தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 2

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

முனைவர் மு.இளங்கோவன்(ஏப்பிரல் 3 திண்ணை இதழின் தொடர்ச்சி)

பெருஞ்சித்திரனார் உரைச்சிறப்பு

பரிமேலழகர் அவர் காலத்திற்கு முந்தைய உரைகளைக் கற்று உரை வரைந்துள்ளார்.133 இடங்களில் பிறர் உரை சுட்டுவதையும்,48 இடங்களில் பாட வேறுபாடு காட்டுவதையும்,230 மேற்கோள்கள் ஆளப்பட்டுள்ளதையும் 286 இடங்களில் அரும்பொருள் விளக்கம் தந்துள்ளதையும்,வடமொழி நூல்களில் நல்ல தோய்விருந்ததையும் கற்ற பேராசிரியர் அருளி வியப்படைவர்(திருக்குறள் மெய்ப்பொருளுரை, தொகு.1,பக்.19). இவ்வாறு பரிமேலழகர் மிகப்பெரும் திட்டமிடலுடன் உரை வரைந்தது போலப் பெருஞ்சித்திரனாரும் மிகப்பெரும் திட்டமிடலுடன் திருக்குறளுக்கு ஏறத்தாழ எட்டாயிரம் பக்கங்களில் உரை வரையத்திட்டமிட்டும் தமிழர்களின் போகூழ் குறைந்த அளவிலான குறட்பாக்களுக்கே உரை நமக்குக் கிடைக்கலாயிற்று.அவ்வாறு 240 குறட்பாக்களுக்கு நான்கு தொகுதிகளாக உரைநூல் வெளிவந்துள்ளன.

முன்னுரைப் பகுதியே மிகப் பெரிய அறிவு ஆராய்ச்சிக் களமாகத் தெரிகின்றது.அதனை அடுத்து அவர் வரைந்துள்ள பகுதிகள் தமிழ் உரை வரலாற்றில் மிகப்பெரிய இடம்பெறத்தக்கன.
பெருஞ்சித்திரனார் மெய்ப்பொருள் உணர்வுடையவர்.ஓரிறைக் கொள்கை உடையவர்.இவர்தம் மெய்ப்பொருள் உணர்வும்,இறைநெறி சார்ந்த கருத்துகளும் உரிய இடங்களில் பதிவாகியுள்ளன.இவர்தம் சொல்லாராய்ச்சியும், ஆழமான உலகியல் அறிவும்,யாப்பு ஆற்றலும்,பன்னூல் பயிற்சியும்,பல துறை அறிவும் கண்டு வியப்பே மேலிடுகின்றது.பெருஞ்சித்திரனார் தாம் உணர்ந்த மெய்ப்பொருள் உணர்வுகளைத் தம் உரையில் பொருத்தி எழுதியுள்ளார்.

பாவேந்தர் குயில் இதழில் உரை எழுதியபொழுது பரிமேலழகரின் ஆரியக் கருத்துகளை மட்டும் நீக்கி விட்டால் அவ்வுரையே போதும் எனவும்,பாவாணர் மரபுரை தந்த பிறகு வேறு எவரும் திருக்குறளுக்கு உரை வரைய வேண்டியதில்லை எனவும் கருதிய பெருஞ்சித்திரனார் பின்னர் காலத் தேவையறிந்து தாமே மிகப்பெரிய அளவில் உரை வரைய எண்ணினார்.இவர் சிறையில் இருந்தபொழுது இவ்வுரைத் தொகுதிகள் எழுதப்பெற்றன.

திருக்குறளும் உரைகளும் குறிப்பிடும் பொருளின் துல்லியத்தை உரைப்பதே மெய்ப்பொருளுரையின் நோக்கமாகும் (ப.45).

திருக்குறளுக்கு உரைவரையும்பொழுது தொல்காப்பியம், நன்னூல்,கழகநூல்கள், காப்பியங்கள், தனிப்பாடல்கள்,சமயப் பாடல்கள்,சாத்திர நூல்கள், தோத்திர நூல்கள் எனப் பல வகைப்பட்ட நூல்களையும், பிறமொழி நூல்களையும் பயன்படுத்துவதுடன் அறிஞர்களின் கருத்துகளைப் பொருத்தமான இடங்களில் போற்றுவதும் குறைபாடுடைய இடங்களில் சுட்டிச்செல்வதும் இவர்தம் இயல்புகளாக உள்ளன. மூலநூல்ஆசிரியரையும் தேவையான இடங்களில் அடையாளப்படுத்துவதும் இவர்தம் இயல்பாக உள்ளன.பிறமொழி, பிறமதம், பிற பண்பாட்டுச் செய்திகளையும் பெருஞ்சித்திரனார் விளக்கிச் செல்கிறார்.
முன்னுரை,பால்விளக்கம்,பாயிர விளக்கம்,அதிகாரவிளக்கம்,குறள் விளக்கம் என வகுத்து இவர் உரை வரைந்துள்ளார்.மேலும் குறள்,பொருள்கோள் முறை,பொழிப்புரை,சில விளக்கக்குறிப்புகள் என்னும் அமைப்பில் உரைநூல் அமைப்பு உள்ளது.

பெருஞ்சித்திரனார் திருக்குறள் ஆரியக்கருத்துகளுக்கு எதிராக எழுதப்பட்ட நூல் எனப் பல சான்றுகளுடன் நிறுவுகிறார்.குறிப்பாக மனுநூலில் குறிப்பிடும் கருத்துகளை எடுத்துக்காட்டி விளக்கி,இவற்றை எதிர்க்கவே வள்ளுவர் தம் குறட்பாக்களைப் படைத்துள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளார்.குறிப்பாக உழவுத்தொழிலை இழிவான தொழிலாகக் குறிப்பிடும் மனுதரும கருத்துகளை எடுத்துக்காட்டி இவற்றுடன் வள்ளுவரின் கருத்துகள் எந்த அளவு உயர்வுடையனவாக விளங்குகின்றன என்பதை முறைப்படக் காட்டியுள்ளார். உயிர்க்கொலை பற்றி மனுவின் கருத்தும் வள்ளுவரின் கருத்தும் முரண்பட்டு நிற்கும் இடங்களையும் பெருஞ்சித்திரனார் விளக்கியுள்ளார்.மேலும் திருவள்ளுவரின் தமிழியல் பார்வையும் ஆரியவியல் எதிர்ப்பும் தவிர்ப்பும் என்னும் பகுதி(முதல்தொகுதி,பக்.123) பெருஞ்சித்திரனாரின் பன்னூல் பயிற்சிக்குக் கட்டியம் கூறி நிற்பன.(இவற்றின் சிறப்பை மூல நூலில் கண்டு மகிழ்க).
விளக்கக் குறிப்புகளில் சொற்பொருள் வரைந்தும் சொல்நயம் சுட்டியும், பல பொருத்தமுடைய மேற்கோள்களை எடுத்துரைத்தும் இதுவரை யாரும் இதுபோல் உரை வரையவில்லை என முடிவுசெய்யும் பொறுப்பை நமக்கே வழங்கி விடுகின்றார்.

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் உரைவரையும் பொழுது பெரிதும் மாறுபட்டு நிற்கும் இடங்களில் பெருஞ்சித்திரனார் பொருத்தமான விளக்கம் தர முயன்று இவரும் கருத்து வேறுபாடுகளுக்கு இடந் தந்து நிற்கிறார்.ஒலி,எழுத்து,சொல்,தொடர்களில் எல்லாம் மெய்ப்பொருள் உணமைகள் பொதிந்துள்ளதை நுட்பமாக ஆராய்ந்து எழுதியுள்ளார்.

