தமிழகக் குடும்ப வாழ்க்கை (நேற்று – இன்று – நாளை)

This entry is part [part not set] of 46 in the series 20060331_Issue

முனைவர் மு பழனியப்பன்


குடும்பம் என்பதற்கு உறவு, ஒரு குடியிலுள்ளோர், வீடு என தமிழ் மொழியகராதி பொருள் கொள்ளுகிறது. வாழ்க்கை என்பதற்கு ஜீவிப்பு எனப் பொருள் கொள்ளலாம். குடும்ப வாழ்க்கை என்பதற்கு ஒரு வீட்டின் ஜீவிப்பு என்று நேரடியாகப் பொருள் கொள்வோம்.

நேற்றையக் குடும்ப வாழ்க்கை

சென்னைத் தொலைக்காட்சியில் 1992 தீபாவளி அன்று ஒரு பட்டிமண்டபம் ஒளிபரப்பப்பட்டது. அதன் தலைப்பு எது சிறப்பு ? தனிக்குடும்பமா-கூட்டுக் குடும்பமா ? என்பதாகும். நடுவர் கோ. சாரங்கபாணி வாதங்களைப் பரிசீலித்து விட்டுத் தனிக்குடும்பமே சிறந்தது அதுவே தேவையும் கூட என முடிவு சொன்னார். அடுத்த வார ’’எதிரொலியில்’’ (வாசகர் கடிதப்பகுதி ) வந்திருந்த, வாசிக்கப்பட்ட, 31 கடிதங்களும் இத்தலைப்பின் முடிவைப் பற்றி விமர்சனம் செய்திருந்தன, அனைத்துக் கடிதங்களும், தனிக்குடும்ப முடிவு தவறான முடிவு, கூட்டுக் குடும்பமே தமிழகத்தின் மரபு, அதுவே தேவை எனக் கூறியிருந்தன.

நேற்றைய தமிழகத்தை, அதன் வரலாற்றைப் புரட்டிப் பார்க்கிற போது தனிக்குடும்பம் ஒரு சோதனை முயற்சிக்காக ஏற்று நடத்தப்படிருக்கின்றது என்பதைக் காணமுடிகின்றது. திருமணம் ஆனவர்கள் எவ்வாறு தன் வாழ்வை நடத்திக் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து கொள்ளும், சோதனை முயல்வாக தனிக் குடும்ப முயல்வு நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சங்க இலக்கியத் தலைவனும், தலைவியும், தனி குடும்ப வாழ்வில் இன்பங்கண்டனர் என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இதற்கான பல சான்றுகளை சங்க இலக்கியப் பாடல்கள் தருகின்றன.

சங்க காலத்தில் ஒரு கணவனும், மனைவியும் இனிய வாழ்க்கை நடத்திக் கொண்டு வருகின்றனர். அவர்களைப் பார்ப்பதற்காக, தாயொருத்தி பகலெல்லாம் நடந்து வந்து மாலை நேரத்தில் இவர்களின் வீட்டிற்கு வருகின்றாள்.

அப்போது அவள் கண்ட காட்சி, அவள் பிள்ளையின் வீட்டின் முன் ஒரு மலர்த்தோட்டம் இருந்தது. அங்கே ஒரு அகலமான மேடை, அம்மேடை அருகில், முல்லைக்கொடி அடர்ந்து படர்ந்து, மலர்களைச் சுமந்து கொண்டிருந்தது. அவ்வேளையில் பாணர் முல்லையாழில் முல்லை நிலத்து இன்னிசையை மீட்டிக் கொண்டிருந்தனர். கணவன் மேடையின் மேல் முகமலர்ச்சியுடன் அமர்ந்து, எதிரேயிருக்கும் தன் மகனை எடுத்துத் தன் தொடையின் மேலே அமர்த்தி, அக்குழந்தையின் இரு குழந்தை கைகளையும் பிடித்து, யாழின் இசைக்கு ஏற்பத் தாளம்கொட்டுமாறு செய்து மகிழ்ந்து கொண்டிருந்தான். வேறொரு புறத்திலே மனைவி முல்லை மலரைப் பறித்து அவற்றை மாலையாகத் தொடுத்துக் கொண்டிருந்தாள். பின்பு தான் தொடுத்த மாலை ஒன்றினைக் கணவன் மடிமேல் தாளம் கொட்டிக்கொண்டிருந்த சிறுவனுக்குச் சூட்டி, மற்றொன்றை, தனக்கும் சூட்டிக் கொண்டாள். கணவன் மனைவியின் அழகை அப்போது, பருகிக் கொண்டிருந்தான். அந்நேரத்தில் தாய் வீட்டிற்கு வர, இந்நிகழ்வையெல்லாம், தாய் கண்டு மகிழ்ந்தாள்(1).

