தஸ்லீமா நஸ்ரீனின் ஆறு கவிதைகள்

This entry is part [part not set] of 10 in the series 20000730_Issue

தமிழில் : யமுனா ராேஐந்திரன்


1.

எல்லை

நான் இங்கிருந்து போகப் போகிறேன்
எனக்குப் பின்னால்
என் முழுக்குடும்பமும் கூப்பிட்டுக் கொண்டு நிற்கிறது
என் குழந்தை
எனது சேலையின் நுனியைப் பிடித்து இழுக்கிறது
எனது கணவன்
கதவை அடைத்துக் கொண்டு நிற்கிறான்

ஆனாலும் நான் போக வேண்டும்
எனக்கு முன்னால் வேறேதும் இல்லை
ஓரு நதி மட்டும்தான்
நான் அதைக் கடப்பேன்
எவ்வாறு நீந்துவதென்பதும் எனக்குத் தெரியும்
என்னை அவர்கள்
நதியைக் கடக்க விடுகிறார்களில்லை

நதிக்கு அப்பால்
விரியும் வயல்வெளி தவிரவும் வேறேதுமில்லை
அதன் வெறுமையை
ஒரு முறை நான் ஸ்பரிசித்திருக்கிறேன்
அதன் பின்
நான் காற்றை எதிர் த்து ஓடினேன்
அதன் ஹோ எனும் ஸப்தம்
என்னை நடனமாடத் துாண்டிய போது
கொஞ்ச நேரம் நடனமாடி விட்டு
நான் வீடு திரும்பினேன்

குழந்தைப் பருவத்தில் நான் விளையாடிய
தள்ளிப் போ ஆட்டமாடி
பற்பல ஆண்டுகள் போனது
வயலில் கொஞ்ச நேரம்
தள்ளிப் போ விளையாடிய களிப்போடு
நான் வீடு திரும்பினேன்
நான் தனிமையின் மடியில் தலைசாய்த்து அழுது
பற்பல ஆண்டுகளாயிற்று
அங்கிருந்து மனம் சாந்தப்படும்படி கொஞ்சநேரம்
அழுதுவிட்டு
நான் வீடு திரும்பினேன்

எனக்கு முன்னால்
ஒரு நதி தவிரவும் வேறேதுமில்லை
எவ்வாறு நீந்துவதெனவும் எனக்குத் தெரியும்
நான் ஏன் போகக் கூடாது ?
நான் போவேன்

2.

ராஐாவின் அரண்மனை

நான் ராஐாவின் அரண்மனையைப்பார்க்க விரும்பினேன்
‘நிச்சயம்
கட்டாயம் பார்க்கலாம் ‘ என்ற என மாமா
என் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டார

பல்வேறு திசைகளில் நாங்கள் பயணம் செய்தோம்
இறுதியில் ஒரு சின்ன வீட்டை அடைந்தோம
நான் ஆச்சர் யப்பட்டேன்
ஏன் ராஐாவின் அரண் மனை இத்தனை சின்ன வீடாக
இருடருள்சூழ்ந்து அழுக்குப்படிந்து
ஓதம் பிடித்து இரக்கிறது ?.

நான் அங்கு ஒரு எலியைப் பார்த்தேன்
எங்கே ராஐாவின் அரண்மனை — நான் கேட்டேன்.
இதுதான் ராஐாவின் அரண்மனை —–
அந்தக் கிழவன் சொன்னான்
—-இப்போது
உனது உள்ளாடையை அவிழ்த்துவிட்டு படுக்கையில் படு—-
ராஐாவின் அரண்மனையைப் பார்க்க வேண்டுமென்றால்
கீழாடையை அவிழ்க்கவேண்டுமா என்ன ?
இது அதற்கொரு விதிமுறையா என்று நான் ஆச்சாியப்பட்டேன்
அந்த ஆண் எனது உடம்புக்கு வந்தான்
அதனுள்ளே அவனை அழுத்தினான்

எனக்கு பதினைந்து வயதானபோது
ராஐாவின் அரண்மனையைப் பார்க்க நான் தனியாகத்தான் போனேன்
நீங்கள் ராஐாவின் அரண்மனையைப் பார்க்கவிரும்பினால்

நீங்கள் எப்போதும் தனியாகவே போங்கள்

3.

பூச்சியின் கதை

பாதித் தூக்கத்தில் விழித்தேன்
ஆச்சர்யத்தில் நான் பார்த்தேன்
அது பிற எவர்களது விரல்களுமில்லை
அது ஒரு கரப்பான் பூச்சி
எனது தொப்புளை நோக்கி
ஊர்ந்து கொண்டிருந்தது அது
மோப்பம் பிடித்தது
அந்த முதிர் கரும்புண்ணில்
என்ன தித்திப்பு இருக்கிறதோ
எனக்குப் புரியவில்லை
இந்தப்பூச்சியும்
ஒரு ஆண்மகனாக இருக்குமோ ?

