தமிழர்களின் அணு அறிவு (தொடர்ச்சி)

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

புதுவை ஞானம்


சோதிடம் மிக நுட்பமான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது எனவும், பதார்த்தசாரம் என்ற சமண நூல் Pre Biotric Evolution பற்றி பேசுகிறது எனவும் கடந்த கட்டுரையை முடித்திருந்தேன் அல்லவா. அதில் பயன்படுத்தி இருந்த வார்த்தைகள் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அவர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். நம்புவதும் நம்பாததும் சொந்த விஷயம். யாரும் யார் மனதையும் புண்படுத்த உரிமை இல்லை. ஆர்வக்கோளாறு ஆச்சர்யத்தால் ஏற்பட்ட இனம் புரியாத கிளர்ச்சி இவற்றின் வெளிப்பாடுகள் அந்த வார்த்தைகள். சோதிடம் பார்த்து பலன் சொல்லியும் அந்தப் பிராயச்சித்தம் இந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று பணம் பறிக்கும் சோதிடம் அல்ல நான் சொன்னது. அப்படிப்பட்ட சோதிடர்களுக்கு நான் குறிப்பிடும் கணக்குகள் எதுவும் தெரியாது. Ready Reckoner போல் எழுதிப்பதிக்கப்பட்டுள்ள பஞ்சாங்கத்தைப் பயன்படுத்தி வயிறு வளர்ப்பவர்கள் அவர்கள்காலம் சக்கரம் போல சுழல்வதாக மூதாதையர்கள் நம்பினர். தமிழர்களுக்கு 60 வருடங்கள் சீனர்களுக்கு 64 வருடங்கள் கொண்டது ஒரு சக்கரம். மீண்டும் கிரகங்கள் தொட்டதிலிருந்து தொடங்கும் Time is not Linear but cyclic என்பது இவர்கள் நம்பிக்கை. (விவரங்களுக்கு Time As A METAPHOR OF HISTORY என்ற ROMILA THAPAR ன் நூலைப் படிக்கவும்) கிரகங்களின் தூரம், வேகம், கணபரிமானம் இவற்றுக்குள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் விசைகள் இவையெல்லாம் கணக்கிடப்பட்டு 360 – பாகைக்குள் இந்த 60/64 ஆண்டு சுழற்சி அடக்கப்படுவது பஞ்சாங்கம். இதம் அருமை பெருமை வானவியல் தெரிந்த அறிவியலாளருக்கு விளங்கும். இதுபற்றி ஏராளமான அறிவியல் மற்றும் ஆன்மீகம் தொடர்பான விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ள MADAM BLAVATSYன் SECRET DOCTRINE படிக்கலாம். இதற்கும் தமிழர்களாகிய நாம் நம்பும் கடவுள் – பின்பற்றும் சமயம் இவற்றுக்கும் எள்ளளவு தொடர்பும் இல்லை. கடவுளை ஏற்றுக்கொள்ளாத சமணர்கள் தான் இந்த நுண்ணிய கணக்குகளை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பது எளியவனான எனக்கு தோன்றுகிறது. பல நிகண்டுகள், கணித அறிவியல் படைப்புகள் இவர்களுடையது. அதனால் தான் அவை அழிக்கப்பட்டிருக்கின்றன எனவும் நான் கருதுகிறேன். இது தவறாகவும் இருக்கலாம் என்ற போதிலும் இதுவரை நான் தேடியதில் சமண இலக்கியங்களில் தான் நுண்கணித அளவைகள் என் கண்ணில் பட்டுள்ளன. Institute of Asian studies வெளியிட்டுள்ள Treatise on Mathematics என்ற நூலில் 17வது பக்கத்தில் ‘In the tamil system the lowest fraction is ‘immi ‘ which is equal to 1/1075200. Another question arises even though such units were taught in pail school (pail -தடுக்கு/பாய்) என்பதால் இது திண்ணைப் பள்ளிக்கூடத்தைக் குறிக்கிறது)( அரபி மதரசாவில் படிக்கும் பிள்ளைகள் கையில் ஒரு சிறிய பாய் எடுத்துப் போவதை இன்றும் காணலாம்) to what possible use such fraction as belonging to the field of theoritical Mathamatics as distinguished from the applied one ‘ என வினாத் தொடுக்கிறது.

