தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

சந்திரலேகா வாமதேவா


இந்தியா பிரித்தானிய ஆட்சியை எதிர்த்துப் போராடிய காலத்தில் தமிழ்நாட்டுக் கவிஞர்கள் தமிழ் மொழியின் பெருமையைத் திரும்பத் திரும்பப் பாடி மகிழ்ந்துள்ளார்கள். அவர்கள் தமது தாய் மொழியின் பெருமையை எடுத்துக் கூறியது மட்டுமன்றி, ‘தமிழ் எங்கள் உரிமைச் செம்பயிருக்கு வேர்…, ‘ என்று பாரதிதாசன் குறிப்பிட்டது போல தமிழ் மொழியைத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்துக்கு அடிப்படையாகப் பயன்படுத்தினர். தமிழின் பெருமையைக் கவிஞர்கள் கவிதை என்ற வடிவத்தின் இயல்புக்கு ஏற்ப சிறிது மிகைப்படுத்திக் கூறியிருந்த போதும் திராவிட மொழிக் குடும்பத்தில் மிகப் பழமை வாய்ந்ததும், இலக்கியச் செழிப்பு அதிகம் கொண்டதுமான தமிழ் மொழி அம் மொழியைப் பேசுபவர்களாகிய நாம் பெருமை கொள்ளுமளவிற்குப் பல வகைகளில் சிறப்பும் பெருமையும் கொண்டது.

ஏறக்குறைய இருபத்தொரு நூற்றாண்டு கால நீண்ட வரலாற்றைக் கொண்ட தமிழ் மொழியில் சொல்லப்படாத விஷயங்களே இல்லை என்னுமளவிற்கு காதல், வீரம், அறம், பக்தி, தத்துவம், அங்கதம், நாட்டுப்புறப் பாடல்கள், தாலாட்டு, சுதந்திரம் என்று பலதரப்பட்ட விஷயங்களிலும் ஏராளமான இலக்கியங்கள் எழுந்துள்ளன. ‘பக்திக்குத் தமிழ் ‘ என்று சிறப்பித்துக் கூறக்கூடிய வகையில் நெஞ்சை உருக்கும் பக்திப் பாடல்கள் காலம் காலமாகத் தமிழில் தோன்றியிருக்கின்றன. இவற்றுள் தமது இலக்கியச் சிறப்பாலும், சொல்லப்பட்ட விஷயத்தாலும் தனித்துவத்துடன் விளங்கிய நூல்கள் ஆங்கிலம் முதலிய பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தமிழின் ஈடில்லாச் சிறப்பால் கவரப்பட்ட பல மேல்நாட்டு அறிஞர்கள் அதனைப் படித்து இன்புற்றனர். இன்றும் இன்புற்று வருகின்றனர். வட அமெரிக்காவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் தமிழ் ஒரு பாடமாகப் போதிக்கப்படுவதுடன் அது பற்றிய விரிவான ஆய்வுகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு பல சிறப்புக்களைக் கொண்ட தமிழ் மொழி இன்று தமிழர்களாலேயே பேசப்படாத ஒரு துயரமிகு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பிறநாடுகளில் வாழும் பல தமிழர் மிகுந்த விசனத்துடன் அவதானித்து வருகின்றனர். அந்த நிலையை மாற்றுவதற்காகத் தாம் வாழும் நாடுகளில் தமிழ்ச் சங்கங்களையும் தமிழ்ப் பாடசாலைகளையும் அமைத்து தம்மால் முடிந்த அளவிற்கு அடுத்த தலைமுறைக்குத் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் வழங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இது எந்தளவில் வெற்றி பெறும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

