தமிழ் இலக்கியம் – 2004

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

இரா முருகன்


கோவை ஞானி எஸ்.பொவின் ‘வரலாற்றில் வாழ்தல் ‘ இரண்டு பாகங்கள் கொண்ட சுயசரிதத்தை வெளியிட்டுப் பேச வந்தபோது, நான் நினைத்துப் பார்த்தது எஸ்.பொ பற்றித்தான்.

எஸ் பொவின் பேத்தி, எஸ் பொ, கோவை ஞானி(படம் – பத்ரி)

எஸ்.பொவுக்குப் பொதுவுடைமை இயக்கத்தோடு ஓர் இடையறாத லவ்-ஹேட் உறவு இருக்கிறது என்று நினைக்கிறேன். ஈழ மார்க்சீயர்களின் வேளாள முற்போக்கும், தனிப் பெருந் தெய்வமாகக் கைலாசபதியைக் கட்டி நிறுத்தியதும் போலித்தனமானது என்பதில் சீற்றம் ஒரு கணம். நீங்கள் என்னை உதாசீனப்படுத்தி இருக்காவிட்டால் நான் வெளியே போயிருக்க மாட்டேன் என்கிற – இது சுய அனுதாபம் இல்லை – உரிமையோடு துக்கிப்பது இன்னொரு கணம் என்று இரண்டு மனநிலைகளுக்கு நடுவே அவர் சஞ்சரித்தபடி இருக்கிறார்.

கோவை ஞாநி, எஸ்.என்.நாகராஜன், தி.க.சி, சரஸ்வதி விஜயபாஸ்கரன், மல்லிகை டொமினிக் ஜீவா, தாமரை மகேந்திரன், செம்மலர் செந்தில்நாதன் என்று கலர் கிரேட் பார்க்காது, எல்லா மார்க்சியர்களையும் அழைத்து மேடை ஏற்றி உரிய மரியாதை கொடுத்திருப்பது இதனால் தான் இருக்க வேண்டும்.

கோவை ஞாநி கிட்டத்தட்ட இரண்டாயிரம் பக்கம் வரும் எஸ்.பொவின் வரலாற்றில் வாழ்தலை எப்படித்தான் இந்தக் குறுகிய காலத்தில் ஆழ்ந்து படித்தாரோ என்று வியக்கிறேன். அவரை அறிந்தவர்களுக்குத் தெரியும் இதற்கு எத்தனை சிரமப்பட்டிருப்பார் அவர் என்று.

வரலாறு நிகழ்ந்து கொண்டிருக்க, வாழ்க்கை பாட்டுக்கு போய்க் கொண்டிருப்பது வரலாற்றில் வாழ்வது இல்லை என்பதை ஞானி விளக்கிய விதம் அருமையானது. யாழ்ப்பாணத் தமிழ்க் கலாச்சாரம் உயர்சாதிக் கலாச்சாரம் என்பதால் மக்கள் கலாச்சாரம் நடைமுறையான மட்டக்கிளப்புக்கு எஸ்பொ குடிபெயர்ந்ததைக் குறிப்பிட்டார் ஞானி.

எஸ்.பொவின் நூலுக்கு முன்னுரை எழுதிய அவருடைய மகன் டாக்டர் அனுரா தன் தந்தையை ஒரு காட்டு மனிதர் என்று குறிப்பிடுவதை அதன் சகல அர்த்தங்களோடும் விளக்கினார் அவர்.

