தமிழ் சமூகத்தின் முகச் சித்திரம்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

வெங்கட் சாமிநாதன்


காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. மாறிக்கொண்டும் இருக்கிறது. நேற்றைய தமிழகம் இன்றில்லை. அப்படியிருக்க ஐம்பது வருடங்களுக்கு முந்திய தமிழகத்தை இன்று காணமுடியுமா என்ன? தமிழகமே மாறிக்கொண்டிருக்கும்போது தமிழர்கள்தான் மாறாமல் இருப்பார்களா? இதில் வாதம் செய்ய, வன்மையாக மாறுபட ஏதும் இல்லை என்று தான் தோன்றும்.

நான் எழுத ஆரம்பித்தது 1960-ல். எழுத்துஎன்ற பத்திரிகையில். சி.சு.செல்லப்பா ஏதோ சுதந்திரமாக எழுத இடம் கொடுக்கிறாரே என்று எழுதினேன். அன்று எழுதியதை நான் வேறு எங்கும் சொல்லியிருக்கமுடியாது. எழுதியதும் பதிவானதும் 1960-ல் தானே ஒழிய, எழுதப்பட்டு பதிவான என் பார்வையும் எண்ணங்களும் நான் பதிவு செய்த தமிழ் அனுபவங்களும் பழையவை. 1960-க்கும் முந்தியவை. எவ்வளவு முந்தியவையானால் என்ன? அன்று நான் அப்படிச் சொன்னது தான் என்ன?

அன்று, இலக்கியம், சிந்தனை, ஓவியம், சினிமா, நாடகம், என்று இப்படி பல துறைகளிலும் தமிழகத்தில் காணும் வரட்சியைச் சொல்லி கடைசியாக எழுதினேன்:

“ஒரு கால் மற்றவர்களுடனும், அவர்கள் காலத்தில் தான் வாழ்கிறோம் என்ற நினைப்பை ஊட்ட அவர்களைப் போன்ற வேஷத்தை நாமும் தரிக்கலாம். ஆனால் மற்றவர்களுக்கு அளிக்க நம்மிடம் ஏதும் இல்லை. உலகத்திற்கு நமது என்று அளிக்க நாம் ஏதாவது படைக்கப் போகிறோமா? நமது பொருளாதார நிலையை நாம் உயர்த்திக்கொள்ளலாம். ஒரு பலம் வாய்ந்த சமுதாயமாக நாம் ஆகலாம். ஆனால், கலை உணர்வு கொண்ட சமுதாயமாக, புதிய சிந்தனைப் பாதைகளைத் தோற்றுவிக்கும் சமுதாயமாக நாம் என்றுமே வாழப்போகிறோமா? இக்குணங்கள் நம்மிடம் என்றோ அழிந்து விட்டன.”

(எழுத்து: ஜூலை- ஆகஸ்ட், 1960) பாலையும் வாழையும்: பக்கம் 38-39)

