
ஜனநாயகத்தை கொஞ்சமும்
பாக்கியில்லாமல்
துடைத்து விட்ட அந்த‌
துப்”பாக்கிஸ்தானின்” “பர்தா”யுத்தம் இது.
அமைதித்தோட்டம்
அமைத்ததாய் சொல்லி..ந‌ம்மை
அழிக்கும் தோட்டாக்க‌ளை
விவ‌சாய‌ம் செய்த‌தின்
சாய‌ம் வெளுத்த‌து இன்று.

ந‌ம் மும்பையின் முத்துப்புத‌ல்வ‌ர்க‌ள்.
த‌ம் ம‌னைவிய‌ரின் பொட்டு அழியும் முன்னே
ந‌ம் தாயின்பொட்டை சுட‌ர்பூக்க‌வைத்தார்க‌ள்.
அந்த‌ வீர‌நெஞ்ச‌ங்க‌ளுக்கு
ந‌ம் வீர‌ வ‌ண‌க்க‌ங்க‌ள்!

“வ‌ந்தேமாத‌ரம்!'” “வ‌ந்தேமாத‌ர‌ம்!”..

..
அதை மொழி பெய‌ர்த்து பாடினாலும்
ந‌ம் உயிர்ப்பெய‌ர்த்த‌ மொழியே
அதில் கேட்கிற‌து!

“தாய் மண்ணே வணக்கம்”

இந்திய‌த்தாயின் இத‌ய‌த்துடிப்பாய் உள்ள
மும்பை ம‌ண்ணே வ‌ண‌க்க‌ம்..
ம‌ன‌ம் முட்டும் சோக‌ம் தீர‌வில்லை..
விண் முட்டும் வீர‌ம் காட்டிய‌…
வீர‌ப் புத‌ல்வ‌ர்க‌ளுக்கு எங்க‌ள் வ‌ண‌க்க‌ம்!

=================================================ருத்ரா (இ.ப‌ர‌ம‌சிவ‌ன்)

மும்பையின் முகத்து “புகை”ப்படம் அனுப்பி உதவிய
பெருமதிப்பிற்குரிய‌ திரு.ஜெய‌பார‌த‌ன் அவ‌ர்க‌ளுக்கு
மிக்க‌ ந‌ன்றி.
அன்புட‌ன்
ருத்ரா
===============================================================

Series Navigation

ருத்ரா

ருத்ரா