இதைப் போல பல பாடல்கள் சங்க இலக்கியத்தில் தனிக்குடும்ப நிலையை விளக்கிக் காட்டியுள்ளன. சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வந்த இலக்கியங்களிலும் தனிக் குடும்ப வாழ்க்கை முறையைக் காணமுடிகிறது. கோவலனும் கண்ணகியும், மணம் முடித்த பின் ’’மனையறம் படுத்த காதை’’ வழியாக தனிக் குடும்பம் நடத்த முனைகின்றனர்(2). குடும்ப விளக்கில் பாரதிதாசனார், பெற்றோர்களை விடுத்த தனிக்குடும்பத்தினை தலைவன் நடத்தும் நிலையை ’’இனித்திட இனித்திடத்தான் நகைமுத்தன் எழில் அறம் நடத்துதற்கு தனியில்லம் கொண்டான்’’ என வெளிப்படுத்துகின்றார் (3).

இத்தகைய சான்றுகளின் மூலம் தனிக் குடும்ப நிலை வழிவழியாகத் தமிழகத்தில் நடை பெற்றிருப்பதை அறியலாம். ஆனாலும் தனிக்குடும்ப வாழ்வில் சுற்றத்தாருக்கும், பெற்றோர்க்கும் உரிய தொடர்பு தரப் பெற்றிருந்தது என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான்.

தமிழ் மரபில் களவு, கற்பு என்ற இரண்டு நிலைகள் உண்டு. களவென்பது காதல் வாழ்க்கை. கற்பு என்பது மணவாழ்க்கை. கற்பு வாழ்க்கையே குடும்ப வாழ்க்கை எனக் கொள்ளப்படுகின்றது.

’’தலைவனும், தலைவியும் இவ்வுலகத்தில் ஒன்றாய்ப் பிணைந்து, சுற்றத்தாரோடும், மக்களோடும் கூடி இல்லறம் நிகழ்த்தும் பொழுது உலகத்தில் நுகர வேண்டிய நுகர்வுகளை எல்லாம் ஒவ்வொன்றாய் நுகர்ந்து அவை நிலையில்லாதன என அறிந்து தெளிவு பெற்று நிலையான வீட்டின்பத்தை விரும்பி வாழ்தல் தான் குடும்ப வாழ்வின் பயன்’’ என்கிறார்’’ தொல்காப்பியர்(4). வையத்துள் வாழ்வாங்கு வாழும் இம்முறையே குடும்ப வாழ்வின் சிறப்பாகும்.

இல்வாழ்வில் தலைவியும் தலைவனும், உடல் உயிராகவும், உயிர்- உடல் ஆகவும் வாழ்ந்திருக்கின்றனர். இன்பம் நுகர்வதற்கும், இல்லறக் கடன்களைச் செய்வதற்கும், இருவராக பிரிந்து நின்றே செயலாற்ற வேண்டியிருப்பதால் இவ்வுலகில், ஆணும் பெண்ணும் இருவராய்ப் பிறக்கின்றனர். கடன்களைப் பொறுப்புடன் செய்யும் போது இடையிடையே ஆணும் பெண்ணும் பிரிதல் வேண்டியிருக்கிறது. தலைவனும் தலைவியும் அப்பிரிவை பூ இடைப்பட்டலும், ஆண்டு கழிந்ததைப்போல் உணரும் மகன்றில் பறவையின் பிரிவைப் போலக் கருதியுள்ளனர்(5). ஒருவர் பிரிய நேரின் மற்றவர் இறக்கக் கருதியுள்ளனர். உயிரின்றி உடல் இயங்கல் இல்லை போல, தலைவன் தலைவியரின் இல்லற வாழ்வு இணைந்தே நடைபெற்றிருக்கின்றது.

குடும்பத்தில் தலைவியின் பங்கினைக் குறுந்தொகைப் பாடலொன்று அழகாக விளக்குகின்றது. ஒரு இலக்கியக் குடும்பம் அது. கணவனுக்கு முதன்முதலாக, தானே சமைத்து உணவிட மனைவி விரும்புகிறாள். தயிரைப் பிசைந்து மோர்க்குழம்பு ஆக்குகிறாள். தயிர் கட்டி பட்டிருக்கின்றது. அதனைத் தன் காந்தள் விரல் நோகத் தலைவி பிசைகின்றாள். பிசைந்த போது விரல்களின் இடுக்கில் தயிர்த்துளிகள் ஒட்டிக் கொள்கின்றன. பின் அதனைத் தக்கவாறு பாகம் செய்ய அடுப்பில் ஏற்றுகிறாள். அப்போது ஆடை சிறிது நெகிழ அதனையும் தன் கையால் எடுத்துச் சொருகிக் கொள்கிறாள். இப்போது ஆடையில் தயிர் துளிகள் பின் தாளிப்பதற்காக பாகங்களை எடுத்து அடுப்பில் வைக்கிறாள். கண்நோக புகை படிய, பார்த்துப் பாரத்துத் தாளிக்கின்றாள். ஒரு வழியாய் மோர்க்குழம்பு வைத்துவிட்டுத் தன் கணவனுக்கு உணவிடுகிறாள். கணவன் அதனை இனிதாய் இருக்கின்றது என உண்கின்றானாம். இந்தப் பெருமைப் பேச்சு, அவளின் துன்பத்தையெல்லாம் கரைத்து, அவளை நாணிப் போகச் செய்து விடுகிறது(6). அப்படிப்பட்ட இலக்கிய வாழ்வை நேற்றை தமிழகத்தோர் வாழ்ந்திருக்கிறார்கள்.