இந்த நூல்களில் எஸ்.பொ எதையுமே மறைக்க முயலவில்லை. கடைசி மகன் புத்ரவை சென்னைக்கு அனுப்பி, அவர் அங்கிருந்து காணாமல் போய் ஐந்து வருடம் கழித்து நைஜீரியா விமானத் தளத்தில் அப்பா என்று அழைத்து ஓடிவந்து கட்டிக் கொண்டது, சிறிது காலத்தில் இறந்தும் போனது, இன்னொரு மகன் மித்ர, விடுதலைப் போரில் கடலில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பலியானது என்று எந்த மனிதனையும் நிலைகுலைந்து வைக்கக் கூடிய சோக நிகழ்வுகள் ஒரு பக்கம். சென்னையில் பாலியல் தொழிலாளர்களுடன் பழகிப் பால்வினை நோய் வந்தது, மிதமிஞ்சிய மதுப்பழக்கம் என்று இன்னொரு பக்கம். அன்பான மனைவி, பேரன், பேத்தி என்று பாசத்தைப் பொழியும் மூப்பர் இன்னொரு பக்கம். அவர் பதிவு செய்திருப்பது இன்னொரு தளத்தில் சமூக வரலாறும் தான் என்று புத்தகங்களை இன்னும் படிக்காத நான், ஞானி பேச்சிலிருந்து புரிந்து கொண்டேன்.

ஞானியின் நேர்மை யாரையும் விட்டுவைக்கவில்லை. எஸ்பொ புறக்கணிக்கப்பட்டபோது எதிர்வினை செய்யாமல் இருந்ததற்காக டொமினிக் ஜீவாவைச் சாடினார் (டொமினிக் ஜீவா முன்வரிசையில் தான் இருந்தார்). கட்சிக் கிளைகளுக்கு ஒரு போஸ்ட் கார்ட் அனுப்பி விஜயபாஸ்கரனின் சரஸ்வதியை முடக்கிப் போட்டு, தாமரையை வளர்த்ததற்காக ஜீவானந்தம் என்ற தோழர் ஜீவாவையே கண்டித்தார் அவர். (இரண்டு பத்திரிகை இருந்தால் உங்களுக்கு என்ன குறைந்து போனது ? இருந்துவிட்டுப் போகட்டுமே). அதே நேரத்தில், ‘ஜீவாவின் இலக்கியப் பணி குறித்து நாங்கள் பரிசீலனை செய்து கொண்டிருக்கிறோம் ‘ என்று சொன்ன முற்போக்கு எழுத்தாளர் சங்க செந்தில்நாதனையும் சும்மா விடவில்லை அவர் – ‘ஜீவாவைப் பரீசிலனை செய்வதாகச் சொல்ல நீங்கள் யார் ? அவருடைய இலக்கியத் தோய்வும், அரசியல் தெளிவும் உங்களுக்கு என்ன தெரியும் ?

ஞானி எஸ்பொவையும் விடவில்லை. எஸ்பொ தன் புத்தகத்தில் தான் நாத்திக வாதி என்று சொல்லியிருப்பதைக் குறிப்பிட்டு, பொருள் முதல்வாதமான மார்க்சீயம் போல் நாத்திக வாதம் முழுமையானதில்லை என்றார். எஸ்பொ மார்க்சீயர் என்பதில் ஞானிக்கு எந்த சந்தேகமும் இல்லை. (மாறாக, சாயந்திரம் தோழமை அரங்கில் பேசிய மகேந்திரன், எஸ்பொ திடுதிப்பென்று தாமரை அலுவலகத்துக்குப் போன மாதம் ஒருநாள் வந்து – கட்சியின் மாநிலத் தலைவர் நல்லகண்ணு அப்போது அங்கு இருந்தாராம் – தன்னைப் பற்றிச் சொல்லும்வரை அவர் ஒரு பொதுவுடைமை எதிரி என்று நினைத்துக் கொண்டிருந்ததாகச் சொன்னார். மகேந்திரனின் மெட்டமார்பசிஸ் நிகழ்ந்த மாலை நேரத்தை வாழ்த்துகிறேன். அவர் கொஞ்சம் பிரயத்தனமெடுத்து எஸ்பொவின் புத்தகங்களில் ஒன்றிரண்டையாவது படித்திருந்தால், எஸ்பொ ஒரு non-communist-ஏ தவிர anti communist இல்லை என்று அந்த சாயங்காலத்துக்கு முன்னாலேயே புரிந்து கொண்டிருப்பார்.)

