தஞ்சைக் கதம்பம்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

இரா முருகன்


(வேறு ஏதோ புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது 1997-ம் ஆண்டு ‘கல்கி ‘ இதழ் ஒன்று கிடைத்தது.

கல்கி ஆசிரியர் கேட்டுக் கொண்டபடி நான் தஞ்சாவூர் போய் (அப்போது ஊர் பெரிய கோயில் கும்பாபிஷேகத்துக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது) எழுதிய பயணக் கட்டுரை வந்த இதழ் அது.

அருமை நண்பர், காலஞ்சென்ற தஞ்சை பிரகாஷ் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இக்கட்டுரையை இங்கே இடுகிறேன்.)

***

தஞ்சாவூர் ஜங்ஷன். புலரத் தயாராக நிற்கிற பொழுது. ஜரிகை அங்கவஸ்திரமும் மயில்கண் வேட்டியும் கையில் வெள்ளிக் கூஜாவுமாக ரயிலைப் பிடிக்க அரக்கப் பரக்க ஓடுகிறவர்கள். தலையில் தஞ்சாவூர்க் கதம்பம் மணக்க மணக்க, பட்டுப் புடவை சரசரக்க, குனிந்த தலை நிமிராமல் நடக்கும் நாரீமணிகள். டிக்ரிக் காப்பி வாசம். ஜட்கா வண்டிகளில் பசும்புல் வாசம். அரகஜா, அத்தர், ஜவ்வாது வாசம். தாம்பூல வாசம்.

எல்லாமே வெறும் கனவு வாசம்தான்.

‘என்ன யோசனை ? சூடா ஒரு வாய் இன்ஸ்டண்ட் காப்பியை ஊத்திக்கிட்டு வேலையைக் கிரமமா ஆரம்பிக்கலாம். ‘

முதுகில் அச்வின் தட்டியதில் கலைந்த கனவு பழைய நாவல்களையும், ஐம்பது அறுபது வருடம் முந்திய பைண்டு செய்த தொடர்கதைப் புத்தகங்களையும் படித்து மனதில் வளர்த்துக் கொண்ட தஞ்சை.

‘காவேரியிலே சூரிய உதயத்தைப் படம் எடுக்கணும். கிளம்புங்க. ‘

ஸ்டேஷன் வாசல் ஆட்டோவில் உட்கார்ந்தபடிக்குத் தூங்கிக் கொண்டிருந்த ஆட்டோக்காரரைத் தட்டி எழுப்பிய அச்வின் வண்டியில் இல்லாத மீட்டரைத் தேட, பின்னால் ஏழெட்டு குமரிமுத்து ஏக காலத்தில் சிரிக்கும் சத்தம்.

‘சூரிய உதயத்தை இப்போதைக்கு எடுத்துக்குங்க. ஒரு மாசம் கழிச்சு வந்து காவேரித் தண்ணியைப் படம் பிடிச்சுக்குங்க. ‘

கோரஸாகக் குரல் கொடுத்தது அச்வினின் தஞ்சை நண்பர் குழு.

கர்னாடகம் கண் திறந்து கிருஷ்ணராஜசாகர் அணை திறந்து, காவிரியில் கொஞ்சம் போலவாவது தண்ணீர் வந்தால் குறுவை நெல் சாகுபடி ஆரம்பமாகி விடுமாம். அதுவரை தஞ்சையும் சுற்று வட்டாரமும் தூக்கக் கலக்கத்தில்தானாம்.

தகவல் கொடுத்த நண்பர்கள் தள்ளிக் கொண்டுபோய்த் தண்ணீர் இல்லாத கல்லணைக் கால்வாய்ப் பக்கம் நிறுத்த, ‘உழவர் ஓதை, மதகோதை, உடைநீர் ஓதை ‘ எதுவும் இல்லாமல் தூரத்து ஒலிபெருக்கியிலிருந்து ‘மாத்தாடு மல்லிகே ‘.

‘சார், எங்க மேம்பாலத்தைப் பார்க்க வர்றீங்களா ? ‘

ஆட்டோக்காரர் அன்போடு கூப்பிட்டார்.

‘என்ன விசேஷம் அதிலே ? ‘ என்றான் அச்வின்.