‘அகர எழுத்தே கூட,வரிவடிவில்,தொடக்கத்தில் இருந்த நிலைக்கும் இன்றுள்ள நிலைக்கும் எத்தனையோ மாறுதல்கள் அடைந்துள்ளன.ஆனால்,ஒலிவடிவம் ஒன்றுதான்.அதுபோல் இறையுணர்வு தொடக்கத்திலிருந்து இன்றுவரை ஒன்றுதான். வடிவங்கள் மாறுதல் அடைந்து வந்துள்ளன.(தொகு.2,பக்.61).
‘பிறப்பு’ – எனும் சொல்லில் ப்+இ -பி -மெய்களோடு உயிர் சேர்ந்திருப்பதையும்,’இறப்பு’ என்பதில் ‘இ’ – மெய்நீங்கிய உயிர்மட்டும் இருப்பதையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளதையும்(பக்.62) நோக்கும் பொழுது பெருஞ்சித்திரனாரின் இறையுணர்வு வெளிப்பட்டு நிற்கிறது.
பெருஞ்சித்திரனார் திருக்குறள் மெய்ப்பொருளுரையில் பல சொற்களுக்கு விளக்கம் வரைந்துள்ளார் அவற்றுள் இறைவன்(மூலமாய்,முதலாய் நிற்கும் முதற்பொருள்), கடவுள்(அம்மூலப்பொருள் உயிர்களுடன் கலந்துநிற்கும் நிலை),தெய்வம் (உயிர்களுள் மேம்பாடுற்றுச் சிறந்த மீமிசை மாந்த உயிர்கள்,உலகத்து வாழ்ந்து மறைந்து,மீண்டும் உடற்பிறவியற்று உயிரொளியாய் இயங்கும் நிலை) இவற்றிற்கு வரையும் உரை இவர்தம் உரையால் உண்மைபோல் காட்டப்படுகின்றது(2,பக்.25).

இறை,மதம் சமயம்,அகமனம்,புறமனம்,ஓகம்,ஊழ்கம் என இவர் தரும் விளக்கம் சமயவாதிகளை விட இத்துறையில் இவருக்கு இருக்கும் பேரறிவைக்காட்டி நிற்கின்றன.இவையெல்லாம் திருவள்ளுவர் சொல்ல நினைத்த கருத்துகளா என நடுநிலையுடன் நின்று நோக்குவர் கேட்கத்தோன்றும்.தம் அறிவையும் தம் கொள்கையும் திருவள்ளுவருக்கு அல்லது திருக்குறளைச் சார்பாக்கிப் பெருஞ்சித்திரனார் குறிப்பிட்டுள்ளார் என்பதை அறிஞருலகம் விளங்கிக்கொள்ளும்.இவ்வவாறு பல மெய்ம்மவியல் கருத்துகளைக் குறிப்பிட்டிருந்தாலும் இவர்தம் சொற்பொருள் விளக்கம் பிறரால் தரமுடியாத ஒன்றாகும்.
பெருஞ்சித்திரனாரும் அதிகாரப்பெயர் மாற்றம், குறளை வகையுளி இல்லாமல் எழுத சிறு மாற்றங்களைக் குறித்துக் காட்டியுள்ளார்(குறள். 4).

திருக்குறளின் முதல் அதிகாரத்தைக் கடவுள் வாழ்த்து எனப் பொதுப்பட குறிப்பிடுவதை உரையாசிரியர்கள் இறைநலம் (சி.இலக்குவனார்), இறைவாழ்த்து (அப்பாத்துரை), உலகின்தோற்றம்(பாவேந்தர்) முதற்பகவன் வழுத்து(பாவாணர்), வழிபாடு(கலைஞர்), இறைவணக்கம்(இரா.இளங்குமரனார்) எனக் குறிப்பிடுகின்றனர்.அதைப் போலப் பெருஞ்சித்திரனார் ‘அறமுதல் உணர்தல்’ என்று குறிப்பிட்டு உரை வரைந்துள்ளார்.
அறமுதல் உணர்தல் அதிகாரத்தில் உள்ள பத்துக்குறட்பாக்களுக்கும் மெய்ப்பொருள் நோக்கில் உரை வரையப்பட்டிருப்பினும் சில சொற்களுக்கு விளக்கம் வரையும்பொழுது தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் போல் வரைந்துள்ளது அவர்தம் பழுத்த பேரறிவுக்குச் சான்றாகும்.’ வேண்டுதல்’,வேண்டாமை’ எனும் இரு சொற்களுக்கு விளக்கம் தரும்பொழுது பற்றாலும் ஆசையாலும் பாசத்தாலும் ஒன்றை விரும்புதல் வேண்டுதல்(விரும்புதல்) எனவும்,வெறுப்பாலும்,பொருந்தாமையாலும் பகையாலும் ஒன்றை விரும்பாமை வேண்டாமை எனவும் விளக்கம் தருகின்றமை பொருத்தமாக உள்ளது.
இருவினை என்பதற்கு மறவினை(அறத்திற்கு எதிரானது),தீவினை(நன்மைக்கு எதிரானது) எனும் விளக்கம் நாம் அறியாத ஒன்றாக இருக்கின்றது.

அமிழ்தம் என்னும் சொல்லுக்குப் பாற்கடல் அளவில் நம் அறிஞர்கள் விளக்கம் தர,’அம்”அம்’ என்பது குழந்தை தாய்முலையில் பாலருந்தும் ஓர் ஒலிக்குறிப்பு.அம்மம் – தாய்முலை.அம்மு – முலைப்பால் – அமுது -அமுதம் – அமிழ்தம் எனக்காட்டி அமிழ்தம் முதலில் தாய்ப்பாலைக்குறித்துப் பின் பிற அருந்தும் பாலைக்குறித்தது என்கிறார் பெருஞ்சித்திரனார்(தொகு.1,பக்.86,87).
‘துப்பு’ என்பது நுகர்வுப்பொருள் அனைத்தையும் குறிக்கும்.ஆனால் உணவை மட்டும் குறிப்பதாகப் பரிமேலழகர் முதல்,பாவாணர் வரை குறித்திருப்பதைப் பெருஞ்சித்திரனார் குறையுரை என்கிறார்
‘விரிநீர்’ என்னும் சொற்கு உணவு ஆக்கத்திற்குக் கடல் நீர் நேரிடையாகப் பயன்படாமை பற்றி உயர்வு நவிற்சியாகக் கூறியது(தொகு.2,பக். 90).

‘தம்பொருள்’ எனத்தொடங்கும் குறளுக்கு இதுவரை வந்துள்ள உரைகளை ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது பெருஞ்சித்திரனாரின் உரை மயக்கமற்று,மிகத்தெளிவாக,முழுமையான பொருளைக்காட்டி நிற்கின்றது.
‘(இவ்வுலகில்) தம்முடைய பொருள் என்று உரிமை கொண்டாடுவதற்கு உரியவர்கள் தாம் பெற்று உருவாக்கிய தம் மக்களே.மற்று,அவரவரும்(உடைமை நிலையில்)தம்தம் பொருள் என்று கூறிக்கொள்வன,அவரவர் உழைப்பால் ஈட்டி வருவனவே -என்று (உரிமையையும்,உடைமையையும் பிரித்து)உணர்ந்தவர் கூறுவர். ….இது தாய் தந்தை இருவருக்குமே பொது என்பதால் ‘தம்’ என்றார்.(இது பற்றிய பிற சுவைப்பகுதிகளை மூல நூலில் காண்க.தொகு.2,231).

இனியவை கூறல் அதிகாரத்தில் உரைவரையும்பொழுது கூறுதல் ,சொல்லுதல் பலவகைப்படும் என்பதைத் திருவள்ளுவர் வழியில் நின்று ,அன்பாகச் சொல்லுதல் முதல் வெல்லும்படி சொல்லுதல் வரையில் 109 தொடர்களைக் காட்டித் திருவள்ளுவத்தில் கூறும் முறைகளைப் பெருஞ்சித்திரனார் காட்டியுள்ள பாங்கினை நோக்கும்பொழுது அவர்தம் திருக்குறள் புலம் நமக்குப் புலப்படுகிறது.