பிறநாடுகளில், உதாரணமாக அவுஸ்திரேலியாவில் பிறந்து வளருகின்ற தமிழ் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேசுவது கஷ்டமான காரியமில்லை. ஆங்கிலேயப் பிள்ளைகளோடு பாடசாலைகளில் அதிக நேரம் பழகுவதால் தாங்கள் வேற்று இனத்தவர் என்பதை அவர்களில் பலர் மறந்து அவர்களைப் போலவே தம்மையும் எண்ணி நடந்து கொள்வார்கள். அதனால் தமிழை வீட்டில் பேசுவது அவர்களுக்கு விருப்பமான விஷயமாக இருக்காது. எனவே பெற்றோர் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதில் அளிப்பார்கள். நாளடைவில் அவர்களது நா ஆங்கில மொழி பேசுவதற்கு முற்றாகப் பழகிவிடவே பின்னர் வயது வந்த பின்னர் தமிழைப் பேச விரும்பினும் அதனைத் தமிழரைப் போல உச்சரிக்க முடியாது போவதுடன் புதிய ஒரு மொழியை ஆரம்பத்தில் இருந்து படிப்பது போல அதனைப் படிக்க நேரிடும். எந்த மொழியையாயினும் அதிகம் பயன்படுத்தாதுவிடின் அதை விரைவில் மறந்து போக வாய்ப்புள்ளது. எனவே முதல் மொழியாகிய தாய் மொழியிலேயே ஆரம்பத்திலிருந்து பேசி வராது விடின் பின்னர் மிகவும் மனம் வருந்த நேரிடும்.

அண்மையில் சிட்னியில் தமிழ் இளைய சமுதாயத்தினரால் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்குப் போக நேர்ந்த போது ஒன்றை மனவருத்தத்துடன் அவதானிக்க முடிந்தது. அங்கு உணவு வேளையின் போது எவரும் தமிழில் உரையாடவில்லை. அது குறித்து நான் எமது நண்பரின் 16 வயது மகளுடன் கதைத்தபோது அவ கூறிய விஷயம் எனக்கு வியப்பளித்தது. யாராவது தமிழில் கதைத்தால் மற்றவர்கள் அவர் இப்போதுதான் கப்பலால் இறங்கியவர் என்று கேலி செய்வார்களாம். அதனால் யாரும் தமிழில் பேச விரும்புவதில்லையாம். தமிழ் பேசும் அந்தப் பெண் கூறிய இன்னொரு விஷயம் பலர் தமது மொழி பற்றி எவ்வளவு அறியாமையுடன் இருக்கிறார்கள் என்பதைப் புலப்படுத்தியது. தான் இன்னொருவருடன் தமிழில் கதைப்பதை அவதானித்த தனது அவுஸ்திரேலிய ஆங்கில சினேகிதி தனக்குக் கூறியதாவது ‘ஆகா எவ்வளவு அற்புதம், உங்களுக்கு இரு மொழிகள் தெரிந்திருக்கிறது. எனக்கு ஒரு மொழிதான் தெரியும். ஆங்கிலத்துடன் உங்கள் தாய் மொழியையும் நீங்கள் அறிந்திருப்பது உங்களுக்கு எவ்வளவு பலத்தை அளிக்கிறது தெரியுமா ? ‘ தாய் மொழி அறிவு பிள்ளைகளின் பல்வேறு விதமான வளர்ச்சிகளுக்கும் அவர்களது உளவியல் நிலைக்கும் பலமாக அமையும் என்பதால் பல ஐரோப்பிய நாடுகளில் தாய் மொழியை அறிந்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