குடும்பத்தின் பயன்

இவ்வளவு பெருமை பெற்ற குடும்ப வாழ்விற்கு பயன் என்ன என்ற வினாவிற்கு விடை – மக்கட் பேறாகும். ’’குறுகக் குறுக நடந்து சிறிய கையினை நீட்டி, உணவுக் கலத்தில் கிடந்ததைத் தரையிலே இட்டும். கீழே கொட்டியும், தோண்டியும், வாயிற் கவ்வியும், கையால் துழாவியும், நெய்யுடைச் சோற்றை – உடம்பில் சிதறியும் எனப் பல விதங்களில் உணவினை உண்ணும் மக்களைப் பெறாதவரின் வாழ்க்கை, பயனில்லாத வாழ்க்கை’’(7) எனப் புறநானூறு பேசுகிறது. மகவின் சிறுகை அளாவிய கூழ்போல வேறொரு அமுதம் உலகில் இல்லை என்கிறது திருக்குறள்.

குடும்பத்தின் பயன் என வருகிறபோது, மக்கட் பேறுதான் அதில் முதலிடம் வகிக்கின்றது. தாய் மகனைப் பெறலும், தந்தை சான்றோனாக அம்மகனை ஆக்கலும் கடனாகக் கொண்டு சங்கத் தமிழர் வாழ்ந்திருக்கின்றனர்(8).

குடும்பத்தின் கடமைகள்

சங்க காலத் தமிழ்க் குடும்பங்களுக்கு, கடமை என்ற ஒன்று இருந்திருக்கிறது. இல்லறத்தான் என்பான் இயல்புடைய மூவர்க்குத் துணையாக வாழ்தல் வேண்டும்(9). அதுவே அவனின் கடமையாகும். துறவறத்தோர், விருந்தினர், சுற்றத்தார் என்ற மூவர்க்கும் துணையாக இல்வாழ்வினர் அமைய வேண்டும்.

விருந்தினர் என்பார், முன்பின் அறியாதவராய்ப் பசித்து வரும் இல்லற நிலையினர். நற்றொழில் காரணமாக இடம் பெயரக் கருதும்போது, தமக்கு வேண்டிய உணவு கருதி முன்பின் அறியாதவரின் வீட்டிற்கு விருந்தினராக வருபவர்கள் விருந்தினர்கள். இவர்களை உபசரித்தலை சங்ககாலக் குடும்பத்தினர் கடமையாகக் கொண்டனர்.

தலைவன் ஒருவன் தான் சந்தித்த தலைவியிடம் ஒரு உறுதி செய்து தருகிறான். தலைவியே உன்னை நான் திருமணம் செய்து கொண்டு இல்லறம் நடத்தி, வரும் விருந்தினருக்கு உணவளித்து அவர்கள் உண்ட மிச்சிலை நான் உனக்களித்து உண்பேன் என்னை ஏற்பதிலே உனக்கு ஒரு குறையும் இருக்காது(10)’’ என உறுதி கூறுகிறான். எனவே நேற்றைய தமிழகத்தில் விருந்து புரத்தல் சிறப்பாகக் கருதப்பட்டுள்ளது என அறியலாம். ’’செல்விருந்து பார்த்து வருவிருந்து நோக்கிய’’ (11) அக்கால நிலையை வள்ளுவரும் குறிப்பிடுகிறார்.

சுற்றமெனப்படுவர் – உடம்பின் தொடர்பாலும், பிறவற்றாலும், சூழ்ந்து நிற்பவர் ஆவர். இவரன்றி இடத்தின் தொடர்பாலும், அலுவல் தொடர்பாலும் சுற்றம் ஏற்படலாம். துணையற்ற பெண்டார்க்கும், ஏழைச் சிறுவர், சிறுமியர்க்கும், உண்டி உணவு கொடுத்தல்- தலைவன் தலைவியர் வாழ்வில் ஒரு கடனாகக் கருதப்பட்டது. ஒளவையாரை அதியமான் புரந்ததும், பாரி, கபிலர் முதலியவரைப் புரந்ததும் இப்பாற்பட்டதாகும்.

துறந்தோர் என்போர் அனைத்தையும் துறந்தவராவர். எனவே அவர்களின் வாழ்வும் இல்லற வாழ்வில் திகழ்வோரின் நிலையை எண்ணியே வாழ வேண்டிய அவசியம் இருந்தது. எனவே இவை மூன்றும் சங்ககால இல்லறத்தார் கடமை என உணரலாம்.