‘எந்தத் தலைவர் பெயரும் வைக்காம, வெறுமனே மேம்பாலமாகவே இன்னும் இருக்கே. அதுதான் விசேஷம். ‘

‘சத்தம் போட்டுச் சொல்லி விடாதீங்க. தென் மாவட்டங்களிலே இப்பத்தான் வெக்கை தணிஞ்சிருக்கு ‘ என்றேன்.

முந்தைய அரசு உலகத் தமிழ் மாநாடு நடத்தியபோது திறக்கப்பட்ட மேம்பாலம் தஞ்சையில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்திருப்பதாக நண்பர்கள் வட்டம் பெருமைப்பட, ஒன்று இரண்டாகப் பாலத்தில் ஊர்கிற வாகனங்கள்.

‘மேம்பாலத்துக்குக் கீழே ஒரு ஓட்டல், ஒரு தியேட்டர், கடைகள் …. பாலம் திறந்த நாள்லே இருந்து பிசினஸ் படு டல்லு ‘

ஆட்டோக்காரர் வாக்கியத்தை முடிப்பதற்குள் பஸ் ஸ்டாண்ட். இறங்கினோம்.

‘எம்ப்ளது ரூபா ‘.

அவர் படு கேஷுவலாகக் கேட்க, பின்னால் சைக்கிள்களில் வந்த நண்பர் வட்டம் சமாதானப் பேச்சு வார்த்தையில் இறங்கியது. ஐந்து ரூபாய் மிச்சம். அம்புட்டுத்தான்.

தரும மிகு சென்னையில் ஆட்டோ மீட்டரில் சூடு வைத்தாலோ, மீட்டரையே தீயில் போட்டு எடுத்தாலோ கூட இதில் பாதிதான் கையை விட்டுப் போகும்.

‘ஆசான் வந்தாச்சு ‘

நண்பர் குழாம் உற்சாகத்தோடு அறிவிக்க, உப்பு மிளகுத் தாடியும், உயரமும், வழுக்கையுமாக ஸ்கூட்டரில் வந்து இறங்கினார் தஞ்சை பிரகாஷ்.

கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம் என்று போன தலைமுறை எழுத்தாளர்களோடும், மாலன், பிரபஞ்சன் என்று இந்தத் தலைமுறை எழுத்தாளர்களோடும், முந்தாநாள் மீசை முளைத்து, நேற்று முதல் கவிதை எழுதிய இளைஞர்களோடும் சரிசமமாகப் பழகிய, பழகும் பிரகாஷ் எழுத்தாளர் மட்டுமின்றி நடமாடும் தஞ்சை என்சைக்ளோபீடியாவும் கூட.

‘தஞ்சாவூரிலே என்ன எல்லாம் பார்க்கலாம் ? ‘

நான் பிரகாஷை விசாரிப்பதற்குள் அச்வின் பசிப்பாட்டுப் பாடினான்.

ஓட்டல்.

‘தமிழ்நாட்டில் முதல் உணவு விடுதி தஞ்சாவூரில் மராட்டியர் காலத்தில் தான் ஏற்பட்டது ‘ என்று குருமாவில் தொட்டு இட்லி சாப்பிட்டபடியே இருநூறு வருடம் பின்னால் போனார் பிரகாஷ்.

‘சரபோஜி மகாராஜா கிட்டே வராகசாமின்னு ஒரு பட்லர் இருந்தாராம். வேஃபர் பிஸ்கட் பண்றதிலே ஸ்பெஷலிஸ்ட். அரண்மனைச் சாப்பாட்டிலே நாற்பத்து மூணு ஐய்ட்டம் இருக்கும். தாட்டுனு பேரு அதுக்கு ‘

சாப்பிட்டு ஆனதும் ‘ராகுகாலக் காளி கோயிலுக்குப் போகலாம் வாங்க ‘ என்றார் பிரகாஷ்.

இரண்டாயிரம் வருடம் முற்பட்ட கோயில் இது. விஜயாலய சோழன் இங்கே வழிபட்டுத்தான் உத்வேகம் அடைந்து பிற்காலச் சோழர் பரம்பரை சிறக்கப் பிள்ளையார் சுழி போட்டானாம்.