அனிச்சமலர் பற்றி விளக்கும் பொழுது சங்கநூல்களில் கலித்தொகையில் மட்டும் ஒரிடத்தில் இம்மலர் பற்றி வருகிறது எனவும், திருக்குறளில் வரும் இடங்களில் மென்மைபேசுவது என்று குறித்துள்ளது இவர்தம் துல்லியம் நாடும் போக்கைக்குறிப்பிடுவது.(குறள் 90 விளக்கம்).பெருஞ்சித்திரனாரின் மெய்ப்பொருள் உரையில் சில இடங்கள் மிகைபடக்கூறலாகத் தெரிந்தாலும் அவற்றுள்ளும் பல உண்மைகள் உணர்த்தப்பட்டுள்ளதால் அதுவும் குற்றமில்லை என்க.

பொற்கோ உரை

திருக்குறளுக்குப் பொற்கோ வரைந்துள்ள உரை நான்கு தொகுதிகளாக வந்துள்ளன.இவ்வுரை நூலில் பால் விளக்கம்,பாயிர விளக்கம்,அதிகார விளக்கம்,குறள்,உரைத்தொடர்,உரைத்தொடர் விளக்கம்,பொருள் விளக்கமும் குறிப்பும் என்னும் அமைப்பில் செய்திகள் உள்ளன.பொற்கோ பகுத்தறிவுக் கருத்து கொண்டவர் எனினும் திருக்குறள் ஆசிரியர் கருத்தைத் தழுவி உரை வரைய நினைத்துள்ளார்.

கடவுள் வாழ்த்து என்னும் தலைப்பிலேயே கடவுள் கொள்கையை மறுக்காமல் எழுதியுள்ளது அவர்தம் பற்றற்ற, உண்மைகாணும் உள்ளத்தைக் காட்டி நிற்கின்றது.தமக்கு உரை வரையத் தெளிவு கிடைக்காத இடங்களில்’இது இப்போது விளங்கவில்லை’ எனவும் ‘இக்குறளுக்குப் பொருத்தமான உரை கிடைத்தால் வரவேற்கலாம்’ எனவும்(1:8), குறிப்பிடுகிறார்.பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபடும்பொழுது பிறர் உரை பொருந்தாத் தன்மையைக் காட்டுகிறார்(1:6)பரிமேலழகரின் விளக்கம் சிறப்பாக உள்ள இடங்களைப் பாராட்டுகிறார்(1:11).திருக்குறளுக்குத் தன் அனுபவ நிலையிலிருந்து பொற்கோ உரை வரைந்துள்ளாரேயன்றிப் பிற நூல்களிலிருந்து மேற்கோள் காட்டும் வழக்கத்தைக் கைக்கொள்ளவில்லை.அதுபோல் இலக்கணக்குறிப்பு வைத்தல், நயம்பாராட்டல் என்று இல்லாமல் முன்னுரையில் குறித்தாங்கு திருக்குறளை அனைவருக்கும் படிக்கும்படியான நூலாக வழங்கத் தம் உரையைப் பயன்படுத்தியுள்ளார்.

கலைஞர் உரை

பகுத்தறிவுக்கொள்கையும்,கலையுள்ளமும் கொண்ட கலைஞர் குறளோவியம் கண்டவர்.திருக்குறளுக்கு உரையும் வரைந்துள்ளார்.திருவள்ளுவரின் கருத்துகளுக்கு ஒட்டியும் உறழ்ந்தும் கலைஞரின் உரை உள்ளது.அதிகாரத்தலைப்பு மாற்றம் கலைஞர் உரையில் உள்ளது.அதுபோல் வழக்கமான திராவிட இயக்க உணர்வாளர்கள் மாறுபடும் சில இடங்களில் புதிய முறையில் உரைகாண முயன்றுள்ளார்.கடவுள் வாழ்த்தை ‘வழிபாடு’ எனத் தலைப்பாக்குகிறார்.

வாலறிவன் என்பதற்கு அறிவில் மூத்த பெருந்தகையாளன் எனவும் ‘மலர்மிசை ஏகினான்’ மலர்போன்ற மனத்தில் நிறைந்தவன் இறைவன் எனவும்,அந்தணர் என்பதற்குச் ‘சான்றோர்’ எனவும்,தென்புலத்தார் என்பதற்கு வாழ்ந்துமறைந்தோர் எனவும்,புத்தேளிர் என்பதற்கு புதிய உலகம் எனவும்,எழுபிறப்பு என்பதற்கு ஏழேழு தலைமுறை எனவும் குறிப்பிடுகின்றார்.கலைஞர் உரை வரையும்பொழுது எமன்,தெய்வம் குறித்த நம்பிக்கைகளை மனத்தில்கொண்டே உரைவரைந்துள்ளார்.

‘அறத்தாறு…’ எனத்தொடங்கும் திருக்குறளுக்கு உரைவரையும்பொழுது ‘அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள்.தீயவழிக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதிகொள்ளாமல்,துன்பத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள் என்கிறார்.காமத்துப்பாலுக்கு உரை வரையும்பொழுது கற்பனை ததும்பும் பல இடங்களைக் காணமுடிகின்றது.

நிறைவுரை

திருக்குறள் அனைவருக்கும் பொதுவானதாக அமைந்திருந்தாலும் ஒவ்வொருவரும் அதற்குத் தரும் விளக்கங்கள்,பொருள்கொள்ளும் முறைகள் சில இடங்களில் வேறுபாடு கொண்டு விளங்குகின்றன. சமயம் சார்ந்து தரும் விளக்கங்களும்,சமயமறுப்பாளர்கள் தரும் விளக்கங்களும் வேறாக உள்ளன. அவ்வாறு வரையப்பட்ட உரைகளில் அவ்வக்காலச் சமூகச்செல்வாக்கு தெரிகின்றது. தமிழ், திராவிட இயக்க உணர்வாளர்களின் விளக்கங்களை (உரைகளை) உற்றுநோக்கும் பொழுது திருக்குறளின் உண்மைப்பொருள் காணும் முயற்சியில் இவர்கள் ஈடுபட்டுள்ளமை புலனாகின்றது.மேலும் கருத்து அடிப்படையிலும்,கொள்கை அடிப்படையிலும் சில இடங்களில் மட்டும் மாறுபாடுகொண்டு எழுதும் இவர்கள் பெரும்பான்மையான இடங்களில் ஒன்றிச்செல்கின்றனர்.திருக்குறள் ஆராய்ச்சிக்கும்,திருக்குறள் பரவலுக்கும் இவர்களின் உரைகள் பெரிதும் துணைசெய்கின்றன.