பரத்தை

இல்லற வாழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கையில், தலைவன் தலைவியை விட்டுப் பிரியக் கூடிய சூழல் ஏற்படலாம். இப்பிரிவிற்கு ஆறு காரணங்களை இலக்கண ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள். ’’பரத்தை, ஓதல், காவல், தூது, துணை, பொருள் வயிற்பிரிவு’’ என பிரிவு அறுவகைப்படும். இதில் பரத்தை மட்டுமே- தலைவனின் மாறுபட்ட ஒழுக்கம் கருதிய பிரிவாகும். மற்ற ஐந்தும் கடமை கருதியதாகும். பரத்தைபால் பிரிதல் என்றே இதனைத் தனியாக வகுத்து அதற்குரிய காலமும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இவ்வொழுக்கம் மன்னர் முதல் அனைவருக்கும் ஏற்கப்பட்டிருந்தது.

பேகன் என்ற மன்னன், தன் மனைவியை விடுத்து பரத்தை பால் சார்ந்திருந்தான். அதனை இடித்துரைத்து அரிசில்கிழார் போன்ற புலவர்கள், அவனை திருந்திய வாழ்விற்கு அழைத்து வருகின்றனர்(12) பேகன் பரத்தை ஒழுக்கம் கொள்ளினும் அவனின் மனைவி கண்ணகி, அவனையே நினைத்து வாழ்ந்திருத்தலைச் சிறப்பு எனச் சங்க கால புலவர் கருதினர். ஆடவன் மாறினும் மனையுறை மகளிர்க்கு (13) ஆடவரே உயிர் என வாழ்தலே சிறப்பாக, அக்கால சமுதாயம் கருதியிருக்கிறது.

காப்பிய காலத்தில் இற்பரத்தையைச் சார்தல் என்ற நிலை வளர்வு பெற்று அதுவே கதையம்சமாகத் திகழ்ந்திருப்பதை- சிலப்பதிகாரம் காட்டுகின்றது. கோவலன் மாதவியின்பால் ஏற்பட்ட கலையன்பில் உள்ளங்கொண்டு அவளைச் சார்கின்றான். இருப்பினும் கண்ணகி அவனையே நினைத்து வாழ்ந்து, இறுதியில் அவனின் உயர்விற்காகப் போராடிய திறம் சிறப்பாகும்.

சிலம்பின் ஒரு பகுதியில் தேவந்தி கணவனால் கைவிடப்பட்ட கண்ணகியைப் பார்த்துச் ’’சோமகுண்டம், சூரியகுண்டம் மூழ்கின் உன் கணவன் கிடைப்பான்’’ எனக் கூற (14) ’பீடன்று’ எனக் கண்ணகி ஒதுக்குகிறாள். கண்ணகியின் இந்நிலையைக் காணுகின்ற போது, கணவன் இன்பமே, தன் இன்பம், கணவன் எங்கு இன்பம் காணுகின்றானோ அங்கே காணட்டும். எம் வணங்குதலால் அவன் இங்குவரின் இன்பம் குறையலாம் எனக் கருதி கண்ணகி அப்படிச் சொல்லியிருக்கலாம் என உணர முடிகின்றது.

பெரிய புராணத்தில், இந்நிலையினின்று சற்று மேம்பட நிலையைக் காணமுடிகின்றது. திருநீலகண்டர் என்ற நாயன்மார் சிற்றின்ப மிகுதியால் பரத்தையிடம் சென்று விட்டு வீட்டிற்கு வருகின்றார். வந்ததும் அவரின் நிலையறிந்த மனைவி ’’என்னைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்’’ (15) எனச் சொல்லி உடல் இன்பத்தினை அவரிடமிருந்து பெறுதலை வெறுத்ததோடு உள்ள அன்போடு மட்டும் வாழ்ந்தார். பரத்தை ஒழுக்கம் கடிந்த பெண்ணாக இவரைச் சேக்கிழார் படைத்துள்ளார். எனவே ஒரு காலத்தில் பரத்தை ஒழுக்கம் மறைவான ஒழுக்கம் எனக் கருதப்பட்டிருப்பினும் அதனை ஏற்றுக் கொண்ட மனைவியர், பின்பு அவ்வொழுக்கத்தினை கடிந்தவராக வளர்ந்து வந்துள்ளமையை அறிய முடிகின்றது.

வீரம்

ஒருபுறம் சுக வாழ்வில் இன்புற்றிருந்த தமிழர்கள், மறுபுறம் வீரவாழ்வில் வெற்றியையே துணையாகக் கொண்டு வாழ்ந்துள்ளனர். ’’உன் மகன் எங்குள்ளான்’’என ஒரு சங்க இலக்கியத் தாயிடம் கேட்டால் அவள் சொல்கிறாள்- ’’என்மகன் எங்குள்ளான் என யான் அறியேன். ஆனால் புலிவந்து சற்று நேரம் படுத்துக் கொண்டிருந்து பின் வெளிப்பட்டுப் போன மலைக்குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு இதுவாகும். அவன் பெரும்பாலும் போர்க் களத்தில் காண்பபடுவான்’’- எனக் கூறுகிறாள்(160).