‘நிகம்பசூதினி ‘ என்ற காளி வலக்கையில் சூலத்தைப் பற்றி, இடப்பக்கம் ஊன்றத் தொடங்கி வீராவேசமாக நிற்கிறாள். கோயிலுக்கு வெளியே குல்லாய் அணிந்த புராதனச் சிற்பம் வெயில் மழையில் காய்ந்து கொண்டு வெறுந் தரையில் கிடக்கிறது. புராதனமான காவல் போல.

‘கல்யாணமாகாத இளம்பெண்கள், ராகு காலத்தில் எலுமிச்சம்பழ நைவேத்தியம் செய்தால் திருமதிகளாகலாம் என்ற பரவலான நம்பிக்கை. வெளியில் இன்னொரு காளி சிற்பம். ‘பழங்களைக் காளியின் தலையில் பிழிந்து பாவத்தைச் சேர்க்காமல், பாதத்தில் பிழிந்து பயன் பெறுங்கள் ‘ என்று பக்கத்திலேயே அறிவிப்புப் பலகை.

‘விஜயாலயசோழன் காலத்திலேயே தமிழ் நாட்டுக்கு எலுமிச்சம்பழம் வந்துவிட்டதா ? ‘ என்று பிரகாஷிடம் கேட்டேன். இல்லையாம்.

‘அரண்மனைக்குப் போகலாம் வாங்க ‘

நண்பர்கள் நச்சரிக்க, ‘நாலு ராஜவீதி சுற்றி விட்டு மெல்லப் போகலாம் ‘ என்று தீர்மானமானது.

வெயில் ஏறத் தொடங்க, நாலு வீதி சுற்ற மூச்சு வாங்கியது. இரண்டு கடை, ஒரு வீடு, ஒரு கோயில் என்ற விகிதத்தில் நாலு வீதியிலும் கட்டிடங்கள்.

‘இது மங்கள விலாஸ் ‘

பிரகாஷ் சுட்டிக் காட்ட, மதியச் சாப்பாட்டை இங்கேயே வச்சுக்கலாமா என்று விசாரித்தான் அச்வின்.

மங்களவிலாஸ் சாப்பாட்டு ஓட்டல் இல்லை. மராட்டிய மன்னர்கள் காலத்தில் நாட்டியக்காரிகள் குடியிருந்த தெற்குத் தெரு வீடு அது. சலங்கை ஒலித்த இடம் சத்தமில்லாமல் அழுக்குப் பூசி நிற்கிறது.

மங்கள் விலாசத்துக்குப் பக்கமாகக் கிந்தனார் ஸ்டூடியோ. கலைவாணர் என்.எஸ்,கேயின் கிந்தனார் கதாகாலட்சேபத்துக்கும், தஞ்சாவூருக்கும் என்ன தொடர்பு ?

குறுகலான மாடிப்படி ஏறிப்போய் விசாரிக்க, ‘உட்காருங்க சொல்றேன் ‘ என்று நாற்காலியைக் காட்டினார் உரிமையாளர் ராஜரத்தினம்.

‘என்.எஸ்.கே கூப்பிட்டார்னு ஸ்டில் போட்டோகிராபரா மெட்ராஸ் போனேன். ரெண்டு படம் பண்ணினேன். சினிமா உலகத்துலே உண்மையான கலைஞனுக்கு மரியாதை இல்லேன்னு புரிஞ்சது. கலைவாணருக்கு லெட்டர் எழுதி வச்சுட்டுக் கிளம்பிட்டேன். அவர் நினைவா ஸ்டூடியோப் பெயர் ‘.

கிந்தனார் ஸ்டூடியோ கடந்து, மராட்டிய மன்னரின் பிரதானி ராயசம் வெங்கையா வெட்டிய ஐயன்குளம் பாதி வரண்டு கிடந்தது.

‘பக்கத்துலே இடிஞ்சு கிடக்கறதுதான் கதாகாலட்சேபக் கல்லூரி. மராட்டியர்கள் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த கலை அது. கல்லூரி இப்போ இல்லே. அங்கே பதிப்பித்த இந்தக் கலை தொடர்பான புத்தகங்களும் தான் ‘

பிரகாஷ் சொன்னார்.