பசிகொண்ட காம வெறி நாயைப்போல
நாக்கை வேட்கையுடன்
தொங்கப் போட்டுக் கொண்டு இருக்கிறதோ ?
விஷமுள் எறும்பும்
தொடைகளைக் கடிக்க எனது கால்களின்
மீதேறுகிறது
தொடைகள் ஏதேனும்
இனிப்புக் கரைசலில்
முக்கியெடுக்கப் பட்டிருக்கிறதோ ?
யாரறிவார்
இதுவும் ஓர் ஆணாக இருக்கக்கூடும்
சுவையறிய அதன்
கூர் நகங்களுக்கு அரிப்பெடுத்திருக்கக் கூடும்

இந்தக் குளவியின் கொடுக்கு
எல்லாவற்றையும் விடுத்து
முலைக் காம்பை நோக்கி வருகிறது
உத்திர இடைவெளியின் பதுங்கலிலிருந்து
பல்லியை
இருளின் கருமை வெளிக் கொணர்கிறது
தோலின் மெதுமெதுப்பில் அதன்
மடிப்புக்களில் அடைக்கலம் தேடுகிறது

கருப்பையின் பாதைகளில் கரையான்கள்
அரித்துத் தின்கின்றன
வாயிலில் கருமுட்டைகள்
துர்நீர் தெறிக்கிறது
நான் அவற்றை வெளித்தள்ள
முயன்றேன்
ஆயினும் அந்த மயிர் நிறை கம்பளிப் பூச்சிகள்
ருசிக்கும் மணக்கும்
நுழைவாயில் நோக்கி
வேகம் கோண்டோடியது

எப்போதைக்கும் ஆண்
நரகம் நோக்கி சந்தோஷத்துடன்
ழூச்சிறைப்புடன்
பயணம் போக மாட்டானா ?
நான் அதிசயிப்பேன்
முகங்களிலிருந்து
இரைதேடும் நீலப்பூச்சிகள்
உதடுகளின்
ஓதப்பரப்பில் ஈரம் குடிக்க
வஞ்சகத்துடன் வழி தேடி வரும்
இவைகள்
ஆண்களல்லாது வேறெதுவாக
இருக்கமுடியும் ?
இந்தப் படுக்கை ழூட்டைப்பூச்சிகள்
என்னை விட்டுத் தொலையுமா ?
சதைக் கோள முகடுகளின் பரப்பில்
முடங்கிவிட்டது அது

கூரான பற்கள்
மென்மையான தசையைக் கிழிக்கின்றன
தசைப் படிவுகளின்
வேர்கள் தேடி ஆழம் நோக்கி
இறங்குகிறது கூர்ப்பற்கள்
ஆணின் பற்களைப் போன்ற கூர்ப்பற்கள்
தலைமுறை தலைமுறைச் சிலந்திகள்
யோனிக் குழாய் ஆழம் வரை
குறுக்கு நெடுக்காக
தமது நுாலாம்படை வலைகளைப் பின்னியிருக்கிறது
இந்தப் பின்னல் வலை என்னை
மெளனமான உணர்ச்சிகளின் சேமிப்புக்கிடங்கான
என்னை
வழிமறிக்கிறது

இயற்கையும்கூட
பெண்ணின் உடம்பைத்திட்டமிட்டுத்தான்
வார்த்திருக்கிறது
ஆணின் விருப்பைத் திருப்திப்படுத்தி
ருசிகளை வீசும்படிக்கு

4.

அம்மாவின் மரணம்

I
இறுதியில் எனது தாயின் கண்கள்
முட்டையின் மஞ்சள கரு போலாகியது
ஏப்போதும் வெடித்துவிடும் போல
நிரம்பி வழியும் தண்ணீர் தேக்கி போல
அவளது வயிறு உப்பியபடியிருந்தது
இனி அவளால் எழுந்து நிற்கமுடியாது
உட்காரமுடியாது
அவளது விரல்களைக்கூட நகர்த்தமுடியாது
அப்படியே கிடக்கிறாள்

ஓவ்வொரு காலையிலும் உறவினர்கள் வருகிறார்கள்
ஓவ்வொரு மாலையிலும்
வெள்ளிக்கிழமை புனிதத் திருநாளில்
அம்மா மரணிக்க ஏற்பாடு செய்யும்படி சொல்லிச் செல்கிறார்கள்
லா ஏலாஹா இல்லாஹா எனச் சொல்லியபடி
அல்லா ஒருவனே எனச்சொல்லியபடி
முங்கரும் நாகிருமான
இரண்டு தேவதைகள் கேள்விகள் கேட்க வரும்போது
அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிடவேண்டாம்
என எச்சரிக்கை செய்கிறார்கள்