ஏன் இந்த வினாவைத் தொடர்ந்து தேடவில்லை. தேடினால் கிடைத்திருக்கும் அல்லவா என்பது என் கேள்வி. என்ன துரதிருஷ்டம் என்றால் இந்த நூலை மொழி பெயர்த்தவருக்கு எழுத்தறிவு உள்ளதே தவிர எண் அறிவு அதாவது கணித ஆறிவு இல்லை என்பதுதான். ஆர்வமுள்ள வாசகர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட GEORGE G.JOSEPH புத்தகத்தில் JAIN MATHEMATICS என்ற அத்தியாயத்தையும், பதார்த்த சாரத்தையும் படிக்கலாம்.

‘வேயுறு தோளியங்கன் விடமுண்ட கண்டன்

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடிமேலணிந்தென்

உளமே புகுந்தவதனால்

ஞாயிறு, திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி

சனி பாம்பிரண்டு முடனே

ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல

அடியாவர்க்கு மிகவே ‘

–என்ற ஞான சம்பந்தரின் கோளறு பதிகப் பாடல் அக்காலத்தில் தமிழ் மக்களிடையே சோதிடப்பற்று மிகுந்து இருந்ததையும் கிரகங்கள் பற்றிய அச்சம் இருந்ததையும், சிவனடியார்களை அவை ஒன்றும் கெடுதல் செய்யாது என மக்களை தேற்ற வேண்டிய கட்டாயம் இருந்தது என்று வைத்துக் கொள்வோமானால் JAIN மற்றும் BUDDHIST COSMOLOGY பற்றிய ஒரு ஆழமான ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயம் எழுகிறது. இது ஒரு புறம் இருக்க;

‘தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற ஓங்கி வளம்பெற வளரினும்

ஒருவர்க்கிருக்க நிழலாகாதே.

தெள்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்கயத்து சிறுமீன் சினையினும்

நுண்ணிதே ஆயினும் அன்னல் யானை

அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னர்க்கிருக்க நிழலாகும்மே ‘

(நறுந்தொகை – வெற்றிவேற்கை

–அதிவீர பாண்டியன்)

–என்ற பாடலைப் எழுதியவன் சமணன் ஆக இருக்கக் கூடுமோ என்ற ஐயம் எனக்கு எழுகிறது. தமிழறிஞர்கள் பதில் அளிக்க வேண்டும். தமிழரின் அணு அறிவு பற்றித் தேடுகையில் கிடைத்த இப்பாடல் நாட்குறிப்பில் எங்கோ ஒளிந்து கொண்டு இப்போதுதான் கிடைத்தது. மேம்போக்காகப் பார்த்தால் என் போன்ற பனங்கொட்டைத் தலையர்களுக்கு அதாவது பரட்டைத் தலையர்களுக்கு என்ன தோன்றும் என்றால் பனங்கொட்டை பெரியது அதில் முளைத்தெழும் பனைமரம் நீண்டுயர்ந்து வளர்ந்தாலும் ஒருவர் நிற்க நிழல்தர முடியாது. மீன் முட்டையைவிட சிறியதான ஆலம்பழத்தின் மிகச்சிறிய விதையிலிருந்து வளரும் ஆலமரம் பெரிதாக நிழல் பரப்பும். மன்னன் ரத கஜ துரக பதாதி என்னும் நால்வகைப் படையுடன் அதன் கீழ் இளைப்பாற முடியும் என்பது மட்டும் தான். ஆனால் ரொமீலா தாப்பர் தனது Interpreting Early India என்ற புத்தகத்தில் 47ம் பக்கத்தில் இதே விஷயத்தைக் குறிப்பிடுகிறார். அவருக்கு நம்ம ஊரு பாட்டுக்காரன் அதிவீர ராம பாண்டியன் எழுதியது தெரிந்திருக்கவும் வாய்ப்பு இல்லை.