தஞ்சை அரண்மனை மதிள் சுவரின் இடிபாடுகளில் எட்டிப் பார்க்கும் எருக்கஞ் செடிகள். மேலே சின்னதாக டி.வி ஆண்டென்னா. ஊருக்கு நடுநாயகமாக நிற்கும் அரண்மனையின் புராதனத்துக்கு ஏற்றபடி, ‘அரசாங்கப் பென்ஷன் வாங்குகிறவர்கள் சங்கம் ‘ அங்கேயே ஒரு மூலையில் இயங்குகிறது.

அரண்மனைக்குள் ஒரு விசிட் அடித்தோம்.

‘இது மாட மாளிகை. இது கூட கோபுரம் ‘

நண்பர் வட்டம் சொல்லிய திசையில் சரபோஜி மகாராஜா காலத்துக் கட்டிடங்கள் இரண்டு புதுப் பெயிண்ட் மினுக்க நின்றன. உலகத் தமிழ் மாநாட்டுக்காகப் பூசிக் கொண்ட பளபளப்பு அது.

‘இந்த மஹால் கீழே தூண், மண்டபம் எல்லாம் எட்டு அடி ஆழம் மண்ணுலே புதஞ்சு கிடந்தது. எம்.ஜி.ஆர் தான் வெளியே கொண்டாந்தார் ‘.

சரசுவதிமகால் நூல் நிலையத்தில் ஓலைச் சுவடியில் கம்பராமாயணம். 1806-ல் வேப்பேரியில் பதிப்பித்த வேதாகமம். பழைய கால சமையல் குறிப்பு தரும் பதார்த்த குண சிந்தாமணி. யானை வளர்ப்பு, குதிரை வளர்ப்பு பற்றிய புத்தகம்.

மராத்திய மொழியில் எழுதப்பட்ட மோடி ஆவணங்கள்.

பதினாறாம் நூற்றாண்டில் (நாயக்கர் காலம்) தொடங்கப்பட்ட சரசுவதிமகால் நூலகம் அப்புறம் மராத்திய காலம், தொடர்ந்து பிரிட்டாஷ், காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க, தி.மு.க என்று காலம் கடந்து நிற்கிறது.

சரபோஜி மன்னரின் வாரிசான தற்கால மன்னருக்கு நிதிநிலைமை எப்படி என்று விசாரித்துத் தெரிந்து கொள்ள அவர் இருப்பிடத்துக்குப் படியேறினால், அவர் சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.

‘சரபோஜியே சாப்பிடறார். சாமானியனுக்கென்ன ? ‘ என்று ஒரு மனதாகத் தீர்மானம் எடுத்து ஓட்டலுக்குப் படையெடுப்பு.

திரும்பி வந்தபோது, சந்திக்கத் தயாராக மன்னர் துவஜேந்திர ராஜா போன்ஸ்லே.

‘சிவாஜி (சத்ரபதி சிவாஜிதான்) யின் ஒன்று விட்ட தம்பி வெங்கோஜி பரம்பரை நாங்க. சிவாஜி தஞ்சாவூர் வரை வந்துட்டு, தம்பியே ஆளட்டும்னு திரும்பிப் போயிருக்கார்:

சகஜமாக நம் பக்கத்தில் நாற்காலியில் உட்கார்ந்து வரலாறு சொல்லும் மகராஜா குரலில் பக்கத்து வீட்டு ரிட்டயர்ட் போஸ்ட்மாஸ்டரின் வாத்சல்யம்.

அரண்மனை உள்ளே ஏகமாக இடிந்து கிடக்கிறது.

‘எம்.ஜி.ஆர் காலத்துலே இங்கே வந்து பார்த்துட்டு உடனே ரிப்பேருக்கு ஏற்பாடு பண்ணினார் ‘ என்ற போன்ஸ்லே கலைஞரை எதிர்பார்க்கிறார்.

‘அரசராக இருப்பதில் ஆதாயமில்லை ‘ என்னும் அவருடைய ஒரு மகன் இந்தியன் ஓவர்சீசு வங்கியில் உத்தியோகம் பார்க்க, இன்னொருவர் பிசினஸ் செய்கிறாராம். மன்னர் ஓவியம் வரைகிறார்.