எஸ்பொவின் நாத்திகவாதம் பற்றிக் குறிப்பிடும்போது, நூலில் அவர் எழுதிய சில நம்ப முடியாத ஆனால் உண்மையான சம்பவங்களைப் பற்றியும் மறக்காமல் சொன்னார் ஞானி. எஸ்பொவின் நண்பர் இறந்தபோது தவறுதலாக இரண்டு சவப்பெட்டி செய்யப்பட்டது, அப்படி நடந்தால் குடும்பத்தில் இன்னொரு சாவும் நிகழும் என்ற நம்பிக்கை பொய்க்காமல் நண்பரின் சகோதரனும் அவர் மனைவியும் இறந்தது பற்றி எழுதியிருப்பதைக் குறிப்பிட்டு இது எப்படி நாத்திக வாதத்தோடு பொருந்தும் என்று கேட்டார் அவர். மார்க்சீயக் கருத்தியல் இதற்கு விடைகாண முயலக் கூடாதா என்ற தொனியில் அவர் தொடர்ந்தது, யோசித்துப் பார்க்கும்போது புன்னகையை வரவழைக்கிறது.

மார்க்சீயம் பாலுணர்வைப் பற்றி எழுதுவதற்கு எதிரானதா என்ற கேள்வியை எழுப்பினார் ஞானி – எஸ்.பொவின் கதைகள், தற்போது வாழ்க்கை வரலாறு என்று எல்லாவற்றிலும் முக்கியத்துவம் பெறும் பாலுணர்வு வெளிப்பாட்டைப் பற்றிய ஞானியின் அணுகல் matter of fact ஆனது.

என் கருத்து – எஸ்பொவின் பாலுணர்வுத் தேடல்கள் அவருடையவை. அவற்றை வாழ்க்கை வரலாற்றில் பகிர்ந்து கொள்வதால் என்ன நிறைவு அடைந்திருக்கிறார் அவர் ? அதுவும் அவரோடு இருந்த, பெயர் குறிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிப் பெண்கள் பற்றியெல்லாம், அவர்கள் மூலம் தனக்கு பால்வினை நோய் வந்ததைப் பற்றி எல்லாம் எழுதித்தான் இருக்க வேண்டுமா ? அது மெல்லிய குரூரம் இல்லையா ? இந்தப் பெயர்களும் எஸ்பொவுக்குப் பால்வினை நோய் வந்ததும் எப்படி வரலாற்றில், வரலாற்றோடு வாழ்வதாகும் என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை.

ஒரு மணி நேரத்துக்கு மேல் ஞானி பேசினாலும் அவையில் குண்டூசி விழுந்தாலும் கேட்கும் நிசப்தம். பேசி முடித்து அவர் கீழே இறங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு ஓர் அன்பர் அவர் காலில் விழுந்தார். ஞானியின் புன்சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரிகிறது.

******************************

அளவெட்டி சிரீஸ்கந்தராஜா நல்ல கவிஞர், நாடக ஆசிரியர், சிறுகதாசிரியர் என்று விழாவிலும், அதற்கு முன் சந்தித்தபோதும் புரிந்து கொண்டேன். கொஞ்சம் வெண்டி கோப்பாக, கொஞ்சம் இருண்மை நாடகாசிரியராக, கொஞ்சம் வேகமான பேச்சாளராக என்று அவர் வளைய வந்து கொண்டிருந்தார்.

மேடையிலும், பார்வையாளர்கள் மத்தியிலும் அதிகமாகக் கவனிக்கப்பட, அவர் ‘தெனாலி கமல் ‘ நீட்சியான பிம்பத்தை சிருஷ்டித்ததுதான் காரணம் என்று தோன்றுகிறது. அவருக்கும் அது புரிந்திருக்க வேண்டும். He used the opportunity to the hilt.

