தக்காளிக் கனவுகள்
யூசுப் ராவுத்தர் ரஜித்
அறுப்புக்குத் தயாராய்
தங்கசாமியின் தக்காளித்
தோட்டம்
தீப்பந்துப் பழங்கள்
தேறிய ஒவ்வொன்றும்
தேங்காய்க் கனம்
இலைகளை எண்ணலாம்
காய்களை எண்ண யாராவது
கருவி செய்யுங்கள்
காலொடிந்தாலும்
கல்லாய்க் கிடப்பார் தங்கசாமி
தக்காளிக் கிளை முறிந்தால்
நொறுங்கிப் போவார்
அறுவடை நடக்கிறது
கொப்பளிக்கும்
தக்காளிக் கூடைகள்
பயணிக்கிறது
மொத்த மண்டிக்கு
நாளை தான் சந்தை
இந்த அறுப்பு
தங்கசாமிக்கு மறு பிறப்பு
பூப்படைந்த மகளுக்கு
பொன் வாங்க வேண்டும்
அந்தியூர் அக்காவுக்கு
சீர் செய்ய வேண்டும்
எச்செலவும் போக
மிச்சமும் தேறுமாம்
கணக்குப் போட்ட தங்கசாமி
சந்தைக்குப் புறப்பட்டார்
அங்கே
மண்டியைக் கிழித்தது
தலைவர் தேர்தல்
கத்தியால் பேசினர்
கட்சிக் காரர்கள்
சகதிகளாயின தக்காளிகள்
யூசுப் ராவுத்தர் ரஜித்