அந்த அளவிற்கு வீரர்கள் வாழ்ந்த உலகாக, அக்காலத்தில் தமிழகம் திகழ்ந்திருக்கின்றது. மற்றொரு தாய், போருக்குச் செல்ல யாரும் இல்லாத போது தன் ஒரே மகனை, பாலகனை அழைத்து அவன் குடுமிக்கு, எண்ணெய் தடவி, கையில் வேலைக் கொடுத்து போர் முரசு கேட்டதும் அனுப்பி வைத்தாளாம்(16. அ). குழவி இருப்பினும், ஊன் தடி பிறப்பினும், அதனை வாளினால் அறுத்துப் புதைத்த வீரபரம்பரையினைச் சார்ந்தவர்கள் தமிழர்கள் (17). முல்லை நிலத்தில் நடந்த அடலேறு தழுவலும் வீரத்தின் அடிப்படையே ஆகும். இதன் வழி திருமணங்களும் நிகழ்ந்தன. கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையிலும் எண்ணாள் முல்லை நிலப்பெண். இதனுடைய வளர்ச்சி பின்னாளில் போட்டிகளின் வாயிலாகப் பெண்களை மணத்தல் என்பதாக நிகழ்ந்தது. சீவக சிந்தாமணியில் சீவகனுக்கு வைக்கப்படும் போட்டிகளும், பாண்டியன் பரிசில் ஏற்படும் அன்னத்திற்கான – பேழை- போட்டியும், இவ்வகை நிகழ்வின் அடிப்படையே எனலாம்.

எனவே சங்க இலக்கியகாலம், இல்வாழ்வை, அன்பும், அறனும், வீரமும் செறிந்ததாகக் கொண்டு வாழ்ந்த காலம் என்பதில் ஐயமில்லை.

பக்தி இலக்கிய காலத்தில், குடும்ப வாழ்வில் சில மாற்றங்கள் ஏற்பட்டன. எல்லாமே இறைவன் எனக் கருதப்பட்டது. சுற்றமும், விருந்தும் அவனே. அதனால் தான் வணங்கும் இறைவனை அப்பனாய், அம்மையாய் சேயனாய், அன்புடைய மாமனாய், மாமியாய், ஓப்புடைய மாதருமாய், சுற்றமுமாய், எல்லாமாய் நாவுக்கரசர் கண்டார்(18). ’’அம்மையே அப்பா, ஒப்பிலா மணியே, பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’’ என்று மாணிக்கவாசகரும் பாடுகின்றார்.

இதற்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல் ஆண்டாள் இறைவனையே, தன் கணவனாகப் பாவித்து அவனன்றி வேறு மானிடர் எவர்க்கேனும், என் உடல் பேச்சுப்படில் உயிர் வாழேன் என்று கூறுகிறாள்(19). சங்ககால சமுதாயத்தில் கணவனும் மனைவியும் உயிரும் உடலுமாய் ஒன்றியிருந்த வாழ்க்கை இக்காலக் கட்டத்தில் கடவுள்- மனிதத் தொடர்பு என்ற நிலையில் உயர்த்திப் பேசப்பட்டுள்ளது. இருப்பினும் இல்லற வாழ்விற்கு எக்குறையும் ஏற்படவில்லை. பெரிய புராணத்து மெய்யடியார்கள், பலர் இல்லற நெறியில் நின்று இறைவனைக் கண்டுள்ளனர். இல்லறக் கடமையான, துறவறத்தாரைக் காத்தல், விருந்து சுற்றம் காத்தல் போன்றவற்றை குறைவறச் செய்திருக்கிறலீர்கள் என்பது உண்மை.

பாரதியின் கண்ணன் பாடல்களும், இதன் வழிவந்தனவே எனலாம். தோழனாக , தாயாக , தந்தையாக , சேவகனாக , அரசனாக, சீடனாக, சற்குருவாக, குழந்தையாக, காதலன் – காதலியாக, பாங்கியாக, ஆண்டானாக, குல தெய்வமாக, விளையாட்டுப் பிள்ளையாகப் பாரதி- கண்ணனைப் பாடியதும் இதன் வளர்நிலை என்றே கருதலாம். பக்தி இலக்கிய கால கட்டத்திற்கு பின் எழுந்த 96 வகை சிற்றிலக்கியங்களின் முதல் தலைமுறை நூல்கள் கடவுளைப் பாடுபொருளாக்கின. அடுத்த தலைமுறைச் சிற்றிலக்கியங்கள் மனிதர்களை, மன்னர்களைப் பாடின. கடவுள் தமிழர்களின் வாழ்வில் இவ்வாறு நீங்கா நிலைத்த இடம் பெறுகிறார் என்றாலும் இல்லற நெறியின் வலுவூட்டலாகவே கடவுள் படைப்பும் கடவுள் இலக்கியப் படைப்புகளும் அமைந்தன என்பது கவனிக்கத் தக்கது.