47 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த பயங்கர ஆருடம் இன்று எழுதியது போல் நம்மை முறைத்துப் பார்க்கும் நிதர்சனமாக இருப்பது நமக்கு சந்தோஷம் அளிக்கும் விஷயம் இல்லை. எனக்கும் சந்தோஷம் தரவில்லை தான். 40 வருடங்களுக்கு மேல் ஓடி விட்டன. நிச்சயமாக அன்றைய தமிழகம் இல்லை இன்று. பார்க்கும் போது கண்களுக்கு எவ்வளவோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழ் நாட்டின் மொத்த வருமானம் அதிகரித்துள்ளது. தொழில் நுட்ப வளர்ச்சியும் பெருகியுள்ளது. ஆனால் இயற்கை வளங்கள் அத்தனையும் என்னவோ பெருமளவு சுரண்டப்பட்டு வந்துள்ளது. வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆற்று மணல் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. நீர் நிலைகள் வெகு வேகமாக அழிந்து காரைக் கட்டிடங்களாகி வருகின்றன. இவையெல்லாம் ஈடு செய்யப்படாத இழப்புகள். இயற்கையின் நாசம் இந்த சுரண்டல். இந்த சுரண்டல் தொடரவும் செய்கிறது. இனி எவ்வளவு காலம் இந்த சுரண்டல் நீடிக்குமோ தெரியாது. ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணும் அரசு ஏழைகளைச் சுரண்டுகிறது. படித்தவர்களில் தமிழ் பேசுவோரைக் காண்பது அரிதாகி வருகிறது. 47 வருட மாற்றங்கள் தான் இவை. மாற்றங்கள் மாற்றங்கள் தான். செல்வத்தில் கொழிக்கும் தமிழர்கள், தமிழர் நிறுவனங்கள், செல்வம் ஈட்டித் தரும் அரசியல் எல்லாம் மாற்றங்கள் தான். ஆனால் நான் இந்த பொருள் வளத்தையும் தொழில் வளர்ச்சியையும் அன்றும் மறுக்கவில்லை. இன்றும் மறுக்கவில்லை. இந்த மாற்றங்கள், இந்த வளர்ச்சி, உழைப்பைப் பொறுத்தது. கல்வியைப் பொறுத்தது. ஆனால் ஒரு நுண்ணிய தளத்தில் தமிழன் மாறவில்லை என்பது மட்டுமல்ல. இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். அல்லது தன்னைத் தள்ளிக்கொண்டுள்ளான். கல்வி கற்ற தமிழன், சமூகத்தின் தன்னை உயர்த்திக் கொண்ட தமிழன், செல்வத்தில் வளம் பெற்றுள்ள தமிழன், அதிகார பலம் கொண்டுள்ள தமிழன் தன் உள்ளார்ந்த ஆளுமையில், தன் ஆழ்ந்த உணர்வுகளில் ஒரு பாமரனாகத்தான், மூர்க்கனாத்தான் மாறியிருக்கிறான்.

அரசியலும் சினிமாவும் தமிழ் வாழ்க்கையை அசுரத்தனமாக ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. அரசியலும் சினிமாவும் பிரிக்கமுடியாது பிரிந்துள்ள ஆனால் ஒட்டிக்கொண்டு வாழும் இரட்டைப்பிறவிகள். இன்றைய அரசியல் சினிமாத்தனமாக மாறியுள்ளது. தமிழ் சினிமாவின் பகட்டும் ஆடம்பரமும், உள்ளீடற்ற வெறுமையும் அரசியலாகியுள்ளது. இன்றைய சினிமாவோ, தான் வளர்த்துள்ள அரசியலையே லட்சியமாகக் கொண்டு தானும் வளர்கிறது. இரண்டிற்கும் தமிழ் நாடும் தமிழ் மக்களும் தான் இரை.

ஒரு காலத்தில் சினிமாக்காரர்கள் கூத்தாடிகள் என சமூகத்தால் பழிக்கப்பட்டனர். அந்தக் கூத்தாடிகள் தமிழுக்குத் தந்தவற்றில் நாம் கலையைக் காணமுடியும். இன்றும் தான். இன்று யாரும் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் யாருமே கலைஞர்களாகத் தான் கொண்டாடப்படுகிறார்கள். கூத்தாடிகள் என்ற பெயர்தான் போயிற்று. ஆனால் இவர்கள்தான் உண்மையில் கூத்தாடிகள். இருப்பினும் தமிழ் சமூகத்தையே ஆட்டிவைக்கின்றனர். அரசியல் வாதிகள் அவர்கள் தயவை நாடுகின்றனர். அத்தகைய அவர்களது இன்றைய நிலையில் தான் அவர்கள் கலைஞர்களாக இல்லை.. ஒரு காலத்தில் சின்ன ஊர்களில், விழாக்காலங்களில், சந்தைகளில், பொருட்காட்சி மைதானத்தில், ரெக்கார்டு டான்ஸ் என்ற ஒரு ஆபாசம் அங்கம் பெற்றிருந்தது. அதைப் பார்த்துக் குதூகலிக்கும் ஒரு பாமர ஆசை சமூகத்தில் ஒரு சிலருக்கு இருக்கும். ஆனால் சொல்ல வெட்கப்படுவார்கள். இருட்டில் கூட்டத்தில் சென்று பார்ப்பார்கள். அங்கு தெரிந்தவர்கள் இருந்துவிட்டால் ஒரு அசட்டு இளிப்பு இருவர் முகத்திலும் வெளிப்படும். ஆனால் அந்த ரிகார்ட் டான்ஸ் இன்று சினிமாவில், ஒரு படத்திற்கு வெற்றி தரும் விஷயமாகிவிட்டது. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் தினமும் இரண்டு மூன்று முறை இந்த ரெகார்டு டான்ஸ் பல வேறு பெயர்களில், இடம்பெறும். அரசியல் தலைவர்கள் பாராட்டு விழாக்களில், இந்த ரெகார்டு டான்ஸ் கலைஞர்கள் மணிக்கணக்கில் அரசியல் தலைவர்களை மகிழ்விக்கிறார்கள். பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் இவற்றை மிகுந்த முகக் களிப்போடு கண்கொட்டாது பார்த்து மகிழ்கின்றனர். ‘ஆபாசம் அவரவர் பார்வையில் தான்’ என்று இது நியாயப் படுத்தப்படுகிறது. கலையாகப் பார்க்கும் கண்கள் கலைக் கண்கள் தான். அக்கண்களுக்கு இவை கலை தான். 40-50 வருடங்களுக்கு முன் ரகசியமாக இருட்டில் ஒரு பாமரன் கண்டு களித்தது, இன்று நாட்டின் தலைவர்களே கண்டு மகிழும் கலையாகியுள்ளது. 50 வருடங்களுக்கு முன் ஒரு அரசியல் தலைவருக்கு முன் இது நடந்திருக்கும் என நினைத்தும் பார்க்க முடியாது.