************************************

கைலாசபதி செண்ட்ரிக் ஆகத்தான் ஈழத் தமிழ் இலக்கியம் செயல்பட்டுக் கொண்டிருந்ததைக் குறிப்பிட்டு மாலன் துவக்கி வைத்த தோழமை அரங்கில் பேசிய திருப்பூர் கிருஷ்ணன், தற்போது இலக்கிய உலகில் நிகழும் தரம் தாழ்ந்த தாக்குதல்கள் குறித்துக் கவலை தெரிவித்தார். இசை உலகில் இப்படி இல்லை என்ற அவர், தமிழ் இலக்கிய வாதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்துப் பேசினார்.

இசை உலகம் பற்றித் தெரிந்தவர்களிடம் கேட்டால் அங்கே நிகழ்ந்ததை எல்லாம் அவிழ்த்து விடுவார்கள். யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பாடகி பற்றி அமரரான ஒரு மகா வித்வான் சொன்னதும், இன்னொரு பாடகி பாடிய ‘காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே ‘ பாட்டைப் பாராட்டிய விமர்சகரை மற்றொரு மகானுபாவர் சாடியதும், ரயிலில் கூட வந்த பாடகி பற்றி ஒரு சீனியர் வித்வான் கமெண்ட் அடித்ததும் என்று எனக்குத் தெரிந்தே ஏகப்பட்டவை உண்டு. சபையில் சொல்லத் தகுதி இல்லாதவை அவை எல்லாமே.

யோசித்துப் பார்த்தால் தமிழ் இலக்கியம் குடுமிப்பிடி சண்டைக்கு நடுவில் தான் காலம் காலமாக வளர்ந்திருக்கிறது என்று புரியும். எதிர்ப்பட்ட புலவர்களைக் கவிபாட வைத்து வென்று காதைக் குறும்பை அளவு தோண்டி அறுக்கிற வில்லிப்புத்தூரான் கற்பனைப் பாத்திரமாக இருக்கலாம். ஆனால் வள்ளலாருக்கும், ஆறுமுக நாவலருக்கும் இடையே நூறு வருடம் முன்னால் நடந்த அருட்பா – மருட்பா போராட்டத்தில் இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் ஏசி வீசிக் கொண்ட பிரசுரங்கள் இன்னும் கிடைக்கின்றன. ‘உன் பெண்டாட்டி வேசியாகட்டும் ‘ என்றெல்லாம் நேரடியாக வசைமாரி பொழிகிற அவற்றோடு ஒப்பிட்டால் இன்றைய சிறுபத்திரிகை மோதல்கள் ஜுஜுபி.

கல்கி – புதுமைப் பித்தன் மோதல், ராஜாஜிக்கு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தபோது (ராமாயணத்தைத் தொடர்கதையாகச் ‘சக்கரவர்த்தித் திருமகன் ‘ என்ற பெயரில் எழுதியதற்காக அவருக்கு சாகித்ய அகாதமி பரிசு கொடுக்கப்பட்டது ஓர் மகத்தான அநியாயம்) ஏற்பட்ட சிவப்பு முகாம் எதிர்வினை – ‘ஒழிந்த நேரத்தில் விபசாரம் செய்தால் உப்பு புளிக்கு ஆகும் என்ற பழமொழி போல், ஒழிந்த நேரத்தில் இலக்கிய விசாரம் செய்யும் ஆசாரியார் ‘ – சு.ரா வெர்சஸ் கநாசு அண்ட் அதர்ஸ் போல் வாழையடியாக வந்த தமிழ் வாழை மரத்தைத் தான் நாச்சார் மட நாலுகால் பிராணிகள் நனைக்கின்றன. கவலையே படவேண்டாம். உங்கள் பேரன் காலத்திலும் கட்டாயம் வாழைக்குலை கிடைக்கும்.