கடைசித் தீர்ப்பின் பொருட்டு அல்லாவிடம்
அவனது பதில்களை எடுத்துரைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்கள்
அறையைச் சுத்தமாக வைத்திருக்கும்படி
முற்றத்தைச் சுத்தமாக வைத்திருக்கும்படி
வாசனைத் திரவியங்கள் கையிருப்பில் வைத்துக் கொள்ளும்படி
மரணம் இறுதியாக வரும் பொருட்டு தயாராக இருக்கும்படி

பசி கொண்ட நோய் இப்போது
அம்மாவின் உடம்பின் மீது நடனமாடத் தொடங்கிவிட்டது
அவளது எஞ்சிய பலத்தையும் உறிஞ்சத் தொடங்கிவிட்டது
கண்குழியிலிருந்து விழிகள் பீதங்கத் துவங்கிவிட்டது
மார்புக் கூட்டினின்று காற்று களவாடப்பட்டு
நா வரண்டு பொயிற்று
ஆவள்முச்சுக்காகப் போராடும்போது
அவளது நெற்றியும் இமைகளையும் வலியால் நெறிபடுகிறது
முழு வீடும் சத்தம் போடுகிறது
தமது நல்லெண்ணத்தை தீர்க்கதரிசிக்கு தெரிவிக்கும்படி
அவள் சொர்க்கத்துக்குச் செல்வாள் என்பதில்
எவருக்கும் சந்தேகமில்லை

வெகு சீக்கிரமே முகமதுவுடன் கைகோர்த்தபடி
ஒரு அழகான மதியநேரத்தில்
ஒரு தொட்டத்தில் அவள் நடப்பாள்
இருவரும் பறவைக் கறியை உண்பார்கள்
சொர்க்கத்தோட்டத்தில் அவள் முகமதுவுடன் சேர்ந்து நடப்பாள்

ஆனால் இப்போது பூமியைவிட்டுப் பிரியும் நேரமான இப்போது
ஆவள் தயங்குகிறாள்
வெளியேறுவதற்கு மாறாக
ருசிக்கும் அரிசிச் சமையலை எனக்கு ஆக்கிப்போட விரும்புகிறாள்
ஹில்ஸா மீனை வறுக்க தக்காளிக்குழம்பு வைக்க
தோட்டத்தின் தெற்கு மூலையில் இருந்து
முற்றாத இளநீர்காயை எனக்குப் பறித்து வர விரும்புகிறாள்
எனது நெற்றியில் வந்துவிழும் கூந்தல் கற்றைகளை விலக்கும் பொருட்டு
தனது கையினால் காற்று விசிறிவிட விரும்புகிறாள

எனது படுக்கையில் புதியதொருவிரிப்பை விரிக்க அவள் விரும்புகிறாள்
எம்பிராய்டரியுடன் புதிதாக எனக்கு ஒரு ரவிக்கை தைக்க விரும்புகிறாள்
இளம் பப்பாளி மரத்துக்கு
ஒரு கம்பை முட்டுக் கொடுக்க அவள் விரும்புகிறாள்
முற்றவெளியில் வெறும் காலுடன் நடக்க
நிலா இரவில் பாட்டுப்பாட அவள் விரும்புகிறாள்
அவள் முன்னெப்போதும் அப்படிச் செய்ததேயில்லை
மருதாணித் தோட்டத்தில்
முன்னெப்போதும் நிலவின் ஒளி அப்படி பூமிக்கு வந்ததேயில்லை
முன்னெப்போதும் இத்தகைய உணர்ச்சி எனக்கு வந்ததேயில்லை

அவளது முடிவில்லா தாயன்பு
தொடர்ந்து வாழ்வதற்கான அவளது ஆச்சர்யமான அவளது ஆசை
அவள் எனது கைகளை இறகப்பற்றிக் கொண்டள்

II

எனக்கு நிச்சயமாகத்தெரியும் மறுபிறப்பு என்பது இல்லை
இறுதித்தீர்ப்பு நாள் என்பதும் இல்லை
சொர்க்கம் பறவை இறைச்சி திராட்சைரசம்
கருநீலத் தேவதைகள்-
இவையனைத்தும் மதவாதிகளின் வலைகளன்றி வேறில்லை
அம்மா சொர்க்கத்துக்குப் போகப் போவதில்லை
எவரோடும் எந்தத் தோட்டத்திலும் அவள் நடக்கப்போவதில்லை