மகாத்மா காந்தியின் நினைவு தினத் தன்று இரண்டு நிமிடங்கள் எல்லாம் ஸ்தம்பித்து நின்றன. சாலை போக்குவரத்து கூடத் தான். போக்கு வரத்து காவலர் இதை நினைவூட்டு அட்டையைக் காட்டி போக்கு வரத்தை நிறுத்தியிருந்த புகைப்படத்தை பத்திரிகையில் பார்த்தேன். மெரீனா கடற்கரையில் வாகனங்கள் நின்று கொண்டிருக்கின்றன. புகைப்படத்தில் அவர்கள் முன் பளபளவென தங்கபூச்சு ஜொலிக்க நின்றிருப்பது சிவாஜி கணேசன் சிலை. எங்கோ தூரத்தில் புகைப்படத்தின் மூலையில் காணப்பட்டது மகாத்மாவின் சிலை. சலனமற்று நின்ற வண்டிகளும் மனிதர்களும் மரியாதை செலுத்தியது என்னவோ மகாத்மாவின் பெயரைச் சொல்லித்தான். ஆனால் அம்மரியாதையைப் பெற்றது அவர்களுக்கு எதிரே நின்ற சிவாஜி சிலையாகத்தான் அப்புகைப்படத்தில் தெரிந்தது. பழைய பாண்டங்கள் நம் வீட்டில் பத்திரமாக இருக்கும் தான். ஆனால் அவை இடம் பெற்றிருப்பது பரணில். மகாத்மா இன்னும் அங்கே மரீனாவில் தான் இருக்கிறார். ஆனால் தோற்றத்தில் ஒரு மூலையில்.

நான் ஏதோ இல்லாததைக் கற்பித்துக்கொள்வதாக நினைக்க வேண்டாம். சில நாட்கள் முன், ஒரு தொலைக் காட்சியில் ஒரு காட்சி. இந்த நாட்டின் பிரதம மந்திரி மேடையில் நின்று கொண்டிருக்கிறார். காட்சி நடத்துபவர் பேசிக்கொண்டிருப்பது, கொண்டாடுவது ரஜனி காந்தை. ரஜனி காந்திடம் தொலைக்காட்சி முதலாளி பேசி, பின்னர் குழுமியிருக்கும் சினிமா நடிகர்கள் கேள்விகள் கேட்டு சிரித்து மகிழ்கிறார்கள். பிரதம மந்திரி அலட்சியப்படுத்தப்பட்ட மனிதராக இவற்றையெல்லாம் பார்த்து நின்று கொண்டே யிருக்கிறார். எந்த நாட்டில் ஒரு பிரதம மந்திரி இப்படி அவமானப் படுத்தப் படுவார் என்று யோசிக்கிறேன். யாரும் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகத் தெரியவில்லை. சினிமாவும், அதில் தன் வாழ்வைக் காணும் தொலைக்காட்சியும் தான் இங்கு கதாநாயகர்கள்.