*****************************************************

கவிதை அமர்வில் பொதுத்தன்மை கொலேஜ் கவிதைகள். ஒரு பதினைந்து வருடம் முன்னால் இவை கொஞ்சம் பிரபலம். இப்போது கொலேஜ் கவிதைகளில் கொஞ்சம் தாராளமாய் ‘..த்தா ‘, ‘தே.. மகனே.. ‘ என்று வார்த்தைகள் புழங்குகின்றன.

சினிமா கொட்டகையில் டிக்கட் எடுப்பதில் தொடங்கி, ‘பொங்கு தமிழுக்கு இன்னல் விளைந்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு ‘ என்று பாரதிதாசனின் வரிகளில் முடித்த பச்சையப்பனின் கவிதை இந்த ரகமான மொழியதிர்ச்சி மட்டும். ஆனால் அடுத்து வந்த இன்னொரு கொலேஜ் கவிதை ஒரு சின்னச் சவுக்கைச் சுழற்றியது.

கிராமப் பள்ளிக்கூடத்துப் பையன் வாத்தியாரைப் பார்த்துக் கேட்கிறது – உங்களுக்காக நான் டாச்சரின் டிபன்காரியர் கழுவிக் கொடுத்தேன். சாப்பாடு வாங்கி வந்தேன். கழிவறையில் விழுந்த காசைக் கையை விட்டு எடுத்து வந்து கொடுத்தேன். நீங்கள் எனக்குப் பாடமே சொல்லித் தராமல் பெயிலாக்கியது ஏன் ?

ராஜ்குமார் என்ற கவிஞர் காத்திரமான குரலோடு மலையாளக் கவிதை போல் ராகம் போட்டு வாசித்தது, தொனியில் கட்டமனிட்ட ராமகிருஷ்ணன், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு போலவும், அடுக்கடுக்காக வந்த படிமத்தில் ஜி.சங்கரகுரூப்பு போலவும் இருந்தது ஆச்சரியம். ராஜ்குமாரை விசாரித்தேன். நாகர்கோவில் காரராம். பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவருக்கும் இஷ்டமாம். அய்யப்பனின் (அய்யப்ப பணிக்கர் இல்லை) கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். ராஜீவனின் கவிதைகளையும் தமிழுக்குக் கொண்டு வாருங்கள் என்றேன்.

கவியரங்கில் ஏமாற்றம் மகுடேசுவரன். சுஜாதாவின் செல்லப்பிள்ளையாகக் கணையாழியில் எழுதி வளர்ந்தவர். (இலக்கியச் செல்லப்பிள்ளைகள் தறுதலைகளாவது பற்றித் தோழமை அரங்கில் மாலன் குறிப்பிட்டதாக நினைவு).

தான் தற்போது எழுதிவரும் ‘மூன்றாம் பால் ‘ தொகுப்பில் இருந்து கவிதைகளைப் படித்தார் மகுடேசுவரன்.

ஊர்ப் பெயர்களாக அடுக்கி ஒரு காதல் தம்பதியின் கதையைச் சொல்லும் கவிதை ஒன்று இப்படி முடிந்தது.

இப்போது

பழனியில் அவன் திரிகிறான்

பரதேசியாக.

வேலூரில் அவள் இருக்கிறாள்

வேசியாக.

‘Don ‘t send me such trash anymore ‘ என்று ஈமெயிலில் ஒன்லைனராகச் சீறினாலும், சுஜாதார்ப்பணம்.

*********************************************************

மாலை அரங்குகளில் கூட்டம் அதிகம். அதுவும் கவிதை அரங்கு நிரம்பி வழிந்தது.