வஞ்சகம் நிறைந்த ஓநாய்கள் அவளது சவக்குழியில் நுழையும்
அவளது சதையைப்புசிக்கும்
அவளது வெண்ணிற எலும்புகள் காற்றினால் சிதறப்படும்
இருப்பினும்
ஏழ்வானங்களுக்கு அப்பாலோ அல்லது வேறெங்கேயோ இருக்கும்
சொர்க்கத்தை நான் நம்ப வேண்டும்
ஒரு அதி உன்னதமான பிரம்மாண்டமான சொர்க்கம் நோக்கயே
கடினமான பாலத்தை மிகச் சுலபமாக வலியின்றி
எனது அன்னை கடந்து செல்ல முடியும்.
திடகாத்திரமாக ஆண் தீர்க்கதரிசி முகமது அவளை வரவேற்பார்.
அவளைத் தழுவிக் கொள்வார்
அவரது மயிரடர்ந்த மார்பில் அவளைக் கரைந்துபோகுமாறு செய்வார்.

நீருற்றில் குளிக்க அவள் விரும்புவாள் நடனமாட விரும்புவாள்
அவள் முன்னெப்போதும் செய்திராத அனைத்தையும் அவள் செய்வாள்
தங்கத்தட்டில் பறவைக் கறி அவளுக்கு வந்துசேரும்
அல்லாவும் தோட்டத்திற்கு வெற்றுக் கால்களுடன் வருவார்
ஒரு சிவப்புமலரை அவளது கூந்தலில் சூடுவார்
ஆதுரமாக முத்தமொன்று தருவார்
இறகுகளின் மஞ்சத்தில் அவள் உறங்குவாள்
எழுநுாறு விசிறிகள் வீசப்படும்
அழகான இளம் பையன்களால் குளிர்ந்த நீர் பறிமாறப்படும்.
அவள் சிரிப்பாள்.
ஆதி சந்தோஷத்தினால் அவளது முழு உடலும் பூக்கும்.
பூமியில் அவளது துன்பமயமான வாழ்வை அவள் மறந்து போவாள்

III

கடவுள் நம்பிக்கையற்ற எனக்கு
எனது பிரியமான அன்னையின் சொர்க்கத்தைப் பற்றி
கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பது
எத்துணை பரவசமாக இருக்கிறது

5.

கனவு மாளிகை

நீ எப்படித் தோன்றுவாய்
படுக்கையில் இருக்கும் போது அல்லது
துாங்கப் போகும் போது அல்லது
ஒரு கனவு கண்டு விழிக்கும் போது ?
நீ எவ்வாறு தோற்றம் தருவாய்
படுக்கையிலிருந்து எழும்போது
குளியலறைக்குச் செல்லும் போது
ஒரு குடுவையிலிருந்து தண்ணீரை வடித்துக் குடிக்கும் போது ?

நுீ சவரம் செய்த பின்னாலோ
நீ குளித்த பின்னாலோ
நீ தென்படும் வீட்டுக் காட்சி எதையும் நான் பார்த்ததேயில்லை
முணுமுணுத்து நீ பாடும் போது
நீ எவ்வாறு தோற்றம் தருவாய் நீ சட்டை கழட்டும் போது
எவளேனும் ஒரு பெண் தன் கூந்தல் வனத்தை
உன் மார்பில் பரவவிடும் போது
தனது முழுமையான ஆலிங்கனத்தால் உன்னை ஆரத்தழுவும் போது
இரவின் ஆழத்தில் விழிக்கும் வேளையில்
நதியின் ஆக்ரோஷமான அலை போலும்
பெண்ணின் உக்கிரமான கலவியில் நீ ஆழ மூழ்கும் போது

எத்தனையோ விஷயங்களை நான் காண ஏங்குகிறேன்
என்றேனும் உனது தொடுதலில்
எவ்வாறாய் ஒரு பெண்ணின் உடம்பு
சந்தோஷத்தில் நடுங்குகிறது எனக் காண
ஒரே ஒரு முறை
அத்தகைய பெண்ணாய் இருக்க நான் விரும்புகிறேன்

நான் விரும்புகிறேன்

6.

மதம்

கோபுரங்களைத் தரைமட்டமாக்குங்கள்

கோயில்களிள்
மசூதிகளின்
குருத்வாராக்களின்
சர்ச்சுகளின்
கற்கள் கொழுந்துவிடும் தீயில் எரியட்டும்

அந்த அழிவினின்றும்
நறுமணத்தைப்பரப்பிக் கொண்டு
அழகான மலர்த.தோட்டங்கள் எழட்டும்
குழந்தைப் பள்ளிகளும்
படிப்பகங்களும் அதனின்று எழட்டும்

இன்று முதல்
மதத்தின் மறுபெயர் மனிதம் என்றாகட்டும்

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்