19, 20நூற்றாண்டுகளில் எழுந்த விடுதலைப் போராட்ட உணர்வு , மற்றும் மேலை நாட்டுத் தாக்கம் போன்றன தமிழிலக்கியத்தை புதிய வடிவ நிலைக்குக் கொண்டு போயின. இலக்கியக் களத்திற்கு புதிய பாடு பொருள்கள் கிடைத்தன. சமுதாய நலனோடு இலக்கியங்கள் அணுகப்பட்டன. எனினும் குடும்ப வாழ்வில் அதே அளவு அன்பு, பற்று, பாசங்கள் பின்பற்றப்பட்டன.

தாயன்பு குறித்துப் பாரதிதாசன் அற்புதமான காட்சி ஒன்றைக் காட்டுகிறார். ஒரு தாய் தன் குழந்தையோடு கட்டிலில் படுத்திருக்கின்றாளெ¢. சிறிதே அவள் புரண்டு படுத்தாலும், தாயின் உடல் அக்குழந்தையின் மீது படிந்து விடும். இதை அறிந்த அந்தத் தாய் தன் வலக்கையினைத் தலையணையின் மீதும் இடக்கையினை கூடாரம் போல் குழந்தையின்மீது பாடமலும் வைத்துப் படுத்திருந்தாள். இவளை எழுப்ப அவளின் கணவன் நினைக்கின்றான். பக்கதில் கிடந்த பூச்செண்டிலிருந்து ஒரு மலரை எடுத்து அவளின் திங்கள் போன்ற முகம் மீது இட்டான். எவ்வித அசைவும் அவளிடம் ஏற்படவில்லை. ஒரு மலரிதழை எடுத்துக் குழந்தையின் மீது இட்டான். இப்போது அந்தத் தாயினது கரம் இதழ் விழுந்த இடத்தைத் துடைத்து விட்டுச் சென்றது (20).

நேற்று வரை, அன்பும், அறமும் உடையவர்களாக வாழ்ந்த தமிழ் மக்களின் நிலை இன்று எப்படியுள்ளது என இனி ஆய்வோம்.

இன்றைய தமிழகம்

சங்ககாலத்தில் பின்பற்றப்பட்ட மூவகைக் கடமைகளும், இக்காலத் தமிழர்களாலும் ஏற்றுக் கொண்டு நடைமுறைப் படுத்தப்படுகின்றன. ஆனால் அன்பு , வீரம் என்ற இரு தலையாய கொள்கைகளும் மாறுபட்டு அழிந்து போகுமளவிற்கு இன்றைய தமிழ்ச் சமுதாயத்தின் குடும்ப நிலை அமைந்து வருகின்றது.

திருமணம் என்பது அன்பின் வெளிப்பாடாக, காதலின் முடிவாக, குடும்ப வாழ்வின் வாயிலாக நேற்று வரை கருதப்பட்டது. ஆனால் இன்றைய திருமணங்கள் பொருளாசை மிக்கதாக, வாழ்வின் முடிவினைத் தரும் முடிவு நிலையாகக் கூட மாறிவிட்டன.

இன்றைய பெரும்பாலான திருமணங்கள், பொருளாதாரக் காரணங்கள் கொண்டே ஆய்ந்து நிச்சயிக்கப் படுகின்றன. வரதட்சணை என்ற பெயரில் பொருளாதாரக் கொடுமைகள் நடக்க திருமணங்கள் வழி வகை செய்கின்றன. வரன்- தட்சணை- பெண்ணை மணந்து கொள்ளப்போகும் வரனுக்கு பெண் வீட்டார் தட்சணை கொடுக்க வேண்டும். இவ்வொப்பந்தமே இரு மனங்களின் வாழ்வினை நிச்சயிக்கின்றது. திருமணங்கள் அன்புச் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட காலம் மாறி ரொக்கத்தில் நிச்சயிக்கப்படுகிற காலம் இன்று தமிழகத்தில் நிகழ்கின்றது. ’’எனக்கு இராமன் வேண்டாம் தூக்கி கொண்டு போகும் இராவணன் கிடைத்தால் போதும்’’ என்று ஏங்குகின்ற கன்னி கழியாத பெண்கள் பலர் தமிழகத்தில் உள்ளனர்.

வரதட்கணையைத் தருவதாகச் சொல்லிவிட்டு சில தந்தையர் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து விட்டு பின்னால் கொடுக்க முடியாது போனபோது, அவர்களின் மகள் மாப்பிள்ளை வீட்டாராலேயே கொலை செய்யப்படும் கொடுமையான நிகழ்வுகளும் தமிழகத்தில் இன்று தினசரிகளின் செய்திகளாகிவிட்டன. ஸ்டவ் வெடிப்புதான் வரதட்சணைக் கொடுமையின் இறுதி ஆயுதம். ஒரு புதுக் கவிஞன் பாடினான் மருமகள் ஏற்றுகிற ஸ்டவ் மட்டும் வெடிக்கிறதே மாமியார் ஏற்றும் ஸ்டவ் வெடிப்பதில்லையோ என்ற அவனின் வரிகள், வரதட்சணைக் கொடுமையை -படம் பிடிப்பதாகும்.