இப்படித்தான் எல்லாமே இடம் மாறியுள்ளன. நான் அன்று நினைக்காதவாறு ஒவியமும் சிற்பமும் இங்கு இந்த ஐம்பது ஆண்டுகளில் துளிர் விட்டுள்ளன. அதிகாரங்களும், அரசியலும் அதை அலட்சியம் செய்ததால். சங்கீதம் அதன் மரபின் தொன்மை, செழுமை காரணமாக, மரபாகவே ஜீவித்து வருகிறது. இலக்கியத்தில் மாறுதல்கள் நிகழ்ந்துள்ளன. இது காறும் பேசப்படாத வாழ்க்கைகளும் மனிதர்களும், அவர்கள் மொழியும் இலக்கியத்துள் வந்துள்ளன. ஆனால் கவிஞர்களும் எழுத்தாளர்களும் அதிகார பீடங்களுக்கும் சினிமாக் கவர்ச்சிக்கும் தம்மை இழப்பதை விரும்புகிறார்கள். இழக்கமாட்டோமா என்று ஏங்குகிறார்கள். இழந்தவர்கள் பெருமிதம் கொள்கிறர்கள். கலைஞர்கள் அரசுக்கு விரும்பி அடைப்பக்காரராவது தமிழ் நாட்டில் தான் சாத்தியம்.

கலைஞனுக்கும் எழுத்தாளனுக்கும் வேண்டிய சுயகௌரவம், அகங்காரம், அற்றவர்களாகவே இருப்பது இவர்களுக்குப் பிடிக்கிறது. ‘நானும் பிழைக்க வேண்டாமா?” என்ற கேள்வி எல்லாவற்றுக்கும் பதில் அளித்துவிடுவதாக நினைக்கிறார்கள். பொதுவாகப் பார்க்கும் போது கவிஞனின், எழுத்தாளனின் க்ஷ£ணம் இன்றைய தமிழ் நாட்டில் மிகப் பரிதாபமானது. அவன் தன் ஆளுமையை சினிமாவுக்கும், அரசியலுக்கும் இழந்து நிற்கிறான். கலைஞனின் இடம் தேடி, தான் சென்று, அதிகாரம் சென்று அவனைக் கௌரவிக்க வேண்டும். இன்று கலைஞன் அதிகார பீடம் நோக்கிச் சென்று தலை வணங்கி ஆசி பெற்று வருகிறான்.

“உன்னை நம்பியா நான் தமிழை ஓதினேன்?” என்று 12-ம் நூற்றாண்டில் ஒரு தமிழ்க் கவி, கம்பன் செறுக்குடன் அரசனுக்கு பதிலிறுத்தான். கௌரவத்துடன் பிழைக்க இங்கு என்ன வழியுண்டு? என்று போன நூற்றாண்டு நாற்பதுகளில் ஒரு புதுமைப் பித்தன் கேட்டான். “எனக்கு விருது வழங்கும் உன் தகுதி என்ன?” என்று ஒரு விலாயத் அலி கான் தான் கேட்க முடிந்திருக்கிறது. தமிழ் நாட்டில் எல்லா சினிமாக் காரர்களும் ‘சார்’ தான்.

