தமிழவன் கவிதைகள்-ஐந்து

This entry is part [part not set] of 52 in the series 20040513_Issue

தமிழவன்


பூ விற்பவன்
சிரித்தபடி விற்கிறான்
சட்டையின்றி
தோல்சுருங்கிய வெயில் உடம்புடன்.

மங்கிய நினைவில் கலவரம்.
வயல்வரப்பில் இருவரை வெட்டினர்.
செந்நீரில் ஓடும் கால்வாய் நீர்.
ஒருவேளை மூவரோ அது.

கிணற்றோரம் இளைஞன் கிடந்தான்
கைகள் துண்டுபட.

மலையிலிருந்து காற்று வந்தது.
புளியமரம் நிறைந்த ஊர் அது.

நாற்பதாண்டுகளைத் தாண்டி
நினைவு.

ஒருபிணம் மீதுமட்டும் மஞ்சள் கொன்றை
நிழல் ஆடும் அவன் உயிர்த்தது போல.

பூவிற்பவன் ஓரமாய்
சந்தடிக்கு ஒதுங்கி
அன்றும் மறக்காமல்
பூவிற்கிறான்.
—-
carlossa253@hotmail.com

Series Navigation