நாம் எமது மொழியை இழப்பதால் எவ்வெவற்றை இழக்கப் போகிறோம் என்பதை சற்று நினைத்துப் பார்ப்பது பயனுள்ளது என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் இது பற்றிப் பல கட்டுரைகள் வந்துள்ளன. அவற்றை எழுதியவர்கள் தமிழர் அல்லர், ஆங்கிலேயர்கள். ‘உங்கள் தாய் மொழியை இழந்து விடாதீர்கள் அதனால் நீங்கள் நாளடைவில் உங்கள் பண்பாட்டையே இழந்துவிடுவீர்கள் பின்னர் நீங்கள் யார் என்பதையே அறியாத நிலையில் இருண்ட வாழ்வு வாழ நேரிடும் ‘, என்று அவர்கள் இக் கட்டுரைகளில் எச்சரித்துள்ளனர். இவை தம் நாடுகளில் வாழ வந்த பல்வேறு இனத்தவர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகள். அவர்கள் எதிர்பார்ப்பது வேறுபாடுகளின் மத்தியில் ஏற்படும் ஒருமைப்பாட்டையே. அதாவது அவுஸ்திரேலியாவில் வாழும் பல்வேறு இனத்தவர்கள் அவுஸ்திரேலிய பிரஜைகள் என்ற ஒருமைப்பாட்டின் கீழ் ஒவ்வொரு இனமும் ஏனையவரைப் பாதிக்காத முறையில் தத்தமது பண்பாடுகளுடன் தத்தமக்குரிய தனித்துவத்துடன் வாழவேண்டும் என்பதே. அப்போதுதான் ஒர் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக முடியும். தங்கள் பண்பாட்டினை இழந்து வேற்று இனத்துக்குரிய உடலுடன் தாம் வாழும் நாட்டின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழும் தனித்துவமற்ற மனிதர்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தை எவரும் விரும்ப மாட்டார்கள்.

எனவே தமிழர்களாகிய நாம் எமது சுய அடையாளத்தை உணர்ந்து கொள்வது மிக மிக அவசியம். சுய அடையாளம் என்றால் என்ன ? ‘நான் யார் ? ‘ என்ற கேள்விக்கு ஒருவர் நெஞ்சை நிமிர்த்தி திடமான பதில் சொல்ல முடியுமென்றால் அவர் யார் என்ற அடையாளம் அவருக்குப் புரிந்திருக்கிறது எனலாம். இங்கே நான் யார் என்பது ஆத்மிக ரீதியில் விடை காண்பதற்குரிய கேள்வியல்ல. சமுக அடிப்படையில் பதில் தேடுவதற்கான ஒரு வினா.

நாம் யார் ? இக் கேள்விக்கு நாம் இலங்கைத் தமிழர் என்று பதிலளிக்கும் போது எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறோம். இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெற்றோருக்குப் பிறந்த ஒரே காரணத்தால் நாம் தமிழராகி விடுவோமா ? அல்லது தமிழகராதி தமிழர் என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் கூறுவது போல தமிழ் மொழியைப் பேசுவதால் நாம் தமிழராகிறோமா ? அப்படியானால் தமிழை நன்றாகப் பேசும் ஒருவர் முற்றாக வேற்றுப் பண்பாட்டைக் கடைப்பிடிப்பாரானால் அவர் தமிழரா ? அல்லது தமிழ் கலாச்சாரத்தை முற்றாகக் கடைப்பிடிக்கும் ஒருவர் தமிழ் மொழியை அறியாதிருந்தால் அவரைத் தமிழர் எனலாமா ? தமிழரது அடையாளம் என்ன என்பதை நாம் புரிந்து கொண்டால்தான் வெளிநாட்டில் வாழும் எமக்கு அது எவ்வளவு முக்கியம் என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