குடும்ப வாழ்வின் இன்பமான அன்பு நிலை அடித்தளத்தை மறந்து விட்டு இன்றைய தமிழகம் வாழ்கின்றது. அன்பை விலை பொருளாக்கிக் விலை கூவும் நிலை தமிழகக் குடும்ப அவல நிலையின் ஒரு கொடுமையான பகுதியாகும். வரதட்சணைக் கொடுமையினின்று வீறு பெற்று எழுந்த பெண்களும் உண்டு. அதனால் சாம்பலாகிப் போனவர்களும் உண்டு.

மக்கட்பேறு

எவ்வளவு இனிமை எனக் கருதப்பட்டதோ அவ்வளவிற்கும் இழிவானதாக மக்கட் பேற்றினை ( அதுவும் பெண் மக்கட் பேற்றினை ) கருதுகிற நிலையை இன்றைய தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. பெண் குழந்தைகளைச் சாகடிக்கும் கொடுமை, தமிழகத்தின் உட்பகுதிகளில் நடைபெறுகின்றது. பிறந்த பெண் குழந்தையின் வாயில் நெல்லைப் போட்டுவிட, அது மூச்சுத் திணறி இறந்து படுகிறது. இப்படி ஆயிரம், ஆயிரம் குழந்தைகள் இந்நிலையைச் சந்தித்து மண்ணாய்ப் போயுள்ளன.

இவைகளைத் தடுக்க தமிழக அரசு, இப்போது ஒரு புது முடிவை எடுத்தது. ஒவ்வொரு ஊரிலும் தொட்டில் வைக்கப்பட்டது. இதற்கு அரசாங்கத் தொட்டில் என்று பெயர். இதனுள் பெண் குழந்தைகளை வளர்க்க முடியாத பெற்றோர்கள் குழந்தையை இட்டு விடலாம். அக்குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினை அரசாங்கமும் சில பொது நிறுவனங்களும் ஏற்றுள்ளன. இது எந்த அளவிற்கு நடைமுறைக்குச் சரியாகும் என்பது போக போகத்தான் தெரியும். இதைப் பிரதிபலிக்கும் வகையில் ஒரு புதுக் கவிஞன் பாடினான்.

தொட்டிலில் போடப்பட்ட குழந்தை ஒன்று இரண்டானது. மூன்று நான்கு நூறானது. ஆனால் இதை கவனிக்கும் ஆயா மட்டும் ஒருவரே, குழந்தையின் அழுகைக்குள் ஆயாவின் தாலாட்டு மறைந்து போனது என்று(21).

பரத்தை இன்று

அடுத்து இன்றைய நிலையில் பரத்தையர்- ஓழுக்கம் பற்றி ஆராய்வோம். இன்றைய நிலையில் தமிழகத்தில் பரத்தை ஒழுக்கம் என்பது கேவலமான ஒழுக்கமாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலான ஆண்கள் இவ்வொழுக்கத்தில் பெரும்பாலும் ஈடுபடுவதில்லை. அவ்வாறு ஈடுபட்டால் எந்தப் பெண்ணும் கண்ணகி போல் சாந்தமாக இருப்பதில்லை, அவள் அவனைப் பல்வேறு முறைகளில் தண்டிக்கின்றாள்.

இது ஒரு புறம் இருக்க, பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதிகளைப் பற்றிச் சற்று முந்தைய காலத்தில் ஒரு செய்தி பேசப்பட்டது. அங்கு உள்ள பரத்தையரில் பாதிக்கு மேல் தமிழ்ப் பெண்கள் என்பது கணக்கிடப்பட்டது. பெரும்பாலான தமிழ்ப் பெண்கள் ஏமாற்றப்பட்டு அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். இதைத் தடுக்க தமிழக அரசு ஒரு எக்ஸ்பிரஸ் திட்டத்தை அறிவித்தும் எவ்வித பலனுமில்லை.

குடும்ப நிலையைப் பொறுத்த வரையில், இவ்வொழுக்கம் களையப் பட்டிருப்பினும், திருமணமாகாத, குடும்ப நிலை சாராத பெரும்பாலான இளைய சமுதாயம், இதனை இன்ப நிலைக்காக ஏற்றுக் கொண்டுள்ளது என்பது மறுக்க முடியாததாகும். இதன் விபரீதத்தை உணர்த்தும் அவர்கள் ஈடுபடுவது முரண்பட்ட போக்குதான். எனவே இன்றைய தமிழகம் அன்பு வாழ்வினை மறந்து போலி அன்போடு வாழ்கின்றது என்பது தெளிவு.

நாளைய தமிழகம்

தமிழகத்தின் எதிர்கால நினைப்பினை நினைக்கும் போது ஒரு மகிழ்வு ஏற்படத் தான் செய்கின்றது. நாளையாவது விடியுமா என்ற நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும், பம்பாய், இலங்கை, தமிழகத் தமிழர்களின் குடும்ப நிலை நாளை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பார்க்கலாம். இதோ ஒரு கற்ப்னை விடியல்.