பின்னிணைப்பு – 1
தமிழ்,திராவிட இயக்க திருக்குறள் உரை நூல்களுள் சில:
1.புலவர் குழந்தை (1949)
2..கா.அப்பாத்துரை (1950-54)
3.பாவேந்தர் (1956)
4.சி.இலக்குவனார் (1959)
5.சுந்தரசண்முகனார் (1959)
6.பாவாணர் (1969)
7.கு.ச.ஆனந்தன் (1986)
8.இரா.இளங்குமரனார் (1990)
9.வி.பொ.பழனிவேலனார் (1990)
10.வ.சுப.மாணிக்கம் (1991)
11.இரா.நெடுஞ்செழியன் (1991)
12.அரிமதி தென்னகன் (1995)
13.கலைஞர் மு.கருணாநிதி (1996)
14.பெருஞ்சித்திரனார் (1997)
15.தமிழண்ணல் (1999)
16.கல்லாடன் (2000)
17.ஆ.வே.இராமசாமி (2001)
18.ச.வே.சு (2001)
19.பொற்கோ (2004)
20.பா.வளன்அரசு (2005)
21.மா.அர்த்தநாரி (2005)
22.அருளி(இன்பத்துப்பால் மட்டும்) (2006)
23.தமிழமல்லன் (2006)
24.கடவூர் மணிமாறன் (2006)
25.க.ப.அறவாணன் (2007)

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 28.03.2008 இல் பன்முக நோக்கில் திருக்குறள் என்னும் தேசியக்கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் படிக்கப்பெற்ற ஆய்வுரை.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி-605003.இந்தியா

மின்னஞ்சல் : muelangovan@gmail.com
இணையப்பக்கம் : www.muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்

தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1

This entry is part [part not set] of 44 in the series 20080403_Issue

முனைவர் மு.இளங்கோவன்


தமிழர்கள் உலகிற்கு வழங்கிய இலக்கியக் கொடைகளுள் முதன்மையானது திருக்குறள் ஆகும்.இத் திருக்குறள் கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பது பெரும்பான்மையான அறிஞர்களின் கருத்தாக உள்ளது.ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட திருக்குறளை, அதன் கருத்துகளை அறிஞர்கள் பலரும் காலந்தோறும் பலவகையில் பயன்படுத்தியுள்ளனர். சங்கநூல்களிலும், சிலம்பு, மேகலை,கம்பராமாயணம் போன்ற காப்பியங்களிலும் திருக்குறள் கருத்துகள் பரவலாக ஆளப்பட்டுள்ளன. இடைக்காலத்தில் வாழ்ந்த அறிஞர் பெருமக்கள், பழந்தமிழ் நூல்களுக்கு உரைவரைந்த உரையாசிரியப் பெருமக்கள் திருக்குறளுக்கும் உரை கண்டு அந்நூலின் பயன்பாட்டுக்கு அரண்செய்தனர்.இவ்வாறு உரை கண்டவர்கள் தம் சமயம் சார்ந்தும், கொள்கை, இலக்கிய, இலக்கண பயிற்சிகளுக்கு அமையவும் உரை வரைந்துள்ளனர்.இவ்வாறு வரையப்பட்ட உரைகளுள் பரிமேலழகரின் உரை அனைவராலும் போற்றப்படுகிறது. சில உரைப்பகுதிகள் அறிஞர் உலகால் தூற்றப்படுகிறது.
பரிமேலழகர் தம் அஃகி அகன்ற அறிவு முழுவதையும் பயன்படுத்தி உரை கண்டிருப்பினும் அவர்தம் வடமொழிச்சார்பு அவருக்குத் தமிழ் அறிஞர் உலகில் எதிர்ப்பைத் தேடித் தந்தது.சிவப்பிரகாசர் உள்ளிட்ட சமயவாணர்கள் பரிமேலழகரின் உரையைக் கண்டித்துள்ளனர்.வடமொழிக் கருத்துகளை நீக்கிப் பார்க்கும்பொழுது குன்றின்மேல் இட்ட விளக்காக அவர்தம் உரை விளங்கும்.ஒருவகையில் பரிமேலழகரின் உரை கற்றவர்களை மகிழ்ச்சி அடையச்செய்தது போலத் தமிழ்ப் பற்றாளர்களையும்,தமிழகத்தில் தோற்றம் பெற்ற திராவிட இயக்க உணர்வாளர்களையும் தன் பக்கம் இழுத்தது. அவ்வுரைக்கு விளக்கமாகவும், மறுப்பாகவும் உரை வரையவும்,திருக்குறளைத் தங்கள் அறிவுஅடையாளம் காட்டும் நூலாகவும் காட்டும் போக்கைத் தமிழகத்தில் உண்டாக்கியது.இதனால் திருக்குறள் தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்களால் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலும்,பிற்பகுதியிலும் புதுப்புது கருத்துகளை உருவாக்கும் களமானது.அக்கருத்து விளக்க உரைகளை இக்கட்டுரை ஆராய்ந்துள்ளது.

பழந்தமிழ்ப்புலவர்களிடம் இருந்த திருக்குறளை எளிய மக்களும் படிக்கும் வகையில் தெளிவுரை வழங்கியவர் அறிஞர் மு.வரதராசனார் ஆவார்.இவர்தம் திருக்குறள் தெளிவுரை கோடிக்கணக்கில் விற்பனை ஆனமை இங்கு நினைவிற் கொள்ளத்தக்கது.திருக்குறளார் முனிசாமி அவர்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் திருக்குறளை நகைச்சுவையுடன் கொண்டு சேர்த்தவர்.உரை வரைந்தும் பெருமை சேர்த்துள்ளார்.மு.வ அவர்களின் உரை வெளிவந்த காலகட்டத்தில்(1949) தமிழகத்தில் தமிழ்,திராவிட இயக்க உணர்வு மேம்பட்டிருந்தது.தமிழர்கள் தங்களின் இலக்கியப் பரப்பையும்,இலக்கணப் பெருமையையும் பேசும்பொழுது சங்க நூல்கள்,திருக்குறளை அடையாளப்படுத்தினர்.அதிலுலும் திருக்குறளைத் தம் மறையாக நிலைநாட்ட முயன்றனர்.தேசிய இலக்கியமாகவும்,உலக இலக்கியமாகவும் அறிஞர்களால் முன்மொழியப்பட்டது. இக் காலகட்டத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் வழியாகத் திருக்குறள் அயல்நாட்டு அறிஞர்களால் அறியப்பட்டிருந்தது.

இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தமிழகத்தில் அரசியல்,சமூகம், மொழி, இலக்கிய வளர்ச்சிக்குத் தந்தை பெரியார்,அறிஞர் அண்ணா,பெருந்தலைவர் காமராசர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மறைமலையடிகள்,பாவாணர்,பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழறிஞர்களும் பெரும் பங்காற்றியுள்ளனர். தந்தை பெரியாரின் அரசியல், சமூகப் போராட்டங்களால் தமிழக மக்கள் கல்வி,அறிவுநிலைகளில் மேன்மையுறத் தொடங்கினர்.சமூக விழிப்புணர்ச்சியுடன் இலக்கிய,கல்விச்சூழலும் பல நிலைகளில் வளரத் தொடங்கின. காலந்தோறும் உயர் சாதியினரின் கையில் இருந்த இலக்கிய இலக்கண நூல்கள் அனைத்தும் மக்களின் கைக்குக் கிடைத்தன.இதனால் அவரவரும் தத்தம் வாழ்க்கை, அறிவு, கொள்கை வழிப்பட்ட இலக்கியங்களை ஆராய்ந்தனர்.புதுவகை இலக்கண,இலக்கிய உத்திகளை வகுத்தனர்.இதுநாள்வரை கேள்விக்கு உட்படுத்தப்படாமல் இருந்த நூல்கள், கருத்துகள், கொள்கைகள்,விளக்கங்கள் அடித்தட்டு மக்களால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டன.கல்வியறிவு கிடைத்ததுடன் அரசியலில் விடுதலைபெற்று விடுதலையாகத் தங்கள் கருத்துகளை எழுதவும் பேசவும் சூழல் வாய்த்ததால் தங்கள் கருத்துகளை உலகிற்கு வெளிப்படுத்தினர்.

