This entry is in the series 20020217_Issue

திலகபாமா சிவகாசி


தவம் கிடக்கட்டும் ஆண்மை
திறுகும் மீசையும்
முறுக்கிய நடையும்
சொல்லாத ஆண்மையை எனக்குள்
அதிரப் புதைக்க நினைக்கின்றாய்
விழிக்கும் விழியில்
வேலியிடும் என் பார்வையின்
ஆண்மையைச் சந்தி நீ
மதுரையாவது புரியும்
தெறிக்கும் ஓர் சொல்லில்
உரித்து உன்னை
அம்மணமாக்கையில் புரியும்
சீதைக்குள் நெருப்பு மீளாது
தீக்குளித்து தீர்ந்து போகுமென்று
காதலில் அவள் கண்கள்
பேசிய மொழியில்
அட்சய பாத்திரம் பிட்சை கேட்கும்
ஆண்மைதனை அவளிடம்
காலடி பட்டதும்
கைகூப்பி எழுந்திடாத
அகலிகையிடம் உள்ளது
ஆண்மை
கணையாழிக்கு காத்திராது
காதலைக் கண்களில் சொல்லும்
சகுந்தலையின் இருப்பு ஆண்மை
சூடிக் கொடுத்து சூடிக் கொள்ளவும்
சூட்டிக் கொள்ளவும் காத்திராத
ஆண்டாளின் ஆயுதம் ஆண்மை
குமரிக் கரையில்
அலைகளின் மந்திர உச்சரிப்பில்
தனக்காக சிவனாரை தவம் கிடக்க
வைக்கும் கன்னியில் உள்ளதாண்மை
கற்பை காக்க கனலுள்குதியாது
கயவன் கால் தட்டிவிடும்
சித்தூர் ராணிபத்மினியின் பார்வையே ஆண்மை
தாயண்மையுள்ளே தவம் கிடக்கும்
பேராண்மை யெல்லாம்
பெண்ணாய் பிறக்க

***

Series Navigation