சொந்த நாட்டில் நாம் எமது இனத்தவரோடு கூடி வாழும் போது நான் யார் ? என்ற கேள்வியை ஆத்மிக அடிப்படையில் எழுப்புவதற்குச் சந்தர்ப்பம் உள்ளதே தவிர சமுக ரீதியாகத் அதை எழுப்புவதற்கான தேவை ஏற்படுவது இல்லை. ஆனால் வேறு ஒரு நாட்டில் வேறு மொழி பேசி நமது கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட கலாச்சாரம் உடையவர்களோடு கூடி வாழ நேரும்போது நாம் யார் ? எமது பண்பாடு என்ன ? என்று அறியவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உலக நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும் போது ஆள்பவரால் ஆளப்படுகிற இனத்துக்கு ஆபத்து வந்த சந்தர்ப்பங்களiல் எல்லாம் ஆளப்படுகிற இனத்தவர் மத்தியில் தமது மொழி, பண்பாடு, வரலாறு, மதம் பற்றிய விழிப்புணர்வும் அபிமானமும் ஏற்பட்டுள்ளதை அவதானிக்கலாம். ஆனால் ஓர் இனம் வேறு ஒரு நாட்டில் வாழ வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போது இவ்வாறான விழிப்புணர்வைப் பெறுவதில்லை. இதற்குக் காரணம் அவர்கள் தமது மொழிக்கும் பண்பாட்டுக்கும் ஆபத்து வந்துவிட்டதாக உணர வேண்டிய தேவை ஏற்படாமையே. ஆயினும் பல சந்ததிகளாக ஓர் இனம் வெளiநாடுகளில் வாழும் போது ஏதோ ஒரு கட்டத்தில் இனவெறியால் பாதிக்கப்படலாம். அப்போது அவர்கள் தாம் யார் என்பதை உணராதிருப்பின் அவர்களால் அப்பாதிப்பிலிருந்து மீள முடியாது போகும். தாம் ஆங்கிலேயரைப் போல ஆங்கிலம் பேசினாலும், அவர்களைப் போலவே வாழ்ந்தாலும் அவர்கள் தமது இனத்தவராக இவர்களைக் கொள்ளவில்லை என்ற உண்மையும் அப்போதுதான் புலனாகும். அத்துடன் தாம் வேரற்ற மரங்களாக வாழ்கின்ற அவலநிலையும் புரியும். இது வெளிநாடுகளில் தமது பண்பாட்டை மறந்து வாழ்கின்ற எந்த இனத்துக்கும் நேரக் கூடிய நிலைமையாகும். எனவே எமது சந்ததியினருக்கு அந்த நிலை வராது தடுப்பதற்கான முழு முயற்சியையும் எடுக்க வேண்டியது எமது தலையாய கடமையாகும்.

மொழி பண்பாட்டின் ஓர் அம்சமாக விளங்குவதால் அதனை இழக்கும் போது பண்பாட்டையும் அதனால் சுய அடையாளத்தையும் இழக்க நேரிடுகிறது. இது ஒரு மனிதனுக்கு ஏற்படும் மிகப் பெரிய இழப்பு என்பதைப் பலர் இப்போது புரிந்து கொள்ள இயலாத நிலையில் இருக்கின்றனர். ஒருவர் நாற்பது வயதை அடையும் போது அவருக்குத் தனது தாய் மொழி, பண்பாடு ஆகியவற்றில் பற்று ஏற்படுகிறது என்றும் அப்போது அது பற்றிய அறிவின்றியிருப்பின் அவற்றைத் தமக்குப் புகட்டாத பெற்றோரின் மேலேயே அவர் வருத்தம் கொள்வார் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