அரசியல்,சமூக மாற்றங்களால் மொழி சார்ந்த இயக்கங்களும்,இனம்சார்ந்த இயக்கங்களும் கட்டமைக்கப்பட்டன. மறைமலையடிகளால் உருவாக்கம்பெற்ற தனித்தமிழ் இயக்கம்(1916 அளவில்)பாவாணர், பெருஞ்சித்திரனார் போன்ற அறிஞர்களைத் தனித்தமிழ்க் காப்பு முயற்சிக்குப் பாடுபடத் தூண்டியது.பாவாணர் தமிழே உலகின் முதன் மொழி எனவும்,மாந்தன் பிறந்தகம் குமரிக்கண்டமே எனவும்,தமிழிலிருந்தே பிறமொழிகள் தோன்றின எனவும் பல்வேறு இன்னல்களுக்கு இடையே தம் ஆராய்ச்சி முடிவுகளை உறுதிப்படுத்தி வெளியிட்டார். ஆரியமொழியால் தமிழ் தமிழர்கள் எவ்வாறு அழிக்கப்பட்டனர் என்பதை வெளியிட்ட பிறகு தமிழகத்தில் இதுநாள் வரை மண்டிக்கிடந்த ஆரிய அடிமை உணர்வு ஆட்டம் காணத் தொடங்கியது.தமிழைப் பிறமொழி கலவாமல் எழுதவும் பேசவும் தொடங்கியதால் தமிழ் பண்டைய வளம்பெறத் தொடங்கியது.

வழக்கிலிருந்த பிற சொற்களைத் தமிழ் அறிஞர்கள் எடுத்துரைக்க அதனைத் திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் மேடைப்பேச்சில்,எழுத்துரைகளில் பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வகையில் தமிழ் இலக்கணநூல்களில் இலக்கியங்களில் ஆரியக் கருத்துகள் அறிஞர்களால் அடையாளம் காணப்பட்டன. இதேபோல் அரசியல் சமூக நிலைகளில் பார்ப்பனர்களின் அதிகாரம்,பதவிப்பெரும்பான்மை இருப்பதைக் கண்டு அரசியல் முனையில் விழிப்புணர்வு ஏற்பட்டது.மொழி அடிப்படையிலும்,அரசியல் அடிப்படையிலும் ஆரியத்தை, அதன் கொள்கைகளை,அடிப்படைக் கட்டமைப்பைக் குலைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது.

தமிழகத் தலைவர்கள் உயர்சாதியினரின் ஆதிக்கம் அரசியல்துறையில் இல்லாமல் செய்தது போல் மொழித்துறையில் வல்ல தமிழறிஞர்களும் திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் தமிழ் இலக்கியம் சார்ந்த விவாதங்களில் ஈடுபட்டனர்.கம்பராமாயணம், பாரதம், பகவத்கீதை, பெரியபுராணம் உள்ளிட்ட நூல்களையும் நூல்களின் கருத்துகளையும் எதிர்த்தனர். மாற்றுக் கருத்துடைய நூல்களைக் கண்டித்த தந்தை பெரியார் திருக்குறள்,சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களைத் தொடக்கத்தில் எதிர்த்தார்.பின்னர் அதில் உள்ள பிற்போக்கான சிலபகுதிகளை மட்டும் கண்டித்துவிட்டு ஏற்கத் தகுந்த கருத்துகளை ஏற்கலாம் எனக் கருத்துச் சொன்னார். திருக்குறள் மாநாடுகள் நடத்தினார்.1948 இல் திருக்குறள் மாநாடு நடத்தி, ஐவர்குழு அமைத்து(நாவலர் பாரதியார்,புலவர் குழந்தை உள்ளிட்டவர்கள்) பகுத்தறிவு நோக்கில் திருக்குறளுக்கு உரைவரைய வேண்டியதையும் இதன் அடிப்படையில் 25 நாள்களில் புலவர் குழந்தை உரை உருவானதையும் இங்கு நினைவிற்கொள்ளவேண்டும்.

தமிழர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒருநூல் திருக்குறள் எனும் போக்கு தமிழகத்தில் உருவானதும் திருக்குறளை மூலமாகவும்,உரையாகவும் பலர் பதிப்பித்தனர். அடக்கவிலையிலும், இலவயமாகவும் திருக்குறள் மக்களுக்கு வழங்கப்பட்டன. உரைகள்,உரைக்கொத்துகள்,ஆராய்ச்சிக் குறிப்புகள்,தெளிவுரை,விளக்கவுரை,பதவுரை,குறிப்புரை எனும் அமைப்பில் திருக்குறள் பல பதிப்புகளைக் கண்டது.ஆங்கிலத்திலும் பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் பரவியது. ஒலிவட்டுகளிலும்,குறுந்தட்டுகளிலும் பதியப் பெற்றுப் பரவின.உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் தங்களின் பிள்ளைகளுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பணியில் முன்னிற்கின்றனர்.

இவ்வாறு அனைவராலும் விரும்பப்படும் நூலாகத் திருக்குறள் மாறியதும் அறிஞர்களின் கடைசி விருப்பம் திருக்குறளுக்கு உரை வரைவது என்னும் கருத்தைத் தமிழகத்தில் உருவாக்கிவிட்டது.சமூகத்தில் தங்கள் பெயர் அனைவருக்கும் அறிமுகமானதும் அவர்கள் செய்யும் முதல் வேலையாகத் திருக்குறள் உரைவரையும் வேலை அமைந்துவிட்டது.திருக்குறளுக்கு எல்லாக் காலத்திலும் விற்பனை உள்ளதால் இதில் அனைவரும் தங்களின் தகுதிகளுக்கு ஏற்பச் செயல்படுகின்றனர்.பாவாணர்,பெருஞ்சித்திரனார் தங்களின் அறிவைப் பயன்படுத்தி இனமீட்புக்கு,மொழி மீட்புக்கு உரைகண்ட நிலைமாறி திருக்குறள்,திருவள்ளுவர் விருதுகளுக்கு இன்றைய உரைவரையும் போக்கையும் தமிழ்ச் சமூகத்தில் காணமுடிகின்றது.

இன்று வெளிவரும் உரைகளைப் பார்க்கும்பொழுது பெரும்பாலான குறட்பாவிற்கு அனைவரும் ஒன்றுபட்ட உரையே கண்டுள்ளனர்(மு.வ.உரையின் மறுபதிப்பாகவே உள்ளன).சில குறட்பாக்களுக்கு மட்டும் உரை காண்பதில் வேறுபடுகின்றனர்.தமிழ்,திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டுள்ள அறிஞர்களின் உரைகளுக்கு இடையிலும் சில தனித்த போக்கினைக் காணமுடிகின்றது.தமிழ் இயக்க உணர்வாளர்கள் கண்டுள்ள உரைகளில் ஆரிய எதிர்ப்பு,மனுமுதலிய கொள்கைகள் எதிர்ப்பு, இவற்றைக் கைக்கொண்ட பரிமேலழகர் எதிர்ப்பு, தமிழ்மரபுகாட்டல் எனும் தன்மைகள் காணப்படுகின்றன.திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் கண்டுள்ள உரைகளில் கடவுள் மறுப்பு, பெண்ணடிமைக் குறிப்புகள், விதி(ஊழ்) மறுப்பு, பார்ப்பன அடையாளம் எதிர்ப்பு உள்ளிட்ட தன்மைகள் காணப்படுகின்றன.

தமிழ்,திராவிட இயக்க உணர்வுடைய அறிஞர்கள் வரைந்துள்ள உரையில் திருவள்ளுவரின் உள்ளம் காட்டும் முயற்சியில் அவர் குறிப்பிடும் இறைவன்,ஊழ் பற்றிய சிந்தனைகளை ஏற்றும் உரை கண்டுள்ள தன்மையைப் பார்க்கமுடிகிறது.பொற்கோ அவர்களின் உரையில் வள்ளுவர் உள்ளத்தை மனத்தில்கொண்டு உரை காணப்பட்டுள்ளது.உரையில் இன்னும் உண்மைப்பொருள் விளங்காத இடங்களைப் பொற்கோ குறிப்பிட்டுச் செல்கின்றார்.இது ஒருவகை உரை வரையும் போக்காக உள்ளது.கலைஞர் உரையில் பகுத்தறிவு கண்கொண்டும், கற்பனைநயம் மிளிரவும் உரை உள்ளது.சில இடங்களில் கலைஞர் திருவள்ளுவர் கருத்துக்கு உடன்பட்டே செல்வதைக் காணமுடிகின்றது.பாவேந்தர் வரைந்த உரை(குயில் இதழில் வள்ளுவர் உள்ளம் என்ற பெயரில் 08.12.1961 -07.02.1961 வரை உரை வரைந்துள்ளார்.83 குறட்பாக்களுக்கு இவர்தம் உரை உள்ளது.)திருக்குறளின் உண்மை வடிவை மாற்றும் வகையில் அவர்தம் தமிழ்ப்பற்று மிகுந்து விடுகின்றது.