இந்த ஆய்வை எழுத்தாளர் சுஜாதா ’’என் இனிய இயந்திரா’’ என்ற நாவலின் மூலம் சிந்தித்துப் பார்க்கிறார். ’’பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையே வாழும் சமுதாயம், பெயர் இரண்டெழுத்தில் இருக்க வேண்டும். குழந்தையை கூட கேட்டுதான் பெற வேண்டும் என்ற நியதி, இவைகளுக்குத் தலைவனான ஜீவா என்ற சர்வாதிகாரி, 50 வயதுக்குப் பின் முதியவர்களுக்குக் கட்டாய சாவு ’’ என பல முரண்பட்ட நிலைகளை அந்நாவல் முன் வைத்திருக்கிறது.

இதைப்போல ஒரு கட்டாய வாழ்க்கைக்கு தமிழகம் தள்ளப்பட்டுவிடுமா இயந்திரவாழ்வு அங்கீகரிக்கப்படுமா ஓரளவு இப்போது ஒட்டிக்கொண்டிருக்கும் அன்பெனும் தத்துவமும் அழிபட்டு விடுமா எது போனாலும், தமிழனின் விருந்தோம்பல் பண்பும், சுற்றம் துறவறம் போற்றும் பண்பும் மாறலீதுங மாறக் கூடாது. இவை தமிழனின் தனித்த பண்புகளாம்.

—-

குறிப்புகள்

1. பாணர் முல்லை பாடச் சுடரிழை

வாணுதெ லரிவை முல்லை மலைய

இனிதிருந் தனனே நெடுந்தகை

துளிதீர் கொள்கைத் தன்புதல்வனொடு பொலிந்தே. ஐங்- 408

2. சிலம்பு ,மனையறம் படுத்த காதை

3. இனித்திட இனித்திடத் தான்

எழில் நகை முத்தினோடு

தனித்தறம் நடாத்துதற்குத்

தனியில்லம் கொண்டான்.-பாரதிதாசன் குடும்ப விளக்கு. ப. 50(3, 4, 5)

4. ’’காமஞ் சான்ற கடைகோட் காலை

ஏமஞ்சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே’’தொல் கற்பியல்-51

5. பூவிடைப்படினும் யாண்டு கழிந்தன்ன

நீருரை மகன்றிற் புணர்ச்சி போலப்

பிரிதரி தாகிய தண்டாக் காமமொடு

உடனுயிர்போக தில்ல கடனறிந்து

இருவேமாகிய உலகத்

தொருவே மாகிய புன்மைநா முயற்கே. -குறுந்தொகை

6. முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅ துடாஇத்

குவளையுண் கண் குய்ப்புகை கமழத்

தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவ னுண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்

றெண்ணுதன் முகனே- குறுந் 167

7. படைப்புபல படைத்து பலரோடு உண்ணும்

உடைப்பெரும்ி செல்வராயினுமிடைபட

குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டுந் தொட்டும் கவ்வியுந் துழந்தும்

நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்

மயக்குறு மக்களை யில்லோர்க்குப்

பயக்குரை யில்லைத் தாம் வாழுநாளே- புறம் 188.

8. ஈன்றுபுறந்தருதல் எந்தலைக்கடனே

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே -புறம் 312

9. குறள்-41

10. விருந்து உண்டு எஞ்ிசிய மிச்சில்

பெருந்தகை நின்னோடு உண்டலும்

புரைவது -குறிஞ்சிப்பாட்டு -வரி 206

11. குறள் -86

12. புறநாநூறு- 146

13. குறுந்தொகை 135

14. சிலம்பு கனாத்திறம் உரைத்த காதை

15. பெரிய புராணம். திருநீலகண்டர் புராணம்

16. புறநானூறு-86

16. அ. புறநானூறு- 279

17. புறநாநூறு-74

18. அப்பர் தேவாரம்

19. நாச்சியார் திருமொழி

20. பாரதிதாசன் குடும்ப விளக்கு (3, 4, 5 மக்கட்பேறு . பக் . 80)

21. தொட்டிலைத் தேடும் பெண் சிசுக்கள்

பெற்றவர்களே தொட்டிலில் போட்டு விட்டு

பேட்டி கொடுக்கும் பெருமிதம்,

இன்று ஒன்று அழுகிறது.

நாளை ஒன்பதாய் மறுநாளில் நூறாய்

ஓரே அழுகை இத்தனை சிசுக்களுக்கும்

தாலாட்டுப் பாட ஓரே ஒரு ஆயா,

ஆயாவின் தாலாட்டும் அலரலாய் மாற. . . – தொடரும் (சிற்றிதழ்), அக்- டிச, 1992 வெளியீடு- கிருங்கை சேதுபதி- கிருகாக்கோட்டை

muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்