‘கெளரவப் பென்ஷன் வருது ‘ என்றவர் தொகையைச் சொல்லத் தயங்கினார். அப்புறம் சொன்ன தொகை, தாலுக்கா ஆப்பீஸ் டவாலி சேவகரின் மாதாந்திரப் பென்ஷனை விடக் குறைந்தது.

விடைபெற்று இறங்கிவர, அரண்மனை வளாகத்தில் சைக்கிள் விட்டுக் கொண்டிருந்தனர் எதிர்கால அரச வாரிசுகள். ‘லாஸ்ட் எம்பரர் ‘ திரைப்படம் நினைவுக்கு வந்தது.

வெய்யில் தாழப் பெரிய கோயிலில் நுழைந்தோம்.

சுறுசுறுப்பாகக் கும்பாபிஷேக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. துவாரபாலகர் சிலைகளை இடுப்புக்கு மேல் மறைத்துப் பலகை சார்த்தி இருக்கிறது.உள்ளே வரிசையாகத் தொங்கும் துணிகள் லிங்கம் படம் எழுதிக் காட்சியளிக்கின்றன.

‘232 சிவலிங்கங்கள், 31 பரிவார மூர்த்திகள், 4 விமானங்கள் பாலாலயம் செய்யப்பட்டு மூர்த்திகளைத் துணியில் ஆவாஹனம் செய்து வழிபாட்டுக்காக வைக்கப் பட்டுள்ளது ‘ என்று அறிவிப்புப் பலகை சொன்னது.

‘பாலாலயம் என்றால் என்ன ? ‘ என்று கேட்கத் திரும்பினால் பிரகாஷைக் காணோம்.

உள்ளே கருவறை மூடப்பட்டு, உற்சவ மூர்த்திக்கு ஆராதனை. பக்கத்தில் ‘சாமிநாதா, ப்யூஸ் கேரியரை எடு ‘ – எலக்ட்ரீஷியன்கள் சத்தம். சாரத்தில் சாந்து குழைத்து எடுத்துப் போகிற சித்தாள் பெண்ணை ‘யக்கோவ் ‘ என்று கீழே இருந்து யாரோ கூப்பிடும் ஒலி. ‘இஞ்ச பாரு. ஜெயலலிதா கொடுத்த யானைக்குட்டி ‘ பிரகாரம் சுற்றும் பெண்களின் உற்சாகமான குரல். ஓடிப் பிடித்து விளையாடும் குழந்தைகளின் சிரிப்பு.

தஞ்சைக் கோயிலில் தெய்வத் தன்மையோடு இழையோடும் அலாதியான மனுஷ்யவாடையும் உண்டு.

வெளியே வர, மெள்ள இருள் கவிந்து கொண்டிருக்கிறது. கோயிலை ஒட்டி மதிளோரம் காற்றில் மிதந்து வரும் குரல்.

‘ஆல்ப்ஸ் மலைகளின் குளிர்ந்த காற்றும், அசிடிக் கடலின் உப்புக் காற்றும் கலந்து வீசிக் கொண்டிருக்க, ஏதன்ஸ் மாநகரின் திறந்தவெளி அரங்கில், அரிஸ்டோபேனஸின் நகைச்சுவை நாடகம். மேடையில் சாக்ரடாஸாக நடித்தவனைப் பார்த்து ஆயிரக் கணக்கான மக்கள் குலுங்கிச் சிரிக்க, கூட்டத்தில் சாக்ரடாஸ் ‘

பிரகாஷ்தான் கதை சொல்லிக் கொண்டிருந்தார். ‘கதை சொல்லிகள் ‘ என்ற இலக்கிய அமைப்பின் வாராந்திரக் கூட்டம் அது.

கதையில் லயித்துப் போய் உட்கார்ந்த அச்வினை வலுக்கட்டாயமாக எழுப்பி, ‘ரயிலுக்கு நேரமாச்சு ‘ என்று கூட்டிக் கொண்டு கிளம்ப, கதை கேட்டபடி இருந்த நண்பர் வட்டம் மெளனமாகக் கையசைத்து விடை கொடுத்தது.

(கல்கி மே 1997 இதழில் பிரசுரமானது)

eramurug@yahoo.com

Series Navigation