திருக்குறளுக்கு உரைகாண வேண்டிய முறைகள்

திருக்குறளின் குறட்பாக்கள் தவிர அதனை இயற்றிய திருவள்ளுவர் பற்றிய மெய்யான சான்றுகள் நமக்குக் குறைவாகவே கிடைக்கின்றன.எனவே நாம் வெளியிடும் கருத்துகளுக்குச் சான்றுகள் இல்லாததால் அறிஞர் உலகம் அவற்றை ஏற்கத் தயங்குகின்றது.எனவே நம் கொள்கை,நம் உணர்வு,நம் விருப்பம் இவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு திருவள்ளுவர் காலச் சமூகத்தையும்,காலப் பழைமையையும் மனதில்கொண்டே உரை வரையவேண்டும்.விளக்கம் தரவேண்டும்.

அறிஞர் இரா.இளங்குமரனார் குறிப்பிடுவது போல் திருக்குறளுக்குத் திருக்குறளிலேயே பல இடங்களிலில் உரை உள்ளதை முதற்கண் மனத்தில் கொள்ளவேண்டும். அவர்காலத்தில் இல்லாத புராணச்செய்திகள் பிற்காலத்தில் எற்பட்டுள்ளன.பிற்காலச் செய்திகளின் அடிப்படையில் முற்கால வரலாற்றைத் திரிக்கக்கூடாது (ஐந்தவித்த இந்திரன் கதை).திருக்குறளில் ஆளப்பட்டுள்ள பல கருத்துகள்,சொற்கள் இன்றைய நிலையில் வைத்துப் பொருள் காணப்படுவதால் பல குழப்பங்களுக்கு வழி வகுக்கின்றன.திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பும்பணியில் திருவள்ளுவர் தவச்சாலை கண்டுள்ள இரா.இளங்குமரனாரின் வாழ்வியலுரையில் திருக்குறளுக்குப் பல இடங்களுக்குப் பொருத்தமான உரை கண்டுள்ளார்.

திருக்குறளுக்கு உரை காணும் அறிஞர்கள் திருக்குறளுக்குப் புது விளக்கம் தருவதுடன் அதிகாரத் தலைப்பு மாற்றம் செய்துள்ளமையும் காண முடிகின்றது.அதிகாரத் தலைப்புகள் தங்கள் கொள்கைகளுக்கு ஒத்துவராததால் மாற்றிய முறையை (கலைஞர். பாவேந்தர்)க்காணும் அதே நிலையில் இளங்குமரனார் இறைவணக்கம் எனத் தலைப்பு இட்டுள்ளதற்குக் காரணம் காட்டுகிறார்.திருக்குறளில் எந்த இடத்தும் கடவுள் என்னும் சொல்வரவில்லை எனவும் வாழ்த்து என்னும் சொல் எவ்விடத்தும் இல்லை எனவும் கூறி இறைவணக்கம் எனப் பெயரிடுகின்றார்.அதுபோலவே புதல்வரைப் பெறுதல்(7) என்னும் அதிகாரத் தலைப்பை மாற்றும்பொழுது இத்தொடர் நூலின் எவ்விடத்தும் இல்லை எனவும் மக்கட்பேறு என உள்ளதையும் குறிப்பிட்டு மக்கட்பேறு எனத் தலைப்பிட்டதைக் குறிப்பிடுகிறார்.

இரா.இளங்குமரனாரின் உரைக் குறிப்புகளில் அரிய விளக்கம் சில உள்ளன.திருக்குறள் குறட்பாவில் வரும் இறை என்னும் சொல் சாதி,மத உணர்வுகளைத் தூண்டும் நோக்குடையது அன்று.மெய்யுணர்தல்,அவா அறுத்தல்,பேரா இயற்கையாம் செம்பொருளைக் கண்டுகொள்ள வழி வகுப்பது அது என விளக்குகிறார்(தந்தை பெரியாரும் இதே கருத்தினர்.காண்க : பெரியார் சிந்தனைகள்,தொகுதி.2,பக்கம்1260-65)

கடவுள் வணக்கத்திலும் உருவ வணக்கம் இல்லை எனவும்,1330 குறட்பாக்களில் ஓர் இடத்தில்கூட கடவுள் என்ற சொல் இல்லை எனவும்,கடவுள் பெயரில் நடைபெற்ற உயிர்க் கொலையைத் திருவள்ளுவர் கண்டிக்கிறார் எனவும் பெரியார் குறிப்பிடுகின்றார் (மேலது). மேலும் அந்தக் காலத்தில் இருந்த மூட எண்ணங்களோடு போராடிய அறிஞர் எனவும் இன்றைய நிலையில் திராவிடர்க்கு ஒழுக்க நூல் குறள்தான் எனவும் பெரியார் குறிப்பிட்டுள்ளார்(மேலது).

இரா.இளங்குமரனார் திருக்குறளில் பொருள் காண அறிஞர்களுக்குக் குழப்பம் ஏற்படுத்தும் சிக்கலான சில இடங்களுக்குத் தெளிந்த பொருள் கிடைக்கச் செய்துள்ளார். அவ்வகையில் பின்வரும் கருத்தினை இளங்குமரனார் முன்வைத்துள்ளார்:

புத்தேளிர் : தமிழகத்திற்குப் புதியதாக வந்தவர்கள்(58)
இந்திரன் : ஐம்புல அடக்கத்திற்குச் சான்றானவன்(25)

காமன்,வேள்வி,தவம்,நோன்பு,அந்தணர்,பார்ப்பான்,மறுமை,எழுமை, இருபிறப்பாளர், வீடு, நிரயம், பேய்,அலகை,ஊழ்,மறை எனும் சொற்கள் யாவும் தமிழ்மரபு சார்ந்து ஆளப்பட்டவை என்கிறார்.திருக்குறளின் துணைகொண்டே இவற்றை விளக்குகின்றார்.

தாமரையினாள்,செய்யாள்,திரு என்பன செல்வம்,நன்மை ஆகியவற்றின் உருவகம் என்கிறார்.முகடி(617),தவ்வை(937) என்பனவும் தொன்மக்கதை வழி பார்க்கும் பெயர்களன்று என்கிறார்.