கைதட்டல் – முதல் நாள் நித்யஸ்ரீ பாடி முடித்ததும் யாருமே கைதட்டவில்லை. போன மாதம் அவர்

வாயைத் திறந்தாலே அப்ளாஸ் என்று இருந்தது பத்து நாளில் இப்படிப் போனதை நினைத்து அவரே ஆச்சரி

யப்பட்டிருக்கக் கூடும். ஆனாலும் அப்துல் ஜபார் சார் விடாமல், இலக்கியவாதிகள் என்றால் கைதட்டி மகி

ழ்ச்சி தெரிவிக்கக் கூடாதா, தட்டுங்கள் என்று சொல்லி வற்புறுத்த, அப்புறம் சோனியான, திரும்பவும்

வற்புறுத்த, பலமான கைதட்டல்.

பெண் கவிஞர்களுக்கு – கவிதாயினிகள் என்று சொல்லலாமா ? – கைதட்டு அதிகம். எல்லாக்

கவிஞர்களும் கவிதை வரிகளை ஒரு தடவைக்கு இரண்டு தடவை சொல்லித் தான் மேலெ பேசிப் போகி

றார்கள். முஷைரா மாதிரி ‘வாஹ் வாஹ் ‘ என்று மேடையிலும் சொல்ல வேண்டுமோ என்னமோ தெரியவி

ல்லை.

சுமதி, இன்குலாப்(படம்: இரா முருகன்)

காசி ஆனந்தனுக்கு பேசப் பேசக் கைதட்டு விழுந்தபடியே இருந்தது. ‘யுனஸ்கோ அறிக்கையில் சொல்லியி

ருக்கிறது – இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அழியப் போகிற மொழிகளில் தமிழும் ஒன்று ‘ என்று

குரலை உயர்த்தி அவர் முழங்க, என்ன சந்தோஷமோ, கைதட்டினார்கள்.

**************************************************************

விழாவில் மற்றவர்களுக்கு எப்படியோ, தொகுப்பாளர் சாத்தான்குளம் அப்துல் ஜபாருக்கு இலக்கி

ய அன்பர்கள் நிறையப் பேர் விசிறிகளாகியிருப்பார்கள்.

அவர் மட்டும் ஒருங்கிணைக்காவிட்டால், வள்ளி திருமணம் மாதிரி காலை வரை நிகழ்ச்சி நடந்துகொண்டே இருந்திருக்கும்.

ஜபார் நிறைகுடம் தான். நல்ல தமிழில் எல்லோரும் பேச வேண்டும் என்ற ஆர்வத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்தியபடியே இருந்தார்.

தாமரை மகேந்திரன், தோழர் ஜீவா தலைமறைவு வாழ்க்கையின் போது ஓராண்டு இலங்கைக்குப் போய்த்

தங்கியதாகக் குறிப்பிட்டார் (தோழமை அரங்கம்).

அரங்கம் முடிந்ததும், ஜீவா இலங்கையில் இந்த ஊரில், இந்தத் தெருவில், இந்தக் கதவிலக்கம் கொண்ட

கட்டடத்தில்தான் தங்கியிருந்தார் என்று தெரிவித்தார் ஜபார். அது அவருடைய பெரியப்பா மக்கள்

வீடாம்.

அவ்வப்போது ஜபார் வெடித்த சரவெடிகளில் மாதிரிக்கு இரண்டு.

1) ஒரு கூட்டத்தில் ஒருத்தன் நெடுநேரம் பேசிக்கொண்டே இருந்தான். கடுப்பாகிப் போய், கேட்டுக்

கொண்டிருந்தவர்களில் ஒருவன் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு பாய்ந்து வந்தான். ‘ஐயயோ,

சுட்டுடாதீங்க ‘ – பேச்சாளர் சத்தம் போட்டார். ‘பயப்படாதே, உன்னைச் சுடமாட்டேன். உன்னைப்

பேசச் சொல்லிக் கூப்பிட்டானே, அவனைத்தான் சுடப்போறேன் ‘.

2) வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் அரசு ஊழியர் ஒரு வீட்டுக்குப் போனார். அங்கே வீட்டம்மா

மட்டும் இருந்தார்.