உலகிற்கு தமிழ் நாடு தந்தது என்ன? தனது என்று கர்வம் கொள்வது என்ன? தமிழ் நாட்டின் தகவல் தொழில் நுட்ப பொறியாளர்கள் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று தம் இருப்பை ஸ்தாபித்துள்ளார்கள். அவர்கள் மட்டுமல்ல டாக்டர்கள் உண்டு. மற்ற பல்வேறு துறையினரும் உண்டு. அவர்கள் வேலை தேடிச்சென்றவர்கள். அல்லது வேலை தேடிப் பிழைக்க விரட்டப்பட்டவர்கள். இருப்பினும் அவர்கள் அவ்வத் துறை வல்லுனர்களாக தமக்குப் பெருமை தேடிக்கொண்டவர்கள். நிறையப் படித்தவர்கள். அவர்களுக்குக் கிடைப்பது சன் டிவி. சன் டிவி தான் கிடைக்கிறது என்பதனால் அதைச் சொன்னேன் ஆனால் தமிழ் தொலைக்காட்சிகள் எல்லாமே ஒரே பாமர ரகம் தான். அதை சகித்துக்கொள்ள ஒரு உணர்வு மரத்த நிலை இருந்தால் தான் சாத்தியம். அதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களில் பலரை தமிழ் மணம் போன்ற வலைப் பதிவு திரட்டிகளில் இணையங்களில், அவரவர் தனித்த வலைப் பதிவுகளில், அவர்களது பின்னூட்டங்களில், பார்க்கலாம். இவ்வளவு படித்தவர்கள் எப்படி இப்படி ஒரு மூர்க்கத்தனமாக, பாஸிஸ மனத்தினராக இருக்கிறார்கள், அயல் மண்ணிலும், தம் சொந்த மண்ணின் துவேஷங்களை, அழுக்குகளை அங்கும் ஏன் சுமந்து செல்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கும். டை கட்டிய, டாலரும் யூரோவும் சம்பாதிக்கும் மூர்க்க மனங்கள், பாமரர்கள். சற்றுக் கூட நுண்ணிய உணர்வு என்பதே அறியாதவர்கள். இவர்கள் ஒரு அபூர்வ கலைவை. B.Tech. M.Tech பட்டம், டாலர்/யூரோ சம்பாத்தியம், பென்ஸ் கார், ஆனால் நம்மூர் பேட்டை ரவுடி பேச்சும் எழுத்தும், கே. வீரமணி சிந்தனைகள், ரஜனி கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்யும் ரசனை, இவை எல்லாம் ஒரே இடத்தில் சங்கமிக்கும் ஒரு அபூர்வ கலவை.! எப்படி சாத்தியம் ஆயிற்று? நான் 1960-ல் சொன்ன வார்த்தைகளை நினைவுப் படுத்திக் கொள்ளலாம். செல்வமும் கல்வியும் பொருள் வளம் தான் தரும். கலை உணர்வை, சிந்தனை வளத்தைத் தந்து விடாது மனித உன்னதத்தைத் தந்து விடாது.

காரணம், ஒரு சமூகம் முழுமையின் ஆரோக்கிய கலை பிரக்ஞையையும் வளத்தையும் பொறுத்தது, அதன் வழி செழுமை பெறும் கலை இலக்கியத்துறை வளங்கள்.

அவ்வப்போது நான் எதிர்கொண்டவற்றை, நான் உணர்ந்த வாறு எழுதியுள்ளேன். இவற்றில் எனக்கு மகிழ்ச்சி தந்தவையும் உண்டு தான். ஏன் இப்படி? என்று கேள்வி எழுப்பியவையும் உண்டு. அம்மகிழ்வுகளையும் கேள்விகளையும் பின் வரும் பக்கங்களில் காணலாம். யாரையும் மகிழ்விக்கவேண்டும் என்ற முன் தீர்மானங்கள் இல்லை. யாரையும் வருத்தும் முன் தீர்மானங்களும் இல்லை. இவை என்னைப் பற்றிய உண்மையையும், நான் எதிர்கொண்டவற்றைப் பற்றிய உண்மையையும், சொல்லும். என்னளவுக்கு இவை உண்மைகள். அதிகாரம் காரணமாக, செல்வாக்கு காரணமாக, ஸ்தாபனம் பெற்றுவிட்டதன் காரணமாக, என் மனதுக்குப் பட்டதைச் சொல்வதற்கு நான் தயங்கியதில்லை. இத்தகைய எதிர்வினைகள் தமிழ் சமூகத்தில் நடைமுறையாக, மரபாக ஆகியிருக்கவேண்டும். ஆக வில்லை. ஆவதில் பலருக்கு இழப்புகள் உண்டு.


எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்டுள்ள தமிழகக் கலைகளின் இன்றைய முகங்கள் : புத்தகதிற்கான முன்னுரை

வெங்கட் சாமிநாதன்/1.2.08


Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்