பாவாணர் உரை

பாவாணர் திருக்குறளை ஆழமாக நேசித்தவர்.குறடபாக்களைத் தம் ஆய்வுகளில் ஆங்காங்கு தக்க வகையில் பயன்படுத்தியுள்ளார்.குறளில் இருந்த பயிற்சி போலவே பரிமேலழகரின் உரையில் நல்ல விருப்பம் கொண்டவர்.பாவாணரின் உயிர்க்கொள்கை தமிழ்,தமிழர். இவற்றிற்கு எதிரான கருத்துகள், ஆரியச் சார்பாக்கித் திருக்குறளைக் காட்டியவற்றைப் பாவாணரால் பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழ் மரபுரை செய்ய வைத்தது.தமிழ் மரபுகாட்டி இவர் செய்துள்ள உரை பரிமேலழகரையும் அவர் தம் ஆரியச் சார்பையும் தக்காங்கு மறுத்துள்ளது.பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்களை உரை வரையத் தூண்டியது பாவாணர் உரை.பாவாணரின் உரை பெரும்பாலும் பரிமேலழகரின் வள்ளுவத்துக்கு மாறான கருத்துகளை மறுக்கும் நோக்கில் எழுதப்பட்டுள்ளது.பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களைப் பாவாணர் திறம்பட எடுத்துக்காட்டி நிறுவியுள்ளார். பரிமேலழகரின் உரை பற்றிப் பாவாணர் கருத்து :

‘பரிமேலழகருரையே தலைசிறந்ததெனவும் எவ்வுரையாலும் வீழ்த்தப்படாததெனவும் பொதுவாகக் கருதப்பட்டு வருகின்றது.அது பெரும்பா£லும் ஏனை யுரைகளெல்லாவற்றினுஞ் சிறந்ததென்பதும்,சில குறள்கட்கு ஏனையுரையாசிரியர் காணமுடியாத உண்மைப் பொருளைப் பரிமேலழகர் நுண்மையாக நோக்கிக் கண்டுள்ளார் என்பதும் உண்மையே.ஆயின் பெறுதற்கரிய அறுசுவை யரசவுண்டியில் ஆங்காங்குக் கடுநஞ்சு கலந்து படைத்துள்ளதொப்ப,உண்மைக்கு மாறானதும்,தமிழுக்கும்,தமிழர்க்குங் கேடு பயப்பதுமான ஆரிய நஞ்சுக் கருத்துகளை,முதலும் இடையும் முடிவுமாக நெடுகலும் குறிக்கோளாகக் கொண்டு புகுத்தியிருப்பது, இவ்வுரையை நடுநிலையுடன் நோக்கும் எவர்க்கும் புலனாகாமற் போகாது.இனி சில குறள்கட்கு முழுத் தவறாகவும்,சில குறள்கட்கு அரைத் தவறாகவும் பொருள் காட்டியுள்ளார்.சில சொற்களை வடசொல்லாகக் காட்டியிருப்பதுடன் சில சொற்கட்குத் தவறான இலக்கண வழுவமைதியுங் கூறியுள்ளார்’.(திருக்குறள் தமிழ் மரபுரை தொகு.1. பக்.18).

பாவாணர் திருக்குறளின்மேல் கொண்ட பற்றின் காரணமாக உரைகண்டார் என்பதை விடப் பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களை எடுத்துரைத்து அடையாளங் காட்டுவதும், பொருத்தமான தமிழ்மரபுகளை முன்வைப்பதும் நோக்கமாகத் தெரிகிறது. பரிமேலழகர் வழுவியுள்ள இடங்களாகப் பாவாணர் குறிப்பிடும் இடங்கள்:

1.ஆரியவழி காட்டல்(குறள் 27,களவியல் முன்னுரை)
2.பொருளிலக்கணத்திரிப்பு( ‘…வடநூலுட் போசராசனும்…களவியல்.)
3.ஆரியவழிப்பொருள் கூறல்(குறள் 43 பிதிரராவர் -படைப்புக்காலத்து அயனாற் படைக்கப் பட்டதோர் கடவுட்சாதி இஃது வேதக்கருத்து)
4.ஆரியக் கருத்தைப் புகுத்தல்(560 குறளுக்குப் ‘பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும்,அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பமென்பன ஓதாமையானும்,வேள்வி நடவாதாம்’ என்பது காண்க)
5.தென்சொல்லை வடசொல் மொழிபெயர்ப்பு எனல்
உழையிருந்தான் எனப்பெயர் கொடுத்தார்,அமாத்தியர் என்னும் வடமொழிப்பெயர்க்கும் பொருண்மை அதுவாகலின்( )
6.தென்சொற்கு வடமொழிப்பொருள் கூறல்
அங்கணம் = முற்றம்
7.சொற்பகுப்புத் தவறு
பெற்றத்தால்- பெற்ற வென்பதனுள் அகரமும்,அதனானென்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி விகாரத்தாற் றொக்கன(524,உரை)
8.சொல் வரலாற்றுத் தவறு
அழுக்காறென்னும் சொல்குறித்த விளக்கம்.
9.சொற்பொருள் தவறு
இனிது =எளிது(103)
10.அதிகாரப்பெயர் மாற்று
மக்கட்பேறு = புதல்வரைப்பெறுதல்
11.சுட்டு மரபறியாமை
அஃதும் = ஏனைத்துறவறமோ வெனின்(குறள். 49)
12.இரு குறளைச் செயற்கையாக இணைத்தல்
குறட்பாக்கள் 631,632

பாவாணரின் உரைச்சிறப்பு

பாவாணர் உரை பரிமேலழகர் வழுவிய இடங்களை எடுத்துக் காட்டியுள்ளதுடன் தமிழ்மரபுக்கு உகந்த வகையிலும் தமிழர்களின் பண்பாட்டை, வரலாற்றை நினைவுகூரும் வகையிலும் பல இடங்களில் உள்ளன.வேர்ச்சொற்கள் பல விளக்கப்பட்டுள்ளன.புதுச்சொற்கள் பல படைக்கப்பட்டுள்ளன. ஊர்வனவற்றை ஊரி எனவும்,ஞானியார் என்பதை ஓதியார் எனவும்ஆடம்பரம் என்பதை ஒட்டோலக்கம் எனவும் யோகம் என்பதை ஓகம் எனவும், பிரமசரியம் என்பதை மாணிகம் எனவும்,வாதி என்பதை உறழி எனவும்,உபாயம் என்பதை ஆம்புடை எனவும்,பாவனை என்பதை உன்னம் எனவும் பாவாணர் ஆண்டுள்ளார். தமிழ்ச் சொற்களைத் தருவதுடன் ‘பரிந்தோம்’ என்பதில் வரும் வேள்வி ஆரியவழியிலான கொலை வேள்வி எனப்பரி. பல இடங்களில் விளக்கம் காணப்,பாவாணரோ வேள்வி என்னும் தூய தென்சொல் விரும்பு என்னும் பொருளில் தமிழ்,மலையாளம்,தெலுங்கு மொழிகளிலும் உள்ளதை எடுத்துக்காட்டுவார்(88).

எழு பிறப்பு என்பதற்கு உரையாசிரியர்கள் ஒவ்வொரு விளக்கம் தரப் பாவாணர் ஏழு என்பது ஒரு நிறைவெண்;ஆதலால் நீண்ட காலத்தைக் குறிப்பது என்கிறார்(62).

பொருத்தமான இடங்களில் பொருத்தமான தமிழ் இலக்கியச் செய்திகளையும் வரலாற்றையும் பாவாணர் உரையில் குறிப்பிட்டுச் செல்கின்றார்.ஒளவையார் தூது சென்றமை (அதி.69),வடநாட்டிற்குச் சேரன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்றபொழுது முப்பத்தி யிரண்டு மாதம் நீங்கியிருந்தும் நாட்டில் குழப்பமின்மைக்குக் காரணம் அவனது அனைத்திந்தியத் தலைமையைச் சுட்டுவது(குறள் 741),ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தன் செங்கோல் தவறியதால் உயிர் நீத்தமை(969),குமணவள்ளல் தன் உயிர் தர அணியமாய் இருந்தமை(குறள்.72)உள்ளிட்ட செய்திகள் இடம்பெற்றுள்ளமை பிற உரையாசிரியர்களிடம் காணப்படாத தன்மையாக உள்ளது.