உங்க வீட்டுக்காரர் பெயர் என்ன என்று கேட்டார்.

‘என்னங்க, புருஷன் பெயரைப் பெண்டாட்டி சொல்லலாமா ? இதுகூடப் புரியாமக் கேக்கறீங்களே ‘ என்று

சீறினார் அம்மையார்.

ஆறு விரலைக் காட்டினார் அவர்.

‘ஆறு ‘.

‘ஆமா, அதோட கழுத்துக்கு மேலே இருக்கறதைச் சேர்த்துக்குங்க ‘

‘கழுத்துக்கு மேலே – தலையா ? ‘

‘ஊஹும்.. அது இல்லே .. முன் தலை .. இது.. ‘

‘ஓஹோ, முகம்…அப்ப உங்க வீட்டுக்காரர் பெயர் ஆறுமுகம். சரிதானுங்களா ? ‘

‘அப்படித்தாங்க அந்த நாயை எல்லாரும் கூப்பிடறது ‘.

******************************************

கூட்டம் எதிலும் மார்க்சீய இலக்கியவாதிகளே நினைவு கூறாமல் போன மார்க்சீய அறிஞர் சாத்தான்குளம்

ராகவனைப் பற்றிக் கூறியவர் ஜபார் தான். ‘தமிழர் பண்பாட்டில் தாமரை ‘ என்ற அற்புதமான நூலை

எழுதியவர் சாத்தான்குளம் வே.ராகவன்.

நன்றி ஜபார் அவர்களே, அடுத்த பந்து வாலாஜாதெரு முனையிலிருந்து அளவு குறைவாக வீசப்பட்டு.. கி

ர்க்கெட் மேட்சில் உங்களைச் சந்திக்கிறோம்.

************************************************8

மொத்தம் பத்துப் பேர் இருந்த அரங்கத்துக்குள் நுழையும்போது பக்கத்தில்

சாருஹாசன்.

‘தபரண கதா ‘வுக்கு அப்புறம் கிரிஷ் காசரவள்ளியோடு படம் எதுவும்

செய்யவில்லையா என்று கேட்டேன். அந்தப் படம் சாருவுக்குச் சிறந்த

நடிகருக்கான ஜனாதிபதி விருது வாங்கித் தந்தது.

நான் செய்யாட்டாலும், கிரிஷ் தபரண கதாவைவிட அருமையாக அடுத்த படம்

‘தாய் சாகிபா ‘ பண்ணினாரே, பாத்தீங்களா என்றார் சாரு.

பார்த்தேன். ஆனாலும் தபரண கதாதான் மனசிலே நிக்குது. அதுவும் நீங்க

ரிடையர்ட் போஸ்ட்மேனா, கால்லே பிளவை வந்த மனைவிக்கு ஆப்பரேஷன்

நடத்தணும்னு டாக்டர் சொன்னபோது வேண்டாம்னு தூக்கிட்டு ஓடி வரது.. கன்னடம்

எப்படித் தெரியும் ?

காலேஜ் பெங்களூர்லே படிச்சேன். அப்புறம் ரொம்ப வருஷம் மறந்து போன

மொழி. இன்னொரு விஷயம் தெரியுமா என்றார் சாருஹாசன்.

சொல்லுங்க சார்.

தபரண கதாவை நான் தான் முதல்லே தயாரிக்கறதாவும், கிரிஷ் காசரவள்ளி

இயக்கறதாகவும், நசிருத்தீன் ஷா தபரா வேஷத்திலெ நடிக்கற மாதிரியும்

ஏற்பாடு. கடைசி நிமிஷத்திலே நசிர் மாட்டேனுட்டார். அதான் நான்.

நசிருத்தின் ஷா ஜனாதிபதி விருதைத் தவற விட்டது இப்படித்தான்.

கிரிஷைப் பற்றிச் சொல்லும்போது சாரு சொன்னது – கமல் மாதிரி ஒரு

வெர்சட்டைல் பெர்சனாலிட்டி. ஒரே வயசுதான்.