ஒரு குருநாதரிடம் சீடன் கேட்டானாம் ‘ஐயா அணுவைப் பிளக்க முடியாது என்கிறீர்களே அப்படிப் பிளந்தால் என்ன ஆகும் ? ‘ என்று. குரு சொன்னாராம் ‘ஓடிப்போய் ஒரு ஆலம் விதை கொண்டு வா ‘ என. சீடன் அப்படியே செய்ய ‘தம்பீ இந்த சின்னஞ்சிறு விதையிலிருந்து தானே இவ்வளவு பெரிய ஆலமரம் வந்தது ? அப்படிப்பட்ட பெரிய விளைவுகள் ஏற்படும் ‘ என்று குரு சொன்னாராம். இது பிரகதாரண்ய உபநிடத்தில் வருகிறதாம். ஆக அணுவைப் பிளக்க முடியும் என்பது தமிழ்ப் பாண்டியனுக்கும் வடமொழி உபநிடத முனிவருக்கும் தெரிந்திருக்கிறது என்று கொள்ளலாம் அல்லவா ? அவர்கள் ஏன் ATOMIC REACTOR – ATOMIC BOMB செய்யவில்லை என்று கேட்டால் அதற்கான தேவை அவர்களுக்கு இல்லை அவர்கள் இயற்கையைச் சார்ந்து வாழ்ந்து வந்தவர்கள் இயற்கையை எதிர்த்து வெல்ல வேண்டிய தேவை இல்லை அவ்வளவு தான். பிறகு இந்த EARLY ATOMISTகளின் அறிவைக் கடன் வாங்கி MODERN ATOMISTகள் என்ன செய்தார்கள் என்பதனை ஆர்வமுள்ளவர்கள் MADAM BLAVATSY ன் SECRET OF DOCTORINE ல் படிக்கலாம். பூரணலிங்கம் பிள்ளை சக்கரவர்த்தி நயினார், பரிதிமாற்கலைஞர் போன்று ஆங்கில அறிவும் கூடவே இருந்தால் தமிழ்ப் பேராசிரியர்களும் களத்தில் குதிக்கலாம். இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.

சமணர்கள் கடவுள் மறுப்பாளர்கள். உலகம் தன்போக்கில் இயங்குகிறது அதற்கு ஒரு கடவுள் தேவையில்லை என்று சொன்னதால் தாம் சொன்னதை தர்க்க ரீதியாக வாதிட்டதுதான் பதார்த்தசாரம் என்ற நூல். நற்காட்சிக்குக் குற்றமாகும் மூடங்கள் என்று உலகமூடம், தேவமூடம், பாஷாண்டிமூடம் என இவர்கள் சாடுவதைப் பார்த்தால் ஏதோ தந்தை பெரியார் இவர்களிடம் தானம் வாங்கியதாகத் தோன்றுகிறது. – தேவதைகளை வணங்குதல் பயனற்றது – பதார்த்தசாரம் பக்கம் 603 (ESSENCE OF MATTER)

அப்படிப்பட்ட கடவுள் மறுப்பாளர்கள், துகள்களால் ஆன அணு, அணுக்களின் திரட்சியான மூலகங்கள், மூலகங்களின் சேர்க்கையான கூட்டுப் பொருள், இவற்றில் கூடுவதும் பிரிவதுமான செய்கை இவற்றின் நிறம், குணம், அளவுகள் இவற்றால் ஏற்படும் உயிரின் தோற்றம் அவற்றின்பரிணாம வளர்ச்சி பற்றியெல்லாம் பேசுகின்றன. இந்த நூலிலும் சரி (இது சரஸ்வதி மகால் வெளியிட்டது)தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட நீலகேசியிலும் சரி, நான் ஏற்கனவே குறிப்பிட்ட மயமதத்திலும் சரி, பயன்படுத்தப்பட்டுள்ள உரைநடை வடமொழி கலந்த மணிப்பிரவாளம் அல்ல. நரசிம்ஹப்பிரியா என LIFCOவின் மாத இதழ்களை படிக்க முடிந்தவர்களால் இந்த நூல்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியுமோ என்பதும் தெரியவில்லை. இது சமண பெளத்தர்கள் பயன்படுத்திய பிராகிருதம் கலந்த, ‘அர்த்தமாகதி ‘ என ரொமிலா தாப்பர் குறிப்பிடும் பழைய மொழி எனவும், இந்த மொழி நடை மீது சைவர்களுக்கு எரிச்சல் ஏற்பட்டது நியாயமே எனவும் கூடத் தோன்றுகிறது. ஆக மறைமலை அடிகள் போன்ற தனித்தமிழ்வாதிகளின் போராட்டம் சமணர் காலத்திலேயே தொடங்கிவிட்டதாகவும் கருதலாம்.