இங்கு வாழும் பிள்ளைகளுக்கு தமிழ் எதற்கு என்று கூறும் பல பெற்றோர்களை நான் சந்தித்திருக்கிறேன். படிப்பதற்கும் வேலை செய்வதற்குமே மொழி தேவை, அதற்கு தமிழ் உதவாது என்பதால் அது தேவையில்லை என்பது அவர்களது வாதம். அவர்கள் தூரநோக்கு அற்றவர்கள் என்பது சொல்லாமலே புரியும். இரண்டு மூன்று சந்ததிகளுக்குப் பின்னர் இங்கு வாழ்ப்போகிறவர்களைப் பற்றி நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். வாழ்க்கை என்பது படிப்பும் வேலையும் மட்டுமல்ல. நாம் நாமாக இருக்க வேண்டும். அது வாழ்வில் மிக முக்கியமான விஷயம். நாம் நாமாக இருப்பது நமக்கு ஆத்ம பலமளிக்கும் விஷயம். அதற்கு எமக்குத் தாய் மொழி அறிவும், தமிழர் வரலாறு பற்றிய அறிவும் அவசியமாகிறது. நாம் எப்படிப்பட்ட இனத்திலிருந்து வந்திருக்கிறோம், எமது மூதாதையர் எத்தனை சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர், எத்தகைய கஷ்டங்களை மனோபலத்துடன் கடந்து வந்துள்ளனர், எத்தகைய உயரிய பெறுமதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பன போன்ற விஷயங்கள் எமக்குப் பெருமிதமளிக்கும், எம்மை உத்வேகப்படுத்தும். நாம் இவ்வாறான வல்லமையுள்ள இனத்தில் பிறந்திருக்கிறோம் என்ற எண்ணம் எமது இருப்புக்கு அர்த்தம் வழங்கும். அத்துடன் நாம் ஒரு தொடர்ச்சியின் பகுதியாக இருக்கிறோம் என்பது எமக்கு மனோபலமும் ஆத்மதிருப்தியும் அளிக்கும். இல்லாவிடின் வேரற்றவர்களாக அநாதைகளாக நாம் உணர்வதை எம்மால் தவிர்க்க இயலாது போகும்.

பண்பாடு என்றால் என்ன என்று வரையறுப்பது மிகவும் கடினமானது. சுருக்கமாகக் கூறுவதானால் அது ஒரு வாழும் முறை. நாம் உண்பது, உடுப்பது, பேசுவது, நமது பெறுமதிகள், நாம் நடக்கும் முறை, எண்ணும் விதம் என்று பல்வேறு விஷயங்கள் அதனுள் அடங்கும். அவை அனைத்தும் காலத்தின் போக்கிற்கேற்பவும், நாம் வாழும் நாட்டின் பண்பாட்டிற்கேற்பவும் மாறும். அவ்வாறு மாறுவதே ஆரோக்கியமானதும் கூட. ஆனால் அதன் உயிர்நாடி அல்லது ஆத்மா ஒரு போதும் மாறாது, மாறவும் கூடாது. ஆடை மாறலாம் ஆனால் காலம் காலமாக எமது இனத்தால் பேணப்பட்டு வந்த பெறுமதிகளை நாம் மாறவிடலாகாது. நாம் இலங்கைத் தமிழர் என்று சொல்கிறோம் என்றால் அதற்கு உயிர்நாடியாக உள்ள பண்புகளை நாம் எப்போதும் கொண்டிருக்க வேண்டும். எமது உயர் பண்புகளை மற்றைய இனத்தைச் சேர்ந்தவர்கள் மதிக்கும்படியாகவும் பாராட்டும்படியாகவும் நாம் நடந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். அதே நேரம் எமது பண்பாட்டில் கால மாற்றத்திற்கு ஒவ்வாதன அல்லது வேண்டத்தகாதன இருப்பின் அவற்றைக் களைவதும் ஏனைய பண்பாடுகளில் உள்ள நல்லனவற்றை ஏற்பதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.

எனவே தாய் மொழியும் எமது பண்பாடும், இன வரலாறும் நாம் நாமாக இருப்பதற்குப் பெரிதும் உதவுவன. எமது எதிர்காலச் சந்ததி தமது சுய அடையாளத்தைப் பேணுவதற்கும் தாம் தமிழர் என்று துணிவுடனும் நம்பிக்கையுடனும் தலை நிமிர்ந்து சொல்வதற்கும் வாழ்வதற்கும் ஏற்ற வழிவகைகளைச் செய்வது எம் அனைவரின் தார்மிகப் பொறுப்பாகும்.

—-

vamadevk@bigpond.net.au

Series Navigation

சந்திரலேகா வாமதேவா

சந்திரலேகா வாமதேவா