‘கேட்ட தாய்’ என்னும் தொடருக்கு உரைவரையும்பொழுது பரிமேலழகரின் கருத்தை எடுத்துக்காட்டி,சங்க காலத்தில் வாழ்ந்த ‘ஒளவையார், காக்கைபாடினியார், நச்செள்ளையார், …வெறிபாடிய காமக்கண்ணியார் முதலிய பண்டைப் புலத்தியரை அவரும் அறிந்திருந்தமையால்,அவர் கூற்று நெஞ்சார்ந்த பொய்யுமாம்'(குறள் 69 உரை) என்று எழுதும்பொழுது பாவாணர் பண்டைக்காலத்துப் பெண்பாற்புலவர்களை நினைவுகூர்வார்.

பாவாணர் தம் உரையில் தமிழ் 65,மலையாளம் 1,ஆங்கிலம் 4 என எழுபது பழமொழிகளைப் பயன்படுத்தியுள்ளமையை ஆ.முத்துராமலிங்கம் குறிப்பிடுவர்(2003,ஆ.கோ.3). பாவாணர் உரை வரைந்த பகுதிகளுள் மருந்து என்னும் அதிகாரத்திற்கு வரையும் உரைப்பகுதிகள் அறிஞர் உலகால் என்றும் போற்றப்படும் ஒன்றாக உள்ளது.நோய் வகை, நோய்நீக்கும் வகை,மருந்து வகை,மருந்து அதிகாரம் பெயர்பெற்றமை முதலியவற்றை விளக்கும் பாவாணர் எந்த எந்த உணவுப்பொருள் எந்த எந்த நோயைக் குணப்படுத்தும் என்பதைக் (குறள்.942இல்) குறிப்பிட்டுள்ளார்.திருக்குறளுக்கு உரை வரைந்துள்ள உரையாசிரியர்கள் பலராலும் காட்டமுடியாதபடியான இலக்கண,இலக்கியவழக்கு,மரபு,பிறமொழி சார்ந்த செய்திகள் பாவாணரின் உரையில் மிகுந்து காணப்படுகின்றன.

பாவேந்தர் உரை

‘மதமிலார் நூற்கு மதமுளார் உரைசெயின்
அமைவதாகுமோ? ஆய்தல் வேண்டும்’

என்பார் பாவேந்தர். எனவே மதக் கருத்துகள் நீக்கித் திருக்குறளுக்கு உரைவரையப் பாவேந்தர் திட்டமிட்டுக் குயில் ஏட்டில் உரைவரைந்தார்(08.12.1959-07.02.1961 குயில்,வள்ளுவர் உள்ளம் என்னும் தலைப்பில்).இப்பணி தொடராமல் இடையில் நின்றுவிட்டது. பாவேந்தர் உரையை நோக்கும்பொழுது பரிமேலழகர் வழியை மாதிரியாகக் கொண்டு தமிழ் நெறி என்னும் அடையாளத்துடன் தம் உரையை வரைய முயற்சி செய்துள்ளார்.திருவாரூர் கபிலரால் நூலாக்கம் செய்யப்பெற்ற எண்ணூல் அடிப்படையில் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றியதாகப் பாவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.

பாவேந்தர் அதிகாரத்தலைப்பு மாற்றம் செய்துள்ளமை,புதுப்பொருள் காண முயன்றமை,கடவுள் மறுப்பு,பெண்ணுரிமை பற்றிய தம் கொள்கைகளைத் தம் உரையில் பெய்து பார்த்துள்ளார்.கடவுள் வாழ்த்தை இறைவணக்கம் எனப் பிறர் எழுதப் பாவேந்தர் ‘உலகின் தோற்றம்’ என்று அதிகாரப்பெயர் மாற்றம் செய்கின்றார். பிற தமிழறிஞர்களைப் பின்பற்றிப் புதல்வரைப்பெறுதல் என்பதை மக்கட்பேறு என்கின்றார். எழு பிறப்பு என்பதை ஏழுதலைமுறை என்கிறார்.

‘மலர்மிசை ஏகினான்’ என்பதை விளக்குமிடத்து மலர் என்பதற்கு உலகம் என்னும் பொருள் உள்ளதை எண்ணூல் கருத்தின் துணையுடன் உலகம் என்றே குறிப்பிடுகிறார். (சமணச்சார்பில் எழுந்த உரையான சிறீ சந்திரனாரின் உரையில் ‘மலரின்மேல் நடந்த அருகப்பெருமான்’ என்று குறிப்பார்.பரிமேலழகர் இப்பகுதிக்கு எழுதும்பொழுது’ இதனைப்பூமேல் நடந்தான் என்பதோர் பெயர்பற்றிப் பிறிதோர் கடவுட்கு ஏற்றுவாரும் உளர்’ என்பது பிறிதோர் கடவுள் இங்குச் சமண சமயக்கடவுளாகும்.சிவன் பூமேல் நடந்தவன் என அப்பர் பாடிய ஒருபாடலும்(தேவாரம்- தாளிடைச்செங்கமல…) அவரின் முன்னைய சமணச்சமய சார்பிலானது என்பர் மயிலை.சீனிவேங்கடசாமி(மேற்கோள்) திருக்குறள், வர்த்தமானன் வெளியீடு).

பாவேந்தர் திருக்குறளுக்கு உரைவரைவதன் முன்பு உரைப்பாயிரம் வரைந்துள்ளார்.அவ்வுரைப் பாயிரப்பகுதி வருமாறு: ‘ இனி அகம் புறம் எனும் இரு பொருளும் பற்றிச் செய்யுள் செய்தார் ஆயின் அவற்றால் எய்தும் பயன்கள் எவை எனின் அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கு என்க.இவ்வாறு நூற்பயன் நான்காகக்கொள்வது வடவர்முறை அன்றோ எனின்,அன்று…..’என்று தம் உரைப் பாயிரத்தைத் தொடங்கி எழுதுகின்றார்.முதற்குறட்பாவுக்கு உரை வரையும்பொழுது,’ உலகும்,உயிர்களும் மற்றுமுள் ளவைகளும் ஆதி என்பதின்று தோன்றியவை.ஆயினும் உலகமக்கள் பெறத்தக்க பேறு மெய்யுணர்வு ஒன்றே….

ஆதி வடசொல் அன்று.தூய தமிழ்ச்சொல்லே.அஃது ஆதல் எனப்பொருள்படும் தொழிற்பெயர்.
பகவன் வடசொல் அன்று. பகல் எனப் பொருள்படும். பகவு ஆண்பால் இறுதிநிலை பெற்றது.பகல்-அறிவு’ என்பது பாவேந்தரின் உரை.

பாவேந்தர் உரையை நோக்கும் பொழுது அவர்தம் காலத்தில் அவருக்கு இருந்த கொள்கையீடுபாட்டுடன் அவர் உரை வரைய முனைந்துள்ளமை புலனாகின்றது.அவர் தம் உரை குறித்து எவரேனும் ஐயம் எழுப்பினால் அவர்களுக்கு விடைதரும் வகையில் வினாக்களை அவரே எழுப்பிக்கொண்டு ஆத்திகர் நாத்திகர் உரையாட்டாக அமைத்துத் தம் விளக்கத்தையும் பாவேந்தர் தந்துள்ளார்.’ஆய்விடுமானால் ஆய்விடட்டும்.அதனால் உமக்கென்ன முழுகிப்போகும்? ‘என்று உணர்ச்சிவயப்பட்டு எழுதும் பாவேந்தரைப் பல இடங்களில் காணமுடிகின்றது.


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 28.03.2008 இல் பன்முக நோக்கில் திருக்குறள் என்னும் தேசியக்கருத்தரங்கில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் அறிஞர் இ.சுந்தரமூர்த்தி அவர்கள் தலைமையில் படிக்கப்பெற்ற ஆய்வுரை.

முனைவர் மு.இளங்கோவன்
புதுச்சேரி-605003.இந்தியா

மின்னஞ்சல் : muelangovan@gmail.com
இணையப்பக்கம் : www.muelangovan.blogspot.com

Series Navigation

முனைவர் மு.இளங்கோவன்

முனைவர் மு.இளங்கோவன்