இதுஒருபுறமிருக்க அணுவாதத்தில் நம்பிக்கை கொண்ட இவர்கள் இந்தப் பிரபஞ்சம்/ அண்டகோளம் முழுவதும் அணுக்களால் ஆனவை சகல உயிருள்ள உயிரற்ற பொருட்களும் அணுக்களால் ஆனவை. இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் கடவுளை நம்பினாலும் நம்பாவிட்டாலும் நம்மை பாதிக்கின்றன என்பதை ஆய்ந்து எழுதியது நான் சொல்லும் சோதிடம்.

சினேந்திரமாலை, அவிநந்த மாலை, வருத்தமாலை ஆகிய நூல்களில் நுண்மையான கணிதத்தைத் தேடவேண்டும். இவை என் கைக்கு இன்னும் கிட்டவில்லை.

‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதும்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டுமென்பதும்

நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள். ‘

‘ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் ‘

–என்றெல்லாம் இளங்கோவடிகளான பவுத்த துறவி எழுதியிருப்பதையும் காண்க.

ஊழிற் பெருவலியாவுள மற்றொன்று,

சூழினும் தான் முந்துறும்

–என்று திருவள்ளுவர் கேட்பதையும் நினைவில் கொண்டால் நான் சொல்லும் சோதிடம் வயிறு வளர்க்கும் சோதிடம் அல்ல அறிவு வளர்க்கும் சோதிடம் (வானவியல்) என்பதும் ‘ஆசீவகர்களின் ஊழ்க் கொள்கை ‘ என்பது பற்றி திருமது விசயலட்சுமி அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு (உலகத் தமிழாராய்ச்சிக்கழகம் வெளியிட்டது) திரு குணா அவர்களின் ‘வள்ளுவத்தின் வீழ்ச்சி ‘ போன்ற நூல்களும் படித்தற்கு உரியவை. சுருக்கமாகச் சொன்னால் பிழைப்புவாதிகள் இன்னொரு விதமான பிழைப்புவாதிகளிடம் ஏமாந்து போகும் பணம் பறிக்கும் சோதிடமல்ல நான் சொன்னது. INTENSIVE LIFE என்று அடிக்கடி நண்பர் சொல்வாரே அத்தகைய முழுமையான வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவர்களுக்குத்தான் மனித குலத்தின் இடர்ப்பாடுகள், இவற்றிலிருந்து விடுபடுவது, அதற்கான மார்க்கத்திற்கான தேடல் என்று போகிறவர்களுக்குத்தான் பிழைப்பு நடத்துவதற்கும், வாழ்க்கை வாழ்வதற்குமான வேறுபாடு புரியும். REASONING MIND உள்ளவர்களுக்குத்தான் அதன் LIMITATION தெரியும். எனது இந்த உரையாடல் பிழைப்பு வாதிகளோடு நடத்தப்படுவது அல்ல. அவர்கள் ஒதுங்கிக் கொள்ளலாம்.

அன்ன விசாரமே பெரிய விசாரமாக இருக்கு

நமக்கேன் இந்த விசாரம் ?

தாவாரம் இல்லை தனக்கொரு வீடில்லை

தேவாரம் ஏதுக்கடி குதம்பாய் தேவாரம் ஏதுக்கடி ?

(Jains do not believe in any external God who created and sustain the world. Neither do they believe in any means or redemption out side themselves. The individual has to achieve his own salvation by right faith, right knowledge and right conduct. salvation is believed to terminate cycle of births and deaths and reincarnation when the soul is finally liberated to eternal bliss and infinite knowledge ‘ : The scientific foundation of JAINISM BY. K.V.MARDIA.