‘சோமனதுடி ‘க்கு விருது வாங்கிய வாசுதேவராவ் பற்றி விசாரித்தேன்.

காசரவள்ளியின் புதுப்படத்தில் நடித்திருக்கிறார் என்றார். படம் தனக்கு

அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். (வாசுதேவராவை

நாயகனில் ‘வாப்பா ‘வாகப் பார்த்திருப்பீர்கள்).

கிரிஷ் கர்னார்ட் பற்றியும் அவருடைய நாகமண்டலா பற்றியும் பேச

ஆரம்பித்தது பாதியில் நிற்க நேற்றைய கூட்டம் பற்றி, இபா புத்தக

வெளியீட்டு உரை பற்றிப் பேச்சு.

*******************

நேற்றுக் கூட்டத்தில் இயக்குனர் மகேந்திரனைப் பார்த்ததும் என் கேள்வியை

எதிர்பார்த்தவராகத் தெரிந்தார்.

‘சாசனம் எப்ப வரும் ? ‘.

வெகு விரைவில் என்றார் அவர். எனக்கு எதிர்பார்ப்பு மகேந்திரன் படம்

என்பதால் மட்டும் இல்லை. எங்கள் அன்புக்குரிய தோழர் கந்தர்வனின் கதை

என்பதாலும் தான் என்பதைச் சொன்னேன்.

*****************************

மேடையில் அருகருகே இருந்தும் நிறையப் பேசமுடியாமல் போன மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அடுத்த நாள் காலை மாட்டிக் கொண்டார். இணைய நண்பர்கள் ஜமாவும் என்னோடு சேர, பின்னணியில் இரைச்சலாக ‘தமிழா

உறங்காதே ‘ என்று சீர்காழி சிவசிதம்பரம் இசைப் பேழை. பக்கத்து நாற்காலியில் கண்ணை மூடியபடிப் பத்து வரி முன்னால் வந்த சாருஹாசன்.

ரெ கார்த்திகேசு , பா ராகவன் (படம்: இரா முருகன்)

சென்னைப் போலீஸ், சாப்பாடு, கூட்டம், அவர் நாளைக்கே மலேசியா திரும்ப இருப்பது, பிரவுசிங் செண்டர்களில் தமிழ் எழுத்துரு இல்லாதது, எங்கே நண்பர் ஐகாரஸ் என்று குஷியாகப் பேசிக் கொண்டிருக்க யுகபாரதி வந்து சேர்ந்தார்.

‘மன்மத ராசா ‘ விலே நிசமாவே தூள், அதான் தூசியைக் கிளப்பிட்டு ஆடறாங்களே என்றார் ரெ.கா சிரித்துக் கொண்டு.

ஆமா சார். கோலார் தங்கச் சுரங்கத்தில் படப்பிடிப்பு. லோ பட்ஜெட். அங்கே தான் ஷூட்டிங் வச்சாங்க.

யுகபாரதியின் மனப்பத்தாயம் தொகுப்பு பற்றி இன்னொரு தடவை நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினேன். அடுத்த தொகுதியும் வருவதாகச் சொன்னார்.

மன்மத ராசா கொடுத்த உற்சாகத்தில் கணையாழிக்குக் கால்கடுதாசி கொடுத்து விட்டாராம் யுகபாரதி. ஒரு சுற்றுப் பெருத்து இருப்பதாகத் தெரிகிறது. ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ‘ போல் நிறைய எழுதி இன்னும் பெருக்க வாழ்த்துகள்.

*******************************

நீல பத்மநாபன்(படம்: இரா முருகன்)

விஜயபாஸ்கரன் , தி க சிவசங்கரன்(படம் – பத்ரி)

சிட்டி(படம் – பத்ரி)

இரா முருகன், கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி(படம் – பத்ரி)

Series Navigation