சமணர்கள் இந்த உலகத்தை உருவாக்கி காப்பாற்றிவரும் எந்தவொரு வெளிப்புறக் கடவுளையும் தங்களுக்கு வெளியே எந்தவொரு மீட்புக்கான வழியும் (விடுதலையும்) இருப்பதாகவும் நம்பவில்லை. தனிநபர் தனது சரியான நம்பிக்கை, சரியான அறிவு சரியான நடத்தை மூலம் தான் தனது விடுதலையை (முக்தியை) சாத்தியம் ஆக்க முடியும். முக்தி என்பது பிறப்பு இறப்பு மறுபிறப்பு ஆகியவற்றில் இருந்து ஆன்மா இறுதியாக விடுபட்டு நிரந்தர மகிழ்ச்சியிலும் வரம்பில் அறிவிலினும் ஆழ்வதாகும் (பக்கம் 4).

‘அர்த்தமாகதி ‘ என வழங்கப்பட்ட 2500 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சில பகுதிகளில் புழங்கிய மொழியில் ‘ஜீன ‘ என்பதற்கு ‘ஆன்மீகத்தில் வென்றவன் ‘ என பொருள்படும் (பக்1) தன்னை வென்றவன் என்று இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். இந்த அர்த்தமாகதி மொழியைப் புரிந்து கொள்வது நமக்குக் கடினமாக இருக்கிறது. ஆன்மா கருவினையினால் கறைபட்டு இருக்கிறது அதனை சுத்திகரிக்க வேண்டும். அவ்வாறு சுத்திகரிக்கப்படுவதை ஆன்மா விரும்புகிறது.

கருமவினைத் தொகுதியின் அடர்த்தியின் அளவைப் பொறுத்து உயிர் இனங்கள் வேறுபடுகின்றன.

கரும வினைகட்கு பிறவிச் சக்கரத்தில் ஆன்மாவைச் சிக்க வைக்கிறது.

சரியற்ற கருத்துகள், கட்டுப்பாடின்மை, கவனமின்மை, மோகம், செயல்கள் காரணமாக கருமம் ஒட்டுகிறது.

ஒருவர் மீது ஒருவர் வன்முறை செலுத்துவது கடினமான கரும வினையையும், மற்றவருக்கு உதவுவது இலேசான கரும வினையையும் உண்டாக்குகிறது.

விரதங்களை கடைபிடிப்பது புதிய கருமங்களுக்கு எதிரான கேடயமாக இருப்பதுடன் பழைய கருமங்கள் அழிவதற்கான நிகழ் வினை உண்டாக்குகிறது. என்றெல்லாம் போதித்த இவர்கள் கொள்கையைப் பின்பற்றினால் புரோகிதம் பூசாரித்தனம் செய்து பணம் பறிக்க இயலாது. மனிதன் தானே தன்விடுதலையைத் தேடவிட்டு விடலாமா ? எனவே எண்ணாயிரம் சமணர்கள் கமுவேற்றப்பட்டிருக்கிறார்கள் என்பதாக எனக்குத் தோன்றுகிறது. இது பற்றி ஆழ்ந்த ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். AMNESTY INTERNATIONAL, P.U.C.L எல்லாம் இல்லாத காலம் ஆயிற்றே அது. ஆனாலும் நான் விடுவதாக இல்லை. சாகும் வரை தேடிக்கொண்டே இருப்பேன்.

திரு. E.கிருஷ்ணமாச்சார்யா என்பவர் எழுதிய SPIRITUAL ASTROLOGY என்ற நூலையும் திரு.டி.என். ராஜூ முதலியார் எழுதிய கணித விளக்கம் என்ற நூலையும் திரு. தில்லைநாயகம் எழுதிய காலச்சக்கரம் என்ற நூலையும் திரு. கிரியா ராமகிருஷ்ணன் தந்து உதவி இருக்கிறார். BLACK ATHENA, BOOK OF DEATH போன்ற நூல்களையும் அவர்தான் தந்தார். இந்த SPIRITUAL ASTROLOGY ல் ஒரு மனிதன் அவன் பிறந்த வேளையைப் பொறுத்து எவ்வாறு முக்தி அடைகிறான் என்பதைத் தவிர லெளகீக சமாச்சாரங்கள் எதுவுமே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பிழைப்பு நடத்தும் சோதிடக்காரர்களுக்கு இதனால் எந்த லாபமும் கிட்டாது.

****

Series Navigation

புதுவை ஞானம்

புதுவை ஞானம்